இக்கட்டான நிலைமையில் கிரிக்கெட் வாரியம்

ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) விசாரணை குழு சட்ட விரோதமானது என்று மும்பை ஐகோர்ட்டு நேற்று அதிரடியாக அறிவித்தது. புதிய குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட்டது. 

இது பி.சி.சி.ஐ.க்கு பின்னடைவை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவர் டால்மியாவிடம் இதுகுறித்து கேட்டபோது, எனக்கு இன்னும் முழுமையான விவரம் கிடைக்கவில்லை. இதனால் அதுபற்றி கூற இயலாது. ஆனால் கிரிக்கெட் வாரியம் தற்போது இக்கட்டான நிலைமையில் இருக்கிறது என்றார்.

ஒருநாள் போட்டியில் புதிய விதிமுறையால் ரன் குவிப்பது கடினம்ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் சதம் (116 ரன்) அடித்து முத்திரை பதித்தார். இந்த ஆண்டில் அவர் 3 சதம் அடித்து முன்னிலையில் உள்ளார். 

இதேபோல ஒருநாள் போட்டி ரன் குவிப்பிலும் (637 ரன்) அவர் முதலிடத்தில் உள்ளார். 

இந்த நிலையில் புதிய விதிமுறைகளால் ஒருநாள் போட்டியில் ரன்களை குவிப்பது கடினம் என்று தவான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

ஒருநாள் போட்டியின் புதிய விதிமுறை காரணமாக இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. 

அதாவது முதல் ஓவரில் ஒரு புதிய பந்து பயன்படுத்தப்பட்டால் அடுத்த ஓவரில் மற்றொரு பந்து பயன் படுத்தப்படுகிறது. இதனால் பந்து அதிக அளவில் `ஸ்விங்' ஆகின்றன. 

தற்போதுள்ள நிலையில் முதல் 10 ஓவரில் தொடக்க வீரர்களால் மிகப்பெரிய அளவில் ரன் எடுக்க முடிய வில்லை. 

மிகவும் கவனமாக விளையாட வேண்டி உள்ளது. தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்துவிடாமல் இருப்பதற்கு எந்த வகையான ஷாட் அடிப்பது என்பது முக்கியமானது. 

சாம்பியன் டிராபி, வெஸ்ட்இண்டீசில் நடந்த 3 நாடுகள் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றதோடு அணி வீரர்களின் ஒற்றுமையே காரணம். இளம் வீரர்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர். 

பீல்டிங்கிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து விஷயங்களில் சரியான பாதையில் இருப்பதாக உணர்கிறேன்.

இந்திய கிரிக்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலம்இந்திய கிரிக்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது,'' என, முன்னாள் வீரர் சந்து போர்டே தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சந்து போர்டே, 79. இதுவரை 55 டெஸ்ட் (3061 ரன், 52 விக்.,) போட்டியில் விளையாடினார். இந்திய கிரிக்கெட் குறித்து சந்து போர்டே கூறியது: 

இந்தியாவில் திறமையான இளம் வீரர்கள் நிறைய இருப்பதால், வரும் காலத்தில், இரண்டு தேசிய அணிகளை தேர்வு செய்யலாம். தற்போதுள்ள நிலையில், இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையான போட்டி நிலவுகிறது. இது ஆரோக்கியமான ஒன்று. இந்திய கிரிக்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.

தற்போதுள்ள வீரர்கள், தங்களது திறமையை வெளிப்படுத்தி நிறைய வாய்ப்புகள் உள்ளன. ரஞ்சி கோப்பை தொடரை லீக் சுற்று அடிப்படையில் நடத்துவதன் மூலம், அதிக போட்டிகளில் விளையாட முடிகிறது. எங்களது காலத்தில், ரஞ்சி போட்டிகள் "நாக்-அவுட்' சுற்று அடிப்படையில் நடத்துவதால், வீரர்கள் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும்.

தவிர, தற்போது இந்தியாவில் கிரிக்கெட் பயிற்சிக்காக நிறைய அகாடமிகள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னாள் வீரர்களால் நடத்தப்படும் இந்த பயிற்சி அகாடமிகள் மூலம், நிறைய திறமையான இளம் வீரர்கள் உருவாகின்றனர். எங்களது காலத்தில், பயிற்சிக்காக யாரும் நியமிக்கப்படவில்லை.

இவ்வாறு சந்து போர்டே கூறினார்.

இவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, மற்றொரு இந்திய வீரர் சேட்டன் சவுகான், 66, கூறியது: இந்தியாவில் நடத்தப்படும் பிரிமியர் கிரிக்கெட் தொடர் மூலம், வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த முடிகிறது. 

தவிர, பீல்டிங்கின் போது "டைவ்' அடித்து பந்தை பிடிக்க வீரர்கள் யாரும் தயங்குவதில்லை. எங்களது காலத்தில் இந்திய அணியில் டில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சென்னை மற்றும் கோல்கட்டாவை சேர்ந்த வீரர்கள் மட்டுமே இடம் பிடிப்பார்கள். ஆனால் தற்போது சிறிய நகரங்களில் இருந்து நிறைய வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடுகின்றனர்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மட்டுமல்லாமல், அனைத்து விளையாட்டு அமைப்புகளும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், கொண்டு வர வேண்டும். இதன்மூலம் அனைத்து விளையாட்டு அமைப்புகளுக்கும் பொது நிதி கிடைக்கும். இது, எனது தனிப்பட்ட கருத்து.

இவ்வாறு சேட்டன் சவுகான் கூறினார்.

அதிவேகமாக 15 சதங்கள் எடுத்த வீரர்

ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 115 ரன்கள் குவித்த இந்திய தற்காலிக கேப்டன் விராட் கோலிக்கு இது 15-வது சதமாகும்.

இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 15 சதங்களை எடுத்த வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அவர் தனது 15-வது சதத்தை 106-வது ஆட்டத்தில் பெற்றிருக்கிறார்.

இதற்கு முன்பு பாகிஸ்தானின் சயீத் அன்வர் தனது 143-வது போட்டியில் 15-வது சதம் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. சவுரவ் கங்குலி 144-வது ஆட்டத்திலும், கிறிஸ் கெய்ல் 147-வது ஆட்டத்திலும் இந்த இலக்கை எட்டினார்கள்.

இந்திய சாதனை சிகரம் சச்சின் தெண்டுல்கர் 15-வது சதத்தை தனது 182-வது ஆட்டத்தில் தான் தொட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி இருப்பதால் பொறாமைசென்னை அணியில் தோனி இருப்பதால்தான், அணியை பார்த்து பொறாமைப்படுகின்றனர்,'' என, பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவர் சீனிவாசன் தெரிவித்தார்.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா ஆகியோர் சூதாட்ட புகாரில் சிறை சென்றனர். 

தவிர, இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் (பி.சி.சி.ஐ.,) சீனிவாசன் மருமகன் மெய்யப்பன் மீதும் சூதாட்ட புகார் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, பி.சி.சி.ஐ., பதவியிலிருந்து சீனிவாசன் பதவி விலகினார். இதனால், டால்மியா தற்காலிக தலைவரானார். 

இது குறித்து சீனிவாசன் கூறியது: சென்னை அணியில் தோனி இருப்பதால்தான், அணி மீது மற்றவர்கள் பொறாமைப்படுகின்றனர். இதனால்தான், என்னை குறை சொல்கின்றனர். 

தவிர, தோனியை பொறுத்தவரை ஆடுகளத்தில் எந்தவிதமான கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். எளிய தோற்றத்தில் உள்ள இவர், திறமைமிக்க வீரர் ஆவார். 

இந்திய அணி கேப்டன்களில், தோனிக்கு நிகரானவர் யாரும் இல்லை என முன்னாள் இந்திய பயற்சியாளர் கிறிஸ்டன் பாராட்டினார். இவ்வாறு சீனிவாசன் கூறினார்.

தவான் அசத்தல் சதம் : இந்திய அணி வெற்றிஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தவான் சதம், உனத்கத் பந்துவீச்சு கைகொடுக்க இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இருஅணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடந்தது. 

இதில் "டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் பிரண்டன் டெய்லர், முதலில் "பீல்டிங்' தேர்வு செய்தார்.  ஜிம்பாப்வே அணியில் முடாம்போட்சிக்கு பதில் பிரையன் விட்டோரி இடம் பிடித்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

இந்திய அணிக்கு  துவக்க வீரர் ரேகித் சர்மா (1) ஏமாற்றினார். பின் வந்த கேப்டன் கேஹ்லி (14) சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டானார். ராயுடு (5), ரெய்னா (4) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை.  

பின் இணைந்த தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.  இரண்டு முறை தப்பிய ஷிகர் தவான் ஒருநாள் அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இவருக்கு கம்பெனி கொடுத்த கார்த்திக்  அரைசதம் கடந்தார். 

ஐந்தாவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்த போது, தினேஷ் கார்த்திக் (69) ரன்-அவுட் ஆனார். அபாரமாக ஆடிய ஷிகர் தவான் (116) நம்பிக்கை தந்தார். அடுத்து வந்த அமித் மிஸ்ரா (9), ரவிந்திர ஜடேஜா (15) ஏமாற்றினர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய வினய் குமார் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்தது. வினய் குமார் (27), முகமது ஷமி (6) அவுட்டாகாமல் இருந்தனர். ஜிம்பாப்வே சார்பில் பிரையன் விடோரி 2 விக்கெட் வீழ்த்தினார்.

  கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு ஜிம்பாப்வே அணிக்கு சிபாண்டா, சிக்கந்தர் ராஜா ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. உனத்கத் பந்தில் சிக்கந்தர் ராஜா (20) வெளியேறினார். பொறுப்பாக ஆடிய சிபாண்டா அரைசதம் அடித்தார். இவர், 55 ரன்களில் அவுட்டானார். 

அடுத்து வந்த கேப்டன் பிரண்டன் டெய்லர் (0) "ரன்-அவுட்' ஆனார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஹாமில்டன் மசகட்சா (34) பெரிய அளவில் சோபிக்கவில்லை. "மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய வில்லியம்ஸ் (5), வாலர் (2) சொற்ப ரன்னில் வெளியேறினர். 

சிகும்பரா (46) ஆறுதல் அளித்தார். ஜார்விஸ் (2), விடோரி (0) உனத்கத்திடம் சிக்கினர். முடிவில், ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்து, தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் உனத்கத் 4, அமித் மிஸ்ரா 2 விக்கெட் வீழ்த்தினர். 

ஆஸ்திரேலிய அணி இன்னும் 2 ஆண்டுக்கு திணறும்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 2 டெஸ்டிலும் தோற்றதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 

ஆஸ்திரேலிய அணியின் நிலைமை அடுத்த 2 ஆண்டுக்கு இது மாதிரியே இருக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

இங்கிலாந்தின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மேலும் 2 ஆண்டுக்கு ஆஸ்திரேலியா இது மாதிரியே திணறும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளே இதற்கு காரணம். 

1980-ம் ஆண்டு இருந்த ஆஸ்திரேலிய அணி போல தற்போதைய அணி இருக்கிறது.

ஜிம்பாப்வேயை பந்தாடியது இந்தியாவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. 

முதல் ஒருநாள் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிபந்தா, சிக்கந்தர் ரஷா சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர். 

34 ரன்கள் எடுத்த சிபந்தா, மிஸ்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வில்லியம்ஸ் 15 ரன்கள் எடுத்த நிலையில் ரெய்னா பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார்.

அதன்பின் மஜகட்சா 11 ரன்களுக்கும், கேப்டன் டெய்லர் 12 ரன்களுக்கும், வாலர் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய சிக்கந்தர் ரஷா அரை சதத்தை கடந்தார். அதன்பின் இவருடன் ஜோடி சேர்ந்த சிகும்பரா அதிரடி காட்டினார். 

அவர் இந்திய வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். சிறப்பாக விளையாடிய சிக்கந்தர் ரஷா 82 ரன்கள் எடுத்த நிலையில் மிஸ்ரா பந்தில் போல்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய முடோம்போட்சி 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

உத்சையா 8 ரன்களுடனும், சிகும்பரா 42 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிகும்பராவின் அதிரடியில் 6 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். இந்திய அணி தரப்பில் மிஸ்ரா 3 விக்கெட்டுகளும், வினய்குமார், முகம்மது ஷமி, உனாத்கட், ரெய்னா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் அதிக நேரம் நிலைக்கவில்லை. தவான் 17 ரன்களிலும், ரோகித் சர்மா 20 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இதையடுத்து கேப்டன் கோலியுடன், ராயுடு இணைய ஆட்டம் சூடுபிடித்தது. இருவரும் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

பந்துகளை பவுண்டரிகளாக விரட்டிய கோலி, சதம் விளாசினார். மறுமுனையில் ராயுடு அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஆடிய கோலி 115 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அப்போது அணியின் ஸ்கோர் 216. கோலியைத் தொடர்ந்து வந்த ரெய்னா, ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதன்பின்னர் ராயுடுவும், தினேஷ் கார்த்திக்கும் இணைந்து அடுத்த சில நிமிடங்களில் வெற்றியை எட்டினர். ராயுடு 63 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

31 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது போட்டி 26-ம் தேதி இதே மைதானத்தில் நடக்கிறது.

நாளை இந்தியா ஜிம்பாப்வே முதல் மோதல்ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, ஜிம்பாப்வே சென்றடைந்தது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி நாளை ஹராரேயில் நடக்கிறது.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி, வெஸ்ட் இண்டீசில் முத்தரப்பு ஒருநாள் கோப்பை வென்றது இந்திய அணி. 

அடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்க இளம் இந்திய அணி நேற்று ஜிம்பாப்வே சென்றது.

இந்த அணியில் கேப்டன் தோனி, அஷ்வின், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் உள்ளிட்ட பல வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. விராத் கோஹ்லி கேப்டனாக உள்ளார். 

இரு அணிகள் மோதும் முதல் போட்டி, நாளை ஹராரேயில் நடக்கவுள்ளது. இங்குள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவர் எனத் தெரிகிறது. 

கடந்த 2010ல் முத்தரப்பு தொடரில் இங்கு விளையாடிய ரெய்னா தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வேயிடம் தொடர்ந்து 2 போட்டிகளில் தோற்று, பைனலுக்கு கூட முன்னேறவில்லை. 

இம்முறையும் பல முன்னணி வீரர்கள் இல்லாமல் உள்ளது பலவீனமாகப் படுகிறது. இருப்பினும், காஷ்மீரில் இருந்து முதன் முதலாக இந்திய அணியில் இடம் பெற்ற பர்வேஸ் ரசூல் உள்ளிட்ட வீரர்கள், தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறுகையில்,""ஒருநாள், "டுவென்டி-20' போட்டிகளில் அனுபவம் ஒரு பொருட்டே அல்ல. அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவர் என நம்புகிறேன்,'' என்றார். 

கோப்பை வெல்வாரா கோஹ்லி? ஜிம்பாப்வே புறப்பட்டது இந்தியாஒருநாள் தொடரில் பங்கேற்கும் விராத் கோஹ்லி தலைமையிலான இளம் இந்திய அணி நேற்று ஜிம்பாப்வே புறப்பட்டது. 

சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி, முத்தரப்பு தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. அடுத்து, ஜிம்பாப்வேக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. 

இதற்காக, கோஹ்லி தலைமையிலான அணியினர் நேற்று, மும்பையில் இருந்து ஜிம்பாப்வே புறப்பட்டுச் சென்றனர். தோனி, அஷ்வின், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர், உமேஷ் யாதவ் உள்ளிட்ட "சீனியர்' வீரர்களுக்கு இம்முறை ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் அரங்கில் "கத்துக்குட்டியான' ஜிம்பாப்வே அணி, அவ்வப்போது எதிரணிகளுக்கு "ஷாக்' கொடுக்கும். உதாரணமாக 1983ல் நடந்த உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அடுத்து நடந்த போட்டியில் இந்திய அணியை தனது மிரட்டல் பந்துவீச்சால் திணறடித்தது. ஒருகட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்து தவித்தது. பின் கபில்தேவ் 175 ரன்கள் விளாசி, அணியை மீட்டார். 

தொடர்ந்து 1999ல் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணி, இந்தியாவை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2002ல் பரிதாபாத்தில் நடந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த 275 ரன்களை விரட்டிய ஜிம்பாப்வே அணி, 8 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின் டக்கி மரிலியர், தைபு சேர்ந்து அதிசயம் நிகழ்த்தினர். 24 பந்துகளில் 56 ரன்கள் விளாசிய மரிலியர், ஜிம்பாப்வே அணிக்கு இந்திய மண்ணில் முதல் வெற்றி தேடித்தந்தார்.

சமீப காலமாக பார்த்தால், ஜிம்பாப்வே அணி சொதப்புகிறது. டெஸ்ட் அந்தஸ்தை கூட சில ஆண்டுகளுக்கு(2005-11) இழந்தது. ஆனாலும், தற்போதைய இந்திய அணி அனுபவம் இல்லாதது. இதனை பயன்படுத்திக் கொண்டு எழுச்சி பெற வாய்ப்பு உள்ளது. எனவே, கோஹ்லி துடிப்பாக வியூகம் அமைத்து இந்திய அணிக்கு கோப்பை பெற்றுத்தர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அணி விவரம்: கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், புஜாரா, ரெய்னா, அம்பதி ராயுடு, ரகானே, ரவிந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், முகமது ஷமி, வினய் குமார், உனத்கத், மோகித் சர்மா. 

ரவிந்திர ஜடேஜா விலை மதிப்புமிக்க வீரர் - கபில்தேவ்

இந்திய கிரிக் கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

இந்திய அணியில் தற்போது விலை மதிப்பு மிக்க வீரராக ரவிந்திர ஜடேஜா இருக்கிறார். அவரது வருகைக்கு பிறகு அணியில் மிகுந்த வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்தாக ஜடேஜா உள்ளார்.

தனது பேட்டிங், பவுலிங் மற்றும் துல்லியமான பீல்டிங்கினால் அவர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக தனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் ஆல்ரவுண்டராக திகழ்கிறார். தனது திறமையின் மூலம் அவர் அணிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.

ஷேவாக், யுவராஜ்சிங், காம்பீர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களே கொண்ட இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது அடுத்த தலைமுறைக்கான வீரர்கள் அணிக்கு வந்து இருக்கிறார்கள். இந்த அணி 2015–ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாட இருக்கிறது.

1983–ம் ஆண்டு நான் வென்ற உலக கோப்பையை விட 2011–ம் ஆண்டு டோனி பெற்ற உலக கோப்பைக்கான சவாலானது. அடுத்த தலைமுறை வீரர்களுக்கு உலக கோப்பையை வெல்ல இதைவிட கடுமையாகவும், சவாலாகவும் இருக்கும்.

கேப்டன் பதவியில் டோனி சிறப்பாக செயல்படுவது பற்றி எல்லோருக்கும் தெரியும். நான் சொல்ல தேவையில்லை. இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் ஆவார்.

நாங்கள் அவரை மதிக்கிறோம். அவரை பற்றி எந்த சந்தேகமும் இல்லை. தற்போதைய நிலையில் அவர் தான் சிறந்த கேப்டன்.

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

இந்திய அணி கேப்டன் தோனிக்கு ஓய்வு தேவையா?தோனிக்கு சற்று ஓய்வு தரப்பட்ட நிலையில், ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி வெற்றி பெறுமா என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2007ல் தோனி தலைமையில் இந்திய அணி "டுவென்டி-20' உலக கோப்பை வென்றது. அடுத்து ஒருநாள், 2008ல் டெஸ்ட் அணி என, மூன்றுவித அணிக்கும் கேப்டன் ஆனார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும்பாலான போட்டிகளில், இவர் தான் கேப்டன். முக்கியத்துவம் இல்லாத தொடர்களில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தோனிக்கு ஓய்வு கொடுத்து விடுகிறது.


முதல் தோல்வி:

கடந்த 2010ல் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்க, தோனி இல்லாமல் முதன் முறையாக ஜிம்பாப்வே சென்றது இந்திய அணி. இதில் ரெய்னா தலைமையிலான அணி, இரு போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோற்க, பைனலுக்கு முன்னேற முடியவில்லை. 

பின், 2011 உலக கோப்பை தொடர் முடிந்த பின் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணிக்கு, ரெய்னா மீண்டும் கேப்டன் ஆனார். இதில் 3-2 என, இந்தியா கோப்பை வென்றது. 

அடுத்து சொந்தமண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் போது, சேவக் இடம் பெறவில்லை. இம்முறை காம்பிரிடம் கேப்டன் பொறுப்பு சென்றது. இதில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 5-0 என, தொடரை முழுமையாக வென்றது. 


மீண்டும் வெற்றி:

இதையடுத்து, 2011 நவம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியா வந்தது. இம்முறையும் கேப்டன் தோனிக்கு ஓய்வு தரப்பட்டது. இதனால், சேவக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில், இந்திய அணி 4-1 என, வென்றது. 


ஐந்தாவது முறை:

கடந்த 2008ல் மூன்று வித அணிக்கும் தோனி கேப்டனான பின், இப்போது, ஐந்தாவது முறையாக இவர் இல்லாமல், இந்திய அணி ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இம்முறை ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு, கேப்டனாக விராத் கோஹ்லி நியமிக்கப்பட்டார். 

இதில் அஷ்வின், இஷாந்த் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை. இருப்பினும், 2010 போல அல்லாமல் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது.


தோனி ஓய்வு சரியா:

இதனிடையே, முக்கியத்துவம் இல்லாத தொடர்களில் தோனி ஓய்வு எடுப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா, சென்னை அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர் என்ற கூடுதல் பொறுப்பு உள்ள நிலையில், அடுத்து வரும் தொடருக்கு புத்துணர்ச்சியுடன் தயாராக இந்த ஓய்வு தேவை தான் என்கின்றனர் மற்றொரு தரப்பினர்.

ஏனெனில், இந்திய அணி வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏழு ஒருநாள், ஒரு "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அடுத்து தென் ஆப்ரிக்காவில் இரண்டு "டுவென்டி-20', ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், பின்பு நியூசிலாந்து பயணம், அடுத்து "டுவென்டி-20' உலக கோப்பை, ஏழாவது பிரிமியர் தொடர் முடிந்து மீண்டும் இங்கிலாந்து பயணம் என்று பட்டியல் நீளுகிறது. 

இப்போது சொல்லுங்கள் தோனிக்கு இந்த ஓய்வு தேவையா, இல்லையா என்று.

ரோகித் ஷர்மா, புஜாராவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கைஇந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் ஷர்மா, புஜாரா இருவரும் சமீபத்தில் ஊடகத்துக்கு (மீடியா) பேட்டி அளித்தனர். முத்தரப்பு தொடரில் தொடக்க ஆட்டக்காரராக ஆடிய அனுபவத்தை ரோகித் ஷர்மா பகிர்ந்து கொண்டார். 

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது குறித்து புஜாரா மனம் திறந்தார். 

ஆனால், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தை மீறி இருவரும் பேட்டி அளித்துள்ளதாக கூறிய இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், 

‘தொடர் முடிந்ததும் உடனடியாக மீடியாக்களிடம் பேசக்கூடாது என்று அவர்கள் இருவரும் எச்சரிக்கப்பட்டனர். கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த விதிமுறைகள் அவர்களுக்கு சுட்டிக்காட்டி, அதற்குட்பட்டு நடக்கும்படி கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் அறிவுறுத்தினார்’ என்றார். 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் மொத்தம் 39 வீரர்கள் இடம் வகிக்கிறார்கள். இவர்கள், குறிப்பிட்ட ஒரு தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பும், அந்த தொடர் முடிந்து ஒரு மாதத்திற்கு பின்பும் எந்த காரணத்தை கொண்டும் மீடியாக்களிடம் பேசக் கூடாது என்று ஒப்பந்த விதியில் கூறப்பட்டுள்ளது. 

மீடியாக்களிடம் பேச தடை விதிக்கும், கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று இந்திய முன்னாள் வீரர்கள் கீர்த்தி ஆசாத், சந்து போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புள்ளி விவரங்கள் சச்சினுக்கு சாதகம் - பாண்டிங் புலம்பல்அணியின் வெற்றிக்கு சச்சினை விட, லாராதான் அதிகம் கைகொடுத்தார் என்ற பாண்டிங்கின் கருத்து தவறானது. இதனை, புள்ளி விவரங்கள் தெளிவாக நிரூபிக்கின்றன. 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஆஸ்திரேலியாவின் ஓய்வு பெற்ற பாண்டிங் இடையே, எப்போதும் போட்டி இருந்து கொண்டே இருக்கும். 

டெஸ்டில் சச்சினின் அதிக சத (51) சாதனையை துரத்தியவர். ஒரு கட்டத்தில் சச்சின் தொடர்ந்து விளாச, பாண்டிங்கினால் இவரை எட்ட முடியவில்லை. பாண்டிங் ஓய்வு பெற்றுவிட, சச்சின் சதத்தில் "சதம்' கடந்து, இன்னும் கிரிக்கெட்டில் நீடிக்கிறார். 

இப்போது திடீரென, அணியின் வெற்றிக்கு கைகொடுப்பதில் சச்சினை விட லாரா சிறந்தவர் என்கிறார். புள்ளிவிவரங்கள் இதை மறுக்கின்றன. 

சச்சின் அடித்த 51 டெஸ்ட் சதத்தில், 20 வெற்றி (39.01 சதவீதம்), 11 தோல்வி கிடைத்தது. ஆனால், லாரா அடித்த 34 சதத்தில் 8ல் தான் (23.52) வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 14 ல் அவரது அணி தோல்வியடைந்தது. 

வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில், சச்சின் 5வது இடத்தில் வருகிறார். அதேநேரம், தோல்வியடைந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தததில் முதலிடம் லாராவுக்குத் தான்.

அதாவது, வெஸ்ட் இண்டீஸ் தோல்வியடைந்த 63 டெஸ்டில், லாரா 5316 ரன்கள் ( 14 சதம்) எடுத்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் மூன்றாவது இடத்தில் (56 டெஸ்ட், 4088 ரன்கள்) தான் வருகிறார்.

டெஸ்ட் போட்டிகளில் இரு இன்னிங்சிலும் சேர்த்து, குறைந்தது 200 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்தும், அணி தோற்றதில் லாரா தான், சச்சினை விட முதலிடத்தில் உள்ளார். அதாவது 8 முறை லாரா 200, 207, 213, 218, 221, 232, 243, 351 என ரன்கள் எடுத்த போதும், அவரது அணி தோற்றது. 

அதேநேரம், சச்சின் இரு இன்னிங்சிலும் சேர்த்து 208 ரன்கள் எடுத்த, ஒரு போட்டியில் (1998, ஆஸி., பெங்களூரு) தான் இந்தியா தோற்றது. ஆனால், அணியின் வெற்றிக்கு கைகொடுப்பதில் லாரா தான் முன்னணியில் உள்ளதாக பாண்டிங் கூறுகிறார். 

லாரா பங்கேற்ற டெஸ்டில் வெற்றி சதவீதம் 24.42. இதில் லாராவின் பங்கு 24.50 சதவீதம். ஆனால் சச்சினின் வெற்றி சதவீதம் 35.35. இதில், இவரது பங்கு மட்டும் 37.01 சதவீதமாக உள்ளது.

இதேபோல, ஒருநாள் போட்டிகளிலும் சச்சின் (62 ஆட்ட நாயகன்) தான், லாராவை (30) விட முன்னணியில் உள்ளார். புள்ளி விவரங்கள் இப்படி இருக்க, பாண்டிங் எதை வைத்து சச்சினை விட, லாரா "டாப்' என்றாரோ, இது அவருக்கே வெளிச்சம்.

விமானப்படையில் இருந்து சச்சின் விடுவிப்புஇந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 40. சதத்தில் சதம் அடித்து சாதித்தவர். 

இந்தியாவுக்கு கிரிக்கெட் மூலம் பெருமை சேர்த்த சச்சினுக்கு, 2010ல் (செப்., 3) இந்திய விமானப் படை (ஐ.ஏ.எப்.,) சார்பில், கவுரவ "குரூப் கேப்டன்' அந்தஸ்து வழங்கப்பட்டது.

விளையாட்டுத் துறையில் இருந்து, இவ்விருதை பெற்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் சச்சின். விமானப்படைக்கு தொடர்பில்லாத ஒருவர் இந்த அந்தஸ்து பெற்றது இது தான் முதன் முறை. 

இதன் மூலம், இளம் தலைமுறையை ராணுவத்தில் சேர ஊக்குவிக்க முடியும் என, ஐ.ஏ.எப்., நம்பியது. ஆனால், திடீரென என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. விமானப்படை தூதர் பொறுப்பில் இருந்து சச்சினை விடுவித்துள்ளனர்.

காரணம் என்ன:

சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து பங்கேற்கும் இவர், இதிலிருந்தும் விரைவில் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் தான், சச்சினை விடுவித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

DRS முறைக்கு மூடுவிழாவிரைவில் "டி.ஆர்.எஸ்.,' முறைக்கு மூடுவிழா நடத்தப்படலாம்,'' என, முன்னாள் சர்வதேச அம்பயர் பொமி ஜமுலா தெரிவித்தார்.

அம்பயர்கள் முடிவை தொழில் நுட்பம் மூலம் மறுபரிசீலனை செய்யும் (டி.ஆர்.எஸ்.,) முறைக்கு, துவக்கத்தில் இருந்தே இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளில இம்முறை பயன்படுத்தப்படுவதில்லை. 

சமீபத்தில் முடிந்த ஆஷஸ் தொடர் முதல் டெஸ்டில், களத்தில் இருந்த அம்பயர்கள் வழங்கிய 13 முடிவுகளில், 8 தீர்ப்புகள் மூன்றாவது அம்பயரால் மாற்றப்பட்டது. இதனால், "டி.ஆர்.எஸ்.,' சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்தியாவின் முன்னாள் (1990-1999) அம்பயர் பொமி ஜமுலா, 60, கூறியது:

தொழில்நுட்ப அடிப்படையில் செயல்படும் டி.ஆர்.எஸ்., முறை, பல்வேறு நேரங்களில் சிறப்பாக இருந்தது. ஆனால், அவ்வப்போது தவறுதலான தீர்ப்பும் தருகிறது. இன்னும் சில டெஸ்ட் போட்டிகளில் பார்க்கலாம். 

தொடர்ந்து தவறுகள் நேரும் பட்சத்தில், டி.ஆர்.எஸ்., முறையை தூக்கி எறிந்து விடவேண்டும். 

அதேநேரம், தொழில்நுட்பங்கள் அம்பயர்களுக்கு உதவியாகவும் அமையும். இதை பயன்படுத்தும் போது தான், மொழி காரணமாக சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. இவர்களுக்கு சிறப்பாக பயிற்சி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜமுலா கூறினார்.

200வது டெஸ்டில் 100 அடிப்பாரா சச்சின்தென் ஆப்ரிக்க தொடரில் 200வது டெஸ்டில் பங்கேற்கவுள்ள சச்சின், சதம் (100) அடித்து அசத்த வேண்டும்,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி விருப்பம் தெரிவித்தார்.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 40. இதுவரை, 198 டெஸ்ட் (51 சதம்), 463 ஒருநாள் போட்டிகளில் (49 சதம்) பங்கேற்று, சதத்தில் "சதம்' அடித்து சாதித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த இவர், டெஸ்ட் போட்டிகளில் தொடர்கிறார். 

டிச.26ல் துவங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, சச்சின் தென் ஆப்ரிக்கா செல்வார். இங்கு 200வது டெஸ்டில் விளையாடுவார். 
இது குறித்து கங்குலி கூறியது:

கிரிக்கெட் அரங்கில் மகத்தான சாதனை படைத்த வீரர் சச்சின். அதிகமான பெருமை இருக்கும் போதே ஒய்வு பெறுவது நல்லது. அதை விட்டு விட்டு களத்தில் ரன்கள் எடுக்க முடியாமல் திக்கித் திணறி, போராடிவிட்டு பிறகு வெளியேறுவது நன்றாக இருக்காது.

சச்சினைப் பொறுத்தவரை தென் ஆப்ரிக்க மண்ணில் 200வது டெஸ்டில் பங்கேற்கவுள்ளார். இப்போட்டியில் சதம் அடித்து அசத்த வேண்டும் என விரும்புகிறேன்.

 இதேபோல, வெஸ்ட் இண்டீசின் சாதனை வீரர் பிரையன் லாராவுடன் இணைந்து விளையாடியுள்ளேன். நன்றாக விளையாடும் போதே ஓய்வு பெற்று விடுங்கள் என்று, அவரிடமே தெரிவித்தேன். 

நல்ல முன்னேற்றம்: இந்திய அணியில் நிறைய முன்னேற்றங்கள் தெரிகின்றன. ஆனால், வெளிப்படையாக சொல்வதென்றால் டெஸ்ட் போட்டிகள் வித்தியாசமானவை. இதை தவறாக சொல்லவில்லை. 

தென் ஆப்ரிக்காவின் புற்கள் நிறைந்த, வேகத்துக்கு சாதகமான ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு கடுமையானவை என்று தான் சொல்கிறேன். தோனி மீண்டும் வெற்றி தேடித்தருவார் என்று நம்புகிறேன். 

எனது நேரம் முடிந்து விட்டது. இப்போது தோனியின் நேரம். நான்கு ஆண்டுகளாக நன்கு செயல்பட்டு வருகிறார். அடுத்து வேறு யாராவது வருவர்.
இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

தோனி வழியில் விஜய்

இந்திய கேப்டன் தோனி போல, அணியை திறம்பட வழிநடத்த வேண்டும்,'' என, விஜய் ஜோல் விருப்பம் தெரிவித்தார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற, 19 வயதுக்குட்பட்டோருக்கான "இளம்' இந்திய அணி, பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பை வென்றது. இத்தொடரில் பேட்டிங்கில் அசத்திய இந்திய கேப்டன் விஜய் ஜோல், தொடர் நாயகன் விருது வென்றார்.

இதுகுறித்து விஜய் ஜோல் கூறியது: சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில், தோனி தலைமையிலான இந்திய அணியின் செயல்பாடு மெய்சிலிர்க்க வைத்தது. 

குறிப்பாக பைனலில், கேப்டன் தோனியின் செயல்பாடு அருமையாக இருந்தது. என்னைப் போன்ற இளம் வீரர்கள், இவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். நிறைய போட்டிகளில், இக்கட்டான நேரத்தில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளார். 

போட்டியின் சூழ்நிலைக்கேற்ப சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இவரது தனிச்சிறப்பு. எப்போதும் "கூலாக' இருக்கும் இவரது இயற்கை குணத்திற்கு நானும் ஒரு ரசிகன். இவரை போல அணியை திறம்பட வழிநடத்த விரும்புகிறேன். ஆனால் இது கடினம். எனவே, இவரது திறமையில் பாதி இருந்தால் கூட போதுமானது. நெருக்கடியான நேரத்தில் எப்படி சாமர்த்தியமாக முடிவு எடுக்க வேண்டும் என்பதை இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

  ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே அணியாக இணைந்து போராடியதால், 100 சதவீத வெற்றியுடன் தொடரை கைப்பற்ற முடிந்தது. இது, ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி. இத்தொடருக்கு முதன்முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டேன். 

இத்தொடரில் பங்கேற்ற நிறைய வீரர்கள் முதன்முறையாக விளையாடினர். ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதை என்றும் மறக்க முடியாது.

ஒவ்வொரு போட்டிக்கு முன், ஒருவித நெருக்கடி இருந்தது. ஆனால் 100 சதவீத வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு விளையாடியதால், போட்டியில் கவனம் செலுத்த முடிந்தது. 

கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் தொடரில், கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஆரம்பம் தான். வரும் காலங்களில் சீனியர் இந்திய அணியில் இடம் பிடிக்க விரும்புகிறேன். தற்போது இதுகுறித்து அதிகம் சிந்திக்கவில்லை.

எனது கவனம் முழுவதும், அடுத்து வரவுள்ள இலங்கைக்கு எதிரான தொடரில் மட்டுமே உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் கண்ட வெற்றிநடையை இலங்கையிலும் தொடர விரும்புகிறேன்.

எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வித விளையாட்டிலும் இல்லை. எனது தந்தை கொடுத்த ஆதரவினால் தான் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறேன். 

"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கை தான், என்னை கிரிக்கெட் விளையாட தூண்டியது. சேவக்கின் அதிரடியான பேட்டிங், யுவராஜ் சிங்கின் போராடும் குணம் பிடிக்கும். 

சர்வதேச அளவில், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்.

இவ்வாறு விஜய் ஜோல் கூறினார்.

முத்தரப்பு தொடரில் சூதாட்டம் - 5 பேர் கைதுஇந்தியா, இலங்கை அணிகள் மோதிய முத்தரப்பு தொடரின் பைனல் தொடர்பாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். 

வெஸ்ட் இண்டீசில் நடந்த முத்தரப்பு தொடரின் பைனலில் இந்திய அணி, இலங்கையை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, கோப்பை வென்றது. 

இந்தப்போட்டியின்போது, டில்லியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. 

இதனையடுத்து, லாலித், நிதின், பவான், மோகித், ஜிதேந்தர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். 

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" இவர்கள் பிரிமியர் தொடர், சாம்பியன்ஸ் டிராபி, முத்தரப்பு தொடரில் சுமார் ரூ. 1.5 கோடிக்கு சூதாட்டம் செய்துள்ளனர். 

இவர்கள் பயன்படுத்திய இரண்டு "லேப்-டாப்' மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தோம்,'' என்றார். 

கேப்டன் தோனி - நினைத்ததை முடிப்பவன்இலங்கைக்கு எதிரான உலக கோப்பை பைனலில்(2011, 50 ஓவர்) இலங்கைக்கு எதிராக சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார் கேப்டன் தோனி. 

இதே போல முத்தரப்பு பைனலிலும் சிக்சர் அடித்து கோப்பை பெற்று தந்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், போட்டியை வெற்றியுடன் முடிப்பதில் மிகச் சிறந்த வீரராக திகழ்கிறார் இந்திய அணியின் கேப்டன் தோனி. 

2007ல் "டுவென்டி-20', 2011ல் <உலக கோப்பை, இம்முறை சாம்பியன்ஸ் டிராபி என, மூன்று வித கோப்பை வென்று தந்தார். இதுவரை 194 ஒருநாள் போட்டியில் பங்கேற்ற இவர், 21 இன்னிங்சில் களமிறங்கவில்லை. 

மீதமுள்ள 173 இன்னிங்சில், 46 போட்டிகளில் அவுட்டாகாமல் இருந்துள்ளார். இதில் 43 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. வெற்றி சதவீதம் 93.5 ஆக உள்ளது.

பெவனை விட...: ஆஸ்திரேலியாவின் ஓய்வு பெற்ற வீரர் மைக்கேல் பெவன். 232 போட்டிகளில் பங்கேற்று, 196 இன்னிங்ஸ் பேட்டிங் செய்தார். இதில் 67 முறை அவுட்டாகாமல் இருந்தாலும், 13 போட்டிகளில் ஆஸ்திரேலியா தோற்றது. வெற்றி சதவீதம் 80.6 தான் உள்ளது.

சராசரி "100': தோனி விளையாடிய மொத்த இன்னிங்சில் (2005-2013), 72 போட்டிகளில் "சேஸ்' செய்து இந்தியா வெற்றி பெற்றது. இதில் தோனி 54 முறை பேட்டிங் செய்து, 33 முறை அவுட்டாகாமல் இருந்த இவர், மொத்தம் 2102 ரன்கள் எடுத்துள்ளார் (அதிகபட்சம் 183 ரன்கள்). 

அதாவது தோனியின் "சேஸ்' சராசரி 100.09. இவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் அர்னால்டு (91.00), இங்கிலாந்தின் இயான் மார்கன் (89.22) உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன், பேட்டிங் சராசரி கூட 99.94 தான் உள்ளது.

இயற்கை குணம்: இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் கூறியது:

முத்தரப்பு தொடரின் முதல் இரு போட்டிகளில் தோற்ற பின், மீண்டு வந்து கோப்பை வென்று கொடுத்துள்ளார் இளம் கேப்டன் தோனி. இந்த போராடும் குணம் அவருக்கு இயற்கையாக அமைந்துள்ளது. போட்டியின் எந்த ஒரு இடத்திலும் குழப்பம் அடையாமல், கடைசிவரை களத்தில் இருந்து, வெற்றி தேடித்தரும் இவரைப் போன்ற வீரரை, இதற்கு முன் ஒருபோதும் நான் பார்த்ததில்லை. 

இவ்வாறு வெங்சர்க்கார் கூறினார்.

ரோகித் மகிழ்ச்சி: இந்திய வீரர் ரோகித் சர்மா கூறுகையில்,"" பல ஆண்டுகளாக தோனி, இப்படித் தான் வெற்றி தேடித்தருகிறார். இவர் களத்தில் இருக்கும் வரை எப்படியும் வெற்றி கிடைக்கும் என்று நம்பினோம். இதனால், முத்தரப்பு தொடர் பைனலில் வென்றதில் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை,'' என்றார்.

ரேங்கிங்: இந்தியா நம்பர்-1ஐ.சி.சி., ஒருநாள் போட்டி அணிகளுக்கான ரேங்கிங்கில், "உலக சாம்பியன்' இந்திய அணி "நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டது. 

சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் டிராபி மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. இதன்மூலம் நேற்று வெளியிடப்பட்ட ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில் (தரவரிசை) இந்திய அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (114 புள்ளி), இங்கிலாந்து (112 புள்ளி), தென் ஆப்ரிக்கா (110 புள்ளி), இலங்கை (108 புள்ளி) அணிகள் "டாப்-5' வரிசையில் உள்ளன.

தோனி பின்னடைவு: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். காயம் காரணமாக முத்தரப்பு தொடரில் மூன்று போட்டியில் விளையாடாத இந்திய கேப்டன் தோனி, 5வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இலங்கை வீரர் சங்ககரா 5வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இலங்கை வீரர் மகிளா ஜெயவர்தனா 21வது இடத்தில் இருந்து 18வது இடத்துக்கு முன்னேறினார். முதலிரண்டு இடத்தில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், ஆம்லா நீடிக்கின்றனர்.

புவனேஷ்வர் முன்னேற்றம்: முத்தரப்பு தொடரில், தொடர் நாயகன் விருது வென்ற இந்தியாவின் புவனேஷ்வர் குமார், பவுலர்களுக்கான ரேங்கிங்கில் 29 இடங்கள் முன்னேறி, 20வது இடம் பிடித்தார். "ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா 4வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 

"சுழலில்' அசத்திய இலங்கையின் ஹெராத், 14 இடங்கள் முன்னேறி 11வது இடம் பிடித்தார். இலங்கை கேப்டன் மாத்யூஸ், 9 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை கைப்பற்றினார்.

முதல் மூன்று இடங்களில் வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன், பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், இங்கிலாந்தின் ஸ்டீவன் பின் ஆகியோர் நீடிக்கின்றனர்.

"ஆல்-ரவுண்டர்'களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 5வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் ஆகியோர் உள்ளனர்.

கில்லி யின் புதிய அவதாரம்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் (செல்லமாக "கில்லி'), 41. இதுவரை 96 டெஸ்ட் (5570 ரன்கள்), 287 ஒருநாள் (9619 ரன்கள்), 13 சர்வதேச "டுவென்டி-20' (272 ரன்கள்) போட்டிகளில் விளையாடிய இவர், 2008ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 

பிரிமியர் கிரிக்கெட் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்ட இவர், 2009ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கோப்பை வென்று தந்தார்.

கில்கிறிஸ்டை, ஆஸ்திரேலியாவை சேர்ந்த தனியார் "டிவி' சேனலான "நெட்வொர்க் டென்' நிறுவனம், வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்துள்ளது. 

இதனையடுத்து இவர், வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள "பிக் பாஷ் டுவென்டி-20' தொடரின் போது, இந்த சேனலின் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்க உள்ளார். 

ஏற்கனவே இந்த சேனல், முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை, வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்துள்ளது. இதனையடுத்து, "பிக் பாஷ்' தொடரில் பாண்டிங், கில்கிறிஸ்ட் இணைந்து வர்ணனை செய்ய உள்ளனர்.

முன்னதாக மைதானத்துக்குள் இணைந்து போட்டியில் பங்கேற்ற இவர்கள், இனிவரும் நாட்களில் "பெவிலியனில்' அமர்ந்து வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்க இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

புவனேஷ்வர் குமார் அசத்தல்

இலங்கை அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரின் பைனலில் இந்தியாவின் புவனேஷ்வர் வேகத்தில் அசத்தினார்.

வெஸ்ட் இண்டீசில் முத்தரப்பு ஒரு நாள் தொடரின் பைனல் இன்று நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. 

காயத்திலிருந்து மீண்ட தோனி அணிக்கு திரும்பினயார். இந்திய அணியில் உமேஷ், முரளி விஜய் நீக்கப்பட்டு, வினய் குமார் இடம்பிடித்தார். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பீல்டிங் தேர்வு செய்தார். 


புவனேஷ்வர் அபாரம்:

இலங்கை அணிக்கு தரங்கா, ஜெயவர்தனா ஜோடி துவக்கம் கொடுத்தது. புவனேஷ்வர் வேகத்தில் தரங்கா (11) வெளியேறினார். 

இஷாந்த் சர்மா பந்தை ஜெயவர்தனா சிக்சருக்க பறக்க விட்டார். ஆனால், மீண்டும் வந்த புவனேஷ்வர் இம்முறை ஜெயவர்தனாவை 22 ரன்களில் பெவிலியன் திருப்பினார். ரெய்னா பந்தை சங்ககரா பவுண்டரிக்கு விரட்டினார். 

சங்ககரா அரை சதம் கடந்தார். திரிமான்னே ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்தார். இலங்கை அணி 46 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. 

தென் ஆப்ரிக்கா தொடர் - பி.சி.சி.ஐ., எதிர்ப்புஇந்திய அணி பங்கேற்கும் போட்டி அட்டவணையை, தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் வெளியிட்ட தென் ஆப்ரிக்காவுக்கு, பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. 

வரும் நவம்பர் முதல் 2014 ஜனவரி வரை (60 நாட்கள்) தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி, இரண்டு "டுவென்டி-20', ஏழு ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. 

இதுகுறித்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் இந்தியா வந்த தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு (சி.எஸ்.ஏ.,) நிர்வாகிகள், இத்தொடர் குறித்து விவாதித்தனர். இதனிடையே, போட்டிகள் நடக்கும் தேதி மற்றும் இடங்கள் குறித்த அறிவிப்பை, சி.எஸ்.ஏ., வெளியிட்டது.

இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே தெரிவித்தபடி தான் அட்டவணை வெளியாகியுள்ளது என்றாலும், என்ன காரணத்துக்காக எதிர்க்கின்றனர் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. 

இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறுகையில்,"" சி.எஸ்.ஏ., வெளியிட்ட அட்டவணை குறித்து எதுவும் தெரியாது. எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் வெளியிட்டுள்ளனர். இது சரியல்ல. இதுகுறித்து சி.எஸ்.ஏ.,யிடம் பேசும் முன், தற்காலிக தலைவர் டால்மியாவிடம் பேசவுள்ளேன்,'' என்றார். 

பி.சி.சி.ஐ., எதிர்ப்பு குறித்து சி.எஸ்.ஏ., செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.


காரணம் என்ன:

இப்போதுள்ள அட்டவணைப் படி, தென் ஆப்ரிக்க தொடர் முடிந்து (2014, ஜன., 19) அடுத்த ஆறு நாட்களில் (2014, ஜன., 25), நியூசிலாந்து மண்ணில் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இது மிகவும் சிரமம் என்பதால், பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் என்று நம்பப்படுகிறது.

டெஸ்ட் ரேங்கிங்கில் இந்தியா முன்னேற்றம்

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. 

டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்டது. இதில் இரண்டாவது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி (112) மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

இந்திய அணி (116 புள்ளி) இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இப்பட்டியலில், தென் ஆப்ரிக்கா (135) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய (105), பாகிஸ்தான் (102), வெஸ்ட் இண்டீஸ் (99) ஆகிய அணிகள் முறையே நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இடத்தை பிடித்தன. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாரம்பரியம் மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 அல்லது அதற்கு மேல் கைப்பற்றும் பட்சத்தில், மீண்டும் "நம்பர்-2' இடத்துக்கு முன்னேறலாம்.

தோனிக்கு கேக் தெரபி

இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனி. தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் பயணத்தின் போது தொடைப் பகுதியில் காயம் அடைந்த இவர், ஓய்வில் உள்ளார். 

இவர் நேற்று முன்தினம் போர்ட் ஆப் ஸ்பெயினில் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார். 

இதற்கான "பார்ட்டியில்' பங்கேற்ற டுவைன் பிராவோ உள்ளிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், தோனியின் முகம் முழுவதும் பிறந்தநாள் "கேக்கை' பூசி மகிழ்ந்தனர்.

இது குறித்து "டுவிட்டர்' இணையதளத்தில் தோனி வெளியிட்ட செய்தியில்,"என் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரும்பினர். "கேக்கை' தடவி என் முகத்தை மென்மையாக மாற்றிய பிரவோவுக்கு நன்றி. இதை "கேக் தெரபி' என்று கூறலாம்,'என, குறிப்பிட்டார்.

பைனலுக்கு செல்லுமா வெஸ்ட் இண்டீஸ்?

முத்தரப்பு தொடரின் இன்றைய லீக் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் மோதுகின்றன. 

வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்றது. இலங்கை, இந்திய அணிகள் தலா 5 புள்ளிகளுடன், பட்டியலில் அடுத்த இரு இடங்களில் உள்ளன. 

இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றால் 14 புள்ளியுடன் பைனலுக்கு தகுதி பெற்றுவிடும். தோற்கும் பட்சத்தில் இலங்கை 9 புள்ளிகள் பெறும். 

அடுத்து 9ம் தேதி நடக்கும் போட்டியில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தினால், மூன்று அணிகளும் தலா 9 புள்ளிகள் பெறும். அப்போது "ரன்ரேட்' அடிப்படையில் பைனலுக்கு செல்லும் அணிகள் முடிவாகும். 

இதுபோன்ற சிக்கலை தவிர்க்க, இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று பைனலுக்கு செல்ல முயற்சிக்கும். இதற்கேற்ப கெய்ல், சார்லஸ் ஜோடி விழித்துக் கொள்ள வேண்டும். "மிடில் ஆர்டரில்' டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், போலார்டு, சமி கைகொடுக்க வேண்டும். 

பெஸ்ட் "பெஸ்ட்': பவுலிங்கில் வேகப்பந்து வீச்சாளர் டினோ பெஸ்ட், சிறப்பாக செயல்படுகிறார். தவிர, கீமர் ரோச், "அனுபவ' சமி, "சுழல் மாயாவி' சுனில் நரைனும் அசத்தலாம். 

மிரட்டல் "பேட்டிங்': இந்திய அணிக்கு எதிராக பேட்டிங்கில் மிரட்டிய தரங்கா, ஜெயவர்தனா, இன்றும் இலங்கைக்கு ரன்குவிக்கலாம். கேப்டன் மாத்யூஸ், திரிமான்னே, சங்ககராவும் உதவ தயாராக உள்ளனர். 

பவுலிங்கில் "சீனியர்' வீரர்கள் மலிங்கா, குலசேகராவுடன் சுழற்பந்து வீச்சாளர்கள் ஹெராத், மெண்டிஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏற்கனவே, முதல் லீக் போட்டியில் அடைந்த தோல்விக்கு இன்று இலங்கை பழிதீர்க்க முயற்சிக்கும். 

தோனி உள்ளிட்ட 5 முன்னணி வீரர்களுக்கு ஓய்வுஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் தோனி, வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, புவேனஸ்வர் குமார், உமேஷ் யாதவ், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் வீரர் பர்வேஸ் ரசூல் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்திய அணியில் இடம்பிடித்த முதல் ஜம்மு-காஷ்மீர் வீரர் என்ற பெருமையை ரசூல் பெற்றுள்ளார்.

விராட் கோலி தலைமையில் விளையாடவுள்ள இந்திய அணியில் சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜெயதேவ் உனட்கட், மோஹித் சர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மோஹித் சர்மா சிறப்பாக பந்துவீசியதன் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதேநேரத்தில் தொடர்ந்து சரியாக விளையாடாத தமிழக வீரரான முரளி விஜய் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தேர்வுக்குழு கூட்டத்தின்போது மூத்த வீரர்களான கம்பீர், சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர்கான், பிரவீண் குமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை.

தேர்வுக்குழு கூட்டத்துக்குப் பிறகு அணியின் விவரத்தை வெளியிட்ட பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல், "ஜிம்பாப்வே தொடருக்கு இளம் வீரர்கள் அடங்கிய அணியுடன் செல்ல விரும்பினோம்' என்றார்.

ஜூலை 24-ம் தேதி தொடங்கும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 3-ம் தேதியோடு நிறைவடைகிறது.

இதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க "ஏ' அணிகளுடன் முத்தரப்புத் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய "ஏ' அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு சேதேஷ்வர் புஜாரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முத்தரப்புத் தொடர் தென் ஆப்பிரிக்காவில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது.

யார் இந்த பர்வேஸ் ரசூல்? ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவரான பர்வேஸ் ரசூல், கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய இந்திய "ஏ' அணியில் இடம்பிடித்தார். 

அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 45 ரன்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பேட்டிங்கிலும் 36 ரன்கள் சேர்த்தார். இது அந்த ஆட்டத்தில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த 2-வது அதிகபட்ச ரன்னாகும். 

இதன்பிறகு கடந்த ஐபிஎல் போட்டியில் புணே வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய ரசூல், இப்போது இந்திய அணியிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

ஆல்ரவுண்டரான ரசூல், இதுவரை 17 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகளையும், 1,003 ரன்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக், சேதேஷ்வர் புஜாரா, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், முகமது சமி, வினய் குமார், ஜெயதேவ் உனட்கட், மோஹித் சர்மா.

இந்திய ஏ அணி: சேதேஷ்வர் புஜாரா (கேப்டன்), ஷிகர் தவன், முரளி விஜய், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, தினேஷ் கார்த்திக், அஜிங்க்யா ரஹானே, விருத்திமான் சாஹா, பர்வேஸ் ரசூல், சபேஸ் நதீம், முகமது சமி, ஸ்டூவர்ட் பின்னி, ஈஸ்வர் பாண்டே, ஜெயதேவ் உனட்கட், சித்தார்த் கெளல்.

இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்ட முதல் காஷ்மீர் வீரர்ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பர்வேஸ் ரசூல் என்ற  கிரிக்கெட் வீரர் இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஜிம்பாப்வே போட்டித் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்தியக் கிரிக்கெட் தேர்வுக் குழுவினரால் நேற்று இந்த தகவல் வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்திய அணிக்குள் நுழையும் முதல் காஷ்மீரி என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.  

கலவரங்களால் அலைக்கழிக்கப்பட்ட காஷ்மீரில் பிரிவினைவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கை மூடிவைக்கும் போதெல்லாம் வெறிச்சோடி இருக்கும் பிஜ்பெஹாரா நகரத் தெருக்களில் விளையாடி ரசூல்  தனது கிரிக்கெட் திறமையை வளர்த்துக் கொண்டார். 

கடந்த 2009ஆம் ஆண்டில் தீவிரவாத செயல்களுடன் தொடர்பு கொண்டவர் இவர் என்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தின் வெளியே காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டார்.  

முன்னாள் இந்திய சுழல் பந்து வீச்சாளரான பிஷன் சிங் பேடி, ஜம்மு, காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணியின் வழிகாட்டியாக செயல்பட்டு வருகின்றார். இவரே, இந்திய அணியில் ரசூல் இடம் பெறுவதற்கும் காரணமாக இருந்துள்ளார். 

ஒரு எளிய கடை முதலாளியின் மகனான ரசூல்(வயது24), அணியின் நடுத்தர வரிசை ஆட்டக்காரராகவும், சிறந்த ஆப்-ஸ்பின் பந்து வீச்சாளராகவும் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார்.  இந்த வருட ஆரம்பத்தில் புனே வாரியர்ஸ் அணிக்காக டி20 போட்டியில் ரசூல் விளையாடினார். 

அதேபோல், இந்தியா ஏ பிரிவினருக்கான அணியிலும் விளையாடிய முதல் காஷ்மீரி என்ற பெருமையைப் பெற்றார். கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய அணியினருடன் போர்டு பிரெசிடெண்ட் XI அணியில் விளையாடியபோது, 45 ரன்கள் கொடுத்து 7  விக்கெட்டுகளை எடுத்தார். 

சென்ற ரஞ்சிப் போட்டிகளின் போதும் ஜம்மு,காஷ்மீர் மாநில அணியில் விளையாடி 594 ரன்களும், 33 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இவரது மூத்த சகோதரர் ஆசிப் உள்ளூர் டி20 போட்டிகளில் மாநில அணியில் விளையாடியுள்ளார்.  இவரது பயிற்சியாளரான அப்துல் கையும், இவரது தேர்வு குறித்து தனது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்ககளையும் வெளியிட்டுள்ளார்

காம்பிருக்கு இடம் கிடைக்குமா? - இன்று இந்திய அணி தேர்வுஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில், கேப்டன் தோனி இடம்பெறுவது சந்தேகமாக உள்ளது. இதனால், காம்பிருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

முத்தரப்பு தொடருக்குப் பின், ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி, ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட (ஜூலை 24- ஆக., 3) தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் ஹராரேயிலும், கடைசி இரு போட்டிகள் புலவாயோவில் நடக்கும். 

இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. தொடையின் பின் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, கேப்டன் தோனி முத்தரப்பு தொடரில் இடம் பெறவில்லை. ஜிம்பாப்வே தொடர் குறித்து இவரது முடிவு என்ன என, இன்னும் தெரியவில்லை. 

ஒருவேளை தோனிக்கு ஓய்வு தரப்படும் பட்சத்தில், கேப்டன் பணியை விராத் கோஹ்லி தொடர்வார். தோனிக்குப் பதில் சமீபத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்ட "அனுபவ' காம்பிர் (147 போட்டி, 5238 ரன்) அணியில் இடம் பெறலாம்.

 ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடியில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. இதனால், முரளி விஜய் இடம் கேள்விக்குறியாகி உள்ளது. "மிடில்-ஆர்டரில்' மனோஜ் திவாரி தேர்வு செய்யப்பட இருந்த நிலையில், முழங்காலில் காயம் அடைந்ததால், புஜாராவுக்கு வாய்ப்பு செல்லும்.


பிரவீண் வருவாரா:

பவுலிங்கில் தற்போது அணியிலுள்ள ஒன்று அல்லது இரு வீரர்களுக்கு ஓய்வு தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரவீண் குமார் அணிக்கு திரும்பலாம். ஷமி அகமது அணியில் நீடிப்பார். 

ஏற்கனவே அணியிலுள்ள சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, இன்னும் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை. இதனால், ராகுல் சர்மா இடம் பெறுவது சந்தேகம் தான்.