தொடரை வென்றால் மட்டுமே 'பார்ட்டி'

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான டிராவிட் கூறுகையில், செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்றோம்.

டர்பனில் நடந்த போட்டியில் கவுரவமான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். இந்த வெற்றியை நாங்கள் பெரிதாக கொண்டாடவில்லை.

கேப்டவுன் டெஸ்டிலும் வெற்றி பெற்றால்தான் எங்களுடைய பயணம் முழு வெற்றியை பெறும். அதற்காகக் காத்திருக்கிறோம்.

எங்களுடைய எண்ணம் எல்லாம் அந்தப் போட்டியை வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்பது தான். அதற்கு பின்னர் தான் வெற்றியை கொண்டாடு வோம் என்றார்.

ஒருநாள் தொடர்: சேவக் நீக்கம்

தென் ஆப்ரிக்காவுடனான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு. காயம் காரணமாக வீரர் சேவக் நீக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், ஒரு "டுவென்டி-20' மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.

தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, வரும் ஜன.9ம் தேதி "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்கிறது. அதன்பின் அடுத்த மாதம் 12ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இடம் பிடித்திருந்த துவக்க வீரர் சேவக், தோள் பட்டை காயம் காரணமாக விலகினார். கடந்த மே மாதம், தோள் பட்டை காயம் காரணமாக இவர், "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை.

ஆனால் இவர் வரும் ஜன.2ம் தேதி கேப்டவுனில் துவங்கும் 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார். ஒருநாள் தொடரில் இவருக்கு பதிலாக ரோகித் சர்மா புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் முரளி விஜய் ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செயலாளர் சீனிவாசன் கூறுகையில், ""தோள் பட்டை காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகும் படி சேவக் அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால் இவருக்கு பதிலாக ரோகித் சர்மா விளையாடுவார். தவிர, அணியில் 17வது வீரராக முரளி விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்,'' என்றார்.


இந்திய அணி விபரம்:

தோனி (கேப்டன்), காம்பிர், சச்சின், விராத் கோஹ்லி, ரெய்னா, யுவராஜ் சிங், ரோகித் சர்மா, முரளி விஜய், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், ஆஷிஸ் நெஹ்ரா, பிரவீண் குமார், முனாப் படேல், அஷ்வின், யூசுப் பதான், ஸ்ரீசாந்த், பியுஸ் சாவ்லா.

ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள்

4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2011) ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்தப்போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் பெங்களூரில் நடக்கிறது.

ஏற்கனவே 3 ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடிய வீரர்களில் 12 பேர்தான் அந்தந்த அணிகளில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை, மும்பை அணியிலும் தலா 4 பேரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 பேரும், டெல்லி, பெங்களூர் அணியில் தலா ஒருவரும் நீடிக்கப்பட்டு உள்ளனர்.

மொத்தம் 421 வீரர் ஏலப்பட்டியலில் இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 350 வீரர்கள் ஏலத்தில் உள்ளனர்.

ஏலத்தில் உள்ள முக்கிய வீரர்கள் நாடு வாரியாக வருமாறு:-

இந்தியா: காம்பீர், யுவராஜ் சிங், யூசுப் பதான், ஜாகீர்கான், டிராவிட், கங்குலி, கும்ப்ளே, நெக்ரா.

ஆஸ்திரேலியா: கில்ஹிஸ்ட், மைக்ஹஸ்சி, ஷான் மார்ஷ், பெர்ட்லீ, வார்னர், நானஸ்

இங்கிலாந்து: பீட்டர்சன், ஆண்டர்சன், சுவான், மார்கன், பிரையர்.

இலங்கை: தில்சான், சங்ககரா, ஜெயவர்த்தனே, மெண்டீஸ்.

தென் ஆப்பிரிக்கா: சுமித், காலிஸ், டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன்.

வெஸ்ட்இண்டீஸ்: லாரா, டாரன் பிராவோ, வெய்ன் பிராவோ, கிறிஸ்கெய்ல்.

நியூசிலாந்து: வெட்டோரி, மேக்குல்லம், டெய்லர்.

டெஸ்ட் நட்சத்திரம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் ஜஸ்டின் லாங்கர். ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் பல வெற்றிகளைக் குவிக்க இவரது சிறப்பான ஆட்டம் முக்கியப்பங்கு வகித்தது.


ஜஸ்டின் லீ லாங்கர் 1970-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் பிறந்தார். இடதுகை ஆட்டக்காரரான இவர், 1993-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் அறிமுக வீரராக களம் கண்டார்.


ஆரம்பத்தில் மூன்றாவது வீரராக களமிறங்கிய லாங்கர், 2001-ல் மைக்கேல் ஸ்லேட்டரின் ஓய்வுக்குப் பிறகு ஹைடனுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கி ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். 44 டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி 14 சதங்கள் விளாசியுள்ளார்.


2002-2003-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் 250 ரன்கள் குவித்து தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தார்.


2005-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 305 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருதை வென்றார். அதன் பிறகு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் தனது இடத்தை இழந்தார்.


பின்னர் மீண்டும் அணிக்குத் திரும்பி சில காலம் விளையாடினார். ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி அணியில் 1994-ல் லாங்கர் இடம் பிடித்தார். எனினும் 1997-க்குப் பிறகு அவருக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை.


2001-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மட்டும் இவர் ஒரு ஓவர் வீசியுள்ளார். இதேபோல் 8 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். டெஸ்ட் ஆட்டத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 54.22.


லாங்கர் 2007-ம் ஆண்டு ஆஷஸ் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23 சதம், 30 அரைசதம் உள்பட 7,696 ரன்களையும், 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 160 ரன்களையும் எடுத்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் சமர்செட் அணிக்காக விளையாடி வருகிறார்.

நடுவரிடம் வாக்குவாதம்: பாண்டிங்குக்கு அபராதம்

ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு போட்டி ஊதியத்தில் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலிய வீரர் ரியான் ஹாரிஸ், பீட்டர்சனுக்கு பந்து வீசினார். அப்போது பந்து பீட்டர்சன் பேட்டில் பட்டதாகக் கூறி விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் அவுட் கேட்டார்.

இதையடுத்து நடுவர் அலீம் தார், மற்றொரு கள நடுவர் டோனி ஹில்லிடம் இதுகுறித்து கேட்டார். அதன்பிறகு பந்து பேட்டில் படவில்லை என்று அவர் அறிவித்தார்.


இதனால் ஆத்திரமடைந்த ரிக்கி பாண்டிங், நடுவரிடம் நீண்ட நேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


பாண்டிங்கின் ஒழுங்கீனமான நடவடிக்கையால் அதிருப்திக்குள்ளான மேட்ச் ரெப்ரி ரஞ்சன் மடுகலே, பாண்டிங் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, நடுவரிடம் நீண்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு | 2 லட்சத்து 44 ஆயிரத்தை அபராதமாக விதித்து உத்தரவிட்டார்.

பாண்டிங்கின் செயல் ஏற்கமுடியாதது என்றும் மேட்ச் ரெப்ரி மடுகலே தெரிவித்துள்ளார்.

சிறந்த லெக் ஸ்பின்னர்

சிறந்த லெக் ஸ்பின்னராக திகழ்ந்தவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உபுல் சந்தனா.

இவர் 1972-ம் ஆண்டு மே 7-ம் தேதி இலங்கையின் காலே நகரில் பிறந்தார். இவர் காலேயில் உள்ள மகிந்தா கல்லூரியில் படித்தபோது கிரிக்கெட் விளையாடத் தொடங்கினர். சிறந்த லெக் ஸ்பின்னர், பேட்ஸ்மேன், பீல்டர் என பன்முகத் திறன் கொண்டவராகத் திகழ்ந்தார்.


1994-ம் ஆண்டு தனது 21-வது வயதில் இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்தார். அதன்பிறகு டெஸ்ட் போட்டியில் இடம்பிடிக்க 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. பாகிஸ்தானுக்கு எதிரான அறிமுக டெஸ்டில் 48 ஓவர்களை வீசி 179 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இலங்கையின் சிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர், பேட்டிங்கில் பின்வரிசையில் களமிறங்கி பலமுறை இலங்கை அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 7 அரைசதங்களையும் விளாசியுள்ளார்.

2003-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 5-வது வீரராக களமிறங்கி 71 பந்துகளில் 89 ரன்களை குவித்து இலங்கை அணி வெற்றி இலக்கான 313 ரன்களை எட்டுவதற்கு உதவினார்.


2007-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 616 ரன்களையும், 37 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,627 ரன்களை எடுத்துள்ளதோடு, 151 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிதான் டாப்

செஞ்சுரியன் டெஸ்டில் சச்சின் விளாசிய 50வது சதம் மற்றும் இங்கிலாந்து & ஆஸ்திரேலிய அணிகளிடையே நடக்கும் சுவாரசியமான ஆஷஸ் தொடரால் டெஸ்ட் போட்டிகளின் முக்கியத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை செயலதிகாரி ஹாரூன் லார்கட் கூறியுள்ளார்.

இது குறித்து துபாயில் நேற்று அவர் கூறியதாவது: ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும் என்ற அச்சம் அர்த்தமற்றது. நம்பர் 1 யார் என்பதில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகளிடையே நடக்கும் பலப்பரீட்சை, இங்கிலாந்து & ஆஸ்திரேலிய அணிகளிடையே நடக்கும் ஆஷஸ் மோதல் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


எல்லா நாட்டு ரசிகர்களுமே இந்த தொடர்களை ஆவலோடு பார்த்து வருகின்றனர். ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளை பார்க்க இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மெல்பர்னில் நடக்கவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கு, 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் டிக்கெட் வாங்கியிருப்பது உற்சாகம் அளிக்கிறது.

செஞ்சுரியன் டெஸ்டில் சச்சின் விளாசிய 50வது சதம், அதே டெஸ்டில் காலிஸ் தனது முதலாவது இரட்டை சதத்தை அடித்தது, முரளிதரன் 800 விக்கெட் வீழ்த்தியது,


கிறிஸ் கேல் முச்சதம் விளாசியது என்று இந்த ஆண்டு முழுவதுமே டெஸ்ட் போட்டிகளில் அபாரமான சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. சுவாரசியமான, விறுவிறுப்பான ஆட்டங்கள் கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிதான் டாப் என்பதை நிரூபித்துள்ளன. வெகு விரைவில் அறிமுகமாக உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெறும் என்பதில்
சந்தேகமே இல்லை.


இவ்வாறு லார்கட் கூறியுள்ளார்

ஐ.பி.எல்.லுடன் கை கோத்தது ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன்

ஐபிஎல் போட்டியின் 5-வது மற்றும் 6-வது சீசனில் அதிகாரப்பூர்வ விளம்பர பங்குதாரராக ஐரோப்பாவின் ஆட்டோமொபைல் துறையில் உள்ள முன்னணி நிறுவனமான வோல்க்ஸ்வேகன் ஒப்பந்தம் செய்துள்ளது.


தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ மற்றும் ஐபிஎல் கூட்டத்திற்குப் பின் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.


வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஜெர்மனியின் முதல் சொகுசுக்கார் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.


வோல்க்ஸ்வேகன் நிறுவனத்துடன் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ஐபிஎல் ஆணையர் சிரயூ அமீன் தெரிவித்துள்ளார்.


இதன்மூலம் ஐபிஎல் 5 மற்றும் 6-வது சீசனில் மைதானங்களில் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் விளம்பரங்கள் பெருமளவில் இடம்பெறும்.

அடுத்த சச்சின் உருவாகிறார்

சச்சின் போன்ற மகத்தான வீரர்களை உருவாக்கிய மும்பை மண்ணில் இருந்து இன்னொரு சாதனையாளராக 13 வயதான அர்மான் ஜாபர் உருவெடுத்துள்ளார். இவர் பள்ளி அளவிலான போட்டியில் 498 ரன்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.

மும்பையில் கைல்ஸ் ஷீல்டு லீக் கிரிக்கெட் போட்டி(14 வயதுக்குட்பட்ட) நடக்கிறது. இதில், பந்த்ரா ரிஸ்வி ஸ்பிரிங்பீல்டு மற்றும் ராஜா சிவாஜி பள்ளிகள் மோதின. ஸ்பிரிங்பீல்டு பள்ளிக்காக விளையாடிய அர்மான் "சூப்பராக' பேட் செய்தார்.

மொத்தம் 77 பவுண்டரிகள் அடித்த இவர் 490 பந்துகளில் 498 ரன்களை குவித்தார். இதன் மூலம் பள்ளி அளவிலான போட்டிகளில் அதிக ரன் எடுத்து சாதனை படைத்தார். இதற்கு முன் ராஜா சிவாஜி பள்ளியின் பரிக்ஷத் வல்சங்கர் 366 ரன்கள் எடுத்திருந்தார்.

தவிர, கடந்த ஆண்டு ஹாரிஸ் ஷீல்டு பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில்(16 வயதுக்கு உட்பட்ட) அதிக ரன் எடுத்த சர்பராஸ் கான்(439) சாதனையையும் தகர்த்தார். அர்மான் இன்னும் 2 ரன்கள் எடுத்திருந்தால் 500 ரன்களை எட்டியிருக்கலாம். ஆனால் 498 ரன்களில் அவுட்டாகி விட்டார். இதையடுத்து ரிஸ்வி பள்ளி 8 விக்கெட்டுக்கு 800 ரன்களுக்கு "டிக்ளேர்' செய்தது.

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும் மும்பை ரஞ்சி அணியின் கேப்டனுமான வாசிம் ஜாபரின் உறவினர் தான் அர்மான்.

தனது சாதனை குறித்து அர்மான் கூறுகையில்,""பள்ளி அளவிலான போட்டிகளில் காம்ப்ளியுடன் சேர்ந்து 664 ரன்கள் சேர்த்த சச்சின் தான் எனது "ரோல் மாடல்'. எனது உறவினர் வாசிம் ஜாபர் அவ்வப்போது பயிற்சி அளிப்பார்.

நான் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடவில்லை. நீண்ட நேரம் பேட் செய்ய வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. 500 ரன்களை எட்ட தவறியது ஏமாற்றம் அளித்தது,''என்றார்.

சாதனை வீரருக்கு பாராட்டு மழை

டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து வரலாறு படைத்த சச்சினுக்கு பாராட்டு மழை குவிகிறது. இவருக்கு நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டுமென இந்திய ஒலிம்பிக் சங்க துணை தலைவர் வி.கே.மல்கோத்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்தது. இப்போட்டியின் 2 வது இன்னிங்சில் சச்சின் (111*) சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 50 சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். புதிய சாதனை படைத்த சச்சினுக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வி.கே. மல்கோத்ரா(ஒலிம்பிக் சங்க துணை தலைவர்):

டெஸ்டில் 50வது சதத்தை எட்டிய சச்சின் மகத்தான சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தனக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தேசத்துக்கே பெருமை சேர்த்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக திகழ்கிறார்.

இந்த நேரத்தில் அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். நாட்டுக்காக இன்னும் பல ஆண்டுகள் விளையாட காத்திருக்கிறார். இது வரை இவர் உலக கோப்பை மட்டும் வெல்லவில்லை. அதனையும் வென்று சாதிப்பார் என நம்புகிறேன்.

தோனி (இந்திய கேப்டன்):

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சினை பாராட்ட வார்த்தைகள் போதாது. நான் கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணியில் காலடி வைத்தேன். அது முதல் அவருடன் வலைப்பயிற்சியில் பங்கேற்று வருகிறேன்.

ஆரம்ப காலத்தில் அவர் எப்படி முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டாரோ, அப்படியே தான் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 21 ஆண்டுகளாக கிரிக்கெட் மீது அவர் கொண்ட ஈடுபாடு, இன்னும் குறையவில்லை. இது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.

ரசித் லத்தீப் (முன்னாள் பாக்., வீரர்):

கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த வீரராக தன்னை நிரூபித்துள்ளார் சச்சின். கிரிக்கெட்டுக்காக தன்னை அர்ப்பணித்துள்ள சச்சினின் ரன் தாகம் இன்னும் குறையவில்லை. கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் அரங்கில் சாதித்து வரும் சச்சின், ஒரு சகாப்தம்.

மியான்தத் (முன்னாள் பாக்., வீரர்):

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் சச்சின். ஒரு சிலரால் மட்டுமே நீண்ட காலம் கிரிக்கெட்டில் விளையாட முடியும். அவரது சாதனைகளை தகர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.

மொயின் கான் (முன்னாள் பாக்., வீரர்):

தற்காலத்து இளம் வீரர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு ஜொலிக்கிறார் சச்சின். சாதிப்பதற்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார். வயது பல கடந்தாலும், கிரிக்கெட் மீது அவர் கொண்ட ஈர்ப்பு இன்னும் குறையவில்லை.

அச்ரேக்கர் ( சச்சினின் இளமை கால பயிற்சியாளர்):

சச்சினின் சாதனை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். அவரது பயிற்சியாளர் என்ற முறையில், எனக்கு மட்டும் இது பெருமை அல்ல. இந்தியாவுக்கே பெருமை. சச்சினின் சாதனையை யாராலும் தகர்க்க முடியாது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலககோப்பையை, சச்சின் பெற்றுத் தர வேண்டும் என்பதே எனது விருப்பம். சச்சின் எனது விருப்பத்தை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறேன்.

பிராட்மேனை முந்துகிறார்

டெஸ்ட் அரங்கில் சிறந்த வீரர் சச்சினா அல்லது பிராட்மேனா என்ற வாதம் மீண்டும் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் "சிட்னி மார்னிங் ஹெரால்டு' பத்திரிகை "இன்டர்நெட்' மூலம் கருத்து கணிப்பு நடத்துகிறது. இதில் சச்சின் 63 சதவீத ஓட்டுகளுடன் முன்னிலையில் உள்ளார். பிராட்மேன் 37 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் 52 டெஸ்ட் போட்டியில் 29 சதம் உட்பட 6996 ரன் (99.94 சராசரி) எடுத்துள்ளார். சச்சின் 175 போட்டியில் 50 சதம் உட்பட 14513 ரன்(56.91 சராசரி) எடுத்துள்ளார்

கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின்

டெஸ்டில் 50 சதம் அடித்து புதிய வரலாறு படைத்த தெண்டுல்கருக்கு பாராட்டுகள் குவிகிறது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி, பாடகி லதா மங்கேஸ்கர் ஆகியோர் தெண்டுல்கருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பிரதீபா பாட்டீல் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெண்டுல்கரின் 50-வது சதம் வியக்கதக்கது. இந்தியர் அனைவரும் பெருமைப்பட வேண்டியது என்று கூறியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெண்டுல்கரின் 50-வது மிகப்பெரிய அற்புதமான சாதனையாகும். கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி அணியின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். சச்சின் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீகாந்த்: (தேர்வுக்குழு தலைவர், முன்னாள் கேப்டன்):- கிரிக்கெட் உலகின் கடவுளாக தெண்டுல்கர் திகழ்கிறார். மனித இயல்புக்கு அப்பாற்பட்ட திறமையுடன் உள்ளார். 21 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் வியக்கத்தக்க வகையில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஆடி வருகிறார். பல்வேறு இக்கட்டான நிலையில் அவர் ரன்களை எடுத்து வருகிறார்.

கிர்மானி (முன்னாள் விக்கெட் கீப்பர்):- எல்லா சாதனைகளுக்கும் சொந்தக்காரர் தெண்டுல்கர். அவர் இன்னும் ரன்களை வேட்டையாடும் வேட்டையில் உள்ளார். அவரது சாதனைக்கு இது மேலும் ஒரு மைல்கல் ஆகும். அவரை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை.

வெங்சர்க்கார் (முன்னாள் கேப்டன்): தெண்டுல்கரின் ஆட்டம் இன்னும் அற்புதமாக இருக்கிறது. நம்பமுடியாத வகையில் அவரது வரலாற்று சாதனை உள்ளது. அறிமுகம் ஆனபோது எப்படி இளமையுடன் ஆடினாரோ அதே திறமையுடன் இன்னும் ஆடி வருகிறார். வெளிநாட்டு மண்ணில் அவர் சிறப்பாக ஆடுவதை மற்ற வீரர்கள் பாடம் கற்று கொள்ள வேண்டும்.

யுவராஜ்சிங்: எந்த ஒரு பேட்ஸ்மேனும் செய்யாத சிறந்த சாதனையை தெண்டுல்கர் செய்துள்ளார்.

அப்துல்காதிர் (பாகிஸ்தான் முன்னாள் வீரர்): தெண்டுல்கர் அறிமுகம் ஆன போது வாக்கர்யூனிஸ் பந்தை எப்படி திறமையாக கையாண்டாரோ அதே திறனுடன் தற்போதும் உள்ளார். அவர் ஒரு அசாதாரண வீரர். சிறப்பு திறமைகள் இருக்கிறது. உண்மையிலேயே இது வியக்கத்தக்க அற்புதமான சாதனையாகும்.

மதன்லால் (முன்னாள் இந்திய வீரர்): நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக ஆட முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளார்.

ஒபிரையன் (நியூசிலாந்து வீரர்): தெண்டுல்கருக்கு எனது வாழ்த்துக்கள் அவர் கிரிக்கெட்டின் சகாப்தம் ஆவார்.

கிரிஸ்டன் (இந்திய அணி பயிற்சியாளர்): பேட்டிங் செய்யும் போது அவர் ஒரு பேராசிரியராக திகழ்கிறார். ஆட்டத்தின் நுணுக்கங்கள் அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார்

உலககோப்பை: இந்திய உத்தேச அணி அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான, 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி இன்று அறிவிக்கப்பட்டது.


இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இணைந்து அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இத்தொடர் வரும் பிப். 19 ம் தேதி முதல் ஏப்.2 வரை நடக்க உள்ளது.


இந்த முறை இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, கனடா, கென்யா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாட உள்ளன.


இத்தொடரில் பங்கேற்க உள்ள அணிகள், 30 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவிக்க இன்று கடைசி நாள் என அறிவித்திருந்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,). இதனையடுத்து தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில், இந்திய உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது.


அணி வருமாறு: தோனி (கேப்டன்), சச்சின், சேவக், காம்பிர், விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ், முரளி விஜய், ரோகித் சர்மா,சவுரப் திவாரி, ஹர்பஜன், ஜாகிர் கான், பார்த்திவ் படேல், சகா, தினேஷ் கார்த்திக், யூசுப் பதான், ரஹானே, சிகர் தவான், புஜாரா, அஷ்வின், ஸ்ரீசாந்த், பிரவீண் குமார், அமித் மிஸ்ரா, ரவிந்திர ஜடேஜா, நெஹ்ரா, இஷாந்த் சர்மா, வினய் குமார், பியுஸ் சாவ்லா, பிரக்யான் ஓஜா மற்றும் முனாப் படேல்.

உலக கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு வாய்ப்பு

உலக கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கும் வாய்ப்பு இருப்பதாக அப்ரிடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 டி20, 2 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து செல்கிறது.


இந்த தொடருக்கான அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி லாகூரில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. நியூசிலாந்து தொடர் மற்றும் உலக கோப்பை குறித்து அப்ரிடி கூறியதாவது: தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் பாகிஸ்தான் அணி பலவீனமாக இருப்பதாக நினைக்க வேண்டாம்.


உலக கோப்பையை வெல்ல எங்களுக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நியூசிலாந்து தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. உலக கோப்பைக்கு முன்னர் இந்த தொடர் நடப்பதால் அதிக கவனத்துடன் விளையாட முடிவு செய்துள்ளோம்.


இதற்காக எனது வீரர்கள் லாகூரில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

தப்பினார் சச்சின்

பயிற்சியின் போது உமேஷ் யாதவ் வீசிய பந்து, சச்சின் "ஹெல்மெட்டை' பலமாக தாக்கியது. இதில், அவர் காயமின்றி தப்பினார்.

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும், டெஸ்ட் தொடர் வரும் 16ம் தேதி துவங்குகிறது. இதில், பங்கேற்பதற்காக சில இந்திய வீரர்கள் முன்னதாகவே தென் ஆப்ரிக்கா சென்றுள்ளனர். இவர்களுக்கு கிறிஸ்டன் கடின பயிற்சிகளை அளித்து வருகிறார்.

நேற்று இளம் உமேஷ் யாதவ் வீசிய பந்து, சச்சினின் "ஹெல்மெட்டின்' இடது பக்கம் பலமாக தாக்கியது. உடனே யாதவ் உள்ளிட்டவர்கள் பதட்டம் அடைந்தனர். ஆனால் சச்சின் மிகவும் "ரிலாக்சாக' தனது "ஹெல்மெட்டை' கழற்றி, ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்தார்.

பின் பயிற்சியை தொடர்ந்தார். அடுத்து ஸ்ரீசாந்த் மிக கவனமாக வீசிய பந்து, சச்சினின் முழங்கால் அளவுக்கு மட்டும் எழும்ப, அனைவரும் சிரித்து விட்டனர்.

இது குறித்து சச்சின் கூறுகையில்,""வலை பயிற்சியின் போது இத்தகைய சம்பவங்களை தவிர்க்க முடியாது. காயம் ஏற்படாமல் இருக்க வேண்டும். அவ்வளவு தான்,''என்றார்.

உலகக் கோப்பையை வெல்லாமல் சச்சின் ஓய்வு பெறமாட்டார்

இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தராமல் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறமாட்டார் என்றார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்.

2011-ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவார் என சிலர் கூறிவருகின்றனர். ஒருவேளை, அதில் இந்தியா கோப்பையை வெல்லாவிட்டால், உலகக் கோப்பையை இந்தியா மீண்டும் வெல்லும் வரை சச்சின் ஓய்வு பெறமாட்டார்.

அடுத்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். சச்சினின் ஓய்வு குறித்து கருத்துக் கூறுவது முறையானதல்ல. இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் அவரின் பங்களிப்பு அவசியம்.

அவரின் ஆட்டத்திறனும், அனுபவமும் இந்திய அணிக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம். சச்சினின் ஆட்டத்தைக் காண்பதற்காக தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்று தில்லியில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கபில்தேவ் தெரிவித்தார்.

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

1989-ம் ஆண்டு தனது 16-வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் சச்சின். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் உலகில் கோலோச்சி வருகிறார். கிரிக்கெட் பிதாமகர் டான் பிராட்மேனே தன்னுடன் சச்சினை ஒப்பிட்டு பாராட்டியுள்ளார்

IPL 4 - காம்பீர், யுவராஜ், டிராவிட், கங்குலி, கும்ப்ளே நீக்கம்

4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2011) ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜனவரி 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடை பெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணியும் கடந்த சீசனில் விளையாடிய வீரர்களில் அதிகபட்சமாக 4 பேரை வைத்து கொள்ளலாம் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்தது. அணிகள் வைத்துக்கொள்ளும் வீரர்களை நேற்றுக்குள் (8-ந்தேதி) முடிவு செய்ய வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மட்டும் ஏற்கனவே விளையாடிய வீரர்களில் 4 பேரை தொடர்ந்து வைத்து கொள்ள இருப்பதாக தெரிவித்து உள்ளன.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ரெய்னா, முரளி விஜய், அல்பி மார்கல் ஆகியோரும், மும்பை இந்தியன்ஸ் அணியில் தெண்டுல்கர், ஹர்பஜன்சிங், மலிங்கா, போலர்ட் ஆகியோரும் நீட்டிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2011 மற்றும் 2012-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் அந்த அணிகளில் தொடர்ந்து ஆடுவார்கள்.

மற்ற முன்னணி வீரர்களான காம்பீர் (டெல்லி டேர்டெவல்ஸ்), யுவராஜ்சிங் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), ராகுல்டிராவிட், கும்ப்ளே (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்), கங்குலி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் அந்தந்த அணிகளில் இருந்து கழற்றி விடப்பட்டனர். அவர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றனர்.

இதேபோல முன்னணி வேகப்பந்து வீரர்களான ஜாகீர்கான் (மும்பை இந்தியன்ஸ்), இஷாந்த் சர்மா (கொல்கத்தா) ஆகியோரும் அந்த அணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஷேவாக் டெல்லி அணியிலும், வீரட் கோக்லி பெங்களூர் அணியிலும், கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் நீடிக்கிறார்கள்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணி எந்த வீரரையும் வைத் துக்கொள்ளவில்லை. அந்த அணியில் ரோகித் சர்மா, கில்கிறிஸ்ட் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்று இருந்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது. ஆனால் கோர்ட்டு இந்த அணிகளின் நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இந்த 2 அணிகளும் பங்கேற்கலாம். கிரிக்கெட் வாரியம் இதை எதிர்த்து முறையீடு செய்து உள்ளது. புதிதாக கொச்சி, புனே அணிகள் பங்கேற்கின்றன.

இதனால் 4-வது ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகளா? அல்லது 10 அணிகளா? விளையாடும் என்பது உறுதியாக தெரியவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே விளையாடிய வீரர்களில் வாட்சன், வார்னே ஆகியோரை தொடர்ந்து ஒப்பந்தத்தில் வைத்து இருப்பதாக அறி வித்துள்ளது. அதிரடி பேட்ஸ்மேன் யூசுப்பதான் நீட்டிக்கப்படவில்லை. ஏலத்தில் அவருக்கு கடும் கிராக்கி இருக்கும் என்று தெரிகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் யாரையும் தொடர்ந்து வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அந்த அணி நிர்வாகம் யுவராஜ் சிங், சங்ககரா, ஜெயவர்த்தனே ஆகியோரை கழற்றி விட்டுள்ளது.