சச்சின், ஹர்பஜனுக்கு ஓய்வு

முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், சச்சின், ஹர்பஜன், காம்பிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


இந்தியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் (ஆக.,10-28) இலங்கையில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம், தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று மும்பையில் நடந்தது. இதில் அனுபவ வீரர்களான சச்சின், ஹர்பஜன் மற்றும் முழங்கால் பகுதியில் காயமடைந்த காம்பிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


மீண்டும் யுவராஜ்: மோசமான "பார்ம்' காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்ட யுவராஜ், மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். விராத் கோஹ்லி, ரோகித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளனர். காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத ஜாகிர், ஸ்ரீசாந்த் இடம் பெறவில்லை. நெஹ்ரா, இஷாந்த், பிரவீண் குமார், அபிமன்யு மிதுன் ஆகிய "வேகங்கள்' திறமை காட்ட உள்ளனர். 15 பேர் அடங்கிய அணியில், ஒரே "ஆல்-ரவுண்டராக' ரவிந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளார்.


தமிழகம் வாய்ப்பு: காம்பிர் இல்லாத நிலையில் துவக்க வீரராக தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் களமிறங்க இருக்கிறார். மற்றொரு தமிழக சுழற்பந்துவீச்சாளரான அஷ்வின் சாதிக்க காத்திருக்கிறார்.


இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,""ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள வளர்ந்து வரும் வீரர்களுக்கான தொடரில் இடம் பெற்றிருந்த அஷ்வின், சவுரப் திவாரி தற்போது முத்தரப்பு தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அசோக் டிண்டா, மனிஷ் பாண்டே, ஆஸ்திரேலியா செல்லும் அணியில் இடம் பெறுவர்,''என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய அணி வருமாறு: தோனி(கேப்டன்), சேவக்(துணை கேப்டன்), விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, யுவராஜ், ரவிந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், அஷ்வின், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, அபிமன்யு மிதுன், ஆஷிஷ் நெஹ்ரா, பிரக்யான் ஓஜா, சவுரப் திவாரி.

இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 130 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.


தென்னாப்பிரிக்க அணி 119 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 113 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.


இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் 111 புள்ளிகளுடன் 4 மற்றும் 5-வது இடங்களிலும், பாகிஸ்தான் 84 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன.


ஒருநாள் போட்டி:


ஒருநாள் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா 132 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 118 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 115 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்து 114 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் முறையே 5, 6, 7-வது இடங்களிலும் உள்ளன.

இந்தியா "நம்பர்-1' அணியா?

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பி வரும் இந்தியா, "நம்பர் -1' அணி போல தோன்றவில்லை,'' என, ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.


சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது இந்திய அணி (124 புள்ளிகள்). இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இந்திய அணி, இலங்கையிடம் படுதோல்வி அடைந்தது.


இது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் கூறியது: இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. ஆனால் பவுலிங், பலவீனமாக உள்ளது. காயம் காரணமாக ஜாகிர் கான் இல்லாதது, பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை தொடரில் தடுமாறி வரும் இந்திய அணி, "நம்பர்-1' அணி போல தோன்றவில்லை.

சவாலான தொடர்:ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் மோத உள்ள ஒரு நாள் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது மிகவும் கடினம். இருப்பினும் இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இல்லை. இது ஆஸ்திரேலியாவுக்கு சாதமாக அமையும். ஹர்பஜன் சிங், பார்ம் இன்றி தவித்து வருகிறார்.


ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்கள் பலர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். இதனால் 1995 ம் ஆண்டு முதல் 2005 வரை வீழ்த்த முடியாத அணியாக இருந்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 1970 ம் ஆண்டு முதல் 1980 வரை கிரிக்கெட் அரங்கில் அசத்திய வெஸ்ட் இண்டீசுக்கும், இதே நிலைமை ஏற்பட்டது. மற்ற அணிகளுக்கும் அப்படித்தான். இருப்பினும் ஆஸ்திரேலியா, எழுச்சி பெறும்.


வெற்றிடம்: முரளிதரன் ஓய்வு, கிரிக்கெட்டுக்கு பெரும் இழப்பு. ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன், இந்தியாவின் அனில் கும்ளே ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து சுமார் 2000 விக்கெட்டுகள் வரை கைப்பற்றியுள்ளனர்.


இனி இவர்களது இடம் வெற்றிடமாக உள்ளது. இருப்பினும் இளம் வீரர்கள் சாதிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் சுவான், இந்தியாவின் ஹர்பஜன், இலங்கையின் மெண்டிஸ் ஆகியோர், எதிர்காலத்தில் சுழற் பந்து வீச்சில் அசத்தலாம். இவ்வாறு ஸ்டீவ் வாக் தெரிவித்தார்.

பிராட்மேன் சாதனையை தகர்த்த ஜெயவர்தனா

ஒரே மைதானத்தில் அதிக சதம் அடித்து, ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் பிராட்மேன் சாதனையை தகர்த்துள்ளார் ஜெயவர்தனா.


கொழும்பில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர் ஜெயவர்தனா, சதமடித்து அசத்தினார். இது டெஸ்ட் அரங்கில் இவர் அடிக்கும் 28 வது சதமாக அமைந்தது. தவிர, கொழும்பு, சின்கிளைஸ் ஸ்போர்டஸ் கிளப் மைதானத்தில், இவர் அடிக்கும் 10 வது சதம் இது.


இதன் மூலம் ஒரே மைதானத்தில் அதிக சதம் கடந்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் ஜெயவர்தனா. இதற்கு முன், முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன், மெல்போர்ன் மைதானத்தில் 9 சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது இதை ஜெயவர்தனா முறியடித்துள்ளார்.


இது குறித்து ஜெயவர்தனா கூறியது: எனது சொந்த ஊரில் உள்ள இம்மைதானத்தில் அதிக சதம் கடந்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன். இங்கு 23 போட்டிகளில் விளையாடிய 10 சதம் கடந்துள்ளேன். ஆனால் டான் பிராட்மேன், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 11 போட்டிகள் மட்டுமே விளையாடி 9 சதம் அடித்துள்ளார். அவரது சாதனை பாராட்டத்தக்கது.


என்னை அவருடன் ஒப்பிடுவது பற்றி நான் சிந்திக்க வில்லை. அவர் உலகின் தலை சிறந்த வீரர். அந்தக் காலக் கட்டத்தில் அவர் பல சாதனைகள் படைத்துள்ளார். தற்போது அவருக்கு நிகராக நாம் ஒன்றும் செய்து விட வில்லை.


விக்கெட் வீழத்துவோம்: கொழும்பு டெஸ்டில் அதிக ரன் குவிக்க சங்ககராவின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைத்தாலும், இலங்கை பவுலர்கள் இன்றைய 3 வது நாள் ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி விக்கெட் கைப்பற்றுவார்கள்.


தற்போது ஆட்டம் முழுவதும் எங்கள் கையில் தான் உள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இன்று கடும் நெருக்கடி கொடுப்போம். இவ்வாறு ஜெயவர்தனா கூறினார்.

உலக சாம்பியன் கனவு

பாட்மின்டன் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்களில், இளம் வீராங்கனை செய்னா நேவல் (20 வயது) முக்கியமானவர்.


சமீபத்தில் நடந்த இந்திய கிராண்ட்பிரிக்ஸ், சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, அசுர வளர்ச்சி கண்டுள்ள இவர், ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் 2வது இடத்துக்கு அதிரடி முன்னேற்றம் கண்டார்.

இருப்பினும் இவருக்கு, உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற கனவு உள்ளது. இவரது சமீபத்திய செயல்பாட்டின்மூலம், இக்கனவை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 18வது உலக சாம்பியன்ஷிப் பாட்மின்டன் தொடர் அடுத்த மாதம் 23-29ம் தேதிகளில் நடக்கிறது. இத்தொடரில் பங்கேற்க செய்னா நேவல் தலைமையிலான 9 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் செய்னா நேவல், ஆதித்தி முதாத்கர், ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா, சேட்டன் ஆனந்த், காஷ்யப், சனவே தாமஸ், ருபேஷ் குமார், திஜு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.

இத்தொடர் குறித்து செய்னா நேவல் கூறியதாவது: சமீபத்தில் நடந்த மூன்று முக்கிய தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது, ரேங்கிங்கில் 2வது இடத்துக்கு அழைத்து சென்றது. இருப்பினும் "நம்பர்-1' இடம் பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளேன். இதற்காக முழுவீச்சில் தயார் செய்து வருகிறேன்.


"பார்ம்' மற்றும் உடற்தகுதியை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல், சில முக்கிய தொடரில் மட்டும் பங்கேற்க முடிவு செய்தேன். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஏனெனில் எந்த ஒரு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உடற்தகுதி முக்கியமானது.


அடுத்த மாதம் பாரிசில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் தொடர், நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும். ஏனெனில், கடந்த முறை ஐதராபாத்தில் நடந்த இத்தொடரில் காலிறுதி வரை முன்னேறிய நான், இம்முறை சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தவிர, பாட்மின்டன் அரங்கில் சீன வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.


இவர்களுக்கு எதிராக முழுதிறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே, சாம்பியன் பட்டம் வெல்ல முடியும். சமீபத்திய போட்டிகளில் முன்னணி சீன வீராங்கனைகளை வீழ்த்தி இருப்பதால், இத்தொடரில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.


இத்தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம். இதுகுறித்து அதிகம் சிந்திக்காமல், போட்டியில் நூறு சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவது குறித்து மட்டும் ஆலோசித்து வருகிறேன்.
இவ்வாறு செய்னா நேவல் கூறினார்.

பதிலடி கொடுக்குமா இந்தியா ?

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொழும்புவில் இன்று துவங்குகிறது. முதல் டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி, இம்முறை பதிலடி கொடுக்க காத்திருக்கிறது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி கண்ட இலங்கை அணி வென்றது. இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட், கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில் இன்று துவங்குகிறது.

பலமான பேட்டிங்:

முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட தவறினர். இந்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும். கடந்த போட்டியில் சதமடித்து ஆறுதல் அளித்த சேவக் மற்றும் அரைசதமடித்த சச்சின், யுவராஜ், லட்சுமண் உள்ளிட்டோர் தங்களது அபார ஆட்டத்தை தொடர வேண்டும். "மிடில்-ஆர்டரில்' களமிறங்கும் டிராவிட், தோனி உள்ளிட்டோர் பொறுப்புடன் ஆடினால் வலுவான இலக்கை எட்டலாம்.

பலவீனமான பவுலிங்:

ஜாகிர், ஸ்ரீசாந்த் இல்லாத நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. இஷாந்த் சர்மா, அபிமன்யு மிதுன் ஆகியோர் விரைவில் விக்கெட் வீழ்த்த வேண்டும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்கள், கடந்த போட்டியில் திணறினர். இவர்கள் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இப்போட்டியில் அமித் சர்மா, முனாப் படேல் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கினால் நல்லது.

சொந்தமண் சாதகம்:

பொதுவாக இலங்கை அணியினர், சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இதனை காலே டெஸ்டில் காண முடிந்தது. இப்போட்டியில் சதமடித்த பரணவிதனா, கேப்டன் சங்ககரா உள்ளிட்டோர் மீண்டும் சாதிக்க வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு தில்ஷன், மகிலா ஜெயவர்தனா, சமரவீரா, மாத்யூஸ் உள்ளிட்டோர் கைகொடுக்கலாம்.

வருகிறார் மெண்டிஸ்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சுழல் ஜாம்பவான் முரளிதரன் ஓய்வு பெற்றதால், இவரது இடத்துக்கு மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2008ல் இந்திய அணிக்கு எதிராக 3 டெஸ்டில் 26 விக்கெட் வீழ்த்தி, தொடரை கைப்பற்ற காரணமாக விளங்கினார்.

இதேபோல காயம் காரணமாக மலிங்காவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால், பெர்ணான்டோ களமிறங்குகிறார். கடந்த டெஸ்டில் பவுலிங்கில் அசத்திய இவர்கள் இல்லாதது, இலங்கை அணிக்கு பின்னடைவான விஷயம்.

இரு அணிகளும் வெற்றியை நோக்கி களமிறங்குவதால், கடந்த போட்டியை போல இந்த டெஸ்ட் போட்டியும் சவால் நிறைந்ததாக இருக்கும்.

சச்சின் செய்தது சரியா ?

பிரபலங்கள் எழுதும் சுயசரிதைகள் எப்போதுமே சர்ச்சையை கிளப்பும். இதற்கு சச்சினும் விதிவிலக்கல்ல. இவரது ரத்தம் இடம் பெற்ற "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற சுயசரிதைக்கு எதிர்ப்பு வலுக்கிறது.

இளம் தலைமுறையினரின் "ரோல் மாடலாக' திகழும் இவர், தனது ரத்தத்தின் மூலம் மலிவான விளம்பரம் தேடியிருப்பதாக முன்னணி எழுத்தாளர்கள் உட்பட பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் சேவை பணிக்கு நிதி திரட்டவே, இது போன்ற முயற்சியில் சச்சின் ஈடுபட்டுள்ளதால், தவறாக நினைக்க தேவையில்லை என, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் "சாதனை மன்னன்' இந்தியாவின் சச்சின். டெஸ்ட் (13, 455) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598) அதிக ரன் குவித்துள்ளார். "கிரிக்கெட் கடவுளாக' வர்ணிக்கப்படும் இவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரேகான் மீடியா நிறுவனம் வெளியிடுகிறது. "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற சுயசரிதை வரும் 2011ல் உலககோப்பை போட்டி (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் வெளியிடப்பட உள்ளது.


அரிய படங்கள்: இந்த சுயசரிதையில், சச்சின் பற்றி இதுவரை வெளிவராத அரிய புகைப்படங்கள் இடம் பெற உள்ளன. இதன் கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருப்பது தான் தனிச்சிறப்பு. காகிதக் கூழில், அவரது ரத்தம் தோய்த்து வெளிவர உள்ளது.

அவரது டி.என்.ஏ., பற்றிய தகவல்களும் இடம் பெற உள்ளன. இதற்காக அவரது உமிழ்நீர் கேட்கப்பட்டுள்ளது. மொத்தம் 852 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் 37 கி.கி., எடை கொண்டது. இதன் விலை 37 லட்ச ரூபாய். மொத்தம் 10 சிறப்பு பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன்பதிவும் முடிந்து விட்டது. இப்புத்தகங்கள் மூலம் கிடைக்கும் நிதி, சச்சின் கட்டி வரும் பள்ளிக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து சச்சின் கூறுகையில்,""எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளேன். எனது நீ...ண்ட பயணத்தை அரிய புகைப்படங்கள் மூலம் தரமான புத்தகமாக காண்பது இனிமையான அனுபவம். "ஓபஸ்' புத்தகத்தை விட எனது வாழ்க்கையை இன்னும் சிறப்பாக வேறு எதிலும் காண முடியாது,''என்றார்.

இப்படி தனது சுயசரிதையை பற்றி றசச்சின் ஒருபக்கம் புகழ்ந்தாலும், மறுபக்கம் எதிர்ப்பும் காணப்படுகிறது. இவர், தனது ரத்தத்தின் மூலம் மலிவான விளம்பரம் தேடியிருப்பதாக எழுத்தாளர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "டுவிட்டர்' இணையதளத்திலும் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

தனது ரசிகர்களுக்காக ரத்தம் சிந்தியிருந்தால், சாமான்யனும் வாங்கும் வகையில் விலை குறைவாக இருந்திருக்க வேண்டும். ஆனால், விலை 37 லட்சம் ரூபாயாக உள்ளது. சச்சினின் ரத்தம் இடம் பெறாமல், வெறும் கையெழுத்து மட்டுமே இருக்கும் புத்தகத்தின் விலை 1.50 லட்சம் ரூபாயாக உள்ளது. எனவே, அதிக விலைக்கு சுயசரிதையை விற்று இன்னொரு சாதனை படைப்பதே அவரது இலக்கு என விமர்சிக்கின்றனர்.


முரளீதரன் சாதனையை முறியடிப்பது கடினம்

டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை இலங்கை வீரர் முரளீதரன் பெற்றார்.

அவரது சாதனை குறித்து பிரபல வீரர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-

வாசிம் அக்ரம்:- முரளீதரன் ஒரு அபூர்வமான வீரர். அவரது 800 விக்கெட் சாதனையை முறியடிப்பது கடினம். அவரை நெருங்க முடியாது என்று கருதுகிறேன்.

கும்ப்ளே:- 15 ஆண்டுகளுக்கு முன்பு யாராலும் 800 விக்கெட் தொட முடியாத நிலை இருந்தது. ஆனால் இன்று இந்த இமாலய சாதனையை முரளீதரன் பெற்றுள்ளார். அதுவும் 133 டெஸ்டில் 800 விக்கெட் என்பது நினைத்தே பார்க்க முடியாதது ஆகும்.

சங்ககரா:- இனி இன்னொரு முரளீதரனை பார்க்க முடியாது. யாராலும் அவரது இடத்துக்கு நெருங்க முடியாது.

வார்னே:- யாராலும் முரளீதரன் சாதனையை நெருங்க முடியாது. அவரது சாதனையை முறியடிப்பது என்பது மிக மிக கடினம். அவரது சாதனையை பாராட்டுகிறேன்.

ரணதுங்கா:- 1000 விக்கெட்டை இலக்காக கொண்டிருந்தார். 800 விக்கெட் சாதனையோடு முடித்து விட்டார்.

முரளிதரன் சுழல் கடினமானது

ஷேன் வார்னை காட்டிலும் முரளிதரன் சுழற்பந்துவீச்சு தான் கடினமானது,'' என, முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியுடன், இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். தவிர, 133 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர், 800 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.

இதுகுறித்து கங்குலி கூறியதாவது:

டெஸ்ட் அரங்கில், 800 விக்கெட் வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்த முரளிதரனுக்கு வாழ்த்துகள். இவரை யாருடனும் ஒப்பிட விரும்பவில்லை. இருப்பினும் ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன், இவருக்கு போட்டியாக கருதப்பட்டார்.

இவர்களது சுழற்பந்துவீச்சை ஒப்பிடும் போது, முரளிதரன் சுழலை எதிர்கொள்வது சற்று கடினமானது. மிகவும் கவனமாக விளையாடினால் மட்டுமே, அவுட்டாகாமல் தப்பிக்க முடியும்.

முரளிதரன் சாதனையை முறியடிப்பது சாதாரன விஷயமல்ல. இதற்கு கடுமையாக போராட வேண்டும். சிறந்த வீரர்கள் அனைவரும், புகழின் உச்சியில் இருக்கும் போது ஓய்வு பெற்றுவிடுவார்கள்.

இதேபோலதான் முரளிதரன், நல்ல "பார்மில்' இருக்கும் போது ஓய்வு பெற்றுள்ளார். முன்னதாக வார்ன், கவாஸ்கர், மெக்ராத் உள்ளிட்டோரும் இதுபோன்று ஓய்வு பெற்றனர். இதேபோல மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினும், புகழின் உச்சியில் இருக்கும் போது ஓய்வு பெற்றால் நன்றாக இருக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால், முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக கருதவேண்டாம். ஒருநாள், "டுவென்டி-20', ஐ.பி.எல்., போட்டிகளில் தொடர்ந்து சாதிக்க காத்திருக்கிறார்.

முரளிதரனின் ஓய்வு, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மனநிறைவு அளித்திருக்கும். இதனால் இவர்கள் அடுத்து வரும் டெஸ்டில், லசித் மலிங்காவின் பந்துவீச்சை சமாளித்தால் போதுமானது.
இவ்வாறு கங்குலி கூறினார்.

டெஸ்ட் அரங்கிலிருந்து விடை பெற்றார் முரளிதரன்

டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியுடன் விடைபெற்றுள்ளார் முரளிதரன். கடந்த 18 ஆண்டுகளாக தனது சுழல் மந்திரத்தால் எதிரணிகளை திணறடித்த இவர், பல்வேறு சர்ச்சைகளை கடந்து சாதித்துக் காட்டியுள்ளார்.


இவரது சாதனையை இனி யாரும் முறியடிக்க முடியாது என முன்னாள் வீரர் வார்ன் தெரிவித்துள்ளார்.


இலங்கையின் "சுழல் மன்னன்' முரளிதரன். 8 வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கிய இவர், முதலில் வேகப்பந்துவீச்சளாராக தான் இருந்தார். பின் 14வது வயதில் சுழற்பந்துவீச்சுக்கு மாறினார். 1992ல் தனது 20வது வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை சர்ச்சை நிறைந்ததாக இருந்தது.


"தூஸ்ரா' பிரச்னை: கடந்த 1995ல் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுடனான டெஸ்டில், முரளிதரன், பந்தை எறிவதாக சர்ச்சை எழுந்தது. அளவுக்கு அதிகமாக கையை வளைத்து பந்துவீசுவதாக கூறிய அம்பயர் டேரல் ஹேர் 7 முறை "நோ-பால்' கொடுத்து அதிர்ச்சி அளித்தார். இதிலிருந்து மீண்ட முரளிதரனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.


இவரது "தூஸ்ரா' முறையிலான பந்துவீச்சு குறித்து இந்தியாவின் பிஷன் சிங் பேடி உள்ளிட்ட பலரும் விமர்சித்தனர். விதிமுறைக்கு புறம்பாக வீசப்படும் "தூஸ்ரா' வகை பந்துவீச்சை தடை செய்ய வேண்டுமென பேடி வலியுறுத்தினார்.


ஆனாலும். ஐ.சி.சி., பச்சைக் கொடி காட்டியதால் தனது பிரம்மாஸ்திரமான "தூஸ்ரா' மூலம் விக்கெட் வேட்டையை தொடர்ந்தார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.


ஓய்வு முடிவு: கடந்த 18 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிய முரளிதரன், சமீப காலமாக முழங்கால் காயத்தால் அவதிப்பட்டார். இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான காலே போட்டியுடன், டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார்.

இப்போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடி தந்த இவர், டெஸ்டில் 800 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனையும் படைத்தார். உடல்நிலை காரணமாக டெஸ்டில் ஆயிரம் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற இலக்கை இவரால் எட்ட முடியவில்லை.

ஒரு நாள் போட்டிகளில் தொடர முடிவு செய்துள்ள இவர், வரும் 2011ல் இந்திய துணை கண்டத்தில் நடக்கும் உலக கோப்பை(50) தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இவர், ஐ.பி.எல்., போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்.

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் கும்ளே(619 விக்.,), ஆஸ்திரேலியாவின் வார்ன்(708 விக்.,) மற்றும் முரளிதரன் ஆகியோர் "சுழல்' ஜாலம் காட்டினர். இவர்கள் மூவரும் விடைபெற்றுள்ளதால், டெஸ்ட் அரங்கில் மிகப் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

சச்சினின் ரத்த சரித்திரம்

இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ரத்தத்துடன் வெளிவர உள்ளது "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற அவரது சுயசரிதை புத்தகம்.

சர்வசேத கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் (13, 455) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598) அதிக ரன் குவித்து சாதனை படைத்துள்ளார்.

கிரிக்கெட் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சினின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரஹான் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் வெளியிடப்பட உள்ளது.

தனிச்சிறப்பு:

கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருப்பது தான் இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு.
காகிதக் கூழில், அவரது ரத்தம் தோய்த்து வெளிவர உள்ளது. மொத்தம் 852 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் 37 கி.கி., எடை கொண்டது. இதன் விலை 37 லட்சம் ரூபாய். மொத்தம் 10 பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன்பதிவும் முடிந்து விட்டது.

ரத்தத்தின் ரத்தங்கள்:

சச்சினின் ரத்தத்தின் ரத்தங்களாக கருதப்படும் ஏழை ரசிகர்களால் இப்புத்தகத்தை வாங்க முடியாது. இருப்பினும் 1 லட்சம் மற்றம் 1.50 லட்சம் ரூபாய்களிலும் இப்புத்தகம் வெளியிடப்பட் உள்ளது. ஆனால் இவற்றில் சச்சினின் ரத்தம் இடம் பெறாது.

கையெழுத்து மட்டுமே இடம் பெறும். இது தவிர, 10 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய்களிலும் இப்புத்தகத்தை வெளியிட கிரஹான் மீடியா ஏற்பாடு செய்து வருகிறது. அவரது டி.என்.ஏ., பற்றி தகவல்களும் இதில் இடம் பெற உள்ளன. இதற்காக அவரது உமிழ்நீர் கேட்கப்பட்டுள்ளது.

புதுமை:

இது குறித்து கிரஹான் மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் போவ்லர் கூறுகையில்,"" கிரிக்கெட் அரங்கின் கடவுளாக வர்ணிக்கப்படுகிறார் சச்சின். இதனால் "டெண்டுல்கர் ஓபஸ்' புத்தகத்தில் புதுமை செய்ய நினைத்தோம்.

அவரது ரத்தம் தோய்ந்த பக்கம் இடம் பெறுவதால், இப்புத்தகம் தனிச்சிறப்பை பெறுகிறது. உலககோப்பை தொடரை ஒட்டி இப்புத்தகத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

யுவராஜ் சிங்கிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

ஐ.பி.எல்., தொடர் மூலம் கிடைத்த வருமானத்துக்கு, வரி செலுத்தாமல் உள்ள இந்திய வீரர் யுவராஜ் சிங்கிற்கு, சண்டிகர் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 2008 ம் ஆண்டு துவங்கியது. இதுவரை 3 தொடர்கள் நடந்துள்ளன. இத்தொடர் மூலம் கிரிக்கெட் வீரர்கள் பல கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றனர்.

ஐ.பி.எல்., அணிகளுள் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் விளையாடினார் இந்திய வீரர் யுவராஜ் சிங். இவருடன் இணைந்து வி.ஆர்.வி.சிங், சன்னி சோஹல், உதய் கவுல் ஆகியோர் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தனர்.

இவர்கள் முதல் மற்றும் 2 வது ஐ.பி.எல்., தொடர் மூலம் பெற்ற வருமானத்துக்கு, வரி கட்டாமல் உள்ளனர். இதனால் வருமான வரித்துறை இவர்கள் நான்கு பேருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.

ஒரு கோடி ரூபாய் வரி:

இது குறித்து சண்டிகர் வருமான வரித்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" ஐ.பி.எல்., தொடர் மூலம் கிடைத்த வருமானம் குறித்து யுரவாஜ் உள்ளிட்ட 4 பேரும் எந்தத் தகவலும் இதுவரை அளிக்க வில்லை. முதல் இரண்டு ஐ.பி.எல்., தொடர் மூலம் யுவராஜ் சிங் பெற்ற வருமானம் 4. 25 கோடி ரூபாய் என வருமான வரித்துறை கணக்கீடு செய்துள்ளது.

வி.ஆர்.வி.சிங், சன்னி சஹோல் மற்றும் உதய் கவுல் ஆகியோர் தலா 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெற்றுள்ளனர். ஆனால் இதுவரை வரி கட்டவில்லை. யுவராஜ் 1.17 கோடி ரூபாயும், வி.ஆர்.வி.சிங் 11.33 லட்சம் ரூபாயும், சன்னி சோஹல் மற்றும் உதய் கவுல் ஆகியோர் 4.53 லட்சம் ரூபாயும் வருமான வரி கட்ட வேண்டும். அவர்கள் 4 பேருக்கும் இந்த மாத இறுதிக்குள் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

மறக்க முடியாத தருணம்

தென் ஆப்ரிக்காவில் சமீபத்தில் நடந்த உலககோப்பை கால்பந்து தொடரில், தனது மின்னல் வேக ஆட்டத்தால் உருகுவே அணிக்கு பலம் சேர்த்தார் டீகோ போர்லான்.


இத்தொடரில் 5 கோல்கள் அடித்த இவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வழங்கப்படும் "கோல்டன் பால்' விருதை தட்டிச் சென்றார். இதன் மூலம் தென் அமெரிக்க நாடுகள் சார்பில் இவ்விருதை கைப்பற்றும் 4 வது வீரர் என்ற பெருமை பெற்றார்.


இவருக்கு முன் அர்ஜென்டினாவின் மாரடோனா (1986), பிரேசிலின் ரொமாரியோ (1994) மற்றும் ரொனால்டோ (1998) ஆகியோர் இவ்விருது வென்றுள்ளனர். உயரிய விருது வென்ற மகிழ்ச்சியில் போர்லான் அளித்த பேட்டி:


* "கோல்டன் பால்' விருது வென்றது குறித்து உங்கள் கருத்து?

மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் எனது பெயர் இருந்தது. இருப்பினும் எனக்கு முழு நம்பிக்கை இல்லை. ஆனால் பியுனஸ் ஏர்சில் இருந்த எனது நண்பர் எனக்கு போனில் வாழ்த்துதெரிவித்தார். அதற்குப் பின் தான் "கோல்டன் பால்' விருது வென்றதை அறிந்து கொண்டேன்.


* இவ்விருதை வெல்வோம் என எதிர்பார்த்தீர்களா?

"கோல்டன் ஷூ' விருது வெல்ல வேண்டும் என்பது தான் எனது கனவாக இருந்தது. அதை நோக்கி தான் சென்று கொண்டிருந்தேன். ஆனால் நான் நினைத்தபடி நடக்க வில்லை. மாறாக, சிறந்த வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பால் விருது கிடைத்துள்ளது. எதுவாக இருந்தாலும், எனது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை கருதுகிறேன்.


* உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?

சிறு வயது முதலே கால்பந்து வீரராக வேண்டும் என்பது தான் எனது ஆசை. எனது பெற்றோர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் எனக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். அவர்கள் தந்த உற்சாகத்தால் கடின முயற்சியுடன் செயல்பட்டேன். இதனால் சாதிக்க முடிந்தது. இனி வரும் தொடர்களில் எனது திறமையை மேம்படுத்த முயற்சிப்பேன்.


* தாய்நாட்டில் உங்களுக்கு வரவேற்பு எப்படி இருந்தது?

எனக்கு கிடைத்த பெருமை எல்லாம், உருகுவே மக்களுக்கு தான் சேரும். நாடு திரும்பியவுடன், ஏராளமானோர் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களது பாராட்டுக்களை, எனது வாழ்வின் மிகச் சிறந்த விருதாக கருதுகிறேன்.


* பைனலுக்கு முன்னேறாதது வருத்தம் அளித்ததா?

பாராட்டுகள், விருது என ஒரு புறம் மகிழ்ச்சி இருந்தாலும், அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வி அடைந்தது மிகவும் வருத்தம் அளித்தது. அதை மறப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும்.


* சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி குறித்து உங்கள் கருத்து?

உலககோப்பையில் முதல் முறையாக கோப்பை வென்று சாதித்துள்ளது ஸ்பெயின் அணி. அதற்கான முழுத் தகுதியும் ஸ்பெயின் அணியிடம் இருந்தது. தனது முதல் லீக் போட்டியில் சுவிட்சர்லாந்திடம் தோல்வி அடைந்த ஸ்பெயின் அணி, கோப்பை வெல்லும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் மிக விரைவில் வெற்றிப் பாதையை எட்டிப் பிடித்து விட்டது ஸ்பெயின். அந்த அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


* பிரேசிலில் வரும் 2014 ம் ஆண்டு நடக்கும் உலககோப்பை தொடரில் பங்கேற்பீர்களா?

அடுத்த உலககோப்பையில் பங்கேற்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. தற்போது எனக்கு 31 வயதாகிறது. வரும் 2014 ல் எனக்கு 35 வயதாகி விடும். இதனால் உறுதியாக எதையும் சொல்ல முடியாது. உடலும், மனமும் ஒத்துழைக்கும் பட்சத்தில் கட்டாயம் பங்கேற்பேன்.

800 விக்கெட்: முரளீதரன் முனைப்பு

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற முனைப்புடன் பயிற்சி எடுத்து வருகிறார் முத்தையா முரளீதரன்.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 792 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலே நகரில் தொடங்கும் இந்திய இலங்கை அணிகளுக்கு இடையோன தொடரின் முதல் ஆட்டத்துடன் ஓய்வு பெறப் போவதாகவும் அதன் பின்னர் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடப் போவதாகவும் முரளீதரன் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் 792 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள 38 வயதாகும் முரளிதரனுக்கு இது கடைசி டெஸ்ட் ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் மேலும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை அவர் பெற முடியும். இதற்காக அவர் கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனி கூறுகையில், "அந்த வாய்ப்பை எளிதில் நாங்கள் அவருக்கு கொடுத்து விட மாட்டோம். ஆட்டத்தின் போது அவருக்கு கடும் நெருக்கடி தர நாங்கள் முயற்சிப்போம்' என்றார்.

சச்சினுக்காக உலக கோப்பை

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்காக, வரும் 2011ம் ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும்,'' என முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டேனி மோரிசன் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச நாடுகள் இணைந்து, வரும் 2011ல் உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. கடந்த 1992ம் ஆண்டு முதல், 5 உலக கோப்பை தொடரில் விளையாடிய இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு, ஒரு முறைகூட தனது அணிக்கு உலக கோப்பை பெற்றுத்தந்ததில்லை என்ற ஏக்கம் உள்ளது.

இம்முறை உலக கோப்பை தொடர் இந்திய துணைக்கண்டங்களில் நடக்க இருப்பதால், இவரது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டேனி மோரிசன் கூறியதாவது: வரும் 2011ல் நடக்க உள்ள <உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும். இதன்மூலம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிடும். இதற்கு சச்சின் மட்டும் போராடினால் போதாது. இவருடன் யுவராஜ், சேவக், தோனி, காம்பிர் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இம்முறை இந்திய துணைக் கண்டங்களில் உலக கோப்பை தொடர் நடக்க இருப்பதால், இந்திய அணி கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு இந்திய அணி கடுமையாக போராட வேண்டும். ஏனெனில் கிரிக்கெட் போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். போட்டியின் போது இந்திய அணிக்கு நெருக்கடி இருந்த போதிலும், சொந்த மண்ணில் விளையாடுவது கைகொடுக்கும்.

எனவே கடந்த 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று சாதித்தது போல, இம்முறை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் விளையாடும் இந்திய அணி கோப்பை வெல்லும் என நம்புகிறேன்.
இவ்வாறு டேனி மோரிசன் கூறினார்.

உலக கோப்பையில் 145 கோல்கள்

உலக கோப்பை கால்பந்து அரங்கில் கோல் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 1998ல் பிரான்சில் நடந்த உலக கோப்பை தொடரில் மொத்தம் 171 கோல்கள் அடிக்கப்பட்டன.


அதன் பின் கடந்த 2002ல் ஜப்பான்-தென் கொரியா இணைந்து நடத்திய உலக கோப்பை தொடரில் 161 கோல்கள் அடிக்கப்பட்டன. கடந்த 2006ல் ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை தொடரில் 147 கோல்கள் அடிக்கப்பட்டன.


இம்முறை தென் ஆப்ரிக்காவில் நடந்த 19வது உலக கோப்பை கால்பந்து தொடரில் மொத்தம் 145 கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டன. இருப்பினும் "உவுசெலா' மூலம் எழுப்பப்பட்ட ஒலி, ரசிகர்களின் வித்தியாசமான "மேக்கப்', "ஆக்டோபஸ்' ஆருடம் என சுவாரஸ்யமான பல நிகழ்வுகளால், இத்தொடரின் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் இருந்தது ஆறுதலான விஷயம்.


இத்தொடரில் மொத்தம் 32 அணிகள் இணைந்து 64 போட்டியில் 145 கோல் அடித்துள்ளன. இதில் 59 கோல் ஆட்டத்தின் முதல் பாதியிலும், 84 கோல்கள் 2வது பாதியிலும், 2 கோல்கள் கூடுதல் நேரத்திலும் அடிக்கப்பட்டன.


* இந்த 145 கோல்கள், 98 வீரர்களால் அடிக்கப்பட்டன. இதில் டேவிட் வில்லா (ஸ்பெயின்), ஸ்னைடர் (நெதர்லாந்து), தாமஸ் முல்லர் (ஜெர்மனி), போர்லான் (உருகுவே) அதிகபட்சமாக தலா 5 கோல்கள் அடித்துள்ளனர். குளோஸ் (ஜெர்மனி), ஹிகுவேன் (அர்ஜென்டினா), ராபர்ட் விட்டெக் (சுலோவேகியா) தலா 3 கோல்கள் அடித்துள்ளனர்.


* இம்முறை இரண்டு "சேம் சைடு கோல்' அடிக்கப்பட்டன. டென்மார்க் வீரர் ஆக்கெர் (எதிர்-நெதர்லாந்து), தென் கொரியாவின் சு யங் பார்க் (எதிர்-அர்ஜென்டினா) ஆகியோர் "சேம் சைடு கோல்' அடித்தனர்.


* ஏழு போட்டியில் விளையாடிய ஜெர்மனி அணி, மொத்தம் 16 கோல் அடித்துள்ளது. இதன்மூலம் இம்முறை அதிக கோல் அடித்த அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. இதனை தொடர்ந்து நெதர்லாந்து (12 கோல்), உருகுவே (11 கோல்), அர்ஜென்டினா (10 கோல்), பிரேசில் (9 கோல்), ஸ்பெயின் (8 கோல்), போர்ச்சுகல் (7 கோல்), தென் கொரியா (6 கோல்) அணிகள் உள்ளன. அல்ஜீரியா மற்றும் ஹோன்டுராஸ் அணிகள் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.


* ஒரு போட்டியில் அதிக கோல் அடித்த அணிகள் வரிசையில் போர்ச்சுகல் அணி முதலிடம் பிடித்தது. வடகொரியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி அதிகபட்சமாக 7 கோல் அடித்தது.


* இம்முறை தொடரின் முதல் கோலை தென் ஆப்ரிக்க வீரர் லாரன்ஸ் டிஷபலாலா (எதிர்-மெக்சிகோ) அடித்தார். 25வது கோல் சுவிட்சர்லாந்தின் ஜெல்சன் பெர்னாண்டஸ், ஸ்பெயின் அணிக்கு எதிராக அடித்தார். பராகுவே வீரர் டோரஸ், சுலோவேகியா அணிக்கு எதிராக தொடரின் 50வது கோல் அடித்தார். தென் கொரியாவின் லீ ஜங் சூ, நைஜீரியா அணிக்கு எதிராக தொடரின் 75வது கோல் அடித்தார். தொடரின் 100வது கோலை ஸ்பெயின் வீரர் இனியஸ்டா, சிலி அணிக்கு எதிராக அடித்தார். இவரே நெதர்லாந்து அணிக்கு எதிரான பைனலில் தொடரின் 145வது கோல் அடித்து ஸ்பெயின் அணி முதன்முறையாக உலக கோப்பை வெல்ல காரணமாக இருந்தார்.


* இம்முறை 17 போட்டிகள், 1-0 என்ற கோல் கணக்கில் முடிந்தன. 11 போட்டிகள் 2-1 எனவும், 7 போட்டிகள் 1-1 எனவும், 6 போட்டிகள் 2-0 எனவும், தலா 3 போட்டிகள் 3-0, 3-1, 3-2 எனவும், தலா 2 போட்டிகள் 2-2, 4-0, 4-1 எனவும், ஒரே ஒரு போட்டி 7-0 எனவும், 7 போட்டிகள் 0-0 எனவும் முடிந்தன.


* கால்பந்து அரங்கில் எதிரணி வீரர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் வீரர்களுக்கு மஞ்சள் மற்றும் சிகப்பு நிற கார்டு வழங்குவது வழக்கம். இம்முறை 17 வீரர்களுக்கு "ரெட் கார்டு' அல்லது சிகப்பு நிற அட்டை வழங்கப்பட்டது. 247 வீரர்களுக்கு "எல்லோ கார்டு' அல்லது மஞ்சள் நிற அட்டை கொடுக்கப்பட்டது. இது கடந்த உலக கோப்பை தொடரை ஒப்பிடும் பொழுது வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2006ல் ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை தொடரில் மொத்தம் 28 "ரெட் கார்டு', 307 "எல்லோ கார்டு' வழங்கப்பட்டது.


* இதில் வடகொரியா-ஜவரி கோஸ்ட், ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் மோதிய போட்டியில் ஒரு "ரெட்' மற்றும் "எல்லோ' கார்டு கூட வழங்கப்படவில்லை. இத்தொடரில் அதிகபட்சமாக ஸ்பெயின்-நெதர்லாந்து அணிகள் மோதிய பைனலில் ஒரு "ரெட்' கார்டு, 14 "எல்லோ கார்டு' வழங்கப்பட்டது.

இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பல்

இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில், சச்சின், டிராவிட், தோனி உள்ளிட்ட இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரும் ஏமாற்றம் அளித்தனர். யுவராஜ் சதம், காம்பிர் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தனர்.


இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணி சார்பில் சுழலில் மிரட்டிய மெண்டிஸ், 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 18ம் தேதி காலேயில் நடக்கிறது. இதற்கு முன் இந்தியா, இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிகள் மூன்று நாள் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன.


முதலில் பேட் செய்த இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு உபுல் தரங்கா (110), கண்டம்பி (111), சமரவீரா (102) சதமடித்து கைகொடுக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 432 ரன்கள் எடுத்திருந்தது.


வலுவான இலக்கு: நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணியின் சாண்டிமல் (47*) ஓரளவு கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 514 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இந்தியா சார்பில் பிரக்யான் ஓஜா 5, அமித் மிஸ்ரா 2, இஷாந்த், மிதுன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


திணறல் துவக்கம்: பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு சேவக் (18), டிராவிட் (11), சச்சின் (4), லட்சுமண் (6) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் திணறல் துவக்கம் கொடுத்தனர். பின்னர் இணைந்த துவக்க வீரர் காம்பிர், யுவராஜ் சிங் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தபோது காம்பிர் (89) அவுட்டானார்.


யுவராஜ் ஆறுதல்: அடுத்து வந்த கேப்டன் தோனி (10), அமித் மிஸ்ரா (1) நிலைக்கவில்லை. விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் அபாரமாக ஆடிய யுவராஜ் சதமடித்து ஆறுதல் அளித்தார். இவர் 118 ரன்கள் எடுத்து வெளியேறினார்.


மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இந்திய அணி 291 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. துல்லியமாக பந்துவீசிய அஜந்தா மெண்டிஸ் 6, வெலகேதரா, செனனாயகே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் பின்தங்கி உள்ளது. இந்நிலையில் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

விளம்பர ஒப்பந்தம்: தோனி சாதனை

கிரிக்கெட்டில் மட்டுமல்ல, விளம்பர உலகிலும் கொடி கட்டிப் பறக்கிறார் கேப்டன் தோனி. சுமார் 210 கோடி ரூபாய்க்கான விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் சச்சினை(ரூ. 180 கோடி) முந்தி, சாதனை படைத்துள்ளார்.


இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி. கடந்த 2007ல் "டுவென்டி-20 உலக கோப்பை கைப்பற்றி வரலாறு படைத்தார். டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு "நம்பர்-1 இடம் பெற்று தந்தார். பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்(ஒரு நாள் போட்டி) பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.


கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என மூன்று பணிகளிலும் பட்டையை கிளப்பும் இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இவரை ஒப்பந்தம் செய்ய ஐ.எம்.ஜி., பெர்சப்ட் உள்ளிட்ட 9 விளம்பர நிறுவனங்கள் போட்டியிட்டன. "கேம்பிளான் என்ற நிறுவனம் 10.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சமீபத்தில் தோனி வழக்கு தொடுத்தார். எனவே, இம்முறை மிகவும் கவனமாக இருந்தார்.


திருமண பரிசு:


இறுதியில் ரிதி ஸ்போர்ட்ஸ் மானேஜ்மென்ட் மற்றும் மைண்ட்ஸ்கேப் நிறுவனங்கள் சேர்ந்து தோனியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டன. மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 210 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தில் தோனி கையெöழுத்திட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினை முந்தினார்.


கடந்த 2006ல் இவரை, மூன்று ஆண்டுகளுக்கு "ஐகானிக்ஸ் நிறுவனம் 180 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. சமீபத்தில் சாக்ஷியை கைப்பிடித்த தோனிக்கு, 210 கோடி ரூபாய் ஒப்பந்தம் மிகப் பெரிய திருமண பரிசாக அமைந்துள்ளது.


ரூ. 6 கோடி சம்பளம்:

இது குறித்து ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பொது மானேஜர் சஞ்சய் பாண்டே கூறுகையில்,""தோனியுடன் 3 ஆண்டுகளுக்கு 210 கோடி ரூபாய்க்கு விளம்பர ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மை தான். கடந்த வாரம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். இனி தோனியின் விளம்பரங்கள் அனைத்தையும் நாங்கள் கையாள்வோம்,என்றார்.

நாட்டில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரரான தோனி, தற்போது பெப்சி, ரீபோக், கோத்ரெஜ் உள்ளிட்ட 22 நிறுவனங்களின் பொருட்களுக்கு "மாடலாக உள்ளார். ஒரு பொருளுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். சச்சின் 15 பொருட்களுக்கு விளம்பரம் செய்கிறார். இவர், 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.



நல்ல லாபம்:

தற்போது விளம்பர நிறுவனங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. சம்பந்தப்பட்ட வீரர் "மாடலாக தோன்றும் ஒவ்வொரு பொருட்களுக்கான சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் வரை "கமிஷனாக பெறுகின்றன. வரும் 2011ல் இந்தியாவில் உலக கோப்பை போட்டி நடக்க இருப்பதால், கிரிக்கெட் வீரர்களுக்கு மவுசு அதிகரிக்கும். எனவே, தோனியின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


டைகர் அந்தஸ்து:


இது குறித்து ரிதி ஸ்போர்ட்ஸ்-மைண்ட்ஸ்கேப் நிறுவனங்களின் மார்க்கெட்டிங் பரிவு தலைவர் சங்கீத் ஷிரோத்கர் கூறுகையில்,""ஆண்டுக்கு குறைந்தபட்சம் 70 கோடி ரூபாய் என்ற கணக்கில் தான் 210 கோடி ரூபாய்க்கு தோனியுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதிகமான பொருட்களுக்கு இவர், விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் எங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தற்போது உலகில் அதிகம் சம்பாதிக்கும் கோல்ப் வீரர் டைகர் உட்சுக்கு நிகரான அந்தஸ்தை தோனி பெற்றுள்ளார்,என்றார்.