பாகிஸ்தானுக்கு உலக கோப்பை வாய்ப்பு மறுக்கப் பட்ட பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டது. இதன்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்படும். ஐ.சி.சி., மீதான சட்டப்பூர்வ நடவடிக்கையை பாகிஸ்தான் கைவிடும்.
வரும் 2011ல் உலக கோப்பை தொடர் இந்திய துணை கண்டத் தில் நடக்க உள்ளது. இதில், பாகிஸ்தானில் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கு விளையாட ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பெரும் பாலான அணிகள் மறுத்தன. இந்தச் சூழலில் லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த, பிரச்னை பெரிதானது. வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் பாகிஸ்தானில் 2011ல் உலக கோப்பை போட்டிகளை நடத்த ஐ.சி.சி., உரிமை மறுத்தது. இங்கு நடக்க இருந்த 14 போட்டிகள் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடக்கும் என அறிவித்தது. தவிர உலக கோப்பை தலைமையகத்தை லாகூரில் இருந்து மும்பைக்கு மாற்றியது.
துபாயில் பேச்சு: இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கை எடுத் தது. லாகூர் கோர்ட்டில் ஐ.சி.சி., மீது வழக்கு தொடுத்தது. பின்னர் பிரச்னைக்கு கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காண முடிவு செய்தது. இது தொடர்பாக துபாயில் நேற்று ஐ.சி.சி., தலைவர் டேவிட் மோர்கன் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர்(பி.சி.பி.,) இஜாஸ் பட் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி போட்டியை நடத்துவதற்கான உரிமை தொகை சுமார் ரூ. 50 கோடி பாகிஸ்தானுக்கு வழங்கப் படும். தவிர பாகிஸ்தான் மண்ணில் போட்டியை நடத்தாததால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட போதுமான தொகையை அளிக்க ஐ.சி.சி., முன் வந்தது. இதை ஏற்றுக் கொண்ட பாகிஸ்தான், ஐ.சி.சி., மீது தொடுத்துள்ள வழக்குகளை திரும்ப பெற சம்மதம் தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்ததில் ஐ.சி.சி., மற்றும் பி.சி.பி., அதிகாரிகள் கைகெயழுத்திடுகின்றனர். இதன் மூலம் உலக கோப்பை தொடரை நடத்துவதில் இருந்த சிக்கல் முழுமையாக தீர்ந்துள்ளது.
இது குறித்து பி.சி.பி., தலைவர் இஜாஸ் பட் கூறியது: ஐ.சி.சி.,யுடன் ஏற்பட்ட உடன்பாடு மிகவும் திருப்தி அளிக்கிறது. பாகிஸ்தானில் கிரிக்கெட் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கு முன்னுரிமை அளித்தோம். பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டது உலக கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்லது. இதன் மூலம் 2011ல் உலக கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. பாகிஸ்தானில் மிக விரைவில் சர்வதேச போட்டிகள் நடக்கும். இங்குள்ள பாதுகாப்பு குறித்து ஐ.சி.சி., மற்றும் அதன் சிறப்பு பாதுகாப்பு ஆலோசகர்கள், மற்ற அணிகள் திருப்தி தெரிவிக்கும் போது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடக்கும். இவ்வாறு இஜாஸ் பட் கூறினார்.
0 comments:
Post a Comment