இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கக் கிடைத்துள்ள வாய்ப்பு என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் ஆட்டம், ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முன்னணி வீரர்கள் சச்சின், சேவாக், யுவராஜ், கம்பீர் ஆகியோர் பங்கேற்கவில்லை.

ஒருநாள் போட்டியில் தோனி விளையாடாததால் ரெய்னா கேப்டனாகியுள்ளார். முன்னணி வீரர்கள் அணியில் இடம் பெறாததால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து ஜாகீர் கான் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியது:

தங்கள் திறமையை நிரூபித்து இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் மூலமும் சிறந்த வீரர்கள் பலரை அடையாளம் காண முடிந்துள்ளது. உலக சாம்பியன் என்ற பட்டம் பெற்றுள்ள இந்திய அணிக்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் மிகுந்த எதிர்பார்ப்பு உடையதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தோனி மிகச்சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. உலகக் கோப்பை, ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் என அவரது தலைமையிலான அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. அவரது ஆட்டமும் சிறப்பாக உள்ளது. இத்தனை வெற்றிகளுக்குச் சொந்தக்காரரான அவர், எப்போதும் எளிமையாகவும், அமைதியாகவும் இருப்பார். இதுவே அவரது வெற்றியின் ரகசியம் என்று கூடக் கூறலாம் என்றார் ஜாகீர் கான்.


தமிழக வீரர்கள் முகுந்த், பத்ரிநாத், முரளி விஜய் ஆகியோருக்கு மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதேபோல டெஸ்ட் அணியில் இளம் வீரர்கள் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை கிங்ஸ் மீண்டும் சாம்பியன்

ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த பைனலில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முரளி விஜய், அஷ்வினின் அபார ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.

இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல், "டுவென்டி-20' தொடர் நடந்தது. நேற்று சென்னையில் நடந்த பைனலில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. "டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் "பேட்டிங்' தேர்வு செய்தார்.


"சிக்சர்' மழை:

சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து "சூப்பர்' அடித்தளம் அமைத்தனர். பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்த விஜய், அரவிந்த் பந்தை சிக்சருக்கு விரட்டி அதிரடியை துவக்கினார். மறுபக்கம் மிகவும் "பிசி'யாக இருந்த ஹசி, முன்னணி வீரரான ஜாகிர், முகமது பந்துகளில் தலா ஒரு சிக்சர் விளாசினார்.

தொடர்ந்து கெய்ல், வெட்டோரி சுழலில் விஜய் சிக்சர் அடிக்க, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பின் மிதுன் ஓவரில் 2 பவுண்டரி அடித்த விஜய் 29 பந்துகளில் அரைசதம் எட்டினார். தனது வாணவேடிக்கையை தொடர்ந்த இவர், அரவிந்த் வீசிய போட்டியின் 12வது ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்கள் அடித்தார்.

மறுபக்கம் வெட்டோரி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹசி அரைசதம் கடந்தார். முகமது வீசிய போட்டியின் 15வது ஓவரில் ஹசி, விஜய் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இதே ஓவரில் இன்னொரு சிக்சர் அடிக்க பார்த்த, ஹசி(63) பரிதாபமாக அவுட்டானார்.


நழுவிய சதம்:

அடுத்து வந்த கேப்டன் தோனி ரன்வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். இவர், கெய்ல் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்தார். அரவிந்த் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை தூக்கி அடித்த விஜய், சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இவர் 52 பந்தில் 95 ரன்கள்(4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். இரண்டாவது பந்தில் தோனி(22) அவுட்டானார். அடுத்த பந்தை ரெய்னா தடுத்து ஆட, அரவிந்தின் "ஹாட்ரிக்' வாய்ப்பு தகர்ந்தது. நான்காவது பந்தில் ரெய்னா சிக்சர் அடித்து அசத்தினார்.

கெய்ல் வீசிய கடைசி ஓவரில் ஆல்பி மார்கல்(2) முதலில் வெளியேறினார். அடுத்த பந்தில் ரெய்னா(8) போல்டானார். கடைசி பந்தில் பிராவோ சிக்சர் அடித்து, 200 ரன்களை கடக்க உதவினார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. பிராவோ(6) அவுட்டாகாமல் இருந்தார்.


அஷ்வின் ஜாலம்:

கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, சென்னை கிங்ஸ் விரித்த "சுழல்' வலையில் அப்படியே சிக்கியது. முதல் ஓவரிலேயே அஷ்வின் பயங்கர "ஷாக்' கொடுத்தார். இவரது சுழலில் "அதிரடி' கெய்ல் "டக்' அவுட்டாக, சென்னை ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். இத்தொடர் முழுவதும் அசத்திய கெய்ல், மிக முக்கியமான பைனலில் கோட்டை விட்டதால், அரங்கில் அமர்ந்திருந்த பெங்களூரு அணியின் உரிமையாளர் மல்லையா அதிர்ச்சியில் உறைந்தார்.


சொதப்பல் ஆட்டம்:

அடுத்து வந்தவர்களும் சொதப்பலாக ஆடினர். தொடர்ந்து அகர்வாலை(10) வெளியேற்றிய அஷ்வின் இன்னொரு "அடி' கொடுத்தார். ஜகாதி சுழலில் டிவிலியர்ஸ்(18), பாமர்ஸ்பச்(2) சிக்கினர். போராடிய விராத் கோஹ்லி(35), ரெய்னா பந்தில் அவுட்டாக, பெங்களூரு கதை முடிந்தது. மீண்டும் பந்துவீச வந்த அஷ்வின், கேப்டன் வெட்டோரியை(0) வெளியேற்றினார். ஜாகிர் 21 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சவுரப் திவாரி(42*) ஆறுதல் அளித்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

இவ்வெற்றியின் மூலம் ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெல்லும் முதல் அணி என்ற சாதனையை சென்னை கிங்ஸ் அணி படைத்தது.
ஆட்ட நாயகன் விருதை முரளி விஜய் வென்றார்.



"ஆரஞ்ச் கேப்' கெய்ல்

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணியின் கெய்ல், 608 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் முதலிடம் பெற்று, இதற்கான "ஆரஞ்ச்' தொப்பியை தட்டிச் சென்றார். இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்த "டாப்-10' வீரர்கள் விவரம்:


பெயர்/அணி போட்டி ரன்கள்

1. கெய்ல்(பெங்களூரு) 12 608
2. கோஹ்லி (பெங்களூரு) 16 557
3. சச்சின் (மும்பை) 16 553
4. மார்ஷ் (பஞ்சாப்) 14 504
5. ஹசி (சென்னை) 14 492

மலிங்கா அபாரம்

பவுலிங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மும்பையின் மலிங்கா (28) முதலிடத்தை பெற்று, இதற்காக "பர்பிள் கேப்' பரிசை பெற்றார். இவ்வரிசையில் "டாப்-5' வீரர்கள் விவரம்:

பெயர்/அணி போட்டி விக்.,
1. மலிங்கா (மும்பை) 16 28
2. முனாப் படேல் (மும்பை) 15 22
3. அரவிந்த் (பெங்களூரு) 13 21
4. அஷ்வின் (சென்னை) 16 20
5. அமித் மிஸ்ரா (டெக்கான்) 14 19


இதுவரை சாம்பியன்கள்

ஆண்டு சாம்பியன் எதிரணி
1. 2008 ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்
2. 2009 டெக்கான் சார்ஜர்ஸ் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
3. 2010 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ்
4. 2011 சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்

சாதனை ஜோடி
ஐ.பி.எல்., வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (159) சேர்த்த ஜோடி என்ற பெருமையை, சென்னை அணியின் முரளி விஜய், மைக் ஹசி பெற்றது. இதற்கு முன் கில்கிறிஸ்ட்-லட்சுமண் இணைந்து, மும்பை அணிக்கு எதிராக 155 ரன்கள் (2008) எடுத்து இருந்தனர்.

விஜய்க்கு சூப்பர் "விசில்' அடிங்க...
சென்னை அணியின் சாம்பியன் கனவுக்கு தமிழக வீரர்களான முரளி விஜய், அஷ்வின் கைகொடுத்தனர். பேட்டிங்கில் அசத்திய முரளி விஜய் 95 ரன்கள் விளாசினார். இவர், ஐ.பி.எல்., தொடரின் பைனலில் அதிக சிக்சர் (6) அடித்தவர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக 2008 பைனலில், ராஜஸ்தானின் யூசுப் பதான் (எதிரணி-சென்னை), 4 சிக்சர் அடித்திருந்தார்.

இதே போல சுழலில் அசத்திய அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தி, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். பெங்களூரு அணி, அன்னிய வீரரான கெய்லை நம்பி ஏமாந்தது. ஆனால், சென்னை அணி மண்ணின் மைந்தர்களை நம்பி சந்தித்தது.


தோனியின் சாதனை பயணம்

தோனியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. இவரது தலைமையில், இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற முக்கிய சாம்பியன் பட்டங்கள்...


ஆண்டு/மாதம் வென்ற கோப்பை

1. 2007/ஆகஸ்ட் "டுவென்டி-20' உலக கோப்பை
2. 2010/ஏப்ரல் ஐ.பி.எல்., "டுவென்டி-20' கோப்பை
3. 2010/செப்டம்பர் ஐ.பி.எல்., சாம்பியன்ஸ் லீக் கோப்பை
4. 2011/ஏப்ரல் உலக கோப்பை (50 ஓவர்)
5. 2011/மே ஐ.பி.எல்., "டுவென்டி-20'

புதிய கேப்டன் சுரேஷ் ரெய்னா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் "டுவென்டி-20 தொடருக்கு சுரேஷ் ரெய்னா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக காம்பிர், யுவராஜ் சிங் நீக்கப்பட்டனர். டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.

அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி, ஒரே ஒரு "டுவென்டி-20, ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.


காம்பிர் கேப்டன்:

"டுவென்டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் சச்சின், தோனி, ஜாகிர் கான் உள்ளிட்டோருக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. சேவக் மற்றும் ஆஷிஸ் நெஹ்ரா காயம் காரணமாக விலகினர். இதனால் துவக்க வீரர் கவுதம் காம்பிர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.


ரெய்னா கேப்டன்:

ஆனால் காம்பிருக்கு சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., போட்டியின் போது தோள்பட்டை பகுதியில்
காயம் ஏற்பட்டதால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவரை தொடர்ந்து நுரையீரல் பகுதியில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றால், யுவராஜ் சிங்கும் விலகுவதாக தெரிவித்தார்.

இதனால் "டுவென்டி-20 மற்றும் ஒருநாள் தொடரின் புதிய கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டார். சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.


திவாரி வாய்ப்பு:

காம்பிர், யுவராஜ் சிங்கிற்கு பதிலாக ஷிகர் தவான், மனோஜ் திவாரி உள்ளிட்ட இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் முன்னதாக தலா ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். சர்வதேச "டுவென்டி-20 போட்டிகளில் விளையாட இருப்பது இவர்களுக்கு இதுவே முதன்முறை.


அபினவ் முகுந்த்அறிமுகம்:

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி, நேற்று சென்னையில் தேர்வு செய்யப்பட்டது. இதில் ஒருநாள் தொடருக்கு விருப்ப ஓய்வை பெற்ற இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கவில்லை.

தமிழக வீரர் அபினவ் முகுந்த் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார். இதேபோல விராத் கோஹ்லி, முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் தொடரின் கேப்டனாக தோனி நீடிக்கிறார். துணைக் கேப்டன் பொறுப்பு லட்சுமணுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர சீனியர் வீரர் ராகுல் டிராவிட், ஜாகிர் கான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
------

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

தோனி (கேப்டன்), லட்சுமண் (துணைக் கேப்டன்), டிராவிட், முரளி விஜய், அபினவ் முகுந்த், விராத் கோஹ்லி, பத்ரிநாத், ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, ஜாகிர் கான், ஸ்ரீசாந்த், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, முனாப் படேல், சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் படேல்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

16 பேர் கொண்ட இந்திய அணி:

சுரேஷ் ரெய்னா (கேப்டன்), ஹர்பஜன் சிங் (துணைக் கேப்டன்), பார்த்திவ் படேல், விராத் கோஹ்லி, மனோஜ் திவாரி, ஷிகர் தவான், பத்ரிநாத், ரோகித் சர்மா, அஷ்வின், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, முனாப் படேல், வினய் குமார், யூசுப் பதான், அமித் மிஸ்ரா, சகா.
---

என்ன பிரச்னை?

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான் இந்திய அணியில் முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை. இவர்களது பிரச்னை பற்றி பார்ப்போம்.

வீரர் காரணம்
சேவக் தோள் பட்டை காயம்
காம்பிர் தோள் பட்டை காயம்
யுவராஜ் நுரையீரல் நோய்த் தொற்று
நெஹ்ரா கைவிரலில் காயம்
சச்சின் விருப்ப ஓய்வு
தோனி விருப்ப ஓய்வு
ஜாகிர் விருப்ப ஓய்வு
---

தமிழக வீரர் முகுந்த்?

டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக இடம் பெற்றுள்ள தமிழக வீரர் அபினவ் முகுந்த், கடந்த 1990ல் சென்னையில் பிறந்தவர். உள்ளூரில் அசத்திய இவர், இந்த சீசனில் 12 முதல் தர போட்டிகளில் 5 சதங்கள் உட்பட 1211 ரன்கள் எடுத்துள்ளார். இதன் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பு தேடி வந்துள்ளது.

வரலாறு படைக்குமா சென்னை கிங்ஸ்?

ஐ.பி.எல்., தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாறு படைக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காத்திருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ள சென்னை அணிக்கு, இம்முறை பைனல் சொந்த மண்ணில் நடப்பது சாதகமான விஷயம்.

நான்காவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று முன் தினம் மும்பையில் நடந்த முதலாவது "பிளே-ஆப்' போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை சந்தித்தது.

இதில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு கடைசி 18 பந்துகளில் 53 ரன்கள் தேவைப்பட்டன. இது சாத்தியமில்லை என்று தான் பலரும் நினைத்தனர். ஆனால், சுரேஷ் ரெய்னா(73) மற்றும் ஆல்பி மார்கலின்(28) அதிரடி கைகொடுக்க, 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து வென்றது.

இதன் மூலம் சென்னை அணி, மூன்றாவது முறையாக பைனலுக்கு(2008, 2010, 2011) முன்னேறி அசத்தியது. வரும் 28ம் தேதி நடக்கும் பைனலில் மீண்டும் வெல்லும் பட்சத்தில் ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை வென்ற முதல் அணி என்ற பெருமையை பெறலாம்.


உள்ளூர் சாதகம்:

சென்னையில் பைனல் நடப்பது நமக்கு சாதகமானது. இம்முறை லீக் சுற்றில், இங்கு நடந்த 7 போட்டிகளிலும் சென்னை தான் வென்றது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு மற்றும் ராசியான சேப்பாக்கம் மைதானம் மீண்டும் அணிக்கு கைகொடுக்கலாம். தவிர, கேப்டன் தோனியின் வியூகம், அஷ்வின் சுழல், ரெய்னா, மார்கல், முரளி விஜய் ஆகியோரது அதிரடி எடுபடும் பட்சத்தில் சென்னை அணி, உள்ளூரில் கோப்பை கைப்பற்றலாம்.

இது குறித்து அணியின் முன்னணி வீரர் மைக்கேல் ஹசி கூறுகையில்,""சேப்பாக்கம் ஆடுகளத்தில் துவக்கத்தில் அதிரடியாக ஆடலாம். போகப் போக பந்து, பேட் நோக்கி வரும் வேகம் குறைந்து விடும். பந்துக்காக காத்திருந்து பேட் செய்ய வேண்டும்.

இதற்கேற்ப விளையாட கற்றுக் கொண்டதால் தான், உள்ளூரில் சென்னை அணி வலிமையானதாக திகழ்கிறது. ஆடுகளத்தின் இந்த தன்மையை புரிந்து கொண்டு விளையாட மற்ற அணிகள் சிரமப்பட வேண்டியிருக்கும்,''என்றார்.

சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில்,""அணியின் "மிடில்-ஆர்டர்' பலமாக இருப்பதால் தான் இக்கட்டான நிலையிலும் வெற்றி பெற முடிகிறது. சுழற்கூட்டணிக்கு அஷ்வின் தலைமை ஏற்கிறார். இவருக்கு பக்கபலமாக ஜகாதி உள்ளார். ஆல்பி மார்கல், பிராவோ, போலிஞ்சர் போன்ற வேகங்கள் இருப்பதால், எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக உள்ளோம்,''என்றார்.


நம்பிக்கை இருந்தது

பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றி குறித்து சென்னை கேப்டன் தோனி கூறுகையில்,"" பெங்களூரு அணிக்கு எதிராக 176 ரன்கள் என்பது சற்று சிரமமான ஸ்கோர் தான். இருப்பினும், இதற்கு முன் இதுபோன்ற அனுபவங்களை சந்தித்து உள்ளோம். இதனால் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

கைவசம் விக்கெட்டுகள் இருந்தால், கடைசி நேரத்தில் எந்த ஸ்கோரையும் எட்டிவிடலாம். இதுதான் பெங்களூருவுக்கு எதிராக நடந்தது. ஏழு ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில், களத்தில் இருந்த வீரர்களிடம் எவ்வித அறிவுரையும் நான் கொடுக்கவில்லை.

வீரர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை, 100 சதவீதம் வெளிப்படுத்த வேண்டும். அதன் பின் வெற்றி தானாக தேடி வரும்,''என்றார்.

பெங்களூரு அணி கேப்டன் வெட்டோரி கூறுகையில்,"" கடைசி ஐந்து ஓவர்கள் சரியாக பந்துவீச வில்லை. ரெய்னா 18 பந்துகளில் 46 ரன்களை எட்டினார். மேலும் இவர், நாங்கள் வீசிய பெரும்பாலான பந்துகளை எல்லை கோட்டை தாண்டி பறக்க செய்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

175 ரன்கள் என்பது நல்ல இலக்கு தான். எளிதாக எட்ட கூடிய இலக்கு அல்ல. எங்களுடைய சரிவை தடுக்க, கடைசி ஐந்து ஓவர்கள் சிறப்பாக பந்துவீசி இருக்கலாம். அடுத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பைனலுக்கு முன்னேறுவோம்,''என்றார்.

சச்சின், சானியா மீது வழக்கு

தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோர் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனு விவரம்:

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தனது பிறந்த நாளை 2010-ம் ஆண்டு ஜமைக்கா நாட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது மூவர்ண கொடியின் நிறத்தினாலான கேக்கை வெட்டிக் கொண்டாடியது வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

இதேபோல கிரிக்கெட் வர்ணனையாளர் நடிகை மந்திரா பேடி சமீபத்தில் கிரிக்கெட் நிகழ்ச்சியை வர்ணனை செய்தபோது தேசியக் கொடி வடிவிலான ஆடையை அணிந்திருந்தது வலைதளத்திலும், தொலைக்காட்சி சேனல்களிலும் வெளியாகின.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தொலைக்காட்சி பேட்டியின்போது, தனது காலில் தேசியக் கொடி வண்ணத்திலான செருப்பை அணிந்திருந்ததும் படமாக வெளிவந்துள்ளது.

எனவே தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டது தொடர்பாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

கெய்ல் அதிரடியில் வீழ்ந்தது சென்னை

ஐ.பி.எல்., லீக் போட்டியில் கிறிஸ் கெய்ல் அதிரடியாக 75 ரன்கள் விளாச, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் பெங்களூரு அணி 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. பேட்டிங், பவுலிங்கில் சோபிக்கத் தவறிய சென்னை அணி ஏமாற்றம் அளித்தது.

நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த லீக்போட்டியில், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் டேனியல் வெட்டோரி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.


"டாப்-ஆர்டர்' சொதப்பல்:

சென்னை கிங்ஸ் அணியின் "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள், பெங்களூரு பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஜாகிர் கான் வேகத்தில் மைக்கேல் ஹசி (4) "போல்டானார்'. அரவிந்த் பந்தில் முரளி விஜய் (6) அவுட்டானார். சுரேஷ் ரெய்னா (4), ஜாகிர் கானிடம் சரணடைந்தார். அடுத்து வந்த பத்ரிநாத் (0), வெட்டோரி சுழலில் சிக்க, சென்னை அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.


தோனி அரைசதம்:

பின் விரிதிமன் சகா, கேப்டன் தோனி ஜோடி அணியை சரிவிலிருந்து ஓரளவுக்கு மீட்டது. பொறுப்பாக ஆடிய இந்த ஜோடி, 5வது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த போது, விராத் கோஹ்லி வேகத்தில் சகா (22) வெளியேறினார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி, பெங்களூரு பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ஆனால் டேரன் பிராவோ (5), ஆல்பி மார்கல் (5), அஷ்வின் (2) உள்ளிட்டோர் இவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

அரவிந்த் வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் ஒரு இமாலய "சிக்சர்' அடித்த தோனி, தனது அரைசதத்தை பதிவு செய்தார். சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தது. ஆறு சிக்சர், மூன்று பவுண்டரி உட்பட 40 பந்தில் 70 ரன்கள் எடுத்த தோனி அவுட்டாகாமல் இருந்தார்.


கெய்ல் அரைசதம்:

சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு, டிவிலியர்ஸ் (0) மோசமான துவக்கம் அளித்தார். பின் இணைந்த கிறிஸ் கெய்ல், விராத் கோஹ்லி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த போது விராத் கோஹ்லி (31) அவுட்டானார். மறுமுனையில் அதிரடி காட்டிய கிறிஸ் கெய்ல், சிக்சர் மழை பொழிந்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்ல், பிராவோ பந்தில் ஒரு "சூப்பர் பவுண்டரி' அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.


பெங்களூரு பதிலடி:

தனது வாணவேடிக்கையை தொடர்ந்த கெய்ல், ரெய்னா வீசிய ஆட்டத்தின் 18வது ஓவரில் ஒரு "சிக்சர்', ஒரு "பவுண்டரி' அடித்து வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிறிஸ் கெய்ல் (75 ரன்கள், 50 பந்து, 6 சிக்சர், 4 பவுண்டரி), திவாரி (13) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதன்மூலம் கடந்த லீக் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக கண்ட தோல்விக்கு பெங்களூரு அணி பதிலடி கொடுத்தது. ஆட்ட நாயகனாக கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார்.

முதலிடம் பெறுமா சென்னை ?

ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்பு உள்ளதால், கடும் போராட்டம் காத்திருக்கிறது.

இந்தியாவில் நடக்கும் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் முடிகின்றன. இதில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று மாலை நடக்கும் 69வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.


யாருக்கு முதலிடம்:

இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில், சென்னை அணி 9 வெற்றியுடன் 18 புள்ளிகள் பெற்று, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 13 போட்டிகளில் 17 புள்ளிகளுடன் உள்ளது. இன்று வெற்றி பெறும் அணிக்கு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.


பேட்டிங் ஆறுதல்:

சென்னை அணிக்கு துவக்க வீரர் முரளி விஜய் தொடர்ந்து நிச்சயமற்ற முறையில் பேட்டிங் திறனை வெளிப்படுத்துகிறார். இவரது ஜோடியான மைக் ஹசி (11 போட்டியில் 400 ரன்கள்), சராசரியாக ரன் குவித்து வருவது நல்ல செய்தி.

"மிடில் ஆர்டரில்' பத்ரிநாத்(362), ரெய்னா (353) ஆகியோர் அதிரடியுடன் ரன் சேர்ப்பது அணிக்கு பலம் தான். கடந்த போட்டியின் ஆட்டநாயகன் சகா, இன்றும் அசத்த முயற்சிக்கலாம். கேப்டன் தோனி தன் பங்கிற்கு உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சராசரி பவுலிங்:

பவுலிங்கை பொறுத்தவரையில் இதுவரை 15 விக்கெட் வீழ்த்திய போலிஞ்சர், இவரது பங்காளி ஆல்பி மார்கல் (14 விக்.,) இருவரும், சென்னை அணிக்கு கடைசி நேரத்தில் ஆறுதலாக செயல்படுகின்றனர். சுழலில் தமிழகத்தின் அஷ்வினும் (15 விக்.,) இக்கட்டான நேரங்களில் பிரகாசிக்க துவங்கியுள்ளார். தவிர, மீண்டும் துவக்க ஓவர்களை இவர் வீசுவதால், இன்று பெங்களூரு அணியின் கெய்லுக்கு சிக்கல் தான்.


கெய்ல் பலம்:

துவக்கத்தில் தோல்விகளையே சந்தித்து வந்த பெங்களூரு அணி, கெய்ல் வருகைக்குப் பின் இமாலய எழுச்சி கண்டது. தொடர்ச்சியாக ஏழு வெற்றிகளை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்த இந்த அணி, கடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான மோசமான தோல்வியால் சற்று குழப்பத்தில் உள்ளது போலத் தெரிகிறது.

இதைப் பயன்படுத்தி அதிரடி கெய்லை (436 ரன்கள்), விரைவில் அவுட்டாக்கினால் போட்டி, சென்னை அணிக்கு சாதகமாக திரும்பலாம். இருப்பினும், பின் வரிசையில் கேப்டன் விராத் கோஹ்லி (413), சவுரப் திவாரி, டிவிலியர்ஸ், ஆசாத் பதான் மற்றும் முகமது கைப் போன்றவர்கள் கைகொடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.


ஜாகிர் ஏமாற்றம்:

உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய ஜாகிர் கான், தற்போதைய ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. இதுவரை பங்கேற்ற 11 போட்டியில் 9 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதேநேரம் அரவிந்த் (14 விக்.,) ஆறுதல் இன்றும் தொடரலாம். இவர்களுடன் லாங்கிவெல்ட், அபிமன்யு மிதுனும் சாதிப்பார்களா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


வெற்றி முக்கியம்:

இரு அணிகளுக்கும் இன்றைய போட்டியின் வெற்றி மிகவும் முக்கியம். ஆனால், பெங்களூரு அணி சொந்தமண் பலத்தில் விளையாடும் என்பதால், தோனியின் சென்னை கிங்ஸ், வெற்றிக்கு கடுமையாக போராட வேண்டியது இருக்கும்.

சென்னை ஆதிக்கம்

ஐ.பி.எல்., தொடரில் இரு அணிகளும் இதுவரை 8 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 5ல் சென்னை கிங்ஸ் அணியும், 3ல் பெங்களூரு அணியும் வென்றுள்ளன.

* சென்னை அணி கேப்டன் தோனி, இன்று 31 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், "டுவென்டி-20' அரங்கில் 2000 ரன்களை எட்டலாம்.

"பிளே ஆப்' சுற்று எப்படி?

ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரின் லீக் சுற்றுகள் முடியவுள்ள நிலையில், "பிளே ஆப்' சுற்று போட்டிகள் விரைவில் துவங்குகின்றன.

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் லீக் சுற்று போட்டிகள் நாளையுடன் முடிகின்றன. வரும் 24ம் தேதி முதல், "பிளே ஆப்' எனப்படும் அடுத்த சுற்று போட்டிகள் நடக்கின்றன. தற்போதைய நிலையில் சென்னை, பெங்களூரு அணிகள் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளன.

கோல்கட்டா, பஞ்சாப், மும்பை அணிகள் இடையே, அடுத்த இரு இடங்களுக்கு பலத்த போட்டி காணப்படுகிறது.

மற்றபடி, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் என ஐந்து அணிகள், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.


"பிளே ஆப்' எப்படி?

புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் இந்த சுற்றில் பங்கேற்கும். இதன் விவரம்:

* போட்டி 1: முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு தகுதி பெறும். தவிர, சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

* போட்டி 2: இதில் மூன்று, நான்காவது இடம் பிடித்த அணிகள் மோதும். இந்த போட்டியில் தோல்வியடையும் அணி, தொடரில் இருந்து வெளியேற நேரிடும். சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பும் கிடைக்காது.

* போட்டி 3: இதில் போட்டி 1ல் தோல்வி, போட்டி 2ல் வென்ற அணிகள் மோதும். இதில் வெல்லும் அணி பைனலுக்கு முன்னேறும். இருப்பினும், இந்த இரு அணிகளுக்கும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கலாம்.

* போட்டி 4: நான்காவது ஐ.பி.எல்., தொடரின் பைனல். இதில், போட்டி 1 மற்றும் 3ல் வென்ற அணிகள் மோதும்.

விளம்பர உலகின் "ஹீரோ' தோனி

விளம்பர உலகில் செல்வாக்குமிக்க விளையாட்டு வீரர்கள் வரிசையில் இந்திய கேப்டன் தோனி முன்னணியில் இருக்கிறார். இவர், நடால், கோப் பிரயண்ட் போன்ற சர்வதேச நட்சத்திரங்களை முந்தி, 10வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் தோனி. கடந்த 2007ல் இவரது தலைமையிலான அணி "டுவென்டி-20' உலக கோப்பை வென்றது. சமீபத்தில் 50 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றினார். ஐ.பி.எல்., தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம் பெற்று தந்தார்.

இவர் தொட்டதெல்லாம் பொன்னாக, விளம்பர நிறுவனங்களை மொய்க்க துவங்கின. தங்களது பொருட்களுக்கு "மாடலாக' தோன்ற இவருக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்தன.

லண்டனில் இருந்து வெளியாகும் "ஸ்போர்ட்ஸ் புரோ' என்ற பத்திரிகையின் சமீபத்திய கணிப்பின்படி தென் கிழக்கு ஆசியாவின் "நம்பர்-1' விளம்பர நட்சத்திரமாக தோனி திகழ்கிறார்.


யுவராஜ் 49வது இடம்:

இப்பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் ஸ்பெயின் டென்னிஸ் வீரர் நடால், அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் கோப் பிரயன்ட் ஆகியோரை முந்திய தோனி 10வது இடத்தை பிடித்துள்ளார்.

முதலிடத்தில் ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் உள்ளார். கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெசி முறையே மூன்று, நான்காவது இடங்களில் உள்ளனர். சீனாவின் பிரபல கூடைப்பந்து வீரர் யாவ் மிங் 11வது இடத்தை பெற்றுள்ளார்.

உலக கோப்பை போட்டிகளில் அசத்தி தொடர் நாயகன் விருது வென்ற இந்தியாவின் யுவராஜ் சிங் 49வது இடத்தை பிடித்துள்ளார். "டாப்-10' பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் நட்சத்திரம் என்ற பெருமையை "டென்னிஸ் புயல்' கரோலின் வோஸ்னியாக்கி(9வது இடம்) பெறுகிறார்.

இது குறித்து "ஸ்போர்ட்ஸ் புரோ' பத்திரிகையின் ஆசிரியர் டேவிட் குஷன் கூறுகையில்,""உலக கோப்பை வென்ற பின் தோனியின் புகழ் விளம்பர உலகில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவருக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் சச்சின் அளவுக்கு பேராதரவு இல்லை.

ஆனாலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தங்களது பெருட்களை விளம்பரம் செய்ய விரும்பும் நிறுவனங்களின் "நம்பர்-1' தேர்வாக தோனி திகழ்கிறார்,''என்றார்.

சச்சின் தந்த மிகப் பெரிய விருது

எனது பேட்டிங்கை சச்சின் பாராட்டிய அந்த தருணத்தை மறக்க முடியாது. இதுவே எனக்கு கிடைத்த மிகப் பெரிய விருது,''என, இளம் வீரர் வல்தாட்டி கூறியுள்ளார்.
நான்காவது ஐ.பி.எல்., தொடர் இந்திய மண்ணில் நடக்கிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பிடித்துள்ள இளம் இந்திய வீரர் வல்தாட்டி (27 வயது) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 63 பந்தில் 120 ரன்கள் (2 சிக்சர், 19 பவுண்டரி) எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதுவரை இவர், 13 போட்டிகளில் பங்கேற்று ஒரு சதம், இரண்டு அரைசதம் உட்பட 458 ரன்கள் எடுத்துள்ளார். பவுலிங்கிலும் அசத்தி வரும் இவர், இதுவரை 6 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
தனது ஆட்டம் குறித்து வல்தாட்டி கூறியதாவது:
ஐ.பி.எல்., தொடரில் பேட்டிங், பவுலிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இம்முறை பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் அல்லது மும்பை அணியின் லசித் மலிங்காவுக்கு தொடர் நாயகன் விருது கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறேன்.
சமீபத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், என்னை வெகுவாக பாராட்டினார். "நீ நன்றாக பேட்டிங் செய்கிறாய், தொடர்ந்து சிறப்பாக செயல்படு' என வாழ்த்தினார். சச்சினிடம் இருந்து கிடைத்த இந்த பாராட்டை எனது வாழ்நாளின் மிகப் பெரும் விருதாக கருதுகிறேன். இந்த தருணத்தை என்றும் மறக்க மாட்டேன். இதனை எனது மிகச்சிறந்த சாதனையாக நினைக்கிறேன். சச்சின் மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மாத்யூ ஹைடனை எனது "ரோல் மாடலாக' கருதுகிறேன்.
முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், எந்த ஒரு பவுலரையும் விட்டுவைக்கமாட்டார். இதேபோல தற்போது இந்தியாவின் அதிரடி துவக்க வீரர் சேவக், எந்த ஒரு எதிரணி பவுலரை கண்டு அஞ்சுவது கிடையாது. சேவக் பேட்டிங்கை தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஆனால் அவரை போல ரன் சேர்க்க முயற்சிக்கபோவதில்லை. இது மிகவும் கடினம். அது சேவக்கின் தனி "ஸ்டைல்'. எனக்கென்று ஒரு தனி "ஸ்டைலை' உருவாக்க திட்டமிட்டுள்ளேன்.
ஐ.பி.எல்., தொடர், என்னைப்போன்ற இளம் வீரர்களுக்கு திறமையை நிரூபிக்கும் சிறந்த மேடையாக விளங்குகிறது. எங்கள் அணி கேப்டன் கில்கிறிஸ்ட், இளம் வீரர்களுக்கு சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறார். எனது இளமை பருவம் முதல், அவரது பேட்டிங்கை கண்டு வருகிறேன். தற்போதும் அதேவேகத்துடன் ரன் சேர்த்து வருவது அவரது சிறப்பம்சம். அவருடன் இணைந்து துவக்க வீரராக களமிறங்குவதில் பெருமை படுகிறேன். போட்டியின் போது நிறைய ஆலோசனை வழங்குவார். இவரது ஆலோசனைகள் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவுகிறது.
இந்திய அணிக்காக விளையாடுவதை லட்சியமாக கொண்டுள்ளேன். இதற்காக ஐ.பி.எல்., உள்ளிட்ட தொடர்களில் எனது திறமையை நிரூபிக்க திட்டமிட்டுள்ளேன். விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு வல்தாட்டி கூறினார்.

சச்சினுக்கு பி.சி.சி.ஐ., விருது

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், "பாலி உம்ரிகர்' விருது வழங்கப்பட உள்ளது.

பி.சி.சி.ஐ., சார்பில் வரும் மே 31ம் தேதி மும்பையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட்டில் சாதித்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. தவிர, 28 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி, உலக கோப்பை வென்றதையும் கொண்டாட உள்ளது.


இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் கூறியது:

கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் சாதித்து வருபவர் இந்திய அணியின் சச்சின் (38). இவர் கடந்த பத்தாவது உலககோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தார். தவிர, கடந்த ஆண்டில் பங்கேற்ற 10 டெஸ்ட் போட்டிகளில், ஒரு இரட்டை சதம், ஐந்து சதம் உட்பட மொத்தம் 1064 ரன்கள் எடுத்துள்ளார். 12 நாள் போட்டிகளில் ஒரு இரட்டைசதம் உட்பட 695 ரன்கள் எடுத்துள்ளார்.

இவருக்கு 2009-2010 ஆண்டில் சிறந்து விளங்கியதற்காக "பாலி உம்ரிகர்' விருது வழங்கப்படுகிறது. இதற்கான கோப்பையுடன், சச்சினுக்கு ஐந்து லட்ச ரூபாயும் தரப்பட உள்ளது.

இத்துடன் ஜி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வரும் மே 27ல் வெளியாகும்.

இந்த விருது பெறுபவர்களுக்கு கோப்பையுடன், ரூ. 15 லட்சம் கிடைக்கும். இத்துடன் மனிஷ் பாண்டே, அபிமன்யு மிதுன் போன்ற பல வீரர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.

இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.

இந்திய அணிக்கு காம்பிர் கேப்டன்

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக காம்பிர் தேர்வு செய்யப்பட்டார். சீனியர் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. தமிழகத்தின் பத்ரிநாத், சகா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

ஒரு "டுவென்டி-20', ஐந்து ஒரு நாள் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி, வரும் மே 28ல் வெஸ்ட் இண்டீஸ் புறப்படுகிறது. வரும் ஜூன் 4ல் ஒரு "டுவென்டி-20', ஜூன் 6, 8, 11, 13 மற்றும் 16ம் தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடக்கின்றது.

இதற்கான இந்திய அணியை தேர்வு செய்ய, நேற்று ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது.


சச்சின் ஓய்வு:

தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வரும், இந்திய அணியின் சீனியர் வீரர்கள் சச்சின், ஜாகிர் கான், கேப்டன் தோனி ஆகியோருக்கு "டுவென்டி-20', ஒருநாள் போட்டிகளில் ஓய்வு தரப்பட்டுள்ளது. இவர்கள் டெஸ்ட் அணியில் இடம் பெறுவார்கள். காயம் காரணமாக சேவக், ஆஷிஸ் நெஹ்ரா இருவரும் தேர்வு செய்யப்படவில்லை.


புதிய கேப்டன்:

தோனி ஓய்வு காரணமாக, இந்திய அணியின் கேப்டனாக காம்பிர் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை, 5-0 என்று கைப்பற்றி அசத்தியுள்ளார். துணைக்கேப்டன் பொறுப்பு ரெய்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. "ஆல் ரவுண்டர்' இடத்தை யூசுப் பதான் தட்டிச் சென்றார்.


பத்ரிநாத் அபாரம்:

"மிடில் ஆர்டருக்கு' பத்ரிநாத், ராயுடுவுக்கு இடையே கடும் போட்டி இருந்தது. ஆனால், அனுபவம் மற்றும் கடந்த ரஞ்சிக் கோப்பை சீசனில் (922 ரன்கள்) அசத்தியதன் காரணமாக, வாய்ப்பு பத்ரிநாத்துக்கு சென்றது. ரோகித் சர்மாவும் மீண்டும் அணிக்கு திரும்பினார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக பார்த்திவ் படேல், சகா ஆகியோர் மறுபடியும் தேர்வு செய்யப்பட்டனர்.


ஸ்ரீசாந்த் "அவுட்':

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில், உலக கோப்பை தொடரில் இடம் பெறாத பிரவீண் குமார், மீண்டும் வாய்ப்பு பெற்றார். இவருடன் வினய் குமார், முனாப் படேலும், டெக்கான் அணிக்காக ஐ.பி.எல்., தொடரில் அசத்தி வரும் இஷாந்த் சர்மாவும் அணியில் இடம் பெற்றனர். அதேநேரம், தற்போதைய "டுவென்டி-20' தொடரில் ஏமாற்றி வரும் ஸ்ரீசாந்த், அணியில் இருந்து நீக்கப்பட்டார்.


மிஸ்ராவுக்கு வாய்ப்பு:

சுழல் பந்து வீச்சில் ஹர்பஜன் சிங், அஷ்வின் ஜோடியுடன் அமித் மிஸ்ரா இணைந்தார். உலக கோப்பை அணியில் இடம் பெற்ற பியுஸ் சாவ்லா, பஞ்சாப் அணியின் ராகுல் சர்மா, இக்பால் அப்துல்லா ஆகியோருக்கு இம்முறை அணியில் இடம் கிடைக்கவில்லை. இதேபோல, அதிரடி வல்தாட்டி, மனோஜ் திவாரிக்கும் ஏமாற்றமே கிடைத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி குறித்து தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,"" சீனியர்கள் இல்லாத நிலையில், சமபலத்துடன் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என நினைக்கின்றேன். இவர்கள் சிறப்பாக செயல்பட்டு, வெற்றி நடையை தொடர்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

---

16 பேர் கொண்ட இந்திய அணி:

காம்பிர் (கேப்டன்), ரெய்னா (துணைக் கேப்டன்), பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், பத்ரிநாத், ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங், அஷ்வின், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, முனாப் படேல், வினய் குமார், யூசுப் பதான், அமித் மிஸ்ரா, சகா.

டி.ஆர்.எஸ்., முறை: பி.சி.சி.ஐ., எதிர்ப்பு

அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும், டி.ஆர்.எஸ்., முறையை அறிமுகம் செய்யும், ஐ.சி.சி.,யின் முடிவுக்கு, பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2009 முதல் டெஸ்ட் போட்டிகளில் அம்பயர் தீர்ப்பை மறு பரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) முறை, அந்தந்த நாடுகளின் விருப்பத்துக்கு ஏற்ப நடைமுறையில் உள்ளது. இதுவரை 31 போட்டிகளில்
பயன் படுத்தப்பட்ட இதில், ஒவ்வொரு இன்னிங்சிலும் தலா 2 முறை, அப்பீல் செய்யலாம்.

இதனிடையே, டி.ஆர்.எஸ்., முறையை, எதிர்வரும் காலங்களில் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் பயன்படுத்த, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) முடிவு செய்துள்ளது.

தவிர, ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளிலும், டி.ஆர்.எஸ்., முறையை, ஐ.சி.சி., அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால் இதில் தலா ஒரு முறை மட்டுமே அப்பீல் செய்யலாம்.

ஐ.சி.சி.,யின் இம்முடிவுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வழக்கம் போல எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" நாங்கள் எப்போதுமே டி.ஆர்.எஸ்., முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

ஐ.சி.சி.,யின் தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் எங்கள் எதிர்ப்பை மீண்டும் தெரிவிப்போம்,'' என்றார்.

சதையை பார்க்கும் கிரிக்கெட் வீரர்கள்

ஐ.பி.எல்., பார்ட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் தவறாக நடந்து கொள்கின்றனர். நடனப் பெண்களின் சதையை தான் பார்க்கின்றனர்,'' என, தென் ஆப்ரிக்க நடனப் பெண் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஐ.பி.எல்., தொடரில் பார்வையாளர்களை மகிழ்விக்க, அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் மும்பை அணிக்கான போட்டிகளில் நடனம் ஆடுவதற்காக தென் ஆப்ரிக்காவில் இருந்து 40 பெண்கள், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இரவில் போட்டிகள் முடிந்ததும் நடக்கும் பார்ட்டிகளில், நடக்கும் சம்பவங்கள் குறித்து கேபிரியல்லா (22) என்ற நடனப் பெண், சமீபத்தில் வெளியிட்ட "டுவிட்டர்' செய்தியில்,"" கிரிக்கெட் வீரர்கள் தகாத முறையிலும், அருவெறுக்கத் தக்கவகையிலும் நடந்து கொள்கின்றனர்.

இவர்கள் எங்களை பெண்களாக பார்ப்பதில்லை. வெறும் சதைப் பிண்டமாகத்தான் பார்க்கின்றனர்,'' என தெரிவித்து இருந்தார்.

இப்படி "உண்மையை' வெளியிட்டதால், கடந்த வாரம் இவர் மும்பை அணியின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து கேபிரியல்லா கூறியது:

பொதுவாக பார்ட்டிகளின் போது, அனைத்து இடங்களிலும் காமிராக்கள் பொருத்தப்பட்டு, வீரர்கள் என்ன செய்கின்றனர் என்று கண்காணிக்கப்படுவார்கள். அப்படி இருந்தும் அவர்கள், எங்களை சுற்றித் தான் நின்று கொள்வார்கள். அவர்களை விட்டு நாங்கள் எங்கும் செல்ல முடியாது.

மொத்தத்தில் எங்களை மாமிச பிண்டமாகத்தான் நடத்துகின்றனர். இதில் எந்தவொரு குறிப்பிட்ட வீரரையும் தெரிவிக்க விரும்பவில்லை. நாங்கள் சந்தித்த இந்திய வீரர்களில் தோனி, ரோகித் சர்மா இருவரும் எப்போதும், நாகரீகமுடன் நடந்து கொள்வார்கள்.

இதைத்தான் எனது "டுவிட்டரில்' தெரிவித்தேன். ஆனால், என்னை தொடரில் இருந்து நீக்கிவிட்டனர். உண்மையில் என்ன தவறு செய்தேன் என்றே தெரியவில்லை. ஏதோ மிகப்பெரிய தவறு செய்த கிரிமினல் போல என்னை நடத்தினர். எனது தரப்பு நியாயம் என்ன என்பதை சொல்வதற்கு கூட வாய்ப்புத் தரவில்லை.

இவ்வாறு கேபிரியல்லா தெரிவித்தார்.

புனே அணிக்கு கைகொடுப்பாரா கங்குலி

ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கவுள்ள மற்றொரு லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, தோல்வியின் பிடியில் சிக்கியுள்ள புனே அணிக்கு கைகொடுக்க, முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி காத்திருக்கிறார்.

மொகாலியில், இன்று நடக்கவுள்ள ஐ.பி.எல்., தொடருக்கான மற்றொரு லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, யுவராஜ் சிங் வழிநடத்தும் புனே வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது.


கங்குலி எதிர்பார்ப்பு:

புனே அணி, இதுவரை விளையாடியுள்ள ஒன்பது லீக் போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி கண்டது. தொடர்ந்து ஏழு போட்டிகளில் தோல்வி கண்ட யுவராஜ் அணி, இன்று கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குகிறது. நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட, முன்னாள் கோல்கட்டா அணி கேப்டன் சவுரவ் கங்குலி, ஒருவழியாக புனே அணியில் இடம் பிடித்தார்.

அனுபவ வீரரான இவர், ஐ.பி.எல்., அரங்கில் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். எனவே தொடர் தோல்விகளால் துவண்டுள்ள புனே அணிக்கு, இன்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கைகொடுப்பார் என இவர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இவரை தவிர ஜெசி ரைடர், மனீஷ் பாண்டே, ஸ்மித், ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங் உள்ளிட்டோர் முழுத்திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பதிவு செய்து எழுச்சி பெறலாம்.


ராகுல் அபாரம்:

புனே அணியின் பந்துவீச்சு சிறப்பாக இல்லை. மும்பை அணிக்கு எதிராக சுழலில் அசத்திய ராகுல் சர்மா, இன்றும் கைகொடுக்கலாம். இவருக்கு யுவராஜ் சிங் உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேகத்தில் அல்போன்சா தாமஸ் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இவருடன் இணைந்து ஸ்ரீகாந்த் வாக், ஜெரோம் டெய்லர், ஜெசி ரைடர் உள்ளிட்டோர் சாதிக்கும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.


கில்கிறிஸ்ட் நம்பிக்கை:

பஞ்சாப் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட் சூப்பர் துவக்கம் அளிப்பது பேட்டிங்கில் பலம் சேர்க்கிறது. சில போட்டிகளில் அதிரடி காட்டிய வல்தாட்டி, அதன்பின் பெரிய அளவில் சாதிக்கவில்லை. எனவே இவர் இன்று எழுச்சி பெறும் பட்சத்தில், இமாலய இலக்கை அடைய வழிவகுக்கலாம்.

"சூப்பர் பார்மில்' உள்ள மார்ஷ், இன்றும் தனது அதிரடியை தொடரலாம். டேவிட் ஹசி, தினேஷ் கார்த்திக், அபிஷேக் நாயர் உள்ளிட்டோர் "மிடில்-ஆர்டரில்' கைகொடுக்கும் பட்சத்தில், நல்ல ஸ்கோரை பெறலாம்.


சாவ்லா துல்லியம்:

பஞ்சாப் அணியின் சுழற்பந்துவீச்சில் பியுஸ் சாவ்லா சிறப்பாக செயல்பட்டு வருவது பலம். இவருக்கு பார்கவ் பட், பிபுல் சர்மா உள்ளிட்ட இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேகத்தில் பிரவீண் குமார் நம்பிக்கை அளிக்கிறார். இருப்பினும் இவர், விக்கெட் வேட்டை நடத்தினால் நல்லது. ரேயான் ஹாரிஸ், வல்தாட்டி உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்களும் துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில் எளிதில் வெற்றி பெறலாம்.


பதிலடி வாய்ப்பு:

சமீபத்தில் மும்பையில் நடந்த போட்டியில், புனே வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இன்று பஞ்சாப் வீரர்கள் எழுச்சி பெறும் பட்சத்தில், இத்தோல்விக்கு பதிலடி கொடுக்கலாம்.

மே 13-ல் இந்திய அணி தேர்வு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடவுள்ள இந்திய அணியின் தேர்வு மே 13-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி தலைமையிலான தேர்வுக்குழுவினர் இந்திய அணியை தேர்வு செய்யவுள்ளனர். டெஸ்ட் போட்டிக்கான அணி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் மே 28-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 1-ம் தேதி இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டு செல்கிறது. அங்கு ஒரு இருபது ஓவர் ஆட்டத்திலும், 5 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடுகிறது.

இருபது ஓவர் ஆட்டம் ஜுன் 4-ம் தேதி நடைபெறுகிறது. அதன்பிறகு ஜூன் 6 முதல் 16 வரை ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அதன்பிறகு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

மூத்த வீரர்கள் இடம்பெறுவார்களா? உலகக் கோப்பை, அதைத் தொடர்ந்து ஐபிஎல் ஆகியவற்றில் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் தங்களுக்கு ஓய்வுதேவை என்று இந்திய அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட மூத்த வீரர்கள் கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேசமயம் மூத்த வீரர்கள் இடம்பெறாத பட்சத்தில் ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைந்துவிடும்.மேலும் விளம்பர வருவாய் குறைந்துவிடும் என்பதால் இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியம் மிகவும் கவனத்துடன் செயல்படும் என்று தெரிகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: டெல்லி அணியை கொச்சி வீழ்த்தியது

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்- கொச்சி டஸ்கர்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வேணுகோபால் ராவ் 36 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களம் இறங்கிய கொச்சி அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாத்தீவ் பட்டேல் 37 ரன்கள் (31 பந்து, 5 பவுண்டரி), ஹாட்ஜ் 24 ரன்கள் (13 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மெக்குல்லம் 19 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் குவித்தார்.