கேப்டன் தோனியின் ரூ. 28 லட்சம் போர் ரக "பைக்'

பைக்' பிரியரான தோனி, ரூ. 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான "ஹெல்கேட்' என்ற போர் ரக பைக்கை இறக்குமதி செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு, பைக் என்றால் கொள்ளை பிரியம். இவரிடம் காவாசாக்கி இசட் எக்ஸ்14, ஹார்லி-டேவிட்சன் உள்ளிட்ட 22 நவீன பைக்குள் உள்ளன.

இந்த வரிசையில் புதிதாக சுமார் ரூ. 28 லட்சம் மதிப்பிலான "எக்ஸ் 132 ஹெல்கேட்' என்ற பைக்கை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளார்.

தென் கிழக்கு ஆசியாவிலேயே, இந்த "புயல் வேக' பைக்கை வாங்கியுள்ள முதல் நபர் என்ற பெருமை பெறுகிறார்தோனி.

விளையாட்டு வீரர்களில் இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் பெக்காமிடம் இந்த வகை பைக் உண்டு.

புதிய பைக் குறித்து தோனியின் உறவினர் கவுதம் குப்தா கூறுகையில்,"" ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் "ஹெல்கேட்' பைக்கை இறக்குமதி செய்தார் தோனி.

தற்போது டில்லி சென்றுள்ள இவர், இந்த பைக்கை மிக விரைவில் ராஞ்சிக்கு எடுத்து வர உள்ளார்,''என்றார்.

ஐ.பி.எல். போட்டியில் ரூ.180 கோடிக்கு டிக்கெட் விற்பனை

ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ரூ.10 கோடி பரிசாக கிடைத்தது. ஐ.பி.எல். கோப்பையை வென்றதால் அதிக லாபம் அடையும் அணியாக கொல்கத்தா இருக்கும்.

அந்த அணி இந்த ஆண்டு ரூ.100 கோடி வரை செலவழித்து உள்ளது. கேப்டன் காம்பீர், காலிஸ், சுனில் நரீன், யூசுப்பதான் ஆகிய 4 வீரர்களுக்கு மட்டுமே ரூ.50 கோடி வரை செலவழித்து உள்ளது. இந்த செலவழித்த தொகைக்கு பல மடங்கு லாபம் வரும் என்று கருதப்படுகிறது.

சாம்பியன் என்பதால் அடுத்த ஆண்டு அந்த அணியின் ஸ்பான்சர் தொகை எல்லாம் அதிகமாக இருக்கும். டிக்கெட் விற்பனை மற்றும் 18 ஸ்பான்சர்கள் மூலம் அந்த அணிக்கு வரு மானம் கிடைக்கிறது.

இந்த ஐ.பி.எல். போட்டியில் பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்தாலும் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஸ்பாட் பிக்சிங், பாலியல் விவகாரம், ஷாருக்கான் விவகாரம், போதை விருந்தில் ஐ.பி.எல். வீரர்கள் 2 பேர் பங்கேற்று கைதானது ஆகியவற்றால் இந்த ஐ.பி.எல். போட்டியில் மிகுந்த சர்ச்சை ஏற்பட்டது.

ஆனால் எந்தவித சர்ச்சையாலும் ஐ.பி.எல். ஆட்டத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இந்தப் போட்டியை டெலி விசன் மூலம் 16 கோடி பேர் பார்த்ததாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மொத்தம் 20 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுள்ளன. விற்பனையான டிக்கெட்டுகளில் மொத்த மதிப்பு ரூ.180 கோடியாகும்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ன் பிராண்ட் மதிப்பு அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டின் பிராண்ட் மதிப்பு ரூ.18,350 கோடியாகும்.

ஐ.பி.எல்., பைனலில் சூதாட்டமா?

ஐ.பி.எல்., பைனலில் கிரிக்கெட் சூதாட்டம் அமோகமாக நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாகவே சென்னை அணியின் "ஹாட்ரிக்' வாய்ப்பு பறிபோனதாக ரசிகர்கள் புலம்புகின்றனர்.

சென்னையில் நேற்று முன் தினம் நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

இத்தொடரில் சென்னை அணியை பைனலுக்கு எப்படியாவது தகுதி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் காய் நகர்த்தப்பட்டது. லீக் சுற்றில் தடுமாறிய நிலையில், பெங்களூரு அணி தோற்று, "பிளே-ஆப்' சுற்றுக்கு வழிவிட்டது.

அடுத்து ஐ.பி.எல்., அதிகாரப்பூர்வ இணையதளத்தில் "எலிமினேட்டர்' போட்டிக்கு முன்பாகவே சென்னை அணி, மும்பை மற்றும் டில்லியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியதாக செய்தி வெளியிடப்பட்டது. பின் ஒரு தனியார் "மொபைல்' நிறுவனம், டில்லிக்கு எதிரான போட்டிக்கு முன்பாகவே தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் சென்னை அணி பைனலுக்கு தகுதி பெற்று விட்டதாக கூறியது.

முக்கியமான பைனலில், கோல்கட்டாவின் சுனில் நரைன், கேப்டன் காம்பிர் ஆகியோரை சமாளித்து விட்டால், சென்னைக்கு தான் வாய்ப்பு என்று கூறப்பட்டது. இதற்கேற்ப நரைன் "சுழலை' தவிடுபொடியாக்கிய சென்னை பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் சேர்த்தனர். பின் ஹில்பெனாஸ் வீசிய முதல் ஓவரில் காம்பிர் 2 ரன்களுக்கு போல்டாக, இனி கோல்கட்டா அவ்வளவு தான் என்ற நிலைமை ஏற்பட்டது.

இந்த நேரத்தில் சென்னை அணிக்கு தான் வாய்ப்பு என்று நிறைய பேர் "பெட்' கட்டியிருப்பர். ஆனால், கோல்கட்டா அணியின் பிஸ்லா அதிரடியாக பேட் செய்து, போட்டியின் முடிவை மாற்ற, கிரிக்கெட் சூதாட்ட புக்கிகளுக்கு கொள்ளை லாபம் கிடைத்திருக்கும்.

பிஸ்லாவை வெளியேற்ற சென்னை கேப்டன் தோனி சரியான வியூகங்களை வகுக்கவில்லை. இதுவரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத இவர், இத்தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்திருந்தார்.

ஆனால், பைனலில் 89 ரன்கள் விளாசியது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. காலிஸ் கொடுத்த "கேட்ச்சை' எல்லைக் கோட்டு அருகே மைக்கேல் ஹசி நழுவவிட்டது இன்னொரு அதிர்ச்சி.

கடைசி 2 ஓவரில் கோல்கட்டா வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டன. முக்கியமான 19வது ஓவரை வீசிய ஹில்பெனாஸ் தேவையில்லாமல் "நோ-பால்' வீசினார். பேட்ஸ்மேன் இடுப்பு பகுதிக்கு மேலே லேசாக சென்ற பந்துக்கு அம்பயர் பில்லி பவுடனும் அவசரப்பட்டு "நோ-பால்' கொடுத்தார்.

இதனை பயன்படுத்திய கோல்கட்டா அணி 3 ரன் எடுத்தது. மீண்டும் வீசப்பட்ட இந்த பந்தில் சாகிப் ஒரு பவுண்டரி அடிக்க, நிலைமை தலைகீழாக மாறியது.

பீல்டிங், பவுலிங்கும் மோசமாக அமைய, போட்டியில் சூதாட்டம் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு ஏற்பட்டது. சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் "பெட்டிங், பெட்டிங்' என கோஷம் எழுப்பியதை கேட்க முடிந்தது.

தங்களது திறமையான ஆட்டத்தால் புகழின் உச்சியை தொட்ட சென்னை அணியினர், பைனலில் ஏமாற்றியதால் பல்வேறு விமர்சனங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு, அடுத்த முறை கோப்பை வென்று பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்ப்போம்.

அதிக நம்பிக்கையே தோல்விக்கு காரணம்

ஐ.பி.எல். கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பை சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் தவறவிட்டனர். அதிக நம்பிக்கையே சென்னை அணியின் தோல்விக்கு காரணம்.

பிளேஆப் சுற்று வாய்ப்பை சென்னை அணி அதிர்ஷ்டவசமாக பெற்றது. 3 நிலைகள் (ராஜஸ்தான் அணி டெக்கானிடம் தோல்வி, டெல்லியிடம் பஞ்சாப் தோல்வி, பெங்களூர் அணி டெக்கானிடம் தோல்வி) சென்னைக்கு சாதகமாக அமைந்ததால் வாய்ப்பு கிடைத்தது.

எலிமினேசனில் சென்னை அணி 187 ரன் குவித்து மும்பையையும், “குவாலி பையர்-2” போட்டியில் 222 ரன் குவித்து டெல்லியையும் வீழ்த்தி சூப்பர்கிங்ஸ் 4-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மும்பை, டெல்லி அணியை எளிதாக வீழ்த்தி விட்டதால் கொல்கத்தாவையும் வென்று விடலாம் என்று சென்னை அணி வீரர்கள் அதிகமான நம்பிக்கையில் இருந்தனர். சென்னை அணியின் அதிரடியான ஆட்டத்தை பார்க்கும்போது 200 ரன்னை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி சில ஓவர்களில் அதிகமான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாததால் 190 ரன்னுடன் ஆட்டம் முடிந்தது. இந்த ரன் போதுமானதுதான் என்று டோனி தோல்விக்கு பிறகு கூறினார்.

இந்த ரன்னுக்குள் கொல்கத்தாவை மடக்கி விடலாம் என்று சென்னை வீரர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் பிஸ்லா - காலிஸ் ஜோடி அதிரடியாக ஆடி சென்னை அணியின் ஹாட்ரிக் கனவை தகர்த்தது.

சென்னை அணி வீரர்கள் இன்னும் கொஞ்சம் உஷாராக விளையாடி இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். அதிகமான நம்பிக்கையால் நல்ல வாய்ப்பை இழந்து விட்டது. ஆனால் கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா அணி அதற்கு தகுதியானதே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ரூ.200 கோடிக்கு சூதாட்டம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். போட்டியையொட்டி மிகப்பெரிய அளவில் ‘பெட்டிங்‘ நடைபெற்று வருகிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் அதிக ரன் எடுப்பார், யார் அதிக விக்கெட் கைப்பற்றுவார், அதிக சிக்சர் யார் அடிப்பார் என்ற அளவில் ‘பெட்டிங்’ நடைபெறும்.

இன்று இறுதிப் போட்டி என்பதால் ‘பெட்டிங்’ மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ரூ.200 கோடிக்கு சூதாட்டம் நடைபெறலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சூதாட்டத்தை தடுக்கும் வகையில் சென்னை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக சிறப்பு படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தனியார் கிளப்புகள், நட்சத்திர ஓட்டல்களை சிறப்பு படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

டெல்லியை சேர்ந்த முக்கிய சூதாட்ட தரகர்கள் 15 பேர் சென்னை வந்து உள்ளதாகவும் அவர்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சூதாட்ட தரகர்கள் ஓட்டல்கள், கிளப்புகளில் இருந்து தங்கள் பணியை செயலாற்றுவார்கள் என்று தெரிகிறது. இதனால் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். வீரர்களை யாரும் நெருங்காத வகையில் ஏற்கனவே போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

ஆட்டத்தின் கடைசி பந்து வரை ஸ்பாட் பிக்சிங்கோ மற்றும் பந்து வாரியாக பெட்டிங் நடைபெறுவதை தடுக்கும் விதமாக சிறப்பு குழு தீவிரமாக கண்காணிக்கும்.

மோர்னே மோர்கல் நீக்கப்பட்டது ஏன்?

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீரர் மோர்னே மோர்கல். இந்த ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக அவர் இருக்கிறார். அவர் 16 ஆட்டத்தில் 25 விக்கெட் எடுத்து உள்ளார்.

சென்னை அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நேற்று நடந்த மிக முக்கியமான போட்டியில் டெல்லி அணி வீரரான மோர்னே மோர்கல் ஆடவில்லை. 11 பேர் கொண்ட அணியில் அவர் இடம்பெறாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

ஏனென்றால் இந்த ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் அவர்தான் முதல் இடத்தில் உள்ளார். டெல்லி அணி நிர்வாகிகள் மோர்னே மோர்கலுக்கு லேசான காய்ச்சல் என்பதால் ஆடவில்லை என்றனர். ஆனால் அது உண்மையில்லை என்பது தெரியவந்தது. அவர் நீக்கப்பட்டு இருக்கிறார்.

ஆல்ரவுண்டர் இர்பான் பதான் காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆல்ரவுண்டர் வரிசையில் உள்ள ஒரு வீரர் அணிக்கு தேவைப்பட்டது.

வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஆந்த்ரே ரஸ்சல் ஆல்ரவுண்டர் வரிசையில் உள்ளதால் அவர் சேர்க்கப்பட்டார். வெளிநாட்டு வீரர்களில் 4 பேர்தான் இடம் பெறமுடியும் என்பதால் மோர்னே மோர்கல் நீக்கப்பட்டார்.

வார்னர், ஜெயவர்த்தனே, ராஸ் டெய்லர், ரஸ்ஸல் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றனர். அணி சமபலத்துடன் இருப்பதற்கான மோர்னே மோர்கல் நீக்கப்பட்டார். ஆனால் அவர் நீக்கப்பட்டதால் அதற்கான பலனை டெல்லி அணி அனுபவித்து விட்டது. அவர் இருந்து இருந்தால் சென்னை அணி 222 ரன் குவித்து இருக்க இயலாது.

மோர்னே மோர்கல் விஷயத்தில் மட்டும் கேப்டன் ஷேவாக் தவறு செய்யவில்லை. ‘டாஸ்’ வென்ற அவர் முதலில் பேட்டிங் செய்யாமல் பீல்டிங்கை தேர்வு செய்ததும் தவறான முடிவே.

முதலில் சென்னை அணி ஆடியதால் மிகப்பெரிய ரன்னை (222) குவித்து விட்டது. இதனால் டெல்லி அணியால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. எலிமினேட்டரில் ஹர்பஜன்சிங் ‘டாஸ்’ வென்று சென்னையை முதலில் ஆட அழைத்தார். அவர் செய்த அதே தவறை நேற்று ஷேவாக் செய்தார். இதனால் இறுதிப் போட்டி வாய்ப்பை டெல்லி அணி இழந்தது.

மேலும் அவர் தொடக்க வீரராக ஆட வராமல் 3-வது வீரராக வந்ததும் தவறே. ‘லீக்’ ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்த டெல்லி அணி ‘பிளே ஆப்’களில் மோசமாக ஆடி இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.

சென்னை சூப்பர்கிங்ஸ் ஹாட்ரிக் சாதனை படைக்குமா?

5-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 4-ந்தேதி தொடங்கியது. இதில் 9 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை 'லீக்' சுற்றில் மோதின.கடந்த 20-ந்தேதியுடன் 'லீக்' ஆட்டம் முடிவடைந்தன.

புள்ளிகள் அடிப்படையில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

பெங்களூர் ராயல் சேல்ஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 9-வது இடங்களை பிடித்து போட்டியில் இருந்து வெளியேறின.

பிளேஆப் சுற்று கடந்த 22-ந்தேதி தொடங்கியது. 'குவாலிபையர்-1'க்கான போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 18 ரன்னில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

எலிமினேசன் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் 38 ரன்னில் மும்பை இந்தியன்சை தோற்கடித்து 'குவாலிபையர்-2' போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பை அணி வெளியேறியது.

சென்னையில் நேற்று நடந்த 'குவாலிபையர்-2' போட்டியில் சென்னை அணி 86 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ்-காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 'ஹாட்ரிக்' சாதனை படைக்குமா? என்று சென்னை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை அணி 2010 மற்றும் 2011-ம் ஆண்டில் ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல சென்னை சூப்பர்கிங்சுக்கு நல்லவாய்ப்பு உள்ளது.

கடந்த ஆண்டு சேப்பாக்கத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை அணி பெங்களூர் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. அதே மாதிரி தற்போதும் சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கோப்பையை வென்று சூப்பர்கிங்ஸ் சரித்திரம் படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

கடந்த 2 போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. இதே அதிரடியான ஆட்டம் நாளையும் தொடர்ந்தால் கோப்பை நமக்கு தான். இந்தப் போட்டித் தொடரிலேயே மிகவும் மோசமாக ஆடிவந்த சென்னை வீரர் முரளிவிஜய் மிகவும் முக்கியமான நேற்றைய ஆட்டத்தில் முத்திரை பதித்தார். அவரது அதிரடியான ஆட்டம் சென்னை வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.

கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் முரளி விஜய் 52 பந்தில் 95 ரன் எடுத்தார். இதனால் அதே அதிரடியான ஆட்டத்தை நாளைய இறுதிப்போட்டியில் வெளிப்படுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதேபோல பிராவோ, கேப்டன் டோனி ஆகியோரும் தொடர்ந்து அதிரடியாக ஆடுவது சென்னை அணிக்கு பலமே. ரெய்னா, அல்பி மார்கல், மைக்ஹஸ்சி, பத்ரி நாத் போன்ற சிறந்த பேட்ஸ் மேன்களும் சென்னை அணியில் உள்ளனர்.பந்து வீச்சில் ஹில்பெனாஸ், அஸ்வின் ஆகியோர் முத்திரை பதிக்க கூடியவர்கள்.

சென்னை அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. 2008-ம் ஆண்டு ராஜஸ்தானிடம் தோற்று கோப்பையை இழந்தது. கொல்கத்தா அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.முதல் முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்திலும் அந்த அணி உள்ளது.பேட்டிங், பவுலிங்கில் அந்த அணி சமபலம் பெற்று காணப்படுகிறது.

கேப்டன் காம்பீர், காலிஸ், மேக்குல்லம், யூசுப்பதான், மனோஜ் திவாரி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். வெஸ்ட்இண்டீசை சுழற் பந்து வீரர் சுனில்நரின் அந்த அணியின் தூணாக உள்ளார். அவர் 24 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இது தவிர பெர்ட்லீ, சகீப் அல் ஹசன், எல்.பாலாஜி, ரஜத் பாட்டியா போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

இரு அணிகளும் 'லீக்' ஆட்டத்தில் 2 முறை மோதியதில் சென்னையில் கொல்கத்தா அணியும், கொல்கத்தாவில் சென்னை அணியும் வெற்றி பெற்றது. இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பைனலுக்கு முன்னேறுமா சென்னை?

ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கான இரண்டாவது தகுதிப் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று மீண்டும் ஒரு முறை பைனலுக்கு முன்னேற சென்னை அணி காத்திருக்கிறது.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் "பிளே ஆப்' போட்டிகள் தற்போது நடக்கின்றன. முதல் தகுதிப் போட்டியில் வென்ற கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, பைனலுக்கு தகுதி பெற்றது. அடுத்த போட்டியில் (எலிமினேட்டர்)சென்னை அணி, மும்பையை வீழ்த்தியது.

மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறியது. இன்று நடக்கும் இரண்டாவது தகுதிப் போட்டியில் சென்னை அணி, டில்லி டேர்டெவில்சை சந்திக்கிறது.


வீண் விமர்சனம்:

"நடப்பு சாம்பியன்' சென்னை அணி, லீக் சுற்றில் தடுமாறியது. பின் "ரன்ரேட்' அடிப்படையில் நான்காவது அணியாக "பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. மும்பைக்கு எதிரான "எலிமினேட்டர்' போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற சென்னை அணி விமர்சனங்களை தவிடுபொடியாக்கியது.

இப்போட்டியில் துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்த போதும், அடுத்து வந்த அனுபவ மைக்கேல் ஹசி, பத்ரிநாத், பிராவோ ஆகியோர் பேட்டிங்கில் எழுச்சி பெற்றனர். 20 பந்துகளில் அரைசதம் எட்டிய கேப்டன் தோனியின் "ஆவேச' பேட்டிங், இன்றும் தொடர்ந்தால், நான்காவது முறையாக சென்னை அணி பைனலுக்கு தகுதி பெறலாம்.

கடந்த முறை ஏமாற்றிய ரெய்னா, முரளி விஜய் சுதாரித்துக் கொள்ள வேண்டும். சென்னை அணிக்காக இத்தொடரில் அதிக ரன்கள் (398) எடுத்த டுபிளசியை, தொடர்ந்து வீணடிப்பது ஏனோ தெரியவில்லை. அதேநேரம், தொடர்ந்து சொதப்பும் "ரூ. 10 கோடி' ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு தருவதன் மர்மம் புரியவே இல்லை. பின் வரிசையில் ஆல்பி மார்கல் ஆறுதல் தரலாம். உடற்தகுதியில் தேறினால், அனிருதா ஸ்ரீகாந்த்தை இன்று களமிறக்கலாமே.


ஹில்பெனாஸ் நம்பிக்கை:

பவுலிங்கில் வேகப்பந்து வீச்சாளர் ஹில்பெனாஸ் நம்பிக்கை தருகிறார். ஆல்பி மார்கல், பிராவோவும் இவருக்கு கைகொடுக்கின்றனர். சுழலில் வழக்கம் போல அஷ்வின், நெருக்கடி தருவதுடன் விக்கெட்டும் வீழ்த்த முயற்சிக்க வேண்டும். மும்பை அணிக்கு எதிராக "பேட்டிங் பவர்பிளேயில்' கலக்கிய ஜகாதிக்கு இன்றும் இடம் தர வேண்டும்.


சேவக் மிரட்டல்:

டில்லி அணியை பொறுத்தவரையில் 2008, 2009 தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது தான் அதிகபட்ச சாதனை. 2010ல் ஐந்தாவது இடத்துடன் நடையை கட்டிய இந்த அணி, 2011ல் கடைசி இடம் பெற்று வெளியேறியது.

இம்முறை எழுச்சி கண்ட இந்த அணி, பங்கேற்ற 16 போட்டிகளில் 11 ல் வென்று முதலிடத்தை பெற்றது. இருப்பினும், கோல்கட்டாவுக்கு எதிரான "பிளே ஆப்' போட்டியில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. பெங்களூரு அணி கெய்லை நம்பியதைப் போல, டில்லி அணி பெரும்பாலும் கேப்டன் சேவக், வார்னரை மட்டும் நம்புவது பின்னடைவான விஷயம்.

இவர்கள் ஏமாற்றினால் அவ்வளவு தான். அடுத்து வரும் ஜெயவர்தனா, நமன் ஓஜா, வேணுகோபால், இர்பானும் வரிசையாக நடையை கட்டுவர். சமீபத்தில் பார்முக்கு திரும்பிய ராஸ் டெய்லரை சற்று முன்னதாக களமிறக்கினால், ரன்வேகத்தை அதிகரிக்கலாம்.


தொடருமா ஆதிக்கம்
சென்னை சேப்பாக்கத்தில் டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக பங்கேற்ற 4 போட்டிகளிலும் சென்னை அணி தான் வென்றுள்ளது.

* இத்தொடரில் இரு அணிகள் மோதிய 2 லீக் போட்டிகளில், தலா ஒரு வெற்றி பெற்றன.


மழை வருமா

இன்று போட்டி நடக்கும் சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மழை வருவதற்கு 20 சதவீத வாய்ப்பு உள்ளது.

கோல்கட்டாவுக்கு கோப்பை கங்குலி கணிப்பு

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில், காம்பிர் தலைமையிலான கோல்கட்டா நைட்ரைடர்ஸ் கோப்பை வென்று சாதிக்கும்,'' என, புனே வாரியர்ஸ் அணி கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. "பிளே-ஆப்' சுற்றின் முதல் போட்டியில் கோல்கட்டா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் டில்லி அணியை வீழ்த்தி, முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியது.

இதுகுறித்து முன்னாள் கோல்கட்டா அணி கேப்டன் கங்குலி கூறியது: எனது ஆறாவது அறிவு கூறியபடி கோல்கட்டா அணிக்கு இம்முறை ஐ.பி.எல்., கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கோப்பை வெல்வதற்கான அனைத்து தகுதிகளும் கோல்கட்டா அணிக்கு உள்ளது.

கிரிக்கெட் என்பது ஒரு வட்டம். இம்முறை ஒரு அணி கோப்பை வெல்லும், அடுத்த முறை வேறு ஒரு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். இம்முறை கடைசி இடம் பிடித்த புனே வாரியர்ஸ் அணி, அடுத்த தொடரில் கோப்பை வெல்லலாம்.

கோல்கட்டா அணியில் சுனில் நரைன் இருப்பது சாதகமான விஷயம். கோல்கட்டா அணியின் வெற்றிக்கு நரைனின் பங்களிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. இவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கலாம். இக்கட்டான நேரத்தில் பந்துவீசும் இவர், எதிரணி பேட்ஸ்மேன்களின் மனநிலைக்கேற்ப பந்துவீசி நெருக்கடி கொடுக்கிறார்.

இந்திய அணியின் துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்து காம்பிர் நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஐ.பி.எல்., தொடர் மூலம் சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

கபில் தேவுக்கு தகுதியில்லையா?

முன்னாள் வீரர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான பி.சி.சி.ஐ., பட்டியலில், கபில் தேவ் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல்., மூலம் கிடைத்த வருமானத்தில் ரூ. 70 கோடியை, உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, 2003-04க்கு முன் ஓய்வு பெற்ற, 160 வீரர்களுக்கு பிரித்துக் கொடுக்க, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்தது.

இதன் படி 100 டெஸ்ட் போட்டிக்கும் அதிகமாக பங்கேற்றிருந்தால் ரூ. 1.5 கோடி, 75 முதல் 99 டெஸ்ட் என்றால் ரூ. 1 கோடி, 50 முதல் 74 டெஸ்டிற்கு ரூ. 75 லட்சம் என, பிரித்து வழங்கப்படுகிறது. இத்தொகை பெறும், 65 வீரர்கள் கொண்ட முதல் பட்டியல் வெளியானது.

இதில் 125 டெஸ்டில் பங்கேற்ற கவாஸ்கர் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், 131 டெஸ்டில் விளையாடிய கபில் தேவ் இடம்பெறவில்லை. 1983ல் இந்திய அணிக்கு உலக கோப்பை வென்று தந்த கேப்டன் கபில் தேவை பி.சி.சி.ஐ., புறக்கணித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதன் மூலம் இவருக்கு ரூ. 1.5 கோடி கிடைக்காமல் போகிறது.


காரணம் என்ன:

2007ல் பி.சி.சி.ஐ., யை எதிர்த்து, இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) என்ற அமைப்பை கபில் தேவ் ஏற்படுத்தினார். இதன் பேரில் "டுவென்டி-20' போட்டிகளை நடத்தினார். இதனால் கபில் தேவ், பி.சி.சி.ஐ., இடையே மோதல் ஏற்பட்டது. இத்தொடரில் பங்கேற்ற வீரர்களை பி.சி.சி.ஐ., தடை செய்தது.

பின் பொது மன்னிப்பு வழங்கியதால், அம்பதி ராயுடு, பின்னி போன்றவர்கள் ஐ.பி.எல்., தொடருக்கு வந்தனர். மும்பை பயங்கரவாத தாக்குதல் காரணமாக, 2009ல் தொடர் பாதியில் கை விடப்பட்டது. இருப்பினும், தற்போதைய பட்டியலில் கபில் தேவ் இடம் பெறாதது, பி.சி.சி.ஐ., இன்னும் இவரை மன்னிக்கவில்லை என்பதை காட்டுகிறது.

ஓட்டலில் போதை பார்ட்டி - தொடர்கிறது ஐ.பி.எல்., சர்ச்சை

மும்பை ஓட்டலில் நடந்த பார்ட்டியில், போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக ஐ.பி.எல்., புனே வாரியர்ஸ் அணி வீரர்கள் ராகுல் சர்மா, பார்னல் உட்பட 94 பேர் சிக்கியுள்ளனர்.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. வீரர்கள் சூதாட்டம், ஷாருக்கானுக்கு தடை, செக்ஸ் புகாரில் ஆஸ்திரேலிய வீரர் பாமர்ஸ்பச் கைது வரிசையில், இப்போது போதை மருந்து பயன்படுத்திய சிக்கலும் சேர்ந்து கொண்டுள்ளது.

மும்பை, சபர்பன் ஜுகு பகுதியில் உள்ள ஆக்வுட் ஓட்டலில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் புனே வாரியர்ஸ் அணியின் ராகுல் சர்மா (இந்தியா), பார்னல் (தென் ஆப்ரிக்கா) மற்றும் முக்கிய பிரமுகர்கள், அழகிகள் பங்கேற்றனர். இதில் போதை மருந்து பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஓட்டலில் "ரெய்டு சென்ற போலீசார், 2 கிரிக்கெட் வீரர்கள் <உட்பட 56 ஆண்கள், 38 பெண்களை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். இவர்களது ரத்தம், சிறுநீர் மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர். விருந்துக்கு ஏற்பாடு செய்த ஓட்டல் இயக்குனர் விஷாய் ஹண்டா மீது போதை மருந்து பயன்படுத்துதல், தடுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

போலீஸ் கூடுதல் கமிஷனர் விஸ்வாஸ் படேல் கூறுகையில்,"" 110 கிராம் எடையுள்ள கோகைன், எஸ்டசி மற்றும் சாரஸ் என்ற போதைப் பொருட்கள் பிடிபட்டன. இதில் சிக்கியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது, என்றார்.


எதுவும் தெரியாது:

சம்பவம் குறித்து தென் ஆப்ரிக்க வீரர் பார்னல் கூறியது:

கடந்த தொடரின் போது அறிமுகமான நண்பர் ஒருவரின், பிறந்த நாள் பார்ட்டிக்காக நானும், ராகுல் சர்மாவும் இரவு 7 மணியளவில் அங்கு சென்றோம். போதைப் பொருட்கள் சப்ளை செய்வது, பெரியளவில் பார்ட்டி நடப்பது எங்களுக்கு தெரியாது. ஓட்டலின் மொட்டை மாடியில் தான் பார்ட்டி நடந்தது.

திடீரென போலீசார் வந்து சோதனை செய்தனர். பார்ட்டியில் நாங்கள் மது அருந்தவில்லை. புகை பிடிக்கவில்லை. தண்ணீர் மட்டும் குடித்து விட்டு நடனம் ஆடினோம். இதில் குற்றம் இருப்பதாக தெரியவில்லை. இதனால் தான் போலீசாருடன் செல்லும் போது முகத்தை மறைக்கவில்லை. அப்படி செய்திருந்தால், ஏதோ தவறு செய்தது போல் ஆகிவிடும்.

தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்தது தான் தவறு. இது துரதிருஷ்டவசமானது. இவ்விஷயத்தில் அணி நிர்வாகம் எங்களுக்கு துணையாக உள்ளது.

இவ்வாறு பார்னல் கூறினார்.


""கிரிக்கெட்டை விட்டு விலகுவேன்

இது குறித்து, ராகுல் சர்மா கூறுகையில், ""நான் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன். எனது வாழ்க்கையில் "பீர் கூட குடித்தது இல்லை. இந்நிலையில், இது போன்ற பார்ட்டியில் நான் பங்கேற்கிறேன் என, எப்படி செய்திகள் வெளியாகின்றன என்றே தெரியவில்லை.

பிறந்தநாள் விருந்து என்ற அழைப்பில் தான் நானும், பார்னலும் சென்றோம். அடுத்த அரைமணி நேரத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

போலீசாரிடம் கேட்டபோது, "ரெய்டு நடப்பதாக கூறினர். நடந்தது அனைத்தையும் அணி நிர்வாகத்திடம் கூறினேன். சோதனை முடிவு வந்த பின் உண்மை தெரியும். நான் போதைப்பொருள் பயன்படுத்தினேன் என தெரிந்தால், கிரிக்கெட்டை விட்டே விலகுகிறேன், என்றார்.

பிளே-ஆப் சுற்றுக்கு அதிர்ஷ்டம் தேடி வந்தது

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் "பிளே-ஆப்' சுற்றில் விளையாடும் அதிர்ஷ்டம் "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேடி வந்தது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் பெங்களூரு அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கானிடம் வீழ்ந்து பரிதாபமாக வெளியேறியது.

ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான 71வது லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.


"டாப்-ஆர்டர்' ஏமாற்றம்:

டெக்கான் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜாகிர் கான் வேகத்தில் ஷிகர் தவான் (5) போல்டானார். வினய் குமார் பந்தில் அக்ஷாத் ரெட்டி (7) அவுட்டானார். அடுத்து வந்த கேமிரான் ஒயிட் (1) ஏமாற்றினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் சங்ககரா (15), முரளிதரன் சுழலில் சிக்கினார். இதனால் டெக்கான் அணி 11.1 ஓவரில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.


டுமினி அதிரடி:

விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய டுமினி, துவக்கத்தில் ஒன்று இரண்டாக ரன் சேர்த்தார். பின் அதிரடிக்கு மாறிய இவர், ஜாகிர் கான் பந்தில் ஒரு சிக்சர் அடித்து அரைசதம் அடித்தார். முரளிதரன் பந்தில் மூன்று சிக்சர் விளாசிய டுமினி (74) நம்பிக்கை தந்தார். பார்த்திவ் படேல் (16) சோபிக்கவில்லை.

ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆஷிஸ் ரெட்டி (4) அவுட்டாக, டெக்கான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் வினய் குமார் 3, ஜாகிர் கான் 2, பரமேஸ்வரன், முரளிதரன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.


கெய்ல் அதிர்ச்சி:

சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல் அதிரடி துவக்கம் கொடுத்தார். கோனி வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு சிக்சர், மூன்று பவுண்டரி அடித்த கெய்ல் (27), ஸ்டைன் வேகத்தில் துரதிர்ஷ்டவசமாக போல்டானார். தில்ஷன் (4) ஏமாற்றினார்.

தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, 5.3வது ஓவரில் சவுரப் திவாரி "ரிட்டயர்ட் ஹர்ட்' முறையில் பெவிலியன் திரும்பினார். அமித் மிஸ்ரா சுழலில் டிவிலியர்ஸ் (4), மயாங்க் அகர்வால் (1) வெளியேற, மீண்டும் களமிறங்கினார் திவாரி.


கோஹ்லி ஆறுதல்:

பின் இணைந்த கோஹ்லி, திவாரி ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. அமித் மிஸ்ரா, ஆஷிஸ் ரெட்டி பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய கோஹ்லி (42), முக்கியமான நேரத்தில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்து வந்த ஜாகிர் கான் (0), ஸ்டைன் வேகத்தில் "கிளீன்' போல்டானார். தனிநபராக போராடிய திவாரி (30) நிலைக்கவில்லை.

பெங்களூரு அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. வினய் குமார் (7), முரளிதரன் (0) ஏமாற்ற, பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. டெக்கான் சார்பில் ஸ்டைன், ஆஷிஸ் ரெட்டி தலா 3, அமித் மிஸ்ரா 2, பிரதாப் சிங் ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை ஸ்டைன் பெற்றார்.டெக்கான்-பெங்களூரு ரிசல்ட்


சென்னை நுழைந்தது எப்படி

"நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 போட்டியில் 8 வெற்றி, 7 தோல்வி உட்பட 17 புள்ளிகள் பெற்றிருந்தது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. சென்னை அணி "பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற மற்ற போட்டிகளின் முடிவை எதிர்நோக்கி காத்திருந்தது.

அதிர்ஷ்டம் கைகொடுக்க ராஜஸ்தான் (எதிர்-டெக்கான்), பஞ்சாப் (எதிர்-டில்லி), பெங்களூரு (எதிர்-டெக்கான்) அணிகள் தோல்வி அடைந்தன. சென்னை (+0.100), பெங்களூரு (-0.022) அணிகள் தலா 17 புள்ளிகள் பெற்றிருந்த போதிலும், "ரன்-ரேட்' அடிப்படையில் சென்னை அணி "பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது.


"வில்லன்' டெக்கான்

ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு வில்லனாக மாறியது சங்ககரா தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி. கடைசி நேரத்தில் எழுச்சி கண்ட டெக்கான் அணி, முக்கியமான போட்டிகளில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளை வீழ்த்தி, அந்த அணிகளின் "பிளே-ஆப்' சுற்றுக்கான வாய்ப்பை தட்டிப்பறித்தது. தவிர புள்ளிப்பட்டியலில், கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியை கடைசி இடத்துக்கு தள்ளி, எட்டாவது இடம் பிடித்தது.


கெய்ல் முதலிடம்

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் வரிசையில் பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் முன்னிலை வகிக்கிறார். இவர், 15 போட்டியில் ஒரு சதம், 7 அரைசதம் உட்பட 733 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து டெக்கான் அணியின் ஷிகர் தவான் (569 ரன்), ராஜஸ்தான் அணியின் ரகானே (560) ஆகியோர் உள்ளனர்.

டெக்கான் மற்றும் ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறாததால், கெய்லின் முதலிடத்திற்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. ஒருவேளை கோல்கட்டா கேப்டன் காம்பிர் (556), டில்லி கேப்டன் சேவக் (484) அடுத்து வரும் சுற்றில் சதம் அடித்தால் கூட கெய்ல் ரன்னை பிடிக்க முடியாது.

சென்னைக்கு கிடைத்தது பிளே ஆஃப் வாய்ப்பு

ஐபிஎல் சீஸன் 5 போட்டிகளில் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 71வது போட்டியில் டெக்கான் சார்ஜஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றி கொண்டது. பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான போட்டியான இதில், பெங்களூரு அணி தோற்றது.

முன்னதாக, பெங்களூரு அணி டாஸ் வென்றது. முதலில் பந்து வீசுவதாக அறிவித்த பெங்களூரு அணி, டெக்கான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதை அடுத்து களம் இறங்கிய டெக்கான் அணியில் துவக்க வீரர்களின் மோசமான செயல்பாட்டால் அணியின் ரன்குவிப்பு தடைப்பட்டது. அந்த அணியில் சதீஷ் தவான் முதல் ஓவரிலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவர் ஒரு பவுண்டரியுடன் 4பந்துகளில் 5 ரன் எடுத்தார்.

அவருடன் களம் இறங்கிய ரெட்டி 11 பந்துகளில் 7 ரன்னுக்கு நடையைக் கட்டினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒயிட் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் 3 விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையில், சங்ககராவும் டுமினியும் ஆட்டத்தை நிதானமாகத் தொடர்ந்தனர். சங்ககரா 22 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 15 ரன் எடுத்தார்.

டுமினி 53 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 74 ரன்களை எடுத்தார். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இருவரும் ஆட்டம் இழந்த பிறகு மீண்டும் விக்கெட்டுகள் மள மளவென விழுந்தன. பார்த்திவ் படேல் 16 ரன்னிலும், ஆஷிஷ் ரெட்டி 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 132 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பெங்களூரு அணிக்கு 133 ரன் என்ற எளிய இலக்கை நிர்ணயித்தது டெக்கான் அணி.

இதை அடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் சரவெடியாக வெடித்தார். 10 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி அடித்து 27 ரன் எடுத்திருந்த நிலையில் ஸ்டைன் பந்தில் போல்டானார். உடன் இறங்கிய தில்ஷன் 4 ரன்களே எடுத்தார். இதற்காக அவர் எதிர்கொண்ட பந்துகள் 12.

அடுத்து களம் இறங்கிய விராத் கோலி 40 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 42 ரன் எடுத்தார். உடன் திவாரி 27 பந்துகளில் தலா ஒரு சிக்ஸர் பவுண்டரி அடித்து 30 ரன் எடுத்தார். இவர்கள் இருவரும் ஆட்டம் இழந்தபிறகு அணியின் ரன் வேகம் குறைந்தது.

விரைந்து ரன் எடுக்க முனைந்து அனைவருமே ஒற்றை இலக்கங்களில் ஆட்டம் இழந்தனர். பெங்களூரு அணியின் மற்ற விக்கெட்டுகள் மள மளவென சரிய அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 123 ரன்னே எடுக்க முடிந்தது.

இதை அடுத்து டெக்கான் அணி தனது இறுதிப் போட்டியில் 9 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதை அடுத்து, சென்னை அணி 4ம் இடத்தில் நீடித்து, பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது.

ஒரு சதம்-57 சிக்சர்: ஐ.பி.எல். ஹீரோ கெய்ல்

20 ஓவர் ஐ.பி.எல். போட்டி என்றாலே சிக்சர்கள், பவுண்டரிகள் மழை பொழியும். பேட்ஸ் மேன்களுக்கு ஆட்டம் பிடித்து விட்டதால் அடிப்பதெல்லாம் சிக்சர்கள், பவுண்டரிகளாக பறக்கும். அதேபோல் நேற்று டெல்லி அணிக்கு எதிரான நடந்த போட்டியில் பெங்களூர் அணி வீரர் கெய்ல் சிக்சர்களாக விளாசினார்.

நின்ற இடத்தில் இருந்து சிக்சர்களை தூக்கினார். 14-வது ஓவரில் இர்பான் பந்தில் 2 தொடர் சிக்சரும், 16-வது ஓவரில் நெகி பந்தில் 3 தொடர் சிக்சரும் விளாசியது இந்த ஐ.பி.எல். போட்டியின் சிறப்பம்சம் ஆகும்.

நேற்றைய போட்டியில் மட்டும் கெய்ல் 13 சிக்சர்கள் அடித்தார். இடையில் அவ்வப்போது பவுண்டரிகளும் பறந்தது. 62 பந்துகளில் 7 பவுண்டரி, 13 சிக்சர்களுடன் 128 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்த ஐ.பி.எல். போட்டியில் ஏற்கனவே 13 போட்டிகளில் கெய்ல் 44 சிக்சர்கள் குவித்து இருந்தார். நேற்று எடுத்த 13 சிக்சர்களும் சேர்த்து 57 சிக்சர்களுடன் ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து ஹீரோவாக திகழ்கிறார்.

நேற்று ஐ.பி.எல். போட்டியில் தனது முதலாவது சதத்தையும் எட்டினார். இது ஐ.பி.எல். போட்டியின் 5-வது சதம் ஆகும். ஏற்கனவே டேவிட் வார்னர் (டெல்லி), கெவின் பீட்டர்சன் (டெல்லி), ரோகித்சர்மா (மும்பை), ரஹானே (ராஜஸ்தான்) ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

கெய்ல் வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர். உலக கோப்பை போட்டியின் போது தன் நாட்டு அணிக்கு அவர் சரியாக ஆடவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனால் அவருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஐ.பி.எல். ஏலத்தில் அவரை பெங்களூர் அணி விலைக்கு வாங்கியது. ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடி வருகிறார். பெங்களூர் அணியின் வெற்றிக்கு அவரது ஆட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஐ.பி.எல்., பிளே --ஆப் , பைனல் டிக்கெட் கட்டணம் குறைப்பு ஏன்?

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள, ஐ.பி.எல்., "பிளே- -ஆப்' மற்றும் பைனலுக்கான டிக்கெட் விற்பனை, நேற்று துவங்கியது.

ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம், 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதுடன், பைனல், சென்னையில் நடப்பதும் உறுதியாகி உள்ளது.

ஐந்தாவது ஐ.பி.எல்., டுவென்டி- 20 கிரிக்கெட் போட்டிகள் நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பாக நடந்து வருகிறது. இதன் "பி÷-ள-ஆப்' சுற்றின் இரண்டாவது ஆட்டம் வரும் 25ம்தேதியும், பைனல் 27ம்தேதியும் சென்னையில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், சென்னை மைதானத்தில் 7,000 ரசிகர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள மூன்று கேலரிகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்(சி.எம்.டி.ஏ.,) அனுமதி கொடுக்கவில்லை. இதனால், இறுதிப்போட்டி வேறு மாநிலத்திற்கு இடம் மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால், திட்டமிட்டபடி இறுதிப்போட்டி சென்னையில் நடப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

"பிளே ஆப்' மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று காலை துவங்கியது. இதுவரை சென்னையில் நடந்த எட்டு போட்டிகளுக்கும் குறைந்தபட்ச டிக்கட் கட்டணமாக 700 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.

ஆனால், சென்னை அணியின் "பிளே-ஆப்' வாய்ப்பு மங்கியதால், குறைந்தபட்ச டிக்கெட் கட்டணத்தில் தற்போது 200 ரூபாய் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கேலரிகளுக்கான குறைந்தபட்ச டிக்கட் கட்டணமாக 500 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது.

அதற்கடுத்துள்ள 1,200ரூபாய்க்கான டிக்கெட் கட்டணமும் நேற்று அதிரடியாக குறைக்கப்பட்டு 750 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதேபோல மற்ற ஸ்டாண்டுகளின் டிக்கெட் கட்டணமும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டதற்கு காரணம் புரியாமல் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னையில் நடந்த பெரும்பாலான போட்டிகளை காண்பதற்கு குறைந்த அளவிலேயே ரசிகர்கள் கூட்டம் வந்தது. கூட்டத்தை அதிகரிப்பதற்காகவே டிக்கெட் கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சி.எம்.டி.ஏ., அனுமதிப்பெற்று பூட்டி கிடக்கும் கேலரிகள் விரைவில் திறக்கப்பட வாய்ப்புள்ளதால்தான், டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூதாட்ட விசாரணை: வெறும் கண்துடைப்பு

ஒரு நபர் விசாரணை என்ற பெயரில் சூதாட்ட புகாரை பி.சி.சி.ஐ., மூடி மறைக்க முயற்சிப்பதாக தெரிகிறது. இதனால், அணி உரிமையாளர்கள், மற்ற வீரர்கள் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல இந்தியா "டிவி' சேனல், நடத்திய புலனாய்வு செய்தியில், இந்திய உள்ளூர் கிரிக்கெட், ஐ.பி.எல்., தொடரில் நடக்கும் சூதாட்டம், கறுப்பு பண நடமாட்டம் குறித்து தெளிவாக தெரியவந்தது.

"ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட சுதிந்திரா, ஸ்ரீவாஸ்தவ், மோனிஸ் மிஸ்ரா, அமித் யாதவ், அபினவ் பாலி ஆகிய 5 இந்திய வீரர்கள் 15 நாள் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) ஊழல் தடுப்பு பிரிவின் முன்னாள் தலைவர் ரவி சவானி இதுகுறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டார்.

இவர் இந்த ஐந்து வீரர்களின் செயல்பாடு குறித்துதான் அறிக்கை தரவுள்ளார். ஆனால், புலனாய்வு செய்தியில் அணி நிர்வாகிகள், உரிமையாளர்கள் மற்றும் வெளிநாட்டு கேப்டன் ஒருவர் மற்றும் இந்திய அணியின் முக்கிய வீரர் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பி.சி.சி.ஐ.,யின் கண்துடைப்பான விசாரணையால், இவர்கள் எல்லாம் தப்பிக்க வழி ஏற்பட்டுள்ளது.
இதனால், விசாரணை வளையத்தை இந்த ஐந்து பேருடன் முடித்துக் கொள்ளாமல், பெரியளவில் நடத்தினால், முழு உண்மை தெரியவரும்.


தனியாரிடம் தரலாம்:

ஒரு வேளை பி.சி.சி.ஐ., விசாரணை குழு அமைத்தால், இதில் இடம் பெறுபவர்களுக்கு, எப்படியும் நிர்வாகிகளுடன் தொடர்பு இல்லாமல் இருக்காது. அணி நிர்வாகிகளை விசாரிக்க வேண்டிய நிலையில், சென்னை கிங்ஸ் உரிமையாளர் சீனிவாசனும் விசாரிக்கப்படலாம். கடைசி அறிக்கையை பி.சி.சி.ஐ., தலைவராக உள்ள சீனிவாசனிடம் தான் சமர்ப்பிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையை தவிர்க்க, சுதந்திரமாக செயல்படும் தனியார் அமைப்பிடம் விசாரணையை ஒப்படைக்கலாம். ஏனெனில், 2000ல் ஏற்பட்ட சூதாட்ட புகாரை பி.சி.சி.ஐ., குழு சரியாக விசாரிக்கவில்லை. பின் சி.பி.ஐ., முழு உண்மையையும் வெளிக்கொண்டு வந்தது.


முழு விசாரணை:

டெக்கான் அணியின் சுதிந்திரா, முதல் தர போட்டியில் வேண்டுமென்றே "நோ-பால்' வீசியுள்ளார். கடந்த ஆண்டு பஞ்சாப், டில்லி அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி "பிக்சிங்' செய்யப்பட்டது என அமித் யாதவ் கூறினார். கறுப்பு பணம் தரப்படுவது குறித்து மோனிஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.

தவிர, இந்தியா "டிவி' யை சேர்ந்தவர்கள் ஏஜன்ட் என்று சொல்லித் தான் வீரர்களிடம் பேசியுள்ளனர். அப்படியெனில், எந்த ஏஜன்ட்டும் வீரர்களை எளிதாக அணுகும் வகையில் உள்ளனர்.

முழு விசாரணை நடத்தும் பட்சத்தில், வீரர்கள்-ஏஜன்ட் தொடர்பு, ஏஜன்ட்-உரிமையாளர்கள் தொடர்பு குறித்து தெரியவரும்.


நிரந்தர தீர்வு வேண்டும்: மேகன்

மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் கூறுகையில்,"" சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) பி.சி.சி.ஐ., அங்கீகாரம் பெற்றுள்ளது. இதனால் சூதாட்ட விசாரணையை நடத்தும் அதிகாரம், முழுப்பொறுப்பும் பி.சி.சி.ஐ.,க்கு உள்ளது. இது அவர்களின் வேலை. அதேநேரம், 5 வீரர்கள் "சஸ்பெண்ட்' மட்டும் போதாது. இதன் பின்னணி குறித்து விசாரித்து, நிரந்தர தீர்வு காண முயற்சிக்க வேண்டும்,'' என்றார்.


தனியாக ஏலம் நடத்தலாம்

சூதாட்ட புகார் குறித்து ஐ.பி.எல்., அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" சர்வதேச போட்டியில் விளையாடிய சென்னை வீரர் சகாவுக்கு, ஏலத்தில் ரூ. 54 லட்சம் கிடைத்தது. ஆனால், மும்பை அணியின் அம்பதி ராயுடுக்கு ரூ. 30 லட்சம் மட்டும் தான். ஆனால், இவரது "டுவென்டி-20' திறமை, சகாவுடன் ஒப்பிடவே முடியாது.

இதனால், உள்ளூர் வீரர்களுக்கு, குறிப்பிட்ட தொகையை நிர்ணயிப்பதை தவிர்த்துவிட்டு, இந்த வீரர்களுக்கு தனியாக, வெளிப்படையான முறையில் பி.சி.சி.ஐ., ஏலம் நடத்த முன்வர வேண்டும்,'' என்றார்.


கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க சதி

"சஸ்பெண்ட்' செய்யப்பட்ட பஞ்சாப் வீரர் ஸ்ரீவாஸ்தவ் கூறுகையில்,"" முழங்கால் காயம் காரணமாக 2011, 2012 சீசனில் உ.பி., அணிக்காக பங்கேற்கவே இல்லை. இதே காரணத்துக்காக ஐ.பி.எல்., தொடரில் விளையாடவில்லை.

ஏன், பஞ்சாப் அணியின் முதல் 15 வீரர்கள் பட்டியலில் கூட இல்லை. கடந்த ஒரு மாதமாக லக்னோவில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வரும் நான் எப்படி, "நோ-பால்' வீச முடியும். இது என் கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க நடக்கும் சதி,'' என்றார்.

ஐ.பி.எல்., சூதாட்டம்: 5 வீரர்கள் சஸ்பெண்ட்

இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் சூதாட்ட புயல் கிளம்பியுள்ளது. ஐ.பி.எல்., தொடரில் "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட சுதிந்திரா, ஸ்ரீவாஸ்தவ், மோனிஸ் மிஸ்ரா, அமித் யாதவ், அபினவ் பாலி ஆகிய 5 இந்திய வீரர்கள் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

பிரபல இந்தியா "டிவி' சேனல், புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டது. இதில், வீரர்கள், நிர்வாகிகள், அணி உரிமையாளர்கள் மற்றும் வெளிநாட்டு கேப்டன் ஒருவர் மற்றும் இந்திய அணியின் முக்கிய வீரர் ஆகியோர் சூதாட்டம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த ஐ.பி.எல்., தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீவாஸ்தவ் "நோ-பால்' வீச ரூ. 10 லட்சம் கேட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) விதிமுறைப்படி சர்வதேச போட்டியில் பங்கேற்காத வீரர்கள், ஐ.பி.எல்., தொடரில் ரூ. 30 லட்சம் தான் கிடைக்கும். ஆனால், புனே வீரர் மிஸ்ரா தான் ரூ. 1.5 கோடி வாங்கியதை ஒப்புக் கொண்டுள்ளார். இதில் ரூ. 1.2 கோடி வரை கறுப்பு பணமாக கொடுத்துள்ளனர்.

ஐ.பி.எல்., தவிர, உள்ளூர் போட்டியிலும் சூதாட்டம் நடப்பதை, இந்தியா "டிவி' பகிரங்கப்படுத்தியது. இப்போது, டெக்கான் அணிக்காக பங்கேற்கும் சுதிந்திரா, கடந்த ஆண்டு நடந்த முதல் தர போட்டி ஒன்றில், "டிவி' நிருபரின் விருப்பத்திற்கு ஏற்ப, வேண்டுமென்றே "நோ-பால்' வீசியுள்ளார். இவர், ரூ. 60 லட்சம் கொடுத்தால், ஐ.பி.எல்., தொடரில் வேறு அணிக்கு தாவ தயார் என்றார்.

இப்பிரச்னை குறித்து பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.பி<.எல்., நிர்வாகிகள் "டெலி கான்பெரன்சிங்' முறையில் நீண்ட நேரம் விவாதித்தனர். முடிவில், புகாரில் சிக்கிய ஐந்து வீரர்களும் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இனி இவர்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாது. இந்த ஐந்து பேரில், நான்கு வீரர்கள் கபில் தேவ் தலைமையிலான இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) தொடரில் பங்கேற்றுள்ளனர்.

இதுகுறித்து ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா கூறியது:

இந்தியா "டிவி'யின் பதிவுகளை பார்த்ததில் வீரர்கள் தவறு செய்திருப்பது தெரியவருகிறது. இதையடுத்து, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பி.சி.சி.ஐ.,க்கு பரிந்துரை செய்தோம். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) ஊழல் தடுப்பு பிரிவின் முன்னாள் தலைவர் ரவி சவானி தலைமையில், முதற்கட்ட விசாரணையை துவக்க, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் முடிவு செய்துள்ளார். இவர்களது "சஸ்பெண்ட்' உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார்.


யார் அந்த வெளிநாட்டு கேப்டன்

தற்போதைய ஐ.பி.எல்., தொடரில், ஒரு அணிக்கு கேப்டனாக உள்ள வெளிநாட்டு வீரர் ஒருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டது, புலனாய்வு செய்தியில் தெரிய வந்துள்ளது. இப்போதைய நிலையில் பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட், டேவிட் ஹசி, டெக்கான் அணிக்கு சங்ககரா, பெங்களூரு அணியின் வெட்டோரி கேப்டனாக உள்ளனர். இவர்களில் யார் அந்த கறுப்பு ஆடு என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


வீரர்கள் சிக்கியது எப்படி?

புலனாய்வு குறித்து இந்தியா "டிவி' தலைமை ஆசிரியர் ரஜத் சர்மா கூறியது:

கடந்த ஆண்டு நான்காவது ஐ.பி.எல்., தொடர் முடிந்தவுடன் துவங்கிய எங்களது "ஆப்பரேஷன்' 2012, ஏப்ரல் 21 வரை நடந்தது. முதலில் டெக்கான் அணியின் சுதிந்திராவை அணுகினோம். உள்ளூர், ஐ.பி.எல்., போட்டிகளில் சூதாட்டம் நடப்பது குறித்த நிறைய தகவல்களை தெரிவித்தார். முதலில் இதை நாங்கள் நம்பவில்லை. பின், உள்ளூர் போட்டி ஒன்றில், சுதிந்திரா "நோ-பால்' வீசிய பின் நம்பிக்கை வந்தது.

பஞ்சாப் அணியின் ஸ்ரீவாஸ்தவை அணுகிய போது, ""ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் சூதாட்டத்துக்கு தயாராக உள்ளேன்,'' என்றார். கோல்கட்டா அணியின் ரஜத் பாட்யா, ராஜஸ்தானின் சமத் பல்லா ஆகிய இருவரும் பணத்துக்காக, "ஸ்பாட் பிக்சிங்' செய்ய முடியாது என மறுத்தனர்.

புலனாய்வு குறித்த வீடியோவை, பி.சி.சி.ஐ., யிடம் தரத் தயாராக உள்ளோம். எங்களைப் பொறுத்தவரையில் வீரர்கள் நேர்மையாக விளையாட வேண்டும். தங்களை மதிக்கும் ரசிகர்கள் போற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ரஜத் சர்மா கூறினார்.


ஸ்ரீவாஸ்தவ் மறுப்பு

புகார் குறித்து பஞ்சாப் வீரர் ஸ்ரீவாஸ்தவ் கூறியது:

நான்காவது ஐ.பி.எல்., தொடர் முடிந்த பின் "ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட்' பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் இவர்கள் என்னைத் தொடர்பு கொண்டனர். இப்போதைய அணியில் இருந்து வேறு அணிக்கு, நல்ல தொகையுடன் மாற்றிவிடத் தயாராக இருப்பதாக கூறினர். இதுதொடர்பாக 50 வீரர்களை சந்தித்துள்ளோம் என்றனர். இவர்கள் பேசியதாக கூறப்படும் 15 வீரர்களிடம் நானும் பேசினேன்.

"பிக்சிங்' மற்றும் பணம் எப்படி வருகிறது என்பது குறித்து தான் அதிகம் பேசியதால், அனைவருமே சந்தேகப்பட்டனர். தவிர, ஒரு ஓவரில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்தால், ரூ. 1 கோடி தரத்தயாராக உள்ளதாக கூறினர். நான் இதை ஏற்கவில்லை. இவர்களை 7 அல்லது 8 முறை சந்தித்துள்ளேன்.

புலனாய்வு வீடியோவில் வரும் குரல் என்னுடையது அல்ல. சூதாட்டத்தில் ஈடுபட்டேன் என்று கூறும் "டிவி' நிறுவனம், நான் ரூ. 10 லட்சம் கேட்டதாக கூறும் வீடியோவை வெளியிடாதது ஏன். இதுகுறித்து அவர்கள் மீது வழக்கு தொடர்வேன். அணி நிர்வாகம், பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.பி.எல்., நிர்வாகத்திடம் தெளிவு படுத்த தயாராக உள்ளேன்.

இவ்வாறு ஸ்ரீவாஸ்தவ் கூறினார்.


எதுவும் பேச முடியாது

டெக்கான் வீரர் சுதிந்திரா கூறுகையில்,"" வீடியோ பதிவுகளை முழுவதும் பார்க்காமல் எதுவும் பேச முடியாது. தவிர, தற்போதைக்கு பேசும் நிலையிலும் நான் இல்லை. இவற்றில் இருந்து விடுபட்ட பிறகு அனைத்தையும் கூறுகிறேன்,'' என்றார்.


கவாஸ்கர் வரவேற்பு

வீரர்களை பி.சி.சி.ஐ., "சஸ்பெண்ட்' செய்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,"" இந்த நடவடிக்கை சரியானது தான். இது ஐ.பி.எல்., தொடருக்கு மட்டும் அல்லாது, முழு விசாரணையும் முடியும் வரை தற்காலிக தடை நீடிக்க வேண்டும்,'' என்றார்.


பார்லிமென்டில் கோரிக்கை

இந்திய வீரர்கள் மீதான சூதாட்ட புகார், பார்லிமென்டிலும் எதிரொலித்தது. நேற்று "ஜீரோ' நேரத்தின் போது, கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட பல உறுப்பினர்கள், புலனாய்வு செய்தி குறித்து முழு அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


5 வீரர்கள் விவரம்:

சுதிந்திரா, 28. ம.பி.,

* டில்லி ஜயன்ட்ஸ் (ஐ.சி.எல்.,), டெக்கான் சார்ஜர்ஸ் (ஐ.பி.எல்.,).
* "நோ-பால்' வீச ரூ. 50 ஆயிரம் பெற்றார்.
* இந்தூரில் நடந்த உள்ளூர் போட்டியில், சுதிந்திரா வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தை, "கிரீசிற்கு' வெளியே அதிகமாக காலை வைத்து வீசினார்.

ஸ்ரீவாஸ்தவ், 22, உ.பி.,

* டில்லி ஜயன்ட்ஸ் (ஐ.சி.எல்.,), கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஐ.பி.எல்.,).
* தற்போதைய ஐ.பி.எல்., தொடரில் ரூ. 10 லட்சம் கொடுத்தால் "நோ-பால்' வீச தயார் என கூறியுள்ளார்.

மோனிஷ் மிஸ்ரா, 28. ம.பி.,

* டில்லி ஜயன்ட்ஸ் (ஐ.சி.எல்.,), டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ் (ஐ.பி.எல்.,)
* வீடியோவில் இவர் கூறுகையில்,"" ஐ.பி.எல்., தொடரில், வீரர்களுக்கு பேசியதை விட அதிக பணம் தரப்படுகிறது. இதை கறுப்பு பணமாக அணி உரிமையாளர்கள் தருகின்றனர். பி.சி.சி.ஐ., எனக்கு ரூ. 30 லட்சம் நிர்ணயித்தது. ஆனால், ரூ. 1.5 கோடி வரை புனே நிர்வாகம் தந்தது. இதில் ரூ. 1.2 கோடி கறுப்பு பணமாக கொடுக்கப்பட்டது,'' என்றார்.


அமித் யாதவ், 22. கோவா.

* கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஐ.பி.எல்.,)
* புலனாய்வு வீடியோவில் இவர் கூறுகையில்,"" கடந்த ஆண்டு பஞ்சாப், டில்லி அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி "பிக்சிங்' செய்யப்பட்டது. இப்போது பஞ்சாப் அணியில் எனக்கு ரூ. 10 லட்சம் தரப்படுகிறது. ரூ. 20 லட்சம் கொடுத்தால், வேறு அணிக்கு மாறத் தயார்,'' என்றார்.

அபினவ் பாலி, 26. டில்லி

டில்லி ஜயன்ட்ஸ் (ஐ.சி.எல்.,)
இடது கை சுழற் பந்து வீச்சாளர். இதுவரை 13 முதல் தர போட்டிகளில் பங்கேற்று, 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 592 ரன்கள் எடுத்துள்ளார். தவிர, "ஏ' பிரிவு போட்டிகள் 16ல் விளையாடிய இவர், 11 விக்கெட் கைப்பற்றினார். தற்போது, ஐ.பி.எல்., தொடரில் எந்த அணியிலும் பங்கேற்கவில்லை.