டிராவிட்டுக்கு மீண்டும் வாய்ப்பு

இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணி, இன்று சென்னையில் தேர்வு செய்யப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பெற காத்திருக்கிறார் முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்பு இந்திய வீரர்கள் 2 மாதங்கள் நீண்ட ஓய்வில் இருந்து வந்தனர். இந்நிலையில் செப்டம்பரில் நடக்கவுள்ள இலங்கைக்கு எதிரான முத்தரப்பு தொடர் மற்றும் தென் ஆப்ரிக்காவில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியினர் தேர்வு இன்று சென்னையில் நடக்கிறது. தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையிலான குழு, இன்று அணியை அறிவிக்கிறது. இதற்கான உடற்தகுதி தேர்வு டில்லி, மும்பையில் பயிற்சியாளர் கிறிஸ்டன் மேற்பார்வையில் கடந்த சில நாட்களாக நடந்தது.

சேவக் சந்தேகம்: ஐ.பி.எல்., தொடரின் போது காயமடைந்த அதிரடி துவக்க ஆட்டக்காரர் சேவக், உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளார். இருப்பினும் 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்படுவது சந்தேகமே. ஏனெனில் காயம் குணமடைந்து தற்போதுதான் லேசான எடைகளை கைகளில் தூக்கி பயிற்சி செய்து வருகிறார். அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு பின் தான் பேட்டிங் பயிற்சிக்கு தயாராவார். எப்படியும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குள் மீண்டு விடுவார் என தெரிகிறது.

சச்சின் திரும்புகிறார்?: சேவக் இல்லாத நிலையில் சீனியர் வீரர் டிராவிட்டுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. ஐ.பி.எல்., தொடருக்கு பின்பு ஓய்வில் இருந்த சச்சின் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். இவர் காம்பிருடன் சேர்ந்து துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவார். கட்டை விரல் காயத்தினால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலந்து கொள்ளாத சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி, யுவராஜ் சிங் மற்றும் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பெறலாம். சுழலுக்கு ஹர்பஜன் சிங்கும், பிரக்யான் ஓஜாவும் தேர்வு பெறலாம். யூசுப் பதான் தனது இடத்தை தக்க வைப்பார். ரவிந்திர ஜடேஜா, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்காத அபிஷேக் தேர்வு குறித்து இன்று தெரியும்.

ஜாகிர் கான் இல்லை: ஜாகிர் கான் இல்லாத நிலையில் பவுலிங் பிரிவு பலவீனமடைந்துள்ளது போல தோன்றுகிறது. இந்த இடத்தில் இஷாந்த் சர்மா, ஆர்.பி.சிங், ஆஷிஸ் நெஹ்ரா தேர்வாகலாம். நான்காவதாக பிரவீண் குமாருக்கு அல்லது முனாப் படேலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

டிராவிட் உறுதி?: அணியின் தேர்வு குறித்து தேர்வுக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,"" வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வீரர்கள் செய்த சாதனைகளுக்கு மட்டுமன்றி, உடற்தகுதிக்கும் கட்டாயம் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதில் மாற்றமில்லை. இது கடந்த தொடரில் பங்கேற்காத வீரர்களுக்கும் பொருந்தும். சேவக் காயம் குணமடைந்து, எந்த போட்டியிலும் இன்னும் பங்கேற்கவில்லை. தவிர, அவர் உடற் தகுதி பெறவில்லை. அணியில் தற்போதுள்ள சில இளம் வீரர்கள் "ஷாட் பிட்ச்' பந்துகளை சந்திக்க திணறுகிறார்கள். இந்நிலையில், டிராவிட் இதில் கைதேர்ந்தவர் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,'' என்றார். இன்று காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு கிரிகெட் சங்கத்தில் நடக்கும் கூட்டத்தில் இந்திய கிரிகெட் போர்டின் தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த், கேப்டன் தோனி மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் வீரர்கள் தேர்ந்தெடுக்கப் பட உள்ளனர்.

பெங்களூருவில் பயிற்சி: தேர்வாகும் வீரர்களுக்கு வரும் ஆக. 27 முதல் 4 நாட்களுக்கு பெங் களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பிசியோதெரபி மற்றும் பேட்டிங், பவுலிங் பயிற்சிகள் கொடுக்கப்படும். பின்பு ஆக. 30 ல் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் நடத்தப்பட உள்ள கார்ப்பரேட் டிராபி கிரிக்கெட் தொடரில் வீரர்கள் கலந்து கொள்வர்.

எதிர்பார்க்கப்படும் அணி: தோனி (கேப்டன்), காம்பிர், டிராவிட், சச்சின், யுவராஜ், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன், யூசுப் பதான், இஷாந்த் சர்மா, ஆர்.பி. சிங், ஆஷிஸ் நெஹ்ரா, சுதீப் தியாகி அல்லது பிரவீண் குமார், விராத் கோஹ்லி அல்லது அபிஷேக், அமித் மிஸ்ரா அல்லது பிரக்யான் ஓஜா ஆகிய 15 வீரர்கள் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது.

0 comments:

Post a Comment