முதல் நாளில் 3 புதிய சாதனை

போல்வால்ட் போட்டியில் புதிய தேசிய சாதனையுடன் 6-வது தேசிய யூத் தட கள சாம்பியன்ஷிப் மதுரையில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

  அதைத் தொடர்ந்து மகளிர் 3,000 மீட்டர், ஆடவர் 5,000 மீட்டர் போட்டிகளில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.

  ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் இறுதிப் போட்டியில் உத்தரப் பிரதேச வீரர் பர்மீந்தர் குமார் படேல் 4.30 மீ. உயரம் தாண்டி, 2007-ல் குஜராத் வீரர் விரேந்தர் சிங் படைத்த சாதனையை தகர்த்தார்.

  இவரும் ஹரியாணா வீரர் ஜிதேந்தரும் தலா 4.30 மீ. தாண்டினாலும் முதலாவதாக 4-வது வாய்ப்பில் பர்மீந்தர் குமார் வென்றார். இதையடுத்து வெள்ளியுடன் ஜிதேந்தர் திருப்தியடைய வேண்டியதாயிற்று.

  மகளிர் 3 ஆயிரம் மீ. ஓட்டத்தில் மகாராஷ்டிரத்தின் மோனிகா ஆத்ரே 10 நிமிடம் 9.17 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய சாதனை படைத்தார். ஆடவருக்கான 5 ஆயிரம் மீ. ஓட்டத்தில் உ.பி. வீரர் இந்தர்ஜித் 14 நிமிடம் 68.30 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய சாதனை படைத்தார்.

  மகளிருக்கான நீளம் தாண்டுதலில் ஹரியாணாவின் கெüசல்யா தேவி 5.72 மீ. தாண்டி முந்தைய சாதனையை சமன் செய்து தங்கம் வென்றார். தமிழகத்தின் பி.சுகன்யா 5.14 மீ. தாண்டி வெள்ளி பெற்றார்.
அதிவேக வீரர்: போட்டியின் அதிவேக வீரராக பஞ்சாபைச் சேர்ந்த பகவான் சிங் தேர்வு பெற்றார். இவர் 100 மீட்டர் தூரத்தை 11.08 விநாடிகளில் கடந்தார். மகளிர் பிரிவில் ஒரிசாவின் ரஞ்சிதா மஹந்தா 12.38 விநாடிகளில் இலக்கை எட்டி அதிவேக வீராங்கனையாகத் தேர்வு பெற்றார்.

ஹரியாணாவுடன் தமிழகம் இன்று மோதல்

தமிழ்நாட்டில் நடைபெறும் 63-வது சந்தோஷ் கோப்பை தேசிய சீனியர் கால்பந்து சாம்பியன் போட்டியில் கிளஸ்டர் 7-ல் முதலிடம் பெற்ற ஹரியாணாவுடன் தமிழகம் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது.

சென்னையில் ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இப் போட்டி விடுமுறை ரசிகர்களுக்கு விருந்தளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளஸ்டர் 8-ல் இடம்பிடித்திருந்த தமிழ்நாடு, லீக் சுற்றில் தான் எதிர்கொண்ட ஒவ்வோர் அணியையும் ஒரு கோலும் அடிக்கவிடாமல் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய அடுத்த கட்ட சுற்றுக்கான பயிற்சி ஆட்டம் போல ஒவ்வோர் அணியையும் தோற்கடித்து முன்னேறியது. ராஜஸ்தான் அணியை 7-0 எனவும், இமாசலப் பிரதேசத்தை 11-0 எனவும், திரிபுராவை 5-0 எனவும் தோற்கடித்து வீறுநடை போட்டுள்ளது குலோத்துங்கன் தலைமையிலான தமிழ்நாடு.

மற்ற இடங்களில்: இதே போல கோவையில் நடைபெறும் போட்டியில் கேரளம்- மகாராஷ்டிரம் அணிகளும், திருச்சியில் மிசோரம்- கோவா அணிகளும், ரெட்ஹில்ஸ் விஸ்டம் டவுன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ரயில்வே- மணிப்பூர் அணிகளும் விளையாடுகின்றன.

ஒவ்வோர் இடத்தில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், காலிறுதி ரவுண்ட் ராபின் லீக் சுற்றுக்கு முன்னேறும். காலிறுதி லீக் சுற்று முதல் அனைத்து போட்டிகளும் சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பஞ்சாப், இரண்டாம் இடத்தைப் பிடித்த சர்வீசஸ், பெங்கால் மற்றும் கர்நாடகம் ஆகிய அணிகளுடன் இணைந்து 2 பிரிவாக லீக் முறையில் விளையாடும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் ஜூன் 11, 12 ஆகிய தேதிகளிலும், இறுதி ஆட்டம் 14-ம் தேதியும் நடைபெற உள்ளது.

சாதிக்க தவறிய மும்பை அணி

ஐ.பி.எல்., தொடரில் இரண்டாவது முறையாக சாதிக்க தவறியது சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. சச்சின், ஜெயசூர்யா உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்கள் இடம் பெற்றும்தொடரின் அரையிறுதிக்கு கூட மும்பையால் முன்னேற முடியவில்லை.

38 முறை சாம்பியன்:

மும்பை அணியை பொறுத்த வரை, உள்நாட்டு தொடரான ரஞ்சிக் கோப்பையில் அசத்தி உள்ளது. ரஞ்சி சாம்பியன் பட்டத்தை 38 முறை கைப்பற்றிய பெருமை மிக்கது. ஆனால் உள்நாட்டுதொடராக கருதப்படும் ஐ.பி.எல்.,தொடரில் முத்திரை பதிக்க முடியவில்லை.

அதிரடி இல்லை:

ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஜெயசூர்யாவின் சொதப்பல் ஆட்டம் தான். அதிரடி ஆட்டத்தை வெற்றிக்கு அடிப்படையாகக் கொண்ட ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி, இவரை நம்பி தான் களமிறங்கியது. ஆனால் ஜெயசூர்யாவின் மோசமான பார்ம் மும்பையை வீழ்த்தி விட்டது. இத்தொடரில் பெரும்பாலும் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டுகளை இழந்ததால், சச்சினும் நிதானமாக ஆட வேண்டியதாகி விட்டது. டுமினி சிறப்பாக ஆடினாலும், அவர் அதிரடி பேட்ஸ்மேன் இல்லை என்பது மிகப் பெரிய குறை. எல்லாவற்றுக்கும் மேலாக ரஹானே, தவான், நாயர் உள்ளிட்ட இளம் வீரர்கள் துடிப்புடன் விளையாட தவறிவிட்டனர்.

குல்கர்னி மோசம்:

சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தருவார் என எதிர்பார்க்கப்பட்ட மும்பை வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி, ஐ.பி.எல்., தொடரில் படுமோசமாக செயல்பட்டார். ரஞ்சியில் அசத்திய இவர், "டுவென்டி-20' யில் சொதப்பி விட்டார். பார்ம் இல்லாமல் தவித்து வந்த இவரை, மீண்டும், மீண்டும் களமிறக்கி வாய்ப்பை வீணடித்து விட்டது மும்பை அணி நிர்வாகம். தவிர, முன்னணி பவுலர் ஜாகிர் கான், காயம் காரணமாக வெளியேறியது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. ரஞ்சிக் கோப்பை தொடரில் கொடி கட்டிப்பறக்கும் மும்பை அணியால், ஐ.பி.எல்., தொடரில் சாதிக்க முடியாதது துரதிருஷ்டம் தான்.

அடுத்த ஐ .பி.எல்., போட்டியிலாவது வெற்றி கிடைக்குமா என்று எதிர் பார்ப்போம்.

டெல்லியை வெல்ல வேண்டிய இக்கட்டான நிலையில் பெங்களூரு அணி


ஜோகன்னஸ்பர்க்: இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டியில் இன்றைய லீக் ஆட்டத்தில் வாழ்வா, சாவா என்ற நிலையில் கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, சேவக்கின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை சந்திக்கிறது.தோல்வியுற்றால் போட்டியிலிருந்து வெளியேறுவதைத் தவிர வழியில்லை. இந்த அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் 2வது "டுவென்டி20' கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. இதில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் விளையாடுகின்றன. ஜோகனஸ் பர்க்கில் இன்று நடக்கும் முக்கியமான 52வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

அதே சமயம் வீரேந்திர சேவாக் தலைமையிலான டெல்லி அணி, ஏற்கெனவே அரையிறுதிச் சுற்றை உறுதி செய்து கொண்டுள்ளது. இந்த அணி 12 ஆட்டங்களில் 18 புள்ளிகளைச் சேர்த்து நம்பர்-1 அணியாகத் திகழ்கிறது.இதற்கு கும்ளே அணி பதிலடி கொடுக்க இன்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தவிர அரையிறுதி வாய்ப்பை அதிகப்படுத்த வெற்றி முக்கியமானது என்பதால் பெங்களூரு அணி கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குகிறது.

சேவாக் தலைமையிலான அணி, அரையிறுதியை முன்னதாகவே உறுதி செய்தாலும், மற்றைய லீக் ஆட்டங்களையும் எளிதாக எடுத்துக்கொள்ளாமல் விளையாடிவருகிறது. அதை பெங்களூர் அணி எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பது போட்டியின் கிளைமாக்ஸ் ஆகியுள்ளது.

டிவிலியர்ஸ் அபாரம்: டில்லி அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியதால் நெருக்கடி இல்லாமல் விளையாடும். இந்த அணியின் வெற்றிக்கு வலுவான பேட்டிங் வரிசை முக்கிய காரணம். சேவக், காம்பிர், தில்ஷன், டிவிலியர்ஸ், தினேஷ் கார்த்திக் என "டாப்ஆர்டர்' பேட்ஸ் மேன்கள் இருப்பதால் சுலபமாக வெற்றி பெறுகிறது. இன்றைய போட்டியில் டில்லி அணி சில புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. இதுவரை சொல்லிக் கொள்ளும் படி விளையாடாத சேவக், காம்பிர் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தால் தொடரில் பத்தாவது வெற்றியை பதிவு செய்யலாம்.

நெஹ்ரா துல்லியம்: டில்லி அணிக்கு வேகப் பந்துவீச்சில் நம்பிக்கை அளிக்கின்றனர் நெஹ்ரா, நான்ஸ். இருவரும் துல்லியமாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக் கின்றனர். இளம் வீரர் பிரதீப் சங்வான் இவர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதால் எதிரணியின் ரன் வேட்டை வெகுவாக தடுக்கப்படுகிறது. சுழலில் அமித் மிஸ்ரா ஆறுதல் அளிக்கிறார். இவர்களை தவிர மகரூப், சால்வி என சிறந்த பவுலிங் வரிசை உள்ளதால், எதிரணி வீரர்கள் சற்று கவனமுடன் விளையாட வேண்டும்.

டெய்லர் எழுச்சி: பெங்களூரு அணி, கோல்கட்டா மற்றும் சென்னை அணிகள் நிர்ணயித்த ஸ்கோரை எளிதாக "சேஸ்' செய்து அசத்தல் வெற்றி பெற்றது. இதற்கு "பார்மின்றி' தவித்து வந்த ரோஸ் டெய்லரின் எழுச்சி முக்கிய காரணம். துவக்க வீரராக களமிறங்கும் காலிஸ் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்துகிறார். தவிர ராபின் உத்தப்பா, டிராவிட், மார்க் பவுச்சர், ஜெசி ரைடர், விராத் கோஹ்லி உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன் கள் இருப்பது பேட்டிங் வரிசையை பலப்படுத்துகிறது. இன்றைய போட்டியில் பெங்களூரு பேட்ஸ் மேன்கள் துவக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளி ப்படுத்தினால் மட்டுமே எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம்.

வினய் அசத்தல்: வேகப்பந்து வீச்சில் பிரவீண் குமார், வினய் குமார் ஆகியோர் பெங்களூரு அணிக்கு பக்கபலமாக உள்ளனர். சுழலில் கும்ளே அசத்தி வருகிறார். தவிர காலிஸ், மெர்வி, அகில், அப்பண்ணா உள்ளிட்ட பவுலர்களும் இன்று சாதித்தால் எளிதில் வெற்றியை எட்டலாம்.

முதல் லீகில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெவில்ஸிடம் பெற்ற தோல்விக்குப் பழிதீர்த்துக் கொள்ள இந்த ஆட்டத்தை பெரிதும் வாய்ப்பாகக் கொண்டுள்ள பெங்களூர் அணி, இதற்கு முந்தைய ஆட்டத்தில் வலுவான சென்னை கிங்ûஸ வீழ்த்தியதை தார்மிக ஆதரவாகக் கொண்டுள்ளது.

ஐ.பி.எல்., லீக் சுற்றில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி


டர்பன்: ஐ.பி.எல்., லீக் சுற்றில் வரிசையாக 5 வெற்றிகளை பெற்று வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சறுக்கியது. பெங்களூரு அணியிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. கடைசி ஓவர் வரை போராடிய பெங்களூரு அணியின் வெற்றிக்கு ரோஸ் டெய்லர் மீண்டும் பக்கபலமாக இருந்தார். தென் ஆப்ரிக்காவில் 2வது ஐ.பி.எல்.,"டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் 44 வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.


பத்ரி ஏமாற்றம்:

இத்தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் பத்ரி நாத், நேற்றைய போட்டியிலும் ஏமாற்றம் அளித்தார். இவர் 2 ரன்களுக்கு அவுட்டானார். மிடில் ஆர்டரில் ஆல்பி மார்கல் (9), ஓரம் (7) அதிரடி காட்டத் தவறினர். இவர்களைத் தொடர்ந்து பின் வரிசை வீரர்களான பாலாஜி (0), முரளிதரன் (4), தியாகி (0) விரைவாக பெவிலியன் திரும்ப, சென்னை அணி 19.4 ஓவரில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிர்ச்சி துவக்கம்: சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு காலிஸ் (0), உத்தப்பா (6) ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த அனுபவ டிராவிட்டும் (8) சொற்ப ரன்களுக்கு அவுட்டானார். இதையடுத்து 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. சூப்பர் ஜோடி: பின்னர் 4 வது விக்கெட்டுக்கு ரோஸ் டெய்லர், விராத் கோஹ்லி இணைந்து அணியை மீட்டனர். கோஹ்லி 38 ரன்களுக்கு அவுட்டானார். இவர் 2 சிக்சர் 4 பவுண்டரி விளாசினார். அடுத்து வந்த பவுச்சர் (5), மெர்வி (3), அகில் (0) வந்த வேகத்தில் வெளியேற, பெங்களூரு அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. டெய்லரின் சிறப்பான ஆட்டம் காரணமாக வெற்றிக்கு அருகில் வந்தது பெங்களூரு. கடைசி ஓவரில் பெங்களூரின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. டெய்லர், பிரவீண் களத்தில் நின்றனர்.

காலிஸ் அசத்தல்:

சென்னை அணிக்கு வழக்கம் போல ஹைடன் அதிரடி துவக்கம் தந்தார். ஆனால் காலிஸ் பந்து வீச்சில் விஜய் (5), ரெய்னா (13) விரைவில் அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. அடுத்து களமிறங்கிய தோனி நிதானமாக ஆடினார். முதல் 10 ஓவர்களில் சென்னை 72 ரன்கள் சேர்த்தது. ஹைடன் அரை சதம்: தொடர்ந்து பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத் தது பெங்களூரு அணி. கும்ளே, மெர்வி, அகில் ஆகியோர் சுழற் பந்து வீச்சில் அசத்தினர். தோனி (18) பெரிய அளவில் சோபிக்க வில்லை. மறுமுனையில் சவாலை சமாளித்து பொறுப்பாக ஆடிய ஹைடன், அரை சதம் கடந்து அசத்தினார். இவர் 60 (5 பவுண்டரி 3 சிக்சர்) ரன்களுக்கு வெளியேறினார்.


"திரில்' வெற்றி:

ஓரம் வீசிய இந்த பரபரப்பான ஓவரின் முதல் பந்தில், அபாரமாக ஆடிக் கொண்டிருந்த டெய்லர் (46) அவுட்டானார். அடுத்த 2 பந்துகளில் 3 ரன் எடுக்கப் பட்டது. 4 வது பந்தை வினய் பவுண்டரிக்கு விரட்ட, 19.4 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு ராயல் சாலஞ் சர்ஸ் அணி 132 ரன்கள் எடுத்து வெற்றியை எட்டியது. கடந்த லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்சுக்கு எதிராக அசத்திய பெங்களூரு வீரர் ரோஸ் டெய்லர், நேற்றும் ஆட்ட நாயகனாக ஜொலித் தார்.

புதிய விதிமுறைகள்

ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் புதிய விதி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

* சிக்கலான கேட்சுகள், பவுண்டரிகள், ரன்- அவுட், "ஸடெம்பிங்' ஆகியவற்றில் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க, மூன்றாவது அம்பயரிடம் கேட்டுக் கெள்ளலாம்.

* மைதானத்தில் உள்ள "ஸ்கை-கேமரா' மற்றும் "பிளை-கேமராக்களை' பேட்ஸ்மேன்கள் தாக்கும் பட்சத்தில், அது "டெட்- பாலாக' கணக்கில் கொள்ளப்படும். அதற்குப் பதில் மற்றொரு முறை பந்து வீசப்படும்.

* மழையால் பாதிக்கப்படும் லீக் போட்டிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். தவிர, மழை பாதிப்புக்கு உள்ளாகும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு 2 மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப் பட உள்ளது.

சுதிர்மான் கோப்பை இறகுப்பந்து: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இந்தியா


குவாங்சோ: சுதிர்மான் கோப்பை இறகுப்பந்து போட்டியில் இந்திய அணி, ஸ்காட்லாந்தை 5-0 என்ற கணக்கில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.சர்வதேச அணிகள் பங்கேற்கும் 11வது சுதிர்மேன் கோப்பை இறகுப்பந்து போட்டி சீனாவில் உள்ள குவாங்சோவில் நடக்கிறது.  இதில் இந்தியா, இலங்கை உட்பட 34 அணிகள் பங்கேற்றுள்ளன

இதில் "3-பி' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, உக்ரைன் உள்ளிட்ட நான்கு அணிகள் விளையாடின. முதல் இரண்டு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, உக்ரைன் அணிகளை வீழ்த்திய இந்திய அணி, நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை சந்தித்தது. 

புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் முதல் கேமை 18-21 என இழந்தாலும், அடுத்த கேம்களில் கடுமையாகப் போராடி 21-13, 21-19 என ஸ்காட்லாந்தின் சுசன் ஹியூûஸ 52 நிமிடங்களில் வென்றார்.

2-வது ஆட்டத்தில் அரவிந்த் 21-15, 21-16 என்ற நேர் செட்டுகளில் கார்டன் தாம்சனை எளிதாக வீழ்த்தினார்.

கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் வி.திஜு, ஜுவாலா கட்டா இணை 21-17, 21-12 என ஆன்ட்ரூ பெüமன், எம்மா மேசன் இணையை சாய்த்தது.

ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் சனவே தாமஸ், ருபேஷ் குமார் ஜோடி 33 நிமிடங்களில் 21-18, 25-23 என ஆன்ட்ரூ பெüமன், தாமஸ் பெதெல் ஜோடியைத் தோற்கடித்தது.

மகளிர் இரட்டையர் பிரிவில், அபர்ணா பாலன், ஸ்ருதி குரியன் ஜோடி 21-12, 21-15 என்ற செட்டுகளில் எம்மா மேசன், ஜில்லி கூப்பர் ஜோடியை வென்று இந்தியாவுக்கு அபார வெற்றியைப் பெற்றுத் தந்தது.

இதன் மூலம் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி "3-ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த பல்கேரியா அணியை சந்திக்கிறது.

இதற்கு முந்தைய ஆட்டங்களில் இந்தியா 4-1 என ஆஸ்திரேலியாவையும், 5-0 என உக்ரைனையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

காலிறுதியில் மன்கட் ஜோடி


அமெரிக்காவில் உள்ள லாங்போட் கீ என்ற இடத்தில் நடைபெறும் சரசோடா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் ஹர்ஷ் மன்கட், அமெரிக்காவின் கையஸ் வான்ட் ஹாஃப் ஜோடி தகுதி பெற்றது.

முதல் சுற்று ஆட்டத்தில், இப்போட்டியின் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள மன்கட் ஜோடி 6-3, 6-2 என்ற கணக்கில் செர்பியாவின் விளாதிமீர் ஓப்ராடோவிக், செக். குடியரசின் ஆடம் வெஜ்மெல்கா ஜோடியை வெளியேற்றியது.

காலிறுதியில் அமெரிக்காவின் பிராஸ்வெல், டெரெக் மைர்ஸ் ஜோடியை மன்கட் ஜோடி எதிர்கொள்கிறது.

வங்கதேசத்துடன் இந்தியா இன்று மோதல்

கவுன்டன்:மலேசியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு அணிகள் விளையாடுகின்றன.அதில் இன்று நடக்கும் 7வது இடத்திற்கான போட்டியில் இந்தியா,வங்கதேச அணிகள் மோதுகின்றன. "பி"பிரிவில் இந்தியா.பாகிஸ்தான்,சீனா உள்ளிட்ட மூன்று அணிகள் லீக் சுற்றில் மோதின.

நடப்புச் சாம்பியனான இந்தியா, முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. அடுத்த ஆட்டத்தில் சீனாவுடன் டிரா (2-2) செய்தது. இதையடுத்து அரை இறுதி வாய்ப்பை இழந்த இந்தியா, 6 மற்றும் 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் வங்கதேசத்துடன் விளையாடுகிறது.

இதில் வெற்றி பெரும் அணி 5வது மற்றும் 6வது இடத்திற்கான போட்டியில் ஜப்பான் அணியை சந்திக்கும்.

இது குறித்து இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறுகையில் "ஆசிய ஹாக்கி தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.கடந்த எட்டு மாதங்களில் நான் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியாமல் போனது இதுவே முதல் முறையாகும்.இன்றைய போட்டியில் அணியில் சில மாற்றங்கள் செய்ய விரும்புகிறேன்.இப்போட்டியில் இதுவரை விளையாடாத ஹரிபிரசாத், வி.எஸ்.வினயா, அஜிதேஷ் ராய் ஆகியோருக்கு வங்கதேசத்துடனான ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு வழங்க தீர்மானித்துள்ளேன்.முன்பு கூறியது போல அந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவர்," என்றார்.


விமர்சனங்களை கண்டு கொள்வதில்லை:ஸ்ரீசாந்த்


ஜோகனஸ்பர்க்: "என் மீது விழும் விமர்சனங்களை நான் எப்போதும் கண்டுகொள்வதில்லை,"என்றார் ஸ்ரீசாந்த்.இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்.காயம் மற்றும் மோசமான பார்ம் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.காயத்திலிருந்து தெரிய இவர்,தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஐ.பி.எல்.,தொடரில் பஞ்சாப் அணி சார்பில் விளையாடி வருகிறார்.

இதுவரை நான்கு போட்டிகளில் பந்து வீசிய இவர் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.கடந்த 7 ம் தேதி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில்,பஞ்சாப் அணி விளையாடியது.இப்போட்டியில் ஸ்ரீசாந்தின் பந்து வீச்சை குறிவைத்து தாக்கினார் சென்னை வீரர் ஹைடன்.பின் ஸ்ரீசாந்தின் பந்து வீச்சில் அவுட்டானார்.உடனடியாக ஹைடனை பார்த்து ஆக்ரோஷமாக ஏதோ பேசினார் ஸ்ரீசாந்த்.

இப்போட்டிக்கு பின் பேட்டி அளித்த ஹைடன்,"ஸ்ரீசாந்த் மிகவும் ஆக்ரோஷமான வீரர்.நெருக்கடியான நேரத்தில் தனது அமைதியை இழந்து விடக் கூடியவர்,என விமர்சித்தார்.இதற்கு பதிலளித்த ஸ்ரீசாந்த் கூறியது;என் மீது ஹைடன் கூறிய விமர்சனங்களுக்கு என்ன பதில் கூறுகிறாய் என எனது நண்பர்கள் என்னிடம் கேட்டனர்.அதற்கு நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை எனக் கூறி விட்டேன். ஹைடன் மிகச் சிறந்த வீரர்.உலகின் தலை சிறந்த வீரர்களுள் அவரும் ஒருவர்.என் மீது எழும் விமர்சனங்களை குறித்து நான் கவலைப்படுவது இல்லை.கடவுளின் அருளால் நான் விளையாடி வருகிறேன்.அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட ஹைடனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்போது எனது வாயால் அல்ல,பந்து வீச்சின் மூலம் பேசுவேன்.ஹைடனுக்கு பதிலளிக்க இதுவே சிறந்த வழி.என்னை பற்றி தவறான செய்திகள் அவ்வப்போது மீடியாக்களில் வெளிவருகிறது.எனது அணியின் கேப்டன் யுவராஜ் சிங்குடன் மோதல் என்ற செய்தி கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.எனது நண்பர்கள் இது பற்றி என்னிடம் கேட்டார்கள்.இது எப்போது நடந்தது என்பதே எனக்கு தெரியவில்லை.கடந்த ஏழு மாதங்களாக எல்லாவித பிரச்னைகளிலிருந்தும் விலகி இருக்கிறேன்.நான் மீடியாவை கேட்டுக் கொள்வது என்னவென்றால்,என்னை விட்டு விடுங்கள் என்பதே.இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.