பொலிவிழக்கும் சிறப்பு விளையாட்டு விடுதி!

சென்னையில் இயங்கி வரும் சிறப்பு விளையாட்டு விடுதியின் (சிறப்பு பயிற்சி மையம்) சமீபகால போக்கு, அதன் இலக்கிலிருந்து விலகுவதாகத் தெரிகிறது.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி) கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விளையாட்டுப் பள்ளிகளும், விளையாட்டு விடுதிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை விளையாட்டில் ஈடுபடுத்தி, செம்மைப்படுத்துவதற்காக மாவட்ட விளையாட்டு மன்றத்தின் கட்டுப்பாட்டில் இந்த விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

மாணவ, மாணவியர் "பிளஸ்-2' படிப்பை முடித்ததும், சர்வதேச புகழையும் அடைய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட திட்டம்தான் சிறப்பு விளையாட்டு விடுதி (நல்ர்ழ்ற்ள் ஏர்ள்ற்ங்ப் ர்ச் உஷ்ஸ்ரீங்ப்ப்ங்ய்ஸ்ரீஹ்). தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த விடுதி உள்ளது.

வாலிபால், கூடைப்பந்து, நீச்சல், தட களம், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளில் சுமார் 60 வீரர்கள், என்.ஐ.எஸ். தகுதிபெற்ற பயிற்சியாளர்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர். ஆதலால் இந்த சிறப்பு விளையாட்டு விடுதியில் சேருவதற்கு கடும் போட்டி நிலவும். ராணுவத்துக்கு ஆள் எடுப்பது போன்று ஒரு காலத்தில் தேர்வுப் போட்டிக்கு கூட்டம் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தேர்வுப் போட்டிக்கு வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இந்த ஆண்டு வாலிபால் விளையாட்டுக்கும் வலுவான வீரர்கள் காணப்படவில்லை.

சோழிங்கநல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி அகாதெமி போன்ற தனியார் பயிற்சி மையங்களின் வருகை அதற்கு காரணமாகக் கூறப்பட்டாலும், அவர்கள் செய்து கொடுக்கும் வசதிகளை ஏன் அரசால் செய்ய முடியாது என்ற நியாயமான கேள்வியும் எழுகிறது.

சிறப்பு விளையாட்டு விடுதியை எதிர்த்து விளையாடுவது என்றால் தொழில்முறை வீரர்களைக் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, ரயில்வே போன்றவைகளுக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும். அந்த அளவுக்கு இளம் வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்துவர். அதனால் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் புகழைப் பெற்றது. ஆனால் சமீபகாலமாக அந்த சிறப்பை தேடவேண்டியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டபோது ஒதுக்கப்பட்ட செலவினமே ஏறக்குறைய தற்போதும் இருந்துவருகிறது. அதைக் கவனிக்கும் அதிகாரிகள் இத் திட்டத்தை மண் தோண்டி புதைக்கப் பார்க்கிறார்களா அல்லது அரசு அவர்களின் ஆலோசனைக்கு செவி சாய்ப்பதில்லையா எனத் தெரியவில்லை. ஆனால் நாள்தோறும் வளர்ந்துவரும் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப திட்டங்களை செயல்படுத்துவது அவசியம்.

பல்வேறு வகையில் முக்கியத்துவம் பெற்ற சிறப்பு விளையாட்டு விடுதிக்கென தனியாகக் கட்டடம் இல்லாதது மற்றொரு பெரிய குறை. நேரு ஸ்டேடியத்தின் சுற்றுப் பிரகாரத்தின் ஓரம் சாரத்தில் வீரர்களுக்கான தங்கும் அறைகளும், உணவு விடுதியும் காற்றோட்டமில்லாமல் உள்ளன. நாளுக்கு நாள் ஆற்றலை அதிகப்படுத்தும்விதமான உணவுமுறை கிடையாது எனவும் தெரியவருகிறது.

தனியாக அதிகாரி இல்லை: நேரு ஸ்டேடியத்தில் இயங்கிவரும் சிறப்பு விளையாட்டு விடுதிக்கு தனியாக அதிகாரி கிடையாது. நேரு ஸ்டேடிய அதிகாரியே அதையும் கவனித்து வருகிறார். இது மிகப்பெரிய குறை.

இதற்காக தனியாக ஓர் அதிகாரி தேவையில்லை எனக் கருதும் எஸ்.டி.ஏ.டி., சத்துவாச்சாரியில் (வேலூர்) விளையாட்டு விடுதி அல்லாத பளுதூக்குதல் பயிற்சி மையத்துக்கென ஓர் அதிகாரியை நியமித்திருப்பது ஏன் எனத் தெரியவில்லை.

மாநில அளவில் மட்டுமல்லாது, தேசிய அளவிலும் அந்த மையத்தால் புகழ் கிடைக்கும் அத் திட்டத்துக்கு அரசு ஆண்டொன்றுக்கு செலவிடும் தொகை சுமார் ரூ. 1.5 லட்சம்தான். ஆனால் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியின் சம்பளமோ ஆண்டொன்றுக்கு ரூ. 3 லட்சத்துக்கும் மேல். இதுபோன்ற காரணங்களாலேயே சிறப்பு விளையாட்டு விடுதி திட்டங்கள் அதன் பாதையிலிருந்து விலகிச் செல்கின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது.

0 comments:

Post a Comment