டெஸ்டில் இருந்து தோனி திடீர் ஓய்வு

இந்திய அணி கேப்டன் தோனி, டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி, 33. இதுவரை 90 டெஸ்ட் (4876 ரன்கள்), 250 ஒரு நாள் (8192), 50 ‘டுவென்டி–20’ (849) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இந்திய அணிக்கு ‘டுவென்டி–20’(2007), 50 ஓவர் (2011) என இரண்டு முறை உலக கோப்பை வென்று தந்தார். தவிர, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கோப்பை வென்று காட்டினார்.

இந்நிலையில், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து இவரது தலைமையிலான இந்திய அணி தோல்வி கண்டது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0–2 என. இழந்துள்ளது.

இதையடுத்து, டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ளார்.


பங்களிப்புக்கு நன்றி:

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டு வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு நாள் மற்றும் ‘டுவென்டி–20’ போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக, கேப்டன் தோனி டெஸ்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார். 

மிகச்சிறந்த கேப்டனான இவரின் முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த இவருக்கு நன்றி.
வரும் ஜன.,6ல் சிட்னியில் துவங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் விராத் கோஹ்லி கேப்டனாக செயல்படுவார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஓய்வு ஏன்:

கடந்த 2005, டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான சென்னை டெஸ்டில் அறிமுகம் ஆனார் தோனி. கடந்த 2008ல் கும்ளே ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் ஆனார். 1967-–68க்குப் பின், அதாவது 41 ஆண்டுகள் கழித்து, நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று அசத்தினார்.

இவர் தலைமையில் இந்திய டெஸ்ட் அணி உலகின் ‘நம்பர்–1’ இடத்தை பெற்று அசத்தியது.

2011 முதல் இவரது டெஸ்ட் வீழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து இங்கிலாந்த, ஆஸ்திரேலிய மண்ணில் இரு முறை, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க மண்ணிலும் தோல்வி துரத்த, ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். 

இதுவரை கேப்டனாக பங்கேற்ற 60 டெஸ்டில், 27 வெற்றி, 15 ‘டிரா’ செய்த தோனி அணிக்கு, 18 தோல்விகள் கிடைத்தது. தவிர, அன்னிய மண்ணில் அதிக தோல்விகளை (15) சந்தித்த முதல் இந்திய அணி கேப்டன் தோனி தான்.

இவருக்கு அடுத்த இடத்தில், மன்சூர் அலிகான் பட்டோடி, அசார், கங்குலி ஆகியோர், அன்னிய மண்ணில் கேப்டனாக களமிறங்கிய டெஸ்ட் போட்டிகளில் தலா 10 தோல்விகள் பெற்றனர்.

சீண்டினார் ஜான்சன் - சீறினார் கோஹ்லி

விராத் கோஹ்லியை வீணாக உசுப்பேற்றினார் ஜான்சன். இவரது உடலை நோக்கி பந்தை ஆவேசமாக எறிந்தார். இதற்கு பதிலடியாக சதம் அடித்து அசத்தினார் கோஹ்லி. 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் மெல்போர்னில் நடக்கிறது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில், 83வது ஓவரை ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் வீசினார். 

இதன் இரண்டாவது பந்தை இந்தியாவின் கோஹ்லி அடித்தார். பந்தை பிடித்த ஜான்சன், ‘ரன்–அவுட்’ செய்வதற்காக ‘ஸ்டெம்ப்சை’ நோக்கி எறிந்தார். ஆனால் பந்து விராத் கோஹ்லியின் உடலில் பட்டது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கோஹ்லியிடம், ஜான்சன் மன்னிப்பு கேட்டார். 

இந்த ஓவரின் கடைசி பந்தை ‘பவுண்டரிக்கு’ விரட்டிய கோஹ்லியிடம், ஜான்சன் ஏதோ கூறினார். இதனால் இருவருக்கும் வார்த்தை போர் முற்றவே, அம்பயர் கெட்டில்புரூக், கோஹ்லியை சமாதானம் செய்தார். அதன்பின், இவர்கள் இருவரும் அடிக்கடி முறைத்துக் கொண்டனர். 
          
இதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது: 

ஜான்சன் எறிந்த பந்து என் மீது பட்ட போது மிகவும் கோபமடைந்தேன். அப்போது அவரிடம், ‘அடுத்த முறை என் மீது எறிய முயற்சிக்க வேண்டாம், ‘ஸ்டெம்ப்சை’ நோக்கி எறியவும்’ எனக் கூறினேன். அப்போதிருந்தே ஜான்சன் உள்ளிட்ட சில ஆஸ்திரேலிய வீரர்களுடன் வார்த்தை போர் ஆரம்பமானது. 

அவர்கள் என்னை ‘அடக்கமில்லாத குழந்தை’ என கேலி செய்தனர். ஜான்சனுக்கு பேட்டிங்கில் மூலம் பதிலடி கொடுக்க முடிவு செய்தேன். நேற்றைய ஆட்டத்தில் இவரது ஓவரில் சராசரியாக 5 ரன்கள் வரை எடுத்ததால், நெருக்கடியுடன் காணப்பட்டார்.                 

களத்தில் எதிரணி வீரர்களுடன் வார்த்தை போரில் ஈடுபடுவது குறித்து கவலையில்லை. இது, போட்டியில் சாதிக்க உதவியாக இருக்கும். இதனால் தான் மெல்போர்ன் டெஸ்டில் 169 ரன்கள் எடுக்க முடிந்தது.            
      
தற்போது ஆஸ்திரேலிய அணி தொடரில் 2–0 என முன்னிலையில் உள்ளது. இதனால் இவர்கள் எதிரணியினருடன் வம்பிழுப்பார்கள். ஒருவேளை தொடர் 1–1 என சமநிலையில் இருந்திருந்தால், இப்படி செய்வார்களா? கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் அமைதியாகவே காணப்பட்டனர். அப்போது அதிகளவில் வார்த்தை போர் இல்லை.        
          

மரியாதை இல்லை: 

ஆஸ்திரேலிய அணியில் உள்ள ஒரு சில வீரர்களுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. அவர்களுக்கு நான் மரியாதை கொடுப்பேன். ஆனால் ஒரு சிலர் எனக்கு மரியாதை கொடுப்பதில்லை. 

பின், அவர்களுக்கு  நான் ஏன் மரியாதை கொடுக்க வேண்டும். தவிர நான் இங்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக மட்டுமே வந்துள்ளேன். மற்றவர்களிடம் இருந்து மரியாதை பெறுவதற்கு அல்ல. 

நேற்றைய ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர் ரகானேவின் ஆட்டம் அருமையாக இருந்தது. எனக்கு பின் களமிறங்கிய இவர், முதலில் சதம் அடித்தது ஆச்சர்யம் அளித்தது. 

தவிர இவர், ஜான்சன் வீசிய பந்துகளை எதிர்கொண்டவிதம் பாராட்டுக்குரியது. சிறந்த ‘பார்ட்னர்ஷிப்’ கிடைக்கும் போது எந்த ஒரு பவுலரையும் எளிதில் சமாளித்து விடலாம். அடுத்த முறை இதுபோல வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இரட்டை சதம் அடிக்க முயற்சிப்பேன்.                  
இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.

தோனி புதிய உலக சாதனை

இந்திய அணி கேப்டன் தோனி, விக்கெட் கீப்பிங்கில் நேற்று புதிய உலக சாதனை படைத்தார். சர்வதேச அரங்கில் அதிக ‘ஸ்டெம்பிங்’ செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார்.

மெல்போர்ன் டெஸ்டின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில், அஷ்வின் வீசிய பந்தில் இந்திய கேப்டன் தோனி, ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சனை ‘ஸ்டெம்பிங்’ செய்து அவுட்டாக்கினார். 

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ‘ஸ்டெம்பிங்’ செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில், இலங்கையின் சங்ககராவை (485 இன்னிங்ஸ், 133 ஸ்டெம்பிங்) முந்தி முதலிடம் பிடித்தார். 

இதுவரை 460 இன்னிங்ஸ் விளையாடிய தோனி, டெஸ்டில் 38, ஒருநாள் போட்டியில் 85, சர்வதேச ‘டுவென்டி–20’யில் 11 என மொத்தம் 134 முறை ‘ஸ்டெம்பிங்’ செய்துள்ளார். 

இப்பட்டியலில் முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் மோங்கியா (216 இன்னிங்ஸ், 52 ஸ்டெம்பிங்) 10வது இடத்தில் உள்ளார்.            

* தவிர, டெஸ்ட் போட்டிகளில் அதிக ‘ஸ்டம்பிங்’ செய்த இந்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில், முதலிடத்தை முன்னாள் வீரர் கிர்மானியுடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா 38 முறை ‘ஸ்டெம்பிங்’ செய்துள்ளனர்.

ரசிகர் கன்னத்தில் யூசுப் பதான் பளார்

தகாத வார்த்தைகள் பேசிய ரசிகரை, கன்னத்தில் அறைந்து சர்ச்சை கிளப்பியுள்ளார் யூசுப் பதான்.       

காஷ்மீர், பரோடா அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை லீக் போட்டி, வதோதராவில் நடந்தது. இதன் மூன்றாவது நாள் ஆட்டத்தில் பரோடா அணியின் யூசுப் பதான், 9 ரன்னுக்கு அவுட்டாகி திரும்பினார்.       

காலரியில் இருந்த ஆஷிஸ் பார்மர் என்ற ரசிகர் யூசுப் குறித்து, தகாத முறையில் பேசியுள்ளார். இதை பொறுத்துக் கொள்ளாத யூசுப், அவரை ‘டிரசிங் ரூம்’ வருமாறு அழைத்துள்ளார். 

அங்கு அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தாராம். கோபம் குறையாத யூசுப், அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.       

மீண்டும் ஆவேசம்: இதைக் கேள்விப்பட்ட இவரது சகோதரர் இர்பான் பதான் தலையிட்டு சமாதானம் செய்துள்ளார். யூசுப் செயலால் ஆத்திரப்பட்ட 30க்கும் மேற்பட்ட ரசிகர்கள், ‘டிரஸ்சிங் ரூம்’ செல்வதற்காக, அங்கிருந்த கதவை உடைக்க முயற்சித்தனர்.       

இதைக் கண்டு அஞ்சாத யூசுப், வெளியில் வந்து தைரியமாக நின்றார். அப்போது தடுப்புகளை தாண்டிக் குதித்த ரசிகர்கள் மோதலுக்கு தயாராகினர்.       
கடைசியில் சமாதானம்: கடைசியில் பரோட கிரிக்கெட் சங்கத்தினர் (பி.சி.ஏ.,) தலையிட்டு சமாதானம் செய்தனர்.   
   
பி.சி.ஏ., செயலர் கெய்க்வாட் கூறுகையில்,‘‘ சம்பந்தப்பட்ட ரசிகரின் செயலுக்காக, அவரது குடும்பத்தினர் மன்னிப்பு கேட்டனர். இதனால், பிரச்னை சுமூகமாக முடிந்தது,’’ என்றார்.

எங்கு சென்றனர் இந்திய வீரர்கள் - பிரிஸ்பேன் சர்ச்சை தீரவில்லை

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவின் ‘டாப் ஆர்டர்’ வீரர்கள் சரிந்த போது, பின் வரிசை வீரர்கள் இஷாந்த் சர்மா, வருண் ஆரோன் மைதானத்திலேயே இல்லையாம்.

பிரிஸ்பேன் டெஸ்ட் நான்கு நாட்களில் முடிந்துவிட்டது என்றாலும், இந்த பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் மூன்றாவது நாள் மதியம் இஷாந்த், ரெய்னா உள்ளிட்டோர் சைவ உணவுக்காக, மைதானத்தை விட்டு வெளியில் சென்று திரும்பினர்.

4வது நாள் காலையில் மோசமான ஆடுகளத்தில் பயிற்சி செய்த ஷிகர் தவான், கோஹ்லி காயமடைந்தனர். இதனால் ஏற்பட்ட ‘டிரசிங் ரூம்’ குழப்பத்தில், பேட்டிங் ஆர்டர் மட மடவென சரிய, இந்திய அணி எளிதாக வீழ்ந்தது. 

தற்போது மற்றொரு பிரச்னை கிளம்பியுள்ளது.

இந்திய அணி குறித்து ‘ஹெரால்டு சன்’ என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தி:
நான்காவது நாள் காலையில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் ‘டாப் ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். 

அப்போது, பின் வரிசை வீரர்கள் சிலர் மைதானத்திலேயே இல்லையாம். இந்திய அணியின் முன்னணி பவுலர் இஷாந்த், வருண் ஆரோன் உள்ளிட்டோர், தாமதமாகத் தான் இந்திய அணியுடன் இணைந்தனர்.

இருப்பினும், இதை மறுத்த இந்திய அணி நிர்வாகம்,‘ விளையாடும் லெவனில் இல்லாத பவுலர்கள் தான், நீச்சல் பயிற்சியை முடித்துவிட்டு, தாமதமாக வந்தனர்,’ என, தெரிவித்துள்ளது.

உண்மையில் யார் யார் வெளியில் சென்றது, எங்கு சென்றனர் என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை. 

கோஹ்லி, தவான் மோதல் - டிரெசிங் ரூமில் பரபரப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின்போது,  ‘டிரெசிங் ரூமில்’ இந்திய வீரர்கள் விராத் கோஹ்லி, தவான் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதலிரண்டு போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. 

இதில் பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது போட்டியின், நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. பயிற்சியில் ஈடுபட்ட தவானுக்கு காயம் ஏற்பட்டதால், இரண்டாவது இன்னிங்சில் அவசரம் அவசரமாக கோஹ்லி களமிறக்கப்பட்டார். 

இதனால் இவுர் 1 ரன்னில் அவுட்டானார். இந்நிலையில், அன்றைய நாள் ‘டிரெசிங் ரூமில்’ கோஹ்லிக்கும், தவானுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 


நீங்கள்தான் காரணம்:

ஜான்சன் பந்தில் 1 ரன்னில் அவுட்டான கோஹ்லி கோபத்துடன் ‘டிரெசிங் ரூம்’ சென்றுள்ளார். நான் 1 ரன்னில் அவுட்டாகியதற்கு, நீங்கள்தான் காரணம் என தவானை நோக்கி குற்றம் சாட்டியுள்ளார். 

இதற்கு தவானும் பதிலடி தந்துள்ளார். அதாவது, இந்திய அணிக்காக விளையாடுவதை பெருமையாக கருதுகிறேன். எனக்கு காயம் ஏற்பட்டுள்ளது என பொய்யாக சொல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

இப்படி வார்த்தை போர் அதிகமானவுடன், இந்திய அணி இயக்குனர் ரவி சாஸ்திரி இடையே வந்து இருவரையும் சமாதானம் செய்துள்ளார்.

மழையால் வந்த தொல்லை - உலக கோப்பைக்கு இன்னும் 54 நாட்கள்

வண்ண உடையில் வீரர்கள், வெள்ளை நிற பந்து, ஒளிவெள்ளத்தில் பகலிரவு போட்டிகள் என  பல்வேறு புதுமைகளுடன் 5வது உலக கோப்பை தொடர் 1992ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடந்தது. 

நிறவெறி காரணமாக 21 ஆண்டுகள் தடையில் இருந்து மீண்ட தென் ஆப்ரிக்க அணி, இத்தொடரில் பங்கேற்றது. மொத்தம் 9 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் ‘ரவுண்ட்–-ராபின்' முறையில் நடத்தப்பட்டன.      
                   
இந்திய அணி 8 போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்ததால், புள்ளிப்பட்டியலில் 7வது இடம் பெற்றது. இதனால், லீக் சுற்றுடன் நடையை கட்டியது. நடப்பு சாம்பியனாக வந்த ஆஸ்திரேலிய அணியும் லீக் சுற்றை கடக்க முடியவில்லை.             
           
இம்ரான் பலம்: பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. இந்த நேரத்தில் கேப்டன் இம்ரான் கான் சக வீரர்களுக்கு ஊக்கம் அளித்தார். 

முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி, பைனலுக்குள் நுழைந்தது.

வினோத விதிமுறை: இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய மற்றொரு அரையிறுதி பெரும் சர்ச்சையை கிளப்பியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 45 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. 

அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. ஆனால், மழை குறுக்கிட சிக்கல் ஏற்பட்டது. 

அப்போதைய விதிமுறைப்படி எதிரணி அதிக ரன்கள் எடுத்த ஓவர்களின் அடிப்படையில், வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்படும். 

இதன்படி 1 பந்தில் 21 ரன்கள் எடுக்க வேண்டுமென தென் ஆப்ரிக்காவுக்கு அதிர்ச்சி அளிக்கப்பட்டது. இது, சிட்னி மைதானத்தின்  ‘மெகா ஸ்கிரீனில்’ 1 பந்தில் 22 ரன்கள் என தவறாக காண்பிக்கப்பட்டது. 

இந்த எட்ட முடியாத இலக்கு காரணமாக 43 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்கா பரிதாபமாக தோல்வி அடைந்தது.   

                      
அக்ரம் அபாரம்: 

மெல்போர்னில் நடந்த பைனலில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் இம்ரான் கான்(72), மியான்தத்(58), இன்சமாம்(42), அக்ரம்(33) கைகொடுக்க, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது. 

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி அக்ரம் ‘வேகத்தில்’ திணறியது. 49.2 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி, முதல் முறையாக கோப்பை வென்றது.


நியூசி., தந்த அதிர்ச்சி              
         
பொதுவாக ஒருநாள் போட்டிகளில் துவக்க ஓவர்களை வேகப்பந்துவீச்சாளார்கள் வீசுவர். இந்த நடைமுறையை மாற்றிக் காட்டினார் நியூசிலாந்து கேப்டன் மார்ட்டின் குரோவ். 

கடந்த 1992ல் நடந்த உலக கோப்பை தொடரில் துவக்கத்தில் சுழற்பந்துவீச்சாளர் தீபக் படேலை களமிறக்கி, எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இஷாந்த் சர்மாவுக்கு அபராதம்

ஐ.சி.சி., நடத்தை விதிமுறையை மீறிய இந்தியாவின் இஷாந்த் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், பிரிஸ்பேனில் நடந்த  இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா தோற்றது. 

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தை இந்தியாவின்  இஷாந்த் சர்மா அவுட்டாக்கினார். அப்போது ஸ்மித்தை நோக்கி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். 

இது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐ.சி.சி.,) நடத்தை விதிமுறையை மீறிய செயல். இத்தவறை இஷாந்த் ஒப்புக்கொண்டார். இதையடுத்து இவருக்கு போட்டி சம்பளத்திலிருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.


சிக்கலில் ஸ்மித்:

இதே போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசவில்லை. 3 ஓவர் வரை தாமதமாக பந்துவீசியது. 

இதற்காக கேப்டன் என்ற முறையில் ஸ்டீவன் ஸ்மித்திற்கு போட்டி சம்பளத்திலிருந்து 60 சதவீதம் மற்றும் சக வீரர்களுக்கு 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. 

அடுத்த 12 மாதங்களில் அணி தாமதமாக பந்துவீசிய பிரச்னையில் மீண்டும் ஸ்மித் சிக்கினால், ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும். 

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் - ஆஸ்திரேலியா அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 408 ரன் குவித்தது. ஆஸ்திரேலியா பதிலடியாக முதல் இன்னிங்சில் 505 ரன் குவித்தது. 

97 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை விளையாடிய இந்தியா, நேற்றைய 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்து இருந்தது. தவான் 26 ரன்னுடனும், புஜாரா 15 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 

இன்று (சனிக்கிழமை) 4–வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. காயம் காரணமாக தவான் களம் இறங்கவில்லை. புஜாராவுடன் வீராட்கோலி இணைந்து ஆடினார். ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்திய விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. 117 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்தன. வீராட் கோலி (1), ரகானே (10), ரோகித்சர்மா (0) ஆகியோர் விக்கெட்டை ஜான்சன் கைப்பற்றினார். 

ஹாசில்வுட் பந்தில் கேப்டன் டோனியும் (0), ஸ்டார்க் பந்தில் அஸ்வினும் (19) ஆட்டம் இழந்தனர். காயம் காரணமாக தவான் 6–வது விக்கெட் விழுந்தபிறகு களம் வந்தார். பொறுப்புடன் விளையாடி வந்த புஜாரா 7–வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். அவர் 43 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 143 ஆக இருந்தது. 

தவான் தனி நபராக கடுமையாக போராடினார். 81 ரன்னில் அவரும் பெவிலியன் திரும்பினார். 145 பந்துகளில் 8 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். ஸ்கோர் 203 ஆக இருந்தது. இந்திய அணி 64.3 ஓவரில் 224 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 128 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடைசியாக உமேஷ்யாதவ் 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஜான்சன் 4 விக்கெட் கைப்பற்றினார். ஹாசில்வுட், ஸ்டார்க், லயன் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

இதையடுத்து 128 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா 2–வது இன்னிங்சை தொடங்கியது. வார்னரும், ரோஜர்சும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 6 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வாட்சன் ரன் ஏதும் எடுக்காமலும் விரைவில் விக்கெட்டை இழந்தனர். பொறுப்புடன் ஆடிய ரோஜர்ஸ் அரை சதம் கடந்து அணியின் வெற்றிக்கான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தார். அவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா கைப்பற்றினார். 

இதையடுத்து கேப்டன் ஸ்மித்துடன் இணைந்து ஆடிக்கொண்டிருந்த மார்ஷ் 17 ரன்கள் சேர்த்த நிலையில், யாதவிடம் விக்கெட்டை இழந்தார். ஆரோன் வீசிய நோபாலை தட்டிவிட்டு ரன் எடுக்க முயன்ற ஸ்மித் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவர் எடுத்த ரன்கள் 28. அடுத்த ஓவரில் ஹாடினை (1) வெளியேற்றினார் யாதவ். இந்த இன்னிங்சில் அபாரமாக பந்து வீசி 122 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அதன் பின்னர் 24-வது ஓவரில் மார்ஷ் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் - முரளி விஜய் சதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முரளி விஜய் சதம் அடித்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டி இன்று பிரிஸ்பேனில் துவங்கியது. 

காயத்திலிருந்து மீண்ட தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றார். இதனால் விக்கெட் கீப்பர் சகா நீக்கப்பட்டார். இந்திய அணியில் கரண் சர்மா, ஷமிக்குப்பதில் அஷ்வின், உமேஷ் இடம் பெற்றனர்.  ‘டாஸ்’ வென்ற இந்திய அணி ‘பேட்டிங’ தேர்வு செய்தது. 


முரளி விஜய் சதம்:

இந்திய அணிக்கு தவான் 24 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் தமிழக வீரர் முரளி விஜய் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹேசல்வுட் ‘வேகத்தில்’ புஜாரா (18), கோஹ்லி (19) ஆட்டமிழந்தனர். 

தொடர்ந்து அசத்திய முரளி விஜய் டெஸ்ட் அரங்கில் 5வது சதம் அடித்தார். தன் பங்கிற்கு ரகானே அரை சதம் அடித்தார். முரளி விஜய் 144 ரன்களில் வெளியேறினார். 

முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்தது. ரகானே (75), ரோகித் சர்மா (26) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஹேசல்வுட் 2 விக்கெட் வீழ்த்தினார். 

ஐ.பி.எல்., இந்திய வீரர்களுக்கு கல்தா

யுவராஜ் சிங் (பெங்களூரு), புஜாரா (பஞ்சாப்), தினேஷ் கார்த்தி (டில்லி), முரளி விஜய் (டில்லி) உள்ளிட்ட இந்திய வீரர்கள், ஐ.பி.எல்., அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 

இதனால் அடுத்தாண்டு நடக்கவுள்ள ஏலத்தின் மூலம் தேர்வாகி, மீண்டும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.      
      
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர் ஆண்டு தோரும் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான 8வது ஐ.பி.எல்., தொடர் வரும் ஏப்., 8ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை நடக்கவுள்ளது. 

இதற்கு முன், ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களை தக்கவைத்துக் கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்தது. வேறு அணிகளில் இருந்து வீரர்களை வாங்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. இதற்கான கடைசி நாளாக கடந்த டிச., 12ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது.        
    
இதன்படி, கடந்த சீசனில் அதிகபட்சமாக ரூ. 14 கோடிக்கு ஏலம் போன யுவராஜ் சிங்கை, பெங்களூரு அணி கழற்றிவிட்டது. இதனால் இவர், ஏலத்தில் பங்கேற்று மீண்டும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் வாய்ப்பு பெறலாம். 

கடந்த சீசனில் ராஜஸ்தானுக்காக விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் இக்பால் அப்துல்லாவை பெங்களூரு அணி வாங்கியது. விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலை விடுவித்த பெங்களூரு அணி, கோல்கட்டா அணிக்காக விக்கெட் கீ்ப்பராக செயல்பட்ட மன்விந்தர் பிஸ்லாவை வாங்கியது.           

பார்த்திவ் படேலை மும்பை அணி வாங்கியது. மும்பை அணியில் இருந்து மைக்கேல் ஹசி, பிரவீண் குமார், ஜாகிர் கான் கழற்றிவிடப்பட்டனர். 

அதேவேளையில் ராஜஸ்தானிடம் இருந்து உன்முக்த் சந்த், கோல்கட்டாவிடம் இருந்து வினய் குமாரை மும்பை அணி வாங்கியது. ஹர்பஜன் சிங்கை மும்பை அணி தக்கவைத்துக் கொண்டது.      

பஞ்சாப் அணிக்காக விளையாடிய புஜாரா, பாலாஜி, முரளி கார்த்திக் உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட்டனர். அதேவேளையின் சேவக்கை தக்கவைத்துக் கொண்டது.      

டில்லி அணியில் இடம் பெற்றிருந்த கெவின் பீட்டர்சன், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், லட்சுமி ரத்தன் சுக்லா விடுவிக்கப்பட்டனர். கேதர் ஜாதவ், மனோஜ் திவாரியை தக்கவைத்துக் கொண்டது. 

விராத் கோஹ்லி ரேங்கிங்கில் முன்னேற்றம்

ஐ.சி.சி., டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் (தரவரிசை) இந்தியாவின் விராத் கோஹ்லி 16வது இடத்துக்கு முன்னேறினார்.      
            
டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 27வது இடத்தில் இருந்து 16வது இடத்துக்கு முன்னேறினார். இவர், அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் (115, 141) அடித்தது முன்னேற்றத்துக்கு காரணம். 

கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய கோஹ்லி, 26வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்கு முன், 27வது இடம் பிடித்தார்.            

மற்றொரு இந்திய வீரர் புஜாரா, 17வது இடத்தில் இருந்து 18வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய அணிக்கு சிறந்த துவக்கம் கொடுத்த தமிழக வீரர் முரளி விஜய் (53, 99), 8 இடங்கள் முன்னேறி 28வது இடம் பிடித்தார்.          
  
வார்னர் முன்னேற்றம்: இரண்டு இன்னிங்சிலும் சதம் (145, 102) அடித்த ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர், முதன்முறையாக 4வது இடத்தை கைப்பற்றினார். 

இந்தியாவுக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் (162*, 52* ரன்), முதன்முறையாக 8வது இடத்துக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் 12வது இடம் பிடித்தார்.            

இஷாந்த் பின்னடைவு: பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் இஷாந்த் சர்மா 21வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ‘சுழலில்’ அசத்தி, ஆட்ட நாயகன் விருது வென்ற ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் 19வது இடத்தை கைப்பற்றினார். 

மிட்சல் ஜான்சன் (3வது இடம்), ரியான் ஹாரிஸ் (4வது) ‘டாப்–5’ வரிசையில் உள்ளனர். ‘டாப்–10’ பட்டியலில் ஒரு இந்திய பவுலர் கூட இடம் பெறவில்லை. அடிலெய்டு டெஸ்டில் விளையாடாத அஷ்வின் 13வது, பிரக்யான் ஓஜா 14வது இடங்களில் உள்ளனர்.

அடிலெய்டு டெஸ்ட் - இந்தியா தோல்வி - கோஹ்லி சதம் வீண்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய கேப்டன் விராத் கோஹ்லியின் சதம் வீணானது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. 

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 517/7 (டிக்ளேர்), இந்தியா 444 ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 290 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. 364 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (9) மீண்டும் ஏமாற்றினார். 

அடுத்து வந்த புஜாரா (21), நாதன் லியான் ‘சுழலில்’ சிக்கினார். பின் இணைந்த முரளி விஜய், கேப்டன் விராத் கோஹ்லி ஜோடி நிதானமாக விளையாடியது. அபாரமாக ஆடிய கேப்டன் கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் தனது 8வது சதத்தை பதிவு செய்தார். 

மூன்றாவது விக்கெட்டுக்கு 185 ரன்கள் சேர்த்த போது நாதன் லியான் சுழலில் முரளி விஜய் (99) சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். அடுத்து வந்த ரகானே ‘டக்–அவுட்’ ஆனார். 

அடுத்து வந்த ரோகித் சர்மா (6), விரிதிமன் சகா (13) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய கோஹ்லி 141 ரன்னில் ஆட்டமிழந்தார். ரியான் ஹாரிஸ் பந்தில் முகமது ஷமி (5) வெளியேறினார். 

ஜான்சன் ‘வேகத்தில்’ வருண் ஆரோன் (1) நடையைகட்டினார். லியான் பந்தில் இஷாந்த் ‘டக்–அவுட்’ ஆனார்.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 315 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’, 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

கரண் சர்மா (4) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லியான் 7, மிட்சல் ஜான்சன் 2, ஹாரிஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய டெயிலெண்டர்கள் ஏமாற்றம் - முன்னிலை பெற்றது ஆஸி

இந்திய அணியின் ‘டெயிலெண்டர்கள்’ ஏமாற்ற, முதல் இன்னிங்சில் 444 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி 73 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 517/7 ரன்னுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 369 ரன்கள் எடுத்து, 148 ரன்கள் பின்தங்கி இருந்தது.

ரோகித் சர்மா (33), சகா (1) அவுட்டாகாமல் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டதை சரிக்கட்டும் வகையில் அரைமணி நேரம் முன்னதாக, நான்காவது நாள் போட்டி துவங்கியது. 

முதல் 10 ஓவர்கள் தாக்குப்பிடித்த ரோகித், சகா ஜோடி நிதான ரன்குவிப்பை வெளிப்படுத்தியது. இந்நிலையில் லியான் சுழலில் தேவையில்லாமல் அடித்து ஆட முற்பட்ட ரோகித் சர்மா (43), விக்கெட் சரிவைத் துவக்கி வைத்தார்.

அடுத்து வந்த கரண் சர்மா (4) நிலைக்கவில்லை. சகா 25 ரன்னுடன் கிளம்பினார். வந்த வேகத்தில் இஷாந்த் சர்மா (0), லியான் சுழல் வலையில் சிக்கினார்.

கடைசி நேரத்தில் ஆவேச ரன்குவிப்பை வெளிப்படுத்தினார் முகமது ஷமி (34). இவரது அதிரடி கைகொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 444 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

வருண் ஆரோன் (3) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் லியான் 5 விக்கெட் சாய்த்தார்.


ஆஸி., முன்னிலை:

முதல் இன்னிங்சில் பெற்ற 73 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. உணவு இடைவேளையின் போது, ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்து, 105 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. வார்னர் (13), ரோஜர்ஸ் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.

புஜாரா, முரளிவிஜய் அர‌ைசதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்டில் இந்தியாவின் புஜாரா, முரளி விஜய் (53) அரைசதம் அடித்தனர்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட ‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. 

இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 517 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி ‘டிக்ளேர்’ செய்தது. ஸ்டீவன் ஸ்மித் (162), மிட்சல் ஜான்சன் (0) அவுட்டாகாமல் இருந்தனர். 


முரளி விஜய் அரைசதம்: 

இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடக்கிறது. முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணியின் ஷிகர் தவான் (25), ரியான் ஹாரிஸ் பந்தில் போல்டானார். பொறுப்பாக ஆடிய முரளி விஜய் அரைசதம் அடித்தார். 

இவர், 53 ரன்கள் எடுத்த போது மிட்சல் ஜான்சன் ‘வேகத்தில்’ அவுட்டானார். மறுமுனையில் அசத்திய புஜாரா, டெஸ்ட் அரங்கில் தனது 6வது அரைசதம் அடித்தார்.

உணவு இடைவேளைக்கு பின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து, 364 ரன்கள் பின்தங்கி இருந்தது. புஜாரா (52), விராத் கோஹ்லி (18) அவுட்டாகாமல் இருந்தனர். 

ஆஸ்திரேலியா சார்பில் மிட்சல் ஜான்சன், ஹாரிஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

மீண்டும் முதல் ஓவரிலேயே பவுன்சர் வீசிய அபாட்

மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்கிய சியான் அபாட், முதல் ஓவரிலேிய ‘பவுன்சர்’ வீசி அதிர்ச்சி அளித்தார்.

உள்ளூர் போட்டியில், நியூ சவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’ தாக்கியதில் காயமடைந்த, தெற்கு ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹியுஸ் சிகிச்சை பலனின்றி மரணடைந்தார். இந்த துயர சம்பவத்தால் அபாட், பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதிலிருந்து மெல்ல மீண்ட இவர், நேற்று சிட்னியில் துவங்கிய ‘ஷெப்பீல்டு ஷீல்டு’ போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் சார்பில் பங்கேற்றார். 

தனது முதல் ஓவரில் 5வது பந்தை பவுன்சராக வீசி, குயீன்ஸ்லாந்து வீரர்களை மிரட்டினார். இப்போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய அபாட் சகஜ நிலைமைக்கு திரும்பியதை உறுதி செய்தார்.


ஹியுசிற்கு கவுரவம்:

முன்பு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்துக்காக 707வது வீரராக களம் கண்டார் ஹியுஸ். இதனை உணர்த்தும்விதமாக நேற்று நியூ சவுத் வேல்ஸ் அணியினர் கையில் கருப்பு பட்டை மற்றும் ஜெர்சியில் ‘707’ என்ற நம்பருடன் விளையாடினர்.

இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 705

கடந்த 2004ல் சிட்னியில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 705 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.            
* கடந்த 1948ல் அடிலெய்டில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 674 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில், இந்தியாவுக்கு எதிராக தனது சிறந்த ஸ்கோரை பெற்றது.  
          
குறைந்தபட்சம்: பிரிஸ்பேனில், கடந்த 1947ல் நடந்த டெஸ்டில் இந்திய அணி 58 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது.          
  
* மெல்போர்னில், கடந்த 1981ல் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 83 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில், இந்தியாவுக்கு எதிராக குறைந்த இலக்கை பதிவு செய்தது.          

  
சச்சின் முன்னிலை: 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில், அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் முன்னிலை வகிக்கிறார். 

இவர், 39 டெஸ்டில் 11 சதம் உட்பட 3630 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (2555 ரன்கள்), இந்தியாவின் லட்சுமண் (2434), டிராவிட் (2143), ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் (1914) ஆகியோர் உள்ளனர்.      

      
கிளார்க் அசத்தல்: 

கடந்த 2012ல் சிட்னியில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், 329* ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்டில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 

இவரை அடுத்து இந்தியாவின் லட்சுமண் (281 ரன்கள், இடம்–கோல்கட்டா, 2001), பாண்டிங் (257 ரன், இடம்–மெல்போர்ன், 2003) உள்ளனர்.            


கும்ளே சுழல் ஜாலம்: 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்டில், அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் இந்தியாவின் அனில் கும்ளே முன்னிலை வகிக்கிறார். 

இவர், 20 டெஸ்டில் 111 விக்கெட் கைப்பற்றினார். இவரை அடுத்து இந்தியாவின் ஹர்பஜன் சிங் (95 விக்கெட்), கபில் தேவ் (79), ஜாகிர் கான் (61) உள்ளனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பிரட் லீ 53 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

இரண்டு மூன்று வருடங்கள் விளையாட விரும்புகிறேன் - சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக திகழ்ந்த சேவாக்கை சமீபகாலமாக இந்திய அணி புறக்கணித்து வருகிறது. தற்போது, உலகக்கோப்பை அணிக்கான உத்தேச அணியில் அவர் பெயர் இடம் பெறவில்லை. 

இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடியும் தருவாயில் உள்ளது என்று கூறப்பட்டது. ஆனால், நான் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் விளையாட விரும்புகின்றேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறேன். மீண்டும் இந்திய அணியில் இடம்கிடைக்காவிட்டாலும் நான் வருத்தம் அடையமாட்டேன். ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் கனவும் தனது தாய் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதுதான். நான் கிரிக்கெட்டில் தீவிரமாக இருக்கும்போது இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்று விரும்பினேன்.

என்னுடைய கனவு நினைவேறிய பிறகு, அடுத்து என்ன நடக்கும் என்று நான் நினைத்தபோது, இந்தியாவிற்காக விளையாடுவது எளிது. ஆனால், 10 முதல் 15 வருடம் நிலையாக விளையாடுவது கஷ்டம் என்று சக வீரர் ஒருவர் கூறினார். 

அப்போது 100 போட்டிகளில் விளையாட வேண்டும் என்று எனது கனவை மாற்றிக்கொண்டேன். அதையும் நான் நல்லமுறையில் எட்டிவிட்டேன். இனிமேல் அங்கு நான் சாதிக்க ஒன்றுமில்லை. கிரிக்கெட்டை ஒரு மகிழ்ச்சியாக நினைக்கிறேன்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையைில் சந்தோசமாக இருக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் தங்களது சாதனையை எட்டுவதற்காக கவலைப்படுவாரக்ள். 

அதாவது, டெஸ்ட் போட்டியில் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரன்கள் அடிக்க வேண்டும் என்ற கவலை அவர்களிடம் இருக்கும். ஆனால், எனக்கு அதிமாதிரி இல்லை. நான் 100 போட்டியில் விளையாடி விட்டேன். இன்னும் விளையாட வேணடும் என்று விரும்புகிறேன்.

நான் இன்றோ அல்லது இரண்டு வருடம் கழித்தோ ஓய்வு பெற்றால் அது எனது வாழக்கையில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தாது. நான் 10 ஆயிரம் ரன்கள் அடித்தேன் என்றால் யார் மகிழ்ச்சி அடைவாரக்ள். 

நான் மட்டுமே மகிழ்ச்சி அடைவோன். 10 ஆயிரம், 15 ஆயிரம் ரன்களை பற்றி ரசிகர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். அது என்னுடைய தனிப்பட்ட திருப்திதான்.

என்னுடைய ஆட்டத்தைப் பார்க்கும்போது, ரன் அடித்தால் விரைவாக ரன் அடிப்பேன். அவுட் ஆனாலும் உடனே அவுட் ஆகிவிடுவேன். என்னுடைய ஆட்டத்தை மாற்ற நான் முயற்சி செய்யவில்லை.

நீங்கள் விளையாடாவிட்டால் இந்திய அணி தோல்வியடைந்து விடும் என்று எனது மகன் என்னிடம் கூறியபோது, அவனை நான் கண்டித்துள்ளேன். இந்தியா வெற்றி பெறுவதுதான் முதல் நோக்கம். நான் வியைாடாதது ஒரு விஷயமே இல்லை. நான் வீரர்கள் அறையில் இல்லை. ஆனால், வேறு எதாவது ஒரு வீரர்கள் போட்டியில் வெற்றி பெறுவதற்கு தனது பங்களிப்பை அளிப்பார். அதற்கான நான் சந்தோஷமாக இருப்பேன்.

தற்போது ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள அணியில் நல்ல வீரர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு நாம் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். எனது முதல் பயம் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவாக இருந்தது. 

முதல் போட்டியில் சதம் அடித்த நான் அதன்பின் சரியாக விளையாடவில்லை. கடந்த காலங்களில் முன்னணி வீரர்களாக இருந்தவர்கள் முதல் 15 இன்னிங்சில் சொதப்பியவர்கள். பின்னர் சுதாகரித்துக்கொண்டு 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர கூறினார்.

முதல் டெஸ்டில் களமிறங்குவாரா தோனி?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்டில், தோனி  பங்கேற்க வாய்ப்புள்ளது,’’ என, ஷிகர் தவான் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 9ம் தேதி அடிலெய்டில் துவங்குகிறது.

கைவிரல் காயத்தில் இருந்து மீண்ட தோனி, தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார். இருப்பினும்,  இவர் முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகமாகவே உள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் கூறியது:

தோனி, கோஹ்லி இருவரும் களத்தில் தீவிரமாக செயல்படக் கூடியவர்கள் தான். இவர்கள்  தலைமையில் விளையாடுவது நன்றாக இருக்கும். அதேநேரம், தோனி தற்போது களமிறங்கும்  நிலையில், டெஸ்ட் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்க, கோஹ்லி இன்னும் சற்று காலம் காத்திருக்க  வேண்டும்.

வரும் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் ஜான்சன், பெரும் சவாலாக இருப்பார். உலகின்  சிறந்த பவுலர்களில் ஒருவரான இவர், சரியாக வேகத்தில் துல்லியமாக வீசுவார்.

இருப்பினும், இந்திய மண்ணில் ஐ.பி.எல்., மற்றும் பல்வேறு சர்வதேச தொடரில் ஜான்சன் பவுலிங்கை  எதிர்கொண்டுள்ளேன். இப்போது தான் முதன் முறையாக இங்கு சந்திக்கவுள்ளேன். இதில் சிறப்பாக  விளையாட முடியும் என்று நம்புகிறேன்.

தவிர, துவக்க வீரராக இருப்பவர், போராட்ட குணத்தை அதிகமாக வெளிப்படுத்த வேண்டும். இது  ஆஸ்திரேலிய மண்ணில் மட்டுமல்ல, பொதுவாக கிரிக்கெட்டில் அப்படித் தான் இருக்க வேண்டும்.  ஏனெனில், இது ஒட்டுமொத்த அணிக்கும் நன்மையாக அமையும்.

ஆஸ்திரேலிய உலகின் சிறந்த டெஸ்ட் அணி. இவர்களுக்கு எதிராக அதிக ரன்கள் எடுப்பது  எப்போதும் மகிழ்ச்சி தான். இதனால், வரும் டெஸ்ட் தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகி  உள்ளோம்.

எனது பேட்டிங் சொதப்பல்களில் இருந்து நிறைய கற்றுள்ளேன். இது தான் என்னை சிறந்த வீரராக  மாற்றியுள்ளது. தொடர்ந்து எனது பேட்டிங் ‘ஸ்டைலில்’ மாற்றம் செய்துள்ளேன்.

இந்திய ‘ஏ’ அணிக்காகவும், வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான தொடருக்காகவும் என, பல  முறை இங்கு வந்துள்ளேன். இந்திய அணிக்காக விளையாடவுள்ளது இது தான் முதன் முறை.

இவ்வாறு ஷிகர் தவான் கூறினார்.

பயிற்சியில் சேவக், காம்பிர்

உலக கோப்பை தொடருக்கான உத்தேச அணியில் இடம்பெறாத சோகத்தை சேவக், காம்பிர் வெளிகாட்டவில்லை. ரஞ்சி கோப்பை டிராபி தொடரில் சாதிக்க தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

வரும் 2015ல் (பிப்., 14 – மார்ச் 29) 11வது உலக கோப்பை தொடர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் நடக்கவுள்ளது. இதற்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டது. 

இதில் ‘சீனியர்’ வீரர்களான சேவக், காம்பிர், யுவராஜ் உள்ளிட்ட 5 நபர்கள் இடம்பெறவில்லை. இதனை கண்டுகொள்ளாத இவர்கள் வழக்கம் போல பயிற்சியில் ஈடுபட்டனர்.

சவுராஷ்டிரா அணிக்கு எதிராக நாளை துவங்கவுள்ள ரஞ்சி டிராபி தொடரில் டில்லி அணி சார்பில் சாதிக்க ரோஸ்னாரா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். 

சக வீரர்கள் அனைவரும் வழக்கமான வெள்ளை நிறத்திலான உடையணிந்து வலைபயிற்சியில் பங்கேற்றனர். ஆனால், இந்த இருவர் மட்டும் வண்ண ஆடையில் இருந்தனர். 

தவிர, ‘பீல்டிங்கிற்கான’ பயிற்சியிலும் சேவக் ஈடுபட்டார். துவக்க வீரரான இவர், எதிர் வரும் போட்டிகளில் ‘மிடில்–ஆர்டரில்’ களமிறங்க வாய்ப்பு அதிகம்.

கேப்டன் காம்பிர் கூறுகையில்,‘‘ ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடும்போது, சிறப்பான ‘டிரசிங் ரூம்’ முக்கியம். அணியின் வெற்றிக்கும் இது வழிவகுக்கும். 

உலக கோப்பை உத்தேச அணி குறித்து காம்பிர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

சேவக், காம்பிர், யுவராஜ் இனி அவ்ளோதானா?

உலக கோப்பை தொடருக்கான உத்தேச அணியில் சேவக், காம்பிர், யுவராஜ் சிங் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெறாதது, இவர்களது கிரிக்கெட் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

கடந்த 2011 உலக கோப்பை தொடர் துவக்க போட்டியில், சேவக் 175 ரன்கள் (எதிர்–வங்கதேசம்) எடுத்தார். யுவராஜ் தொடர் நாயகன் (362 ரன், 15 விக்.,) ஆனார். ஜாகிர் கான் 21 விக்கெட் வீழ்த்தினார். இலங்கைக்கு எதிரான பைனலில் காம்பிர் 97 ரன்கள் எடுத்தார்.

தற்போது இதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஏனெனில், கடந்த இரு ஆண்டுகளாக காம்பிர், சேவக்கின் உள்ளூர் சராசரி 20 ரன்கள் தான். ஒவ்வொரு 6 போட்டிக்கும் ஒரு முறை தான் அரை சதம் கூட அடிக்கின்றனர்.

விஜய் ஹசாரே தொடரில், யுவராஜ் (5 போட்டி, 168 ரன்) சொதப்பினார். 6 போட்டியில் ஹர்பஜன் சிங் 7 விக்கெட் தான் வீழ்த்தினார். ஜாகிர் கானை பொறுத்தவரையில் கடந்த மே மாதத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடவே இல்லை.


வாய்ப்பு குறைவு:

இருப்பினும், உத்தேச அணியில் இருந்து, 2015, ஜன., 7ம் தேதிக்குள் 15 பேர் தேர்வு செய்யப்படுவர். இதில் சேவக் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெறலாம் என்றாலும், அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு தான்.


காரணம் என்ன:

ஏனெனில், சேவக், 36, காம்பிர், 33, இருவரும் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று ஒரு ஆண்டு ஆகிறது. ஜாகிர் கான், 36, கடந்த 27 மாதங்களாக அணியில் இல்லை. 

ஹர்பஜன் சிங், 34, இந்திய ஒரு நாள் அணியில் விளையாடி 3 ஆண்டுகள் ஆகிறது. இதனால், இந்த வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

ஹியுஸ் இறுதிச் சடங்கில் கோஹ்லி பங்கேற்பு

மறைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுசின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் கேப்டன் விராத் கோஹ்லி, இயக்குனர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.      

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு முன், இந்திய அணி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) லெவன் அணியுடன் இரண்டு பயிற்சி போட்டிகளில் (இரண்டு நாள்) பங்கேற்க இருந்தது. முதல் பயிற்சி போட்டி ‘டிரா’வில் முடிந்தது.                 
                   
உள்ளூர் போட்டியில் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனால் இரண்டாவது பயிற்சி போட்டி ரத்து செய்யப்பட்டது. 

தவிர வரும் டிச., 4ல் பிரிஸ்பேனில் துவங்க இருந்த முதல் டெஸ்ட் போட்டியும் தேதி குறுப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.      

இந்நிலையில் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த மூன்று நாட்களாக அடிலெய்டில் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஹியுஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். 

தவிர நேற்று முன்தினம் கோஹ்லி, தனது பேட் மற்றும் தொப்பியை அடிலெய்டு ஓவல் மைதானத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த ஹியுசுக்கு அஞ்சலி செலுத்தும் இடத்தில் வைத்தார். இன்று இந்திய வீரர்கள் அனைவரும் பயணத்திட்டத்தின் படி பிரிஸ்பேன் செல்கின்றனர்.     

ஹியுசின் இறுதிச் சடங்கு வரும் டிச., 3ல் அவரது சொந்த ஊரான மேக்ஸ்விலியில் நடக்கவுள்ளது. இதில், இந்தியா சார்பில் கேப்டன் விராத் கோஹ்லி, இயக்குனர் ரவி சாஸ்திரி, பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், இந்திய அணியின் மானேஜர் அர்ஷாத் அயுப் பங்கேற்க உள்ளனர். 

இவர்களுடன் மூன்று அல்லது நான்கு இந்திய வீரர்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதி முடிவு, பிரிஸ்பேனில் இன்று முடிவு செய்யப்படும்.