உலக கோப்பை வெல்லுமா இந்திய அணி?

இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்தாலும், பவுலிங் பலவீனமாக உள்ளது. இதில், முன்னேற்றம் ஏற்படாவிட்டால் உலக கோப்பையை மீண்டும் வெல்வது கடினம்,'' என, அர்ஜூனா ரணதுங்கா தெரிவித்தார்.
இந்தியாவில் 1996ல் நடந்த உலக கோப்பை தொடரில், அர்ஜூனா ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி கோப்பை வென்றது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரணதுங்கா, இந்திய அணியின் உலக கோப்பை வாய்ப்பு குறித்து கூறியது:

நான் பார்த்த கிரிக்கெட் வீரர்களில் ரோகித் சர்மா சிறப்பானவர். இவரது ஆட்டத்தை நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். இவர் ஏன் இவ்வளவு காலம் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் இருந்தார் என வியந்ததுண்டு. அதேபோல, விராத் கோஹ்லி, இடதுகை பேட்ஸ்மேன் ஷிகர் தவான் என, இந்திய அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. 

சொந்த மண்ணில் வெற்றி பெறுவதை விட, வெளிநாட்டில் வெல்வது தான் முக்கியமானது. இதற்கு பவுலிங்கும் கைகொடுக்க வேண்டும். ஆனால், இந்திய அணியின் பவுலிங் பலவீனமாக உள்ளது. இதில் முன்னேற்றம் அடையாவிட்டால், 2015 <உலக கோப்பை தொடரில், சாதிப்பது மிகவும் கடினம். 


பேட்டிங் சாதகம்:

 கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விதிகள் நல்லது தான் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் இது தவறு. ஏனெனில், ஓவருக்கு 8 முதல் 10 ரன்கள் கொடுக்கும் நிலையில், பவுலர்கள் பவுலிங்கை விட்டு விட்டு, பேட்டிங்கை தேர்வு செய்து விடுவர். 

தவிர, கிரிக்கெட் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கானது என்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் இது 60:40 என்ற சதவீதத்தில் இருக்க வேண்டும். இப்போதுள்ள புதிய விதிகளால் 90:10 என்று ஆகிவிட்டது. 

பெரும்பாலான ஆடுகளங்களும் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்படுவதால், இவர்களுக்கு கொண்டாட்டமாகி விட்டது. இதனால், பவுலிங் தரமும் குறைந்து வருகிறது. 

பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா தவிர, மற்ற அணிகளின் பவுலிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதேநேரம், நாங்கள் விளையாடிய போது இருந்ததை விட, இப்போதைய தென் ஆப்ரிக்க அணியின் பவுலிங் சுமார் தான். 


சரியில்லாத விதி:

ஒரு நாள் போட்டியில் இரு புதிய பந்துகள் பயன்படுத்துவதும் சரியல்ல. ஏனெனில், துணைக்கண்டத்தில் விளையாடும்போது, பந்து சேதப்பட வாய்ப்பில்லை. தவிர, பீல்டிங்ல் மாற்றங்களால், பேட்ஸ்மேன்கள் எளிதாக 200 ரன்களை எடுத்து விட வாய்ப்புள்ளது. 


பல் இல்லா புலி:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தான், உலக கிரிக்கெட்டினை கட்டுப்படுத்த வேண்டும். மற்ற நாடுகளின் கிரிக்கெட் போர்டினை இதற்கு அனுமதிக்கக் கூடாது. 

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இது மாறிவிட்டது. ஐ.சி.சி., பல் இல்லாத புலி ஆகி விட்டது. யாராவது சிறு நபர் இதனிடம் கிடைத்தால், தண்டனை கொடுத்து விடுகிறது. பெரிய நபர் என்றால், இரண்டு அடி பின்னால் சென்றுவிடுகிறது. 

சாதனை நோக்கி காலிஸ்

சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத்தில் உள்ளார். 
தற்போது 164 டெஸ்டில், 44 சதம் அடித்துள்ள தென் ஆப்ரிக்காவின் காலிஸ், இன்னும் 7 சதம் அடிக்கும் பட்சத்தில் சச்சின் சத சாதனையை சமன் செய்யலாம். இது குறித்து காலிஸ் அளித்த பேட்டி:


* சச்சின் ஓய்வு குறித்து? 

கிரிக்கெட்டில் அதிக ஆண்டுகள் கொடிகட்டி பறந்த சிறந்த வீரர்களில் சச்சினும் ஒருவர். ஓய்வு என்பது விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையின் ஒருபகுதி. அதை யாரும் தடுக்க முடியாது. எஞ்சிய காலத்தை தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாக செலவிட வேண்டும். அவர் மிகவும் நேசித்த கிரிக்கெட்டிற்கு ஏதாவது ஒருவழியில் உதவ வேண்டும்.


* தென் ஆப்ரிக்கா தொடரில், சச்சின் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுத்துமா? 

தென் ஆப்ரிக்க சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்வது கடினமானது. தற்போது சச்சின் இல்லாததால் கூடுதல் சிரமம் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. 


* சச்சினின் 51 சத சாதனையை நீங்கள் முறியடிப்பீர்களா? 

சாதனைகளுக்காக விளையாடுவது கிரிக்கெட் அல்ல. சச்சின் சாதனையை முறியடிக்கும் நோக்கத்தில் எப்போதும் விளையாட மாட்டேன். 


* நீங்கள் ஓய்வு பெறப் போவதாக கூறப்படுகிறதே?

 தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் கிடையாது. முடிந்த வரை அணியின் வெற்றி தேடித்தர முயற்சிப்பேன். 

இந்தியா - தென் ஆப்ரிக்கா தொடரில் மாற்றம்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின், இரண்டு போட்டிகளின் நேரத்தை, கிரிக்கெட் தென் ஆப்ரிக்கா (சி.எஸ்.ஏ.,) மாற்றம் செய்துள்ளது. 
தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 

ஜோகனஸ்பர்க்கில் நடக்கும் முதல் ஒருநாள், செஞ்சூரியனில் நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள், இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இந்தியாவுக்கு எதிரான தொடர் துவங்கும் போது தென் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. 

அதனால் பெற்றோரும் குழந்தைகளின் விடுமுறையை கொண்டாட விடுப்பில் இருப்பார்கள். இந்த காரணத்தினால், இவ்விரு போட்டிகளையும் ஒருமணி நேரம் முன்னதாக துவங்க சி.எஸ்.ஏ., முடிவு செய்துள்ளது.

சி.எஸ்.ஏ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,""ஜோகனஸ்பர்க், செஞ்சூரியன் போட்டிகள் பகல் இரவு ஆட்டமாக நடக்கும். விடுமுறை குறித்து சமீபத்தில் தான் தெரியவந்தது. 

அதனால் போட்டியை நேரத்திற்கு முடித்தால், விடுப்பில் உள்ள தென் ஆப்ரிக்க மக்கள் குடும்பத்துடன் போட்டியை காண முன்வருவர். இரண்டாவது, டெஸ்ட் போட்டிகளின் நேரத்தில் மாற்றம் இல்லை,'' என்றார். 

தவான் அசத்தல் சதம் - தொடரை வென்றது இந்தியா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தவான் அதிரடியாக சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி தொடரை 2-1 என கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்று, சமநிலையில் உள்ளது. 

மூன்றாவது போட்டி கான்பூரில் நடந்தது. இதில் "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி "பீல்டிங்' தேர்வு செய்தார். இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாவெல், சார்லஸ் ஜோடி துவக்கம் தந்தது. சார்லஸ் (11) புவனேஷ்வர் வேகத்தில் போல்டானார். பின் பாவெலுடன் இணைந்த சாமுவேல்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த பாவெல் (70) ஒருநாள் அரங்கில் தனது 5வது அரைசதத்தை பதிவு செய்து அவுட்டானார். 

எதிர்முனையில் இவருக்கு நல்ல "கம்பெனி' கொடுத்த சாமுவேல்ஸ் (71) அஷ்வின் "சுழலில்' சரணடைந்தார். சிம்மன்ஸ் (13) நிலைக்கவில்லை. கேப்டன் டுவைன் பிராவோ (4) ஏமாற்றினார். கடைசி நேரத்தில் சமி, டேரன் பிராவோ அதிரடியாக ரன்கள் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்தது. சமி (37), டேரன் பிராவோ (51) அவுட்டாகாமல் இருந்தனர். 

இந்திய அணி சார்பில் அஷ்வின் 2 விக்கெட் கைப்பற்றினார்.


தவான் அபாரம்:

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித், தவான் ஜோடி துவக்கம் அளித்தது. ரோகித் (4) ராம்பால் வேகத்தில் வெளியேறினார். பின் வந்த விராத் கோஹ்லி (19) சொதப்பலாக அவுட்டானார். 

பின் தவானுடன் இணைந்த யுவராஜ் சிங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான், ஒருநாள் அரங்கில் 5வது சதத்தை பூர்த்தி செய்தார். இவருக்கு நல்ல "கம்பெனி' கொடுத்த யுவராஜ் சிங், அரைசதம் கடந்தார். இவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். 

தவான் 119 ரன்களில் வெளியேறினார். ரெய்னாவும் 34 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இந்திய அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி (23) ஜடேஜா (2) அவுட்டகாமல் இருந்தனர்.

ஆல் ரவுண்டரில் அஸ்வின் முதலிடம்


டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்டிங் வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார். 

இந்திய வீரர்கள் புஜாரா 6–வது இடத்திலும், விராட்கோலி 20–வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் முதல் இடத்தில் தொடருகிறார். 

இந்திய வீரர்கள் அஸ்வின் 5–வது இடத்திலும், பிரக்யான் ஓஜா 9–வது இடத்திலும் இருக்கின்றனர். ஜாகீர்கான் 20–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆல்–ரவுண்டர்கள் வரிசையில் இந்திய வீரர் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்திய அணியில் மீண்டும் ஜாகிர் - காம்பிருக்கு நோ

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 
இதில், நீண்ட நாட்களாக போராடிய வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் மீண்டும் இடம் பிடித்தார். துவக்க வீரர் காம்பிர் புறக்கணிக்கப்பட்டார். 

தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் போட்டிகள் ஜோகனஸ்பர்க் (டிச.5), டர்பன் (டிச.8), செஞ்சூரியன் (டிச.11) ஆகிய இடங்களில் நடக்கிறது. 

இதை தொடர்ந்து டெஸ்ட் போட்டி வரும் டிச.18ல் ஜோகனஸ்பர்க்கில் துவங்குகிறது. இதற்கு முன்கூட்டியே தயாராகும் விதமாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதை கருத்தில் கொண்டு, அனுபவ ஜாகிர்கான் நீண்ட இடைவேளைக்கு பின் தேர்வு செய்யப்பட்டார். 

இவருடன் விக்கெட் கீப்பர் இடத்திற்கு விர்திமான் சகாவும், அம்பத்தி ராயுடு ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காம்பிர் புறக்கணிக்கப்பட்டார். 

சச்சின் உருவம் பொறித்த தங்க நாணயம் விற்பனை

சச்சின் உருவம் பொறித்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் சில்லறை விற்பனைக்கு வரவுள்ளன.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து விடைபெற்றார். 

மத்திய அரசு தன்பங்கிற்கு நாட்டின் உயரிய "பாரத ரத்னா' விருது அறிவித்து கவுரவித்தது.

இதனிடையே, பெங்களூருவை சேர்ந்த நகை விற்பனை நிறுவனம் ஒன்று சச்சின் உருவத்துடன் கூடிய தங்க நாணயங்களை சில்லரை விற்பனைக்காக வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக 3,000 நாணயங்கள் தயாராகி வருகிறது.

தவிர, இணையதளத்தின் மூலம் பதிவு செய்பவர்களுக்கான விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்டது. இதேபோல, மும்பையை அடிப்படையாக கொண்ட நிறுவனம், 10 கிராம் எடையுள்ள, வெள்ளி நாணயங்கள் வெளியிட்டுள்ளது.

இணையதளத்தில் 20 கிராம் சச்சின் வெள்ளி காயின், ரூ. 2,499க்கு கிடைக்கிறது. 200 கிராம் காயின் ரூ. 16,899 வரை விற்கப்படுகிறது. இதுவரை 800 எண்ணிக்கையில் இணையதளத்தில் விற்பனை ஆகியுள்ளன.

எதிரியா சச்சின் - மனம் திறக்கிறார் காம்ப்ளி



கடந்த 7 ஆண்டுகளாக என்னை சச்சின் தொடர்பு கொள்ளவில்லை. நண்பர்களாக இருந்த நாங்கள் தற்போது எதிரிகளாக மாறிவிட்டது போல உள்ளது,''என, வினோத் காம்ப்ளி தெரிவித்தார்.

இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது பள்ளித் தோழன் வினோத் காம்ப்ளி. இவர்கள் இருவரும் ஷிரதாஸ்ரம் வித்யா மந்திர் பள்ளியில் படித்தனர். 

அப்போது நடந்த (1988) பள்ளிகளுக்கு இடையிலான ஹாரிஸ் ஷீல்டு தொடரில், சேவியர் பள்ளிக்கு எதிராக சச்சின் (326*)காம்ப்ளி (349*) சேர்ந்து 664 ரன்கள் எடுத்தனர். 

இது தான் சச்சினுக்கு கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இதன் பின் 200 டெஸ்டில் பங்கேற்ற சச்சின் சாதனை நாயகனாக பிரகாசித்தார். 17 டெஸ்டில் மட்டும் விளையாடிய காம்ப்ளி ஏமாற்றம் அளித்தார். 

சச்சின் ஓய்வு குறித்து வினோத் காம்ப்ளி கூறியது:

ஓய்வின் போது சச்சின் தனது உரையில் எனது பெயரை சொல்வார் என எதிர்பார்த்தேன். நாங்கள் இணைந்து எடுத்த ரன்களை பற்றி பேசுவார் என நம்பினேன். இதுகுறித்து பேசாதது என்னை மிகவும் காயப்படுத்தியது. 

மறுநாள் நடந்த பார்ட்டிக்கு சக வீரர்கள் மற்றும் பிரபலங்களை அழைத்திருந்தார். ஆனால், என்னை அழைக்கவில்லை. இது கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது. சச்சினின் 10 வயது முதல் அவரது வாழ்க்கையில் நானும் ஒரு அங்கமாக உள்ளேன். 

இப்போது சச்சின், என்னை மறந்து விட்டதாக எல்லோரும் சொல்கின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக என்னை தொடர்பு கொள்ளவில்லை. நண்பர்களாக இருந்த நாங்கள் தற்போது எதிரிகளாக மாறிவிட்டது போல உள்ளது எங்களது நட்பு கண்ணாடி போன்றது. 

அவரைச் சுற்றியுள்ள பலர், என்னைப் பற்றி தவறாக எடுத்துக் கூறியுள்ளனர். இதனால் தான் என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். ஒருவேளை எனக்குப் போன் செய்தால், அடுத்த நிமிடம் சச்சின் முன் நிற்பேன்.

இவ்வாறு வினோத் காம்ப்ளி கூறினார்.

கிரிக்கெட் என்றாலே சச்சின் தான்

உலக கிரிக்கெட்டில் "சதத்தில்' சதம் அடித்து சாதித்தவர் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். 
தனது 200வது டெஸ்ட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார். 

இதுகுறித்து சச்சினின் சக வீரர்கள், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் அளித்த பேட்டி:

* சச்சினின் கடைசி டெஸ்டில் பங்கேற்று, அவருடன் "டிரசிங்' ரூமில் இருக்கும் அனுபவம் உங்களுக்கு கிடைக்காமல் போய்விட்டதே?


யுவராஜ்: இது மிகப்பெரிய ஏமாற்றம் தான். இது மிகவும் சோகமானது.

ஹர்பஜன்: சச்சினின் கடைசி இரு டெஸ்டில் பங்கேற்று இருக்க வேண்டும். இது சச்சினை நெருக்கமாக இருந்து பாராட்ட உதவியிருக்கும். ஏனெனில், சச்சினின் ஓய்வு உணர்ச்சி வசமானது. கிரிக்கெட் என்றாலே அது சச்சின் தான். இது இல்லாமல் அவர் என்ன செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை.

கோஹ்லி விளாசல் - இந்திய அணி வெற்றி

கொச்சியில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் கோஹ்லி 86 ரன்கள் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஏமாற்றம் அடைந்தது. 
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி கொச்சியில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் இன்று நடந்தது. 

இதில் "டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டுவைன் பிராவோ முதலில் "பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் வினய் குமாருக்கு பதில் உனத்கத் இடம் பிடித்தார். 


ரெய்னா அசத்தல்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் கெய்ல் (0) ரன் அவுட்டானார். சார்லஸ் (42) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். இதன் பின் பந்துவீச வந்த ரெய்னா அசத்தினார். 

இவரின் சுழலில், சாமுவேல்ஸ் (24), சிம்மன்ஸ் (29), தியோநரைன் (4) சிக்கினர். அரை சதம் கடந்த டேரன் பிராவோ 59 ரன்களுக்கு போல்டானார். டுவைன் பிராவோ 24 ரன்களில் ஜடேஜா சுழலில் வெளியேறினார். சமி 5 ரன்களில் அவுட்டானார். 

நரைன் (0), ராம்பால் (1) சொற்ப ரன்னில் அவுட்டானார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 48.5 ஓவரில், 211 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஹோல்டர் (16) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி சார்பில் ஜடேஜா, ரெய்னா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 


கோஹ்லி அபாரம்:

இந்திய அணியின் தவான் 5 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி தந்தார். ரோகித், கோஹ்லி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சமி ஓவரில் ரோகித் இரண்டு பவுண்டரி விளாசினார். 

தன் பங்கிற்கு ஹோல்டர், ராம்பால் பந்துவீச்சில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். தியோநரைன் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த ரோகித், ஒரு நாள் அரங்கில் 20வது அரை சதத்தை எட்டினார். நரைன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோஹ்லி 27வது அரை சதத்தை பதிவு செய்தார். 

தொடர்ந்து விளாசிய இவர் டுவைன் பிராவோ பந்தில் 2 பவுண்டரி அடித்தார். ரோகித் 72 ரன்களில் அவுட்டானார். கோஹ்லி 86 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஒரு நாள் அரங்கில் 5000 ரன்கள் எடுத்து அசத்தினார். 

ரெய்னா டக்-அவுட் ஆனார். ஹோல்டர் பந்துவீச்சில் தோனி இரண்டு பவுண்டரி அடித்தார். இந்திய அணி 35.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

யுவராஜ் (16), தோனி (13) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹோல்டர் அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார். 

இந்திய அணி தேர்வாளர்களுக்கு தடை

வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய அணியினருடன் செல்ல, தேர்வுக்குழுவினருக்கு தடை விதிக்கப்பட்டதாக தெரிகிறது.
பொதுவாக இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் போது, நிர்வாகிகள், அணித் தேர்வாளர்கள் உடன் செல்வதுண்டு. ஆனால், இவர்களுக்கு எவ்வித வேலையும் கிடையாது. 

இதனிடையே, இந்திய அணி மூன்று ஒருநாள் (டிச., 5, 8, 11), இரண்டு டெஸ்ட் (டிச., 18-22, டிச., 26-30) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, விரைவில் தென் ஆப்ரிக்கா செல்லவுள்ளது. 

அப்போது, அணித் தேர்வாளர்கள் உடன் செல்லமாட்டார்கள் என்று தெரிகிறது. இதற்குப் பதில், உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளதாம். இதனால் தான், சச்சின் ஓய்வு பெற்ற போட்டியைக் காண, தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் நேரில் வரவில்லையாம். 

இவர், ரஞ்சி கோப்பை போட்டிகளை பார்க்க சென்று விட்டாராம். ஏனெனில், எதிர்கால இந்திய அணிக்கு சரியான வீரர்களை கண்டறிய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


உண்மையான காரணம்:

சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் வருமானம் குறைந்து வருகிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளுக்கு, ஏர்டெல் நிறுவனம் ஸ்பான்சராக இருந்த போது சர்வதேச போட்டி ஒன்றுக்கு ரூ. 3.3 கோடி கொடுத்தது. 

இது ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. இதனால், கடந்த அக்., 3 முதல் ஈ.எஸ்.பி.என்., மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த வாய்ப்பை பெற்றது. ஆனால், ரூ. 1.3 கோடி குறைவாக, அதாவது ரூ. 2 கோடி மட்டுமே தருகிறது. 

தவிர, இந்திய அணியின் நீண்ட கால ஸ்பான்சர் சகாராவும் விலகிக் கொண்டது. இதனால், ஏற்பட்டுள்ள வருமான இழப்பை சரிக்கட்ட, இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதே - சச்சின் உணர்ச்சிவசம்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின். மும்பையில் பங்கேற்ற தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் வெற்றியுடன் கிளம்பினார். 
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 40. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சதத்தில் "சதம்' அடித்து சாதித்தவர். 463 ஒருநாள் (18,426 ரன்கள்), ஒரு "டுவென்டி-20' (10 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்ற சச்சின், தனது 200வது டெஸ்ட் (15,921 ரன்கள்) போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இப்போட்டியில் இந்திய அணி, வெற்றி பெற்றது. இத்துடன் கிரிக்கெட் உலகில் இருந்து விடை பெற்ற சச்சின் கூறியது:
நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு காணப்படுகிறேன். 

எனது 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனது வாழ்க்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 

முதலில் எனது தந்தை. கடந்த 1999ல் என்னை விட்டுச் சென்றார். இவரது வழிநடத்தல் இல்லையென்றால், இப்போது உங்கள் முன் நின்று கொண்டிருக்க முடியாது. இன்று அவர் இல்லாதது வருத்தம் தான்.


அம்மாவுக்கு நன்றி: 

அடுத்து எனது அம்மா. என்னை குழந்தையில் எப்படி வளர்த்தார் என்று தெரியாது. ஆனால், கிரிக்கெட் விளையாடத் துவங்கிய நாளில் இருந்து எனக்காக, தினமும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார். 

சரியான நேரத்தில் ஓய்வு - சச்சின் உருக்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெற்றேன்,'' என, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் தெரிவித்தார்.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சர்வதேச கிரிக்கெட்டில் மகத்தான சாதனை படைத்த இவர், தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார். நேற்று மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சச்சின் அளித்த பேட்டி: 

மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியாததது, எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இது என்ய கனவு பயணம். கிரிக்கெட்டை விட்டு விலகுவதில் வருத்தம் இல்லை. மிகச் சரியான நேரத்தில் ஓய்வை அறிவித்துள்ளேன்.


கிரிக்கெட் "ஆக்சிஜன்': 

கிரிக்கெட் எனது வாழ்க்கை. நான் சுவாசிக்கும் ஆக்சிஜன். கடந்த 40 ஆண்டுகளில், 30 ஆண்டுகள் கிரிக்கெட்டுக்காக செலவழித்துள்ளேன். அதாவது, என் வாழ்வின் 75 சதவீதம் கிரிக்கெட் தான் விளையாடி உள்ளேன். 

எனவே உடனடியாக எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறேன் என்பதை கணிக்க முடியாது. ஓய்வு பெற்று 24 மணி நேரம் தான் ஆகிறது. குறைந்தபட்சம் 24 நாட்கள் என்னை "ரிலாக்ஸாக' இருக்க விடுங்கள். 


ஆடுகளம் "கோயில்': 

மைதானத்தில் உள்ள ஆடுகளம் (பிட்ச்) கோயிலுக்கு சமம். ஏனெனில் என்னை ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றியது இந்த ஆடுகளம் தான். இது, என் வாழ்வில் தேவையான அனைத்தையும் அள்ளிக் கொடுத்தது. 

தேவைகளை பூர்த்தி செய்ய உதவிய ஆடுகளத்துக்கு நன்றி தெரிவிப்பதற்காக தான், கடைசி நாள் "பிட்சை' வணங்கிவிட்டு வெளியேறினேன். இதுபோன்ற ஒரு சிறந்த தருணம் என் வாழ்வில் என்றும் கிடைக்காது.


உடலுக்கு ஓய்வு: 

தற்போதும் கிரிக்கெட்டை அதிகமாக நேசிக்கிறேன். கிரிக்கெட் வாழ்க்கையில், நிறைய காயங்களை சந்தித்த எனது உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவு செய்தேன்.


சிறந்த தருணங்கள்: 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்திய அணி உலக கோப்பை வென்றது. இந்திய அணிக்காக உலக கோப்பை வென்று தர வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு, 22 ஆண்டுகளுக்கு பின் தான் நிறைவேறியது. இதனை என் வாழ்வின் சிறந்த தருணமாக கருதுகிறேன். இதேபோல, கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின், ரசிகர்கள் கொடுத்த பிரியாவிடை என்றும் மறக்க முடியாதது. 

வாழ்த்து மழையில் பாரத ரத்னா சச்சின்

நாட்டின் மிக உயர்ந்த "பாரத ரத்னா' விருது சச்சினுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக விளையாடி வந்த இவர், சர்வதேச போட்டிகளில் 100 சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தவர். 

கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் பங்கேற்ற தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட் உலகில் இருந்து விடை பெற்றார் சச்சின். 

இவருக்கு "பாரத ரத்னா' விருது தரவேண்டும் என, கோரிக்கை கடந்த 2011ல் எழுந்தது. கடந்த 1954 முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருது, விளையாட்டு தவிர, கலை, இலக்கியம், அரசியல் மற்றும் பொதுத் துறைகளில் சாதித்தவர்களுக்கு மட்டும் தரப்படும். 

விதிகளில் மாற்றம்: ஆனால், சச்சினுக்காக விளையாட்டு வீரர்களும், இவ்விருதை பெறும் வகையில் சட்டத்தை மாற்ற வேண்டும் என, அப்போதைய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்தார். இதனால், "பாரத ரத்னா' விருது பெறுபவர்களுடைய தகுதியில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு, கடந்த 2011, டிசம்பர் மாதம் முன்வந்தது. 

சச்சினுக்கு முன்: இந்தியாவுக்காக மூன்று ஒலிம்பிக் போட்டியில், தங்கம் வென்ற ஹாக்கி வீரர், மறைந்த தியான்சந்த்துக்கு முதலில் பாரத ரத்னா விருது தர வேண்டும் என, ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்காக 82 எம்.பி.,க்கள் கையெழுத்திட்ட கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்தது.

பலத்த போட்டி: ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் முதல் தங்கம் (2008, பீஜிங்) வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு முதலில் வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். 

இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் "பாரத ரத்னா' விருது கேட்டு, பிரதமர் அலுவலகத்துக்கு மொத்தம் 64 விண்ணப்பங்கள் வந்தன. இதனால், 2011, 2012ல் இவ்விருது யாருக்கும் தரப்படவில்லை. 

இதனிடையே, கடந்த ஜூலையில் மத்திய விளையாட்டு அமைச்சர் ஜிதேந்திரா சிங், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,"சச்சினுக்கு முன், ஹாக்கி வீரர் தியான்சந்த்துக்கு, "பாரத ரத்னா' தரவேண்டும்,' என, தெரிவித்தார். 

இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, மகாராஷ்டிரா முதல்வர் பிரிதிவிராஜ் சவுகான் உள்ளிட்ட பலர், சச்சினுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சமீபத்தில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" சச்சின் ஓய்வு பெற்றவுடன், "பாரத ரத்னா' விருது வழங்கப்படும்,'' என்றார். சச்சின் பெயரை நேற்று முன்தினம், பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரை செய்தார்.

நேற்று சச்சின் விடைபெற்ற சிறிது நேரத்தில், "பாரத ரத்னா' விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, விளையாட்டு உலகில் இருந்து இவ்விருது பெறும் முதல் வீரர் என்ற பெருமையை சச்சின் பெறுகிறார். பேராசிரியர் சி.என்.ஆர். ராவிற்கும் "பாரத ரத்னா' விருது வழங்கப்பட உள்ளது.

கடைசி டெஸ்டில் களம் கண்டார் சச்சின்

ச்சின் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் களம் கண்டார். பேட்டிங்கில் சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 182 ரன்களுக்கு சுருண்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. 

இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் சச்சினின் 200வது டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று துவங்கியது. இதில் "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் "பீல்டிங்' தேர்வு செய்தார். எதிர்பார்த்தது போல் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் டியோநரைன், கேபிரியல் ஆகியோர் இடம் பிடித்தனர். 


ஓஜா அசத்தல்: 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல், பாவல் ஜோடி துவக்கம் அளித்தது. கெய்ல் (11) ஷமி வேத்தில் வெளியேறினார். அடுத்து வந்த டேரன் பிராவோ (29) அஷ்வினிடம் சிக்கினார். 

பின் "சுழலில்' மிரட்டிய ஓஜா, பாவல் (48), சாமுவேல்சை (19) அவுட்டாக்க வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டம் கண்டது. 150வது டெஸ்டில் களமிறங்கிய சந்தர்பால் (25) புவனேஷ்வர் வேகத்தில் நடையை கட்டினார். 

அடுத்துவந்த டியோநரைன் (21) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. பின் வரிசை வீரர்களான சமி (0), ஷில்லிங்போர்டு (0), கேபிரியல் (0) ஓஜா "சுழலில்' இருந்து தப்பவில்லை. முதல் நாள் தேநீர் இடைவேளைக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி, 182 ரன்களுக்கு "ஆல் அவுட்டானது'.

இந்திய அணிக்கு ஓஜா 5 விக்கெட் கைப்பற்றினார். அஷ்வின் 3 விக்கெட் சாய்த்தார். முகமது ஷமி, புவனேஷ்வர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு முரளி விஜய், தவான் ஜோடி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சமி ஓவரில் தவான் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். 

தன் பங்கிற்கு கேப்ரியல் பந்துவீச்சில் முரளி விஜய் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். டினோ பெஸ்ட் பந்துவீச்சில் தவான் மூன்று பவுண்டரி விளாசினார். ஷில்லிங்போர்டு சுழலில் அசத்தினார். 

இவரின் வலையில் தவான் (33), முரளி விஜய் (43) சிக்கினர். இந்திய அணி தேநீர் இடைவேளைக்குப்பின் 2 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் (1), புஜாரா (8) அவுட்டாகாமல் இருந்தனர். 

5,000 டிக்கெட்டுக்கு 1.9 கோடி பேர் போட்டி

சச்சின் பங்கேற்கும் 200வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள், 15 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது. 
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கோல்கட்டாவில் நடந்த முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என, தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை மும்பை, வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. இது சச்சினின் 200வது டெஸ்ட். இத்துடன் கிரிக்கெட்டில் இருந்து சச்சின் விடைபெறுகிறார். 

வரலாற்று சிறப்பு மிக்க இப்போட்டிக்காக, ரசிகர்களுக்கு 5,000 டிக்கெட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதுவும் இணையதளத்தில் பெற முடியும் என்பதால், விற்பனை துவங்கிய ஒரு மணி நேரத்தில், சுமார் 1.9 கோடி பேர் முற்றுகையிட்டனர். 

இதனால், இணையதளம் ஒட்டுமொத்தமாக முடங்கியது. கடைசியில் இவற்றை சரிசெய்த பின், விற்பனை துவங்கிய 15 மணி நேரத்தில், டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. 

இதுகுறித்து அந்த இணையதளம் வெளியிட்ட அறிக்கையில்," ஒருவருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே தரப்பட்டன. இவர்கள் தகுந்த ஆதாரங்களை கொடுத்து, வான்கடே மைதானத்துக்கு செல்ல டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். 

ஒருசிலருக்கு டிக்கெட் கொடுக்கப்படாத நிலையிலும், அவர்களது வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டது. இவற்றை தற்போது திரும்ப தந்து கொண்டுள்ளோம்,' என, தெரிவிக்கப்பட்டது. 

சச்சின் பங்கேற்கும் 200வது டெஸ்ட் போட்டியில் சர்ச்சை

சச்சின் பங்கேற்கும் 200வது டெஸ்ட் போட்டிக்கு, ரசிகர்களுக்கு வெறும் 5000 டிக்கெட் தான் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கோல்கட்டாவில் நடந்த முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என, தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் நவ., 14ல் மும்பை, வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. இது சச்சினின் 200வது டெஸ்ட் . இப்போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார். 

இதனால், டிக்கெட் பெறுவதில் கடுமையான போட்டி காணப்படுகிறது. வான்கடே மைதானத்தில் மொத்தமுள்ள 33,000 டிக்கெட்டில், 5,000 மட்டும், ரசிகர்களுக்கு தரப்படுகிறது. மீதமுள்ளவை, "ஸ்பான்சர்', வி.வி.ஐ.பி., மற்றும் பல்வேறு முக்கிய கிளப்புகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த டிக்கெட்டுகளை மைதானத்தில் விற்கும் பட்சத்தில், கவுன்டர்களில் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்க்க, எம்.சி.ஏ., டுதூச்த்ணிணிணஞ்ச்.ஞிணிட் என்ற இணையதளத்துடன் கைகோர்த்துள்ளது. 

இதுகுறித்து எம்.சி.ஏ., இணைச் செயலர் நிடின் தலால் கூறுகையில்,"" கிரிக்கெட் உலக நட்சத்திரம் சச்சினின் வரலாற்று சிறப்பு மிக்க 200வது டெஸ்ட், வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை விற்க, உலகத்தரம் வாய்ந்த நிறுவனத்தை தேர்வு செய்தது மகிழ்ச்சி,'' என்றார்.


ரசிகர்கள் புலம்பல்:

கிரிக்கெட் என்பது மக்களுக்காகத் தான், நிறுவனங்களுக்கானது அல்ல. இப்படித்தான் ஈடன் கார்டன் போட்டியில், ரசிகர்களுக்கு குறைந்தளவு டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. மீதமுள்ளவை பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இதனால், பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன என, ரசிகர்கள் புலம்பினர்.


ஒருவருக்கு 2 மட்டும் தான்

சச்சினின் 200வது டெஸ்ட் போட்டிக்கு நபர் ஒருவருக்கு 2 டிக்கெட் மட்டும் தரப்படுகிறது. இதன் விலை ரூ. 500, ரூ. 1000 மற்றும் ரூ. 2,500க்கு விற்கப்படுகிறது.


ரகசிய திட்டம்

கடந்த 2011 உலக கோப்பை தொடர் பைனலின் போது, டிக்கெட்டுகளை டுதூச்த்ணிணிணஞ்ச்.ஞிணிட் நிறுவனம் தான் விற்றது. ஒருவருக்கு 2 டிக்கெட் மட்டுமே என்பதால், ஒரே நேரத்தில் பலரும் முற்றுகையிட, இணையதளம் முடங்கியது. இதைப் பயன்படுத்தி 100 மடங்கு அதிகமான விலைக்கு விற்கப்பட்டது. 

நேற்று மீண்டும் இந்த இணையதளம் முடங்கியது. இதனால், சச்சினின் 200வது டெஸ்ட் டிக்கெட்டை பெற முடியாமல் ரசிகர்கள் அவதிப்படுகின்றனர். 

மும்பை கான்திவிலி மைதானத்திற்கு சச்சின் பெயர்

கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகள் படைத்த சச்சின் தனது 200-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியின் முடிவில், சச்சினுக்கு பிரமாண்ட பிரிவுபசார விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சச்சன் டெண்டுல்கரை கவுரவப்படுத்தி சிறப்பிக்கும் வகையில் மும்பையில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. 

மும்பை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த விழா, ஆடல்-பாடல் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் விமரிசையாக நடைபெற்றது. 

விழாவில் மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் திரையுலக பிரபலங்கள், இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் பங்கேற்றார். 

அப்போது, சச்சினின் கிரிக்கெட் சாதனைகளை கவுரவிக்கும் வகையில், மும்பையில் உள்ள கான்திவிலி மைதானத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் முறைப்படி அறிவித்தது. 

சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியில், தங்க நாணயத்தில் டாஸ் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.  டெஸ்ட் போட்டி நடைபெறும் 5 நாட்களிலும் சச்சின் படத்துடன் 5 வண்ணத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு ஸ்பான்சர் யார்?

இந்திய அணிக்கு புதிய "ஸ்பான்சரை' தேர்வு செய்ய, ஏலம் அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் "ஸ்பான்சராக' சகாரா நிறுவனம் கடந்த 2001, ஜூன் 2ல் ரூ. 4723 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 
கடந்த 11 ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் பயிற்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் "சகாரா' பெயர் கொண்ட "ஜெர்சி' இல்லாமல் பார்க்கவே முடியாது. 

பின், 2008ல் பிரிமியர் தொடர் துவங்கப்பட்ட போது, ஒரு அணியை வாங்க முயற்சித்தது சகாரா. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி இம்முயற்சிக்கு முட்டுக்கட்டை இட்டது இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,).

பின் 2010ல் ஒருவழியாக புனே பிரிமியர் அணியை வாங்கியது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ.,யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இந்தியா மற்றும் புனே அணியின் "ஸ்பான்சரில்' இருந்து விலகுவதாக, கடந்த பிப்., 4ல் நடந்தது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், கடந்த அக்., 27ல் புனே அணி உரிமத்தை, பி.சி.சி.ஐ., ரத்து செய்தது. இப்போது 9 மாதங்கள் கழித்து, இந்திய அணிக்கு புதிய "ஸ்பான்சரை' தேர்வு செய்ய ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் வெளியிட்ட அறிக்கை:

இந்திய ஆண்கள், 19 வயது, "ஏ' அணி மற்றும் பெண்கள் அணிக்கு, 2014, ஜன. 1 முதல் 2017, மார்ச் 31 வரை "ஸ்பான்சர்' செய்ய, புதிய ஒப்பந்தங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதற்காக, ரூ. 2 லட்சம் மதிப்புள்ள விண்ணப்பங்கள், மும்பை வான்கடே மைதானத்தில் நவ., 11 முதல் டிச., 7 வரை கிடைக்கும். இவை டிச., 9, மதியம் 3.00 மணி வரை ஏற்கப்படும். அன்று ஒப்பந்தங்கள் சரிபார்க்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட "ஸ்பான்சர்' அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உலக கோப்பை ஹாக்கி போட்டி


2018–ம் ஆண்டுக்கான 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்த உரிமம் கேட்டு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்து இருந்தன. இதில் ஆண்கள் உலக கோப்பை போட்டியை நடத்த வாய்ப்பு கேட்டு ஆக்கி இந்தியா அனுமதி கோரி இருந்தது.

இந்த நிலையில் பல்வேறு நாடுகளின் விண்ணப்பங்களை ஆய்வு செய்த சர்வதேச ஆக்கி சம்மேளனம் 2018–ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் நாடுகளை அறிவித்துள்ளது.

இதன்படி உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி 2018–ம் ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. 

உலக கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி இங்கிலாந்தில் ஜூலை 7–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை நடக்கிறது. 

இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12–ல் இருந்து 16 ஆக உயத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஆக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி. டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்

ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் டெஸ்ட் ஆல்ரவுடண்டர் தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், முதலிடத்திற்கு முன்னேறினார். 

ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய அஸ்வின், 124 ரன்கள் குவித்ததுடன், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

இதனால் அவர் 81 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். வங்கதேச வீரர் சாகிப் அல் அசன், தென் ஆப்பிரிக்க வீரர் ஜாக்கஸ் காலிஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


இதேபோல் பேட்டிங் தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறிய அஸ்வின், இப்போது 45-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சு தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு வந்துள்ளார். 



ரோகித் சர்மா, முகமது ஷமி ஆகியோரும் சர்வதேச தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர். அறிமுக  டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த 14-வது இந்திய வீரரான ரோகித் சர்மா, பேட்டிங் தரவரிசையில் 63-வது இடத்திலும், பந்து வீச்சு தரவரிசையில் ஷமி 53-வது இடத்திலும் உள்ளனர்.



மும்பையில் 14-ம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் போட்டி முடிந்ததும், புதிய தரவரிசை வெளியிடப்படும்.

ரோகித் மாற்றத்திற்கு காரணம்

மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றபின்தான், ரோகித்தின் ஆட்டத்தில் மாற்றம் உண்டானது,'' என, இந்திய அணி ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கோல்கட்டா டெஸ்டில் இந்தியாவின் ரோகித் அறிமுக போட்டியில் சதம் விளாசினார். அணியின் முன்னிலைக்கு கைகொடுத்த இவர் குறித்து கவாஸ்கர் கூறியது: 

இந்த ஆண்டு ரோகித்துக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. கடந்த பிரிமியர் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டார். இதன் பின்தான், இவரது ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. 

இதற்கு முன்பும் கூட, இவரிடம் திறமை இருந்தது. ஆனால், விக்கெட்டின் மதிப்பு இவருக்கு தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, கேப்டன் பதவி ஏற்றதுதான், ரோகித்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். 


அசத்திய அஷ்வின்:

முக்கியமாக, கேப்டன் தோனி இவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இதன்படி, அறிமுக டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். இவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. 

சக வீரர் அஷ்வினும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக எப்படி செயல்பட்டராரோ, அதைத்தான் நேற்றும் வெளிப்படுத்தினார். தவிர, நெருக்கடியை சிறப்பாக எதிர் கொண்டார். இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

நடுவரின் தவறான முடிவு - தெண்டுல்கரின் அவுட் டில் சர்ச்சை

தெண்டுல்கர் பேட்டிங் செய்ய மைதானத்துக்கு நடந்து வந்துபோது ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கரவொலி எழுப்பினர். ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரை கைதட்டி வரவேற்றனர்.
199–வது டெஸ்டில் விளையாடும் அவர் தான் சந்தித்த 3–வது ஓவரில் 2 பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

தெண்டுல்கர் 10 ரன்னில் இருந்தபோது எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். 

ஆனால் அவரது அவுட் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெலிவிசன் ரீபிளேயில் பார்த்தபோது மிகவும் மேலாக செல்வது தெரிந்தது. அதாவது ஸ்டம்புக்கு மேலே செல்லக்கூடிய பந்துக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

இங்கிலாந்து நடுவர் லாங் இந்த தவறான முடிவை எடுத்து அவுட் கொடுத்தார். நடுவரின் இந்த மோசமான முடிவால் தெண்டுல்கர் ஏமாற்றம் அடைந்தார். 

அதோடு ரசிகர்களும் அதிருப்தி அடைந்தனர். அவரது ஆட்டத்தை காண ஈடன்கார்டன் மைதானத்துக்கு இன்று ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

பந்தை பார்த்தாலே பயம் - டுபிளசி

பந்தை நான் சேதப்படுத்தவில்லை. மக்கள் மோசடிக்காரன் என சொல்வதை கேட்டால் வருத்தமாக உள்ளது,'' என, தென் ஆப்ரிக்காவின் டுபிளசி தெரிவித்தார்.
துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், தென் ஆப்ரிக்க வீரர் டுபிளசி, பந்தை பேன்ட் ஜிப்பின் மீது தேய்த்து சேதப்படுத்தியதாக அம்பயர்கள் புகார் கூறினர். 

இதற்கு, டுபிளசிக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. 

இது குறித்து டுபிளசி கூறியது: நான் ஒரு நேர்மையான வீரர் என எனக்குத் தெரியும். கடந்த வாரத்தில் நடந்த சம்பவம் கடினமானதாக அமைந்துவிட்டது. 

மக்கள் மோசடிக்காரன் என சொல்வதை கேட்டால் வருத்தமாக உள்ளது. தற்போது, பந்தை யாராவது என் மீது எறிந்தால் கூட அதை பார்க்கவே பயமாக இருக்கிறது. 

போட்டியின்போது, பந்தை விதிக்குட்பட்டுதான் கையாண்டேன். களத்திலிருந்த அம்பயர் கூட, பந்தை பரிசோதித்தார். 

தவறு எதுவும் இருப்பதாக தெரிவிக்கவில்லை. இந்த சம்பவத்தில் இருந்து நல்ல பாடம் கற்றுக் கொண்டேன். 

இவ்வாறு டுபிளசி கூறினார்.

ரோகித் சர்மா - சாதனை வீரராக புதிய அவதாரம்

இந்திய கிரிக்கெட்டின் புதிய "ஹீரோ'வாக உருவெடுத்திருக்கிறார் ரோகித் சர்மா. ஏழாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இவர், அதிக சிக்சர் உட்பட பல சாதனைகளை படைத்து அசத்தினார். 
இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஏழாவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்தது. 

முதலில் "பேட்' செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா இரட்டை சதம் (209) அடித்து கைகொடுக்க, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 383 ரன்கள் எடுத்தது. 

கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேம்ஸ் பால்க்னர் (116), மேக்ஸ்வெல் (60) ஆறுதல் தந்தனர். ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவரில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம், தொடரை இந்திய அணி 3-2 எனக் கைப்பற்றி, கோப்பை வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது இந்தியாவின் ரோகித் சர்மா பெற்றார்.

இம்மகிழ்ச்சியில் ரோகித் சர்மா கூறியது: ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு, ஐ.சி.சி.,யின் புதிய "பீல்டிங்' விதிமுறைகள் கைகொடுத்தன. இதன்படி, கடைசி 10 ஓவரில் ஐந்து பீல்டர்கள், "30 யார்டு' வட்டத்துக்குள் நிறுத்த வேண்டும் என்பதால், அதிரடியாகவும், சுலபமாகவும் ரன் சேர்க்க முடிந்தது.

பொதுவாக போட்டியில், அதிரடி ஆட்டத்துக்கு மாற சிறிது நேரம் எடுத்துக் கொள்வேன். இதுதான் எனது பேட்டிங் ஸ்டைல். சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த போட்டியிலும் இந்த முறையை கையாண்டேன். நேற்றைய போட்டியிலும் துவக்கத்தில் நிதானமாக ஆடி, பின் அதிவேகமாக ரன் எடுத்தேன்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் "மிடில்-ஆர்டரில்' களமிறங்க தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் போட்டியில் துவக்க வீரராக களமிறக்கப்பட்டேன். இப்பணியை சிறப்பாக செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் காலங்களில் எந்த வரிசையில் களமிறங்குவேன் எனத் தெரியாது.

டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு, இலக்கு, எல்லாம். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். டெஸ்ட் போட்டியிலும் சாதிக்கும் பட்சத்தில், என்னை விட மகிழ்ச்சியான வீரர் யாரும் இருக்க முடியாது என்று தான் கூறுவேன்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

கோல்கட்டாவில் சச்சின் திருவிழா

சச்சினின் 199வது டெஸ்ட் போட்டிக்காக கோல்கட்டாவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவர், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மும்பையில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன்(நவ. 14-18) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார். இது இவரது 200வது டெஸ்ட் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 

இதற்கு முன்னதாக கோல்கட்டாவில் தனது 199வது டெஸ்டில்(நவ. 6- 10) பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தின் முன்பு சச்சினின் மெகா "கட் அவுட்'கள் வைக்கப்பட்டுள்ளன. 

இவரது சாதனை படங்கள் அடங்கிய அலங்கார வாகனத்தை நேற்று மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் ஜக்மோகன் டால்மியா, கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

இது குறித்து மேற்கு வங்க கிரிக்கெட் சங்க பொருளாளர் பிஷ்வரூப் கூறியது:

சச்சினின் 199வது டெஸ்ட் போட்டிக்கான "கவுன்ட்-டவுன்' துவங்கி விட்டது. இவரது சாதனைகளை விளக்கும் சிறப்பு வாகனம் கோல்கட்டா முழுவதும் சுமார் 200 கி.மீ., தூரத்துக்கு உலா வரும். முக்கிய இடங்களில் இவ்வாகனம் நிறுத்தப்படும். 

இதன் மூலம் போட்டியை நேரடியாக காண இயலாத ரசிகர்களும், இவரது மகத்தான கிரிக்கெட் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ளலாம்.

 இவருக்கான சிறப்பு விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கிறார். ஈடன் கார்டன் மைதானத்தின் ஒரு பகுதிக்கு இவரது பெயரை வைக்க திட்டமிட்டுள்ளோம். 

எங்களது சங்கத்தில் கவுரவ உறுப்பினர் அந்தஸ்து அளிக்க இருக்கிறோம். கோல்கட்டாவில் உள்ள காளி கோயிலுக்கு அடிக்கடி சென்று பூஜை செய்வார் சச்சின். இதையடுத்து காளியின் அருள் பெற்ற சேலை ஒன்றை சச்சின்-அஞ்சலி தம்பதிக்கு வழங்க உள்ளோம். இப்போட்டியை காண பாலிவுட் "சூப்பர் ஸ்டார்' அமிதாப், ஷாருக் கான் உள்ளிட்ட பல வி.ஐ.பி.,க்கள் வர வாய்ப்பு உள்ளது.

சச்சின் களமிறங்கும் போது வானில் இருந்து விமானம் மூலம் 199 ரோஜா இதழ்கள் தூவப்பட உள்ளன. பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பிஷ்வரூப் கூறினார்.

வாட்சன் சாதனையை முறியடித்தார் ரோகித்

ஒரு நாள் போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 16 சிக்சர்கள் அடித்து வாண வேடிக்கை நிகழ்த்தினார்.
இந்த 16 சிக்சர்கள் மூலம் அவர் வாட்சனின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.

2011–ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ஹார்னே வாட்சன், வங்காள தேசத்துக்கு எதிராக 15 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இதை ரோகித் சர்மா முந்தினார்.

ரோகித் சர்மா அதிகபட்சமாக மெக்காய், டோசர்ட்டி ஓவர்களில் தலா 5 சிக்சர்கள் அடித்தார். மேக்ஸ் லெவலுக்கு 3 சிக்சரும், பல்க்னெருக்கு 2 சிக்சரும், கோல்டருக்கு ஒரு சிக்சரும் அடித்தார்.

அதிக சிக்சர் அடித்த ‘டாப் 5’ வீரர்கள் வருமாறு:–

1. ரோகித் சர்மா (இந்தியா)– 16 சிக்சர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (பெங்களூர்).

2. வாட்சன் (ஆஸ்திரேலியா)– 15 சிக்சர் வங்காள தேசம் (டாக்கா).

3. மார்ஷல் (வெஸ்ட் இண்டீஸ்) – 12 சிக்சர். கனடா (சிங்சிட்டி).

4. ஜெய்சூர்யா (இலங்கை– 11 சிக்சர். பாகிஸ்தான் (சிங்கப்பூர்).

5. அப்ரிடி (பாகிஸ்தான்)– 11 சிக்சர். இலங்கை (நைரோபியா).

இக்கட்டான நிலையில் இஷாந்த்

ஒரு ஓவரில் இஷாந்த் சர்மாவின் நிலை தலைகீழாக மாறிவிட்டது. முன்னணி பந்துவீச்சாளராக இருந்த இவர், அணியில் இருந்து தூக்கி எறியப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 25. கடந்த 2007ல் தனது 19 வயதில் இந்திய அணியில் அறிமுகமானார். துவக்கத்தில் பவுன்சருடன் கூடிய, 145 கி.மீ., வேகத்தால் வீரர்களை மிரட்டினார். 

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்கை, சொல்லி வைத்தது போல அவுட்டாக்கி விடுவார். இப்போது 25 வயது ஆன நிலையில், பவுலிங்கில் சோர்ந்து விட்டார். 

வழக்கமான வேகத்துக்குப் பதில் 130 முதல் 135 கி.மீ., வேகத்தில் மட்டுமே பவுலிங் செய்கிறார். சரியான அளவு மற்றும் நீளம் இல்லாததால், இவரால் "டெயிலெண்டகளை' கூட வீழ்த்த முடியவில்லை. 

ஆஸ்திரேலிய தொடரில் மொத்தம் 3 போட்டியில் 24 ஓவர்கள் பவுலிங் செய்து, 189 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மூன்றாவது போட்டியில் ஒரு ஓவரில் 30 ரன்கள் விட்டுத்தர, இந்திய அணி தோற்க நேரிட்டது.

இதனால் அணியில் இருந்து எப்படியும் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி உள்ளிட்டோர் ஆதரவு கரம் நீட்ட, மீதமுள்ள 4 போட்டிகளுக்கான அணியில் மீண்டும் இடம்பெற்றார்.

இதனிடையே, கடந்த 23ம் தேதி நடந்த போட்டிக்காக, ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க மைதானத்தில், சக வீரர்களுடன் இஷாந்த் சர்மா பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மதியம் 12.30 மணி அளவில் அங்கு வந்த இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல், உறுப்பினர் சபா கரீம் ஆகியோர் இஷாந்த் சர்மாவை அழைத்தனர்.


பேசியது என்ன:

இதையடுத்து அங்கு சென்ற இஷாந்த் சர்மாவின் தோள் மேல் கையை வைத்து, சந்தீப் பாட்டீல் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். சபா கரீம், அருகில் இருந்து அமைதியாக தலையை அசைத்து கேட்டுக் கொண்டிருந்தார். அரைமணி நேரத்துக்குப் பின், அங்கிருந்து கிளம்பினர். 

பிறகு தான் அன்றைய போட்டியில் இஷாந்த் சர்மா சேர்க்கப்படவில்லை. அணியில் இருந்து வெளியேற்றும் முயற்சிக்கு, இது முதல் நடவடிக்கையாக இருக்கும் எனத் தெரிகிறது. இவரது இடத்தில் வந்த ஷமி, 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, இனி இந்திய அணியில் இஷாந்த் சர்மா இடம் பெறுவது கடினம் தான்.