விரைவில் இந்தியா, பாக்., கிரிக்கெட் தொடர்

உலக கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தாததால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட ஐ.சி.சி., உதவ முன்வந்துள்ளது. இது, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை, இங்கிலாந்தில் நடத்த ஏற்பாடு செய்வதாக பி.சி.பி.,யிடம் தெரிவித்துள்ளது. ஆனால் மும்பை தாக்குதலுக்கு விடை கிடைக்காத நிலையில் இதற்கு இந்தியா சம்மதிக்குமா என தெரியவில்லை.

வரும் 2011ல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என நான்கு நாடுகள் இணைந்து நடத்த இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் நடக்க இருந்த (14 போட்டி) ஆட்டங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) மற்ற நாடுகளுக்கு பிரித்து கொடுத்தது. இதற்குரிய நஷ்ட ஈடாக சுமார் 60 கோடி ரூபாய் கொடுக்க ஐ.சி.சி., முன் வந்தது. ஆனால் ஏற்றுக் கொள்ள மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) பொதுவான இடமான துபாயில் நடத்தலாம் என்றது. இதற்கும் ஐ.சி.சி., அனுமதி மறுத்தது. இதையடுத்து கோர்ட்டில் வழக்கு தொடர பி.சி.பி., முடிவு செய்தது. சட்ட வல்லுனர்களின் ஆலோசனைக்கு பின் கோர்ட் செல்லும் முடிவை கைவிட்ட பி.சி.பி., தனிப்பட்ட முறையில், இதனை பேசித்தீர்க்க முடிவு செய்தது.

ஐ.சி.சி., உறுதி: இதற்கு பரிகாரமாக, உலககோப்பை போட்டிகளால் நடத்தாததால் நஷ்டத்தில் இருக்கும் பி.சி.பி.,க்கு உதவ ஐ.சி.சி., முன்வந்துள்ளது. இதன் தலைவர் டேவிட் மார்கன், பி.சி.பி., தலைவர் இசாஜ் பட்டுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், இந்திய கிரிக்கெட் போர்டை (பி.சி.சி.ஐ.,) சம்மதிக்க வைத்து, பாகிஸ்தான் அணியுடன் விளையாட வைக்க முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.

உறுதியான தகவல்: இதுகுறித்து பி.சி.பி., வட்டாரங்கள் தெரிவித்ததாக வெளியான உறுதியான தகவல்: கடந்த ஆண்டு இந்திய அணி, பாகிஸ்தான் தொடரை ரத்து செய்ததால் "டிவி' ஒளிபரப்பு வகையில் மட்டும், பி.சி.பி.,க்கு 34 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அடுத்து உலக கோப்பை போட்டிகளும் ரத்தாகின்றன. இந்த இழப்புகளை சரிக்கட்டும் விதமாக அடுத்த ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் தொடரை நடத்த ஏற்பாடு செய்ய முயற்சிப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த தொடர் குறித்து மார்கன் உறுதியாக எதுவும் தெரிவிக்கவில்லை.

எங்கு? எப்போது?: அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் மட்டும் தான் பாகிஸ்தான் பங்கேற்கிறது. ஆனால் இந்திய அணி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கும். அப்போது கிடைக்கும் ஓய்வில் தொடரை நடத்தலாம் என திட்டமிட்டுள்ளது. இதன் படி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் சில "டுவென்டி-20' போட்டிகளை, இங்கிலாந்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

பாக்., உதவி: ஐ.சி.சி.,யின் இந்த மறைமுக ஒப்பந்தத்திற்கு உதவியாக, இந்தியாவில் நடக்கவுள்ள உலக கோப்பை போட்டிகளை பார்வையிட பாகிஸ்தானில் இருந்து செல்லும் எல்லோருக்கும் எளிதான முறையில் அரசு அனுமதி வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறது.

பி.சி.சி.ஐ., சம்மதிக்குமா? : மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு முழுவதும் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு துவக்கத்தில் பாகிஸ்தான் பயணத்தை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ரத்து செய்தது. அதன் பிறகு இங்கிலாந்தில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இரு அணிகளும் சந்தித்து கொண்டது. இதுவரை மும்பை தாக்குதலுக்கு விடை கிடைக் காத நிலையில் ஐ.சி.சி., ஏற்பாடு செய்து வரும் இந்த தொடருக்கு, பி.சி.சி.ஐ., சம்மதிக்குமா என்பது தான் இப்போதைய கேள்வி.

0 comments:

Post a Comment