கேப்டன் பதவி மீது ஆசை - காம்பிர்

இந்திய அணியின் "சூப்பர் பேட்ஸ்மேனாக' கவுதம் காம்பிர் உருவெடுத்துள்ளார். சமீப காலமாக ரன் மழை பொழியும் இவர், இந்த ஆண்டின் ஐ.சி.சி., சிறந்த டெஸ்ட் வீரர் விருதை தட்டிச் சென்றார். மிக விரைவில் அணியை வழிநடத்திச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டில்லியை சேர்ந்த அதிரடி வீரர் காம்பிர். இந்த ஆண்டு தூள் கிளப்பிய இவர் 5 டெஸ்ட் போட்டிகளில் 4 சதம், ஒரு அரைசதம் உட்பட 727 ரன்கள்(சராசரி 90.87) எடுத்தார். 27 ஒரு நாள் போட்டிகளில் 2 சதம், 5 அரைசதம் சேர்த்து 848 ரன்கள்(சராசரி 40.38) விளாசினார்.

தற்போது 28 வயதான இவர், ரஞ்சி டிராபி போட்டிகளில் டில்லி அணியின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். தவிர, ஐ.பி.எல்., "டில்லி டேர்டெவில்ஸ்' அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரின் போது தோனிக்கு தடை விதிக்கப்பட்ட போது, காம்பிரின் பெயரும் கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டது. பின்னர் அனுபவ அடிப்படையில் சேவக் வாய்ப்பு பெற்றார்.

இந்தச் சூழலில் தனது கேப்டன் ஆசை குறித்து காம்பிர் அளித்த பேட்டி:

இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது மிகப் பெரிய கவுரவம். தவிர, அதிக பொறுப்பு வாய்ந்த பணி. தற்போது இப்பணியில் தோனி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உண்மையை சொன்னால், கேப்டன் பதவி பற்றி நினைத்து கூட பார்க்கவில்லை.

அந்த ஆசை எல்லாம் தற்போதைக்கு இல்லை. என்னை பொறுத்தவரை நாட்டுக்காக விளையாடி, அதிக ரன்களை குவிப்பதே முக்கியம். அணியை வழிநடத்திச் செல்லும் ஒருவர் பேட்டிங் அல்லது பவுலிங்கில் சோபிக்காவிட்டால், அவருக்கு மகிழ்ச்சி கிடைக்காது.


ஆதரவு இல்லை:

கடந்த 2003ல் கங்குலி கேப்டனாக இருக்கும் போது அறிமுகமானேன். சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதால் நீக்கப்பட்டேன். சுமார் இரண்டரை ஆண்டு கால போராட்டத்துக்கு பின் டிராவிட் தலைமையிலான அணியில் வாய்ப்பு பெற்றேன்.

இதையடுத்து சிறப்பாக விளையாடினால் தான் அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என்பது என் மனதில் ஆழமாக பதிந்தது. சில வீரர்களுக்கு கிடைத்தது போல எனக்கு யாரும் துவக்க கட்டத்தில் ஆதரவு அளிக்கவில்லை.

பெரிய ஸ்கோர்: டில்லி அணியின் மற்ற வீரர்களோடு ஒப்பிடுகையில் என்னிடம் இயல்பான பேட்டிங் திறன் இல்லை என்று ஒரு காலத்தில் நினைத்தது உண்டு. தற்போது இந்த எண்ணம் மாறி விட்டது. மிகப் பெரும் ஸ்கோர்களை எடுப்பதே முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

மிக விரைவாக 20 ரன்களை எடுப்பதால் பயனில்லை. நிலைத்து நின்று விளையாடி சதம் அடித்து, அணிக்கு வெற்றி தேடி தருவதையே ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதிரடியாக 30 முதல் 40 ரன்கள் எடுப்பதை சில காலம் தான் ரசிப்பார்கள்.

ரசிகர்கள் எப்போதும் "சிக்சர்களை' எதிர்பார்க்கலாம். ஆனாலும், அவர்களுக்காக ஆடுவதை காட்டிலும் அணிக்காக, நாட்டுக்காக பொறுப்பாக விளையாடுவதே மிகவும் முக்கியம்.

இவ்வாறு காம்பிர் கூறினார்.

ரிச்சர்ட்ஸ் போல் இன்னும் அதிரடியாக ஆடவில்லை: ஷேவாக்

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும், சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான தொடரிலும் அவரது ஆட்டம் முத்திரை பதிப்பதாக இருந்தது.

இலங்கைக்கு எதிரான மும்பை டெஸ்டில் 293 ரன் குவித்து தனது அதிரடியை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடுவதால் ஷேவாக் அடுத்த ரிச்சர்ட்ஸ் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷேவாக் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் அதிரடியாக விளையாடுவதில் வல்லவர். அவர் பிதாமகன் நான் இன்னும் ரிச்சர்ட்ஸ் போல் அதிரடியாக விளையாடியது இல்லை. அவருடன் என்னை ஒப்பிட இயலாது.

10 ஆண்டுகளின் சிறந்த பேட்ஸ்மேனாக நான் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன்.

இந்த ஆண்டு எனக்கு மிகவும் சிறந்ததாக இருந்தது. 2007-ம் ஆண்டு அணியில் இருந்து நீக்கப்பட்டேன். அதன் பிறகு திறமையை நிரூபித்து அணியில் நுழைந்தேன். இந்த ஆண்டில் 293 ரன் எடுத்தது சிறப்பானதாகும். அடுத்த ஆண்டிலும் எனது சிறப்பான ஆட்டம் தொடரும்.

இந்தியா தற்போது தலை சிறந்த அணியாக திகழ்கிறது. டெஸ்டில் “நம்பர்-1” இடத்திலும், ஒரு நாள் போட்டியில் 2-வது இடத்திலும் உள்ளோம். ஒரு நாள் போட்டியிலும் நம்பர் 1 இடத்தை பிடிக்க கூடிய திறமை இருக்கிறது.

தற்காலிக கேப்டன் பதவியில் மகிழ்ச்சியாக இருந்தேன். டோனி தான் கேப்டன். கேப்டன் பதவியில் அவர் சிறப்பாக செயலாற்றுகிறார். இந்திய அணியினர் சிறப்பான செயல்பாடுக்கு பயிற்சியாளர் கிர்ஸ்டனும் முக்கிய பங்கு வகிக்கிறார்.

இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.

அதிக போட்டிகளில் வென்று இந்தியா சாதனை

இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு அதிக போட்டிகளில் வென்று சாதனை படைத்து உள்ளது. இலங்கையுடன் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த ஆண்டு இந்திய அணி 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. 4 போட்டி களில் முடிவு தெரிய வில்லை.

சதவீத அடிப்படையில் பார்க்கும்போது இந்திய அணி 62.96 சதவீதம் வெற்றியை பெற்று இருக்கிறது. இது உலகில் வேறு எந்த அணியும் செய்யாத சாதனையாகும்.

இலங்கை அணி 27 போட்டிகளில் ஆடி இருக்கிறது. அதில் 12 போட்டிகளில் வெற்றியும், 14 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து உள்ளது. ஒரு போட்டி முடிவு தெரியவில்லை. வெற்றி சதவீதம் 46.15 சதவீதமாகும்.

இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது

டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறிய இந்திய அணிக்கு, இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி., டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது டில்லியில் நேற்று வழங்கப்பட்டது. இவ்விருதை இந்திய கேப்டன் தோனிக்கு, ஐ.சி.சி., தலைமை நிர்வாகி ஹாரூன் லார்கட் வழங்கினார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஆண்டுதோரும் சிறந்த டெஸ்ட் அணிக்கு சாம்பியன்ஷிப் விருது வழங்கி கவுரவிக்கும். கடந்த 2008-09ம் ஆண்டுக்கான விருதை ஆஸ்திரேலிய அணி பெற்றது.

இந்த ஆண்டுக்கான (2009-10) விருது சமீபத்தில் டெஸ்ட் ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய இந்திய அணிக்கு வழங்கப்பட்டது.

இதற்கான விழா டில்லியில் நேற்று நடந்தது. இவ்விழாவில் இந்திய கேப்டன் தோனி, சேவக், ஐ.சி.சி., தலைமை நிர்வாகி ஹாரூன் லார்கட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை லார்கட், இந்திய கேப்டன் தோனியிடம் வழங்கி கவுரவித்தார்.


இதுகுறித்து இந்திய கேப்டன் தோனி கூறியதாவது:

இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி., டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்விருதை இந்திய அணி மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பாக நான் பெருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த 14 மாதங்களாக இந்திய அணி கடுமையாக போராடி ரேங்கிங்கில் முதலிடத்துக்கு முன்னேறியதன்மூலம், தற்போது இவ்விருது கிடைத்தது. தொடர்ந்து ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடத்தை தக்க வைத்துக்கொள்ள, இனிவரும் போட்டிகளில் கூடுதல் திறமையை வெளிப்படுத்துவோம்.

அடுத்த ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு டெஸ்டில் விளையாட உள்ளோம். தவிர, தென் ஆப்ரிக்காவுடன் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து இரு அணிகளின் கிரிக்கெட் போர்டுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எனவே அடுத்த ஆண்டு நான்கு டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் பங்கேற்று டெஸ்ட் அரங்கில் ஆதிக்கம் செலுத்துவோம்.

ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளை காட்டிலும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மிகவும் கடினமானது. ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் அன்றே முடிவு கிடைத்து விடும் என்பதால், அன்றைய தினம் முழுதிறமையை வெளிப்படுத்தினால் போதுமானது. டெஸ்ட் போட்டியில் ஐந்து நாட்களும் முழுதிறமையை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.

இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாகவே உள்ளது. ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் எழுச்சி கண்டிருப்பது வரவேற்கத்தக்கது. இஷாந்த் சர்மா பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணியின் பீல்டிங் சில நேரங்களில் தடுமாற்றம் அடைகிறது.

இதனை எளிதில் சரிபடுத்திவிடலாம். இந்திய அணியின் முன்னேற்றத்துக்கு துவக்க வீரர் சேவக்கின் அதிரடி ஆட்டம் ஒரு காரணம். இனிவரும் நாட்களிலும் இவரது பங்களிப்பு இந்திய அணிக்கு தேவைப்படுகிறது. விராத் கோஹ்லி, காம்பிர் போன்ற வீரர்கள் அசத்தி வருவதால், இந்திய அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலுவடைந்துள்ளது.

இவ்வாறு தோனி கூறினார்.

கடந்த 10 ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேன் ஷேவாக்

இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டெரிக் பிரிங்கிள் டெலிகிராப் பத்திரிக்கையில் எழுதியுள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் ஷேவாக். 72 டெஸ்டில் 6248 ரன் எடுத்துள்ளார். 2 டிரிபிள் சதமும், 4 இரட்டை சதமும் எடுத்துள்ளார். பாண்டிங், பீட்டர்சன் ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் தான் உள்ளார். இவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் ஷேவாக் உள்ளார். 10 ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார்.

வார்னே, முரளீதரன், காலிஸ், தெண்டுல்கர் ஆகியோர் 1990 (1990-2000)-களில் சிறந்த வீரர்களாக இருந்தனர்.

அதிரடியாக விளையாடு வதில் ஷேவாக் நம்பர் ஒன் வீரர் ஆவார். அவருக்கு அடுத்த நிலையில் தான் கெய்ல் உள்ளார்.

இவ்வாறு பிரிங்கிள் கூறியுள்ளார்.

ஹாட்ரிக்' வெற்றியை நோக்கி இந்தியா

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் ஐந்தாவது ஒரு நாள் போட்டி இன்று டில்லியில் நடக்கிறது. கடந்த இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி, இம்முறை "ஹாட்ரிக்' வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது. ஏற்கனவே தொடரை இழந்த சோகத்தில் இருக்கும் இலங்கை அணி ஆறுதல் வெற்றிக்காக போராடலாம்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. கட்டாக், கோல்கட்டா போட்டியில் அடுத்தடுத்து வென்ற இந்திய அணி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முக்கியத்துவம் இல்லாத கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி டில்லி, பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்க உள்ளது.

இளமை எழுச்சி:

காம்பிர், கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ரெய்னா என இளம் வீரர்கள் எழுச்சியுடன் செயல்பட்டு வருவது இந்திய அணிக்கு பலம் அளிக்கிறது. கோல்கட்டாவில் நடந்த 4 வது ஒரு நாள் போட்டியில் காம்பிர், கோஹ்லி கூட்டணி வெற்றியை இந்தியா வசமாக்கியது. இன்றைய போட்டியிலும் இவர்கள் அசத்த காத்திருக்கின்றனர்.


வருகிறார் தோனி:

துவக்க வீரர்களான சேவக், சச்சின் நல்ல பார்மில் இருப்பது கூடுதல் பலம். சொந்த ஊரில் களமிறங்க உள்ள சேவக், மீண்டும் அதிரடி காட்டலாம். தாமதமாக பந்து வீசியது தொடர்பாக, இரண்டு போட்டிகளில் தடையை எதிர்கொண்ட தோனி, இன்றைய போட்டியில் மீண்டும் கேப்டன் பொறுப்பேற்கிறார். இவரது வருகை அணிக்கு பலம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


ஸ்ரீசாந்த் வாய்ப்பு?:

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பாராட்டும் படியாக இல்லை. நெஹ்ரா, ஜாகிர் மட்டுமே ஆறுதல் அளிக்கின்றனர். தொடர்ந்து சொதப்பி வந்த இஷாந்த் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் அசோக் டின்டா தேர்வாகி உள்ளார்.

சுழலில் ஹர்பஜன், ரவிந்திர ஜடேஜா நம்பிக்கை அளிக்கின்றனர். பன்றிக் காய்ச்சலில் இருந்து மீண்ட ஸ்ரீசாந்த் இடம் பெற வாய்ப்பு உள்ளது. பீல்டிங்கில் ஏமாற்றம் அளித்து வரும் இந்திய அணி, தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


தரங்கா அசத்தல்:

ஒரு நாள் தொடரை பரிதாபமாக இழந்துள்ள இலங்கை அணி, ஆறுதல் வெற்றியை நோக்கி இன்று களமிறங்குகிறது. துவக்க வீரரான தரங்கா "நல்ல பார்மில்' உள்ளார். கடந்த போட்டியில் ஏமாற்றம் அளித்த அதிரடி வீரர் தில்ஷன் இன்று அசத்துவார் என எதிர்பார்க்கலாம்.


காயம் சோகம்:

நட்சத்திர வீரர்களான ஜெயசூர்யா, ஜெயவர்தனா இருவரும் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம். மாத்யூஸ், துஷாரா, பெர்னாண்டோ, வெலகேதரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ளது இலங்கை அணிக்கு துரதிருஷ்டமாக அமைந்துள்ளது. தவிர பந்துவீச்சும் அவ்வளவாக எடுபடவில்லை. லக்மல், பெரேரா, மெண்டிசின் போன்றோர் இன்று துல்லியமாக பந்துவீசினால், இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.


பெரிய அளவில் மாற்றமிருக்காது : தோனி

இன்றைய போட்டி குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது: இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டதால், இன்றைய போட்டியை எளிதாக நினைக்க மாட்டோம். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு 4-1 என்ற கணக்கில் கோப்பை வெல்வோம். அணியில் ஒரு சில மாற்றங்களை தவிர, பெரிய அளவில் மாற்றமிருக்காது.

வலுவான அணியே களமிறங்கும். இந்திய அணி பீல்டிங்கில் ஒரு சில குறைபாடுகள் உள்ளன. மற்றபடி பேட்டிங், பவுலிங்கில் பாராட்டும்படியாகவே உள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் சேவக் அணியை சிறப்பாக வழிநடத்தினார். கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா இருவரும் தங்களது தேர்வை நியாயப்படுத்தி உள்ளார்கள். இவ்வாறு தோனி தெரிவித்தார்.


ஜெயசூர்யா "20':

ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்து 20 ஆண்டுகளை நேற்று நிறைவு செய்தார் இலங்கையின் ஜெயசூர்யா. கடந்த 1989, டிச., 26ம் தேதி மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இப்போட்டியில் 3 ரன் மட்டுமே எடுத்தார். இதற்கு பின் தனது அதிரடி ஆட்டத்தால் கிரிக்கெட் அரங்கில் புரட்சி ஏற்படுத்தினார்.

கடந்த 1996 ம் ஆண்டு இலங்கை அணி உலககோப்பை கைப்பற்ற, முக்கிய காரணமாக இருந்தார். தற்போது 40 வயதான இவர் இதுவரை 443 ஒரு நாள் போட்டிகளில் 13397 ரன்களும், 322 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தவிர, 110 டெஸ்ட் போட்டிகளில் 6973 ரன்கள் எடுத்துள்ளார்.

கிரிக்கெட் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டிய இவருக்கு அணியின் கேப்டன் சங்ககரா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: 20 ஆண்டு கால கிரிக்கெட் அரங்கில் சாதித்த ஜெயசூர்யாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை அணியில் அவருக்கு இன்றும் தனிச் சிறப்பு உண்டு. 1996 ம் ஆண்டு உலககோப்பையில் அவரது ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. ஒரு நாள் அரங்கில் 13 ஆயிரம் ரன்கள் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் ஜெயசூர்யா தான். இவ்வாறு சங்ககரா கூறினார்.

மைதானத்தில் இதுவரை...:

* டில்லி, பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இந்திய அணி மொத்தம் 14 போட்டிகளில் பங்கேற்று 8 வெற்றி, 5 தோல்விகளை பதிவு செய்துள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டது.

* இம்மைதானத்தில் இந்தியா, இலங்கை அணிகள் இதுவரை 3 போட்டிகளில் மோதி உள்ளன. இதில், இந்தியா 2, இலங்கை 1 வெற்றியை எட்டியுள்ளன.

* இங்கு பாகிஸ்தான் அதிகப்பட்ச ஸ்கோரை (303, எதிர்-இந்தியா, 2005) பதிவு செய்துள்ளது. இம்மைதானத்தில் இந்திய அணி குறைந்த பட்ச ஸ்கோரை (144, எதிர்-பாகிஸ்தான், 2005)எட்டியுள்ளது.

* இம்மைதானத்தில் அதிக ரன் குவித்த வீரர் இந்தியாவின் சச்சின் (7 போட்டி 273 ரன்). அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் அகார்கர் (3 போட்டி 7 விக்.,).

* இந்திய அணி இம்மைதானத்தில் கடைசியாக, கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய வீரர்கள் தேர்வு சரியில்லை

இந்திய வீரர்களின் தேர்வு முறை சரியில்லை என்று துலீப் வெங்சர்க்கார் கூறியுள்ளார். முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

இந்திய அணி வீரர்கள் மிகவும் களைப்புடன் இருக்கிறார்கள். 15 பேர் கொண்ட அணியில் பெரும்பாலும் எல்லா போட்டியிலும் ஒரே மாதிரியாக 11 வீரர்களும் இடம் பெறுகிறார்கள். இதனால் அவர்கள் களைப்பாகி விடுகிறார்கள். உடல் தகுதி பிரச்சினையும் ஏற்படுகிறது.

மோசமான பீல்டிங்கும் ஏற்படுகிறது. இதற்கு தேர்வு முறை சரியில்லாததுதான் காரணம். அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சு சரியில்லாத போது அணியில் உள்ள சுதிப் தியாகிக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை.

வெற்றி வீரர்களை மாற்றுமாறு நான் சொல்லவில்லை. மாற்று வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. அவர்கள் பயணம் செய்து பெஞ்சில் அமர்வதற்காகவா தேர்வு செய்யப்பட்டார்கள். தியாகி, ஒஜா திறமையானவர்கள் இல்லையா? புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ள தியாகி, ஒஜா இதுவரை ஒரு போட்டியில் கூட ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விலகினார் சச்சின் - இந்திய அணி அறிவிப்பு

வங்கதேசத்தில் நடக்க உள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் ஜன. 4 ம் தேதி வங்கதேசத்தில் துவங்குகிறது. இத்தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.


சச்சினுக்கு ஓய்வு: இத்தொடரில் விலகுவதாக சச்சின் அறிவித்துள்ளார். இவருக்குப் பதில் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பன்றிக் காய்ச்சல் காரணமாக இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து நீக்கப்பட்ட ஸ்ரீசாந்த், முத்தரப்பு தொடருக்கு தேர்வாகி உள்ளார்.


மீண்டும் தோனி: இலங்கை அணிக்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது. தாமதமாக பந்து வீசியது தொடர்பாக 2 போட்டிகளில் தடையை எதிர்கொண்ட தோனி, மீண்டும் இப்போட்டியில் கேப்டன் பொறுப்பேற்கிறார். அசோக் டின்டா புதிதாக வாய்ப்பு பெற்றுள்ளார். மற்றபடி அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.


முத்தரப்பு தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி: தோனி (கேப்டன்), சேவக், காம்பிர், யுவராஜ், கோஹ்லி, ரெய்னா, ரோகித் சர்மா, ஜடேஜா, ஹர்பஜன், ஜாகிர், நெஹ்ரா, தியாகி, தினேஷ் கார்த்திக், ஸ்ரீசாந்த், அசோக் டின்டா மற்றும் அமித் மிஸ்ரா

டோனிக்கு டெஸ்ட் சாம்பியன் விருது

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் முறையாக “நம்பர்-1” இடத்தை பிடித்தது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டை 2-0 என்ற கணக்கில் வென்றதால் முதலிடம் கிடைத்தது.

டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் இருப்பதால் இந்திய அணி கேப்டன் டோனிக்கு டெஸ்ட் சாம்பியன் விருது வழங்கப்படுகிறது.

வருகிற 27-ந்தேதி ஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி ஹாரூன் லார்கட் இதை வழங்குகிறார்.

டோனி ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி நேற்றுடன் 5 ஆண்டுகள் முடிவு பெற்றது. இதேபோல டெஸ்டில் அறிமுகமாகி 4 ஆண்டுகள் முடிந்தது

4வது ஒருநாள் போட்டி: இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது

இந்தியா இலங்கை மோதும் 4-வது ஒரு நாள் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இலங்கை அணியில் ஜெயசூர்யா, பெரேரா, லக்மல் சேர்க்கப்ட்டனர். இந்தியா அணியில் யுவராஜ் சிங்கிற்கு பதிலாக கோக்லி சேர்க்கப்ட்டார்.

டாஸ் ஜெயித்த இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தில்சானும் தாரங்காவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முதல் மூன்று போட்டியை போல் இந்த போட்டியில் இலங்கை வீரர்களால் முதலில் அடித்த விளையாட முடியவில்லை.

ஜாகீர்கான் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இலங்கை அணி 8 ஓவரில் 31 ரன் எடுத்திருக்கும்போது தில்சான் 9 ரன்னில் நெக்ரா பந்தில் அவுட் ஆனார்.

இந்த ரன்னை தில்சான் 19 பந்தில் எடுத்தார். அடுத்து தாரங்காவுடன் ஜெயசூர்யா ஜோடி சேர்ந்தார். 11 ஓவரில் இலங்கை அணி 48 ரன் எடுத்திருந்தது. அடுத்து 12வது ஓவரை இ.சர்மா வீசினார். அந்த ஓவரில் தாரங்கா 5 பவுண்டரி அடித்து விலாசினார்.

அடுத்த ஓவரில் ஜெயசூர்யா 15 ரன்னில் ஜாகீர்கான் பந்தில் அவுட் அனார். அடுத்து சங்ககரா தாரங்காவுடன் ஜோடி சேர்ந்தார். சங்ககரா ரன் ஏதும் எடுக்காமல் இருந்தபோது இ.சர்மா பந்தில் ஹர்பஜன் கொடுத்த கேட்சைப் பிடிக்க தவறினார். இதனால் டக் அவுட்டில் இருந்து சங்ககரா தப்பினார்.

அதன் பின் இருவரும் அடித்து விளையாடினார்கள். இலங்கை அணியின் ஸ்கோர் 76 ரன்னாக இருக்கும்போது தாரங்கா 9 பவுண்டரி1 சிக்சருடன் 50 ரன்னை கடந்தார். இலங்கை அணி 17.1 ஓவரில் 100 ரன்னை கடந்தது. 33.4 ஓவரில் ஸ்கோர் 183 ரன்னாக இருக்கும்போது தாரங்கா சதம் அடித்தார். சங்ககரா 60 ரன் எடுத்து அவுட் ஆனார்.

42.1 ஓவரில் 234 ரன் இருக்கம்போது தாரங்கா 118 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின் இலங்கை அணி 49.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன் எடுத்திருக்கும்போது லைட் பிரச்சனையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அதன்பின் ஆட்டம் தொடங்கியது. குறிப்பிட்ட 50 ஓவரில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 315 ரன் எடுத்தது.


பின்னர் 316 ரன் எடுத்தால் வெற்றி இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்கத்திலே இந்தியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியா 23 ரன் எடுப்பதற்குள் இரண்டு முக்கிய விக்கெட்டை இழந்தது. சேவாக் 10 ரன்னிலும் சச்சின் 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.


இருவருடைய விக்கெட்டையும் லக்மால் கைப்பற்றினார். அடுத்து காம்பீர் வீரட் கோக்லி தடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். அதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. 15.3 ஓவரில் இந்தியாவின் ஸ்கோர் 100ஐ தாண்டியது.

நிதானமாக விளையாடிய காம்பீரும் கோக்லியும் அரைசதம் அடித்தனர். கோக்லி 110 பந்தில் சதமும் காம்பீர் 101 பந்தில் சதமும் அடித்தனர்.

தொடர்ந்து ஆடிய இந்தியா 48.0 ஓவரில் 313 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்றது. கடைசியில் மேட்ச்சியில் தோற்றாலும் பிரச்சினை இல்லை