இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் ஆகஸ்ட் 6 முதல் 14-ம்தேதி வரை நடைபெற உள்ளது.

அதில் பங்கேற்கும் இந்தியக் குழுவில் தமிழகத்திலிருந்து ஜெ. அக்னீஸ்வர், ஜெயவந்த் விஜயகுமார் (இருவரும் சென்னை), சந்தீப் (நெய்வேலி) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

8 நாள் நடைபெறும் போட்டியில் சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்த்த 800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்திய அணி: சிறுவர்: ஜெ. அக்னீஸ்வர், ஜெயவந்த் விஜயகுமார், சந்தீப் ஜேஜ்வால், வீர்தவால் காடே, ரோஹன் போஞ்சா, ஷிப்நாத் நாஸ்கர், பல்கீத் குமார், சந்தீப், பிரஜ்வால், ஆரோன் டிசோசா, ஷான் டிசோசா, ககன், சச்சின் குமார் மெüரியா.

சிறுமியர்: கஷாகா பிரதாப், நவ்யா, ஷெனாய், மாதவி கிரி, சினேகா, காஞ்சி தேசாய், தல்ஷா பிரபு, காவ்யா பந்தேகர், அனுஷா மேத்தா, பரிகா சமன், ரிச்ச மிஸ்ரா, ஆர்த்தி கார்படே, கரபி திப்ரே.

விம்பிள்டன் டென்னிஸ்: தினாரா- வீனஸ் அரையிறுதி மோதல்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வீனஸ் வில்லியம்ûஸ எதிர்த்து ரஷியாவின் தினாரா சபினா மோத உள்ளார்.

மற்றொரு ரஷிய வீராங்கனை எலீனா டேமன்டீவாவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

விம்பிள்டனில் செவ்வாய்க்கிழமை நடந்த காலிறுதி ஆட்டத்தில், தகுதிநிலையில்கூட இடம்பெறாத ஜெர்மனி வீராங்கனை சபைன் லிசிக்கியை 6-7, 6-4, 6-1 என்ற செட்களில் வீழ்த்தினார் சபினா.

போட்டித் தரநிலையில் முதலிடத்தில் உள்ள சபினா முதல் செட்டை இழந்து வென்றது குறிப்பிடத்தக்கது.

வீனஸ் வெற்றி: முன்னதாக அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் போலந்து வீராங்கனை ராட்வான்ஸ்காவை எளிதில் தோற்கடித்து, அரையிறுதி சவாலுக்குத் தயாரானார்.

மற்றொரு ஆட்டத்தில் எலீனா டேமன்டீவா 6-2, 6-2 என்ற செட்களில் இத்தாலி வீராங்கனை பிரான்செஸ்கா ஷியாவோனைச் சாய்த்தார்.

இவர், செரீனா வில்லியம்ஸ்- விக்டோரியா அசாரென்கா ஆகியோரிடையிலான ஆட்டத்தில் வெற்றி காண்பவருடன் அரையிறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளார்.

முரே முன்னேற்றம்: ஆடவர் பிரிவில் பிரிட்டன் வீரர் ஆன்டி முரே உள்ளிட்டோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 2-6, 6-3, 6-3, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் ஸ்டானிலாஸ் வாவ்ரின்காவை போராடி தோற்கடித்தார் முரே.

1936-ம் ஆண்டுக்குப் பிறகு பட்டம் வெல்லும் பிரிட்டன் வீரர் என்ற சிறப்பை இப் போட்டியில் பெற உள்ள முரே, அடுத்து ஸ்பெயின் வீரர் ஜுவன் கார்லோஸ் பெரீரோவுடன் காலிறுதி மோதல் நிகழ்த்த உள்ளார்.

லேடன் ஹுவிட்- ஆன்டி ராடிக்; டாமி ஹாஸ்- நோவக் ஜோகோவிக்; இவா கார்லோவிக்- ரோஜர் ஃபெடரர் ஆகியோர் மற்றைய காலிறுதி ஆட்டங்களில் விளையாட உள்ளனர்.

இந்தியா முன்னேற்றம்

கசானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி-2 போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் சாம்பியன்ஸ் சாலஞ்ச்-1 போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளது இந்திய மகளிர் குழு.

கசானில் கடந்த சனிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை 6-3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைப் பெற்றது இந்திய அணி.

ராணி ராம்பால் அதிரடியாக 4 கோல்களும், சபா அஞ்சும், சான்சான் தேவி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினர்.

இந்தியக் குழுவுக்கு இவ்வெற்றி, சிறப்பான முன்னேற்றம் அளித்துள்ளது.

சாம்பியன்ஸ் சாலஞ்ச்-1 போட்டியிலும் பட்டம் வென்றால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும்.

ரூ. 175 கோடியில் சேப்பாக்கம் ஸ்டேடியம் புதுப்பிப்பு

பழமைவாய்ந்த சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் முழுவதுமாக இடிக்கப்பட்டு, ரூ. 175 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 79-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த மாபெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
"ஸ்டேடியத்தை புதுப்பிக்க பொதுக்குழு முழுவதுமாக ஆதரவு அளித்துள்ளது. என்றாலும் அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கப்படும். அதுதான் விதிமுறை. அதிகபட்சமாக ரூ. 175 கோடிவரை செலவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டிக்கு முன்னர் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்' என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கச் செயலாளர் கே.எஸ். விஸ்வநாதன் எமது செய்தியாளரிடம் கூறினார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் என்.சீனிவாசன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) செயலாளராக உள்ளார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி, சேப்பாக்கம் ஸ்டேடியத்தை சர்வதேச வசதிகளுடன் புதுப்பித்து சென்னைக்கு மேலும் அழகு சேர்க்க முனைந்துள்ளார்.
2011-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியின் முக்கிய ஆட்டங்களை சென்னையில் நடத்தவும் அவர் முயற்சி மேற்கொண்டு வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.
பழமையான ஸ்டேடியம்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஸ்டேடியம் 1916-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் முன்னர் தலைவராக இருந்த எம்.ஏ.சிதம்பரத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாகக் கொண்டுள்ள இந்த ஸ்டேடியம், "சேப்பாக் ஸ்டேடியம்' என்றே பெரும்பாலானோரால் அழைக்கப்படுகிறது.
40 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட ஸ்டேடியத்தில் முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டி 1934-ம் ஆண்டு நடைபெற்றது. இங்கிலாந்துடன் அப்போது இந்தியா விளையாடியது. அதுமுதல் டெஸ்ட் போட்டிகளே பெரும்பாலும் நடத்தப்பட்டு வந்தது. 1987-ம் ஆண்டு முதன்முதலாக ஒருதினப் போட்டி நடத்தப்பட்டது. அப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா விளையாடியது.
பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான சேப்பாக்கம் ஆடுகளம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் வென்றது, கபில்தேவின் அற்புதமான சதம், ஒருதின போட்டியில் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 194 ரன்களைக் குவித்தது என பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருந்தாலும், இந்திய -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 1986-ம் ஆண்டு "டை'யில் முடிந்த டெஸ்ட் போட்டி நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.

யுவராஜ் சதம்; இந்தியா "த்ரில்" வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருதின கிரிக்கெட் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டியில் யுவராஜ் சிங் அபாரமாகச் சதம் அடித்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுடன் 4 போட்டிகளைக் கொண்ட ஒருதின கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

50 ஓவர்களாக நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்கும், காம்பீரும் முதலில் களம் இறங்கினர். காம்பீர் அதிரடியாகத் தொடங்கி 13 ரன்கள் எடுத்திருந்தபோது டெய்லர் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த ரோஹித் சர்மா, 4 ரன்களுடன் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

பின்னர் தினேஷ் கார்த்திக்கும், யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்து மேற்கிந்தியத் தீவு வீரர்களின் பந்துகளை மைதானத்தின் நாலாபக்கமும் சிதறடித்தனர்.

யுவராஜ் சிங் 102 பந்துகளில் புயல் வேகத்தில் 131 ரன்களைக் குவித்தார். இதில் 10 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். 67 ரன்கள் எடுத்திருந்த தினேஷ் கார்த்திக் பெர்னார்ட் பந்துவீச்சில் அவுட்டானார். இருவரும் ஜோடி சேர்ந்து 135 ரன்களை சேர்த்தனர். அதன்பிறகு யுவராஜ் சிங்குடன் தோனி களமிறங்கினார். இருவரும் சேர்ந்து 86 ரன்கள் சேர்த்தபோது பிராவோ பந்துவீச்சில் யுவராஜ் சிங் அவுட்டானார். அதன் பிறகு 41 ரன்கள் எடுத்த தோனி ரன் அவுட்டானார். யூசுப் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் அவுட்டாகாமல் முறையே 40, 21 ரன்கள் எடுத்திருந்தனர். ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களைச் சேர்த்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிராவோ 2 விக்கெட்டுகளும், டெய்லர், பேக்கர் மற்றும் பெர்னார்ட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துவக்கநிலை ஆட்டக்காரர்கள் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். கெய்ல் 37 ரன்களும், மோர்டன் 42 ரன்களும், சர்வான் 45 ரன்களும், சந்தர்பால் 63 ரன்களும் அடித்தனர். இதனால், ஒரு கட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெறும் நிலையில் இருந்தது. ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால், அந்த அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 319 ரன்களை மட்டுமே அந்த அணியால் பெற முடிந்தது. இதனால், 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியத் தரப்பில் நெஹ்ராவும் யூசுப் பதானும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா, ஹர்பஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். யுவராஜ் சிங் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

பகலிரவாக டெஸ்ட் ஆட்டங்கள்

டெஸ்ட் ஆட்டங்களை பகலிரவாக நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் லார்ட்ஸில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் ஐசிசி தலைவர் டேவிட் மோர்கன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: டெஸ்ட் ஆட்டங்களில் நடுவரின் முடிவு குறித்து பேட்ஸ்மேன்கள் முறையிடும் முறை கடந்த பல மாதங்களாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. அத்தகைய முறையை அக்டோபருக்குப் பின் கைவிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பகலிரவு ஆட்டங்களில் எந்த வகையான பந்தை உபயோகப்படுத்துவது என்பது குறித்து முதல் தர ஆட்டங்களில் பரிசோதித்து நல்ல முடிவு எட்டப்பட்டால், டெஸ்ட் ஆட்டங்களை பகலிரவாக நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் குறைவான ஓவர்கள் பந்துவீசும் அணிக்கு தற்போது விதிக்கப்படும் அபராதத்தை 2 மடங்கு ஆக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட வகையான ஆட்டத்தில் (டெஸ்ட், ஒரு தின ஆட்டம்...) தொடர்ந்து 3 முறை ஓர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டால், அந்த அணியின் கேப்டனுக்கு ஓர் ஆட்டத்தில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும்.

பேட்ஸ்மெனுக்கு சாதகமாக ஆடுகளங்களை அமைப்பது, தகுதியில்லாத ஆடுகளங்களை அமைப்பது போன்றவை கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நாட்டு வாரியத்துக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஷரபோவா, ஷுட்லருக்கு அதிர்ச்சி: சானியா மிர்சா தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் ஜெர்மனி வீரர் ரெய்னர் ஷுட்லர், ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினர்.
புதன்கிழமை நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் இடம் பெறாத இஸ்ரேல் வீரர் டுடி செலா 7-6 (7-3), 6-3, 6-2 என்ற நேர் செட்டுகளில் ஷுட்லரை வெளியேற்றினார்.
தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ளவர் ஷுட்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவரிசையில் 28-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா 6-4, 6-4 என இந்தியாவின் சானியா மிர்சாவை வீழ்த்தினார்.
தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள ஷரபோவா 2-6, 6-3, 4-6 என தரவரிசையில் இடம்பெறாத ஆர்ஜென்டீனா வீராங்கனை ஜிசெலா டுல்கோவிடம் அதிர்ச்சித் தோல்வியுற்றார்.
இத்தாலி வீரர் சிமோன் பொலெலி காயம் காரணமாக விளையாடாததால் பிரான்ஸ் வீரர் ஜோ-வில்பிரட் சோங்கா 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள ரஷியாவின் நடியா பெட்ரோவா 6-3, 6-2 என எளிதாக இஸ்ரேலின் ஷாஹர் பீரைத் தோற்கடித்தார்.
தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள டொமினிகா சிபுல்கோவா 6-2, 6-4 என்ற நேர் செட்டுகளில் போலந்தின் உர்சுலா ராட்வன்ஸ்காவை வீழ்த்தினார்.
தரவரிசையில் இடம் பெறாத ஸ்லோவேகிய வீராங்கனை டேனியலா ஹான்டுகோவா 6-3, 7-5 என தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள சீன வீராங்கனை ஜீ ஜெங்கை வென்றார்.
ஜப்பானைச் சேர்ந்த மூத்த வீராங்கனை அய் சுஜியாமா 7-6 (7-5), 6-3 என ஸ்பெயினின் அரண்ட்சா பாரா சன்டோன்ஜாவைத் தோற்கடித்தார்.


வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை

இந்திய கேப்டன் தோனி சாட்டையை சுழற்றியுள்ளார். அணியின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள இவர், காயம் அடைந்த வீரர்களுக்கு அணியில் இடமில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி "சூப்பர்-8' சுற்றோடு வெளியேறியது. இதற்கு பெரும்பாலான வீரர்கள் முழு உடல்தகுதியில்லாமல் பங்கேற்றதே முக்கிய காரணம் என கூறப்பட்டது.

உதாரணமாக வலது தோள்பட்டையில் லேசான வலி என்று சேவக் முதலில் கூறியுள்ளார். பின்னர் லண்டனில் சோதனை செய்த போது "ஆப்பரேஷன்' செய்யும் அளவுக்கு பெரிய பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அணியில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். இது தொடர்பாக கேப்டன் தோனி மற்றும் சேவக் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. காயத்தின் உண்மை தன்மையை சேவக், தன்னிடம் தெரிவிக்கவில்லை என தோனி ஆதங்கப்பட்டுள்ளார்.

அதிரடி "அட்வைஸ்': இந்தச் சூழலில் இந்திய அணி அடுத்த கட்டமாக நான்கு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் போட்டி வரும் 26ம் தேதி நடக்கிறது. இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக சக வீரர்களிடம் மிகவும் காட்டமாக பேசியுள்ளார் தோனி. காயம் மற்றும் நூறு சதவீத உடல்தகுதி இல்லாத வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக கோப்பை போட்டிகளில் யுவராஜ், ஹர்பஜன், காம்பிர் போன்றவர்கள் சோபிக்கவில்லை. எனவே, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சீனியர் வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சூசகமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சக வீரர்களிடம் தோனி கூறியது: என்னை பொறுத்தவரை தனிப்பட்டவர்களை காட்டிலும் அணிக்கு தான் முன்னுரிமை அளிப்பேன். இதையே தான் அணியில் உள்ள ஒவ்வொருவரும் கடைபிடிப்பார்கள் என நம்புகிறேன். காயம் தொடர்பான உண்மையை மறைக்காதீர்கள். அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காயம் அடைந்திருந்தாலோ அல்லது தனிப்பட்ட பிரச்னைகள் இருந்தாலோ, அது பற்றி உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும். காயத்துக்கு சிறிது காலம் ஓய்வு தான் தீர்வு என்றால், அதனை ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சோர்வோடும் வலியோடும் பங்கேற்றால், அது அணிக்கும் அவருக்கும் பின்னடைவு ஏற்படுத்தும். அணியில் இருந்து "பிரேக்' எடுத்துக் கொள்ள விரும்பினால், என்னிடம் அல்லது இந்திய கிரிக்கெட் போர்டிடம் தெரிவிக்கவும். அணியின் நலனுக்காக சீனியர் வீரர்கள் இன்னும் அதிகமான திறமையை வெளிப்படுத்த வேண்டும். ஜூனியர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுவது மிகவும் அவசியம். வீரர்கள் வெற்றியை பழக்கமாக கொள்ள வேண்டும். இவ்வாறு தோனி தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இம்முறை வீரர்கள் கவனமுடன் தேர்வு செய்யப்பட்டனர். காயம் அடைந்த சேவக்(வலது தோள்பட்டை காயம்), சச்சின் (விரல் பகுதியில்), ஜாகிர் கான் (தோள்பட்டை) சுரேஷ் ரெய்னாவுக்கு (கட்டை விரலில் லேசான எலும்பு முறிவு) ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக முறையே முரளி விஜய், அபிஷேக் நாயர், ஜாகிர், பத்ரிநாத் வாய்ப்பு பெற்றனர். முழு உடல்தகுதி கொண்ட இவர்கள் சாதிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பி.சி.சி.ஐ., ஆதரவு: கேப்டன் தோனியின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி. சி.ஐ.,) ஆதரவு தெரிவித்துள்ளது. பி.சி.சி.ஐ., மீடியா கமிட்டிதலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,""சக வீரர்களுக்கு "அட்வைஸ்' அளிக்கும் உரிமை தோனிக்கு உண்டு. இவரது கருத்து வீரர்களின் உடல்தகுதியில் முன்னேற்றம் ஏற்பட உதவும். காயம் அடைந்த வீரர்கள் மற்றும் சோர் வாக இருப்பதாக உணருபவர்கள் அணியின் "பிசியோதரபிஸ்ட்' அல்லது பி.சி.சி.ஐ.,யிடம், அது பற்றி தெரிவிக்க வேண்டும்,''என்றார்.

பன்றிக் காய்ச்சல் பீதியில் இந்திய வீரர்கள்: வெஸ்ட் இண்டீசில் பன்றிக் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதால் இந்திய வீரர்கள் பீதியில் உள்ளனர். ஓட்டலை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். அசைவ உணவு பக்கம் தலை காட்டுவதில்லையாம். வெஸ்ட் இண்டீசில் உள்ள டிரினிடாட், டுபாகோதீவுகளில் 18 பேர் பன்றிக் காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இங்கு நடக்க இருந்த கரீபிய விளையாட்டு மற்றும் இளைஞர் கால்பந்து கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தீவுகளில் இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்காதது ஆறுதல் அளிக்கும் விஷயம். முதலிரண்டு போட்டிகள்(ஜூன் 26, 28) ஜமைக்காவிலும், 3, 4வது போட்டி(ஜூலை 3, 5) செயின்ட்லூசியாவில் நடக்க உள்ளன. ஆனாலும் நமது வீரர்கள் மிகுந்த முன்எச்சரிக்கையுடன் உள்ளனர்

சானியா வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக் தகுதி பெற்றார் இந்தியாவின் சானியா மிர்சா.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜெர்மனியின் அனா-லினா குரோயன்பீல்டை எதிர் கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியில் சானியா மிர்சா 6-2, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

சேவாக் இல்லாததே தோல்விக்கு காரணம்: கங்குலி

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் டுவென்டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டம் வெல்லப்போது யார் என்ற விவாதம் ரசிகர்களிடம் தீவிரமாகியுள்ள நிலையில், நடப்பு சாம்பியன் இந்தியா அரையிறுதிக்குக் கூட தகுதி பெறாமல் அப் போட்டியிலிருந்து வெளியேறியது ஏன் என்ற விவாதமும் முக்கியத்துவம் பெற்றுவருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் தொடர்ந்து விளையாடியதால் ஏற்பட்ட களைப்பே தோல்விக்குக் காரணம் என இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் காரணம் அதுவல்ல; வீரேந்திர சேவாக் விளையாடாமல் போனதே காரணம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளது:

இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் பெற்றுள்ள தோல்விக்கு கேரி கிர்ஸ்டன் கூறும் காரணத்தை நான் ஏற்பதாக இல்லை. அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களில் பெரும்பாலானோர் 22- 23 வயது இளைஞர்கள். இப்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ளனர். அவர்களுக்கு களைப்பு ஒரு காரணமாக இருக்க வாய்ப்பில்லை.

ஒருவேளை தோனி, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் ஆகியோர் அவர் கூறும் காரணத்துக்கு வாய்ப்பாக இருந்திருக்கலாம் என்றாலும், அவர்கள் அனைவரும் நிரந்தரமாக டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடி வருபவர்கள். சாலை வழியாகப் பயணித்து கூட நிறைய போட்டிகளில் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கும் களைப்பு பிரச்னையாக இருந்திருக்குமா எனத் தெரியவில்லை.

என்னைப் பொருத்தவரை தில்லியைச் சேர்ந்த வீரேந்திர சேவாக் விளையாடமுடியாமல் போனதே அணிக்கு துரதிருஷ்டம். அவரது ஆட்டம், நிச்சயம் அணியில் மாறுதலை ஏற்படுத்தியிருக்கும்.

அவருக்குப் பதிலாக இன்னிங்ûஸத் தொடங்கிய ரோஹித் சர்மா, முதன் முதலாக அந்த வாய்ப்பை பெற்றவர். கடைசியாக அவர் விளையாடிய 3 ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடவில்லை. பின்னர் எப்படி முக்கியமான உலகக் கோப்பை போட்டியில் சிறப்பை எதிர்பார்க்கலாம்?

சேவாக், சச்சின், கம்பீர் ஆகியோர் ஒருதின போட்டிகளில் முக்கியமான வீரர்கள். அவர்களில் சேவாக்கும், சச்சினும் இல்லாதபோது எப்படி வலுவான அணியாகப் பார்க்க முடியும்? என்றாலும் உண்மையிலேயே போட்டி என்றால் அது டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகள்தான். டுவென்டி-20 போட்டி அல்ல. அவற்றில் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது என்றார் கங்குலி.

தோனிக்கு எதிராக ரசிகர்கள்


: "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் தவறான யுக்திகளை கையாண்ட கேப்டன் தோனிக்கு எதிராக இந்திய ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.

இங்கிலாந்தில் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் படுமோசமாக ஆடிய நடப்பு சாம்பியன் இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது. நேற்று முன் தினம் நடந்த தென் ஆப்ரிக் காவுக்கு எதிரான கடைசி "சூப்பர்-8' போட்டியிலும் தோல்வி அடைந்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவின் போது தோனிக்கு எதிராக இந்திய ரசிகர் கள் கோஷம் எழுப்பி, தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

இது குறித்து தோனி கூறியது:ரசிகர்கள் கோஷம் எழுப்புவது முதல் முறையல்ல. 2007ல் நடந்த உலக கோப்பை (50 ஓவர்)தொடரில் தோல்வி அடைந்த போது எனக்கு இறுதிச் சடங்கு நடத்தி வெறுப்பை காட்டினர். இதற்காக நான் கவலைப்படவில்லை. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது என்பதையே சுட்டிக் காட்டுகிறது. "டுவென்டி-20' உலக கோப்பை தோல்விக்கு வீரர்கள் சோர்வாக இருந்ததே காரணம் என கூறுவதை ஏற்க இயலாது. சிலர் மட்டுமே நூறு சதவீத உடல்தகுதி இல்லாமல் இருந்தனர். முன்பு ஒட்டுமொத்த அணியாக 80 சதவீதம் வரை சிறப்பாக செயல்பட்டோம். இம்முறை அணியாக 60 சதவீதம் கூட நன்றாக செயல்படவில்லை. பேட்டிங்கில் கோட்டை விட்டது தான் வீழ்ச்சிக்கு வித்திட்டது.இவ்வாறு தோனி கூறினார்.

சச்சின், ரெய்னா, ஜாகிர் ஓய்வு..இந்திய அணியில் மீண்டும் நெஹ்ரா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின் "வேகப்புயல்' ஆசிஷ் நெஹ்ரா வாய்ப்பு பெற்றுள்ளார். காயம் காரணமாக சச்சின், சேவக், சுரேஷ் ரெய்னா, ஜாகிர் கான் ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் சார்பில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பத்ரிநாத் இடம் பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி நான்கு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகள் ஜமைக்காவில் வரும் 26, 28ம் தேதி நடக்கிறது. மூன்றாவது, நான்காவது போட்டி முறையே ஜூலை 3, 5ம் தேதியில் நடக்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி நேற்று தேர்வு செய்யப்பட்டது. தற்போது லண்டனில் உள்ள தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் சக உறுப்பினர்களை "டெலிகான் பிரன்ஸ்' முறையில் தொடர்பு கொண்டு வீரர்களின் தேர்வை உறுதி செய்தார். தேர்வு கூட்டத்தில் கேப்டன் தோனி, பயிற்சியாளர் கிறிஸ்டன் கலந்து கொண்டனர். "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறிய நிலையில், இம்முறை வீரர்கள் தேர்வில் கூடுதல் கவனம் செலுத் தப்பட்டது. காயம் அடைந்தவர்கள், "பார்மில்' இல்லாதவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். பின்னர் 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.

துணை கேப்டன் பொறுப்பில் யுவராஜ் நீடிக்கிறார். புதுமுகமாக அபிஷேக் நாயர் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக சச்சின்(விரல் பகுதியில்), ஜாகிர் கான்(தோள்பட்டை), சேவக்(தோள் பட்டை), சுரேஷ் ரெய்னாவுக்கு (கட்டை விரலில் லேசான எலும்பு முறிவு) ஓய்வு அளிக்கப் பட்டுள்ளது. "பார்ம்' இல்லாத இர்பான் பதான் நீக்கப்பட்டுள்ளார். முனாப் படேல், ஸ்ரீசாந்த் வாய்ப்பு பெறவில்லை.

நெஹ்ரா வாய்ப்பு:

ஐ.பி.எல்., தொடரில் டில்லி டேர்டெவில்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய 30 வயதான ஆசிஷ் நெஹ்ரா மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து காயத்தால் அவதிப் பட்டு வந்த இவர், நான்கு ஆண்டுகளுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளார். கடைசியாக செப்., 2005ல் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியுள்ளார்.

தமிழகம் அமோகம்:

தமிழகம் சார்பில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். சேவக் இல்லாத நிலையில் துவக்க வீரர் வாய்ப்பு தமிழகத் தின் முரளி விஜய்க்கு கிடைத் துள்ளது. சுரேஷ் ரெய்னாவின் இடத்தை பத்ரிநாத் பிடித்துள் ளார். தினேஷ் கார்த்திக் இரண்டாவது "ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பராக' இடம் பெற்றுள்ளார். "டுவென்டி-20' உலக கோப்பை "சூப்பர்-8' சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக படுமந்தமாக ஆடிய ரவிந்திர ஜடேஜா மீதும் தேர்வாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

நாயர் புதுமுகம்:

ஒரே புதுமுகமாக அபிஷேக் நாயர் இடம் பெற்றுள்ளார். 25 வயது "ஆல்-ரவுண்டரான' இவர், ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூப்பராக விளையாடினார். இதன் அடிப்படையில் வாய்ப்பு தேடி வந்துள்ளது. தற்போது இங்கிலாந்தில் இருக்கும் இந்திய வீரர்கள், இன்று லண்டனில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் புறப்படுகின்றனர்.

இந்திய அணி:

தோனி(கேப்டன்), யுவராஜ் சிங்(துணை கேப்டன்), காம்பிர், ரோகித் சர்மா, ஹர்பஜன், பிரக்யான் ஓஜா, யூசுப் பதான், முரளி விஜய், பத்ரிநாத், ஆர்.பி.சிங், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, அபிஷேக் நாயர், ஆசிஷ் நெஹ்ரா, ரவிந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக்.

தோல்விக்கு ஐ.பி.எல்., காரணம் தோனி-கிறிஸ்டன் மோதல்

"டுவென்டி-20' உலக கோப்பை தோல்வி தொடர்பாக இந்திய கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் கிறிஸ்டன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியதற்கு ஐ.பி.எல்., தொடர் தான் காரணம் என்கிறார் கிறிஸ்டன்.
தோல்விக்கு ஐ.பி.எல்., மீது பழிபோட முடியாது என தோனி தெரிவித்துள்ளதால், இன்னொரு பிரச்னை வெடித்துள்ளது.இங்கிலாந்தில் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது.
இதில் இந்திய அணி "சூப்பர்-8' சுற்றில் அடுத்தடுத்து பெற்ற தோல்வியால் அரையிறுதிக்கு செல்ல முடியாமல் வெளியேறியது. இது குறித்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டன் கூறியது:"டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் ரசிகர்கள் பெருமைப்படும் வகையில் செயல்படாமல், வெளியேறியது கடும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
தோல்விக்கு எந்த காரணமும் கூற விரும்பவில்லை. ஆனால் வீரர்கள் சோர்வு காரணமாக முழு ஆற்றலுடன் செயல்பட வில்லை. நியூசிலாந்து தொடரில் வீரர்கள் உற்சாகமாக இருந்தனர். அது இங்கிலாந்தில் இல்லை. ஏனெனில் கடந்த ஜனவரியில் துவங்கிய எங்கள் பயணம், இன்னும் முடியவில்லை.
வீணான ஐ.பி.எல்.,: ஐ.பி.எல்., தொடரால் அதிக சோர்வடைவதாக வீரர்கள் நினைத்தனர். வீரர்களுக்கு காயமும் ஏற்பட்டது. இந்த தொடரில் பணம் தாராளமாக செலவிடப் பட்டது.
இந்த காலங்களில் வீரர்களின் நடத்தையையும் கண்காணிக்க முடியாமல் போனது. ஏனெனில் அவர்கள் அணி உரிமையாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். அவர்களுக்கு மட்டும் பதில் அளித்தால் போதுமானது.
தங்கள் உரிமையாளர்களை மகிழ்விப்பதிலே குறியாக இருந்தனர். ஐ.பி.எல்., ஒரு உள்ளூர் தொடர் தான். இதில் சில முக்கியமான மற்றும் சிறந்த வீரர்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

விரைவில் சாதிக்கலாம்: வீரர்களுக்கு போதிய பயிற்சி கொடுப்பதா அல்லது ஓய்வு கொடுப்பதா என உறுதியாக தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு ஓய்வு கொடுத்தால் முக்கிய தொடர்களில் சிறப்பாக செயல்படுவார்கள். அடுத்த 9 மாதங்களுக்குள் வெஸ்ட்இண்டீசில் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் துவங்கவுள்ளது.
இதற்காக நமக்கு நல்ல திட்டங்கள் தேவைப்படுகிறது. இந்திய வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் விளையாடாமல் இருந்தால், எல்லோரும் எதிர்பார்க்கும் வகையில் அசத்தலாம். இதற்கு வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். உண்மை தெரிந்தது: வங்க தேசம், அயர்லாந்து போன்ற சிறிய அணிகளை எளிதாக வென்றோம். ஆனால் அடுத்து வெஸ்ட் இண்டீஸ் உடனான போட்டி சவாலாக இருந்தது. இது சர்வதேச தரம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக எப்படி கடினமாக போராட வேண்டும் என்ற உண்மையை உணர்த்தியது. திறமையாக செயல்படும் கேப்டன்களில் தோனியும் ஒருவர். எதையும் விரைவாக கற்றுவிடுவார். 50 ஓவர் கிரிக்கெட்டில் போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுப்பதில் வல்லவர்.
"டுவென்டி-20' கிரிக்கெட்டிலும் சாதிக்க முற்படுகிறார். பேட்டிங் கில் முன்னேறி வரும் தோனி, இந்த வகை போட்டியில் சிறப் பான இன்னிங்சிற்காக காத்திருக் கிறார். இவ்வாறு கிறிஸ்டன் தெரிவித் தார்.கிறிஸ்டனின் இந்த பேட்டி, தோனியின் கருத்துக்கு எதிராக உள்ளது. ""தோல்விக்கு ஐ.பி. எல்., தொடர் மீது பழிபோட முடியாது. நான் மற்றும் சக வீரர்கள் நூறு சதவீத திறமையை போட்டிகளில் வெளிப்படுத்தவில்லை என்று கூறுவதை ஒருபோதும் ஏற்க இயலாது,'' என தோனி தெரிவித்திருந்தார். கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு இந்திய கிரிக் கெட்டில் புயலை கிளப்பியுள்ளது.
பி.சி.சி.ஐ., ஆவேசம்:கிறிஸ்டன் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பி.சி.சி.ஐ., நிதி குழு தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" ஐ.பி.எல்., மீது குற்றம் சுமத்துவது சரியல்ல. சோர்வாக இருப்பதாக வீரர்கள் உணர்ந்தால் உடனடியாக விலகிக் கொள்ளலாம். அவர்களுக்கு பதிலாக, மாற்று வீரரை பி.சி.சி.ஐ., தயாராக வைத்துள்ளது. ஒரு தொடரில் பங்கேற்கும்படி எந்த ஒரு வீரரையும் நிர்ப்பந்திப்பது கிடையாது ,'' என்றார்.
முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு:பயிற்சியாளர் கிறிஸ்டன் கருத்துக்கு முன்னாள் இந்திய வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சந்தீப் படேல்: தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து வீரர்களும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடினர். இந்த அனுபவத்தை அவர்கள் "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பயன்படுத்தினர். இதுபற்றி கிறிஸ்டன் பதிலளிக்க வேண்டும். டிராவிட் தலைமையில் 2007 உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் இருந்து வெளியேறினோம். இதற்கு பின் கேப்டன் பணியில் தோனி சிறப்பாகத்தான் செயல்பட்டு வருகிறார். இது தான் முதல் தோல்வி. இதை ஏற்றுக்கொண்டு, அடுத்த தொடரில் கவனம் செலுத்த வேண்டும். லால்சந்த் ராஜ்புட்: ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற கிப்ஸ், பிராவோ, வான் டர் மெர்வி சிறப்பாக சாதிக்கிறார்களே. நமது அணியினர் நன்கு செயல்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் நமது அணி, சிறந்த அணிதான் என நினைக்கிறேன்.. சந்து போர்டே: ஐ.பி.எல்., "டுவென்டி-20' உலக கோப்பை தொடர், இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என தெரியவில்லை. ஐ.பி.எல்., போட்டிகள், உலக கோப்பை தொடருக்கான பயிற்சி களம். நம்முடைய வீரர்கள் இதை பயன்படுத்தி இருக்கலாம். பேட்டிங் ஆர்டரை மாற்றியதே தோல்விக்கு காரணம்.
கங்குலி போல் செயல்படும் தோனி:"டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி குறித்த செய்திக்கு தினமலர் இணையதள வாசகர்கள் கருத்து:இதுவரை இந்திய அணி பெற்ற வெற்றிக்கு, அணியின் ஒட்டு மொத்த செயல்பாடுதான் காரணம். முக்கியமான போட்டியில் வெற்றி தேடித்தர தோனி தவறிவிட்டார். அவரை கேப்டன் பதவியில் இருந்து விலக்க இதுதான் தருணம். இல்லை என்றால் இனி தோல்வி தொடரும்.- ஹுசைன்.
தோனி, "ஸ்டம்புகளுக்கு' பின், பந்துகளை தவறவிடுவது, "ஸ்டம்பிங்' வாய்ப்பை கோட்டை விடுவது, உதிரி ரன்களை விட்டுக்கொடுப்பது என நிறைய தவறுகள் செய்கிறார்.-பாட்ஷா, அரபு எமிரேட்ஸ்
தோனி மீது ஒரு தவறும் இல்லை. ஒன்று மட்டும் நிச்சயம். சேவக் இல்லாமல் "டுவென்டி-20' கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு வெற்றி கடினம் தான்.-நடராஜன், கத்தார்
அணி தேர்வு விஷயங்களில் கங்குலி போல அதிகம் தலையிடுகிறார். பேட்டிங்கில் மிரட்டும் பழைய தோனியை, இப்போது காண முடிய வில்லை. சாமர்த்தியமாக பேசி, அணியின் மீது குற்றம் சுமத்தி தப்பித்து விடுகிறார்.

20 இடங்கள் முன்னேறினார் சானியா


பர்மிங்காமில் நடைபெற்ற ஏகான் கிளாஸிக் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிச் சுற்றில் விளையாடியதால், உலக டென்னிஸ் தரவரிசையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார் இந்தியாவின் சானியா மிர்சா.

அப் போட்டிக்கு முன்னர் 98-வது இடத்தில் இருந்த அவர், தற்போது 78-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டையர் பிரிவில் 2 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தைப் பிடித்துள்ளார்

"எந்த அணியையும் தோற்கடிக்கக் கூடிய ஒருங்கிணைப்பு இந்திய வீரர்களிடம் உண்டு'

எந்த அணியையும் தோற்கடிக்கக் கூடிய ஒருங்கிணைப்பு இந்திய அணியில் உள்ளது. ஆதலால் இங்கிலாந்தில் மீண்டும் ருவென்ரி 20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

தனது குடும்பத்தினருடன் மேற்கிந்தியத் தீவுகள் இந்திய அணிகளிடையிலான ஆட்டத்தை லோர்ட்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை கண்டுகளித்தார் அவர். அந்தப் போட்டியில் தோல்வியுற்று அடுத்த சுற்று முன்னேற்றத்துக்கு இந்திய அணி திணறிவரும் நிலையில் நம்பிக்கை தரும்படியான கருத்தை சச்சின் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியுள்ளதாவது;

இந்திய அணி அபாரமான ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளதால் அபாரமான முடிவுகளைக் கண்டு வருகிறது. துடுப்பாட்டம், பந்து வீச்சில் சமமான பலத்தை கொண்டுள்ளது. உலகக் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு தேவையான அம்சங்கள் (வீரர்கள்) அனைத்தும் இந்தியக் குழுவில் உள்ளது. ஆதலால் மீண்டும் இந்தியா வெல்லும்.

சமீப ஆண்டுகளாக வெளிநாட்டில் பெற்று வரும் சிறப்புகள் எந்த அணிக்கு எதிராகவும் பயமில்லாமல் விளையாட இந்திய அணிக்கு உறுதுணையாகியுள்ளது என்றார்.


சூப்பர்-8 அட்டவணை

உலக கோப்பை லீக் சுற்றுப் போட்டிகளில் இருந்து வங்கதேசம்,ஆஸ்திரேலியா,ஸ்காட்லாந்து,நெதெர்லாந்து,ஆகிய அணிகள் வெளியேறின.தற்போது இருக்கும் 8 அணிகள் 'இ' மற்றும் 'எப்' பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.இதன்படி குரூப் 'இ' பிரிவில் இந்தியா (ஏ1),இங்கிலாந்து (பி2),வெஸ்ட் இண்டீஸ் (சி1),தென் ஆப்பிரிக்கா(டி2)அணிகள் இடம் பெற்றுள்ளன.குரூப் 'எப்'பிரிவில் அயர்லாந்து(ஏ2),பாகிஸ்தான்(பி1),இலங்கை(சி2),நியூசிலாந்து(டி1)அணிகள் இடம் பிடித்துள்ளன.

இதன் படி 'டுவென்டி -20 ' உலக கோப்பை 'சூப்பர் 'சுற்று போட்டிகளின் அட்டவணை விபரம்:

நாள் குரூப் அணிகள் நேரம்

ஜூன் 11 எப் நியூசிலாந்து-அயர்லாந்து மாலை 6 மணி
ஜூன் 11 ஈ இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா இரவு 10 மணி
ஜூன் 12 எப் பாகிஸ்தான்-இலங்கை மாலை மணி
ஜூன் 12 ஈ இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இரவு 10 மணி
ஜூன் 13 ஈ வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்ப்ரிக்கா மாலை 6 மணி
ஜூன் 13 எப் நியூசிலாந்து-பாகிஸ்தான் இரவு 10 மணி
ஜூன் 14 எப் அயர்லாந்து-இலங்கை மாலை 6 மணி
ஜூன் 14 ஈ இந்தியா- இங்கிலாந்து இரவு 10 மணி
ஜூன் 15 ஈ இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் மாலை 6 மணி
ஜூன் 15 எப் பாகிஸ்தான்-அயர்லாந்து இரவு 10 மணி
ஜூன் 16 எப் நியூசிலாந்து-இலங்கை மாலை 6 மணி
ஜூன் 16 ஈ இந்தியா-தென் ஆப்பிரிக்கா இரவு 10 மணி
ஜூன் 18 - முதல் அரையிறுதி இரவு 10 மணி
ஜூன் 19 - இரண்டாம் அரையிறுதி இரவு 10 மணி
ஜூன் 21 - பைனல் இரவு 10 மணி


"டுவென்டி-20' உலக கோப்பை திருவிழா

ஒரே ஓவரில் யுவராஜ் 6 சிக்சர்கள் விளாசியது, ஜிம்பாப் வேயிடம் ஆஸ்திரேலியா வீழ்ந்தது, 57 பந்தில் கிறிஸ் கெய்ல் 117 ரன்கள் விளாசியது, பைனலில் கடைசி ஓவரில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி, கோப்பை வென்றது போன்ற "திரில்' விஷயங்கள் முதலாவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் அரங்கேறின. இதே போன்றதொரு பரபரப்பான தருணங்களை அடுத்த மாதம் நடக்க உள்ள 2வது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரிலும் ரசிகர்கள் அனுபவிக்க காத்திருக்கின்றனர். கடந்த முறை கோப்பை வென்ற உற்சாகத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி, இம்முறை களமிறங்குகிறது.

கடந்த 2007ல் ஐ.சி.சி., சார்பில் முதலாவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் தென் ஆப்ரிக் காவில் நடத்தப்பட்டது. இதில் சச்சின், கங்குலி, டிராவிட் உள்ளிட்ட மூத்த வீரர்கள் நீக்கப்பட்ட போதும், தோனியின் இளம் படை சாதித்து காட்டியது. பாகிஸ்தானுடனான பைனலை எளிதில் மறக்க முடியாது. ஜோகிந்தர் சர்மா வீசிய கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை மிஸ்பா தூக்கி அடிக்க, ஸ்ரீசாந்த் அப்படியே "லபக்' செய்ய, இந்திய அணி கோப்பை வென்று அசத்தியது.

ஐ.பி.எல்., அனுபவம்:

இந்த முறையும் தோனியின் அணி சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் நமது வீரர்கள் அபாரமாக ஆடியதே முக்கிய காரணம். இதில் யூசுப் பதான், ரோகித் சர்மா, இர்பான் பதான் அதிரடியில் மிரட்டினர். துவக்கத்தில் சேவக், காம்பிர் சோபிக்காதது பலவீனம் தான். இவர்கள் எழுச்சி கண்டால், கோப்பை கனவு எளிதில் நனவாகும். வழக்கம் போல் நெருக்கடிக்கு இடம் கொடுக்காமல் "மிஸ்டர் கூல்' கேப்டனாக தோனி செயல்பட வேண்டும். பந்துவீச்சில் ஜாகிர் கானுக்கு ஏற்பட்டுள்ள காயம் சிக்கலை தரலாம். கடந்த முறை கலக்கிய ஜோகிந்தர் சர்மா, ஸ்ரீசாந்த் அணியில் இல்லாததால் இஷாந்த் சர்மா, ஆர்.பி.சிங்கை பெரிதும் நம்பியிருக்க வேண்டும். ஐ.பி.எல்., தொடரில் நமது வீரர்களின் பீல்டில் மோசமாக இருந்தது. இக்குறையை நிவர்த்தி செய்வது அவசியம். கடந்த 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை(60 ஓவர்) வென்றது. அதற்கு பின் நம்மவர் களால் சாதிக்க முடியவில்லை. இதனை தகர்க்கும் வகையில் தொடர்ந்து இரண்டாவது "டுவென்டி-20' உலக கோப்பையை கைப்பற்றி தோனி அணி சாதிக்க வேண்டும்.

பாக்., பரிதாபம்:

கடந்த முறை பைனலுக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணி இம்முறை பெரும் குழப்பத்தில் உள்ளது. முகமது ஆசிப், சோயப் அக்தர் இல்லாமல் தவிக்கிறது. கேப்டன் யூனிஸ் கான், "அதிரடி' அப்ரிதி, சோகைல் தன்வீர் போன்றவர்கள் எழுச்சி கண்டால் மட்டுமே தேற முடியும். ஆஸ்திரேலியா அணி பட்டம் வெல்ல வியூகம் வகுத்து உள்ளது. "வேகப்புயல்' பிரட் லீ, மைக்கேல் கிளார்க், சைமண்ட்ஸ் நம்பிக்கை தருகின்றனர். இவர்கள் கைகொடுத்தால் கேப்டன் பாண்டிங்கின் "டுவென்டி-20' கோப்பை கனவு நனவாகலாம். ஐ.பி.எல்., தொடர் தங்களது மண்ணில் நடந்ததால் தென் ஆப்ரிக்க வீரர்கள் "டுவென்டி-20' நுணுக்கங்களை கற்று தேர்ந் துள்ளனர். காலிஸ், போத்தா, டிவிலியர்ஸ், டுமினி, பவுச்சர் போன்றவர்கள் ஐ.பி.எல்., நாயகர் களாக ஜொலித்தனர். இவர்களது சூப்பர் ஆட்டம் தொடர்ந்தால் எதிரணிகளுக்கு சிக்கல் தான்.

உள்ளூர் சாதகம்:

இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டர் பிளின்டாப் இல்லாதது பின்னடைவு. ஆனாலும் போட்டிகள் சொந்த மண்ணில் நடப்பதால், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அசத்தலாம். இலங்கை அணி அதிரடி ஜெயசூர்யா, முரளிதரன், மலிங்காவை தான் சார்ந்து உள்ளது. இவர்கள் ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு பிரகாசிக்கவில்லை. இதற்கு உலக கோப்பை தொடரில் பரிகாரம் தேட முயற்சிக்கலாம். கேப்டன் கெய்ல் அதிரடி காட்டினால் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி வாகை சூடலாம். நியூசிலாந்து, வங்கதேச அணிகளும் அதிர்ச்சி தரலாம். பெயர் அளவுக்கு அயர்லாந்து, ஸ்காட் லாந்து, நெதர்லாந்து அணிகளும் பங்கேற்கின்றன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் தோனியின் அணி தான் முந்துகிறது. மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இந்திய அணி:

தோனி (கேப்டன்), சேவக், யுவராஜ், காம்பிர், ஹர்பஜன், ரவிந்திர ஜடேஜா, ஜாகிர் கான், பிரவீண் குமார், ஓஜா, இர்பான் பதான், யூசுப் பதான், ரெய்னா, இஷாந்த், ரோகித் சர்மா, ஆர்.பி. சிங்.

கெய்ல் "ஒன் மேன் ஆர்மி' :

"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிறிஸ் கெய்ல் உள்ளார். கடந்த 2007ம் ஆண்டு தென் ஆப்ரிக் காவுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 117 ரன்கள் எடுத்தார். தவிர "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சதம் கடந்த ஒரே வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இவரை தொடர்ந்து தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் (90*) மற்றும் கெம்ப் (89*) உள்ளனர். இந்தியா சார்பில் காம்பிர் (75), யுவராஜ் (70), சேவக் (68) ஆகியோர் உள்ளனர்.

மெக்கலம் அதிரடி :

"டுவென்டி-20' உலக கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் நியூசிலாந்தின் பிராண்டன் மெக்கலம் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 6 போட்டியில் விளையாடியுள்ள மெக்கலம், 13 சிக்சர் விளாசியுள்ளார். இவரை தொடர்ந்து இந்தியாவின் யுவராஜ் (12), வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ல் (10) ஆகியோர் உள்ளனர்.

உமர் குல் துல்லியம் :

"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் வீரர் உமர் குல் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 7 போட்டியில் விளையாடிஉள்ள குல், 13 விக்கெட் வீழ்த்திஉள்ளார். இந்தியாவின் ஆர்.பி. சிங் 12 விக்கெட்டு களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

இலங்கை முதலிடம் :

ஐ.சி.சி., "டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த அணிகள் வரிசையில் இலங்கை அணி முதலிடம் வகிக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக ஜோகனஸ்பர்க்கில் நடந்த போட்டியில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது.

ஹைடன் அசத்தல் :

"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஹைடன் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 6 போட்டியில் விளையாடியுள்ள இவர், 4 அரைசதம் உட்பட 265 ரன்கள் குவித்துஉள்ளார். இரண்டாவது இடத்தில் இந்தியாவின் காம்பிர் (227), மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் மிஸ்பா (218) உள்ளனர்

'சூப்பர் 8' மோதல் இன்று தொடக்கம்

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் டுவென்டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

அதாவது முதல் சுற்றிலிருந்து 8 அணிகள் சூப்பர்-8 லீக் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த அணிகள் பிரிவு இ, பிரிவு எஃப் என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு ரவுண்ட் ராபின் லீக் முறையில் விளையாடுகின்றன. அப் போட்டிகள் வியாழக்கிழமை (ஜூன் 11) முதல் ஜூன் 16-ம்தேதி வரை நடைபெறுகின்றன.

இவற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

அணியில் சண்டை தொடர்கிறது? பயிற்சிக்கு வரவில்லை சேவாக்


டுவென்டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை நடைபெறும் லீக் போட்டியில் அயர்லாந்துடன் இந்தியா விளையாட உள்ளது.

அதற்காக டிரென்ட்பிரிட்ஜில் உள்ள லேடிபே மைதானத்தில் இந்திய அணியினர் திங்கள்கிழமை பயிற்சி மேற்கொண்டனர். அப்போது வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோரைக் காணவில்லை. இதையறிந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மைதானத்தில் வெகுநேரம் இருந்து கருத்து அறிய முயன்றனர். ஆனால் தோனி உள்பட யாரும் அவர்களிடம் பேச முன்வரவில்லை. இதனால் பத்திரிகையாளர்கள் அதிருப்தியுடன் திரும்பினர்.

பயிற்சி குறித்து பேச யாரும் முன்வரவில்லையே என அணி மேலாளர் அனிருத் செüத்ரியிடம் கேட்டதற்கு, அது அவர்களது விருப்பம். எதுவும் கட்டாயம் கிடையாது என்றார்.

இதையடுத்து, சேவாக்கிற்கும் தோனிக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளதாக ஊடகங்கள் ஏற்கெனவே வெளியிட்டிருந்த கருத்து உண்மைதான் என்பது போன்ற கருத்து ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திய அணிக்கு அளிக்கப்பட்ட தனியார் விருந்து ஒன்றில் சேவாக் தனது மனைவி ஆர்த்தி, மகனுடன் கலந்து கொண்டுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒட்டுமொத்த அணி வீரர்களும் ஆஜராகினர். நாங்கள் மிகவும் ஒற்றுமையுடன் உள்ளோம். எங்களுக்குள் சண்டை ஏதும் இல்லை என கேப்டன் மகேந்திர சிங் தோனி அப்போது கருத்து தெரிவித்திருந்தார். அத்துடன் எனக்கும் சேவாக்கிற்கும் பிரச்னை என்பது போன்று பத்திரிகைகள் தெரிவித்திருந்த கருத்து முற்றிலும் பொய். பொறுப்பற்ற செயல் எனக் கூறியிருந்தார்.

அதிவேக சென்னைப் புயல்


ந்திய கார் பந்தய வீரரான கருண் சந்தோக், கிராண்ட் பிக்ஸ் 2 போட்டிகளில் கலக்கி வரும் இளம் புயல். சென்னையைச் சேர்ந்த இவரது இலக்கு, ஃபார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்று முத்திரைப் பதிக்க வேண்டும் என்பதே!

அண்மையில் ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவில் நடைபெற்ற ஜி.பி.2 பிரிவைச் சேர்ந்த 'சர்க்யூட் டி கட்டலுன்யா' கார்ப் பந்தய போட்டியில் சரியாக சோபிக்க முடியாததில் அவருக்கு வருத்தமே. ஆயினும், துவண்டு விடாமல் அடுத்தக் கட்ட முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறார்!

ஃபார்முலா 1 பந்தயத்துக்கான தகுதிப் போட்டியாகவே 'ஜி.பி. 2' அமைந்துள்ளதால், எல்லோரது பார்வையும் இப்போது கருண் சந்தோக் மீதே விழுந்துள்ளது.

தனது முயற்சிகள் குறித்து குறிப்பிடும் கருண், ''அடுத்த சீசனில் ஃபார்முலா ஒன் போட்டிகளில் இடம்பெற வேண்டும் என்பதையே நான் இலக்காகக் கொண்டிருக்கிறேன். அதற்கான முயற்சிகளில் இந்த ஆண்டு முழுவதும் ஈடுபடுவேன்,'' என்கிறார் நம்பிக்கையுடன்.

'பிரிட்டிஷ் ரேசிங் டிரைவர்ஸ் கிளப்'பில் சேரும் அரிய கெளரவத்தைப் பெற்றுள்ள இந்த 25 வயது அதிவேக இளைஞன் இதுவரை புரிந்த சாதனைகள் இதோ உங்கள் பார்வைக்கு...

கருணின் சாதனைகளும் கடந்து வந்த பாதையும்!

2000: இந்திய நேஷனல் ரேசிங் சாம்பியன் பட்டம் 7 முறை வென்ற சாதனையாளர். போல் பொஷிசனில் 10 முறை அதிவேகமாக ஓட்டி தேசிய அளவில் சாதனைப்படைத்துள்ளார். இன்னும் அதை முறியடிக்க யாருமில்லை.

2001: இந்திய அணிக்காக மிக இளம் வயதில் பங்கேற்ற முதல் வீரரும் இவர்தான். ஒரே வருடத்தில் 8 முறை வென்றிருக்கிறார். ஆசிய அளவில் மிகவும் நம்பிக்கை தரும் ஒரே விரர் இவர் தான் என்று, பிரிட்டிஷ் ஃபார்முலா பந்தயத்திலும் பங்கேற்றார்.

2002: பிரிட்டிஷ் ஃபார்முலா 3 பந்தயத்தில் முதல் 6வதுக்குல் 3 முறை வென்றார். ஓவர் டிரைவ் பத்திரிக்கையின் சார்பில் மேன் ஆஃப் தி இயர் அவர் பெற்ற ஒரே இந்தியரும், தமிழரும் இவர் மட்டும்தான்.

2003: பிரிட்டிஷ் ஃபார்முலா 3 பந்தயத்தில் 8 முறை வெற்றி பெற்று 19 போடியம் முடித்தவர்ரும், டி-ஸ்போர்ட் முறையில் 24 முறையும், இந்தியா சார்பில் இங்கிலாந்தில் நடந்த சில்வர்ஸ்டோன் பந்தயத்தில் பங்கேற்றார்.

2004: பிரிட்டிஷ் ஃபார்முலா 3 பந்தயத்தில் முதல் நிலை ஆட்டக்காராக வந்தவர். இந்திய வீரர்களில் முதல் ஹீரோவான நரேன் கார்த்திகேயனுடன் இவரது ஜோடி நிசான் உலகக் தொடரில் இறுதி சுற்றில் பங்கேற்ற வீரர்களாக வளம் வந்தார்கள்.

2005: இந்தியா நடத்திய ஏ1 கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் ரினால்ட் உலகக் தொடர் ஆகிய போட்டிகள் பேங்கேற்ற முதல் வீரரானார்.

2006: ஆசிய ஃபார்முலா ரினால்ட் வீ6 சாம்பியன் போட்டியில் சரித்திர வெற்றி பெற்ற ஒரே இந்தியர், இந்த ஆண்டில் 12 போட்டிகளில் பங்கேற்று 9 போட்டிகளில் வெற்றி பெற்றார். என்.டி.டி.வி. ப்ராஃபிட் விருது பெற்ற ஒரே இந்தியரும் இவர்தான்.

2007: ரெட் புல் ரேஸிங்கில் முதல் வெற்றி வீரர். ஜிபி2 தொடரிலும், ஃபார்முலா சாம்பியன் சிஃப், மற்றும் இத்தாலியன் ஸ்குவாட் துராங்கோ தொடரிலும் பங்கேற்றார். பெல்ஜியத்தில் நடந்த தொடரில் அபார வெற்றி பெற்றவரும் ஆசிய அளவிலும் இவர் மட்டும்தான்.

2008: ஜிபி2 ஆசியா மற்றும் ஜிபி ஐரோப்பா ஆகிய தொடரில் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார். ஜெர்மனியில் அபாரமாக வெற்றி பெற்றார். சில்வர்ஸ்டோன், மொனாக்கோ மற்றும் துபாயில் நடந்த போட்டியில் போடியம் வரை முடித்தார். ஆஜ் தக், மற்றும் என்.டி.டி.வி. ஃபிராஃபிட் ஆகியவை சார்பில் சிறந்த கார் பந்தய வீரர் விருதை இரண்டாவது முறையாக தட்ட்சி சென்றவர் இவர்தான்.

2009: ஜிபி2 தொடர் மற்றும் ஓசியன் ரேசிங் டெக்னாலஜி ஆகிய தொடர்களில் பங்கேற்றுவருகிறார்.

வரும் செப்டம்பருக்குள் இவர் பங்கேற்கும் தொடர்கள்:

ஜூன்: இஸ்தான்புல் சில்வர்ஸ்டோன்.
ஜூலை : நர்பர்கிங், புடாபெஸ்ட்.
ஆகஸ்ட் : வெலன்சியா மற்றும் பெல்ஜியம்.
செப்டம்பர் : இத்தாலி மற்றும் போர்ட்சுகல் ஆகிய தொடர்களில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளார்.

முடிவின்றி செல்லும் இந்தச் சாதனைப் பட்டியலில் விரைவில் ஃபார்முலா 1-ல் இவர் புரியவுள்ள சாதனைகளும் இடம்பெறும் என்று நம்புவோம்!

உலகக் கோப்பையில் முதல் அதிர்ச்சி: இங்கிலாந்தை சாய்த்தது நெதர்லாந்து!


டுவென்டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் வலுவான இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்தது நெதர்லாந்து அணி. லார்ட்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த "பி' பிரிவு லீக் போட்டி ரசிகர்களுக்கு கடைசிவரை விருந்து படைத்திருந்தது.

"டாஸ்' வென்ற நெதர்லாந்து அணி, எதிரணியை முதலில் பேட் செய்யக் கேட்டுக் கொண்டது. இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது.

அடுத்து ஆடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்து வெற்றி பெற்றது.

ஸ்டூவர்ட் பிராட் வீசிய கடைசி ஓவர் மிகவும் பரபரப்பை பெற்றிருந்தது. அந்த ஓவரில் 7 ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற நிலையைப் பெற்றிருந்த நெதர்லாந்து, கடைசிப் பந்தில் 2 ரன்களைச் சேர்த்து உலகப் பார்வையைப் பெற்றது.

பரபரப்பான சூழலில் டோசாட்டே மற்றும் எட்கார் ஷிபெர்லி ஆகியோர் ஒன்றிரண்டு ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாக இக்கட்டான நிலையில் டாம் டி குரூத் 30 பந்துகளில் 49 ரன்களைக் குவித்து இங்கிலாந்து அணியினரை நிலைகுலையச் செய்தார். அவரே ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இந்த வெற்றி மூலம் சூப்பர்-8 பிரிவுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது நெதர்லாந்து. அடுத்து பாகிஸ்தானுடன் வரும் 9-ம்தேதி விளையாட உள்ளது.

சுருக்கமான ஸ்கோர்: இங்கிலாந்து 20 ஓவர்களில் 162-5 (லூக் ரைட் 71, போபரா 46, டோசாட்டே 2-35).

நெதர்லாந்து 20 ஓவர்களில் 163-6 (டி.டி.குரூத் 49, பாரென் 30, ஆண்டர்சன் 3-23).

நம்பமுடியாத வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி நம்பமுடியாதது என நெதர்லாந்து அணியின் கேப்டன் ஜெரோன் ஸ்மித்ஸ் மகிழ்ச்சி பொங்க கருத்து தெரிவித்தார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் எச்சரிக்கையுடன் கடுமையாகப் போட்டியளித்தோம். உண்மையிலேயே வெற்றியை நம்பமுடியவில்லை. மிகச் சிறப்பான வெற்றியாகியுள்ளது. கடைசிக் கட்டத்தில் அதிர்ஷ்டமும் கைகொடுத்தது என்றாலும் வெற்றிக்கு தகுதியானவர் நாங்கள்தான். இன்றிரவு நன்றாக தூங்குவேன் என நினைக்கிறேன். அடுத்து இறுதிப்போட்டியில் விளையாடுவதை எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

"வெற்றிக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் தவறவிட்டோம். கூடுதலாக சில ரன்களைச் சேர்த்திருக்க வேண்டும். அது முடியாமல்போனது. அதே சமயம் நெதர்லாந்து வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணிக்கு எனது வாழ்த்துகள்' என இங்கிலாந்து அணியின் கேப்டன் பால் காலிங்வுட் கூறினார்.

20-20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் அணி எது?


ஐ.சி.சி. 20-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தற்போது லண்டனில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடைசியாக நடைபெற்ற ஐ.சி.சி 20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய பாகிஸ்தான் அணிகள் பங்கு பற்றின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் இறுதி நேரத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, 20-20 உலக சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

2020 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது பிரபல்யம் அடைந்து வருகின்ற போதிலும், தற்போது உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் அணிகளுக்கு சர்வதேச மட்டத்தில் போதிய அனுபவம் இல்லை என்றே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தான் முதன்முதலாக இங்கிலாந்து நியூஸிலாந்து அணிகளிடையே 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 89 20-20 ஓவர் போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன. இதில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 1 ஆவது உலகக் கிண்ண 2020 ஓவர் 27 போட்டிகளும் அடங்கும்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து தென்.ஆபிரிக்கா, நியூஸிலாந்து, மே இந்திய தீவு, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் இதுவரை மொத்தம் 139 2020 ஓவர் போட்டிகளில் பங்கு பற்றியுள்ளன. இதில் அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளே கூடுதலாக தலா 21 போட்டிகளில் பங்கு பற்றியுள்ளன. இதில் அவுஸ்திரேலியா 11 போட்டிகளில் வெற்றியும், 10 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. நியூஸிலாந்து அணி 8 போட்டிகளில் வெற்றியும், 11 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஆனால், 20-20 ஓவர் போட்டிகளில் கூடிய வெற்றிகளைப் பெற்ற அணியாக பாகிஸ்தான் அணியே முன்னிலை வகிக்கின்றது. பாகிஸ்தான் அணி மொத்தம் 17 போட்டிகளில் பங்குபற்றி 13 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒருபோட்டி பற்றி முடிவில்லை.

இலங்கை, இந்திய அணிகள் தலா 11 போட்டிகளில் பங்குபற்றிய போதிலும், இதில் இலங்கை அணி 8 போட்டிகளில் வெற்றியும், இந்திய அணி 7 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. தென்.ஆபிரிக்க அணி 18 போட்டிகளில் 11 வெற்றியும், 7 தோல்வியும், மே.இந்திய தீவு அணி 11 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

எனவே சர்வதேச அளவில் 20-20 ஓவர் போட்டியில் அதிக அளவில் அனுபவம் இல்லாத நிலையிலேயே இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் அனைத்து அணிகளும் பங்குபற்றுகின்றன. இதற்கு உதாரணமாக லண்டனுக்குச் சென்ற அணிகள் பங்கு பற்றிய பயிற்சிப் போட்டிகளை எடுத்துக் கொள்ளலாம். நடப்புச் சாம்பியனான இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் 9 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பிடித்த பாகிஸ்தான் அணி, தென்.ஆபிரிக்கா அணியிடம் 59 ஓட்டங்களினால் தோல்வி அடைந்தது.

பயிற்சிப் போட்டிகளில் அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள், பங்களாதேஷ் அணியை வெற்றி பெற்றுள்ள போதிலும், பங்களாதேஷ் அணியின் கடும் எதிர்ப்பை சமாளித்தே வெற்றி பெற்றனர் என்றே கூற வேண்டும்.

2 ஆவது பயிற்சிப் போட்டிகளில், இலங்கை, தென்.ஆபிரிக்காவிடமும், பாகிஸ்தான், இந்தியாவிடமும் தோல்வி அடைந்தன.

உலகக் கிண்ணப் போட்டியில், இலங்கை அணி ஸி பிரிவில், பலம் வாந்த அவுஸ்திரேலியா, மே.இந்தியத்தீவு அணிகளைச் சந்திக்கின்றது. பயிற்சி ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் குறிப்பாக துடுப்பாட்டத்தில் விட்ட தவறுகளை திருத்தாவிட்டால், 2 ஆம் சுற்று ஆட்டத்துக்கு தெரிவாவது கேள்விக்குறிதான்.

தென்.ஆபிரிக்காவில் நடைபெற்று முடிந்த இந்திய பிறிமியர் லீக் 20-20 போட்டி வீரர்களுக்கு ஒரு பயிற்சிப் போட்டியாக அமைந்தாலும், இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் எந்த அணி சாம்பியின் கிண்ணத்தைக் கைப்பற்றும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தோனி,செவாக்கிடையே பனிப்போர் இந்திய அணியில் கருத்து வேறுபாடுஇரண்டாவது 20 ஓவர் உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், இந்திய அணியில் கருத்து வேறுபாடிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணிக் கப்டன் தோனிக்கும் துணைக்கப்டன் செவாக்குக்குமிடையே பனிப்போர் நடந்து வருவதாகவும் இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தோள் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக செவாக் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை. அவரது காயம் குறித்து கப்டன் தோனியிடம் நிருபர்கள் கேட்டபோது,

நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. நீங்கள் அணியின் உடலியக்க நிபுணரைக் கேளுங்கள் என்று தெரிவித்தார். இதன் மூலம் செவாக்குடன் அவருக்கிருக்கும் மோதல் வெளியே தெரியவந்தது.

அணியிலுள்ள ஒரு வீரரின் காயம் சம்பந்தமான கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு தோனிக்குள்ளது. ஆனால், அவர் அதைத் தட்டிக்கழித்தார். அணி வீரர்கள் கூட்டத்தின் போது இருவரும் பேசாமலிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

செவாக் உடல் தகுதி இல்லாததை காரணமாக வைத்து அவரை அணியிலிருந்து கழற்ற தோனி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்க முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது. ரோகித்சர்மா நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 36 ஓட்டமும் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி 80 ஓட்டமும் எடுத்தார்.

இது குறித்து தோனி கூறும் போது, ஐ.பி.எல். போட்டியிலிருந்து ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் ஒருவர் மட்டுமே தற்போது மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். அவரைத் தொடக்க வீரராக களமிறக்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என்றார். இதன் காரணமாக சேவாக்குக்குப் பதிலாக ரோகித்சர்மா தொடக்க வீரராக களமிறக்கப்படலாமென்று தெரிகிறது.

செவாக் உண்மையிலேயே உடல் தகுதியில்லாமல் அணியிலிருந்து நீக்கப்பட்டால் சரிதான்.கருத்து வேறுபாடு காரணமாக அவரை கழற்றி விட்டால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், செவாக் மாதிரியாக அதிரடியாக விளையாடக்கூடியவர்கள் மிகக்குறைவு.

சிறந்த அதிரடி வீரரான அவர் நியூஸிலாந்து தொடரில் ஆடிய விதத்தை ரசிகர்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள். ரோகித்சர்மா சில போட்டிகளில் சிறப்பாக விளையாடியதை வைத்துக்கொண்டு அவரை செவாக்குடன் ஒப்பிடுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. செவாக்கின் அதிரடி ஆட்டத்தை பொறுத்துத்தான் இந்தியாவுக்கு மீண்டும் உலகக்கிண்ணம் கிடைக்கும் என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை கப்டனுக்கும் துணைக் கப்டனுக்கும் எப்போதும் ஒத்துப்போனது கிடையாது.இதற்கு முன்பு கபில்தேவ்கவாஸ்கர்,அசாருதீன்டெண்டுல்கர்,அல்லது கங்குலிடிராவிட் அல்லது டிராவிட்டெண்டுல்கர் ஆகியோரிடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய அவதாரம் எடுக்கிறார் கங்குலி


உலகக் கிண்ண "T20' போட்டியில் கங்குலி நேர்முக வர்ணனையாளராக கடமையாற்றவுள்ளார்.

இந்திய கிரிக்கெட அணியின் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2 ஆவது இனிங்ஸை விரைவில் தொடங்கவுள்ளார்.

இங்கிலாந்தில் 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது ஈ.எஸ்.பி.என். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் வர்ணனையாளராக பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அரையிறுதி ஆட்டத்திலிருந்து அவர் இந்த பணியைத் தொடருவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய பணி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கங்குலியிடம் " கமெண்ட்ரி பொக்சில் ' உட்கார்ந்து கொண்டு உங்களது சக வீரர்களை விமர்சிப்பது உங்களுக்கு கஷ்டமாக இருக்காதா? என்று கேட்டபோது இப்போதுதான் கமெண்ட்ரி பணியைத் தொடங்குகிறேன்.அதுவும் அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் மட்டுமே இப்பணியை செய்ய இருக்கிறேன். எனது முன்னாள் சக வீரர்களுடன் நான் நட்புடன் கைகுலுக்குவேன் என்று நம்புகிறேன். அவர்களிடம் பேட்டி எடுக்கவும் ஆர்வமாக உள்ளதாக நழுவலாகப் பதிலளித்தார்.