சென்னை போட்டிக்கு இலவச டிக்கெட்

சென்னை அணி பங்கேற்கும் போட்டியை இலவசமாக காண வாய்ப்பு காத்திருக்கிறது.

வரும் மே 2ம் தேதி ஜார்க்கண்ட்டில் உள்ள ராஞ்சி மைதானத்தில் நடக்கும் ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. 

இதனை மாணவர்கள் இலவசமாக காண, ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ராஞ்சி மைதான வளாகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 

இவற்றை பூர்த்தி செய்து, பள்ளி முதல்வரிடம் ஒப்புதலுடன், நாளை மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

பின் குலுக்கல் முறையில் 50 அதிர்ஷ்டசாலி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொருவருக்கும் 2 டிக்கெட் இலவசமாக வழங்கப்படும். உடன் ஒருவரை(பெற்றோர்/பாதுகாப்பாளர்) அழைத்துச் சென்று போட்டியை கண்டு களிக்கலாம்.

ஐ.பி.எல்., சூதாட்டம்: ஒன்பது பேர் கைது

ஐ.பி.எல்., லீக் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

அபுதாபியில், கோல்கட்டா, பஞ்சாப் அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி நடந்தது. 

அப்போது கோல்கட்டாவில் 9 பேர் கொண்ட குழு சூதாட்டத்தில் ஈடுபட்டது. இதனை கண்டறிந்த  போலீசார், ஒன்பது பேரையும் கைது செய்தனர். 

இதுகுறித்து கோல்கட்டா போலீஸ் இணை கமிஷனர் (குற்றம்) பி.கே. கோஷ் கூறுகையில், ‘‘ஐ.பி.எல்., போட்டி தொடர்பான சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது பேரையும் கைது செய்தோம். 

ரூ. 67, 385 பணம், 11 மொபைல் போன், ‘டிவி’, ‘செட்டாப் பாக்ஸ்’ மற்றும் சூதாட்டம் தொடர்பான பேப்பர்களை பறிமுதல் செய்தோம்,’’ என்றார்.

வருத்தத்தில் சச்சின் - ஜான் ரைட்

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்த வருத்தத்தில் சச்சின் உள்ளார்,’’என,  பயிற்சியாளர் ஜான் ரைட் தெரிவித்தார்.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி விளையாடுகிறது. கடந்த தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய டுவைன் ஸ்மித் (சென்னை), மேக்ஸ்வெல் (பஞ்சாப்), மிட்சல் ஜான்சன் (பஞ்சாப்), தினேஷ் கார்த்திக் (டில்லி) வேறு அணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். 

கடந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த முன்னாள் இந்திய அணியின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சினுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கிய மும்பை அணி நிர்வாகம், அணியின் ஆலோசகராக நியமித்தது. 

இம்முறை ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய மும்பை அணி, கோல்கட்டா, பெங்களூரு, சென்னை அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்து, ‘ஹாட்ரிக்’ தோல்வியை பெற்றது.

இதுகுறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் கூறியது: இம்முறை மும்பை அணிக்காக சச்சின் விளையாட மாட்டார் என அனைவருக்கும் தெரியும். இருப்பினும், கடந்த மூன்று போட்டியில் வீரர்கள் மோசமாக விளையாடினர். இது, சச்சினுக்கு கவலை அளித்துள்ளது. 

இம்முறை பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை. பவுலிங் சிறப்பாக இருந்த போதிலும், அவர்களுக்கு அதிக அளவு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. பேட்ஸ்மேன்கள் இமாலய இலக்கை நிர்ணயிக்காமல், பவுலர்களிடம் அதிகம் எதிர்பார்க்க கூடாது. 

இதற்கு விரைவில் தீர்வு காணப்படும். பேட்டிங்கில் நிறைய மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக சில ‘ரிஸ்க்’ எடுக்க உள்ளோம்.

சென்னை அணிக்கு எதிராக ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்துவீசினார். இவரது கடைசி ஓவரில் மூன்று விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்ற முடிந்தது.

கடந்த முறை விளையாடிய வீரர்கள், இம்முறை வேறு அணிகளில் விளையாடுவது அணி நிர்வாகத்தின் முடிவு. தற்போதுள்ள வீரர்களை தயார் படுத்தி, அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும். விரைவில் மும்பை அணி எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு ஜான் ரைட் கூறினார்.

மார்னே மார்கலை சந்தித்தது யார்? மீண்டும் வெடிக்குமா சூதாட்டம்

கோல்கட்டா, ராஜஸ்தான் வீரர்களை சந்தேகத்துக்கு இடமான முறையில் சிலர் சந்தித்து ‘பிக்சிங்’ செய்ய முயற்சித்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.

ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் நடந்த ‘பிக்சிங்’, இந்திய கிரிக்கெட்டையே புரட்டி போட்டது.

இதனால், ஏழாவது தொடரை, பி.சி.சி.ஐ., மிகுந்த தீவிரமாக கண்காணித்து வருகிறது. முதல் கட்ட போட்டிகள் ‘பெட்டிங்’ உலகின் சொர்க்கபுரியான ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடப்பதால், ரவி சவானி தலைமையிலான, ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழு (ஏ.சி.எஸ்.யு.,), 24 மணி நேரமும் சூதாட்டத்தை தடுக்க போராடி வருகிறது.

இதனிடையே, கோல்கட்டா வேகப்பந்து வீச்சாளர் மார்னே மார்கலை, சிலர் சந்தேகத்துக்கு இடமான முறையில் அணுகியதாக, ஏ.சி.எஸ்.யு.,விடம் தெரிவித்துள்ளார். 

தவிர, ராஜஸ்தான் அணி வீரர்கள் தங்கியுள்ள துபாய் ஓட்டலுக்குள், சந்தேகப்படும் வகையில் பெண் ஒருவர் நுழைந்து, வீரர்களை சந்திக்க முற்பட்டதாகவும் தெரிகிறது. 

இந்த இரண்டு சம்பவங்களும், கடந்த இரு நாட்களுக்கு முன் நடந்ததாம். இதையடுத்து, ஏ.சி.எஸ்.யு., குழு தலைவர் ரவி சவானி, விசாரணை அதிகாரி நிரஞ்சன் சிங் விர்க் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து நிரஞ்சன் சிங் விர்க் கூறுகையில்,‘‘ சில விஷயங்கள் மிகவும் ரகசியமானவை. இதுகுறித்து வெளிப்படையாக விவாதிக்க முடியாது,’’ என்றார்.

IPL ஏழாவது கோப்பை யாருக்கு?

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் கோப்பை வெல்ல ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு அதிக வாய்ப்புள்ளதாம்.

மும்பையை சேர்ந்தவர் பிரபல ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ. விளையாட்டு வீரர்களின் ஜாதகத்தை துல்லியமாக கணித்து, இவர்கள் சாதிப்பதை கூறுவார்.

2011 உலக கோப்பை தொடரில் தோனி சாதிப்பார் என கணித்தார். ஐ.பி.எல்., தொடரில் 2012ல் காம்பிரின் கோல்கட்டா, 2013ல் ரோகித் சர்மாவின் மும்பை அணி கோப்பை வெல்லும் என்று சொன்னது நடந்தது.

இம்முறை ஏழாவது தொடர் துவங்கி, சில நாட்கள் தான் ஆகியுள்ளன. இந்நிலையில், இத்தொடர் குறித்து லோபோவின் கணிப்பு:

கோல்கட்டா, சென்னை, மும்பை அணிகளுக்கு இம்முறை கோப்பை கிடையாது. அதாவது தோனியின் அசாதாரணமான ஜாதக பலன் முடிந்துவிட்டது. இனி இவரால் பல அணிகள் பங்கேற்கும் தொடரில் சாதிக்க முடியாது. காம்பிர், ரோகித் ஏற்கனவே சாதித்து விட்டனர். 


டில்லிக்கு இல்லை:

டில்லி அணி கேப்டன் பீட்டர்சன் வலுவானவர் தான். பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் கிறிஸ்டன் உள்ளது, அணிக்கு எதிரான பலனை கொண்டு வருகிறது.

பெங்களூருவின் கோஹ்லிக்கு, ஐ.பி.எல்., அல்லது ஏதாவது பெரிய தொடரில் கோப்பை வெல்லும் அதிர்ஷ்டம் உள்ளது. அதேநேரம், அணியின் ஜாதகத்தை பார்க்கும் போது, சமநிலையில்லாமல் உள்ளது. 


பெய்லி எப்படி:

பஞ்சாப்பின் பெய்லி, ராஜஸ்தானின் வாட்சன் என, இருவரும் 1981, 1982ல் பிறந்தவர்கள். இவர்களது வலுவான ஜாதக பலன் காரணமாக, 2014ல் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. 

இதற்கு அடுத்து ஐதராபாத் கேப்டன் ஷிகர் தவானுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.

மறக்க முடியாத தோல்வி - யுவராஜ் கவலை

இலங்கைக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் கண்ட தோல்வியை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை,’’ என, பெங்களூரு அணியின் யுவராஜ் சிங் கவலை தெரிவித்தார்.

சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில், இந்திய அணி, இலங்கையிடம் தோல்வி அடைந்தது. 

இப்போட்டியில் மோசமாக பேட்டிங் செய்த யுவராஜ் சிங் தான் தோல்விக்கு காரணம் என செய்திகள் வௌியாகின. 

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ. 14 கோடிக்கு பெங்களூரு அணியில் யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியது: ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் கண்ட தோல்வியை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. பொதுவாக பைனல் போன்ற மிகப் பெரிய போட்டிகளை எளிதில் மறந்துவிட முடியாது. 

ஆனால் ஒரு வீரர், கடந்த கால தோல்விகளை மறந்தால் தான், அடுத்து வரும் போட்டிகளில் சாதிக்க முடியும். இத்தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் துரதிருஷ்டவசமாக பைனலில் வெற்றி பெற முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. 

ஒரு வீரர் வெற்றி, தோல்விகளை சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என இளம் வயதில் எனது பயிற்சியாளர் ஒருவர் அடிக்கடி கூறுவார்.

தற்போது 7வது ஐ.பி.எல்., தொடரில் கவனம் செலுத்தி வரும் எனக்கு, உலக கோப்பை பைனல் தோல்வியின் பிடியில் இருந்து மீளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

பெங்களூரு அணியினரோடு இணைந்து பயிற்சி மேற்கொண்டேன். கிறிஸ் கெய்ல், முத்தையா முரளிதரன், டிவிலியர்ஸ், டேனியல் வெட்டோரி, டொனால்டு போன்ற சர்வதேச வீரர்களுடன் ‘டிரஸிங் ரூமை’ பகிர்ந்து கொள்வது சுவாரஸ்யம் நிறைந்தது.

ஐ.பி.எல்., போட்டிகள் முதன்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடப்பதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களும் அதிக அளவில் ஆதரவு அளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

மும்பை அணியை வாங்குகிறார் சச்சின்

கொச்சி கால்பந்து அணியை வாங்கிய கிரிக்கெட் வீரர் சச்சின், தற்போது சர்வதேச டென்னிஸ் பிரிமியர் லீக் தொடரில், மும்பை அணியை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.        
         
ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ கிரிக்கெட் வந்த பின், பல விளையாட்டுகள் இந்த பாணியில் களமிறங்கி விட்டன. ஹாக்கி, பாட்மின்டன், குத்துச்சண்டை, கோல்ப் வரிசையில் கால்பந்தும், டென்னிசும் இணைந்தன. 
            
இதில், எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர் வரும் செப்டம்பர்–நவம்பரில் நடக்க உள்ளது. இத்தொடருக்கு, இந்திய கால்பந்து கூட்டமைப்பு(ஏ.ஐ.ஐ.எப்.,) அங்கீகாரம் அளித்தது.         
            
இத்தொடரில் பங்கேற்கும் கொச்சி அணியை பி.வி.பி., வென்ச்சர்ஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இணைந்து வாங்கினர். இப்போது, மகேஷ் பூபதி துவங்கவுள்ள சர்வதேச டென்னிஸ் லீக் தொடரிலும் கால்பதிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் நவ., 28 முதல் டிச., 13 வரை நடக்கும் இத்தொடரில் மும்பை, துபாய், சிங்கப்பூர் மற்றும் பாங்காக் என, நான்கு அணிகள் பங்கேற்கின்றன.     
  
இந்தியா சார்பிலான மும்பை அணியில் உலகின் ‘நம்பர்–1’ வீரர் ஸ்பெயினின் நடால், இந்தியாவின் சானியா மிர்சா, பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா), இவானோவிச் (செர்பியா) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.       

நேற்று முன்தினம் கொச்சி கால்பந்து அணியை வாங்கிய பி.வி.பி., வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்த மும்பை டென்னிஸ் அணியையும் வாங்குகிறது.       

இந்நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், டென்னிஸ் அணியையும் விரைவில் வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.       
இதுகுறித்து பி.வி.பி., வென்ச்சர்ஸ் தலைவர் பிரசாத் பொட்லுரி கூறுகையில்,‘‘ கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். 

இந்த வரிசையில் இந்தியன் பாட்மின்டன் லீக் தொடரில் ஐதராபாத் அணி, சர்வதேச டென்னிஸ் லீக் தொடரில் மும்பை அணி, மற்றும் கால்பந்து தொடரில் கொச்சி அணிகளில் முதலீடு செய்கிறோம். இதில் சச்சின் போன்ற ஜாம்பவான்கள் எங்களோடு இணைந்தது மிகவும் சிறப்பானது,’’ என்றார்.

சர்ச்சையை கடந்து சாதிப்போம் - ரெய்னா நம்பிக்கை

சூதாட்டம் தொடர்பான சர்ச்சைகள், சென்னை அணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது,’’ என, ரெய்னா தெரிவித்தார்.

ஆறாவது பிரிமியர் லீக் தொடரில் வெடித்த சூதாட்ட சர்ச்சையில் சென்னை அணியின் சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கினர். 

இது தொடர்பாக விசாரித்த நீதிபதி முத்கல் கமிட்டியிடம் சென்னை அணி கேப்டன் தோனி தவறான வாக்குமூலம் அளித்தததாக இன்னொரு சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், ஏழாவது பிரிமியர் லீக் தொடர் வரும் ஏப்., 16ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) துவங்குகிறது.

இதுகுறித்து சென்னை அணியின் ரெய்னா கூறியது: ஏழாவது பிரிமியர் லீக் தொடருக்கு சில புதிய வீரர்கள் எங்கள் அணியில் இணைந்துள்ளனர். பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித் உள்ளிட்டோரின் புதிய வரவால் பேட்டிங்கின் பலம் அதிகரித்துள்ளது. 

கேப்டன் தோனி அணிக்கு கூடுதல் வலு சேர்க்கிறார். இதேபோல வெஸ்ட் இண்டீசின் சாமுவேல் பத்ரி, சுழற்பந்துவீச்சின் பலத்தை அதிகரித்துள்ளார்.

சூதாட்ட சர்ச்சைகள் குறித்த செய்திகள் எங்கள் அணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. தற்போது எங்கள் கவனம் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி தேடித் தருவதில் மட்டுமே உள்ளது.

கடந்த ஆறு தொடர்களில் சென்னை அணிக்காக விளையாடும் வாய்ப்பை வழங்கிய கடவுளுக்கும், அணி நிர்வாகத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) ஆடுகளங்கள் குறித்து எவ்வித நெருக்கடியும் இல்லை. 2006ல் அபுதாபியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலியுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது என்னை பாராட்டிய அவர், பேட்டிங் குறித்து நிறைய ஆலோசனைகள் வழங்கினார். பிரிமியர் லீக் தொடரில் முழுத்திறமையை வெளிப்படுத்துவேன்.

இவ்வாறு ரெய்னா கூறினார்.

கோஹ்லியை முந்தினார் தோனி

விளம்பர உலகில் கொடி கட்டிப்பறக்கிறார் கேப்டன் தோனி. ஒரு பொருளுக்கு ‘மாடலாக’ தோன்ற ஆண்டுக்கு ரூ. 13 கோடி பெறுகிறார். இதன் மூலம் விராத் கோஹ்லியை முந்தினார்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனி. இரண்டு உலக கோப்பை பெற்றுத் தந்த இவர், திடீரென சரிவை சந்தித்தார். பிரிமியர் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ள இவர், சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார். 

சமீபத்தில் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பைனலில் தோற்று, சாம்பியன் வாய்ப்பை இழந்தது. இது போன்ற விஷயங்கள் தோனியின் மவுசை துளி அளவும் குறைக்கவில்லை.

கடந்த ஆண்டு ஒரு பொருளுக்கு விளம்பர ‘மாடலாக’ தோன்ற ரூ. 8 கோடி பெற்றார். இந்த நேரத்தில் ‘அடிடாஸ்’ நிறுவனத்துடன் ரூ. 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்த கோஹ்லி, முதலிடத்துக்கு முந்தினார்.

தற்போது தோனியின் செல்வாக்கு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இவரது வர்த்தக மதிப்பு 60 சதவீதம் உயர்ந்துள்ளது. முன்பு ரூ. 8 கோடி பெற்ற இவர், இப்போது ஒரு பொருளுக்கு ‘மாடலாக’ தோன்ற ரூ. 13 கோடி சம்பளமாக பெறுகிறார். 

இதன் மூலம் நாட்டின் ‘காஸ்ட்லியான’ கிரிக்கெட் வீரரானார். எக்சைட், பெப்சி, ஏர்செல், ரீபோக் உள்ளிட்ட 21 பொருட்களுக்கு ‘மாடலாக’ உள்ளார். விளம்பரங்களில் தோன்ற அதிக தொகை பெறுபவர்கள் வரிசையில் பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு(ஒரு பொருளுக்கு ரூ. 15 கோடி) அடுத்த இடத்தில் உள்ளார்.

இது குறித்து கொலாஜ் ஸ்போர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் லத்திகா கனேஜா கூறுகையில்,‘‘தொடர்ந்து நிலையான ஆட்டத்தை தோனி வெளிப்படுத்தி வருகிறார். இந்திய ரசிகர்கள் எதையும் எளிதில் மறந்து விடுவதும் இவருக்கு சாதகம்,’’என்றார்.

ஆஸ்திரேலிய விளம்பர நிறுவன பிரதிநிதி ஒருவர் கூறுகையில்,‘‘கிரிக்கெட் களத்தில் கடினமாக உழைக்கக்கூடியவர் தோனி. மூன்றுவிதமான போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக உள்ளார். 

பிரிமியர் தொடரில் சென்னை அணியை வழிநடத்துகிறார். புதுமையான ‘ஸ்டைலில்’ விளையாடுவதால், இவரை விளம்பர நிறுவனங்கள் மொய்க்கின்றன,’’என்றார்.

தோனியை கடந்த 2010ல் மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 210 கோடிக்கு ஒப்பந்தம் செய்த ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவன தலைவர் அருண் பாண்டே கூறுகையில்,‘‘தோனியை சமீபத்தில் 6 முதல் 8 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்தன. இவரது செல்வாக்கு தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது,’’என்றார்.

சாதிப்பாரா தினேஷ் கார்த்திக் - டில்லி அணி எதிர்பார்ப்பு

அதிக தொகைக்கு ஏலம் எடுத்திருப்பதால், டில்லி அணிக்கு என் மீது எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும்,’’ என, தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக்,28. தமிழகத்தை சேர்ந்த விக்கெட்கீப்பர்+பேட்ஸ்மேனான இவர், வரும் 16ம் தேதி துவங்கும் பிரிமியர் தொடரில் டில்லி அணிக்காக பங்கேற்க உள்ளார். இவரை டில்லி அணி ரூ. 12.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியது:

டில்லி அணி என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது. அதிக பணம் முதலீடு செய்திருப்பதால் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். இது எனக்கு நெருக்கடியும் ஏற்படுத்துகிறது. 

ஆனால், அதிக பணம் தருவதற்காகவோ அல்லது குறைவாக கொடுப்பதற்காவோ செயல்பட மாட்டேன். என் சிறப்பான திறமையை எப்போதும் வெளிப்படுத்துவேன். டில்லி அணியின் பயிற்சி முகாம் இன்று துவங்குகிறது. பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், சக வீரர்களை சந்திக்கவுள்ளேன்.

பல திறமையான வீரர்கள் எங்கள் அணியில் உள்ளனர். கேப்டன் கெவின் பீட்டர்சன், ராஸ் டெய்லர் இருப்பது ஊக்கத்தை தருகிறது. 

இந்திய அணியில் உள்ள வீரர்கள் அதிகமானோர் டில்லி அணியில் இல்லை. இருப்பினும், சுழலுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்திற்கு ஏற்றாற்போல செயல்பட, ராகுல் சர்மா, நதீம் உள்ளனர். 

சையது முஷ்டாக் டிராபி போன்ற உள்ளூர் தொடரின் செயல்பாட்டை வைத்து என் ‘பார்மை’ சொல்லிவிட முடியாது. ஏனெனில், பிரிமியர் தொடர் வித்தியாசமானது. இதில் திறமையாக விளையாடினால், எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம்பெறலாம்.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார். 

யுவராஜ் சிங் வீட்டின் மீது கல்வீச்சு

டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் சொதப்பிய யுவராஜ் சிங் வீட்டின் மீது ரசிகர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

வங்கதேசத்தில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் பைனல் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 

இந்திய அணியின் பேட்டிங்கின் போது, 21 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் மட்டும் எடுத்து வெறுப்பேற்றினார் யுவராஜ் சிங். இது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கடந்த 2007ல் நடந்த ‘டுவென்டி–20’ கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 6 பந்தில் 6 சிக்சர் அடித்த யுவராஜ் சிங், பைனலில் இப்படி பந்துகளை வீணடித்ததை, ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதையடுத்து கோபமடைந்த ரசிகர்கள், நேற்று முன்தினம் இரவு சண்டிகரில் உள்ள யுவராஜ் சிங் வீடு மீது, கல்வீசி தாக்கினர். அடையாளம் தெரியாத நபர்கள், மூன்று கார்களில் யுவராஜ் சிங் வீடு அருகே காணப்பட்டனர்.

விரைந்து வந்த போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இப்போது, யுவராஜ் சிங் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


தந்தை ஆதரவு:

யுவராஜ் சிங் தந்தையும் முன்னாள் வீரருமான யோகராஜ் கூறுகையில்,‘‘ வெற்றி அல்லது தோல்வி, ஏற்றம் அல்லது இறக்கம் எல்லாம் விளையாட்டில் சகஜம். தோல்வி அடையும்போது பலதரப்பில் இருந்து விமர்சனங்கள் வரத்தான் செய்யும். பைனலில், இந்திய அணி அடைந்த தோல்விக்கு யுவராஜ் சிங் ஒருவரை மட்டும் குற்றம் சுமத்தக் கூடாது. இவர் அதிகமான உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்,’’ என்றார்.


தோனி வெறுப்பு:

இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:

வந்த வேகத்தில் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடுவது என்பது அவ்வளவு எளிதல்ல. யுவராஜ் சிங் முடிந்தவரை நன்றாகத்தான் செயல்படத்தான் முயன்றார். என்ன செய்ய, அன்று அவரது நாளாக அமையவில்லை.

40,000 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில், எந்த வீரரும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என, விரும்பமாட்டார். ‘கேட்சை’ கோட்டை விட நினைக்க மாட்டார்.

ஆனால், மோசமான நாளாகி விட்டால் எல்லாம் நடக்கும். அனைத்து வீரர்களுக்கும் இப்படி நடப்பது இயற்கை. இது போலத்தான் யுவராஜ் சிங்கிற்கு நடந்தது. இதனால், ஒருவரை மட்டும் குறித்து பேசுவது சரியல்ல.

இவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்கின்றனர். இப்போது சர்வதேச போட்டிகள் முடிந்துவிட்டன. அடுத்து உள்ளூர் சீசன் (பிரிமியர்) துவங்குகிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிக்கு அதிக இடைவெளி உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசுவது சரியல்ல.

இவ்வாறு தோனி கூறினார்.

கோஹ்லியை விரட்டும் வீராங்கனை

இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டேனியலி ஹயாத், விராத் கோஹ்லியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி, 25. ‘சேஸ்’ மன்னனான இவர், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை அரையிறுதியில், 44 பந்தில் 72 ரன்கள் எடுத்து, அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றார்.

இவரது ஆட்டத்தை பார்த்து மயங்கி விட்டார், இங்கிலாந்து பெண்கள் அணி ‘ஆல்– ரவுண்டர்’ டேனியலி ஹயாத், 22.

இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் விளையாடவுள்ள இவர், ‘விராத் கோஹ்லி என்னை திருமணம் செய்யுங்கள்,’ என, ‘டுவிட்டர்’  இணையதளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த பலர், ‘விராத் கோஹ்லியை ஏற்கனவே பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ‘புக்’ செய்துள்ளார்,’ என, தெரிவித்துள்ளனர்.

சச்சினுக்கு கவுரவம்

பக்ரைனில் நடக்கவுள்ள ‘பார்முலா–1’ கார்பந்தயத்தை, சச்சின் முதல் முறையாக காணவுள்ளார்.

இந்த ஆண்டுக்கான மூன்றாவது சுற்று கிராண்ட்பிரிக்ஸ் ‘பார்முலா–1’ கார்பந்தயம் பக்ரைனில் நாளை நடக்கிறது. 

இங்கு, கிரிக்கெட் ரசிகர்கள்  இல்லையெனிலும், ஜாம்பவான் சச்சினுக்கு மதிப்பு அதிகம். 

இந்நிலையில், இவரின் சாதனையை கவுரவிக்கும் வகையில், ‘பார்முலா–1’ தொடரை காண, பக்ரைன் இளவரசர் சல்மான் பின் ஹமத் சச்சினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

சச்சினும், தனது குடும்பத்துடன் செல்லவுள்ளார். இத்தொடர் இரவில் நடக்க இருப்பது சிறப்பம்சம்.

சச்சின், எப்போதுமே கார்பந்தயப்பிரியர். ஏற்கனவே, 29வது டெஸ்ட் சதத்தை 2002ல் எட்டியபோது, கார்பந்தய வீரர் சூமாக்கர், பெராரி காரை இவருக்கு பரிசாக தந்தார். தவிர, கடந்த 2011ல் நடந்த இந்திய ‘பார்முலா–1’ தொடரை கண்டு ரசித்தார். 

IPL 7 தொடர் டிக்கெட் விற்பனை துவக்கம்

ஏழாவது பிரிமியர் தொடருக்கான டிக்கெட் விற்பனை, இணையதளத்தில் இன்று துவங்குகிறது.

இந்தியாவில் ‘டுவென்டி–20’ கிரிக்கெட் போட்டியாக நடத்தப்படுவது பிரிமியர் தொடர். இம்முறை, இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடப்பதால், பாதுகாப்பு தர முடியாது என மத்திய அரசு தெரிவித்தது. 

இதனால், ஏழாவது தொடர் 3 கட்டமாக நடக்கவுள்ளது. முதல் கட்டம் இம்மாதம் 16ம் தேதி முதல் 30 வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இங்கு, அபுதாபி, துபாய், ஷார்ஜா என மூன்று இடங்களில் போட்டிகள் நடக்கின்றன. 

அபுதாபியில் 16ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் மோதுகின்றன. இதற்கான ‘டிக்கெட்’ இன்று முதல் www.iplt20.com இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 


குறைந்தது 325:

அபுதாபியில் நடக்கவுள்ள போட்டிக்கான டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ. 325. அதே நேரத்தில், இரண்டு போட்டிகளை பார்ப்பதற்கான ரூ.488 மட்டுமே. துபாயில் ஒரு போட்டிக்கு ரூ. 488ம், இரண்டு போட்டிக்கு ரூ. 814ம் வசூலிக்கப்படும். ஷார்ஜாவில் ஒரு போட்டிக்கு ரூ. 488ம், இரண்டு போட்டிக்கு ரூ. 651ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவர் கவாஸ்கர்(பிரிமியர் பணிகள் மட்டும்) கூறுகையில்,‘‘ ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த சில ஆண்டுகளாக, நேரத்தை செலவழித்துள்ளேன். தற்போது, இங்கு பிரிமியர் தொடர் துவங்குவது உற்சாகத்தை தருகிறது,’’ என்றார். 

பிரிமியர் தொடர் செயற்குழு தலைவர் ரஞ்சிப் பிஸ்வால் கூறுகையில்,‘‘ பிரிமியர் தொடருக்காக, சிறப்பான ஏற்பாடுகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு செய்துள்ளது. இதற்காக இவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இதில், உலகம் முழுவதும் உள்ள வீரர்கள் கலந்து கொள்வர்,’’ என்றார்.

மிஸ்ரா சுழலா? ஸ்டைன் புயலா?

டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில், இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் முதன் முறையாக அரையிறுதியில் மோதவுள்ளன. 

இதில் சாதிக்கப் போவது அமித் மிஸ்ரா அடங்கிய இந்திய ‘சுழல்’கூட்டணியா அல்லது ஸ்டைனின் புயல் வேகப்பந்துவீச்சா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐந்தாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் பங்கேற்ற 16 அணிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட மொத்தம் 12 அணிகள் வெளியேறிவிட்டன.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் ஏப்., 4ல் நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது.


முதல் அணி:

கடந்த 2007ல் கோப்பை வென்ற பின் இந்திய அணி, அடுத்த மூன்று தொடர்களில் ஒருமுறை கூட ‘சூப்பர்–8’ சுற்றினை தாண்டவில்லை. 7 ஆண்டுக்குப் பின் இம்முறை, முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

தொடர் துவங்கும் முன், ‘இந்திய அணியின் பவுலிங் திறனை பார்க்கும் போது, இம்முறையும் அரையிறுதிக்கு செல்வது கடினம் தான்,’ என, விமர்சனங்கள் இருந்தன. 


‘சுழல்’ கூட்டணி:

கடைசியில் அத்தனை கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி ஜோராக வெற்றி நடை போடுகிறது அமித் மிஸ்ரா (9 விக்.,), அஷ்வின் (7), ரவிந்திர ஜடேஜாவின் (5) ‘சுழல்’ கூட்டணி. 

இதுவரை நடந்த நான்கு லீக் போட்டிகளில் இவர்கள் மொத்தம் 21 விக்கெட் சாய்த்து, இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இது தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான அரையிறுதியிலும் தொடரும் என நம்பப்படுகிறது.


வெற்றி அதிகம்:

ஏனெனில், வழக்கமாக சுழற்பந்து வீச்சில் இந்த அணி திணறும். இதற்கு முன் நடந்த நான்கு உலக கோப்பை தொடர்களில் இரு அணிகளும், மோதிய 4 போட்டிகளில் இந்தியா 3ல் வென்றுள்ளது.


ஸ்டைன் மிரட்டல்:

அதேநேரம், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான சமீபத்திய போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதற்கு ‘புயல்’ வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைன் முக்கிய காரணம்.

இவர், ‘டுவென்டி–20’ உலக கோப்பை அரங்கில் இதுவரை பங்கேற்ற 20 போட்டிகளில் 29 விக்கெட் சாய்த்துள்ளார். இம்முறையும் 9 விக்கெட் (4 போட்டி) வீழ்த்தியுள்ளார். 

உலகக்கோப்பை T20 - ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றி

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், வங்காளதேசமும் மோதின. 

இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்ததால் இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாய ஆட்டமாக இருந்தது.

டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய தமீம் இக்பால் 5 ரன்னிலும், அனமுல் ஹாக் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து வந்த சாகிப் அல் ஹசனும், முஷ்பிகுர் ரஹிமும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய சாகிப் அல் ஹசன் 66 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹிம் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. 

தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச் 71 ரன்களும், டேவிட் வார்னர் 48 ரன்களும் விளாசி வலுவான அடித்தளம் அமைத்தனர். பின்னர் வந்த மேக்ஸ்வெல் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

பின்னர் இணைந்த ஒயிட்-பெய்லி ஜோடி வெற்றி இலக்கை எட்டியது. இதனால், ஆஸ்திரேலியா அணி 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆரோன் பிஞ்ச் ஆட்டநாயகன் விருது பெற்றார். இது ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றியாகும்.