பிராட்மேனை விட சிறந்த வீரர் சச்சின்

கிரிக்கெட் அரங்கில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஆஸ்திரேலியாவின் பிராட்மேனை விட சிறந்தவர்,'' என, இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

சமீபத்தில் குவாலியரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சச்சின் இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒரு நாள் அரங்கில் 200 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.

இவரது சாதனை குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது:

ஒருநாள் அரங்கில் முதல் இரட்டை சதமடித்து சாதனை படைத்த சச்சினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவரை பாராட்டிய சில வீரர்களை இவரை, பிராட்மேனுடன் ஒப்பிட்டனர். ஆனால், இவரது சாதனைகளை வைத்து பார்க்கும் பொழுது சச்சின், பிராட்மேனை விட சிறந்தவர் என்று தான் கூறவேண்டும்.

கிரிக்கெட் குறித்து மைதானம் மற்றும் "டிரஸிங் ரூமில்', இவரிடம் இருந்து நிறைய பாடங்களை கற்றுள்ளேன். ஒவ்வொரு போட்டிக்கும் இவர் எவ்வாறு தயாராகிறார் என்பதை அருகில் இருந்து பார்த்துள்ளேன்.

எனது தங்கையின் திருமணம் காரணமாக வரலாற்று சிறப்புமிக்க இப்போட்டியில் விளையாடாமல் போனது, ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், இவரது சாதனையை எனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டேன்.

ஐ.பி.எல்., போட்டியை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீசில் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதனால், ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்கள், மிகுந்த கவனமுடன் விளையாடி, காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கடந்த 2007ல் வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறி ஏமாற்றியது. இம்முறை "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என நம்புகிறேன்.
இவ்வாறு ஹர்பஜன் கூறினார்.

"பேட்டிங் கடவுள்':

சரித்திரம் படைத்த சச்சினை, இலங்கை மீடியாக்கள் "பேட்டிங் கடவுள்' என புகழாரம் சூட்டியுள்ளது. இதுகுறித்து இலங்கையில் இருந்து வெளியான செய்தி: குவாலியர் போட்டியில் இரட்டை சதமடித்த சச்சின், ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை தீர்த்து வைத்தார்.

இவர் ஒவ்வொரு போட்டியில் களமிறங்கும் போது, ஏதாவது ஒரு சாதனையை பதிவு செய்கிறார். 36 வயதிலும், இவரது பேட்டிங் ஸ்டைலில் கடுகளவும் மாற்றம் இல்லை. இதனால் இவரை "பேட்டிங் கடவுள்' என்று கூறினால் மிகையாகாது. இவர் கிரிக்கெட் அரங்கில் மேலும் பல சாதனைகள் குவிக்க வாழ்த்துக்கள்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

டி20 உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி தேர்வு

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் என்.ஸ்ரீனிவாசன் வியாழக்கிழமை இதை அறிவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கயானா, பார்படாஸ் மற்றும் செயின்ட் லூசியா ஆகிய இடங்களில் ஏப்ரல் 30ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கும் வீரர்களைத் தேர்வு செய்வதற்காக தேர்வுக் கமிட்டியின் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு புதுமுக வீரர்கள் உள்பட 30 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் வீரர்கள் மணீஷ் பாண்டே, ஆர்.வினய் குமார் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான நமன் ஓஜா ஆகிய புதுமுகங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மணீஷ் பாண்டே அண்மையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி தேர்வுக் கமிட்டியினரின் பார்வையில் இடம்பெற்றவர். இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். வினய் குமாரும் உள்ளூர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

விக்கெட் கீப்பராக உள்ள நமன் ஓஜா, சிறந்த பேட்ஸ்மேனும்கூட. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் ஓஜா உள்பட தோனி மற்றும் ரித்திமான் சாஹா என மூன்று விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.பி.சிங், பியூஷ் சாவ்லா மற்றும் பந்துவீச்சாளர் முனாஃப் படேல் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். எனினும் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப் பட்டியல் பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்: எம்.எஸ். தோனி, சேவாக், கம்பீர், தினேஷ் கார்த்திக், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், பிரவீண் குமார், ஸ்ரீசாந்த், அபிஷேக் நாயர், சுதீப் தியாகி, ரோஹித் சர்மா, ஆஷிஸ் நெஹ்ரா, இஷாந்த் சர்மா, ரித்திமான் சாஹா, நமன் ஓஜா, பியூஷ் சாவ்லா, அபிமன்யு மிதுன், மணீஷ் பாண்டே, ஆர்.பி.சிங், முனாஃப் படேல், முரளி விஜய், வினய் குமார், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, விராட் கோலி, ஆர்.அஸ்வின்.

சச்சினுக்கு "பாரத் ரத்னா' விருது

சாதனை நாயகன் சச்சினுக்கு, நாட்டின் மிக உயர்ந்த "பாரத் ரத்னா' விருது வழங்க வேண்டுமென, முன்னாள் கேப்டன் கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 31,041 ரன்கள் மற்றும் 93 சதங்கள் அடித்து, சாதனை மன்னனாக திகழ்கிறார் இந்தியாவின் சச்சின். சமீபத்தில் குவாலியரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசினார்.

இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு பல இடங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

கோஹினூர் வைரம்:

சச்சினின் 200 ரன் சாதனை குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் கூறியது:
சச்சின், கிரிக்கெட்டின் கோகினூர் வைரம். இவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என அனைத்திலும் வெற்றிகரமாக சாதித்தவர்.

இவரைப் போன்று, வேறொரு வீரர் இனி வருவது கடினம். இங்கிலாந்தின் நாசர் ஹுசைன் கூறியது போல, பிராட்மேனுடன் மட்டுமல்ல, உலகின் எந்த பேட்ஸ்மேனையும் சச்சினுடன் ஒப்பிட முடியாது.

பேட்டிங்கில் சாதித்து வரும் இவர், பீல்டிங்கில் இப்போது வரையிலும் தன்னை நிரூபித்து வருகிறார். இந்திய துணைக்கண்டத்தில் நடக்கவுள்ள 2011 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் சச்சின், அதன் பின்பும் இரண்டு ஆண்டுகள் வரை அணியில் நீடிக்கலாம்.

என்னைப் பொறுத்தவரையில், இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத் ரத்னாவை' இவருக்கு வழங்குவது தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

இவ்வாறு வடேகர் தெரிவித்தார்.

கபில் தேவ் சம்மதம்:

முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கூறுகையில்,"" சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 21 ஆண்டுகளாக, பல சாதனைகளை படைத்து வருபவர் சச்சின். இவர் "பாரத் ரத்னா' விருதுக்கு தகுதியானவர். சச்சினுக்கு இந்த விருது கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.

ஒருவேளை அடுத்த போட்டியில் இவர் "டக் அவுட்டானால்' கூட, விருது வழங்க வேண்டும் என்றுதான் சொல்வேன். ஏனெனில் ஒரு போட்டியை மட்டும் வைத்து அவரை எடைபோட முடியாது. ஒட்டுமொத்தமாக அவரது சாதனைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்,'' என்றார்.

சச்சினுக்கு முதலிடம்:

முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்க்கார் கூறுகையில்,"" விளையாட்டு வீரர் ஒருவருக்கு "பாரத் ரத்னா' விருது வழங்கப்படும் என்றால் அதனைப் பெற சச்சினைத் தவிர, யாரும் இல்லை. இவருக்கு கட்டாயம் இந்த விருது கொடுக்கவேண்டும்,'' என்றார்.

ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு "401'

ஒருநாள் போட்டியில் 200 ரன்களை கடந்து சாதித்தது போன்று, டெஸ்ட் கிரிக்கெட்டில் 401 ரன்கள் எடுத்து, வெஸ்ட்இண்டீசின் லாராவின் (400*) சாதனையை, சச்சின் தகர்க்க வேண்டும் என்பது தான், ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்திய கிரிக்கெட்டின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (36). 442 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 17598 ரன்கள் குவித்துள்ள இவர், முதல் வீரராக 200 ரன்களை கடந்து (முந்தைய சாதனை, 194 ரன்கள்) சாதித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதம் (46) எடுத்துள்ள வீரர்களில் முதலிடம் வகிக்கிறார்.

டெஸ்டில் "401':

தான் பங்கேற்ற 166 டெஸ்டில் சச்சின், 46 சதத்தின் உதவியுடன் இதுவரை 13447 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக வங்கதேசத்துக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 248* ரன்கள் எடுத்துள்ளார்.

டெஸ்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்து சாதித்துள்ள சச்சின், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீசின் லாராவின் (400*) சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது.

"நூற்றுக்கு நூறு':

இவை தவிர சச்சின், சத்தமில்லாமல் மற்றொரு சாதனையையும் நெருங்கிக் கொண்டுள்ளார். அதாவது ஒருநாள் (46) மற்றும் டெஸ்ட் (47) என இரண்டையும் சேர்த்து, இதுவரை 93 சதம் அடித்துள்ள சச்சின், விரைவில் இதிலும் சதம் (100) கடக்கவுள்ளார்.

இதுபோல 93 ஒருநாள் அரைசதம் அடித்துள்ள சச்சின், 100வது அரைசதத்தையும் விரைவில் எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

விரைவில் எட்டலாம்:

இந்த ஆண்டு (2010) துவங்கி பிப்ரவரி 26 வரை, டெஸ்டில் 4, ஒருநாள் போட்டியில் ஒன்று, என மொத்தம் ஐந்து சதம் அடித்துள்ளார். இதே வேகத்தில் சென்றால் எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் 100 க்கு 100 கடந்து விடுவார்.

சேவக் வாய்ப்பு:

சச்சினின் 200 ரன், சாதனையை தற்போதுள்ள வீரர்களில் யாரால் முறியடிக்க முடியும் என பார்த்தால், நமது சேவக் தான் முன்னிலையில் இருக்கிறார். அதிரடி துவக்கவீரர் என்பதால், இவருக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள்.

இரண்டாவதாக "சிக்சர் மன்னன்' யுவராஜ் சிங் பெயர் அடிபடுகிறது. தனது சாதனயை சச்சினே தகர்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

வாழும் வரலாறு சச்சின்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு தின ஆட்டத்தில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் 2-வது இடத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.

சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாடி ஒரு தின ஆட்டங்களில் இரட்டைச் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சச்சின் 147 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 3 சிக்சர், 25 பெüண்டரிகளுடன் 200 ரன்கள் எடுத்தார்.

இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஆட்டம் குவாலியரில் புதன்கிழமை நடைபெற்றது.

முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 42.5 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சேவாக் அவுட்: ஆட்டத்தின் 2-வது பந்தில் தப்பிப் பிழைத்த சேவாக் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 9 ரன்கள் எடுத்த நிலையில் பார்னெல் பந்துவீச்சில் வெளியேறினார்.

சச்சினுடன் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். சேவாக் வெளியேறியபோதும் இருவரும் இணைந்து விரைவாக ரன் சேர்த்தனர். 7.2 ஓவர்களில் இந்தியா 50 ரன்களைக் கடந்தது.

சச்சின் டெண்டுல்கர் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடினார். 37 பந்துகளில் 9 பெüண்டரிகளுடன் அரை சதத்தைக் கடந்தார்.

தென் ஆப்பிரிக்காவின் எந்தப் பந்துவீச்சாளரையும் இருவரும் விட்டுவைக்கவில்லை. தினேஷ் கார்த்திக் 59 பந்துகளில் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அபாரமாக விளையாடிய சச்சின் 90 பந்துகளில் 13 பெüண்டரிகளுடன் ஒரு தின ஆட்டங்களில் 46-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். 50 ரன்களில் இருந்து 100 ரன்களுக்குள் வெறும் 4 பெüண்டரி மட்டுமே எடுத்த சச்சின், அதன் பின்னர் விஸ்வரூபம் எடுத்தார்.

சச்சின், தினேஷ் இணைந்து 194 ரன்கள் சேர்த்த நிலையில், பார்னெல் பந்துவீச்சில் கிப்ஸிடம் பிடிபட்டு தினேஷ் கார்த்திக் வெளியேறினார். அவர் 85 பந்துகளில் 3 சிக்சர், 4 பெüண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்தார்.

சச்சினுடன் அதிரடி வீரர் யூசுப் பதான் இணைந்தார். இருவரும் மனம் போல பெüண்டரிகளாக விளாசினர். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 47 பந்துகளில் 81 ரன்கள் விளாசினர். 23 பந்துகளில் 2 சிக்சர், 4 பெüண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த யூசுப், வான்டெர் மெர்வ் பந்துவீச்சில் டிவில்லியர்ஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

தோனி விளாசல்: அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனியும் தென் ஆப்பிரிக்க வீச்சாளர்களை பதம் பார்த்தார்.

35 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்சர், 7 பெüண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் விளாசினார். சச்சின், தோனி இணைந்து 54 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்தனர்.

காலிஸின் பந்துவீச்சில் பெüண்டரி விளாசி ஒரு தின ஆட்டங்களில் தனது அதிகபட்சத்தைக் கடந்தார் சச்சின்.

ஆட்டத்தின் 46-வது ஓவரில், பார்னெல் பந்துவீச்சில் 2 ரன்கள் எடுத்து 194 ரன்களையும் கடந்து உலக சாதனை படைத்தார். ஆனால், அதன் பின்னர், ஒரு முனையில் மிகவும் அதிரடியாக விளையாடிய தோனி 47, 48, 49-வது ஓவர்களின் கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்து ரசிகர்களின் பொறுமையை சோதித்தார்.

மறு முனையில் 199 ரன்களுடன் சச்சின் களத்தில் இருந்தார். ஒருவழியாக கடைசி ஓவரின் 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்து சச்சினுக்கு வழிவிட்டார் தோனி. அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து வரலாற்றில் இடம்பெற்றார் சச்சின்.

50 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா சொதப்பல்: 402 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் டிவில்லியர்ஸ் தவிர ஒருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி 101 பந்துகளில் 2 சிக்சர், 13 பெüண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்தார்.

டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஆம்லா தொடக்க வீரராக களம் இறங்கி 22 பந்துகளில் 7 பெüண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார்.

2-வது விக்கெட்டுக்கு சாதனை: சச்சின், தினேஷ் இணைந்து 194 ரன் குவித்ததே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்களில் 2-வது விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன் குவிப்பாகும். 2000-ம் ஆண்டில் நாகபுரியில் சச்சின், திராவிட் இணைந்து 181 ரன்கள் குவித்ததே இதற்கு முந்தைய அதிகபட்சமாகும்.

ஒரு தின ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்சம் இது.

ஒரு தின ஆட்டங்களில் சச்சினின் அதிகபட்சம் இது. இதற்கு முன் 1999-ல் நியூஸிலாந்துக்கு எதிராக ஹைதராபாதில் ஆட்டமிழக்காமல் 186 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்சமாகும்.

குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து: கிரிக்கெட்டில் மீண்டும் ஒரு முறை எவரெஸ்ட் சிகரத்தை சச்சின் எட்டிப் பிடித்துவிட்டார் என குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும், அவரது சாதனையால் இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங்கும் தங்கள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

சச்சின் புதிய உலக சாதனை

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், இரட்டை சதமடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது போட்டி குவாலியரில் இன்று நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சேவக் (9) ஏமாற்றினார். பின்னர் இணைந்த சச்சின், தினேஷ் கார்த்திக் ஜோடி, மளமளவென ரன்கள் குவித்தது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 194 ரன்கள் சேர்த்த போது, கார்த்திக் (79) அவுட்டானார். அடுத்து வந்த யூசுப் பதான் (36) அதிரடியாக ஆடினார்.

பின்னர் இணைந்த சச்சின், கேப்டன் தோனி ஜோடி இந்திய அணியின் இமாலய ஸ்கோருக்கு வித்திட்டது. அபாரமாக ஆடிய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், 200 ரன்கள் எடுத்து, புதிய உலக சாதனை படைத்தார்.

இவருக்கு ஒத்துழைப்பு தந்த தோனி (68) அரைசதமடித்து அசத்தினார். இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 401 ரன்கள் குவித்தது. சச்சின் (200), தோனி (68) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் பார்னல் 2, மெர்வி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

புதிய சாதனை:

குவாலியர் ஒருநாள் போட்டியில், 147 பந்தில் 3 சிக்சர், 25 பவுண்டரி உட்பட 200 ரன்கள் எடுத்த, இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஒருநாள் அரங்கில் இரட்டை சதம் கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார்.

முன்னதாக ஜிம்பாப்வேயின் சார்லஸ் கோவன்ட்ரி (194*), பாகிஸ்தானின் சயீத் அன்வர் (194) அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் முன்னிலை வகித்தனர். தவிர, ஒருநாள் அரங்கில் அதிக சதம் (47 சதம்), அதிக ரன்கள் (17598 ரன்) எடுத்த வீரர்கள் வரிசையில், சச்சின் முதலிடத்தில் நீடிக்கிறார்.

உலககோப்பை தொடர் இடமாற்றம்

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய துணைக் கண்டத்தில் உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல், உலகின் மற்ற அணிகளுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் உலககோப்பை தொடர், திட்டமிட்ட படி, இந்திய துணைக் கண்டத்தில் நடக்குமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு தலைவர் ஜஸ்டின் வான் கூறியது: இந்தியாவில் பாதுகாப்பு தொடர்பாக அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இது மேலும் அதிகரித்தால் உலககோப்பை போட்டிகளை அங்கு நடத்துவதில் சிக்கல் ஏற்படும். போட்டிகள் துவங்கும் சமயத்தில் வேறு இடத்தை தேடிக் கொண்டிருக்க முடியாது.

ஒருவேளை இத்தொடருக்கான இடம் மாற்றப்பட்டால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அல்லது தென் ஆப்ரிக்காவில் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

கிரிக்கெட்டின் இதயத்துடிப்பே ஆசியா தான். இருப்பினும் போதுமான பாதுகாப்பு இல்லை என்றால் உலககோப்பையில் மற்ற அணி வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும். உலககோப்பை போட்டிகளை நடத்தும் நாடுகள், போதுமான பாதுகாப்பு உறுதி அளிக்க வேண்டும்.

தவிர, அதற்கான திட்டங்களை விளக்கிக் காட்ட வேண்டும். அதற்குப் பின் தான் உலககோப்பையில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஈராக் உள்ளிட்ட உலகின் எந்த நாடாக இருந்தாலும், பாதுகாப்பு உறுதி அளித்தால் நியூசிலாந்து அணி பங்கேற்கும். இவ்வாறு வான் தெரிவித்தார்.

கைமாறுகிறது ஐ.பி.எல்., அணிகள்

ஐ.பி.எல்., அணிகளின் உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதால், தங்களது அணிகளை விற்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) சார்பில் "டுவென்டி-20' தொடர் நடத்தப்படுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு பாதுகாப்பு பிரச்னை காரணமாக இரண்டாவது தொடர், தென் ஆப்ரிக்காவில் நடந்தது.

தொடரும் பிரச்னை: தற்போது மூன்றாவது தொடர் வரும் மார்ச் 12ம் தேதி இந்தியாவில் துவங்குகிறது. இந்த முறையும் பிரச்னைகள் தொடருகின்றன. ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை எந்த அணியும் எடுக்கவில்லை.

இந்த சர்ச்சை முடிவதற்குள் தெலுங்கானா போராட்டம் காரணமாக ஐதராபாத்தில் நடக்க இருந்த போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த ஆந்திர அரசு, தொடரை புறக்கணிக்குமாறு தங்களது டெக்கான் அணியை வலியுறுத்தி வருகிறது.


லாபம் இல்லை: இப்படி சர்ச்சைகள் துரத்துவதால் அணிகளின் உரிமையாளர்களுக்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த முறை போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடத்தப்பட்டதால் ஒவ்வொரு அணிக்கும் 30 முதல் 35 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க, தங்களது அணியை விற்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். சிலர் பெரும்பாலான பங்குகளை விற்க முன்வந்துள்ளனர். பாலிவுட் நடிகை பிரித்தி ஜிந்தாவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ஹீரோ ஹோண்டா நிறுவனம் வாங்க திட்டமிட்டது. இதனை பிரித்தி ஜிந்தா மறுத்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை "எமர்ஜிங் மீடியா' நிறுவனம் 312 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போது ஆயிரத்து 160 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டில்லி அணியை ஜி.எம்.ஆர்., ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 395 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போது ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு கொடுக்கு தயாராக இருக்கிறதாம்.

டில்லி டேர்டெவில்ஸ் அணியின் 30 சதவீத பங்குகளை வாங்க "ஹீரோ ஹோண்டா' நிறுவனம் தயாராக உள்ளதாம். ஐ.பி.எல்., அணிகளை வாங்க சஹாரா இந்தியா, கோத்ரெஜ், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.


மோடி தந்திரம்: தற்போது யாரும் அணிகளை விற்க முடிவு செய்யவில்லையாம். மூன்றாவது தொடரை விளம்பரப்படுத்தும் நோக்கில், இது போன்ற செய்திகளை ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி வேண்டுமென்றே கிளப்புவதாகவும் கூறப்படுகிறது

காம்பிர் தொடர்ந்து "நம்பர்-1'

ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்திய வீரர் கவுதம் காம்பிர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ஹர்பஜன் சிங், 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), டெஸ்ட் வீரர்களுக்கான ரேங்கிங் பட்டியலை துபாயில் நேற்று அறிவித்தது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் காம்பிர் (840 புள்ளி) தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

நாக்பூர் டெஸ்டில் சதமடித்து அசத்திய சேவக் (6வது), சச்சின் (9வது), "டாப்-10' வரிசையில் இடம் பிடித்தனர். இதேபோல இரட்டை சதமடித்த தென் ஆப்ரிக்காவின் ஆம்லா 10வது, சதமடித்த காலிஸ் 4வது இடத்துக்கு முன்னேறினர்.

இலங்கையின் மகிலா ஜெயவர்தனா, சங்ககரா தொடர்ந்து முறையே 2வது, 3வது இடத்தில் உள்ளனர்.

ஹர்பஜன் பின்னடைவு: பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், 4 இடங்கள் தள்ளப்பட்டு 12வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் ஜாகிர் கான், 6வது இடத்துக்கு முன்னேறினார்.


பவுலிங்கில் ஏமாற்றிய இஷாந்த் சர்மா, 22வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பந்துவீச்சில் அசத்திய தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், தொடர்ந்து "நம்பர்-1' இடத்தில் உள்ளார். சுழலில் அசத்திய பவுல் ஹாரிஸ் 9வது இடத்துக்கு முன்னேறினார்.


இரண்டாவது, 3வது இடத்தில் முறையே மிட்செல் ஜான்சன் (ஆஸ்திரேலியா), முகமது ஆசிப் (பாகிஸ்தான்) ஆகியோர் உள்ளனர்

இந்தியாவுக்கு 175 பதக்கம்

தெற்காசிய விளையாட்டில் வழக்கம் போல் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. மொத்தம் 175 பதக்கங்களுடன் முதலிடத்தை கைப்பற்றி அசத்தியது.

"சார்க்' அமைப்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் நேபாளம், பூடான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகள் பங்கேற்கும், 11வது தெற்காசிய விளையாட்டு போட்டி தாகாவில் நடந்தது. கடந்த 12 நாட்களாக நடந்த இப்போட்டிகள், நேற்று நிறைவு பெற்றன.

இரண்டு தங்கம்:

கடைசி நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் பைனலில் இந்தியாவின் மதுரிகா, சக நாட்டு வீராங்னையான ஷாமினியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் மதுரிகா 7-11, 8-11, 12-10, 11-9, 11-9, 11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

கடைசி வரை போராடிய ஷாமினி, வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுமியாதீப் ராய் (11-6, 6-11, 8-11, 11-4, 11-5, 11-9) தங்கம் வென்றார். இவரை எதிர்த்து பைனலில் களமிறங்கிய மற்றொரு இந்திய வீரர் அமல்ராஜ் வெற்றி வென்றார். நேற்று நடந்த மாரத்தான் போட்டியில், இந்தியாவின் ராம் சிங் வெண்கலம் வென்றார்.

சர்வதேச அளவில் மாரத்தான் போட்டிக்கான தூரம் 42.1 கி.மீ., தான். ஆனால் தெற்காசிய போட்டியில் 34.1 கி.மீ., தூரம் தான் மாரத்தான் நடந்தது. இதனால் இப்போட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முதலிடம்:

தெற்காசிய போட்டிகளில் இந்திய அணி 175 (90 தங்கம், 55 வெள்ளி, 30 வெண்கலம்) பதக்கங்களுடன் முதலிடத்தை பெற்றது. 80 பதக்கங்களுடன் (19 தங்கம், 25 வெள்ளி, 36 வெண்கலம்) இரண்டாவது இடத்தை பாகிஸ்தானும், 97 பதக்கங்களுடன் (18 தங்கம், 23 வெள்ளி, 56 வெண்கலம்) வங்கதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

குறைவு:

கடந்த 2006 ம் ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த 10 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்த இந்திய அணி, 214 (118 தங்கம், 59 வெள்ளி, 37 வெண்கலம்) பதக்கங்களை கைப்பற்றியிருந்தது. ஆனால் இந்த முறை அதைவிட குறைவாக பதக்கங்களை பெற்றுள்ளது இந்தியா.

பதக்கப்பட்டியல்

நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
இந்தியா 90 55 30 175
பாகிஸ்தான் 19 25 36 80
வங்கதேசம் 18 23 56 97
இலங்கை 16 34 54 104
நேபாள் 7 9 19 35
ஆப்கானிஸ்தான் 7 9 16 32
பூடான் 0 2 3 5
மாலத்தீவு 0 0 2 2
மொத்தம் 157 157 214 528
------------
கோலாகல நிறைவு
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. வண்ணமயமான விழாவில் வங்கதேச அதிபர் ஜில்லர் ரஹ்மான், ராணுவ தலைவர் அப்துல் முபின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் 12 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் விழாவில் பங்கேற்று, கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகசங்களை நிகழ்த்தினர். பாரம்பரிய முறைப்படி தெற்காசிய விளையாட்டின் கொடியிறக்கப்பட்டு, அடுத்து தொடரை நடத்த உள்ள இந்தியாவிடம் (2012) வழங்கப்பட்டது.

வங்கதேச ஒலிம்பிக் சங்க தலைவர் ஜென் முபின், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் கொடியை வழங்கினார். சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த நிறைவு விழா, மேளதாளங்கள் முழங்க இனிதே முடிந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்திய வீரர், வீராங்கனைகள், பங்கபந்து மைதானத்தில் நடந்த இவ்விழாவில், முழுமையாக பங்கேற்க முடியவில்லை. இறுதி அணிவகுப்பில் பெரும்பாலான அணிகளின் வீரர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
----------



கல்மாடி உறுதி
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்களை வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்திய அணியினர் 90 தங்கம் உட்பட 173 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

அவர்களை ஊக்குவிப்பது அவசியம். மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் இது குறித்து பேசி, வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக, இந்திய அணியினரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன.

வரும் 2012 ம் ஆண்டு 12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தியாவில் நடக்க உள்ளன. இதற்கான ஜோதி "சார்க்' அமைப்பு நாடுகளில் வலம் வரும். வங்கதேசத்திலிருந்து துவங்கி மற்ற நாடுகளுக்கு சென்று, பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்தடையும். இவ்வாறு கல்மாடி தெரிவித்தார்.

யாருக்கு கேப்டன் பதவி?

இந்திய ஹாக்கியில் மீண்டும் புதிய பிரச்னை கிளம்பியுள்ளது. அணியின் கேப்டனாக யாரை தேர்வு செய்வது என்பதில், ஹாக்கி இந்தியா அமைப்பு மற்றும் பயிற்சியாளர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

உலககோப்பை ஹாக்கி தொடர் வரும் 28 ம் தேதி முதல் மார்ச். 13 வரை இந்தியாவில் நடக்க உள்ளது. தொடருக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் இந்திய ஹாக்கியில் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. உலககோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த 6ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில், கேப்டனாக ராஜ்பால் சிங்கை நியமித்தது ஹாக்கி இந்தியா அமைப்பு. ஆனால் இதற்கு அணியின் பயிற்சியாளர் ஜோஸ் பிராசா மற்றும் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. பிரப்ஜோத் சிங்கை புதிய கேப்டனாக நியமிக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக உள்ளது. இதனால் பயிற்சியாளர், ஹாக்கி இந்தியா அமைப்பு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

என்ன காரணம்?: சமீபத்தில் சம்பள பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய இந்திய ஹாக்கி வீரர்கள் போராட்டத்தில் குதித்தனர். உலககோப்பை பயிற்சி முகாமை புறக்கணித்தனர். இப்பிரச்னையின் போது, அணியின் கேப்டனாக இருந்த ராஜ்பால் சிங், வீரர்களுக்கு ஆதரவாக செயல்பட வில்லை எனத் தெரிகிறது.

இதன் காரணமாக ராஜ்பால் சிங்கின் மீதான நம்பிக்கையை வீரர்கள் இழந்து விட்டனர். இதனால் அவர் உலககோப்பையில் கேப்டனாக நீடிப்பதை வீரர்கள் விரும்பவில்லை. இது ஒரு புறம் இருக்க, 10 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணி சார்பாக விளையாடி வரும் பிரப்ஜோத் சிங், தனக்கு கேப்டன் பொறுப்பு வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஸ்டைன் வேகத்தில் இந்தியா பரிதாபம்

தென் ஆப்ரிக்க வீரர் டேல் ஸ்டைன் வேகத்தில், நிலைதடுமாறிய இந்திய அணி, நாக்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் "பாலோ-ஆன்' பெற்றது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கப் போராடி வருகிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி, 6 விக்கெட் இழப்புக்கு 558 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது.

அடுத்து ஆடிய இந்திய அணி 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்து இருந்தது.

"டாப் ஆர்டர்' ஏமாற்றம்: நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. நேற்றைய ரன்னுடன் மேலும் ரன் எதுவும் சேர்க்காத நிலையில் காம்பிர் (12), மார்கல் பந்தில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பின் வந்த முரளி விஜய் (4), தன் பங்குக்கு ஒரு பவுண்டரி மட்டும் அடித்து விட்டு, ஸ்டைனின் பந்தில் போல்டானார்.

சேவக் சதம்: அடுத்து சேவக்குடன் ஜோடி சேர்ந்த சச்சின், அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரும், 7 ரன்னுடன் திரும்பினார். பின் பத்ரிநாத், சேவக் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவக், சர்வதேச டெஸ்ட் அரங்கில் 18 வது சதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்த நிலையில், 109 ரன்கள் (15 பவுண்டரி) எடுத்திருந்த சேவக் அவுட்டானார்.

பத்ரிநாத் ஆறுதல்: தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பத்ரிநாத், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக விளையாடிய இவர், சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்தார். தேநீர் இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து இருந்தது.


12 ரன்னுக்கு 6 விக்.,: இந்நிலையில் ஹாரிசின் அபாரமான சுழலில், கேப்டன் தோனி (6), அவுட்டானார். இதன் பின் இந்திய அணியின் வீழ்ச்சி துவங்கியது. ஸ்டைன் பவுலிங்கில், அனல் பறந்தது. இவரது வேகப்பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாத இந்திய வீரர்கள் ஒருவர் பின், ஒருவராக பெவிலியன் திரும்பினர்.

பத்ரிநாத் (56), சகா (0), ஜாகிர் கான் (2), அமித் மிஸ்ரா (0), ஹர்பஜன் சிங் (8) என வரிசையாக அவுட்டாயினர். கடைசி 12 ரன்கள் எடுப்பதற்குள், 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி "பாலோ-ஆன்' பெற்றது.

தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் 7 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 325 ரன்கள் பின்தங்கி இருந்த இந்திய அணியை, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித், மீண்டும் "பேட்டிங்' செய்ய அழைத்தார்.


மீண்டும் சொதப்பல்: இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு மீண்டும் ஏமாற்றம். காம்பிர் (1), இம்முறையும் சொதப்பினார். சேவக், 16 ரன்னுக்கு வெளியேறினார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் (15), முரளி விஜய் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.


போராட்டம்: தற்போது இந்திய அணி 259 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில், கைவசம் 8 விக்கெட்டுகள் மட்டும் வைத்துள்ள இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியின் பிடியில் இருந்து தப்புவது மிகவும் கடினமே.


--------
சிறந்த பந்து வீச்சு

நேற்று இந்திய அணிக்கு எதிராக 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்திய, தென் ஆப்ரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன், சர்வதேச கிரிக்கெட் அரங்கில், தனது மிகச்சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார். இதுவரை 37 டெஸ்டில் பங்கேற்றுள்ள இவர், 13 வது முறையாக ஐந்து விக்கெட்டும், அதற்கு மேலும் கைப்பற்றியுள்ளார்.

அசார் சாதனை சமன்

இந்திய கிரிக்கெட் வீரர் சேவக், நேற்று தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, நான்காவது சதம் அடித்தார். இதன்மூலம் முன்னாள் இந்திய வீரர் அசாருதினின் (4 சதம், எதிர்-தென் ஆப்ரிக்கா) சாதனையை சமன் செய்தார். இதற்கு முன் சேவக், கடந்த 2001ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அறிமுகமான புளோயம்போன்டைன் டெஸ்டில் சதம் (105) அடித்தார். பின் கான்பூர் (165 ரன், 2004 ), சென்னை (319, 2008) டெஸ்டில் சதம் கடந்து இருந்தார்.

"ஆல்- அவுட்' ரகசியம்

நேற்றைய போட்டி குறித்து தென் ஆப்ரிக்க வீரர் ஸ்டைன் கூறியது: ஆடுகளத்தில் சரியான இடத்தில் பவுலிங் செய்து, விக்கெட்டுகளை வீழ்த்த நினைத்திருந்தோம். இந்நிலையில் தேநீர் இடைவேளையின் போது பந்தின் தையல் பிரிந்து இருந்தது. பின் மீண்டும் பவுலிங் செய்த போது, பிரிந்த இடத்தில் முடிச்சு போடப்பட்டு இருந்தது.

இதை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டோம். இந்திய அணி ஆல் அவுட்டான பின், பவுலர்கள் நலன் கருதி, ஸ்மித் இந்தியாவுக்கு "பாலோ-ஆன்' கொடுக்கத் தயங்கினார். ஆனால் நாங்கள், தொடர்ந்து பந்து வீச தயாராக இருந்தோம். எப்படியும் இன்னும் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி விடலாம் என கேப்டனிடம் உறுதியளித்த பின் தான், இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

இவ்வாறு ஸ்டைன் கூறினார்.

வெற்றிக்கு போராடுவோம்

நாக்பூரில் நடக்கும் டெஸ்ட் போட்டி குறித்து இந்திய வீரர் சேவக் கூறுகையில்,"" தேநீர் இடைவேளைக்குப் பின் பந்தின் தன்மை மாறி விட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் டேல் ஸ்டைன், "ரிவர்ஸ்விங்' செய்து விக்கெட் வேட்டை நடத்தி விட்டார்.

இதற்கு முன், கடந்த 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் "பாலோ-ஆன்' பெற்று பின் வெற்றிபெற்றோம். அதுபோல இங்கும் வெற்றி பெற முயற்சிப்போம். அனுபவ வீரர் சச்சின், முரளி விஜய் மற்றும் பல பேட்ஸ்மேன்கள் உள்ள நிலையில் வெற்றிக்கு போராடுவோம்,'' என்றார்

காவஸ்கரின் சாதனையை சமன் செய்தார் காலிஸ்

நாகபுரி டெஸ்டில் அடித்துள்ள சதம் காலிஸின் 34-வது டெஸ்ட் சதமாகும். இதன் மூலம் இந்திய வீரர் சுநீல் காவஸ்கர், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் லாரா ஆகியோரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

அவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கெனவே 34 சதங்களை அடித்துள்ளனர்.

டெஸ்டில் அதிக சதம் எடுத்தவர்கள் பட்டியலில் 45 சதங்களுடன் டெண்டுல்கர் முதலிடத்திலும், 39 சதங்களுடன் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 2-வது இடத்திலும் உள்ளனர்.

இதுதவிர இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட்டாக அதிக ரன்களை (285) எடுத்த தென் ஆப்பிரிக்க ஜோடி என்ற சாதனையையும் காலிஸ் - ஆம்லா ஜோடி புரிந்துள்ளது.

ஆம்லாவுக்கு இது 8-வது டெஸ்ட் சதமாகும்

முதலிடத்தில் நீடிக்குமா இந்தியா?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும் பட்சத்தில் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் தொடர்ந்து "நம்பர்-1' இடத்தில் நீடிக்கலாம்.

தவிர, ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணிக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் விருது மற்றும் பரிசுத் தொகையை தட்டிச் செல்லலாம்.

டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை கைப்பற்ற இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நடக்கிறது. தற்போது இந்திய அணி 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா இரண்டாவது (120 புள்ளிகள்) இடத்தில் உள்ளது.

நேற்று துவங்க உள்ள இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில், தென் ஆப்ரிக்கா 1-0 என்ற கணக்கில் வெல்லும் பட்சத்தில் 123 புள்ளிகள் பெறும். அதே சமயம் இந்தியா 122 புள்ளிகளை பெறும். தென் ஆப்ரிக்கா 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தினால் 125 புள்ளிகளுடன் "நம்பர்-1' இடத்தை தன்வசப்படுத்தும். இந்திய அணி 120 புள்ளிகளுடன் 2 வது இடத்துக்கு தள்ளப்படும்.


ஆண்டின் சிறந்த அணி:

இத்தொடரில் இந்திய அணி 2-0 கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தினால், 127 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கும். தென் ஆப்ரிக்கா 116 புள்ளிகள் பெறும். டெஸ்ட் தொடர் "டிரா' ஆகும் பட்சத்தில் ரேங்கிங் பட்டியலில் எந்த மாற்றமும் இருக்காது.

வரும் ஏப். 1ம் தேதி வரை, இந்தியா முதலிடத்தில் நீடித்தால் ஐ.சி.சி., வழங்கும் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணிக்கான விருதும், பரிசுத் தொகையாக ரூ. 81 லட்சமும் வெல்லலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு:

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழக்கும் பட்சத்தில் தென் ஆப்ரிக்கா அணி 116 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். அதே சமயம் 2 வது இடத்துக்கு முன்னேறும் ஆஸ்திரேலிய அணி (118), ஐ.சி.சி., வழங்கும் ரூ. 35 லட்சம் பரிசுத் தொகை வெல்லலாம்.

வரும் ஏப்., 1 ம் தேதிக்குள் வங்கதேசம்-இங்கிலாந்து, ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் தலா 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன. இப்போட்டிகளின் முடிவுகள், "நம்பர்-1' இடத்துக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை