ஐ.பி.எல்., பைனலில் அவமானம்

ஐ.பி.எல்., தொடர் முடிந்த போதும், சர்ச்சைகள் தொடருகின்றன. பைனலை காண வந்த இந்திய முன்னாள் கேப்டன் நரி கான்ட்ராக்டர், மைதானத்தின் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இவர் வைத்திருந்தது போலி டிக்கெட் என்று கூறி, அவமானப்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடந்தது. நவி மும்பையில் நடந்த பைனலில் சென்னை கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, கோப்பை வென்றது. இப்போட்டியை காண, டி.ஒய் பாட்டீல் மைதானத்துக்கு வந்த நரி கான்ட்ராக்டருக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனால் சோகத்துடன் திரும்பியுள்ளார்.

இது குறித்து இவர் கூறுகையில்,""பைனலை காண 35 கி.மீ., பயணம் செய்து வந்தேன். நுழைவு வாயிலில் நின்றவர் டிக்கெட்டுடன் "பாட்ஜ்' ஒன்றும் இருக்க வேண்டும் என்றார். எனக்கு "பாட்ஜ்' எதுவும் வழங்கப்படவில்லை.

இதனால் குழப்பம் அடைந்த நான், அப்படியே திரும்பிச் சென்றேன். இப்பிரச்னையில் வாயில்காவலரை குறை சொல்ல முடியாது. அவர் தனது கடமையை தான் செய்தார். மும்பை கிரிக்கெட் சங்கம், எங்களுக்கு போலி டிக்கெட்டுகளை எப்படி வழங்கியது?

இலவச பாஸ் வழங்கப்படாத சர்ச்சை காரணமாக, மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டிகளை காண முடியவில்லை. இதே போல பைனலை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை,''என்றார்.

புதிய பிரச்னை:

லலித் மோடி பிரச்னை ஓயாத நிலையில், நரி கான்ட்ராக்டருக்கு அனுமதி மறுத்த விவகாரம் மும்பை கிரிக்கெட் சங்கத்தில் புயலை கிளப்பியுள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் இணை செயலர் லால்சந்த் ராஜ்புட் கூறியது:

பைனலை காண 200 டிக்கெட்டுகளை மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு ஐ.பி.எல்., நிர்வாகம் வழங்கியது. இதனை போலி டிக்கெட் என்று கூறி அனுமதி மறுத்துள்ளனர். இதனால் முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

பின் ஐ.பி.எல்., தலைமை அதிகாரி சுந்தர் ராமனை நான் தொடர்பு கொண்டு, பிரச்னைக்கு தீர்வு கண்டேன். அதற்குள் கான்ட்ராக்டர் திரும்பிச் சென்று விட்டார். இது தொடர்பாக பி.சி.சி.ஐ.,க்கு கடிதம் எழுதியுள்ளோம்.

நாளை நடக்கும் பி.சி.சி.ஐ., செயற்குழு கூட்டத்தில் கேள்வி எழுப்புவோம். வரும் காலங்களில் மும்பை கிரிக்கெட் சங்கத்துடன் சேர்ந்து தான் ஐ.பி.எல்., போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு ராஜ்புட் கூறினார்.

சச்சின் "அட்வைஸ்' கைகொடுக்கும்

பெண்களுக்கான உலக கோப்பை ("டுவென்டி-20') தொடரில் சாதிக்க, சச்சின் வழங்கிய ஆலோசனை கைகொடுக்கும்,'' என இந்திய அணி கேப்டன் ஜுலான் கோஸ்வாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீசில், பெண்களுக்கான "டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான இந்திய அணியினர் நேற்று, வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டனர்.

"பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, வரும் மே 6ம் தேதி, தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. இதற்கு முன் வரும் மே 2, 3ம் தேதிகளில் முறையே இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகளுடன் பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது.

இத்தொடர் குறித்து இந்திய கேப்டன் கோஸ்வாமி கூறியதாவது: "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கு உடல் மற்றும் மன ரீதியில் இந்திய வீராங்கனைகள் முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளனர்.

இதற்காக மும்பையில் நடந்த பயிற்சியின் போது, இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், நிறைய ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆலோசனைகள் உலக கோப்பை தொடரில் சாதிக்க நிச்சயம் கைகொடுக்கும்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி, அரையிறுதி வரை முன்னேறியது. இத்தொடரில் கிடைத்த அனுபவங்களை கொண்டு, இம்முறை கோப்பை வெல்ல போராடுவோம்.

சமீபத்தில் இந்திய அணியின் பீல்டிங், மந்தமாக இருந்தது. இதற்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்டுள்ளதால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இணையாக பீல்டிங்கில் சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு கோஸ்வாமி கூறினார்.

பி.சி.சி.ஐ., மீது லலித் மோடி வழக்கு

ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து தன்னை "சஸ்பெண்ட் செய்த பி.சி.சி.ஐ., மீது வழக்கு தொடுக்க லலித் மோடி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று முன்னணி வக்கீல்களான ராம் ஜெத்மலானி, ஹரிஷ் சால்வே ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பின் தலைவராக இருந்தவர் லலித் மோடி. கொச்சி அணியின் பங்குகள் தொடர்பாக இவருக்கும் சசி தரூருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இப்பிரச்னையில் மத்திய அமைச்சர் பதவியை சசி தரூர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து லலித் மோடிக்கு நெருக்கடி அதிகமானது. ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பங்குகளில் முறைகேடு, "டிவி, "இன்டர்நெட் உரிமம் அளிப்பதில் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து மோடியை, இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) "சஸ்பெண்ட் செய்தது. ஊழல் புகார் தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டது. ஐ.பி.எல்., அமைப்பின் தற்காலிக தலைவராக சிரயு அமின் நியமிக்கப்பட்டார்.


ஜெத்மலானி சந்திப்பு:

இந்தச் சூழலில் நேற்று டில்லி வந்த லலித் மோடி முன்னணி வக்கீலான ஹரிஷ் சால்வேயை சந்தித்து இரண்டு மணி நேரம் பேசினார். பின் மற்றொரு மூத்த வக்கீலான ராம் ஜெத்மலானியுடன் நீண்ட நேரம் விவாதித்தார்.

அப்போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தேவையான சட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளார். தவிர, தனக்கு எதிரான "சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து பி.சி.சி.ஐ., மீது வழக்கு தொடுப்பது பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.

இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மோடி மறுத்தார். அவரை வழிமறித்து கேள்வி கேட்ட நிருபர்களிடம்,""நான் எதையும் சொல்ல தயாராக இல்லை. எனது காருக்கு செல்ல அனுமதி அளியுங்கள். வீணாக தடுக்காதீர்கள். "ஜென்டில்மேன் போல் நடந்து கொள்ளுங்கள்,என, ஆவேசமாக கூறினார்.


"க்விஸ் மாஸ்டர்

லலித் மோடியின் நிலைமை பரிதாபமாக உள்ளது. ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து "சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், "டுவீட்டர் இணைய தளத்தில், "க்விஸ் நிகழ்ச்சி போல கேள்விகளை கேட்டு பொழுதை கழிக்கிறார்.

சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் "ஓபனிங் பேட்ஸ்மேனாக அசத்தியது இடது கை ஆட்டக்காரர்களா அல்லது வலது கை ஆட்டக்காரர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு வலது கை பேட்ஸ்மேன்கள் (சராசரி 32.80 ரன்) என அவரே அளித்துள்ளார். இடது கை துவக்க பேட்ஸ்மேன்கள் சராசரியாக 25.83 ரன் தான் எடுத்துள்ளனர்.

பின் "சேஸ் செய்யும் அணிக்கு சாதகமாக அமைந்த "ஓவர் எது என கேட்டுள்ளார். இதற்கு நான்காவது ஓவர்(சராசரியாக 9.35 ரன்) என, புள்ளிவிபரத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.பி.எல்., வளர்ச்சி பெறும்

மோடி இல்லாத நிலையிலும், ஐ.பி.எல்., மிகப் பெரும் வளர்ச்சி காணும் என பி.சி.சி.ஐ., நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி தெரிவித்தார். இது குறித்து இவர் கூறுகையில்,""லலித் மோடியால் மட்டும் ஐ.பி.எல்., வெற்றி பெறவில்லை.

இவர் இல்லாத நிலையிலும் வளர்ச்சி தொடரும். இதற்கான நடவடிக்கையை பி.சி.சி.ஐ., எடுத்து வருகிறது. அணிகளின் உரிமையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை. வர்த்தக ரீதியில் ஐ.பி.எல்., அமைப்பின் மதிப்பு தொடர்ந்து உயரும்,என்றார்.

ஐ.பி.எல். - ரூ.51 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் மிகப்பெரிய அளவில் “பெட்டிங்” (சூதாட்டம்) நடைபெற்று உள்ளது.

எந்த அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லும், இறுதிப்போட்டியில் மோதும் அணிகள் எவை, அரை இறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை, ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது யாருக்கு கிடைக்கும் என்பது, முதலில் பேட்டிங் செய்வது யார் என்பது உள்பட பல்வேறு வகைகளில் பெட்டிங் நடந்து உள்ளது.

மொத்தம் உள்ள 60 ஆட்டத்தில் ரூ. 51 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடை பெற்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு ஆட்டத்துக்கான சராசரி பெட்டிங் ரூ. 830 கோடியாகும்.

இறுதிப் போட்டியில் மும்பை அணிதான் வெற்றி பெறும் என்று அதிகமான பேர் பெட்டிங் கட்டி இருந்தனர். இதனால் சென்னை அணிக்காக “பெட்” கட்டி இருந்தவர்களுக்கு அதிக லாபம் கிடைத்து இருக்கும்.

பெரும்பாலான புக்கிகள் (சூதாட்ட தரகர்கள்) சென்னை அணி வெற்றி பெற்றதை எதிர்பார்க்க வில்லை.

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்

2-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்தது. அப்போது மேட்ச்பிக்சிங் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது.

ஆனால் அப்போது சூதாட்டம் எதுவும் நடக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் சங்கம் மறுத்து உள்ளது.

ஆனால் ஐ.பி.எல். மோசடி தொடர்பாக விசாரணை நடத்திய வருமான வரி அதிகாரிகள் 2009 ஐ.பி.எல்.லில் சூதாட்டம் நடந்ததை கண்டு பிடித்து உள்ளனர்.

இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 27 வீரர்களும் அதிகாரி ஒருவரும் சம்பந்தப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் முன்னணி வீரர்கள் ஆவர். போட்டியில் ஆடிய மற்றும் ஆடாத வீரர்களுக்கும் இதில் பங்கு இருந்து உள்ளது.

இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் நிதிதுறைக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.

எனவே 2009 ஐ.பி.எல். தொடர்பாக முழு விசாரணை நடத்தினால் மேட்ச் பிக்சிங் பற்றி நிறைய விஷயங்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது.

வார்னரை கவர்ந்த சேவக்

டுவென்டி-20' ஸ்பெஷலிஸ்ட் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை, இந்திய வீரர் சேவக் அதிகம் கவர்ந்துள்ளார்.

ஐ.பி.எல்., தொடரில் டில்லி டேர்டெவில்ஸ் அணியின் துவக்க வீரர்களாக, இந்தியாவின் அதிரடி வீரர் சேவக், ஆஸ்திரேலியாவின் வார்னர் விளையாடினர். இது இவர்கள் இடையே நட்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது சேவக், வார்னரிடம் கூறுகையில்,""நீங்கள் தேசத்துக்காக அதிக போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

அதாவது டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும். இதில் தான் அனைத்து விதமான வகையிலும் அடித்து விளையாடலாம். அப்போது ஒரு நாளில் நான் எடுத்த 284 ரன்கள் என்ற சாதனையை, 300 ரன்கள் எடுத்து, நீங்கள் முறியடிக்க வேண்டும் ,'' என்றார்.

சேவக்கின் இந்த கருத்துக்கள், வார்னரை அதிகம் கவர்ந்துள்ளது. இதுகுறித்து வார்னர் கூறியது:

சேவக் என்னிடம் கூறிய வார்த்தைகளை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டேன். இதை எனக்கு விடுக்கப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டுள்ளேன். இப்போது அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

இருப்பினும் எனக்கான காலம் வரும்வரை காத்திருப்பேன். தற்போதைய கேப்டன் பாண்டிங் தலைமையில், டெஸ்ட் போட்டியில் பங்கேற்றால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

ஐ.பி.எல்., போட்டிகள் முடிந்து, அடுத்து "டுவென்டி-20' உலக கோப்பை வெஸ்ட் இண்டீசில் துவங்குகிறது. அங்குள்ள ஆடுகளங்கள் தற்போது அதிகமாக "பவுன்ஸ்' ஆவதில்லை. எங்கள் அணியில் 150 கி.மீ.,க்கும் அதிக வேகத்தில் பவுலிங் செய்யக்கூடிய, நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

தவிர, நாதன் ஹாரிட்ஜ், ஸ்டீபன் ஸ்மித் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். "பார்ட் டைம்' ஸ்பின்னராக டேவிட் ஹசி, மைக்கேல் கிளார்க் கைகொடுப்பார்கள். இவர்களது பங்கு கரீபிய மண்ணில் அதிகம் தேவைப்படும். மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணி கோப்பை வெல்லும் என எண்ணுகிறேன்.

இவ்வாறு வார்னர் தெரிவித்தார்.

தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் லீக்

இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் 'டுவென்டி-20' தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கும்,'' என, ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்., தொடர் முடிந்த பின் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' போட்டி நடக்கும். இதில் ஐ.பி.எல்., தொடரில் முதல் மூன்று இடம் பிடித்த அணிகள், தவிர, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்காவில் இருந்து இரண்டு மற்றும் நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீசில் இருந்து தலா ஒரு அணிகள் என மொத்தம் 12 அணிகள், சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் பங்கேற்கும்.

கடந்த ஆண்டு நடந்த முதல் தொடரில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அணி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. தற்போது இரண்டாவது தொடர் குறித்து, லலித் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக கோப்பை "டுவென்டி-20' மற்றும் இரண்டாவது ஐ.பி.எல்., தொடரை கிரிக்கெட் தென் ஆப்ரிக்கா (சி.எஸ்.ஏ.,) வெற்றிகரமாக நடத்தியுள்ளது. தவிர, இவ்வகை போட்டிகளுக்கு தென் ஆப்ரிக்காவில் நல்ல வரவேற்பும் உள்ளது. இப்போது இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் தொடரையும் நடத்த விருப்பம் தெரிவித்தது.

இதையடுத்து சி.எஸ்.ஏ.,யின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு, இத்தொடர் வரும் செப்., 10 முதல் 26ம் தேதி வரை, தென் ஆப்ரிக்காவில் நடக்கும். இதில் சென்னை, மும்பை, பெங்களூரு தவிர, மற்ற அணிகள் மற்றும் போட்டி நடக்கும் இடங்கள் ஆகியவை, வரும் வாரத்தில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை தொடரில் சாதிப்பேன்: யுவராஜ்

உலக கோப்பை ("டுவென்டி-20') கிரிக்கெட் தொடரில் சாதிப்பேன்,'' என, இந்திய வீரர் யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீசில், 3வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி துவங்குகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர் யுவராஜ் சிங், 3வது ஐ.பி.எல்., தொடரில் சோபிக்கவில்லை. இதனால் பஞ்சாப் அணி, படுதோல்வி அடைந்து கடைசி இடம் பிடித்தது.

இது குறித்து யுவராஜ் கூறியதாவது: ஐ.பி.எல்., தொடரில் சோபிக்காதது வருத்தமளிக்கிறது. மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்ட நான், உடனடியாக ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்றது, நெருக்கடியாக அமைந்தது. இதனால் நூறு சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

தற்போது எனது கவனம் முழுவதும், "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் மீது திரும்பியுள்ளது. இத்தொடரில் சாதிக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். "டுவென்டி-20' போட்டிகளில் பீல்டிங் முக்கிய பங்குவகிக்கும் என்பதால், இதற்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பெரிதளவில் சாதிக்கவில்லை. இம்முறை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

துவக்க வீரர் சேவக் இல்லாதது, பின்னடைவான விஷயம். இருப்பினும், மாற்றுவீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள முரளி விஜய், நம்பிக்கை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு யுவராஜ் கூறினார்

ஐ.பி.எல்., சூதாட்டம் - 27 வீரர்களுக்கு தொடர்பு

தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது ஐ.பி.எல்.,தொடரின் போது பெருமளவு கிரிக்கெட் சூதாட்டம் நடந்துள்ளது. இதில் 27 வீரர்களுக்கு தொடர் இருப்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது.


கடந்த 2000ல் தென் ஆப்ரிக்க அணி, இந்தியா வந்த போது சூதாட்ட பிரச்னை முதல்முறையாக விஸ்வரூபமெடுத்தது. சூதாட்ட புக்கிகளிடம் கோடிகளை பெற்றுக் கொண்டு, போட்டிகளை வேண்டுமென்றே வீரர்கள் விட்டுக் கொடுத்த விபரம் அம்பலமானது.


இதில் தொடர்புடைய தென் ஆப்ரிக்காவின் குரோனியே, இந்தியாவின் அசார், ஜடேஜா போன்றவர்களுக்கு அப்போது தடை விதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்திய கிரிக்கெட்டில் சூதாட்ட பிரச்னை கிளம்பியுள்ளது.


இம்முறை ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி சிக்கியுள்ளார். கடந்த 2009ல் லோக்சபா தேர்தல் காரணமாக பாதுகாப்பு பிரச்னை ஏற்பட, மத்திய அரசுக்கு சவால் விடுத்த மோடி, இரண்டாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடரை தென் ஆப்ரிக்காவில் நடத்தினார்.


இத்தொடர், இந்தியாவுக்கு வெளியே நடந்ததால், கிரிக்கெட் சூதாட்டம் படுஜோராக அரங்கேறியுள்ளது. இது தற்போது வருமான வரித்துறை நடத்திய சோதனையின் போது தெரிய வந்துள்ளது. 27 வீரர்கள் மற்றும் ஒரு நிர்வாகி சூதாட் டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


சூதாட்டத்தின் பின்னணியில் லலித் மோடி இருந்துள்ளார். இவருக்கு சாதகமாக 3 அணிகள் இருந்துள்ளன. இவர் சார்பில் டில்லியை சேர்ந்த தொழில் அதிபர் சமிர் தக்ரால், பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளார்.

இவரது மொபைல் போன் உரையாடல்களை ஆய்வு செய்த போது, புக்கிகளிடம் பேசியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூதாட்டம் பற்றிய தங்களது அறிக்கையை வருமான வரித்துறையினர் மத்திய நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளனர். ஏற்கனவே, பெரும் சர்ச்சையில் சிக்கி தவிக்கும் மோடிக்கு, சூதாட்ட புகார் இன்னொரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சூதாட்ட புகார் விபரத்தை கேட்டு ஐ.பி.எல்., அணிகளின் உரிமையாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். கோல்கட்டா அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஜெய் கூறுகையில்,''சூதாட்ட புகார் உண்மையானால் மோடியிடம் விளக்கம் கேட்போம்,''என்றார்.

"ஹேப்பி பர்த்டே' சச்சின்!

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இன்று 37வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். இந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்கள் எடுத்து வரலாறு படைத்த இவர், தொடர்ந்து பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார்.

கடந்த 1973, ஏப்., 24ம் தேதி மும்பையில் பிறந்தார் சச்சின். தனது 16வது வயதில், 1989ல் இந்திய அணியில் அறிமுகமான இவர், 21 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன், சதம் எடுத்து சாதித்துள்ளார்.

மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனாலும், விரல் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் வரும் 25ம் தேதி நடக்க உள்ள சென்னை அணிக்கு எதிரான பைனலில் இவர் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சச்சின் அளித்த பேட்டி:

கிரிக்கெட்டில் கொண்ட தீவிர ஆர்வத்தின் காரணமாக, நன்கு அனுபவித்து விளையாடி வருகிறேன். டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என, அனைத்து வகையிலான போட்டிகளிலும், அதிக ரன்கள் குவித்துள்ளேன். அதேநேரம் கேப்டன் பதவிக்காகவும் விளையாடியது இல்லை. இதற்காகவும் நான் என்னை நிரூபிக்க முயற்சித்தது இல்லை.

பெரும் சிரமம்:

எந்த ஒரு அணியும், ஒரே நாள் இரவில் சிறந்ததாக மாறிவிட முடியாது. ஒரு வீரரின் தனித்தன்மையை கண்டறிவது முதல், சிறந்த அணியை உருவாக்குவது என்பது வரை மிக முக்கியம்.

இதற்காக கடந்த மூன்றாண்டுகளாக ஒவ்வொரு நிர்வாகிகளும், பெரும் சிரமப்பட்டிருப்பர். இதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்., அணியில், சிறிய மாற்றங்களைத் தவிர, பெரிய அளவில் மாற்றம் இருக்காது என நம்புகிறேன்.

கடினம் தான்:

என்னுடைய தனிப்பட்ட எண்ணம் என்னவென்றால், தற்போதுள்ள நான்கு இந்திய மற்றும் நான்கு வெளிநாட்டு வீரர்களை தொடர்ந்து வைத்திருக்க முயற்சிக்கலாம். இந்திய வீரர்களை பொறுத்தவரையில், அணி உரிமையாளர்கள் முடிவு செய்யலாம்.

இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.

வீழ்ச்சிப் பாதையில் ஐ.பி.எல்.,

குறுகிய காலத்தில் அதிரடி எழுச்சி கண்ட ஐ.பி.எல்., அமைப்பு, வருமான வரித்துறை ரெய்டு, சூதாட்டப் புகார்களில் சிக்கி, தனது செல்வாக்கை இழக்கத் துவங்கியுள்ளது.

அசுர வளர்ச்சி:

இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) நேரடி கட்டுப்பாட்டில் கடந்த 2008 ம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமாக இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்., ) அமைப்பு துவக்கம் கண்டது. இதன் தலைவராக லலித் மோடி நியமிக்கப்பட்டார். முதல் ஐ.பி.எல்., தொடரை (2008) வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் மோடி.

அதற்குப் பின் 2009 ம் ஆண்டு இரண்டாவது ஐ.பி.எல்., தொடரை, லோக்சபா தேர்தல் காரணமாக இந்தியாவில் நடத்த முடியவில்லை. தொடரை தள்ளி வைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மோடி, தென் ஆப்ரிக்காவில் தொடரை சிறப்பாக நடத்திக் காட்டினார். இதன் மூலம் ஐ.பி.எல்., அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தது. மோடியின் செல்வாக்கும் பன்மடங்கு உயர்ந்தது.

கோடிகளில் லாபம்:

இளம் வீரர்களின் திறமையை வெளிக்கொணர்வதில் ஐ.பி.எல்., தொடர் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் அதே சமயம் வியாபார நோக்கில் செயல்படத் துவங்கியது. அணிகளின் ஏலம், வீரர்கள் ஏலம், விளம்பரங்கள், ஒளிபரப்பு உரிமை, ஸ்பான்சர் ஷிப் என எதை எடுத்தாலும் பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்தது. ரசிகர்களின் ஆதரவும் இருந்ததால், கோடிக் கணக்கில் ஐ.பி.எல்., லாபம் சம்பாதித்தது.

பிரச்னை ஆரம்பம்:

கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த சர்ச்சைகளிலும் ஐ.பி.எல்., அமைப்பு சிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு புனே, கொச்சி என்ற இரண்டு அணிகள் புதியதாக ஐ.பி.எல்., அமைப்பில் இணைக்கப்பட்டன. இதற்கு பின்னே, பிரச்னை உருவெடுத்தது.

கொச்சி அணியை ரூ. 1533 கோடிக்கு ரெண்டேவு நிறுவனம் வாங்கியது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தலையிட்டு ரூ. 70 கோடி மதிப்பிலான பங்குகளை இலவசமாக, தனது நெருங்கிய தோழியான சுனந்தா புஷ்கருக்கு பெற்று தந்துள்ளார்.

இது பற்றி வெளியில் தெரிவிக்கக் கூடாது என சசி தரூர் தன்னை மிரட்டியதாக லலித் மோடி தெரிவித்தார். அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக சசி தரூருக்கு, கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து சசி தரூர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதிரடி ரெய்டு:

இதனிடையே ஐ.பி.எல்., அமைப்பை, வருமானத் துறையினர் அதிரடி "ரெய்டு' நடத்தினர். இதில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளன. சூதாட்டம் நடத்தியதாக, லலித் மோடி மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரித் துறை ரெய்டு, சூதாட்ட புகார் என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறார் மோடி.

உண்மை தேவை:

இந்நிலையில் ஐ.பி.எல்., அமைப்பின் சிறப்பான பயணம் தொடருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மோடிக்கு பின் வருபவர்கள், போட்டிகளை வெற்றிகரமாக நடத்த முடியுமா, அணியின் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்களா, ரசிகர்கள் மத்தியில் ஆதரவு தொடருமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஐ.சி.எல்., போல வீழ்ச்சியை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனை உணர்ந்து அனைத்து விஷயங்களிலும் ஐ.பி.எல்., அமைப்பு ஒளிவு மறைவின்றி செயல்பட வேண்டும். தவிர, அரசியல் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அப்போது தான் சரிவிலிருந்து ஐ.பி.எல்., மீள முடியும்.

ஐ.பி.எல். - பெங்களூரு ரசிகர்கள் ஆவேசம்

அரையிறுதிக்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகளின், பணத்தை திருப்பித் தருவதில், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.

மூன்றாவது ஐ.பி.எல்., தொடரின் இரண்டு அரையிறுதி போட்டிகள், பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால் லீக் போட்டியின் போது ஏற்பட்ட, குண்டு வெடிப்புகள் காரணமாக போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டது.


ஏற்கனவே 2 அரையிறுதிப் போட்டிக்குரிய டிக்கெட்டுகள், இங்கு விற்கப்பட்டுள்ளன. இதற்குரிய பணத்தை, மைதானத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை 10 மணி முதல், சின்னச்சாமி மைதானத்தின், 9 வது கவுன்டர் முன், நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் கூட்டம் கூடியது. அரை மணி நேரம் தாமதமாக 11 மணி முதல், பணம் திருப்பி வழங்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடிவிட்டது. இந்நிலையில் பண பற்றாக்குறை காரணமாக, அடுத்த அரைமணி நேரத்தில் கவுன்டர் மூடப்பட்டது.


இரண்டு போட்டிகளுக்காக, சுமார் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்ட நிலையில், ஒரு கவுன்டரில் மட்டும் பணம் வழங்கப்பட, ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

இதுகுறித்து பாண்டே என்பவர் கூறுகையில்,"" எனக்கு 50 டிக்கெட்டுக்குரிய, 63 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்கள் திருப்பித்தர வேண்டும். ஆனால் அவர்கள் என்னை அலுவலகத்துக்கு செல்லுமாறு, அலைய விடுகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக இங்கு போட்டியை பார்த்து வரும் எனக்கு, இதுபோன்ற அனுபவம் இதற்கு முன் ஏற்பட்டதில்லை,'' என்றார்.

சேவக் "அவுட்': முரளி விஜய் வாய்ப்பு

"டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக சேவக் நீக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதில், தமிழக வீரர் முரளி விஜய் வாய்ப்பு பெற்றுள்ளார்.

மூன்றாவது உலக கோப்பை "டுவென்டி-20' தொடர், வரும் ஏப். 30ல் வெஸ்ட் இண்டீசில் துவங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட, 12 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதில் இடம் பெற்றிருந்த சேவக்கிற்கு, ஐ.பி.எல்., தொடரின் போது மீண்டும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"" தோள்பட்டையில் காயம் அடைந்துள்ள சேவக்கிற்கு, மூன்று முதல் நான்கு வாரகால ஓய்வு தேவைப்படுகிறது.

இதனால் "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இருந்து நீக்கப்படுகிறார். மாற்று வீரரை தேர்வு செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அனுமதி அளித்துள்ளதால், இந்திய அணியில் முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார். துணைக்கேப்டனாக காம்பிர் செயல்படுவார்,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் போதும் தோள்பட்டையில் காயம் அடைந்த சேவக், பாதியில் இந்தியா திரும்பினார்.


அசத்துவார் விஜய்?

தமிழக வீரர் முரளி விஜய், "டுவென்டி-20' அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது இது தான் முதல் முறை. மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இவர் அசத்தலாக விளையாடி வருகிறார்.

ராஜஸ்தானுக்கு எதிராக 57 பந்துகளில் 127 ரன்கள் விளாசிய இவர், இத்தொடரில் இதுவரை 417 ரன்கள் குவித்துள்ளார். இவரது அதிரடி, வெஸ்ட் இண்டீசிலும் தொடரும் என நம்பலாம்.

ஐ.பி.எல்., விருது யாருக்கு?

ஐ.பி.எல்., விருதுக்கு முரளி விஜய், ராபின் உத்தப்பா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

மும்பையில், வரும் 23ம் தேதி சகாரா நிறுவனம் சார்பில் ஐ.பி.எல். விருது வழங்கும் விழா நடக்கிறது. இதற்கு, லீக் சுற்றில் வீரர்களின் செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இதில் 22 வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் 10 விருதுக்கான வீரர்களை ஆறு பேர் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும்.

ஒவ்வொரு பிரிவிலும் ஒருவீரர் தேர்வு செய்யப்படுவார். முக்கிய பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல்:

சிறந்த பேட்ஸ்மேன்: காலிஸ், சச்சின், சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், ராபின் <உத்தப்பா.

சிறந்த பவுலர்: ரியான் ஹாரிஸ், அஷ்வின், பிரக்யான் ஓஜா, ஹர்பஜன் சிங், வினய் குமார், ஜாகிர் கான்

சிறந்த அறிமுக வீரர்: மைக்கேல் லம்ப், அம்பாதி ராயுடு, போலார்டு, பசல், மோனிஷ் மிஸ்ரா, டெய்ட், போலிஞ்சர்.

சிறந்த பீல்டர்: ரெய்னா, போலார்டு, ஜூன்ஜூன்வாலா, டிவிலியர்ஸ், யூசுப் பதான், டேவிட் வார்னர்.

சிறந்த பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்: முரளி விஜய், உத்தப்பா, யூசுப் பதான், ஜுயன் திரான், டேவிட் வார்னர், ஹர்பஜன், வார்ன்.

சிறந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்: கில்கிறிஸ்ட், பிரண்டன் மெக்கலம், தன்வீர் (2008-09).