சென்னை அணியை நீக்கலாம் - சுப்ரீம் கோர்ட் அதிரடி

பல முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல் ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணியை தகுதிநீக்கம் செய்யலாம். 

அணியின் உரிமையாளர்கள்  விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். சூதாட்ட விசாரணையில் இடம் பெற்றவர்கள் பி.சி.சி.ஐ., தேர்தலில் இருந்து விலகி இருக்க வேண்டும்,’ என, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தெரிவித்தது. இதையடுத்து மீண்டும் பி.சி.சி.ஐ., தலைவராகும் சீனிவாசனின் கனவு தகர்ந்தது.                 
              
ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் (2013) நடந்த ‘ஸ்பாட் பிக்சிங்’ எனப்படும் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் குழு, தனது 35 பக்க இறுதி விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.      
                                                                               
இதில் குற்றம் சுமத்தப்பட்ட 13 பேரில், வீரர்களை தவிர்த்து 4 பேரின் செயல்பாடு குறித்த விவரத்தை மட்டும் கோர்ட் வெளியிட்டது. இதன் மீதான விசாரணை தற்போது நடக்கிறது. இதில், பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த சீனிவாசன் மீது கடுமையான கருத்துக்களை, கோர்ட் தெரிவித்தது.                               
இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கலிபுல்லா ஆகியோர் அடங்கிய ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சென்னை அணி நிர்வாகிகளில் ஒருவர் தான் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் என முத்கல் குழு அறிக்கையில் குறிப்பிட்டதை ஏற்கிறோம்,’ என, பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டது.        
                                         
இதுகுறித்து ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ கூறியது:     
                         
பி.சி.சி.ஐ., விதிமுறைப்படி, சென்னை அணி பல முறைகேடுகளில் ஈடுபட்டது முத்கல் அறிக்கையில் அம்பலமானது. இதுவே போதுமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல் சென்னை அணியை தகுதிநீக்கம் செய்யலாம். சீனிவாசனுக்கு முக்கியமானது அவரது தலைவர் பதவியா அல்லது சென்னை அணியா? 

இவர், ஆதாயம் தரும் இரட்டை பதவிகளில் இருப்பது தெளிவாகிறது. சென்னை அணியை வாங்க ரூ. 400 கோடி முதலீடு செய்வது என்ற முடிவை எடுத்தது யார்?, சென்னை அணி மற்றும் சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் இயக்குனர்கள் தொடர்பான விவரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். 

குருநாத்திற்கு தொடர்பு இல்லை என்றால், அணியின் உரிமையாளர் யார்? வீரர்களை தேர்வு செய்தது கம்பெனியா? அணியை கட்டுப்படுத்தியது யார் என்பது போன்ற விவரங்களை அறிய விரும்புகிறோம். திட்டமிட்டபடி வரும் டிச.17ல் இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) பொதுக்குழுவை நடத்தலாம். 

புதிதாத தேர்தல் நடத்தி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யலாம். இதில், முக்கல் குழுவில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் இடம் பெறக் கூடாது.        
                      
இவ்வாறு ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ தெரிவித்தது.     
                         
இவ்வழக்கின் அடுத்தகட்ட  விசாரணை வரும் டிச.1ல் நடக்கும்.                              

சென்னைக்கு ஆபத்து: 

ஐ.பி.எல்., தொடர் விதிமுறைப்படி, அணி உரிமையாளர்கள் ‘பெட்டிங்’, ‘பிக்சிங்’ செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது. இதை மீறும் பட்சத்தில் அந்த அணி தொடரில் இருந்து நீக்கப்படும். 

முத்கல் அறிக்கையில் குருநாத் மெய்யப்பன் ‘பெட்டிங்கில்’ ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், சென்னை அணி நிர்வாகிகளில் ஒருவர் என, பி.சி.சி.ஐ., தற்போது கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளது. தையடுத்து, சுப்ரீம் கோர்ட் கருத்துப்படி  சென்னை அணி, ஐ.பி.எல்., தொடரில் இருந்து விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முத்கல் அறிக்கையில் சீனிவாசன் பெயரும் இடம் பெற்றிருப்பதால், அவர் மீண்டும் பி.சி.சி.ஐ., தேர்தலில் போட்டியிட முடியாது. மொத்தத்தில் சீனிவாசனுக்கு இரட்டை ‘அடி’ விழுந்துள்ளது.

பிலிப் ஹியுஸ் உயிரை பறித்த பவுன்சர்

சர்வதேச கிரிக்கெட்டில் நேற்று கருப்பு நாளாக அமைந்தது. ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் தலையில் பலத்த காய­ம­டைந்த பிலிப் ஹியுஸ், கடைசி வரை நினைவு திரும்பாமல் மரணம் அடைந்தார். இதனால், கி­ரிக்கெட் உலகம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.              
    
ஆஸ்திரேலியாவில் நடக்கும் முதல் தர போட்டி ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடர். இதில் நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலிய அணிகள் மோதின. அப்போது, சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’, தெற்கு ஆஸ்­தி­­ரே­லிய வீரர் பிலிப் ஹியுஸ், 25, தலை­யில் பலமாக தாக்கியது. 

உடனடியாக நிலை குலைந்த இவர், நினைவு இழந்து கீழே சரிந்தார். செயின்ட் வின்சன்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்­லப்­பட்ட இவ­ருக்கு, தலையில் ‘ஆப்­ப­ரே­ஷன்’ செய்யப்­பட்­டது. 

மூளைக்கு ஏற்படும் அதிர்ச்சியை தடுக்கும் வகையில், தொடர்ந்து ‘கோமா’ நிலை­யில் வைக்­கப்பட்­டி­ருந்தார். 48 மணி நேரத்துக்குப் பின் தான் எதுவும் சொல்ல முடியும் என, டாக்டர்கள் தெரிவித்தனர். 

மூளையில் தொடர்ந்து ரத்தக் கசிவு இருந்த நிலையில், மருத்துவ கருவிகள் உதவியுடன் தாக்குப்பிடித்து வந்தார். ஆனால், இவரது உடல் நிலையில் எவ்வித முன்­னேற்­றமும் ஏற்­படவில்லை. சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், நினைவு திரும்பாமலேயே, நேற்று ஹியுஸ் மரணம் அடைந்தார்.                   
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி டாக்டர் பீட்டர் புருக்னர் கூறுகையில்,‘‘ஹியுஸ் மரணச் செய்தியை அறிவிப்பது சோகமாக உள்ளது. மிகவும் அரிதான விதத்தில், இவரது கழுத்து பகுதியில் பந்து தாக்கியுள்ளது. 

இதில், தமனியில் பிளவு ஏற்பட, மூளையில் அதிகமான ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணத்தை சந்தித்துள்ளார். கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்த இவருக்கு, கடைசி வரை நினைவு திரும்பவில்லை. இறக்கும் முன் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உடன் இருந்தனர்,’ என்றார்.      
             
ஹியுஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், இவரது நெருங்கிய நண்பர் மற்றும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், உடன் இருந்தார். ஹியுஸ் மரணத்தை அறிந்து கிளார்க், ஹாடின், வாட்சன் என, பலரும் பெரும் சோகத்துடன் காணப்பட்டனர். 

பின், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் உள்ளிட்ட சக வீரர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினர். ஹியுசிற்கு ‘பவுன்சர்’ வீசிய அபாட்டும், கனத்த இதயத்துடன் கிளம்பினார்.


  26க்கு முன் வந்த எமன்

ஹியுசின்  26வது பிறந்த நாள் நவ. 30ல் வருகிறது. இதுவரை முதல் தர போட்டிகளில் 26 சதம் அடித்துள்ள இவர், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் எடுத்திருந்தார். 

இன்னும் சில நாட்களில் தனது பிறந்த நாள் வரவுள்ள நிலையில், தொடர்ந்து அசத்தி, 27வது முதல் தர சதம் அடிக்க திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், துரதிருஷ்டவசமாக பந்து தாக்கி, மரணம் அடைந்தார்.        

கேப்டன்ஷிப் சவாலை சந்திக்க தயார் - கோலி

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் வருகிற 4-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. 

விரல் காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் இந்திய கேப்டன் டோனி ஆடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் விராட் கோலி பிரிஸ்பேன் டெஸ்டுக்கு கேப்டனாக செயல்பட உள்ளார். அப்போது அவர் இந்தியாவின் 32-வது டெஸ்ட் கேப்டன் என்ற சிறப்பை பெறுவார்.

இதற்கிடையே ஆஸ்திரேலிய ரசிகர்களும், அங்குள்ள ஊடகத்தினரும் விராட் கோலியை குறி வைக்க தொடங்கி விட்டனர். கடந்த சுற்றுப்பயணத்தின் போது சிட்னி டெஸ்டில் ரசிகர்களின் கேலிக்குள்ளான அவர் ஆத்திரத்தில் அவர்களை நோக்கி நடுவிரலை காட்டி எச்சரித்தார். 

இதனால் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள் என்றும், பிரிஸ்பேனில் கோலிக்கு சிக்கல் காத்திருக்கிறது என்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதே போல் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடிலும், ‘பிரிஸ்பேனில் கூடும் ரசிகர்கள் ரவுடிகள். கோலி அவர்களின் வசை மொழிகளுக்கு உள்ளாக நேரிடும். நிச்சயம் அவருக்கு கடும் நெருக்கடி இருக்கும்’ என்று கூறியுள்ளார். 

இத்தகைய சூழ்நிலையில் நேற்று அடிலெய்டில் நிருபர்களை சந்தித்த 26 வயதான விராட் கோலி கூறியதாவது:- பீட்டர் சிடிலுக்கு எதிராக நான் விளையாடியிருக்கிறேன். அவர் கடும் சவால் அளிக்க கூடிய ஒரு பந்து வீச்சாளர். போட்டி தொடங்குவதற்கு முன்பே அவர்கள் (ஆஸ்திரேலியர்கள்) வம்பு இழுக்க தொடங்கியிருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. 

அதை எல்லாம் நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. மிட்செல் ஜான்சன் அபாயகரமான பந்து வீச்சாளர். அவர் உண்மையிலேயே சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதை நாங்கள் அறிவோம். வேகத்துடன் கூடிய பவுன்ஸ் ஆடுகளங்களில் அவரது பந்து வீச்சை சமாளிப்பதற்கான போதுமான யுக்திகள் எங்களிடம் உள்ளன. 

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எங்களால் நல்ல போட்டி கொடுக்க முடியும். கேப்டனாக இருப்பதையும், அணியை வழிநடத்துவதையும் எப்போதும் நான் நேசிக்கிறேன். அணியை முன்னெடுத்து செல்வதில் ஆர்வமுடன் இருக்கிறேன். 

பிறகு ஏன் கேப்டன்ஷிப்புக்குரிய சவால்களை என்னால் சமாளிக்க முடியாது? அணி வீரர்களின் திறமை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அணி வீரர்களை நான் எப்படி வழிநடத்தப் போகிறேன், வித்தியாசமான சூழ்நிலையை எப்படி திறம்பட கையாளப்போகிறேன் உள்ளிட்டவை எல்லாம் என்னை சார்ந்து தான் இருக்கிறது. 

அணி வீரர்கள் எனக்கு பக்கபலமாக இருக்கும்பொழுது, விரும்புகிற மாதிரியான திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், இறுதியில் நல்ல முடிவே கிடைக்கும். அதைத் தான் நான் எதிர்நோக்கியுள்ளேன். 

ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருவதை கேள்விப்பட்டேன். ஆனால் அவரது காயத்தன்மை மோசமானதா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஒரு கிரிக்கெட் வீரர் காயத்தால் அவதிப்படுவது துரதிர்ஷ்டசமானது. 

இவ்வாறு விராட் கோலி கூறினார்.

மறக்க முடியாத நினைவுகள் - கவாஸ்கர்

மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான வெளிநாட்டு பயணங்களில், விளையாட்டு வீரர்களை அழைத்துச் செல்வது என்பதை, இதற்கு முன் எந்த இந்திய பிரதமரும் நினைத்தது கூட கிடையாது. 

முதன் முறையாக, ஆஸ்திரேலிய பயணத்தில் மோடி இதை செய்து காட்டினார். 

மெல்போர்ன் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சி தான் மிகவும் சிறப்பாக அமைந்தது. அப்போது எடுக்கப்பட்ட போட்டோவில், ‘கவாஸ்கர்–பார்டர்’ டிராபியை, ஆஸ்திரேலிய பிரதமர் அபாட்டும், அடுத்து 2015ம் ஆண்டுக்கான உலக கோப்பையை நமது பிரதமர் மோடியும் பிடித்திருந்தனர். 

இதில் விசேஷம் என்னவெனில், இரண்டுமே தற்போது வென்றவர்கள் கையில் தான் இருந்தது. அதாவது நடப்பு உலக சாம்பியன் இந்தியா, நடப்பு ‘கவாஸ்கர்–பார்டர்’ டிராபியை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. என்ன ஒரு ஒற்றுமையான விஷயம்.


உண்மையான கேப்டன்:

அடுத்து நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சி மிகவும் ‘ஹைலைட்டாக’ இருந்தது. மகாத்மா காந்தியின்  ராட்டை போன்று அமைக்கப்பட்டு இருந்த இந்த நினைவு பரிசில் மூன்று வெள்ளை நிற பந்துகள் வைக்கப்பட்டு இருந்தன.

இதில் பிரதமர் மோடி, கபில்தேவ், லட்சுமண் மற்றும் நான் கையெழுத்திட்டு இருந்தோம். 

அப்போது கபில்தேவ்,‘ இவற்றில் மோடியின் கையெழுத்து தான் மிகவும் முக்கியமானது, ஏனெனில், அவர் தான் இந்தியாவின் உண்மையான கேப்டன்,’ என்றார்.

பிரதமர் மோடியின் உலக கனவு - கபில் தேவ், கவாஸ்கர் பங்கேற்பு

வரும் 2015ல் உலக கோப்பை தொடரின் பைனலை நடத்த தகுதியான மைதானமாக மெல்போர்ன் திகழ்கிறது. இதில், இந்திய–ஆஸ்திரேலியா விளையாட வேண்டும்,’’என, பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய பிரதமர் மோடி ‘ஜி–20’ மாநாட்டில் பங்கேற்றார். நேற்று வரலாற்று சிறப்புமிக்க மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றார். 

161 ஆண்டு கால பாரம்பரியமிக்க மிகப் பிரமாண்டமான இம்மைதானத்தில் சுமார் 1 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காணலாம். இங்கு நடந்த சிறப்பு கூட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அபாட், இந்திய அணி முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், கபில்தேவ், லட்சுமண், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், மெக்ராத், பிரட் லீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மோடியின் ‘கிரிக்கெட் ராஜதந்திர’ பேச்சை சுமார் 600 பேர்  ஆர்வத்துடன் கேட்டனர். 


மோடி பேசியது:

மெக்ராத், பிரட் லீ பந்துவீசும் சமயத்தில் சதத்தை நெருங்கும் வீரருக்கு மிகவும் பதட்டமாக இருக்கும். இதே போன்றதொரு உணர்வு தான் வரலாற்று சிறப்புமிக்க மெல்போர்ன்  மைதானத்தில் பேசும் போது எனக்கு ஏற்படுறது.

இங்கு டிசம்பரில் நடக்கும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியை ‘டிவி’ யில் காண இந்தியர்கள் பலர் அதிகாலையில் விழித்துவிடுவர். இப்படிப்பட்ட மைதானத்தில்தான் இந்திய அணி 1985ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. 

இந்தியா, ஆஸ்திரேலியா ஜாம்பவான்களான பிராட்மேன், சச்சினின் சாதனைகளை கொண்டாட வேண்டும். அடுத்த ஆண்டு உலக கோப்பை (2015) தொடரை சிறப்பாக நடத்த வாழ்த்துகிறேன். 

பைனலை நடத்த தகுதியான மைதானமாக மெல்போர்ன் திகழ்கிறது. இதில், இந்திய–ஆஸ்திரேலியா விளையாட வேண்டும். இந்த நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்து இருக்கும்

இவ்வாறு மோடி பேசினார். 

விரக்தியில் விலகிய சேவக், காம்பிர்

இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் தியோதர் டிராபியில் இருந்து சேவக், காம்பிர் விலகினர்.      

இந்தியாவின் அனுபவ துவக்க ஜோடி சேவக், 36, காம்பிர், 33. மோசமான ‘பார்ம்’ காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.   
    
இதன் பின் உள்ளூர் போட்டிகளில் அதிகமாக சாதிக்கவில்லை. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில், இவர்கள் சேர்க்கப்படவில்லை.      

தவிர, தற்போதைய துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான், ரகானே என, அனைவரும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இவர்களுடன் முரளி விஜயும் காத்திருக்கிறார்.      

இதனால் உலக கோப்பை தொடருக்கான 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியில் கூட சேவக், காம்பிர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை. இந்த விரக்தியில், தியோதர் டிராபி தொடரை புறக்கணிக்க முடிவு செய்தனர்.      

வரும் 29ம் தேதி துவங்கும் இத்தொடரில், 15 பேர் கொண்ட வடக்கு மண்டல அணியில் இவர்கள் இடம் பெற வாய்ப்பு இருந்தது.       

ஹர்பஜன் சிங் தலைமையிலான இந்த அணியில், தங்களை சேர்க்க வேண்டாம் என, தெரிவித்துள்ளனர். வடக்கு மண்டல தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,‘‘சேவக் தனக்குப் பதில் யாராவது ஜூனியரை தேர்வு செய்யுமாறு கூறிவிட்டார். காம்பிரும் விளையாட விரும்பவில்லை. இதற்கான உண்மையான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை,’’ என்றார்.

சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் தொடர் இன்று ஆரம்பம்

இந்திய டென்னிஸ் வளர்ச்சிக்கு வித்திட காத்திருக்கும் சி.டி.எல்., தொடர் இன்று துவங்குகிறது.                  

கடந்த 2008ல் ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடர் துவங்கப்பட்டது. இது பெரும் வரவேற்பை பெற, இந்தியன் பாட்மின்டன் லீக், கபடி லீக்,  ஹாக்கி லீக், கால்பந்து லீக் தொடர்கள் துவங்கப்பட்டன. இந்த வரிசையில் தற்போது டென்னிசும் சேர்ந்துள்ளது.       
                             
முன்னாள் இந்திய டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் (சி.டி.எல்.,) என்ற பெயரில் புதிய தொடர் ஒன்றை உருவாக்கி உள்ளார். இத்தொடர் இன்று முதல் வரும் 26ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடக்கிறது. 

இதில் மும்பை, ஐதராபாத், டில்லி, புனே, பெங்களூரு, பஞ்சாப் என 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 6 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிவிக்கப்பட்டு, ‘ரவுண்டு–ராபின்’ முறையில் போட்டிகள் நடத்தப்படும். 

ஒவ்வொரு அணியும், தங்கள் அணியில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை (உள்ளூர், வௌியூர்) மோதும். லீக் சுற்றின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், வரும் நவ. 26ல் நடக்கும் பைனலில் மோதும். டில்லி, பஞ்சாப், மும்பை அணிகள் ஒரு பிரிவிலும், ஐதராபாத், பெங்களூரு, புனே அணிகள் மற்றொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.                   
ஒவ்வொரு அணியிலும், ஒரு முன்னாள் வீரர், ஒரு சர்வதேச வீரர், வீராங்கனை மற்றும் ஒரு இந்திய வீரர் இடம் பெற்றிருப்பர்.          
         
டில்லியில் இன்று நடக்கும் முதல் போட்டியில் டில்லி, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் பஞ்சாப் அணிக்காக இந்தியாவின் லியாண்டர் பயஸ், சோம்தேவ் தேவ்வர்மன் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருஜா விளையாடுகின்றனர். 

பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தமான ஸ்பெயின் வீரர் டேவிட் பெடரர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. டில்லி அணிக்காக செர்பிய வீராங்கனை ஜெலினா ஜான்கோவிச், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், இந்தியாவின் சனம் சிங் விளையாடுகின்றனர்.  
                
ஐதராபாத்தில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் ஐதராபாத், பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. இதில் பெங்களூரு அணிக்காக அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஸ்பெயினின் பெலிசியானோ லோபஸ் பங்கேற்கின்றனர். 

ஐதராபாத் அணியில் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ், இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ரஷ்யாவின் மைக்கேல் யூஸ்னி உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.                  

ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமத்தை தத்தெடுத்தார் சச்சின்

ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டம்ராஜு கன்டிரிகா கிராமத்தை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தத்தெடுத்துள்ளார். 

இந்திய பிரதமர் மோடி, கிராமங்களை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கில் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். ஒவ்வொரு எம்.பி.,யும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவ வலியுறுத்தினார். 

இதன் படி கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சச்சின் ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டம்ராஜு கன்டிரிகா கிராமத்தை தத்தெடுத்தார். 

நெல்லுார் மாவட்டத்தில் உள்ள இக்கிராமத்தில் சுத்தமான குடிநீர் போன்ற பல வளர்ச்சி திட்டத்தை இவர் உருவாக்க உள்ளார். 

இன்று இக்கிராமத்திற்கு வந்த சச்சினுக்கு மலர் துாவி உற்சாக வரவேற்பு தரப்பட்டது. 

இது குறித்து சச்சின் கூறுகையில்,‘‘ ஒரு கிராமத்தை தத்தெடுக்கும் திட்டம் குறித்து ஏற்கனவே என் மனதில் இருந்தது. 

புட்டம்ராஜு கன்டிரிகா கிராமத்தில் குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதை ஏற்படுத்தவதற்கான செயல்பாட்டை துவங்குவேன்,’’ என்றார். 

ரோகித் சர்மா உலக சாதனை - இந்திய அணி 404 ரன்கள் குவிப்பு

இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். தவிர, ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக இரட்டைசதம் அடித்து அசத்தினார். இவரின் அதிரடி கைகொடுக்க இந்திய அணி 404 ரன்கள் குவித்தது. 

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது.

இந்திய அணியில் ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, அஷ்வின் நீக்கப்பட்டு ரோகித் சர்மா, கரண் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 

இந்திய அணிக்கு அஜின்கியா ரகானே, ரோகித் சர்மா ஜோடி நிதான துவக்கம் கொடுத்தது. குலசேகரா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த ரகானே (24), மாத்யூஸ் பந்தில் அவுட்டானார். 

அடுத்து வந்த அம்பதி ராயுடு (8), எரங்கா பந்தில் போல்டானார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, குலசேகரா வீசிய 30வது ஓவரில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி விளாசினார். தொடர்ந்து அசத்திய ரோகித், ஒருநாள் அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். 

மறுமுனையில் அசத்திய கேப்டன் விராத் கோஹ்லியும் அரை சதம் விளாசினார். இவர் 66 ரனகளில் ஆட்டமிழந்தார். ரெய்னா (11) நிலைக்கவில்லை. 

தொடர்ந்து அசத்திய ரோகித் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். 

தவிர, ஒரு நாள் அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுதத வீரர் ஆனார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 404 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா (264), உத்தப்பா (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கு ஒத்திவைப்பு

ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கு விசாரணையை வரும் 14 ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.

ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் (2013) ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்ட வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நடத்திய விசாரணையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்தது.

ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் ஒரு குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. இதில் நிலே தத்தா, நாகேஷ்வர ராவ், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இடம் பெற்றிருந்தனர். இதன் முதற்கட்ட விசாரணை அறிக்கை, கடந்த பிப்.,10ல் தாக்கல் ஆனது. 


நீண்ட விசாரணை:

இதில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் மற்றும் இந்திய அணி கேப்டன் தோனி, ரெய்னா உட்பட 13 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டன. இதையடுத்து, பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கினார் சீனிவாசன். 

தவிர, சூதாட்டம் குறித்து தொடர்ந்து விசாரித்த முத்கல் குழு இந்திய அணி கேப்டன் தோனி, ரெய்னாவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தியது.

முத்கல் குழு விசாரணையின் இறுதி அறிக்கையை, கடந்த 3ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, தாக்கூர் அடங்கிய ‘பெஞ்ச்’ முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, முத்கல் அறிக்கையை இன்னும் முழுவதுமாக படிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. எதிர்தரப்பு சார்பில் பீகார் கிரிக்கெட் சங்க தலைவர் ஆதித்ய வர்மா, சூதாட்ட அறிக்கையை அனைவரும் பார்க்கும் வகையில் வெளியிட வேண்டும் என்றார்.

இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தவிர, முத்கல் அறிக்கையில் எதுவும் இல்லை என்றால், சீனிவாசன் பி.சி.சி.ஐ., தலைவராக வர அனுமதிக்க வேண்டும் என, மீண்டும் கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று விசாரணை அறிக்கையை வெளியிடுவது குறித்து சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யும் எனத் தெரிகிறது.

இந்தியா உலக கோப்பை வெல்லும் - சச்சின் நம்பிக்கை

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது,’’ என, இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் நம்பிக்கை தெரிவித்தார். 

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், 41. சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் உட்பட எண்ணற்ற சாதனைகள் படைத்தார். கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற இவர், ‘பிளேயிங் இட் மை வே’ என்ற சுயசரிதை வௌியிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு பிப்.14 முதல் மார்ச் 29 வரை நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் இந்திய அணி பட்டம் வெல்லும் என, நம்பிக்கை தெரிவித்தார். 

இதுகுறித்து சச்சின் கூறியது:

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எல்லோரும் எண்ணுகின்றனர்.

ஆனால், இங்குள்ள மைதானங்களின் அளவு பெரியது. இதனால், இம்முறை சுழற்பந்து வீச்சாளர்கள், அணியின் வெற்றிகளில் முக்கிய பங்குவகிப்பர்.

இங்கு, இந்திய அணி உலக கோப்பையை மீண்டும் வெல்ல, அதிக வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் ‘கறுப்பு குதிரைகளாக’ வலம் வருவர்.

இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது எனது கணிப்பு. அதே நேரம், கிரிக்கெட்டினை பொறுத்தவரையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், தற்போதுள்ள ‘பார்மில்’ இங்கிலாந்து அணி மற்ற அணிகளுக்கு நெருக்கடி தர முடியாது என எண்ணுகிறேன்.


திருப்பு முனை:

இங்கிலாந்தில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில்தான் எனது முதல் டெஸ்ட் சதம் அடித்தேன். இங்கு, கடந்த 1992ல் முதல் முறையாக யார்க்ஷயர் அணிக்காக கவுன்டி போட்டியில் பங்கேற்றேன்.

இதனால், இங்குள்ள ஆடுகளங்கள், சூழ்நிலைகள் குறித்து நன்கு தெரிந்து கொண்டேன். இது என் வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது.

இவ்வாறு சச்சின் கூறினார். 

ரெய்னாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு

துாய்மை இந்தியா திட்டத்தில் சேர இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரெய்னா, முகமது கைப் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

இந்தியாவை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், ‘துாய்மை இந்தியா’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி, கடந்த அக்., 2ல் துவக்கி வைத்தார். 

இத்திட்டத்தில் சேரும்படி சச்சின் போன்ற முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனை சச்சினும் ஏற்றுக் கொண்டார். 

தற்போது, உத்தரபிரதேசத்திலுள்ள வாரணாசி சென்றுள்ள மோடி, இத்திட்டத்தில் சேர இந்திய கிரிக்கெட் வீரர்களான முகமது கைப், ரெய்னா உள்ளிட்ட 9 முக்கிய நபர்களை அழைத்துள்ளார். இதை ரெய்னாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். 


மிகப்பெரும் கவுரவம்:

இது குறித்து ரெய்னா ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘‘ துாய்மை இந்தியா திட்டத்தில் சேர எனக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். 

ஒரு நாள் தொடர் முடிந்து, உத்தரபிரதேசம் வந்தபின் இதற்கான முயற்சியில் இறங்குவேன்,’’ என தெரிவித்துள்ளார். 

முகமது கைப், ரெய்னா இருவரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். 

அடுத்த ஐ.பி.எல்., எப்போது?

எட்டாவது ஐ.பி.எல்., தொடர் வரும் 2015, ஏப். 8ம் தேதி துவங்குகிறது. கடந்த 2008 முதல் இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டால், இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர் நடத்தப்படுகிறது. 

அடுத்த ஆண்டு நடக்க உள்ள எட்டாவது தொடருக்கான தேதியை ஐ.பி.எல்., ஆட்சிமன்றக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ஏப்.8 முதல் மே 24 வரை தொடர் நடக்கவுள்ளது.

தவிர, வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான கெடு வரும் டிச. 12ல் முடிகிறது. 

இதன்படி, மும்பை வீரர்களான மைக்கேல் ஹசி, பிரவீண் குமாரை அணி நிர்வாகம் விடுவித்தது. 

இவர்கள் எட்டாவது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலத்தில் இடம் பெறுவர். உன்முக்த் சந்த் (ராஜஸ்தான்), வினய் குமார் (கோல்கட்டா) மும்பை அணியில் இடம்பெறவுள்ளனர். 

இந்திய அணி தேர்வு ஒத்திவைப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் டிச., 4ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது.

இத்தொடருக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்ய இன்று மும்பையில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கூட்டம் கூடியது. இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்துக்குப் பின்பும், அணித்தேர்வு நடக்கவில்லை.


காரணம் என்ன:

தற்போது நடக்கும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்த பின், இந்திய அணியை அறிவிப்பதாக தேர்வாளர்கள் கூறினர்.

இருப்பினும், ஐ.பி.எல்., சூதாட்டம் குறித்து நீதிபதி முத்கல் குழு அளித்த இறுதி அறிக்கை மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் வரும் நவ. 10ல்  வருகிறது. 

இதில் உள்ள விவரங்கள் தெரியவந்த பிறகு, வீரர்களுக்கான தேர்வு நடத்தப்படலாம் என்று தெரிகிறது.