புது சர்ச்சை கிளப்பினார் தோனி


இந்திய கேப்டன் தோனியின்  வேண்டுகோளுக்கு ஒத்துழைக்காத ஈடன் கார்டன் ஆடுகள பராமரிப்பாளர் மாற்றப்பட்டார். இதனால், புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

இங்கிலாந்து தொடரில் ஆடுகளம் குறித்து தொடர்ந்து பிரச்னை ஏற்படுகிறது. ஆமதாபாத் டெஸ்டில் "சுழலுக்கு' ஆடுகளம் ஒத்துழைக்க, இந்திய அணி வெற்றி பெற்றது. 

ஆனாலும், ஆடுகளம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என தோனி புகார் கூறினார். மும்பை போட்டிக்கு, பந்து முதல் நாளில் இருந்தே சுழலுமாறு ஆடுகளம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார். இப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. 

இருப்பினும், தனது நிலையை மாற்றிக் கொள்ளாத தோனி, கோல்கட்டாவில் நடக்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கும், முதல் நாளில் இருந்தே சுழலுக்கு ஏற்ற ஆடுகளத்தை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இதற்கு ஈடன் கார்டன் ஆடுகள தயாரிப்பாளர் பிரபிர் முகர்ஜி, 83, "எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுக்க வேண்டும்,' எனக் கேட்டுள்ளார். 

தோனிக்கு ஆதரவு:

இவ்விஷயத்தில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), தோனிக்கு ஆதரவாக களமிறங்கியது. பிரபிர் முகர்ஜிக்குப் பதில், கிழக்கு மண்டல தயாரிப்பாளர் ஆஷிஸ் பவுமிக்கை ஆடுகள பரமாரிப்பாளராக நியமிக்குமாறு, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தை (சி.ஏ.பி.,), கேட்டுக்கொண்டது.

திரிபுரா கிரிக்கெட் சங்க (டி.சி.ஏ.,) செயலர் அரிந்தம் கங்குலி கூறுகையில்,"" பி.சி.சி.ஐ., உத்தரவுப்படி பவுமிக் சென்றுள்ளார். மற்றபடி, முகர்ஜிக்குப் பதில் இவர் நியமிக்கப்படுகிறாரா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை,'' என்றார்.

வழக்கமான ஒன்று:

சி.ஏ.பி., இணைச்செயலர் சுஜான் முகர்ஜி கூறுகையில்,"" ஒவ்வொரு போட்டி நடக்கும் முன்பும், ஆடுகளம் எப்படி உள்ளது என்பதை பார்க்க, மற்றவர்கள் வருவது வழக்கமானது தான். பிரபிர் முகர்ஜி ஆடுகள தயாரிப்பாளராக தொடர்கிறார். உள்ளூர் அணிக்கு சாதகமாகத் தான் ஆடுகளம் அமைக்கப்படும்,'' என்றார். 

தவறான செய்தி:

பி.சி.சி.ஐ., துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" அனைத்து ஆடுகள தயாரிப்பாளர்களும் சுதந்திரமாக பணி செய்கின்றனர். இதில் தோனி தலையிடுகிறார் என்பது தவறானது. யாருடைய அறிவுரைப்படியும் எந்த முடிவும் எடுக்கத் தேவையில்லை. பி.சி.சி.ஐ., மைதான மற்றும் ஆடுகள கமிட்டி இதுகுறித்து முடிவு செய்யும்,'' என்றார்.

மவுனம் கலைப்பாரா சச்சின்


ஓய்வு உள்ளிட்ட எதிர்கால திட்டம் குறித்து சச்சின் விரைவில் முடிவு எடுக்க வேண்டும்,'' என, முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்தார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 39. சதத்தில் சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் படைத்த இவர், சமீபகாலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது "பார்ம்' குறித்து முன்னாள் வீரர்கள் சிலர் விமர்ச்சனம் செய்து வருகின்றனர்.

முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கூறியது: சச்சினின் சமீபத்திய "பார்ம்' கவலை அளிக்கிறது. இதனால் இவர், நிறைய விமர்சனங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காண இரண்டு வழிகள் உள்ளன. 

ஓய்வு உள்ளிட்ட எதிர்கால திட்டம் குறித்து இவரிடம், தேர்வுக்குழு உறுப்பினர்கள் பேச முன்வர வேண்டும் அல்லது சச்சின் மவுனத்தை கலைக்க வேண்டும். எதிர்கால திட்டம் குறித்து சச்சின் எதுவும் வெளிப்படையாக தெரிவிக்காததால், தேர்வுக் குழுவினரும் அமைதியாக உள்ளனர். சச்சினிடம் உள்ள குறைகளை நேரடியாக தெரிவிக்க வேண்டும்.

மும்பை டெஸ்டில், இந்திய அணி தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. இது மோசமான தோல்வியாகவே கருதப்படும். சொந்த மண்ணில் திறமையான வீரர்களை கொண்டு வெற்றி பெற முடியாதது ஏமாற்றமான விஷயம். 

சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் தோனியின் செயல்பாடு மோசமாக உள்ளது. ஒரு அணியின் வெற்றியில் கேப்டனின் பங்களிப்பு முக்கியமாக கருதப்படுவது போல, தோல்விக்கும் அவர் தான் பொறுப்பேற்க வேண்டும். 

விரைவில் இவர், கேப்டன் பதவியில் இருந்து விலகி, பேட்டிங் மற்றும் கீப்பர் பணியில் கவனம் செலுத்தினால் நல்லது.

மும்பை டெஸ்டில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, மீதமுள்ள இரண்டு டெஸ்டில் முழுத்திறமையை வெளிப்படுத்தி இந்திய வீரர்கள் சாதிப்பார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

டிராவிட்டுடன் என்னை ஒப்பீடுவது தவறு - புஜாரா


இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் புஜாரா. இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் அவர் சிறப்பாக விளையாடி சதம் (135 ரன்) அடித்தார். 

ஏற்கனவே அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் புஜாரா இரட்டை சதம் (206 ரன்) அடித்து இருந்தார். 7 டெஸ்டில் விளையாடிய அவர் 3 செஞ்சூரி அடித்து உள்ளார். தூண் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பிறகு அவரது இடமான 3-வது வரிசையில்தான் புஜாரா ஆடுகிறார். 

டிராவிட் ஓய்வுக்கு பிறகே அவர் இந்த 3 செஞ்சூரியையும் அடித்துள்ளார். புஜாரா நிலைத்து நின்று ஆடுவதால் அவரை டிராவிட்டுடன் ஏற்கனவே ஒப்பிடப்பட்டு வந்தனர். புஜாராவை இப்போதே டிராவிட்டுடன் ஓப்பீட வேண்டாம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடந்த வாரம் கருத்து தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் டிராவிட்டுடன் என்னை ஒப்பீடுவது தவறு என்று புஜாரா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

டிராவிட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். நான் இப்போது தான் ஆட்டத்தை தொடங்கியுள்ளேன். இதனால் அவருடன் என்னை ஒப்பிடுவது தவறானது. கூடுதல் நெருக்கடியை நான் விரும்பவில்லை. நீண்டகாலமாக விளையாடும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. 

அகமதாபாத்தில் அடித்த இரட்டை சதத்தைவிட மும்பையில் அடித்த சதமே சிறந்தது. இரட்டை சதத்தைவிட இது மிகுந்த திருப்தி அளிக்கிறது. இக்கட்டான நிலையில் இந்த சதத்தை அடித்துள்ளேன். எனது ஆட்டம் மூலம் இந்திய அணி ரன் சேர்க்க முடிந்தது. இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. இதனால் இக்கட்டான நிலையில் அடித்த இந்த சதமே திருப்தி அளிக்கிறது. 

இவ்வாறு புஜாரா கூறியுள்ளார்.

தோல்வியை நோக்கி இந்தியா


இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை நோக்கி செல்கிறது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. 

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் மும்பையில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்திருந்தது. 


குக் சதம்:

முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக், பீட்டர்சன் நல்ல துவக்கம் கொடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குக் டெஸ்ட் அரங்கில் 22வது சதம் கடந்தார். இவர் 122 ரன்கள் எடுத்த போது அஷ்வின் "சுழலில் சிக்கினார். 

திர் முனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பீட்டர்சன்(186) ஓஜா பந்தில் வெளியேறினார். பின் வந்த பேர்ஸ்டவ் (9) ஏமாற்றினார். பின்வரிசையில் பிரையர் (21), பிராட்(6), ஆண்டர்சன் (2), பனேசர் (4) அடுத்தடுத்து அவுட்டாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 413 ரன்களுக்கு "ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 86 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்திய அணிக்கு ஓஜா 5 விக்கெட் வீழ்த்தினார்.

பனேசர் அசத்தல்:

பின் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு சேவக் (9) நிலைக்கவில்லை. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் விளையாடினர். புஜாரா (6), சச்சின்(8), கோஹ்லி(7), தோனி (6), யுவராஜ்(8) ஏமாற்றினர். மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில்,இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.

இங்கிலாந்து அணிக்கு பனேசர் 5 விக்கெட் கைப்பற்றினார். தற்போது 31 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி எதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே தோல்வியில் இருந்து தப்ப முடியும்.

தொடர்ந்து சொதப்பும் சச்சின்


ராஜ்யசபா எம்.பி., ஆகிவிட்ட சச்சின், கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்புகிறார். நேற்றும் "போல்டான' இவர், சொந்த ஊர் ரசிகர்களை ஏமாற்றினார்.

 கடந்த 23 ஆண்டுகளாக விளையாடி வரும் சச்சின், சமீப காலமாக ரன் எடுக்க திணறி வருகிறார். கடைசியாக விளையாடிய 6 டெஸ்டில், 9 இன்னிங்சில் 15, 8, 25, 13, 19, 17, 27, 13, 8 என, மொத்தம் 145 ரன்கள் தான் எடுத்துள்ளார். இதில் நான்கு முறை போல்டாகினார்.

தவிர, 192வது டெஸ்டில் விளையாடும் இவர், 24வது முறையாக இடதுகை சுழற்பந்து வீச்சாளரிடம் வீழ்ந்துள்ளார். அதிகபட்சமாக நியூசிலாந்தின் வெட்டோரியிடம் ஐந்து முறை அவுட்டானார்.

 தென் ஆப்ரிக்காவின் பால் ஹாரிஸ், ஜிம்பாப்வேயின் ரே பிரைஸ் இருவரும் தலா 3 முறை அவுட்டாகினர். இங்கிலாந்தின் பனேசர், நாக்பூர் (2006), லார்ட்ஸ் (2007) டெஸ்டுக்குப் பின், இப்போது (மும்பை) சச்சினை, மூன்றாவது முறையாக வெளியேற்றியுள்ளார்.

இதில் பெரும்பாலானவை "கேட்ச்' தான். ஐந்து முறை எல்.பி.டபிள்யு., மற்றும் நான்கு முறை போல்டாகியுள்ளார். இங்கிலாந்தின் ஆஸ்லே கைல்ஸ் பந்தில் மட்டும், ஒரு முறை "ஸ்டம்பிங்' ஆனார்.

புஜாரா அசத்தல் சதம் - 100வது டெஸ்டில் சேவக் ஏமாற்றம்


இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் காம்பிர், சேவக்,சச்சின், போன்ற துவக்க வீரர்கள் சொதப்பினர். புஜாரா சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் மும்பையில் இன்று துவங்கியது. இதில் "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி "பேட்டிங் தேர்வு செய்தார். 

இந்திய அணியில் காயம் காரணமாக உமேஷ் யாதவ் பங்கேற்கவில்லை. இதையடுத்து மூன்றாவது "சுழற்பந்து வீச்சாளராக நீண்ட இடைவேளைக்கு பின் ஹர்பஜன் சிங் இடம் பிடித்தார். 

இங்கிலாந்து அணியில் சொந்த காரணங்களுக்காக பெல் தாயகம் திரும்பியதால் ஜானி பேர்ஸ்டோவ் இடம் பிடித்தார். பிரஸ்னனுக்கு பதிலாக "சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் வாய்ப்பு பெற்றார்.


காம்பிர் ஏமாற்றம்:

முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு சேவக், காம்பிர் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஆண்டர்சன் வீசிய போட்டியின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த காம்பிர் (4), அடுத்த பந்தில் அவுட்டானார். 

100வது டெஸ்டில் சதம் அடிக்கும் கனவுடன் களமிறங்கிய சேவக் (30) பனேசர் "சுழலில் போல்டானார். பின் வந்த சச்சினும் (8) பனேசரிடம் சிக்கினார்.

கோஹ்லி (19) நிலைக்கவில்லை. யுவராஜ் "டக் அவுட்டானார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் தூணாக நின்ற புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 3வது சதம் கடந்தார். தோனி(29) அதிக நேரம் தாக்குபிடிக்கவில்லை. 

பின் புஜாராவிற்கு நல்ல "கம்பெனி கொடுத்த அஷ்வின், டெஸ்ட் அரங்கில் 2வது அரைசதம் கடந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா(114), அஷ்வின் (60) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஐ.பி.எல்., அமைப்புக்கு ஜாக்பாட்


அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, ஐ.பி.எல்., தொடருக்கான "டைட்டில் ஸ்பான்சர்' உரிமையை பெப்சி நிறுவனம் தட்டிச் சென்றது. இதற்காக ரூ. 396.8 கோடி வழங்குகிறது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், "டுவென்டி-20' போட்டிகள், கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. இதன் "டைட்டில் ஸ்பான்சராக' டி.எல்.எப்., (ரூ. 250 கோடி) நிறுவனம் இருந்தது. 

இதன் ஒப்பந்தத்தை புதுப்பிக்க, இந்திய கிரிக்கெட் போர்டு (ஐ.பி.எல்.,) அதிக தொகை எதிர்பார்த்தது. இதனால், டி.எல்.எப்., நிறுவனம் விலகியது. புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இதற்கான கடைசி நாளான நேற்று ஏர்டெல் (ரூ. 316 கோடி), பெப்சி என, இரு நிறுவனங்கள் மட்டும் உரிமை கோரின. இதில் அதிக தொகைக்கு (ரூ. 396.8 கோடி) ஏலம் கேட்ட பெப்சி, 2017ம் ஆண்டு வரையிலான "ஸ்பான்சர்ஷிப்' உரிமையை பெற்றது.

இதுகுறித்து ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" ஐ.பி.எல்., தொடர்பான எவ்வித ஏலமும், சிறப்பாகவே விற்பனை ஆகியுள்ளன. பெரும்பாலும் இரண்டு, மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாகத்தான் விற்றன. இது மீண்டும் நிரூபணம் ஆனது,'' என்றார்.

இதுகுறித்து பெப்சிகோ மார்கெட்டிங் தலைமை இயக்குனர் தீபிகா வாரியர் கூறுகையில்,"" கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் கிரிக்கெட்டுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இப்போது மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி. <உலகின் மற்ற எந்த விளையாட்டுகளையும் விட, ஐ.பி.எல்., சிறப்பானது,'' என்றார்.

ஜனவரியில் வீரர்கள் ஏலம்

 ஆறாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 2013, ஜனவரி 12ல் சென்னை அல்லது 8 நாட்கள் கழித்து கோல்கட்டாவில் நடக்கலாம் எனத் தெரிகிறது. 

மும்பை பயங்கரவாத தாக்குதல் காரணமாக, முதல் (2008) ஐ.பி.எல்., தொடருக்குப் பின், அடுத்த நான்கு ஆண்டுகள் பங்கேற்காத பாகிஸ்தான் வீரர்களுக்கு இம்முறை அனுமதி கிடைக்கலாம். 

நூறில் நூறு - சாதிப்பாரா சேவக்?


இந்திய வீரர் சேவக், தனது 100வது டெஸ்டில் சதம் அடிக்க வேண்டும்,'' என, கபில்தேவ், வெங்சர்க்கார் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக், 34. இதுவரை 99 டெஸ்டில் விளையாடியுள்ள இவர், 23 சதம், 32 அரைசதம் உட்பட 8488 ரன்கள் எடுத்துள்ளார். 

இவர், வரும் 23ம் தேதி மும்பையில் துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் களமிறங்கும் பட்சத்தில், 100வது டெஸ்டில் பங்கேற்பார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 117 ரன்கள் எடுத்து அசத்திய இவர், தனது 100வது டெஸ்டிலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், 100வது டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைக்கலாம்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கூறுகையில், ""சேவக் போல திறமையான இளம் வீரர்கள் நிறைய உருவாக வேண்டும். அப்போதுதான் டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்கள் கூட்டத்தை அதிகரிக்க முடியும். இவர், தனது 100வது டெஸ்டில் சதம் அடித்து சாதிக்க வேண்டும்,'' என்றார்.

முன்னாள் இந்திய கேப்டன் வெங்சர்க்கார் கூறுகையில், ""சேவக், 100வது டெஸ்டில் விளையாட இருப்பது புதிய மைல்கல். இவரது ரசிகர்களில் நானும் ஒருவன் எனக் கூறுவதில் பெருமை அடைகிறேன். 

இவர், தனது 100வது டெஸ்டில் நிச்சயம் சதம் அடிப்பார் என நம்புகிறேன். டிராவிட், லட்சுமண் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில், இவரது "பேட்டிங் ஸ்டைலை' மாற்றிக் கொள்ள தேவையில்லை,'' என்றார்.

சேவக் தனது முதல் டெஸ்டில் சதம்(105, எதிர், தென் ஆப்ரிக்கா, புளோம்போன்டீன், 2001) அடித்தார். இதே போல நூறாவது டெஸ்டிலும் சாதிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

சேவாக்-ன் 100-வது டெஸ்ட் போட்டி சதம்


இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரரான வீரேந்திர சேவாக், இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8448 ரன்கள் குவித்துள்ளார். 

கடைசியாக அகமதாபாத்தில் அவர் விளையாடிய 99-வது போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார். 

இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் 23-ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டி சேவாக்கிற்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். 

இந்த போட்டியில் சேவாக் சதம் அடிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கபில்தேவ், வெங்சர்க்கார் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

யுவராஜ்சிங் பற்றிய புத்தக வெளியீட்டு விழா மும்பையில் இன்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற கபில்தேவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘சேவாக் போன்ற அதிக வீரர்கள் அணியில் இருக்க வேண்டும். 

அவர் போன்ற வீரர்களால் டெஸ்ட் போட்டிக்கு அதிக ரசிகர்களை கொண்டு வர முடியும். எனவே, அவர் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும்’ என்றார். 

முன்னாள் தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் கேப்டனுமான திலிப் வெங்சர்க்கார் கூறும்போது, ‘நான் சேவாக்கின் மிகப்பெரிய ரசிகன். அவர் மிகச்சிறந்த வீரர். 

அவரது டெஸ்ட் போட்டி சாதனையைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். அது அவருக்கு மைல்கல்லாக அமைந்தது. அவர் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பார் என நம்புகிறேன்’ என்றார்.

இதற்கு முன்பு இந்திய வீரர்கள் 8 பேர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். 

அந்த வரிசையில் இப்போது சேவாக்கும் இணைய உள்ளார். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சேவாக், 8448 ரன்கள் குவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஒலிம்பிக் சங்கம் கண்டனம்


இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்டில், மைதானத்தில் இருந்து புகைப்படங்களை எடுக்க கெட்டி இமேஜஸ், ஆக்சன் இமேஜஸ் மற்றும் சில இந்திய ஏஜென்சிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்து விட்டது. 

இதை கண்டித்து ஏ.எப்.பி., ராய்ட்டர்ஸ், ஏ.பி., போன்ற சர்வதேச செய்தி மற்றும் புகைப்பட நிறுவனங்கள் இந்த போட்டியை புறக்கணித்துள்ளன. கிரிக்கெட் இணையதளமான ஈ.எஸ்.பி.என்-கிரிக் இன்போவும் இந்த டெஸ்ட் தொடர்பான நேரடி படங்களை வெளியிடவில்லை. 

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.ஏ.சியின் பத்திரிக்கை பிரிவு சேர்மன் கெவான் கோஸ்பர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவு ஐ.ஏ.சி.க்கு கடும் அதிருப்தி அளிக்கிறது. 

விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளை வெளியிடும் ஊடக சுதந்திரத்தின் மீதான நேரடி தாக்குதலாக இதனை கருதுகிறோம். உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்களையும் இது அவமதிப்பதாகும். இந்த பிரச்சினையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிடும் என்று நம்புகிறோம் என்றார்.

பிப்ரவரியில் இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்


அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

இப் போட்டிகள் கான்பூர், சென்னை, தில்லி, மொஹாலி ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன என்று பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ரத்னாகர் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இதேபோல் பயிற்சிப் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் இடம்பெறவில்லை.

எனினும் ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணம் குறித்த முழு விவரம், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான தொடருக்குப் பிறகே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான தொடர் பிப்ரவரி 13 ஆம் தேதி நிறைவடைகிறது.

இரட்டை சதம் அடித்த புஜாராவுக்கு கபில்தேவ் பாராட்டு


இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் புஜாரா இரட்டை சதம் அடித்தார். 

அவர் 513 நிமிடங்கள் களத்தில் நின்று 389 பந்துகளில் 21 பவுண்டரியுடன் 206 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தனது 6-வது டெஸ்டில் புஜாரா இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். 

டெஸ்டில் அவரது 2-வது சதம் ஆகும். கடந்த ஆகஸ்ட் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக புஜாரா தனது முதல் சதத்தை (159 ரன்) அடித்து இருந்தார். 

இரட்டை சதம் அடித்த புஜாராவை இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

இரட்டை சதம் அடித்த புஜாராவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவரை நான் பாராட்டுகிறேன். அதற்காக புஜாராவை டிராவிட்டுடன் ஒப்பிட வேண்டாம். டிராவிட் 15 ஆண்டுகள் விளையாடி உள்ளார். 

புஜாரா இப்போது தான் விளையாட ஆரம்பித்து உள்ளார். நிலைத்து நின்று ஆடக்கூடிய திறமைசாலி தான். இப்போதே அவரை டிராவிட்டுடன் ஒப்பிடுவது சரியல்ல. 

புஜாரா அணியில் தனக்குரிய இடத்தை பிடிக்க வேண்டும். டிராவிட் இடத்துக்கு பொருத்தமானவர் என்று கூறி அவருக்கு நெருக்கடி ஏற்படுத்திவிட வேண்டாம். 

வீராட்கோலி வருங்காலங்களில் சில செஞ்சூரிகள் அடித்தால் அதற்காக அவரை தெண்டுல்கருடன்  ஒப்பிட்டுவிட முடியுமா? அது மாதிரி தான் டிராவிட்டுடன் புஜாராவை எளிதில் ஒப்பிட்டுவிட இயலாது. 

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 23 ஆண்டுகளை நிறைவு செய்த தெண்டுல்கர்


உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர் 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் அறிமுகம் ஆனார். 16 வயது மற்றும் 223 நாட்களில் அவர் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார்.

தனது முதல் ஆட்டத்தில் அவர் 15 ரன்கள் எடுத்தார். 39 வயதான அவர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். 

5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட தெண்டுல்கர் 190 டெஸ்ட்டில் 15,533 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும் எடுத்துள்ளார். 

சர்வதேச போட்டிகளில் 100 சதம் (டெஸ்ட் 51 + ஒருநாள் போட்டி 49) அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஆவார். 

23 ஆண்டு காலம் சிறப்பான ஆட்டம் மூலம் அவர் கோடிகணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். 

கிரிக்கெட்டின் சகாப்தமான அவர் இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். 

கிரிக்கெட்டில் அவரது அசாதாரண சேவையை பாராட்டும் விதமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி மேல்-சபை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டார்.

சச்சினை மட்டும் சார்ந்திருக்கலாமா?


இங்கிலாந்து தொடரில் இந்திய அணி, சச்சினை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது, என, கபில் தேவ் தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆமதாபாத்தில் துவங்குகிறது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கூறியது:

இங்கிலாந்து தொடரில் அனைவரது கவனமும் சச்சின் மீது தான் இருக்கும். அவர் இந்திய அணியின் முக்கிய வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனாலும் அவரை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது. இளம் வீரர்கள் பொறுப்புகளை தங்கள் தோளில் சுமக்கும் நேரம் வந்துவிட்டது. 

எதிராகி விடும்:

சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடும் போது, "டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். ஏனெனில், இதுபோன்ற நிலையில் எந்த அணியும் முதலில் "பேட்டிங் செய்யவே விரும்பும். இதனால், அணியின் பலத்திற்கு ஏற்ப ஆடுகளங்கள் அமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், அதுவே நமக்கு எதிராக திரும்பி விடும். 

அச்சமாக உள்ளது:

அணியின் துவக்க வீரர்கள் சேவக், காம்பிருக்கு அதிக பொறுப்புள்ளது. ஆனால், கடந்த 15 முதல் 20 டெஸ்டில் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. இங்கிலாந்துக்கு எதிராக இவர்கள் சரியாக விளையாடவில்லை எனில், என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. 

ஜாகிர் கான் "பார்மில் இல்லை. ஹர்பஜனும் சமீபத்தில் சொதப்பியுள்ளார். இந்நிலையில், ஒன்று அல்லது இரண்டு டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினாலே, பெரிய சாதனை தான். 

இங்கிலாந்து அணியில் வலுவான பேட்ஸ்மேன்கள், "ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். அந்த அணியின் பவுலிங்கும் நன்றாக உள்ளது. "டெயிலெண்டர்கள் வரை பேட்டிங் வரிசை நீளுகிறது. 

இவர்களிடம் உள்ள ஒரே பலவீனம், ஒருங்கிணைந்து விளையாடாதது தான். 
இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சாதிப்பார்கள்


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சாதிப்பார்கள்,'' என, முன்னாள் இந்திய கேப்டன் அஜித் வடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை ஆமதாபாத்தில் துவங்குகிறது. 

இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் அஜித் வடேகர் கூறியது: கடந்த 1993ம் ஆண்டு இந்தியா வந்த கிரகாம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணியின் மேனேஜராக டங்கன் பிளட்சர் இருந்தார். 

இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாத இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என மோசமாக இழந்தது. 

இத்தொடரில் சுழற்பந்துவீச்சாளர்களான அனில் கும்ளே, வெங்கடபதி ராஜு, ராஜேஷ் சவுகான் மொத்தம் 46 விக்கெட் கைப்பற்றினர். இதில் அனில் கும்ளே 21, ராஜு 16, சவுகான் 9 விக்கெட் வீழ்த்தினர்.

இதேபோல தற்போது இந்தியா வந்துள்ள அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் சுழலை சமாளிக்க முடியாமல் திணறும் என நம்புகிறேன். 

ஏனெனில் இத்தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியில் அஷ்வின், பிரக்யான் ஓஜா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் என வெவ்வேறு விதமாக சுழற்பந்துவீசக் கூடிய திறமையான பவுலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தற்போதுள்ள இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கிரகாம் கூச் உள்ளார். இவர், இங்கிலாந்து வீரர்களுக்கு தனது முந்தைய அனுபவத்தை எடுத்துக் கூறுவார். இருப்பினும் இந்திய அணியில் திறமையான பவுலர்கள் இருப்பதால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.
இவ்வாறு அஜித் வடேகர் கூறினார்.

அசாருதீன் மீதான தடை நீக்கப்படுமா?


சூதாட்டப் புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு, கடந்த 2000-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வாழ்நாள் தடை விதித்தது.

இதனை எதிர்த்து அசாருதீன் ஆந்திர மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அசாருதீனுக்கு வாழ்நாள் தடை விதித்தது சட்டவிரோதம் என்றும், இந்த தடை விலக்கப்பட வேண்டும் என்றும் கோர்ட் தெரிவித்தது.

இதனால் அசாருதீன் இப்போது நிம்மதி அடைந்தபோதும், ஏற்கனேவே பட்ட காயத்தில் இருந்து இன்னமும் மீளவில்லை என்றே தெரிகிறது. 

இதுதொடர்பாக தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அசாருதீன், ‘கடந்த 11 ஆண்டுகளாக இந்த வழக்கிற்காக போராடியாதால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். 

இருப்பினும் இறுதியாக வந்த தீர்ப்பில் எனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கூறியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

எல்லாம் விதிப்படி நடந்திருக்கிறது. நடந்தது நடந்துவிட்டது. இதற்காக யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. யார் மீதும் புகார் அளிக்க மாட்டேன்’ என்றார்.

இதுபற்றி பி.சி.சி.ஐ. மூத்த அதிகாரி ராஜீவ் சுக்லாவிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘கோர்ட் தீர்ப்பின் முழு விவரங்களையும் எங்கள் சட்டக்குழு ஆய்வு செய்யும். அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

கேப்டன் தோனிக்கு டிராவிட் ஆதரவு


இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் தோனி நீடிக்கலாம். ஆனால் விரைவில் இவரது சுமையை குறைக்க வேண்டும்,'' என, முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக ஜொலிப்பவர் தோனி. இவரது தலைமையில் கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக எட்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது. 

இதன்மூலம் டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்தை இழந்தது. இதனால் டெஸ்ட் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின.

இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் கூறியது: தோனி சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இவரது செயல்பாடு இந்திய அணியின் வெற்றிக்கு நிறைய போட்டிகளில் கைகொடுத்துள்ளது. இவரை தொடர்ந்து சிறந்த வீரராகவே காண விரும்புகிறேன்.

கடந்த ஆண்டு தொடர்ச்சியாக எட்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததன் மூலம், இவரது கேப்டன் பொறுப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவரை உடனடியாக கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறவில்லை. 

ஏனெனில் அடுத்தடுத்து போட்டிகள் இருப்பதால் இதற்கான நேரம் இதுவல்ல. இருப்பினும் விரைவில் இவரது கேப்டன் சுமையை ஏதாவது ஒரு போட்டியில் இருந்து குறைக்க வேண்டும். இதன்மூலம் இவர் போட்டியில் நெருக்கடியின்றி விளையாடலாம். தவிர இவர், மீண்டும் சிறந்த வீரராக அசத்தலாம்.

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து தோனி மட்டுமே முடிவு செய்ய முடியும். ஏனெனில் இவரது தலைமையில் இந்திய அணி உலக கோப்பை வென்றது. டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்தை அடைந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு மோசமான தோல்வி கண்டது இவருக்கு ஏமாற்றம் அளித்திருக்கும்.

அடுத்த கேப்டன் பொறுப்புக்கு விராத் கோஹ்லி தகுதியானவர் என நினைக்கிறேன். இவர், அடுத்த 12 மாத காலத்தில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் முழுத்திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம். ஏனெனில் ரசிகர்கள் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

உலக கோப்பை - இந்தியா, பாக்., அரையிறுதியில் சூதாட்டம்


இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய உலக கோப்பை அரையிறுதியில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்ததாக வெளியான செய்திகளை பி.சி.சி.ஐ., மறுத்துள்ளது.

கடந்த 2011ல் மொகாலியில் நடந்த உலக கோப்பை(50 ஓவர்) அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியது. 

இதில், கிரிக்கெட் சூதாட்டம் நடந்ததாக இங்கிலாந்து பத்திரிகையாளர் எட் ஹாக்கின்ஸ் எழுதியுள்ள புத்தகத்தில் சந்தேகம் கிளப்பியுள்ளார். 

இப்போட்டியில், "இந்திய அணி முதலில் "பேட்' செய்து 260 ரன்கள் எடுக்கும். பின் பாகிஸ்தான் அணி 150 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழக்கும். 

20 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோல்வி அடையும்,' என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்திய ஏஜன்ட் ஒருவர் "டுவிட்டர்' மூலம் தனக்கு அனுப்பியதாகவும், அதன்படியே போட்டியின் பெரும்பாலான நிகழ்வுகள் அமைந்ததாகவும் ஹாக்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார். 

இதனை மறுத்த இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசன் கூறுகையில்,""பொதுவாக பத்திரிகை செய்திகளுக்கு நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனாலும், தற்போதைய செய்தி உண்மைக்கு புறம்பாக உள்ளது. இந்திய அணி கடினமாக உழைத்து பெற்ற வெற்றியை அவமதிக்கும் வகையில் இருக்கிறது,''என்றார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐ.சி.சி.,) தலைமை அதிகாரி ஹாரூன் லார்கட் கூறுகையில்,""வெற்றிகரமாக நடந்த உலக கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 

இதன் அரையிறுதி தொடர்பாக சந்தேகம் கிளப்புவது கவலை அளிக்கிறது. இது பற்றி விசாரணை நடத்த போதிய ஆதாரம் இல்லை,''என்றார்.

பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் கூறுகையில்,""அடுத்து நடக்க உள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடருக்கு பாதிப்பு ஏற்படுத்தவே இத்தகைய புகார்கள் கூறப்படுகின்றன. 

பரபரப்பான உலக கோப்பை அரையிறுதியில் இரு அணிகளுமே கடினமாக போராடின,''என்றார். 

தெண்டுல்கரை தொட இன்னும் 7 சதம் தேவை - காலிஸ்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் காலிஸ் இன்று சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 156-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 44-வது செஞ்சூரி ஆகும். 

முதல் இடத்தில் இருக்கும் தெண்டுல்கரை தொட இன்னும் 7 சதம் தேவை. 

தெண்டுல்கர் 190 டெஸ்டில் விளையாடி 51 சதம் அடித்து முதல்இடத்தில் உள்ளார். டெஸ்டில் அதிக சதம் அடித்த “டாப் 6” வீரர்கள் வருமாறு:- 

தெண்டுல்கர் (இந்தியா)- 51 சதம் (190 டெஸ்ட்) 

காலிஸ் (தென்ஆப்பிரிக்கா)- 44 சதம் (156 டெஸ்ட்) 

பாண்டிங் (ஆஸ்திரேலியா)- 41 சதம் (166 டெஸ்ட்) 

டிராவிட் (இந்தியா)- 36 சதம் (164 டெஸ்ட்) 

கவாஸ்கர் (இந்தியா)- 34 சதம் (125 டெஸ்ட்) 

லாரா (வெஸ்ட்இண்டீஸ்)- 34 சதம் (131 டெஸ்ட்).

இங்கிலாந்து அணியை பழி வாங்குவோம்- யுவராஜ்சிங்


இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தான் மோதிய 4 டெஸ்டிலும் தோற்று “ஒயிட்வாஷ்” ஆனது. தற்போது கூக் தலைமை யிலான இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் வருகிற 15-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. 

இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் பழிவாங்கும் தொடராக இருக்கும் என்று கருதப்படுகிறது. இங்கிலாந்துக்கு இந்திய அணி இந்த தொடரில் பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் இங்கிலாந்து அணியை பழிவாங்குவோம் என்று இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான யுவராஜ்சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

கடந்த ஆண்டு நாங்கள் இங்கிலாந்து சென்றபோது எங்களுக்கு கடினமான நேரமாக இருந்தது. இந்த முறை இங்கிலாந்து அணிக்கு அதே நிலை ஏற்படலாம். கண்டிப்பாக எங்களுக்கு இது பழிவாங்கும் தொடர் தான். அந்த அணியை வழிவாங்க இதுவே சரியான நேரம். 

இங்கிலாந்து அணியில் பீட்டர்சன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் நாங்கள் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளோம். இது ஒரு சிறந்த தொடராக இருக்கும். நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடக்கூடிய உடல் நிலையுடன் இருக்கிறேன். 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடியது எனக்கு சவாலாக இருந்தது. டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை எப்போதுமே விரும்புகிறேன். 

இவ்வாறு யுவராஜ்சிங் கூறியுள்ளார். 

புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்த யுவராஜ் இலங்கையில் நடந்த உலக கோப்பையில் விளையாடினார். துலீப் டிராபியில் இரட்டை சதமும், இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதாலும் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது. 

ரெய்னா நீக்கப்பட்டு அந்த இடத்தில் யுவராஜ் சேர்க்கப்பட்டார். அவர் 6-வது வீரராக களம் இறங்குவார். ஒரு ஆண்டு இடை வேளிக்கு பிறகு யுவராஜ் டெஸ்டில் விளையாடுகிறார். கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கொல்கத்தா டெஸ்டில் விளையாடினார்.

நம்பர்-1 இடத்தை நோக்கி இந்தியா


ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங்கில் இந்திய அணி மீண்டும் "நம்பர்-1' இடம் பிடிக்கும்,'' என, இந்திய கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து பயணத்தின் போது டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை பறிகொடுத்தது. தற்போது 106 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ள இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 

முதலிரண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கு மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று முதல் நவ. 11ம் தேதி வரை மூன்று நாள் பயிற்சி முகாம் நடக்க உள்ளது.

இந்திய கேப்டன் தோனி கூறியது: டெஸ்ட் ரேங்கிங்கில் மீண்டும் முதலிடம் பிடிக்கும் எண்ணம் இந்திய அணிக்கு எப்போதுமே உள்ளது. டெஸ்ட், ஒருநாள், "டுவென்டி-20' என எவ்வித போட்டியாக இருந்தாலும், "நம்பர்-1' இடம் பிடிப்பதே இலக்கு. 

இதற்காக ஒவ்வொரு போட்டியிலும் திட்டமிட்டு விளையாடி வருகிறோம். "நம்பர்-1' இடம் பிடிப்பதற்கான எங்களது முயற்சி மெதுவாக இருந்தாலும், முடிவில் இலக்கை அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இங்கிலாந்து அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். இருப்பினும் இந்திய அணியின் பலம், பலவீனம் அறிந்து அதற்கேற்ப பயிற்சி மேற்கொண்டு வருகிறோம்.

டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன், தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் இணைந்து பயிற்சி முகாமில் பங்கேற்க இருப்பது கூடுதல் பலம். இதன்மூலம் ஒரு அணியாக இணைந்து போட்டியில் சாதிக்க முடியும். 

இதேபோல தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் சமீபத்தில் உள்ளூர் மற்றும் பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டிருப்பதால் "பார்ம்', உடற்தகுதி குறித்த கவலை இல்லை.

சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்த நான், கிரிக்கெட் போட்டியில் தொழில் ரீதியாக விளையாடுவேன் என எதிர்பார்க்கவில்லை. சிறு வயதில் இந்திய ராணுவத்தில் பணிபுரிவதை இலக்காக கொண்டிருந்தேன். 

இது தான் என்னுடைய இளமை கால கனவு. கிரிக்கெட் போட்டியில் காலடி வைத்த பின் எல்லாமே மாறிவிட்டது. துவக்கத்தில் முதல் தர, துலீப் டிராபி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், தேசிய அணியில் இடம் கிடைத்தது.
இவ்வாறு தோனி கூறினார்.

கேப்டன் ஆகிறார் ரோகித் சர்மா


ராஜஸ்தான் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் விளையாடும் மும்பை அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் சுற்று லீக் போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நடந்தது. இதில் மும்பையில் நடந்த "ஏ பிரிவு லீக் போட்டியில் மும்பை, ரயில்வேஸ் அணிகள் மோதின. 

இப்போட்டி "டிராவில் முடிந்த போதிலும், முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் மும்பை அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது.

இரண்டாவது சுற்று லீக் போட்டிகள் நாளை துவங்குகிறது. ஜெய்ப்பூரில் நடக்கவுள்ள லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதுகின்றன. 

இப்போட்டிக்கான மும்பை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் நான்கு லீக் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட அஜித் அகார்கர், கெண்டைக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டார். இதனால் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதல் லீக் போட்டியின் போது இடுப்பு பகுதியில் காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், அஜின்கியா ரகானே மற்றும் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் மூவரும் இங்கிலாந்துக்கு எதிராக ஆமதாபாத்தில் நடக்கவுள்ள முதல் டெஸ்டில் விளையாட இருப்பதால், இப்போட்டியில் இருந்து விலகினர்.

சச்சினுக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது


இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியா அரசு ,ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி கவுரவித்தது. ஆஸ்திரேலியா அரசின் விருது பெறும் இரண்டாவது நபர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சதத்தில் சதம் உட்பட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி ஏற்றார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டில்லி வந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஜீலியா கில்லார்ட், ஆஸ்திரேலியர்கள் மற்றும் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் ஆஸ்திரேலிய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்படும் என அறிவித்தார். ஆஸ்திரேலியா கலை மற்றும் பிராந்திய அமைச்சர் இந்தியா வரும்போது வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். 

இதற்கு அந்நாட்டு எம்.பி., ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நேசிக்கிறேன் அதற்காக அவருக்கு ஆஸி.,யின் கவுரவமிக்க விருதினை கொடுப்பது சரியல்ல. ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என கூறினார். 

சச்சினுக்கு விருது வழங்கப்படுவதை ஆதரித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட், இதனால் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நல்லுறவு வலுப்படும் என கூறினார். 

ஆனால் மற்றொரு வீரரான மாத்யூ ஹைடன் விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், சச்சின் ஆஸ்திரேலியாவில் வசித்தால், அவருக்கு பிரதமர் பதவி கூட அளியுங்கள் என கூறினார். 

இந்நிலையில், சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான, ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை சச்சின் பெற்றுக்கொண்டார். இந்தியாவின் சோலி சொராப்ஜிக்கு பின்னர் இந்த விருதை பெறும் இரண்டாவது இந்தியர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவராஜ், ஹர்பஜனுக்கு மீண்டும் வாய்ப்பு


இங்கிலாந்து அணிக்கு எதிரான, முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போல ரெய்னா நீக்கப்பட்டார். ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மீண்டும் இடம் பெற்றனர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் 2 டெஸ்டில் பங்கேற்கும், 15 பேர் கொண்ட இந்திய அணியை, சந்தீப் பாட்டீல் தலைமையிலான புதிய தேர்வுக்குழு நேற்று அறிவித்தது. இதில் கேப்டன் தோனியும் பங்கேற்றார். 

இந்த டெஸ்ட் அணியில் தோனி தவிர, எட்டு "ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள், தலா மூன்று வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ரஞ்சி கோப்பை போட்டிகளில் சதம் அடித்து அசத்திய சச்சின், சேவக் மற்றும் காம்பிர், விராத் கோஹ்லி ஆகியோர் வழக்கம் போல இடம் பெற்றனர். 

மூன்றாவது துவக்க வீரர் இடத்துக்கு சமீபத்திய உள்ளூர் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த தமிழகத்தின் முரளி விஜய் தேர்வு பெற்றார். 

ஒரு ஆண்டுக்கு பின்...

"கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்ட யுவராஜ் சிங், துலீப் டிராபி போட்டியில் இரட்டை சதம் அடித்து இருந்தார். தவிர, இங்கிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் அரைசதம் மற்றும் பவுலிங்கில் 5 விக்கெட் கைப்பற்றி "ஆல் ரவுண்டராக ஜொலித்தார். 

இது தேர்வாளர்களை கவர, ரெய்னா இடத்தை யுவராஜ் சிங் தட்டிச் சென்றார். "மிடில் ஆர்டர் வீரர் என்ற பெயரில் ரகானேவுக்கு இடம் கிடைத்துள்ளது.

ஜாகிர் தேர்வு:

இந்தியாவின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், ரஞ்சி கோப்பை போட்டியின் போது, இடுப்பு தசைப்பிடிப்பால் அவுதிப்பட்டார். இருப்பினும், போட்டி துவங்க இன்னும் 9 நாள் இருப்பதால் ஜாகிர் கான் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இவருடன் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா இருவருக்கும் இடம் கிடைத்தது. 

மீண்டும் ஹர்பஜன்:

சுழற்பந்து வீச்சாளர்கள் இடத்தில் அஷ்வின், பிரக்யான் ஓஜா இருவரும் மீண்டும் தேர்வாகினர். மூன்றாவது இடத்துக்கு பியுஸ் சாவ்லா, ஹர்பஜன் இடையே கடும் போட்டி இருந்தது. சாவ்லா காயம் சரியாகாததால், வேறு வழியின்றி ஹர்பஜன் சிங்கிற்கு இடம் கிடைத்தது. 

இவர், இங்கிலாந்துக்கு எதிரான நாட்டிங்காம் டெஸ்டில், கடைசியாக (2011, ஆக.,) பங்கேற்றார். இதன் பின் மோசமான "பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்து இந்தியாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஸ்திரேலியா சென்ற அணியிலும் இடம் பெறவில்லை. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புறக்கணிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று திடீரென வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்திய அணி விவரம்:

தோனி (கேப்டன்), சேவக், காம்பிர், விராத் கோஹ்லி, சச்சின், யுவராஜ் சிங், புஜாரா, அஷ்வின், உமேஷ் யாதவ், பிரக்யான் ஓஜா, ரகானே, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, முரளி விஜய், ஜாகிர் கான்.
பயிற்சி ரிசல்ட் செய்திக்கு பாக்ஸ்

சோகத்தில் ரெய்னா

டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட ரெய்னா நேற்று பெரும் சோகத்துடன் இருந்தார். டில்லி எதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் போது, இவர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட செய்தி கிடைத்தது. எப்போதும் "டிரசிங் அறையில் மகிழ்ச்சியுடன் இருக்கும் ரெய்னா, உடனடியாக "அப்செட் ஆகிவிட்டார். 

இதனால், மதியம் <உணவு சாப்பிடாமல், சோகத்துடன் தனி அறைக்கு சென்றுவிட்டார். எப்÷ பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய இவர் 37 ரன்கள் எடுத்து, உ.பி., அணியின் வெற்றிக்கு உதவினார். இதற்கான பரிசை பெறக் கூட ரெய்னா வரவில்லை.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில்,"" ஒவ்வொரு வீரருக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாட தகுதி உள்ளது. இதுபோலத் தான் ரெய்னாவும். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த இவரை, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கட்டாயம் சேர்த்திருக்க வேண்டும். தன்னை நிரூபிக்க இன்னும் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். தேர்வாளர்களின் முடிவு அதிருப்தி தருகிறது, என்றார்.

விமர்சனத்துக்கு ஹர்பஜன் பதிலடி

அணியில் இடம் பெற்றது குறித்து ஹர்பஜன் சிங் கூறியது:

போட்டியில் விக்கெட் எடுக்கவில்லை என்பதற்காக சிறந்த பவுலர் இல்லை என்று ஆகிவிடாது. அவரது திறமையான பவுலிங்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால், கிரிக்கெட் விளையாடாதவர்கள் எல்லாம் என்னைப் பற்றி முட்டாள் தனமாக எழுதினர். 

ஒரு சுழற்பந்து வீச்சாளரின் பங்கு என்பது, ஆடுகளத்துக்கு ஏற்ப மாறும். வார்னே, முரளிதரன் போன்ற ஜாம்பவான்கள், பல போட்டிகளில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்துள்ளதை பார்த்துள்ளேன். அதுபோல் தான் நானும், வித்தைக்காரன் ("மேஜிக் மேன்) அல்ல. 

"டுவென்டி-20 உலக கோப்பை அணியில் இடம் கிடைத்த நிலையில், இங்கிலாந்து தொடரில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். இது நடந்தது எனக்கு மிகப்பெரிய செய்தி. 

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.