கபில் தேவுக்கு அழைப்பு இல்லை

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான உலக கோப்பை அரையிறுதி போட்டியைக் காண, முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு அழைப்பு தரப்படவில்லை.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 36 ஆண்டுகளாக நடத்தப்பட்ட வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 4 முறை கோப்பை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் 2, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன.

கடந்த 1983ல் தொடரில், கேப்டன் கபில் தேவ் தலைமையிலான அணி, முதன் முறையாக இந்தியாவுக்கு உலக கோப்பை பெற்றுத்தந்தார். அதன்பின் இதுவரை இந்திய அணி, இத்தொடரில் கோப்பை வென்றதில்லை.

இத்தனை பெருமைக்குரிய கபில் தேவை, இந்தியா, பாகிஸ்தான் போட்டியை காண, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நேரில் அழைக்காமல் அவமானம் செய்துள்ளது. இதேபோல முன்னாள் வீரர்கள் பிஷன் சிங் பேடி, முகமது அசார் ஆகியோருக்கும் அழைப்பு இல்லையாம்.

இதுகுறித்து கபில் தேவை போனில் தொடர்பு கொண்ட போது,"" டில்லியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியது இருந்ததால், மொகாலி செல்லவில்லை,'' என கோபமாக கூறினார்.

கடந்த 2007ல் உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோற்றதால், கபில் தேவ் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) என்ற போட்டி அமைப்பை உருவாக்கினார். இதன் சார்பில் "டுவென்டி-20' போட்டிகள் நடந்தன. பின் இந்திய கிரிக்கெட் போர்டுடன் (பி.சி.சி.ஐ.,) சமாதானமாக செல்ல முடிவெடுத்தார்.

இதனால் சமீபத்தில் ஐ.சி.எல்., அமைப்பில் இருந்த, அனைத்து வீரர்களும் விலகினர். இருப்பினும், கபில் தேவின் இந்தச் செயலை, பி.சி.சி.ஐ., இன்னும் மன்னிக்கவே இல்லை.

இதனால் பி.சி.சி.ஐ., தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும், கபில் தேவ் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதனால் தான், மொகாலி போட்டிக்கு, இவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று தெரிகிறது.

கபில் கூட்டணியில் சேருவாரா தோனி?

உலக கோப்பை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெற வாய்ப்பு உள்ளது. இப்பட்டியலில் நான் மட்டும் 28 ஆண்டுகளாக தனிமையில் இருக்கிறேன். என்னோடு தோனியும் சேர வேண்டும்,என, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பை வென்று, வரலாறு படைத்தது. தற்போது "தோனியின் படை சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


இது குறித்து கபில் தேவ் கூறியது:

இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பை வெல்லும் நேரம் நெருங்கி விட்டது. இதற்கான திறமை தோனி தலைமையிலான அணியிடம் உள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 28 ஆண்டுகளாக உலக கோப்பை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையுடன், நான் மட்டும் தனிமையில் இருக்கிறேன். என்னோடு யாராவது சேர வேண்டும் என விரும்புகிறேன்.

இதற்கேற்ப, உலக கோப்பை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெறலாம். இம்முறை நல்லதே நடக்கும் என நம்புவோம். வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுடன் தான் ஒவ்வொருவரும் மைதானத்தில் களமிறங்குகிறோம். தற்போதைய இந்திய அணி சாதித்துக் காட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.


பவுலிங் பிரச்னை:


இந்திய அணியின் பவுலிங் பலவீனமாக உள்ளது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள இயலாது. இதே பவுலர்களுடன் தான் லீக் சுற்று முதல் காலிறுதி வரை வென்றுள்ளோம். இவர்களது சிறப்பான செயல்பாடு காரணமாக தான் அரையிறுதியை எட்டியுள்ளோம். மிக முக்கியமான அரையிறுதியில் பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும்.


வார்த்தை போர்:

மொகாலியில் நாளை நடக்க உள்ள இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அரையிறுதி மிகவும் "டென்ஷனாக இருக்கும். இதில், இரு அணி வீரர்களும் வார்த்தை போரில் ஈடுபட வாய்ப்பு இல்லை.

இவ்விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மிகவும் கண்டிப்பாக உள்ளது. சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும். "மைக்ரோபோன் போன்ற நவீன தொழில்நுட்பம் இருப்பதால், வீரர்களின் தவறை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

எனவே, எந்த ஒரு வீரரும் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்து ஏற்படும் செயல்களில் ஈடுபடமாட்டார். தற்போது களத்திற்கு வெளியே தான் அதிகளவில் வார்த்தை போர் நடக்கிறது.

இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

எழுச்சி பெறுவாரா தோனி?

உலக கோப்பை போட்டிகளில் பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பும் இந்திய அணியின் கேப்டன் தோனி, அரையிறுதியில் எழுச்சி பெற வேண்டிய நேரம் வந்துள்ளது.

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணித்தேர்வில், தேர்வாளர்களுடன் தகராறு, அம்பயர் மறுபரிசீலனை விதி (டி.ஆர்.எஸ்.,) குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் மோதல் (ஐ.சி.சி.,) என, தோனி களத்துக்கு வெளியே மிகவும் "பிசியாக' இருக்கிறார்.

இதனால் தான் தனது பேட்டிங்கில் இவர் கவனம் செலுத்த வில்லை என, எல்லோரும் நினைக்கின்றனர்.

இதுவரை தோனி பங்கேற்ற 7 போட்டிகளில் 125 ரன்கள் (31, 34, 19*, 12*, 22 மற்றும் 7) மட்டுமே எடுத்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இவர் பேட்டிங் செய்யவில்லை. கடைசியாக பங்கேற்ற 12 போட்டிகளில் இவரது சராசரி 22 ரன்கள் தான்.

முக்கியமான நேரத்தில் களமிறங்கும் இவர், திடீரென அவுட்டாகி அணியை அந்தரத்தில் விட்டுவிட்டு, பெவிலியன் சென்று விடுகிறார். அயர்லாந்துக்கு எதிராக வெற்றிக்கு 40 ரன்கள் தேவை என்ற நிலையில், அவுட்டானார். பின் வந்த யூசுப் பதான் கைகொடுத்ததால், எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை சிரமப்பட்டு ஜெயிக்க முடிந்தது.


தவறான "அவுட்':

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், தேவையில்லாமல் ஓடிய காம்பிர் அவுட்டானவுடன் களத்துக்கு வந்தார் தோனி. இதில் 7 ரன்கள் எடுத்த போது, கிளார்க்கிடம் எளிதாக "கேட்ச்' கொடுத்து திரும்பினார். இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்தது.

தோனியின் அவுட் காரணமாக, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பலர், மெல்ல கிளம்பினர். ஆனால், ரெய்னா ஓரளவுக்கு "கம்பெனி' கொடுக்க, இந்திய அணி அரையிறுதிக்கு சென்றது.

கடந்த 2005ல் முதன் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், "ஹெலிகாப்டர்' ஷாட்டை அறிமுகம் செய்து சதம் அடித்து அசத்தினார். இப்போது, உலக கோப்பை அரையிறுதியில், மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக, தோனி எழுச்சி காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தோனிக்கு ஆதரவு:

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் கூறுகையில்,"" தோனியின் பேட்டிங் சூழ்நிலையை பொறுத்து அமைகிறது. ஒருநாள் போட்டியை பொறுத்தவரையில், "பார்ட்னர்ஷிப்' எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்து தான் அணியின் வெற்றி அமைகிறது. இதில் தோனி சிறப்பாக செயல்படுகிறார்.

அணிக்கு எப்போது தேவையோ, அப்போது அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார். தவிர, தற்போது அணியில் நிறைய "மேட்ச் வின்னர்கள்' உள்ளனர். இதனால் தோனி குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை,'' என்றார்.

சச்சின் காத்திருக்க வேண்டும் -அப்ரிதி

உலக கோப்பை தொடருக்குப்பின் தான், சச்சின் 100வது சதம் அடிக்க முடியும். அதுவரை அவர் காத்திருக்க வேண்டும். ஏனெனில், அரையிறுதியில் யாரையும் பெரிய ஸ்கோர் எடுக்க விடமாட்டோம்,'' என, பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி மிரட்டல் விடுத்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட்டில், வரும் 30ம் தேதி நடக்கும், இரண்டாவது அரையிறுதி போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுகுறித்து அப்ரிதி கூறியது:

வழக்கமாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி என்றால் அதிக பரபரப்பு இருக்கும்.

இம்முறை இந்திய அணி சொந்த மண்ணில் பங்கேற்பதால், அவர்களுக்குத் தான் கூடுதல் நெருக்கடி. இந்த அரையிறுதி போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறுவோம் என்று தான் நினைக்கின்றன.

இந்த போட்டியை அனைத்து வீரர்களும், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போதுள்ள பெரும்பாலான இளம் வீரர்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாடியது இல்லை. ஆனால் இது ஒரு பிரச்னையே இல்லை. ஏனெனில், இந்த வீரர்கள் நெருக்கடியை சிறப்பாக கையாளுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.

இவர்களது சிறப்பான "பார்மை' கொண்டு, எவ்வித நெருக்கடிக்கும் இடம் தராமல், கவனமாக விளையாடி, இந்திய அணியை தோற்கடிப்போம்.

தவிர, இந்த போட்டியில் சச்சின் தனது 100வது சதம் அடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். அவர் இந்த சாதனையை உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் தான் எட்ட முடியும். ஏனெனில், எங்களுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் எந்த வீரரையும் அதிக ஸ்கோர் எடுக்க விடமாட்டோம். இதனால் சச்சின் காத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அப்ரிதி தெரிவித்தார்.

நீண்ட கால கனவு நிறைவேறியது

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், கடைசி வரை களத்தில் இருந்து வீழ்த்த வேண்டும் என்ற, எனது நீண்ட கால கனவு நிறைவேறியது, என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய துணைக்கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது காலிறுதி போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் "ஆல் ரவுண்டராக அசத்திய யுவராஜ் சிங், ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியது:

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும். இந்த போட்டியில் நான் கடைசி வரைக்கும் களத்தில் இருக்க வேண்டும் என, கடந்த ஒரு ஆண்டாகவே கனவு கண்டேன். இப்போதைய வெற்றியின் மூலம், என்னுடைய நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளது.

இந்த போட்டியின் போது, உணர்ச்சியை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் ஒரு சிறிய தவறு செய்திருந்தாலும், உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற வேண்டியது இருந்திருக்கும். இதனால் பந்துகளை கவனமாக கணித்து, அந்தரத்தில் தூக்கி அடிக்காதவாறு எச்சரிக்கையுடன் விளையாடினேன்.


காம்பிரிடம் மன்னிப்பு:

காம்பிருடன் இணைந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அவுட் துரதிருஷ்டவசமாக "ரன் அவுட் ஆனார். இது எனது தவறுதான். அவர் கூறியதை சரியாக கவனிக்கவில்லை. இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். காம்பிருக்குப் பின், தோனியுடன் சேர்ந்து நல்ல "பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன்.


அணியின் வெற்றி:

இந்நிலையில் அவர் ஆட்டமிழந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின் ரெய்னா வந்ததும், எப்படியும் 20 முதல் 30 ரன்கள் இணைந்து சேர்க்க வேண்டும். இதைக்கடந்ததும், அடுத்து அதிக நம்பிக்கை ஏற்பட்டது. போட்டியில் நான் ஆட்டநாயகன் விருது வென்றாலும், இந்த வெற்றி தனிப்பட்ட ஒருவரால் கிடைத்தது அல்ல. இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி.


தற்போது "ரிலாக்ஸ்:

அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் எனது மற்றொரு கனவு நிறைவேறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதைப் போல, பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாட முயற்சிப்போம்.

எங்களைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும், அதேபோல அவர்களைப் பற்றி எங்களுக்கும் தெரியும். இரு அணிகளும் சமபலத்தில் உள்ளது. மற்றபடி, அரையிறுதி குறித்து இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. மிகுந்த நெருக்கடியான நிலையில் இப்போது வெற்றி பெற்றோம். இதனால் சற்று "ரிலாக்சாகி விட்டு, பின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து திட்டமிட உள்ளோம்.

இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.


யுவராஜ் சிங் அபாரம்

உலக கோப்பை தொடரில் 300 ரன்களும் 10 விக்கெட்டும் எடுத்து அசத்திய இரண்டாவது இந்திய "ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் ஆவார். இதற்கு முன் கபில் தேவ் 1983 உலக கோப்பை போட்டிகளில் 303 ரன்களும் 12 விக்கெட்டும் எடுத்து இருந்தார். இவர்கள் தவிர, இலங்கையில் ஜெயசூர்யா, ஜிம்பாப்வேயின் நெயில் ஜான்சன் இச்சாதனை படைத்துள்ளனர்.

* ஒருநாள் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய வீரர் யுவராஜ் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் சச்சின், கங்குலி, டிராவிட், முகமது அசார் இந்த இலக்கை எட்டியுள்ளனர்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவராஜ் சிங் சிறந்த பந்து வீச்சை (2/44) பதிவு செய்தார்.

* உலக கோப்பை தொடரில் இவர் இதுவரை 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார். எந்த ஒரு தொடரில் இவர் இப்படி அதிக விக்கெட் கைப்பற்றுவது இதுவே முதன் முறை.


----

இந்தியா அதிகம்

நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 261 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி எடுத்து வெற்றி பெற்றது. இது உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச "சேசிங் ஆகும். இதற்கு முன் கடந்த 2003 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா, 276 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றிருந்தது.
---

இந்தியா கோப்பை வெல்லும்: பாண்டிங்

இந்திய அணியின் வெற்றி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங் கூறுகையில்,"" இந்திய அணி ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினர். இந்த வெற்றிக்கு அவர்களுக்கு தகுதியுள்ளது. இவர்களை தோல்வியடையச் செய்வது என்பது மிகவும் கடினம். அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி, எப்படியும் <உலக கோப்பை வெல்வார்கள். ஏனெனில் சிறப்பாக பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக இந்தியா உள்ளது, என்றார்.
---

யார் அந்த "ஸ்பெஷல் நபர்?

உலககோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் யுவராஜ் சிங். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" இம்முறை மிகவும் "ஸ்பெஷலான ஒரு நபருக்காக விளையாடி வருகிறேன். போட்டியில் மோசமான சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அவரை நினைத்துக் கொள்வேன்.

உடனே நிலைமை சாதகமாக மாறி விடும், என்றார். இந்த "ஸ்பெஷல் நபர் யார் என்பதை தெரிவிக்க, யுவராஜ் மறுத்துவிட்டார். இந்தியா பைனலுக்கு முன்னேறும் பட்சத்தில், அவரைப்பற்றிய ரகசியத்தை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர் பட்டம்: சச்சின் மறுப்பு

மைசூரு பல்கலை., கொடுக்க இருந்த டாக்டர் பட்டத்தை ஏற்க இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் மறுத்துள்ளார்.

மைசூருவில் உள்ள பல்கலை., ஒன்று, சச்சினுக்கு வரும் ஏப். 10ல் டாக்டர் பட்டம் கொடுக்க விருப்பம் தெரிவித்து இருந்தது. இதற்காக சச்சினின் அனுமதிக்காக காத்திருந்தது.

இந்நிலையில் சச்சின் மனைவி அஞ்சலி அந்த பல்கலை., துணை வேந்தருக்கு எழுதிய கடிதத்தில்,"" கிரிக்கெட்டில் சச்சின் செய்த சாதனைகளை பாராட்டி, டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவிக்க விருப்பம் தெரிவித்தது மகிழ்ச்சியாக உள்ளது.

ஆனால் தற்போது தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டுள்ளார். இதனால் துரதிர்ஷ்டவசமாக இதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிறுதிக்கு சேவக் தயார்

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, காலிறுதி போட்டியில் பங்கேற்க சேவக் தயாராகியுள்ளார்.

நாளை நடக்கும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இதில் சாதிக்க வேண்டும் என்று இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ஸ்ரீசாந்த் இருவரும் நேற்றைய பயிற்சியில் பங்கேற்க வில்லை. மற்ற அனைத்து இந்திய வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்கள், பந்தை எறிதல், உடற்பயிற்சி, மனவலிமை பயிற்சிகளை மேற்கொண்டனர். பின் வலைப்பயிற்சியும் மேற்கொண்டனர்.

கேப்டன் தோனி, சச்சின் இருவரும் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்தனர். இத்தொடரின் துவக்கத்தில் இருந்தே, முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார் சேவக். இந்த தொல்லையிலிருந்து விடுபட, லீக் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது, அவ்வப்போது டில்லி சென்று, தனது "பிசியோதெரபிஸ்ட்டை' சந்தித்து, தேவையான ஆலோசனைகள் பெற்று வந்தார்.

இதனால் தான் கடந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான லீக் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நாளைய போட்டியில் சேவக் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நேற்று கிறிஸ்டன் முன்னிலையில், சேவக் எவ்வித சிக்கலும் இன்றி பயிற்சி செய்தார்.

இதுகுறித்து இந்திய அணி மானேஜர் ரஞ்சிப் பிஸ்வால் கூறுகையில்,"" அனைத்து வீரர்களும் சரியான உடற்தகுதியுடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு தயாராக உள்ளனர்,'' என்றார்.

சேவக் களமிறங்குவதை அடுத்து ரெய்னா அல்லது யூசுப் பதான் இருவரில் ஒருவர் அவருக்கு வழிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சச்சினுக்கு நேர்மாறான பாண்டிங்

கிரிக்கெட் போட்டிகளில் "அவுட்' என்று தெரிந்தால், உடனடியாக வெளியேறி நேர்மையாக நடந்து கொள்வார் இந்தியாவின் சச்சின். இதற்கு நேர்மாறான குணத்தை கொண்டுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்.

சென்னையில் நடந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் சச்சின், 100 வது சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 ரன் எடுத்த நிலையில், ராம்பால் பந்தில் அவுட்டானார்.

பந்து தனது பேட்டில் பட்டு, கீப்பர் பிடித்தது உறுதியாக தெரிந்ததால், அம்பயரின் முடிவுக்கு காத்திருக்காமல், உடனடியாக களத்தை விட்டு வெளியேறி, நேர்மையாக நடந்து கொண்டார்.

இதற்கு நேர்மாறாக பாண்டிங்கின் நடத்தை உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிராக, ரன் அவுட்டான விரக்தியில், டிரசிங் அறையில் இருந்த "டிவி'யை உடைத்து, பின் அபராதம் கட்டினார்.

கனடாவுக்கு எதிரான போட்டியில், "கேட்ச்' செய்யும் போது சக வீரர் ஸ்டீபன் ஸ்மித் தெரியாமல் மோதினார். இதை பெருந்தன்மையுடன் மன்னிக்காத பாண்டிங், ஸ்மித் மீது உள்ள கோபத்தை, பந்தை தரையில் எறிந்து வெளிப்படுத்தினார்.

பின் மறுநாள் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

தொடர்ந்து மோசமாக நடந்து கொள்ளும் பாண்டிங், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இப்படித் தான் செய்தார். இதில் முகமது ஹபீஸ் பந்தில் கம்ரான் அக்மலிடம் பிடி கொடுத்தார். இது எல்லோருக்கும் தெரிந்தது.

ஆனாலும் அம்பயர் அவுட் கொடுக்காததால், களத்தை விட்டு வெளியேறாமல் இருந்தார். பின் அம்பயர் மறு பரிசீலனை முறையில் "அவுட்' கொடுக்கப்பட்ட பின்பே, பெவிலியன் திரும்பினார்.

இதுகுறித்து பாண்டிங் கூறுகையில்,"" பந்து பேட்டில் பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இது எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் அம்பயர் முடிவுக்காக காத்திருந்தேன். எனது வழக்கமான ஆட்டம் எப்போதுமே இப்படித்தான் இருக்கும்,'' என்றார்.

ரசிகர்களை ஏமாற்றிய சச்சின்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் 100-வது சதத்தைப் பதிவு செய்வார் என ஏராளமான ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.


ஆனால் அவர் 2 ரன்கள் எடுத்திருந்தபோது ராம்பாலின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டேவன் தாமஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.


அவர் ஆட்டமிழந்தபோது ராம்பால் பலமாக குரல் எழுப்பி நடுவரிடம் அவுட் கேட்டார். பந்து பேட்டில் பட்டதா, இல்லையா என்பதை நடுவர் டேவிஸôல் கணிக்க முடியவில்லை. ஆனால் சச்சின் மைதானத்தில் வெளியேறினார்.

இதனால் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் 100-வது சதத்தையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 18 ஆயிரம் ரன்களையும் எட்டுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

காலிறுதியில் சவால் காத்திருக்கிறது

உலக கோப்பை "நாக் அவுட்' சுற்றில் தான், கடுமையான போட்டி காத்திருக்கிறது,'' என, இலங்கை அணி கேப்டன் சங்ககரா கணித்துள்ளார்.

உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் முடிகின்றன. காலிறுதி போட்டிகள் வரும், 23ம் தேதி முதல் துவங்குகின்றன. இதுகுறித்து இலங்கை அணி கேப்டன் சங்ககரா கூறியது:

பொதுவாக போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது எப்போதுமே மகிழ்ச்சி தரக்கூடியது தான். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் எங்களது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், உண்மையான கடும் சவால், "நாக் அவுட்' சுற்றான காலிறுதியில் தான் காத்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்தது போல, எதிர்வரும் போட்டிகளிலும் அசத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தவிர, சதம் அடித்து போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது விசேஷமானது.
இவ்வாறு சங்ககரா கூறினார்.

பாணியை மாற்றுவாரா தோனி?

இந்திய தேர்வுக்குழுவினர் மற்றும் கேப்டன் தோனி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இவரது தவறான பாணி தொடர்வதால், தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் நேரடியாக தலையிட்டு பேசியுள்ளார். பதிலுக்கு தோனியும் காட்டமாக பேச, காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிகிறது.


உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே தோனிக்கும் தேர்வு குழுவினருக்கும் இடையே உரசல் இருந்து வந்தது. பிரவீண் குமார் காயம் காரணமாக நீக்கப்பட, வினய் குமாருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென தோனி வலியுறுத்தினார். ஆனால், தேர்வுக் குழுவினர் ஸ்ரீசாந்துக்கு வாய்ப்பு கொடுத்து அதிர்ச்சி அளித்தனர்.


சாவ்லா சர்ச்சை:

பின் உலக கோப்பை போட்டிகளின் போது பியுஸ் சாவ்லா மீது அதிக "பாசம்' காட்டினார் தோனி. இதன் விளைவாக தொடர்ந்து சொதப்பிய போதும், அணியில் தவறாமல் இடம் பெற்றார் சாவ்லா. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் "பேட்டிங் ஆர்டரை' மாற்றியது, கடைசி ஓவரை வீச ஹர்பஜனுக்கு பதில் நெஹ்ராவுக்கு வாய்ப்பு அளித்தது போன்ற தவறுகளை செய்தார் தோனி. இதன் காரணமாக இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.


ஸ்ரீகாந்த் மோதல்:

இந்தச்சூழலில் தோனி தனது பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தேர்வுக்குழுவினர் இருவர் வலியுறுத்தியுள்ளனர். "சாவ்லாவுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது. இனி விளையாடும் 11 பேரில் அஷ்வினை சேர்க்க வேண்டும்' என, கூறியுள்ளனர்.

இதனை தோனி ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதையடுத்து, வழக்கமாக வீரர்கள் தேர்வு போன்ற விஷயங்களில் தலையிடாத ஸ்ரீகாந்த் களத்தில் இறங்க நேர்ந்துள்ளது. சென்னையில் நமது வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார்.

தோனியை சந்தித்து, அணித் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது தோனி மற்றும் ஸ்ரீகாந்த் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்துள்ளது. இறுதியில், "முடிவு எடுக்கும் அதிகாரம் கேப்டன் கையில் தான் உள்ளது,'' என்று கூறி அங்கிருந்து சென்று விட்டாõராம் ஸ்ரீகாந்த்.

இவர்களுக்கு இடையே நடந்த மோதலின் போது இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சீனிவாசனும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி ஸ்ரீகாந்திடம் கருத்து கேட்க நிருபர்கள் முற்பட்டனர். அப்போது,""இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டி முடிந்த பின் பேசுவோம்,'' என்று கூறி, நழுவினார்.
--------------


பி.சி.சி.ஐ., மறுப்பு

தோனி-ஸ்ரீகாந்த் தொடர்பான செய்திகளை பி.சி.சி.ஐ., மறுத்துள்ளது. இது குறித்து இதன் செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,""ஆதாரமற்ற செய்திகள் வெளியாகியுள்ளன. தோனி-ஸ்ரீகாந்த் இடையிலான சந்திப்பு நடக்கவே இல்லை,''என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் அஸ்வின், ரெய்னா?

உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இவர்கள் இருவரும் களம் இறக்கப்படலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடைந்த தோல்வியால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. யூசுப் பதானுக்குப் பதிலாக ரெய்னாவும், வேகப்பந்து வீச்சாளர்கள் நெஹ்ரா, அல்லது முனாஃப் படேலுக்குப் பதிலாக அஸ்வினும் அணியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரெய்னா சிறந்த ஆல் ரவுண்டர். எந்த இடத்தில் களம் இறக்கினாலும் அதற்கு ஏற்ப ஆடக் கூடியவர். பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படும் அவரை, தேவைக்கு ஏற்ப பந்து வீசவும் பயன்படுத்தலாம் என்று அணி நிர்வாகம் கருதுவதாகத் தெரிகிறது.


முன்னதாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடைந்த தோல்விக்குப் பின், இந்திய அணியின் நடுவரிசை, பின் வரிசை பேட்டிங், பந்து வீச்சு கடும் விமர்சனத்துக்குள்ளானது.

தொடக்க வீரர்கள் சச்சின், சேவாக், கம்பீர் ஆகியோர் சிறப்பாக ஆடி வலுவான தொடக்கம் அளித்த போதிலும் அடுத்து வந்த வீரர்களின் மோசமான ஆட்டத்தால் இந்திய அணி 296 ரன்களே எடுக்க முடிந்தது.

அதே நேரத்தில் பந்து வீச்சும் குறிப்பிடும்படி இல்லாததால் இந்திய அணி தோல்வியடைந்துவிட்டது.

பலவீனமாகும் பலம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கருத்துத் தெரிவித்த முன்னாள், இந்நாள் பிரபலங்கள் எல்லோருமே "இந்தியாவுக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணி பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளதே அதற்குக் காரணம்' எனக் கூறினர்.


1983-ல் கோப்பையை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த கபில்தேவ் கூட, அன்றைய அணியைவிட இன்றைய அணியே மிகச்சிறந்த அணி என்று குறிப்பிட்டார். போட்டி தொடங்குவதற்கு முன் இந்தியாவின் பேட்டிங் வரிசையும் அப்படித்தான் தோற்றமளித்தது.


அதை நிரூபிக்கும் வகையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே இந்திய அணி 370
ரன்களைக் குவித்தது. அதில் பெரும்பகுதி இரு தனிப்பட்ட வீரர்களால் (சேவாக் 175, கோலி 100) எடுக்கப்பட்டதாகும்.


இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் 120 ரன்களை குவித்தார்.அந்த ஆட்டத்தில் இந்தியா 338 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்டினாலும், நடுவரிசை பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் கடைசி 7 விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு இழந்தது. இதனால் அந்த ஆட்டம் டையில் முடிந்தது.


நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியிருப்பார்களானால் வலுவான ஸ்கோர் மட்டுமின்றி, ஆட்டத்தின்போக்கும் இந்தியாவுக்கு சாதகமாக மாறியிருக்கக்கூடும்.


அதன்பிறகு கத்துக்குட்டிகளான அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்ட இந்திய அணி, குறைந்தபட்ச ஸ்கோரை எடுப்பதற்கும்கூட தடுமாறியது. இறுதியில் போராடியே வென்றது.


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சேவாக் 73, சச்சின் 111, கம்பீர் 69 ரன்கள் குவித்து வலுவான ஸ்கோரை எட்ட உதவியபோதும்கூட, கடைசிக் கட்ட ஓவர்களில் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட வேண்டிய முன்னணி பேட்ஸ்மேன்கள் வருவதும், பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர்.


இதன் விளைவு பெரிய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி 29 ரன்களுக்கு மட்டும் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. 296 ரன்கள் என்பது வெற்றிக்குப் போதுமான ஸ்கோர் என்றாலும், இந்திய பந்துவீச்சின் பலவீனத்தை சரியாகப் பயன்படுத்திய தென் ஆப்பிரிக்காவின் கடைநிலை வீரர்கள் அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்தனர். எதிரணியின் பின்வரிசை வீரர்கள் சிறப்பாக ஆடிய அதேசமயம், இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பில்லாமல் ஆடியது இந்திய அணியின் பலவீனத்தையே வெளிப்படுத்துவதாக அமைந்தது.


போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணியின் பீல்டிங் மோசமாக உள்ளதாகக் கூறப்பட்டது.

பின்னர் பந்துவீச்சு மோசமானது. இப்போது பலமான பேட்டிங்கும் பலவீனமாகத் தொடங்கியுள்ளது. சச்சினும், சேவாக்குமே தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வருகின்றனர்.


போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் களமிறங்கிய பாகிஸ்தான், தொடர் தோல்விகளுக்குப் பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணிகள் கூட அற்புதமாக விளையாடி அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.


பல அணிகளில் சிறப்பான தொடக்க வீரர்கள் இல்லாதபோதும் கூட, தனி ஒரு வீரரை நம்பியில்லை. முக்கிய வீரர்கள் சரியாக விளையாடாதபோதும் பின்வரிசையில் வரும் வீரர்கள் நெருக்கடிக்கு மத்தியிலும் கூட சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடித்தந்து வருகின்றனர்.


ஆனால் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதை பயன்படுத்திக் கொள்ள தவறிவிடுகின்றனர். இப்போதைய இந்திய அணி தனியொரு சச்சினையும், சேவாக்கையும் நம்பித்தான் உள்ளதோ என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.


இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ள நிலையில், சோதனை அடிப்படையில் பந்துவீச்சாளர்களை மாற்ற கேப்டன் தோனி தயங்குவது ஏன் என்பது தெரியவில்லை.


பியூஷ் சாவ்லாவுக்கு மாற்று பந்துவீச்சாளராக அஸ்வின் இருந்தபோதும் கூட அவருக்கு இதுவரை தோனி வாய்ப்பு அளிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் நீங்கலாக வேறு எந்த ஆட்டத்திலும் பியூஷ் சாவ்லா ஜொலிக்கவில்லை. மாறாக ரன்களை வாரி வழங்கினார்.


வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் மோசமாக பந்துவீசினார் என்பதற்காக இதுவரை அவருக்கு அடுத்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.


2007-ல் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அந்த அணி வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தபோது, தொடக்க வீரர்கள் கில்கிறிஸ்ட், ஹேடன் ஆகியோரை வெளியேற்றி திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ஸ்ரீசாந்த் என்பது தோனிக்கு தெரியாததல்ல.


கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடி வரும் சுரேஷ் ரெய்னாவும் தற்போது ஓரம் கட்டப்பட்டுள்ளார். அவர் மிடில் ஆர்டரில் மட்டுமின்றி எந்த நிலையிலும் ஆடக்கூடியவர்.


இப்போதுள்ள இக்கட்டான சூழலில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலுமே கண்டிப்பாக சில மாற்றங்களை செய்வதே புத்திசாலித்தானம். இல்லையென்றால் இந்திய அணி நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.


காலிறுதிச்சுற்று நாக் அவுட் சுற்று என்பதால் ஒவ்வோர் ஆட்டத்திலும் வென்றால் மட்டுமே அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேற முடியும். இனியாவது இந்திய அணி எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

இந்திய அணி வீழ்ந்தது ஏன்?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை அநியாயமாக கோட்டை விட்டது, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி 9 விக்கெட்டுகளை வெறும் 29 ரன்களுக்கு இழந்தது.

பீல்டிங், பவுலிங்கில் சொதப்பியது போன்றவை வீழ்ச்சிக்கு வித்திட்டது. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை "டை' செய்த நம்மவர்கள், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. கேப்டன் தோனியின் தவறான உத்திகள் தொடர்வது மிகுந்த கவலை அளிக்கிறது.

இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில், அயர்லாந்து, நெதர்லாந்துக்கு எதிராக "வீராப்பு' காட்டிய இந்திய அணி, சமபலம் வாய்ந்த மற்ற அணிகளிடம் திணறியது.

நேற்று முன் தினம் நாக்பூரில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் வீணாக வெற்றியை பறிகொடுத்தது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சச்சின்(111), சேவக்(73), காம்பிர்(69) நல்ல அடித்தளம் அமைத்தனர். அடுத்து வந்தவர்கள் சொதப்ப, கடைசி 9 விக்கெட்டுகளை 29 ரன்களுக்கு இழந்தது. 48.4 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


தவறான முடிவு:

இப்போட்டியில் யூசுப் பதானை முன்னதாகவும், விராத் கோஹ்லியை தாமதமாகவும் களமிறக்கி "பேட்டிங் ஆர்டரில்' வீண் குழப்பத்தை ஏற்படுத்தினார் தோனி. பின் பந்துவீச்சிலும் தவறான உத்தியை கையாண்டார். ஹர்பஜன் வசம் ஒரு ஓவர் இருந்த நிலையில், நெஹ்ராவிடம் கடைசி ஓவரை வீணாக கொடுத்தார். இதனை பயன்படுத்திய ராபின் பீட்டர்சன் சிக்சர், பவுண்டரிகளாக விளாச, தென் ஆப்ரிக்கா 49.4 ஓவரில் 300 ரன் எடுத்து வெற்றி பெற்றது.


அணியில் மாற்றம்:

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை' ஆன போது, இந்திய அணி சுதாரித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தென் ஆப்ரிக்க அணியில் கூட போத்தா, ராபின் பீட்டர்சன் என இரண்டு பிரதான "ஸ்பின்னர்கள்' இடம் பெற்றனர்.

ஆனால், இந்திய அணியில் ஹர்பஜன் மட்டும் வாய்ப்பு பெற்றார். தோனிக்கு மிகவும் பிடித்த பியுஸ் சாவ்லா நீக்கப்பட்ட நிலையில், அஷ்வினுக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம். இதே போல யூசுப் பதான் கடந்த போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. இவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம்.

தவிர, பேட்டிங் "பவர்பிளேயில்' எப்படி விளையாடுவது என்று தெரியவில்லை. மற்ற அணிகள் எல்லாம் இந்த நேரத்தில் ரன் மழை பொழியும் போது, இந்திய அணி மட்டும் விக்கெட்டுகளை மடமடவென இழக்கிறது. இதன் காரணமாக "ஓபனிங்' நன்றால் இருந்தாலும், "பினிஷிங்' மோசமாக அமைகிறது.

இத்தவறை போக்குவதற்கு பயிற்சியாளர் கிறிஸ்டன் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய தவறினால், தோனியின் தலைமை பதவி குறித்து கேள்வி எழும். இவர், சூழ்நிலைக்கு ஏற்றவாறு உத்திகளை மாற்றி, அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை

என்னைப் பற்றியும், எனது முடிவுகளைப் பற்றியும் கூறப்படும் விமர்சனங்களையும், குறைகளையும் நான் கண்டுகொள்வதில்லை என்று கேப்டன் தோனி கூறியுள்ளார்.


உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லாவை தோனி களம் இறக்கி வருவதும், அதற்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்தும் கருத்துத் தெரிவித்த தோனி இவ்வாறு கூறினார்.


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக நாகபுரியில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:


இந்திய அணியில் யார் எல்லாம் களம் இறங்குவார்கள் என்பதை இப்போதே கூறிவிட முடியாது. சூழ்நிலைக்கு ஏற்ப எவரெல்லாம் களம் இறங்குவார்கள் என்பது போட்டி தொடங்கும் முன் முடிவு செய்யப்படும்.


யுவராஜ் சிங் சிறப்பாகப் பந்து வீசி வந்தாலும் அவரை முழுவதுமாக பந்து வீச்சாளராகப் பயன்படுத்த முடியாது. அது அவருக்கு நெருக்கடியை அதிகரிக்கும்.

தேர்வு செய்யும் அணியை வைத்து எந்த அளவுக்கு சிறப்பாக விளையாட முடியுமோ அவ்வளவு சிறப்பாக ஆடுவோம் என்றார் தோனி.


லெக் ஸ்பின்னர் சாவ்லாவுக்கு பதிலாக ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினை களம் இறக்க வேண்டுமென்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கூறியுள்ளது குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு, அடுத்தவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது குறித்து நான் அதிகம் கவலைப்படுவது இல்லை. சாவ்லா விளையாடுவது சிறந்தது என்ற காரணத்தினாலேயே அவரைத் தொடர்ந்து களம் இறங்கவைத்து வருகிறேன்.

யுவராஜுக்கு திருமணம்

உலக கோப்பை கிரிக்கெட் விளையாடும் லெவன் அணியில் களமிறங்குவாரா அல்லது வெளியில் உட்கார வைக்கப்படுவாரா என, யுவராஜ் சிங் குறித்து அதிக குழப்பம் நிலவியது.

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் இவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் இதில் பேட் செய்யவில்லை. பின் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பவுலிங்கில் மிரட்டிய இவர் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். நெதர்லாந்துக்கு எதிராகவும் பேட்டிங்கில் ஜொலித்து, "ஹாட்ரிக் அரை சதம் அடித்தார்.

இவரது இந்த எழுச்சிக்கு காரணம் திருமண செய்தியாம். ஆம், யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய அவரது தந்தை யோகராஜ் சிங் முடிவெடுத்துள்ளாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,"" யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய முடிவெடுத்தது உண்மைதான். ஆனால் இப்போது அல்ல.

உலக கோப்பை தொடர் முடிந்தவுடன், திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம், என்றார்.

சர்ச்சையைக் கிளப்பும் விதிமுறை

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆட்டங்களுக்கு இணையாக பரபரப்பாக பேசப்படுவது யூடிஆர்எஸ் (Umpire Decision Review System) எனப்படும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை.


மைதானத்தில் உள்ள நடுவர் அவுட் கொடுத்தாலும், சந்தேகத்தின் பேரில் அதனை எதிர்த்து முறையீடு செய்ய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதே இந்த முறையின் சிறப்பு அம்சம். இது முழுக்க முழுக்க வீரர்களுக்கு சாதகமான அம்சம் என்றாலும், கேப்டன் தோனி, யுவராஜ் உள்பட பல வீரர்கள் இந்த முறை குழப்பத்தை ஏற்படுத்துவதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.


அதே நேரத்தில் இதற்கு வீரர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்துள்ளது. யூடிஆர்எஸ் மூலம் முறையீடு செய்வதற்கான எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென பாகிஸ்தான் அணி கேப்டன் அப்ரிதி கோரிக்கை விடுத்துள்ளார். நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி, தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஸ்மித், ஜிம்பாப்வே கேப்டன் சிகும்புரா உள்ளிட்டோரும் யூடிஆர்எஸ் முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இந்த முறை, கத்தில் இருக்கும் நடுவர்களின் அதிகாரத்தை குறைக்கும் என்பதால் நடுவர் மத்தியில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.


இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அந்த அணி வீரர் பீட்டர்சனுக்கு யூடிஆர்எஸ் முறை மூலம் அவுட் கேட்டும் அது கிடைக்காததால், நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சம்பளத்தின் பெரும்பகுதியை அபராதத்தால் இழந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்.


மனிதத் தவறுகளை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நீக்க முடியும். இதனை அடிப்படையாகக் கொண்டதுதான் யூடிஆர்எஸ். இந்த முறை மூலம் களத்தில் இருக்கும் ஒரு பேட்ஸ்மேனுக்கு நடுவர் அவுட் கொடுக்கும்போது, அதில் சந்தேகம் இருந்தால் அந்த வீரர் 3-வது நடுவரை அணுகமுடியும்.


அதே போல ஒரு வீரர் அவுட் இல்லை என்று நடுவர் அறிவித்தால், அதனை எதிர்த்து பீல்டிங் செய்யும் அணியினர் மூன்றாவது நடுவரிடம் முறையீடு செய்ய முடியும். அவர் விடியோ மூலம் மீண்டும் ஆய்வு செய்து தனது முடிவை வழங்குவார். இரு அணி வீரர்களுமே நடுவரின் தீர்ப்பை எதிர்த்து இரண்டு முறை முறையீடு செய்ய முடியும்.

அவர்களது முறையீடு சரியாக இருந்து ஏற்கப்பட்டால் அவர்களுக்கான இரண்டு வாய்ப்புகளும் அப்படியே இருக்கும். முறையீடு தவறாக இருந்தால், ஒவ்வொரு முறையீடுக்கும் ஒரு வாய்ப்பு கழித்துக் கொள்ளப்படும்.


முக்கியமாக எல்பிடபிள்யூ, ரன் அவுட், ஸ்டம்பிங் ஆகிய முறையில் அவுட் செய்யப்படும்போது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்பதே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம்.


முன்பெல்லாம் மைதானத்தில் இருக்கும் நடுவர் அவுட் கொடுத்துவிட்டால், அது தவறு என்றாலும் பேட்ஸ்மேன்கள் அதனை ஏற்றுக் கொண்டு கண்டிப்பாக வெளியேற வேண்டும். இப்படி பலமுறை நடுவரின் தவறான முடிவால் ஆட்டமிழந்த வீரர்கள் ஏராளம். அதே நேரத்தில் பேட்ஸ்மேன் அவுட் ஆகியிருந்தும், நடுவரால் அவுட் இல்லை என அறிவிக்கப்படும்போது, பீல்டிங் செய்யும் வீரர்களுக்கு கடும் எரிச்சல் ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது வீரர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளும் வகையில் இந்த முறை அமலில் உள்ளது.


பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு முதன்முறையாக 2009 நவம்பர் 24-ம் தேதி நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.


அதன்பிறகு இம்முறை சில நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களின் ஒப்புதலோடு பயன்படுத்தப்பட்டபோதும், ஒருநாள் போட்டியில் முதன்முறையாக 2011 ஜனவரியில் தான் (ஆஸ்திரேலியா-இங்கிலாந்துக்கு இடையிலான தொடர்) இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.


பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் 2011 உலகக் கோப்பையில் யூடிஆர்எஸ் முறை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என அறிவித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). உலகக் கோப்பையில் அமல்படுத்தப்பட்ட பின் ஒன்றிரண்டு ஆட்டங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


பெங்களூரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதன்முறையாக சர்ச்சைக்குள்ளானது இந்த யூடிஆர்எஸ் முறை. இயன் பெல்லுக்கு எல்டபிள்யூ முறையில் அவுட் கேட்டு யூடிஆர்எஸ் மூலம் மூன்றாவது நடுவரை அணுகியது இந்திய அணி. டி.வி. ரீபிளேயில் பந்து ஸ்டம்பை தாக்குவது உறுதிசெய்யப்பட்டபோதும், அவருக்கு அவுட் கொடுக்கப்படவில்லை. இதனால் ஏற்கெனவே இந்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த கேப்டன் தோனி அதன்பின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.


ஸ்டம்புக்கும், இயன் பெல் நின்ற இடத்துக்கும் இடையிலான தூரம் 2.5 மீட்டராக இருந்ததாலேயே அவருக்கு அவுட் கொடுக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. அவருக்கு அவுட் கொடுக்கப்படாதது, ஆட்டத்தின் போக்கையே மாற்றியது, இந்தியா- இங்கிலாந்து இடையிலான அந்த ஆட்டம் "டை'யில் முடிந்தது.


இதனால் யூடிஆர்எஸ் முறை குறித்து தோனி தனது அதிருப்தியைத் தெரிவித்தார். இதற்கு ஐசிசி உடனடியாக பதிலடி கொடுத்தது. யூடிஆர்எஸ் விதிமுறைகளை தோனி சரியாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஐசிசி கூறியது. இதையடுத்து தோனிக்கு ஆதரவாக களம் இறங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஐசிசி-க்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.


இதனிடையே யூடிஆர்எஸ் விதியில் எல்பிடபிள்யூ முறையில் திடீரென மாற்றம் செய்துள்ளது ஐசிசி. இதுவரை ஸ்டெம்புக்கும் பேட்ஸ்மேன் பந்தை காலில் வாங்கும் இடத்துக்குமானதூரம் 2.5 மீட்டர் தூரம் என்று இருந்ததை 3.5 மீட்டர் என அதிகரித்துள்ளனர். இந்த மாற்றத்தின் பின்னணி என்ன என்பதும் தெரியவில்லை. கிரிக்கெட்டில் இதுவரை எந்த புதிய விதிமுறைகளும் இவ்வளவு சர்ச்சைகளை சந்தித்தது இல்லை.


இந்த சர்ச்சைகளுக்குப் பின் யூடிஆர்எஸ் விதிமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை இப்போது புதிதாக எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே தனது பயணத்தைத் தொடர்கிறது யூடிஆர்எஸ்.

உலக கோப்பை தொடருக்கு சிக்கல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பெரும்பாலான போட்டிகள் இந்தியாவில் நடக்க உள்ளன. இப்போட்டிகளின் போது தாக்குதல் நடத்த அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக மத்திய புலனாய்வு இயக்குனர், அனைத்து கடலோர மாநில உள்துறைச் செயலர், டி.ஜி.பி.,க்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.


இதில் கூறப்பட்டு இருப்பதாவது:

உலக கோப்பை தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா போன்ற பயங்கரவாதிகள் இயக்கம், அடுத்த சில வாரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு புனே, ஜெர்மனி பேக்கரியில் தாக்குதல் நடத்திய ஜபைடுதீன் அன்சாரி மற்றும் அவரது சகாக்கள் இணைந்து திட்டம் தீட்டியுள்ளனர்.


மும்பை மாதிரி:

இந்த தாக்குதலை 26/11 மும்பை சம்பவம் போல, நடத்துவார்கள் என்று தெரிகிறது. இதில் ஈடுபட உள்ள பயங்கரவாதிகள் சிலர், ஏற்கனவே இந்தியாவுக்குள் புகுந்து விட்டனர். மேலும் சிலர் இங்கு வருவதற்கு நேரம் பார்த்துக்கொண்டுள்ளனர்.

இதனால் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, எவ்வித மோசமான சம்பவமும் நடந்து விடாமல், தடுக்கும் வழிகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் காரணமாக, ஏற்கனவே போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறுகையில்,"" பயங்கரவாத மிரட்டல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு வருகிறோம்.

தவிர, மாநில அரசுகளுடன், உள்ளூர் நிர்வாகங்கள் இணைந்து, வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்,'' என்றார்.

வலுவற்ற இந்திய சுழற் பந்துவீச்சு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் செவ்வாய்க்கிழமை வரை 24 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.


தொடக்கத்தில் சில ஆட்டங்களில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், மெல்ல மெல்ல பந்துவீச்சாளர்களும் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர்.


இந்திய ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 315 ஆட்டங்களில் விளையாடி 306 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிதி (4 ஆட்டங்களில் 15 விக்கெட்), உலகக் கோப்பையில்தான் முதல் முறையாக களம் கண்ட தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் (3 ஆட்டம், 11 விக்கெட்) ஆகியோர் பட்டியலில் முதலிரண்டு இடத்தைப் பிடித்துள்ளனர்.


ஒரு காலத்தில் சுழற் பந்துவீச்சு என்றாலே இந்தியாதான் என்ற நிலை இருந்தது. உலகப் புகழ்பெற்ற சுழற் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர்.


சுபாஷ் குப்தே (36 டெஸ்ட், 149 விக்கெட்), பிஷன் சிங் பேடி (67-266), சந்திரசேகர் (58-242), பிரசன்னா (49-189), வெங்கட்ராகவன் (57-156), அனில் கும்ப்ளே (132-619, 271 ஒரு தின ஆட்டம், 337 விக்கெட்), திலிப் தோஷி (33-114) போன்ற சுழற் பந்துவீச்சாளர்கள் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர்.


இந்திய அணிக்கு புகழ் பெற்ற பல வெற்றிகளை அவர்கள் பெற்றுத் தந்துள்ளனர். அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த இந்திய அணி, சுழற் பந்துவீச்சாளர்கள் பற்றாக்குறையால் இப்போது திணறி வருகிறது.


ஹர்பஜன் அளவுக்கு புகழ் பெறாத மேற்கிந்தியத் தீவுகளின் சுலைமான் பென் (3 ஆட்டம், 8 விக்.), இங்கிலாந்தின் ஸ்வான் (4 ஆட்டம், 7 விக்.), கனடாவின் பாலாஜி ராவ் (4 ஆட்டம், 7 விக்.), தென் ஆப்பிரிக்காவின் ராபின் பீட்டர்சன் (3 ஆட்டம், 5 விக்.), அயர்லாந்தின் டாக்ரெல் (3 ஆட்டம், 5 விக்.), ஜிம்பாப்வேயின் ரேமண்ட் பிரைஸ் (3 ஆட்டம், 4 விக்.) ஆகியோர் கூட இந்த உலகக் கோப்பை போட்டியில் ஓரளவு முத்திரை பதித்துள்ளனர் என்றே சொல்லலாம்.


ஆனால், 2001-ல் ஆஸ்திரேலிய அணியை கதிகலங்க வைத்தவரும், 93 டெஸ்டுகளில் 393 விக்கெட்டுகளையும், 220 ஒரு தின ஆட்டங்களில் 248 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளவருமான ஹர்பஜன் சிங், இந்த உலகக் கோப்பையில் இதுவரை 3 ஆட்டங்களில் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.


அதுவும் அயர்லாந்துக்கு எதிராக அவரால் 9 ஓவர் வீசியும் விக்கெட் எதையும் வீழ்த்த முடியவில்லை; வங்கதேசத்துக்கு எதிராக ஒரே ஒரு விக்கெட் வீழ்த்தினார்.


மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான பியூஷ் சாவ்லா அயர்லாந்து (0-56), இங்கிலாந்துக்கு (2-71) எதிராக மிகவும் மோசமாகப் பந்துவீசினார் என்றே கூறலாம். 2008 ஜூலையில் பாகிஸ்தானுடனான ஆட்டத்துக்குப் பின் சுமார் இரண்டரை ஆண்டுகளில் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரே ஒரு ஆட்டத்தில் சாவ்லா பங்கேற்றுள்ளார்.


அவர் உலகக் கோப்பை போட்டிக்குத் தேர்வானபோதே பலர் தங்கள் வியப்பை வெளிப்படுத்தினர்.


பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர்களான யுவராஜ் சிங் (அயர்லாந்து ஆட்டம் நீங்கலாக), யூசுப் பதான் ஆகியோரும் எதிர்பார்த்தபடி விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.


ஜாகீர் கான் தவிர மற்ற வேகப் பந்துவீச்சாளர்களும் எதிர்பார்த்த அளவு பிரகாசிக்காத நிலையில், இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டுமானால், சுழற் பந்துவீச்சாளர்களையே நம்பி உள்ளது.


அற்புதமான சுழற் பந்துவீச்சு பாரம்பரியத்துக்கு சொந்தமான இந்திய அணியின் இப்போதைய சுழற் பந்துவீச்சாளர்கள் இனிவரும் ஆட்டங்களிலாவது தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஏழு பேட்ஸ்மேன் பார்முலா தொடரும்

ஐந்தாவது பவுலர் வேலையை "பார்ட் டைம்' பவுலர்கள் பார்த்துக்கொள்வர். இதனால் ஏழு பேட்ஸ்மேன்களுடன் இன்று களமிறங்குவோம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, சின்னச்சாமி மைதானத்தில் இதுவரை இரண்டு உலக கோப்பை லீக் போட்டிகள் நடந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் நான்கு இன்னிங்சில், அனைத்து அணிகளும் 326 ரன்களுக்கு மேல் குவித்தது. இதனால் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக பெங்களூரு மாறியுள்ளது.

இந்நிலையில் இன்று இந்திய அணி தனது மூன்றாவது லீக் போட்டியில், அயர்லாந்தை சந்திக்கிறது. இந்த போட்டி குறித்து கேப்டன் தோனி கூறியது:

பெங்களூரு மைதானம் ஒளிவெள்ளத்தில் பேட்டிங் செய்ய சிறப்பாக உள்ளது. இங்கு இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது, பந்து பேட்டிற்கு நன்றாக வருகிறது. சுழலுக்கும் சற்று ஒத்துழைப்பதால், கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கப் போவதில்லை.

பொதுவாக இந்தியாவில் வேகப்பந்துக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்கள் இல்லை. இது மோசமானது. பந்துவீச்சில் திருப்பம் ஏற்படும் நிலை இருக்கும் போது, வேகப்பந்துக்கு சாதகமாக எதிர்பார்க்க முடியாது.


பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்:

இன்று பந்து வீச்சில் திருப்பம் ஏற்படுமா இல்லையா என்பதை சொல்வது மிகவும் கடினம். ஏனெனில் கடைசியாக இங்கு நடந்த 2 போட்டிகளில் 1300க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்கப்பட்டன. இன்றும், இதுபோல அதிக ரன்கள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். ஏனெனில் இங்கு பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.


ஐந்தாவது பவுலர்?

ஐந்து பவுலர்களுடன் களமிறங்குவது என்பது தேவையில்லாதது. நமது பலத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அணிக்கு 30 ரன்கள் போதவில்லை என்ற நிலையில், யூசுப் பதான் அணியில் இருந்தால், அவரும் யுவராஜ் சிங்கும் சேர்ந்து ஐந்தாவது பவுலர் பணியை செய்வார்கள். இந்நிலையில் ஏழு பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கலாம்.

இந்திய அணியின் பவுலர்கள் இதுவரை பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஒரு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால், அப்புறம் எல்லாம் மாறிவிடும். இருப்பினும், பேட்ஸ்மேன்கள் முழு அளவில் திறமை வெளிப்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. அணியில் அனைவரும் ரன்கள் குவிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு இடத்துக்கும் போட்டி அதிகரித்துள்ளது.


கோஹ்லிக்கு பாராட்டு:

யுவராஜ் நான்காவது இடத்தில் களமிறங்க விரும்புகிறார். இந்த இடத்தில் வரும் விராத் கோஹ்லி, வேக மற்றும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தவிர, 5, 6 அல்லது 7வது இடமாக இருந்தாலும் திறமையாக விளையாடுகிறார். ஆனால் நேரத்துக்கு ஏற்ப ரன்விகிதத்தை அதிகரிக்க யுவராஜ், யூசுப் பதானை களமிறக்கலாம்.


அஷ்வினுக்கு வாய்ப்பு?

அயர்லாந்து அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக உள்ளனர். இதனால் ஹர்பஜன், யூசுப் பதான் போன்றவர்கள் இருந்தாலும், கூடுதல் "ஆப்' ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டிய முடிவு ஏற்பட்டுள்ளது. சாவ்லா கடந்த போட்டிகளில் அதிக ரன்கள் கொடுத்திருந்தாலும், அவர் முக்கிய நேரங்களில் உதவுவார். அதேநேரத்தில் அஷ்வினும் இதற்கு முன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக, முதல் 10 ஓவர்கள் கூட பவுலிங் செய்யச் சொல்லலாம்.


பலவீனமானது அல்ல:

உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் எந்த அணியையும், பலவீனமானது என்று நாங்கள் எப்போதும் கூறியதில்லை. இதனால், அயர்லாந்துக்கு எதிராக தவறு செய்யமாட்டோம். இந்த அணியின் கெவின் ஓ பிரையன், இங்கிலாந்துக்கு எதிராக நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நமக்கு எதிராக இப்படி விளையாட மாட்டார் என்று நம்புகிறேன். இவரை மீண்டும் ரன் அவுட்டாக்க முயற்சிப்போம்.
இவ்வாறு தோனி கூறினார்.


உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்

""ரசிர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்,'' என, கேப்டன் தோனி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" வங்கதேச தோல்வியடைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணியினர் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தியது வருந்தத்தக்கது. வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

பதிலடி கொடுக்குமா இலங்கை?

உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலிய அணி, இலங்கையை சந்திக்கிறது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, கடந்த 2007ல் நடந்த உலக கோப்பை பைனலில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இலங்கை அணி தயாராக உள்ளது.

இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடக்கும் "ஏ' பிரிவு லீக் போட்டியில், நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது.


பதிலடி வாய்ப்பு:

கடந்த 2007ல் கரீபிய மண்ணில் நடந்த உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை வீழ்த்தியது. இலங்கை அணி, இம்முறை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை சந்திக்க இருப்பதால், கடந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில், இலங்கை அணி காலிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம்.


"டாப்-ஆர்டர்' பலம்:

இலங்கை அணியின் "டாப்-ஆர்டர்' பலமாக காட்சி அளிக்கிறது. துவக்க வீரர்களாக உபுல் தரங்கா, தில்ஷன் சாதிக்கும் பட்சத்தில் இமாலய இலக்கை அடையலாம். கடந்த மூன்று போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேப்டன் சங்ககரா, தனது "பார்மை' தக்க வைத்துக் கொள்ளும் பட்சத்தில், "மிடில்-ஆர்டரில்' விக்கெட் வீழ்ச்சியை தவிர்க்கலாம்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சோபிக்கத் தவறியதால் சர்ச்சையில் சிக்கித் தவிக்கும் மகிலா ஜெயவர்தனா, சமரவீரா உள்ளிட்டோர் இன்று எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்களை தவிர "ஆல்-ரவுண்டர்' மாத்யூஸ், சமர சில்வா உள்ளிட்டோரும் அதிரடி காட்டினால் கூடுதல் பலம்.


மலிங்கா நம்பிக்கை:

கென்யாவுக்கு எதிராக "ஹாட்ரிக்' சாதனை படைத்த இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர், இன்றும் அசத்தலாக செயல்படும் பட்சத்தில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலாகிவிடும்.

இவருக்கு குலசேகரா, பெரேரா, மாத்யூஸ் உள்ளிட்ட சக வேகங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் நல்லது. சுழலில் அனுபவ முரளிதரன் இருப்பது பலம். கடந்த போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்காத இவர், "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விக்கெட் வேட்டை நடத்த வாய்ப்பு உள்ளது. இவருடன், அஜந்தா மெண்டிஸ், ஹெராத், தில்ஷன் உள்ளிட்ட சக சுழற்பந்துவீச்சாளர்களும் இணைந்து மிரட்டலாம்.


"ஹாட்ரிக்' வாய்ப்பு:

ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளை வீழ்த்திய ஆஸ்திரேலியா, இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர் கொள்ள இருப்பது சவாலான விஷயம். இதில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், "ஹாட்ரிக்' வெற்றி பெற்று, காலிறுதி வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தவிர, பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பை அரங்கில் தொடர்ந்து 25வது வெற்றியை பதிவு செய்து புதிய வரலாறு படைக்கலாம்.


வாட்சன் எதிர்பார்ப்பு:

ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அரைசதம் கடந்து சூப்பர் துவக்கம் கொடுத்த "ஆல்-ரவுண்டர்' ஷேன் வாட்சன், இன்றும் தனது அதிரடி ஆட்டத்தை தொடரலாம். இவருக்கு பிராட் ஹாடின் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் இமாலய இலக்கை அடையலாம்.

பாண்டிங், மைக்கேல் கிளார்க் உள்ளிட்டோர் தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்தினால் நல்லது. "மிடில்-ஆர்டரில்' காமிரான் ஒயிட், டேவிட் ஹசி சாதிக்கும் பட்சத்தில் இலங்கை மண்ணில் ரன் மழை பொழியலாம்.


ஜான்சன் அபாரம்:

கடந்த இரண்டு போட்டியில் எட்டு விக்கெட் வீழ்த்தி உள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன், இன்றும் தனது விக்கெட் வேட்டையை தொடர வாய்ப்பு உள்ளது. இவருடன் அனுபவ பிரட் லீ இணைவது வேகப்பந்துவீச்சின் பலத்தை அதிகரித்துள்ளது.

டெய்ட், வாட்சன் உள்ளிட்ட வேகங்கள், "மிடில்-ஓவரில்' துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில், இலங்கை அணியின் ரன் வேட்டையை தடுக்கலாம். சுழலில் கிரெஜ்ஜா நம்பிக்கை அளிக்கிறார். இவருக்கு ஸ்டீவன் ஸ்மித் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் இலங்கை அணிக்கு சிக்கலாகிவிடும்.

இரு அணிகளிலும் பேட்டிங், பவுலிங்கில் சிறந்த வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை இன்று எதிர்பார்க்கலாம்.

என்ன செய்கிறார் டிராவிட்?

கடந்த 2007 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக இருந்த கங்குலி, கும்ளே இம்முறை வேறு பணிகளில் "பிசி'யாக உள்ளனர். ஆனால், டிராவிட் மட்டும் "டிவி'யில் போட்டிகளை பார்த்து பொழுதை கழிக்கிறார்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. 2003 உலக கோப்பை தொடரில் இந்தியாவை பைனலுக்கு அழைத்துச் சென்றார். 2007ல் சாதாரண வீரராக களமிறங்கினார்.

ஓய்வு பெற்ற இவரை, ஐ.பி.எல்., தொடரில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

இருப்பினும் அபார கிரிக்கெட் அறிவு கொண்ட இவர், இம்முறை வர்ணணையாளராக தனது பணியை தொடர்கிறார். கட்டுரைகள் எழுதுவது, "டிவி' விவாதங்களிலும் பங்கேற்று வருகிறார்.

சுழல் ஜாம்பவான் கும்ளே, பெங்களூரு ஐ.பி.எல்., அணியின் ஆலோசகராகி விட்டார். தவிர, கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான இவர், பெங்களூருவில் போட்டிகளை நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். உலக கோப்பை தொடர் குறித்து கட்டுரைகள் எழுதுவதிலும் தனது நேரத்தை செலவிடுகிறார்.


டிராவிட் பரிதாபம்:

ஆனால், கடந்த உலக கோப்பை தொடரில் அணியின் கேப்டனாக களமிறங்கிய டிராவிட்டின் நிலை தான் பரிதாபமாக உள்ளது. இந்திய அணியின் "சுவர்' என்று அழைக்கப்பட்ட இவர், பெங்களூரு ஐ.பி.எல்., அணியில் இருந்து, ராஜஸ்தான் அணிக்கு மாறினார்.

"டிவி'யில் வர்ணணை செய்யவோ, கட்டுரை எழுதும் பணியிலோ ஈடுபடவில்லை. மாறாக, வீட்டில் அமைதியாக உட்கார்ந்து "டிவி' யில் உலக கோப்பை போட்டிகளை கண்டு களித்து வருகிறார்

பலவீனமான இந்திய பவுலிங்

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களோடு ஒப்பிடுகையில், பவுலர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. பவுலிங் மிகவும் பலவீனமாக இருப்பது கண்கூடாகத் தெரிகிறது,''என, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு 1983ல் உலக கோப்பை பெற்றுத் தந்தவர் கபில் தேவ். இதற்கு பின் இம்முறை தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த இரண்டு லீக் போட்டியில் நமது பவுலர்கள் ஏமாற்றினர்.

முதல் போட்டியில் பலம்குன்றிய வங்கதேச அணி 283 ரன்கள் எடுத்தது. அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணி 338 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. இதனால், இந்திய வெற்றி நழுவியது. இது குறித்து கபில் தேவ் அளித்த பேட்டி:

இந்திய அணியின் பவுலிங் மிகவும் பலவீனமாக உள்ளது. இதனை நான் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. பேட்ஸ்மேன்களோடு ஒப்பிடுகையில், பவுலர்களின் செயல்பாடு மோசமாக உள்ளது. உதாரணமாக இங்கிலாந்துக்கு எதிராக 338 ரன்களை எடுத்த போதும், போட்டி "டை' ஆனது இது மிகுந்த மிகுந்த ஏமாற்றம் அளித்தது.

இதற்காக பவுலர்களை விமர்சிக்க விரும்பவில்லை. இவர்களால் சிறப்பாக பந்துவீச முடியாது என்று கூற இயலாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர். என்னை பொறுத்தவரை அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி, வெற்றி பெற்றதாக குறிப்பிடுவேன்.


அதிரடி மாற்றம்:

தற்போது, கிரிக்கெட் அரங்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 434 ரன்கள் எடுத்தும், ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததை காண முடிந்தது. எனவே, நல்ல விஷயங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது. அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும். தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.


வேகம் இல்லை:

உலக கோப்பை தொடர் நடக்கும் இந்த நேரத்தில், இந்திய அணியில் அதிவேகப்பந்துவீச்சாளர் இல்லை என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை. சச்சின், சேவக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்ரிக்க அணிகளில் காண முடியவில்லை. எனவே, நம்மிடம் இருப்பது, மற்றவர்களிடம் இல்லை.

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடாது. எதிர்காலத்தில் "சூப்பர் பாஸ்ட்' பவுலர்கள் இரண்டு பேர் தேவை என்றால், அதற்காக திட்டம் வகுக்க வேண்டும்.


ஆர்வம் வேண்டும்:

ஒவ்வொருவரும் சச்சின், சேவக் அல்லது தோனியாக வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். சிலராவது வேகப்பந்துவீச்சாளராக ஆர்வம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர் தங்களது குழந்தைகள் கும்ளே போல் அல்லாமல் சச்சின் மாதிரி வர வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். இந்திய அணியின் வெற்றி நாயகர்களில் கும்ளேவும் ஒருவர் என்பதை மறந்து விடுகின்றனர்.


வீண் நெருக்கடி:

ஐ.சி.சி., நடத்தும் முக்கிய தொடர்களில், போட்டிகளின் முடிவை தான் நம்மவர்கள் அதிகம் நினைக்கின்றனர். இதன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டு, சிறப்பாக செயல்பட முடியாமல் போகிறது. இந்த நெருக்கடியில் இருந்து விடுபடும் போது தான் வெற்றிப் பாதையை கண்டு கொள்ள முடியும். தற்போதைய உலக கோப்பை தொடரில் குறிப்பிட்ட அணிக்கு தான் வாய்ப்பு என்று உறுதியாக கூற முடியாது. எந்த ஒரு அணியும் முழுமையாக ஆதிக்கம் செலுத்த இயலாது.


தவறான முடிவு:

அடுத்த உலக கோப்பை தொடரில் கத்துக் குட்டி அணிகள் நீக்கப்படும் என்ற ஐ.சி.சி., முடிவு தவறானது. இது, கிரிக்கெட்டை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் முயற்சிக்கு தடையாக அமையும். அனுபவம் இல்லாத அணிகளோடு மோதும் போட்டிகள், முன்னணி அணிகளுக்கு சிறந்த பயிற்சியாக அமைகின்றன.

என்னை பொறுத்தவரை கத்துக்குட்டி அணிகள் மற்றும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளின் "பி' அணிகள் பங்கேற்கும் இன்னொரு உலக கோப்பை தொடரை நடத்த வேண்டும்.
இவ்வாறு கபில் தேவ் கூறினார்

உலக கோப்பை தொடரில் சூதாட்டம்

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேக்கு இடையிலான போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐ.சி.சி., விசாரணையில் ஈடுபட்டுள்ளது. தவிர, இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி "டை' ஆகும் என்று வார்ன் எப்படி கணித்தார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.


லார்ட்ஸ் டெஸ்டில் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட் (10 ஆண்டு), முகமது ஆசிப் (7 ஆண்டு), முகமது ஆமிர் (5 ஆண்டு) ஆகியோருக்கு சமீபத்தில் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தண்டனை கொடுத்தது.

இதனால் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஐ.சி.சி., தீவிரமாக கண்காணித்து வருகிறது. இருப்பினும், கிரிக்கெட் உலகை சூதாட்டத்தின் நிழல் மீண்டும் படர்ந்துள்ளது போலத் தோன்றுகிறது.

கடந்த பிப். 25ல் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேக்கு இடையிலான லீக் போட்டி ஆமதாபாத்தில் நடந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், ஹாடின் இணைந்து முதலில் மந்தமான துவக்கம் கொடுத்தனர். முதல் 11 ஓவரில் 28 ரன்கள் தான் எடுத்தனர்.

15 ஓவரின் முடிவில் 53 ரன்கள் எடுத்தனர். தவிர, முதல் 2 ஓவரில் 5 ரன் மட்டுமே எடுத்தது, ஐ.சி.சி.,க்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐ.சி.சி., ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இதனை ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டிம் நீல்சன் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்,"" எல்லோரும் வாட்சன், ஹாடின் மெதுவாக விளையாடியது குறித்து தான் பேசுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் நன்றாகத்தான் விளையாடினர்.

ஜிம்பாப்வே அணியினர் துவக்கத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியதால், விக்கெட்டுகளை பாதுகாக்க வேண்டியது இருந்தது. எங்களைப் பொறுத்தவரையில் சரியாகத்தான் விளையாடினோம்,'' என்றார்.


வார்னுக்கு சிக்கல்:

அதேநேரம் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி "டை' ஆகும் என, ஏழு மணி நேரம் முன்னதாக, ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வீரர் வார்ன், கணித்ததும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதை இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பாராட்டினாலும், பல்வேறு தரப்பில் இருந்து சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் ஒருவர் கணிக்கும் போது, யாராவது ஒருவர் வெற்றி பெறுவார்கள் என்று தான் கூறமுடியும். மாறாக வார்ன் மட்டும், "டை' ஆகும் என்று எப்படி சொன்னார் என்பது, பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.


அமிர் சொகைல் எதிர்ப்பு:

சூதாட்ட சந்தேகம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அமிர் சொகைல் கூறுகையில்,"" போட்டி "டை' ஆகும் என, இந்தியா அல்லது பாகிஸ்தான் வீரர்கள் யாராவது தெரிவித்து இருந்தால், இந்நேரம் மேற்கு நாடுகளின் "மீடியா' பெரிய அளவில் விவாதித்து, குதித்திருக்கும். ஆனால், சொன்னது ஆஸ்திரேலியா வீரர் என்றவுடன் "ஜீனியஸ்' என்கிறார்கள்,'' என்றார்.