சேவக்கை தடுத்த சச்சின்

‘‘கடந்த 2007ல் ஓய்வு பெற்றுவிடலாம் என முடிவு செய்தேன். இதை சக வீரர் சச்சின்தான் தடுத்து விட்டார்,’’ என, இந்திய அணி முன்னாள் வீரர் சேவக் தெரிவித்தார்.

இந்திய அணியின் அதிரடி வீரர் சேவக், 37. டெஸ்ட் அரங்கில் இரு முறை முச்சதம் உள்ளிட்ட அதிக சாதனைகளை எட்டியவர். இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சமீபத்தில் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரில் விளையாட உள்ளார். 

இது குறித்து சேவக் கூறியது: ஒவ்வொரு வீரரும் சர்வதேச அரங்கில் உயரத்தில் இருக்கும்போது, ஓய்வு பெற்றுவிடுவர். இதன்படிதான் நானும் செயல்பட முடிவு எடுத்திருந்தேன். கடந்த 2007ல் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டபோது, ஓய்வு பெற்றுவிடலாம் என எண்ணினேன். 

ஆனால், சச்சின்தான் இதை தடுத்துவிட்டார். கடந்த 2013ல் ஆஸ்திரேலிய தொடரில் என்னை அணியிலிருந்து நீக்கினர். இது குறித்து எந்த தகவலையும் என்னிடம் முன்பே சொல்லவில்லை. அப்படி தெரிவித்திருந்தால், அப்போதே ஓய்வை அறிவித்திருப்பேன். 


எப்போதும் நேர்மை:

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியது எனது மகன்களுக்கு பிடிக்கவில்லை. இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் கிரிக்கெட் வாழ்வில் கும்ளே சிறந்த கேப்டனாக திகழ்ந்தார். 

வீரர்களுக்கு ஊக்கத்தை அளிப்பார். இந்திய கிரிக்கெட் போர்டு அல்லது வர்ணனையாளர் பதவிக்கு யாரேனும் அழைத்தால், பரிசீலனை செய்வேன். என் ‘பேட்டிங்கை’ போல, வர்ணனையும் நேர்மையுடன்தான் இருக்கும். இவ்வாறு சேவக் கூறினார். 

தோனிக்கு எதுவுமே தெரியலை - கவாஸ்கர் திடீர் தாக்கு

இந்திய அணி கேப்டன் தோனியிடம் புதிய திட்டங்களை செயல்படுத்தும் திறன் இல்லை. பவுலர்களை சரியான முறையில் கையாளத் தெரியவில்லை,’’ என, கவாஸ்கர் குற்றம் சுமத்தினார்.

இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என, வென்றது. மும்பையில் நடந்த கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியில் முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 438 ரன் குவித்தது.

இந்திய பவுலர்கள் சொதப்பல் காரணமாக குயின்டன் டி காக், டுபிளசி, டிவிலியர்ஸ் என, 3 பேர் சதம் அடித்தனர். இமாலய இலக்கைத் துரத்திய இந்திய அணி 224 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 214 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியது:

கேப்டன் தோனியிடம் சூழ்நிலைக்கு ஏற்ப பவுலர்களை எப்படி மாற்ற வேண்டும் எனச் சரியாகத் தெரியவில்லை. மாற்றங்களை எளிதில் விரும்பாத இவரிடம் புதிய திட்டங்கள் செயல்படுத்தும் திறமை இல்லை.

இதற்கு முன்பெல்லாம் பவுலிங்கில் மாற்றம் செய்யும் போது இவரது யோசனைகள் சிறப்பாக இருக்கும். தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ஒட்டுமொத்த பவுலர்களும் சேர்ந்து சொதப்பி விட்டனர்.

இப்போதைய நிலையில் இந்திய அணியின் பவுலிங் பிரிவு தான் மோசமாக உள்ளது. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டுவென்டி-20, ஒருநாள் தொடரில் எவ்வளவு மந்தமாக செயல்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

வான்கடே ஆடுகளம் நன்கு திருப்பம் தரக் கூடியது. இந்த சூழலுக்கு ஏற்ப நமது பவுலர்கள் செயல்படத் தவறி விட்டனர். வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளாக வீசினர் என்றாலும், இதன் வேகம் 135 கி.மீ., என்பதால், எதிரணியினர் ரன் குவிக்க வசதியாக போனது.

ஒருமுறை கூட வேகத்தினால் அவர்களுக்கு தொல்லை தர முடியவில்லை. பவுன்சர்களாக வீச வேண்டும் எனில் பந்தின் வேகம் 145 கி.மீ., ஆக இருக்க வேண்டும்.

கும்ளே முதலிடம்

சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்தியாவின் கும்ளே (48 விக்.,), ஹர்பஜன் சிங் (42), கபில்தேவ் (40) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

* ஒருநாள் போட்டியில் இங்கு அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் வங்கதேசத்தின் முகமது ரபிக் (8 விக்.,) முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் அகார்கர், தென் ஆப்ரிக்காவின் மார்னே மார்கல் தலா 7 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

 652

கடந்த 1985ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி 652/7 (டிக்ளேர்) ரன்கள் குவித்தது. இதன்மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது.

* தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2008ல் நடந்த டெஸ்டில் 627 ரன்கள் குவித்த இந்திய அணி, இம்மைதானத்தில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.


83

இங்கிலாந்துக்கு எதிராக 1977ல் நடந்த டெஸ்டில் 83 ரன்னுக்கு சுருண்ட இந்திய அணி, சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரை பெற்றது.


337

கடந்த 2007ல் ஆப்ரிக்க லெவன் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆசிய லெவன் அணி 337 ரன்கள் குவித்தது. இதன்மூலம் சென்னையில் நடந்த ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது.

* பாகிஸ்தானுக்கு எதிராக 1997ல் இங்கு நடந்த போட்டியில் 292 ரன்கள் எடுத்ததே இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர். தென் ஆப்ரிக்காவை பொறுத்தவரை இங்கு அதிகபட்சமாக 165 ரன்கள் (எதிர்–வெஸ்ட் இண்டீஸ், 2011) எடுத்துள்ளது.


307

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் தோனி முன்னிலை வகிக்கிறார். இவர், 4 போட்டியில் 2 சதம் உட்பட 307 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் யுவராஜ் சிங் (257 ரன், 7 போட்டி) உள்ளார்.


1018

சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் உள்ளார். இவர், 12 டெஸ்டில் 3 சதம், 3 அரைசதம் உட்பட 1018 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் சச்சின் (970 ரன், 10 போட்டி) உள்ளார்.

இரண்டாவது ஒருநாள் போட்டி - இந்திய அணி அசத்தல் வெற்றி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்கள் அசத்த, 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள், நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட 72 நாட்கள் தொடரில் பங்கேற்கிறது. 

முதலில் நடந்த ‘டுவென்டி–20’ தொடரை இந்திய அணி 0–2 என இழந்தது. கான்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீழ்ந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி ம.பி.,யின் இந்துாரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடக்கிறது. 

இந்திய அணியில் ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, அஷ்வின் ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக ஹர்பஜன் சிங், அக்சர் படேல், மோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. ரபாடா ‘வேகத்தில்’ ரோகித் சர்மா (1) போல்டானார். அடுத்து வந்த அஜின்கியா ரகானே, ஸ்டைன் வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார்.  ஷிகர் தவான் (23) நிலைக்கவில்லை. 

விராத் கோஹ்லி (12) ‘ரன்–அவுட்’ ஆனார். பொறுப்பாக ஆடிய ரகானே (51) அரைசதம் கடந்தார். அடுத்து வந்த ரெய்னா ‘டக்–அவுட்’ ஆனார். அக்சர் படேல் (13), புவனேஷ்வர் குமார் (14) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய தோனி அரைசதம் கடந்தார். ஹர்பஜன் சிங் (22) ஆறுதல் தந்தார். உமேஷ் யாதவ் (4) ஏமாற்றினார்.

இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. கேப்டன் தோனி (92), மோகித் சர்மா (0) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன் 3, மார்னே மார்கல், இம்ரான் தாகிர் தலா 2, ரபாடா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா (17) ஏமாற்றினார். குயின்டன் டி காக் (34), டுமினி (36) ஆறுதல் அளித்தனர். பொறுப்பாக ஆடிய டுபிளசி (51) அரைசதம் கடந்தார். கேப்டன் டிவிலியர்ஸ் (19) சோபிக்கவில்லை. டேவிட் மில்லர் (0) சொதப்பினார். ஸ்டைன் (13) நிலைக்கவில்லை. 

கடைசியில் இம்ரான் (9), மார்கல் (4) அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி 43.4 ஓவரில் 225 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 22 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதையடுத்து ஒரு நாள் தொடர் 1–1 என, சமன் ஆனது.

சாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்

களத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா. இவரது ஆதங்கம் நியாயமானது தான். சொந்த மண்ணில் சென்னை வீழ்ந்ததை யாராலும் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.                  
சென்னையில், இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் (ஐ.எஸ்.எல்.) முதல் போட்டி நேற்று நடந்தது. இதில், சென்னை அணி, கோல்கட்டாவிடம் 2–3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. 

சென்னை வசம் 53 சதவீதம் பந்து இருந்த போதும், ‘பினிஷிங்’ இல்லாததால் வெற்றி நழுவியது. இப்போட்டியின் சென்னை அணியின் அன்னிய வீரர்களை காட்டிலும் இந்திய நட்சத்திரங்களான ஹர்மன்ஜோத் கப்ரா, ரால்டே, ஜேஜே அடங்கிய மூவர் கூட்டணி தான் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தது.                   
‘இத்தாலி அணியில் விளையாடக்கூடிய திறமை கப்ராவுக்கு உள்ளது’, என, சென்னை அணியின் பயிற்சியாளர் மெடாரசி ஒரு முறை கூறினார். இதை நிரூபிக்கும் வகையில் கப்ராவின் ஆட்டம் இருந்தது. 

மத்திய களத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். கோல்கட்டாவின் நட்சத்திர வீரரான போர்ஜா பெர்னாண்டசிற்கு கடும் சவால் கொடுத்தார். போட்டி முடிந்ததும் தனது ஆட்டம் குறித்து கப்ரா கூறுகையில்,‘‘அணி தோற்ற நிலையில், நான் சிறப்பாக விளையாடியதில் பலன் இல்லை,’’என்றார்.                  
மற்றொரு வீரரான ரால்டேவும் பம்பரமாக சுழன்று ஆடினார். பந்தை தன் கட்டுப்பாட்டில் வைப்பதில் வல்லவராக இருந்தார்.          
        
மிசோரமை சேர்ந்த ஜேஜே அற்புதமாக கோல் அடித்து, சென்னை ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். ‘அடுத்த பூட்டியா’ என வர்ணிக்கப்படும் இவர், பல முறை கோல் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்தார். 

இவர் கூறுகையில்,‘‘அரங்கில் திரண்டிருந்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி. அணி தோல்வி அடைந்ததால், இவர்களிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை அணியின் ‘லெவனில்’ வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். கோல் அடித்த போதும், மகிழ்ச்சி கிடைக்கவில்லை,’’என்றார்.                  
வரும் போட்டிகளில் ஜேஜே, கப்ரா, ரால்டே அடங்கிய மூவர் அணி, இன்னும் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் சென்னை அணி, வெற்றிப்பாதைக்கு திரும்பலாம்.