வலுவான நிலையில் இலங்கை

இலங்கைக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக, இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 452 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் காலேவில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இலங்கை 3 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்திருந்தது.

2-ம் நாளான புதன்கிழமை ஆட்டம் மழை காரணமாக 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

முதல் நாள் 108 ரன்களுடன் களத்தில் இருந்த மஹேல ஜயவர்த்தனே மேலும் 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 82 ரன்களுடன் தொடர்ந்த சமரவீரா சிறப்பாக விளையாடி டெஸ்ட் அரங்கில் தனது 10-வது சதத்தை நிறைவு செய்தார்.

சமரவீரா 277 பந்துகளில் ஒரு சிக்சர், 24 பவுண்டரிகளுடன் 159 ரன்கள் குவித்த நிலையில் வெட்டோரி பந்துவீச்சில் வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் என வலுவான நிலையில் இருந்த இலங்கை அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

8 ரன்களைச் சேர்ப்பதற்குள் கடைசி 4 விக்கெட்டுகள் வீழ்ந்தன. நியூஸிலாந்து கேப்டன் வெட்டோரி சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நியூஸிலாந்து அணி தொடர்ந்த போது மார்ட்டின் குப்டில் 24 ரன்களுக்கும், டேனியல் ஃபிளின் 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். டிம் மெக்கின்டோஷ் 36 ரன்களுடனும், பந்துவீச்சாளர் ஜீதன் படேல் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும் 3 நாள்களுக்கு கடும் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமான ஸ்கோர்:

இலங்கை: 117.4 ஓவர்களில் 452 (சமரவீரா 159, ஜயவர்த்தனே 114, தில்ஷான் 92, வெட்டோரி 4-78, மார்ட்டின் 4-77).

நியூஸிலாந்து: 29 ஓவர்களில் 87-2 (மென்டிஸ் 1-26)

0 comments:

Post a Comment