சச்சின் புதிய சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை எட்டினார் சச்சின் டெண்டுல்கர். ஒருநாள் போட்டியில் அவரது 47-வது சதம் இது.


இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர்கள் ரிக்கி பாண்டிங், மார்க் வாஹ், இந்தியாவின் கங்குலி ஆகியோர் 4 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளனர். இவர்களில் மார்க் வாஹ், கங்குலி ஆகியோர் ஓய்வுபெற்றுவிட்டனர்.


6-வது உலகக் கோப்பையில் விளையாடும் சச்சின், அதிக சதம் மட்டுமின்றி, அதிக அரை சதங்கள் (13) அடித்த வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.

உலகக் கோப்பையில் இதுவரை 38 ஆட்டங்களில் விளையாடியுள்ள சச்சின் 1,944 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் பாண்டிங் 41 ஆட்டங்களில் 1,577 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டையும் சேர்த்து மொத்தம் 98 சதங்கள் அடித்துள்ளார் சச்சின்.

அடுத்த டிராவிட் - விராத் கோஹ்லி

ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் விராத் கோஹ்லி, இந்தியாவின் அடுத்த டிராவிட்டாக ஜொலிக்கிறார்.

இந்திய அணியின் இளம் "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி (22). 19 வயதுக்குட்பட்டவர்கள் உலக கோப்பை தொடரை இந்திய அணிக்காக வென்று தந்தவர்.

கடந்த 2008ல் இலங்கை சென்ற அணியில் சேவக் காயம் காரணமாக திரும்ப, விராத் கோஹ்லிக்கு முதன் முறையாக வாய்ப்பு கிடைத்தது. இதில் 5 போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட 159 ரன்கள் எடுத்தார்.

பின் 2009ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதல் சதம் அடித்து தான் இவருக்கு திருப்பு முனையானது. அதன் பிறகு தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவர், பலரது கவனத்தை கவர்ந்தார்.


அடுத்தடுத்து சதம்:

கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 118 ரன்கள் விளாசிய இவர், நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியிலேயே மற்றொரு சதம் அடித்தார். சமீபத்தில் தென் ஆப்ரிக்க சென்ற அணியில் இடம் பெற்று, அங்கும் இரண்டு அரைசதம் (54, 87*) அடித்தார்.


பயிற்சியில் அசத்தல்:

சமீபத்தில் கோஹ்லி பங்கேற்ற 12 போட்டிகளில் 3 சதம், 4 அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இருப்பினும், உலக கோப்பை அணியில் இடம் என்பது கேள்விக் குறியாகவே இருந்தது. ஆனால், இரண்டு பயிற்சி போட்டிகளில் இரண்டு அரைசதம் அடிக்க, கேப்டன் தோனியின் கடைக்கண் பார்வை இவருக்கு கிடைத்தது.


அடுத்த டிராவிட்:

உலக கோப்பை தொடரில் முதன் முறையாக களமிறங்கிய இவர், 83 பந்துகளில் சதம் அடித்து, அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், இந்திய அணியின் அடுத்த டிராவிட்டாக பார்க்கப்படுகிறார்.


திறமையில் நம்பிக்கை:

இதுவரை 46 ஒருநாள் போட்டிகளில் 1,772 ரன்கள் எடுத்துள்ள கோஹ்லி கூறுகையில்,"" அனைத்துமே நாம் எதிர்கொள்ளும் எதிரணியினரை பொறுத்து தான் அமைகிறது. அவர்களில் உலகின் சிறந்த பவுலர்கள் இருக்கலாம். ஆனால், நமது திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடினால் வெற்றி கிடைக்கும்,'' என்றார்.

இடது கை பேட்ஸ்மேனான சச்சின்

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இடது கை பேட்ஸ்மேனாக களமிறங்கி 7 சிக்ஸர்களை விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.


இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதற்காக பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட சச்சின், திடீரென்று இடது கை பேட்ஸ்மேனானார். கையில் உறை கூட அணியாமல் விளையாடிய சச்சின், முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசினார்.

மொத்தம் 8 பந்துகளை சந்தித்த சச்சின் அதில் 7 சிக்ஸர்களை விளாசினார். சச்சினின் அதிரடியைப் பார்த்த மற்ற வீரர்களும், மைதானத்தில் இருந்தவர்களும் உற்சாகம் அடைந்தனர்.


வீரேந்திர சேவாக், ஹர்பஜன் ஆகியோர் பயிற்சியில் ஈடுபடவில்லை.

இவர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பை

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளிலுள்ள சில முக்கிய வீரர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கப் போகிறது.


உதாரணமாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ், இலங்கையின் முத்தையா முரளீதரன், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோரைச் சொல்லலாம்.


இந்த உலகக் கோப்பை போட்டிதான் எனக்கு கடைசி என்று ஏற்கெனவே முரளீதரன் அறிவித்துவிட்டார்.


இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கும் 6-வது உலகக் கோப்பை போட்டியாகும் இது. 1992, 96, 99, 2003, 2007-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். 2011-ம் ஆண்டு போட்டி அவருக்கு 6-வது உலகக் கோப்பை போட்டி என்பதோடு, பாகிஸ்தானின் மியான்தத்தின் சாதனையையும் அவர் சமன் செய்யவுள்ளார்.


ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உள்ள மிக முக்கியமான சாதனைகளை தன்னிடத்தில் வைத்திருக்கும் சச்சினின் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக் கல்லாக இது அமையப் போகிறது. இதுதான் சச்சினுக்கு கடைசி உலகக் கோப்பை போட்டி என்று பெரும்பாலானவர்கள் சொல்லிவிட்டனர். நமது கேப்டன் தோனி உள்பட...


ஆனால் சச்சின் தனது ஓய்வு குறித்து இதுவரை அறிவிக்கவில்லை. இதுதொடர்பாக அவரைக் கேட்டால், ""நான் இப்போது விளையாடுவதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். ஓய்வு குறித்து நான் நினைக்கவே இல்லை. விளையாடும் வரை சிறப்பாக விளையாடவேண்டும். நான் எத்தனை ரன்கள் எடுத்தேன் என்பது குறித்து எனக்குக் கவலை இல்லை. ஆனால் இந்தியா வெற்றி பெறவேண்டும் என்றுதான் எப்போதுமே நினைப்பேன்'' என்கிறார்.


இந்த உலகக் கோப்பை வீரேந்திர சேவாக், ஜாகீர் கான் ஆகியோருக்கும் கடைசி போட்டியாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (36), பிரெட் லீக் (34), மைக்கேல் ஹசி (34) ஆகியோருக்கும் இது கடைசி போட்டியாக இருக்கலாம்.


அதேபோல இலங்கையின் குமார சங்ககாரா (33), மஹேல ஜெயவர்த்தனே (33), திலகரத்னே தில்ஷன் (34) ஆகியோருக்கும் இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் (35), மிஸ்பா உல் ஹக் (36), யூனிஸ் கான் (34) ஆகியோருக்கும், மேற்கிந்தியத் தீவின் கிறிஸ் கெய்ல் (31), சிவநாராயண் சந்தர்பால் (36), ராம்நரேஷ் சர்வான் 30) ஆகியோருக்கும் இது கடைசி போட்டியாக இருக்கலாம்.


இதேபோல இங்கிலாந்தின் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் (33), பால் காலிங்வுட் (35), நியூஸிலாந்து கேப்டன் வெட்டோரி, ஸ்காட் ஸ்டைரிஸ் (35), ஜேக்கப் ஓரம் (32), கென்யாவின் ஸ்டீவ் டிகாலோ (40), தாமஸ் ஓடோயா (32) ஆகியோருக்கும் இதுவே கடைசி ஆட்டமாக இருக்கலாம்.


பெரும்பாலான அணிகளின் முக்கிய வீரர்கள் இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்று விடவும் வாய்ப்பிருக்கிறது. அவர்களின் அற்புதமான ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வரலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அவர்களால் முடிந்த அளவுக்கு இந்த போட்டிகளில் பிரகாசிப்பார்கள் என்று நம்பலாம்.

ஒரு சிக்சருக்கு ரூ. 25 ஆயிரம்

உலக கோப்பை போட்டிகளில் "சிக்சர்கள்' பறக்கும் போது, ரசிகர்கள் மட்டுமல்ல வசதியற்ற குழந்தைகளும் மகிழ்ச்சி அடையலாம். இம்முறை ஒவ்வொரு சிக்சருக்கும் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான நிதி, ஏழை குழந்தைகளின் கல்விக்காக அளிக்கப்பட உள்ளது.இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில், வீரர்கள் "சிக்சர்கள்' அடிக்கும் போதெல்லாம், ரசிகர்களின் கரகோஷம் விண்ணை முட்டும்.

இம்மகிழ்ச்சியை நல்ல காரியத்துக்கு பயன்படுத்த, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) முடிவு செய்தது. இதற்கு "ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ்' நிறுவனம் கைகொடுத்தது. இதன்படி ஒவ்வொரு "சிக்சருக்கும்' தலா 25 ஆயிரம் ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனமும் வழங்கும்.

இத்தொடரில், நூற்றுக்கணக்கான "சிக்சர்கள்' அடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கில் நிதி கிடைக்கும். இது வசதியற்ற குழந்தைகளின் கல்விப் பணிக்காக பயன்படுத்தப்படும்.

இவர்கள் படிப்பதற்கு நூலகம், வசதியான அறை, ஆங்கிலம் கற்க தேவையான புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ், இந்தியாவில் வசதியற்ற 300 குழந்தைகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரூ. 2.5 லட்சம் நிதி:

வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் சேவக் 5, கோஹ்லி 2 "சிக்சர்கள்' அடித்தனர். வங்கதேச வீரர்களான தமிம் இக்பால், சித்திக், ரகிபுல் ஹசன் தலா ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 10 "சிக்சர்' அடிக்கப்பட்டன. இதன் மூலம் துவக்க போட்டியில் மட்டும் 2.5 லட்சம் ரூபாய் நிதி கிடைத்துள்ளது.


தோனி ஆதரவு:

ஐ.சி.சி.,யின் இந்த "சிக்சர்' திட்டத்துக்கு இந்தியாவின் சச்சின், தோனி, பாண்டிங்(ஆஸி.,), டேல் ஸ்டைன்(தென் ஆப்ரிக்கா), வாட்சன்(ஆஸி.,) போன்ற முன்னணி வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். உலக கோப்பை போட்டிகள், போகப் போக விறுவிறுப்பு அடையும்.

அப்போது இன்னும் அதிகமான "சிக்சர்கள்' அடிக்கப்படும். இதன் மூலம் நிறைய குழந்தைகள் பயன் அடையட்டும்.

பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி இந்தியா

இந்திய மைதானங்கள் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி,'' என, இலங்கை வீரர் திலன் சமரவீரா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகளில், பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இன்று அம்பாந்தோட்டையில் நடக்கும் போட்டியில் இலங்கை, கனடா அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை தொடர் குறித்து, இலங்கை வீரர் திலன் சமரவீரா கூறியதாவது: உலக கோப்பை தொடர் இந்திய துணைக் கண்டங்களில் உள்ள மைதானங்களில் நடப்பதால், ஒவ்வொரு போட்டியிலும் சுலமாக 300 ரன்களை எட்டிவிடலாம் என நிறைய பேர் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் இலங்கை, வங்கதேச மைதானங்களை விட இந்திய மைதானங்களில் இந்த இலக்கை எளிதாக அடைந்துவிடலாம். பொதுவாக இந்திய மைதானங்கள் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக உள்ளன.

இதற்கு பெரும்பாலான இந்திய மைதானங்கள் சிறியவை. இதனால் எளிதாக பவுண்டரி, சிக்சர் என அடித்துவிடலாம். ஆனால் இலங்கை மைதானங்கள் பெரிதாக இருப்பதால், பவுண்டரி அடிப்பது கடினம்.

இம்முறை பாகிஸ்தான் அணி கருப்புக் குதிரைகளாக வலம் வர வாய்ப்பு உள்ளது. எந்த நேரத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய தகுதி பாகிஸ்தான் வீரர்களிடம் உள்ளது. எனவே பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிடக் கூடாது. இதேபோல கடந்த மூன்று தொடர்களில் கோப்பை வென்று சாதித்த ஆஸ்திரேலிய அணிக்கும் கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தற்போது எனது கவனம் முழுவதும் கனடா அணிக்கு எதிரான இன்றைய போட்டி மீது உள்ளது. இம்முறை எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஒவ்வொரு போட்டியிலும் நூறு சதவீத திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.

இவ்வாறு சமரவீரா கூறினார்.

உலகக் கோப்பை : அணிகளின் பலம், பலவீனம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம்வாய்ந்த அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் கணிக்கப்பட்டுள்ளன. அணியின் பலம், பலவீனம், சிறப்பு குறித்து ஓர் அலசல்.



ஆஸ்திரேலியா

பலம்: பேட்டிங்தான் ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில், அதாவது அதிகமாக ரன்களை எடுத்துக் குவிக்கும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்த அணி. இளம் வீரர்கள் அதிகம் உள்ளது கூடுதல் பலம். எந்த சூழ்நிலையிலும் சமாளித்து விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் உண்டு.


எதிரணிகளின் வியூகங்களை உடைத்து பேட்டிங்கில் சாதனை புரியும் ஷேன் வாட்சன் இந்த அணியின் மிகப்பெரிய பலம். மூன்றாவது முறையும் தொடர்ந்து உலகக் கோப்பையைப் பெற்றாக வேண்டும் என்கிற வெறியுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும். கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், டேவிட் ஹஸ்லியும், கேமரோன் வொய்ட்டும் ரன்களைக் குவிப்பதில் சமர்த்தர்கள்.


பலவீனம்: பந்து வீச்சு சிறப்பாக இல்லாதது பெரிய பலவீனம். பொலிங்கர் தவிர மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். ஆரம்பப் பந்து வீச்சில் சமர்த்தரான ஸ்விங்கர் ஷான் டெய்ட் தன்னுடைய வேகப்பந்து வீச்சால் எதிரணியினரைப் பயமுறுத்தக் கூடும் என்றாலும் ஸ்பின்னர்கள் இல்லாத குறை ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலவீனம்.

குறிப்பிட்டுக் கூறும்படியான சுழற்பந்து வீச்சாளர் அணியில் இல்லை. மூத்த வீரர்களான பாண்டிங், கிளார்க், பிரெட் லீ, வாட்சன் ஆகியோரின் ஆட்டத்தையே அணி பெருமளவில் சார்ந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் களமிறக்கப்பட்ட மோசமான "உலகக் கோப்பை ஆஸ்திரேலிய அணி' இதுதான் என்பது விமர்சகர்களின் கணிப்பு.


சிறப்பு: தொடர்ந்து 2 உலகக் கோப்பையை வென்றுள்ளதால் ஆஸ்திரேலிய அணிக்கு பொறுப்பு கூடியுள்ளது. முன்பு இருந்ததுபோல சிறப்பான அணியாக இல்லாவிட்டாலும் ஆட்டத்தைத் திசைதிருப்பும் வெற்றி வீரர்கள் இருக்கின்றனர். இறுதிச் சுற்று வரை இந்த அணி முன்னேறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


இந்தியா

பலம்: தொடக்க, நடுவரிசை ஆட்டக்காரர் (1 முதல் 7 வரை) சிறந்த பேட்ஸ்மென்களாக உள்ளது இந்திய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில் முதலிடத்தில் உள்ளது. பெüலிங் எக்கானமியில் இரண்டாவது இடத்தில் உள்ளது அனுபவம் வாய்ந்த வீரர்கள், பெரிய ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி வரும் அணி.

நெருக்கடியான சூழ்நிலையிலும் அணியை சிறப்பாக வழிநடத்தும் கேப்டன் தோனி ஆகியவை அணியின் பலம். சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கெüதம் கம்பீர் மூவரும் இந்திய அணியின் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பலம். விராட் கோலி நான்காவது ஆட்டக்காரராகவும், யுவராஜ் சிங் ஐந்தாவதாகவும், கேப்டன் தோனி ஆறாவதாகவும், யூசுப் பதான் ஏழாவதாகவும் ஒரு பலமான ரன்களை எடுக்கும் பேட்டிங் பட்டாளம் இந்திய அணியின் தனிச் சிறப்பாக கருதப்படுகிறது.


பந்துவீச்சு என்று எடுத்துக்கொண்டாலும், வேகப்பந்துவீச்சில் ஜாகீர் கானின் திறமைக்கு முன் ஆரம்ப ஆட்டக்காரர்கள் பலரும் திணறாமல் இருக்க முடியாது. ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, அஸ்வின் ஆகிய மூவரும் சுழல்பந்து வீச்சில் சமர்த்தர்கள். கடந்த இரண்டாண்டுகளாக சாவ்லா களத்தில் இல்லை என்பது பலவீனம். இருந்தாலும் புதிய வரவாக இருந்தாலும் களத்தில் தனது சுழல்பந்துவீச்சால் அசத்துகிறார் என்பது கண்கூடான உண்மை.


பலவீனம்: மற்ற அணிகளை ஒப்பிடும் போது விரைவாக விக்கெட்டை வீழ்த்தும் பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரும் குறை. வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்ததாதும் பலவீனம். ஹர்பஜன் சிங்கையும், அஸ்வினையும் நம்பித்தான் இந்திய அணியின் பெüலிங் உள்ளது என்பது பலவீனம்.


சிறப்பு: முந்தைய உலகக் கோப்பை அணியைக் காட்டிலும் பலமானதாக உள்ளது. பலமான பேட்டிங் வரிசை உள்ளதால் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது. தோனியின் அமைதியான, அரவணைப்பான கேப்டன்ஷிப் அணிக்கு பெரிய பிளஸ். அனைத்தும் சரியாக நடந்தால் விமர்சகர்கள் கணித்தபடி இறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறும்.

இங்கிலாந்து


பலம்: தனிப்பட்ட சில வீரர்கள் சிறப்பாக ஆடுவது அணியின் மிகப்பெரிய பலம். முக்கியமாக நடுவரிசையில் டிராட், பீட்டர்சன், பிராட், ஸ்வான் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவிக்கின்றனர். பந்து வீச்சும் சிறப்பாகவே உள்ளது. ஒருநாள் ஆட்டத்தை எப்படி ஆட வேண்டும் என்பதை தெரிந்து வைத்துள்ள அணி.


பலவீனம்: ஸ்டிரைக் ரேட் குறிப்பிடும் வகையில் இல்லை. அணியின் கூட்டு முயற்சியாக இல்லாமல், ஒரு சில வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் மட்டுமே வெற்றி பெறுகிறது.


சிறப்பு: டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடும் இந்த அணி, ஒரு நாள் போட்டிகளில் சோபிக்கத் தவறி வருகிறது. சில தனிப்பட்ட வீரர்களின் ஆட்டத்தைத் தவிர மற்றவர்களின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஒரு சில அணிகளுக்கு அதிர்ச்சித் தோல்விகளைத் தரக்கூடிய அணியாக இருக்கிறது இங்கிலாந்து. அதிர்ஷ்டம் இருந்தால் அரை இறுதி வரை முன்னேறும், அவ்வளவே.


மேற்கிந்தியத் தீவுகள்


பலம்: கெய்ல், பிராவோ, சந்தார்பால் ஆகியோர் அணியின் பலம். திடீர் அதிரடியால் வெற்றி பெறும் அணி.


பலவீனம்: தரவரிசையில் 9-வது இடத்தில் பின்தங்கியுள்ளது. பேட்டிங், பந்து வீச்சும் இரண்டுமே தகராறு. எப்போது, எப்படி விளையாடிவார்கள் என்று யாருக்குமே தெரியாது.


சிறப்பு: கோப்பையை வெல்ல 70 சதவீத வாய்ப்பு இந்த அணிக்கு இருப்பதாக முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார். ஆனாலும் கால் இறுதி வரை முன்னேறுவதே சிரமம் என்பதுதான் விமர்சகர்களின் கருத்து.

தென் ஆப்பிரிக்கா


பலம்: தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவருவதும், வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருப்பதும் இந்த அணியின் முக்கிய பலம். தொடக்க பேட்ஸ்மேன்களும், நடுவில் களம் இறங்குபவர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் களம் இறங்கிச் சிறப்பாக விளையாடும் செல்லும் ஜேக்கஸ் காலிஸ், ஹஷிம் ஆம்லா வெற்றிகரமான கேப்டன் கிரேம் ஸ்மித் ஆகியோர் அணியை வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற்றுவார்கள்.

பலவீனம்: நெருக்கடியான சூழ்நிலையில் காலிஸ் தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடுவது இல்லை. சராசரி என்ற நிலையில் உள்ள ஸ்டிரைக் ரேட், நடுவரிசை, பின்வரிசை வீரர்கள் நிலைத்து நின்று ஆடாதது, சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது, காலிûஸயே பெருமளவில் சார்ந்திருப்பது ஆகியவை அணியின் பலவீனம்.


சிறப்பு: வெல்வதற்கு சிறந்த, கடினமான அணி என்ற பெயரை பெற்றுள்ளது. இருந்தபோதும் எதிரணி வலிமையானதாக இருந்தால் அதை எதிர்கொள்ளும் நிதானம்

தென் ஆப்பிரிக்க அணிக்கு இல்லை என்பது பார்வையாளர்களின் கணிப்பு. நெருக்குதல் காரணமாக சில சமயங்களில் தோல்வி ஏற்படுகிறது. ஜாக்ஸ் காலிஸ் அணியின் நம்பிக்கை நாயகன். கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.


நியூசிலாந்து


பலம்: ஸ்டிரைக் ரேட், எகானமியில் 3-வது இடம். நெருக்கடியை சமாளித்து ஆடும் திறன். வலுவான பேட்டிங், தனிப்பட்ட முறையில் வீரர்கள் சிறப்பாக ஆடி வருவது இவையே இந்த அணியின் முக்கிய பலம்.


பலவீனம்: பெரிய போட்டிகளிலோ, தொடர்களிலோ வெற்றி பெற்றதில்லை. இந்திய அணியைப் போன்றே இங்கும் விரைவில் விக்கெட்டை வீழ்ந்தும் பந்து வீச்சாளர்கள் இல்லை.


சிறப்பு: சிறப்பாக விளையாடினால் மட்டுமே அரை இறுதி வரை முன்னேறலாம் என்று கணிக்கப்பட்டுள்ள அணி நியூஸிலாந்து. ஆனாலும் அணி சிறப்பாக இல்லாதது நியூஸிலாந்துக்கு பின்னடைவாக உள்ளது. சமீபத்திய தொடர்களில் ஏற்பட்ட படுதோல்விகள் அந்த அணிக்கு கடும் நெருக்குதலை அளித்துள்ளது.

இலங்கை


பலம்: பந்து வீச்சில் உலகின் நம்பர் 1 அணி. அதே போல எக்கானமி ரேட்டிலும் முதலிடம். அனுபவ வீரர்கள், வெற்றியை நோக்கி தொடக்கத்தில் இருந்தே முன்னேறுவது, உள்ளூர் சூழலில் விளையாடுவது ஆகியவை அணிக்கு பலம் சேர்க்கிறது.


லசித் மலிங்காவும், முத்தையா முரளீதரனும் பந்துவீச்சுக்கு வலு சேர்ப்பவர்கள். இந்திய அணி எந்த அளவுக்கு பேட்டிங்கில் பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெüலிங்கில் பலமான அணி இலங்கை அணி. நுவன் குலசேகரா, ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஆடுகளத்துக்கு ஏற்ப பந்துவீசும் ஆட்டக்காரர்கள். அதிகமாக பாராட்டப்படாவிட்டாலும் ரங்கனா ரெஹாத்தின் இடதுகைப் பந்துவீச்சு வெளியூர் அணிக்கு சவாலாக இருக்கக்கூடும்.


பலவீனம்: தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள அணிகளில், பேட்டிங்கில் கடைசி இடத்தில் உள்ள அணி இலங்கை தான். நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடத் திணறும் வீரர்கள். மோசமான ஸ்டிரைக் ரேட்.


சிறப்பு: 1996-ம் ஆண்டுக்குப் பின்னர் 2007-ல் சிறப்பாக விளையாடியது இலங்கை. ஆனாலும் இப்போது மோசமாக விளையாடி வருவது அணிக்கு கடும் நெருக்குதலை அளித்துள்ளது. அரை இறுதி வரை முன்னேற வாய்ப்பு இருக்கிறது. முதல் சுற்றிலேயே வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பாகிஸ்தான்


பலம்:பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள போதிலும், பந்து வீச்சு பலத்தில் 3-வது இடத்தில் உள்ளது. நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடக் கூடிய அணிகளில் இதுவும் ஒன்று. சூதாட்ட சர்ச்சைக்குப்பின் கிடைத்துள்ள வெற்றிகளால் பெற்ற உத்வேகம் அணியின் முக்கிய பலம்.


பலவீனம்: சிறப்பாக ஆடாத பேட்ஸ்மேன்கள். சராசரிக்கும் குறைவான ஸ்டிரைக் ரேட், கூட்டு முயற்சி...இப்படியாக, தொடர்ந்து சிறப்பாக ஆடமுடியாமல் தவிக்கும் அணி. முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களம் இறங்குவதால் நெருக்கடி.


சிறப்பு: களத்தில் ஆக்ரோஷம் காட்டுவதில் பாகிஸ்தான் அணிக்கு நிகர் அதுவே. சொல்லும்படியான வீரர்கள் இல்லை. ஆனாலும் அணியின் பலவீனத்தால் கால் இறுதிக்கு மேல் முன்னேறாது என விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

உலகக் கோப்பை : அதிர்ச்சி தோல்விகள் - 2

2003 உலகக் கோப்பையில் பிப்ரவரி 24-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இலங்கையை எதிர்கொண்டது கென்யா.


இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கென்ய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஒட்டியனோ 60 ரன்கள் விளாச அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை.

தொடக்க ஆட்டக்காரர் ஜெயசூர்யா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு அட்டப்பட்டு 23 ரன்களும், திலகரத்னே 23 ரன்களும், டி சில்வா 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.


கென்ய வீரர் ஒபுயா அபாரமாகப் பந்துவீசி இலங்கை வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் இலங்கை அணி 45 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் கென்ய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணிக்கு அதிர்ச்சித் தோல்வியை அளித்தது. இந்த உலகக் கோப்பையில் கென்ய அணி அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.



இந்தியாவுக்கு அதிர்ச்சித் தோல்வி:

2007-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேற நேரிட்டது. லீக் சுற்றில் வங்கதேசத்திடம் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியுற்றதே இதற்கு காரணம்.


போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மார்ச் 17-ல் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா 49.3 ஓவர்களில் 191 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக கங்குலி 66 ரன்கள் குவித்தார். யுவராஜ் சிங் 47 ரன்கள், சேவாக் 2, உத்தப்பா 9, சச்சின் 7, திராவிட் 14, தோனி 0, ஹர்பஜன் 0, அகர்கர் 0, ஜாகீர் 15, முனாப் படேல் 15 ரன்கள்எடுத்தனர்.


பின்னர் ஆடிய வங்கதேசம் 48.3 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. லீக் சுற்றின் மற்றோர் ஆட்டத்தில் இலங்கையிடமும் இந்தியா தோல்வி கண்டதால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

உலக கோப்பை கவுன்ட் டவுண்-2 மறக்க முடியுமா..

உலக கோப்பை அரங்கில், சாதனை வீரராக ஜொலிக்கிறார் இந்தியாவின் சவுரவ் கங்குலி. "டுவென்டி-20' போட்டிகள் அறிமுகமாவதற்கு முன்பே இமாலய "சிக்சர்'கள் அடித்து, ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார். 2003ல் அணியை பைனலுக்கு அழைத்துச் சென்ற இவர், வெற்றி கேப்டனாக பிரகாசித்தார்.

கோல்கட்டா "தாதா' என்று செல்லமாக அழைக்கப்படும் கங்குலி, 1999ல் நடந்த உலக கோப்பை தொடரில் முதன் முறையாக பங்கேற்றார். இத்தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி, தென் ஆப்ரிக்கா மற்றும் ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.


"சிக்சர்' மழை:

இதையடுத்து, இலங்கைக்கு எதிராக மிகப் பெரும் வெற்றி பெற்றால் மட்டுமே, "சூப்பர்-6' சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா களமிறங்கியது. இப்போட்டியில் கங்குலியின் அசத்தல் ஆட்டத்தை என்றும் மறக்க முடியாது.
"சிக்சர்'களாக அடித்து மிரட்டிய இவருக்கு டிராவிட் "கம்பெனி' கொடுத்தார். சதம் கடந்த கங்குலி 158 பந்தில் 183 ரன்கள் எடுத்தார். மொத்தம் 7 சிக்சர், 17 பவுண்டரி அடித்து சாதித்த இவர், உலக கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.

தவிர, டிராவிட்(145)-கங்குலி சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்து சாதித்தனர். இதன் மூலம், உலக கோப்பை அரங்கில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் எடுத்த ஜோடி என்ற வரலாறு படைத்தனர். இவர்களது அபார ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 373 ரன்கள் எடுத்தது.

"மெகா' இலக்கை விரட்டிய இலங்கை அணி 42.3 ஓவரில் 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி "சூப்பர்-6' சுற்றுக்கு முன்னேறியது.

அடுத்து 2003ல் கேப்டன் அந்தஸ்தில் களமிறங்கிய கங்குலி, கபில் தேவுக்கு பின் இந்திய அணியை பைனலுக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற பெருமை பெற்றார். 21 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 1006 ரன்கள் எடுத்துள்ளார்.


"எக்ஸ்டிராஸ்'

உலக கோப்பை அரங்கில், அதிக உதிரிகளை விட்டுக் கொடுத்த அணி ஸ்காட்லாந்து. 1999ல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் 59 ரன்களை உதிரியாக, வாரி வழங்கியது.

உலகக் கோப்பை கிரிக்கெட்: அதிர்ச்சித் தோல்விகள்

1992 உலகக் கோப்பையில் மார்ச் 18-ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது இங்கிலாந்து. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் கிரகாம் கூச் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.


இங்கிலாந்தின் இயன் போத்தம், ரிச்சர்டு இல்லிங்வொர்த் ஆகியோரின் அதிரடி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.


அந்த அணியின் கேப்டன் டேவ் ஹட்டன் 29 ரன்களும், குட்சர்ட் 24 ரன்களும் எடுத்தனர். இதனால் அந்த அணி 46.1 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


பின்னர் ஆடிய இங்கிலாந்து வீரர்கள் ஜிம்பாப்வேயை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற அபரிமிதமான நம்பிக்கையோடு களமிறங்கினர். ஆனால் தொடக்க வீரர் கிரகாம் கூச் ரன் ஏதுமின்றியும், போத்தம் 18, லாம்ப் 17, ஸ்மித் 2, ஹிக் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க 5 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது இங்கிலாந்து.


பின்னர் வந்த ஃபேர்பிரதர் 20 ரன்களும், ஸ்டூவர்ட் 29 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் 100 ரன்களை எட்ட உதவினர். ஆனாலும் அந்த அணி 49.1 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது இங்கிலாந்து.


1999 உலகக் கோப்பையில் மே 31-ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் கோப்பையை வெல்லக்கூடிய அணியாகக் கருதப்பட்ட வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கத்துக்குட்டியான வங்கதேசத்தை எதிர்கொண்டது.


இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் சயீத் அன்வர் 9, அப்ரிதி 2, இஜாஸ் அகமது 0, இன்சமாம் உல் ஹக் 7, சலீம் மாலிக் 5 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி 44.3ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


இதன்மூலம் வங்கேதச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்தது. இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இறுதிச்சுற்றுவரை முன்னேறி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

11 பேர் அணியில் இடம் பெறுவது யார்?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதே தற்போது அதிக எதிர்பார்ப்பாக உள்ளது. தொடக்க வீரர்களான தெண்டுல்கரும், ஷேவாக்கும் களம் இறங்குவார்கள்.

3-வது வீரராக காம்பீரும், 4-வது வீரராக யுவராஜ்சிங்கும், 5-வது வீரராக கேப்டன் டோனியும் களம் இறங்குவார்கள். 6-வது 7-வது வீரருக்கு போட்டி உள்ளது. வீராட் கோக்லி, சுரேஷ் ரெய்னா, யூசுப்பதான் ஆகியோர் இந்த வரிசையில் இடம்பெறுவார்கள்.

இதில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் யூசுப்பதான் 7-வது வீரராக களம் இறங்கி அபாரமாக விளையாடி “சதம்” அடித்தார். இதனால் யூசுப்பதான் இடம் பெறுவது உறுதியாகி விட்டது.

அவர் 7-வது வீரராக களம் இறங்குவார். 6-வது வீரருக்கான இடத்தில் கோக்லி, ரெய்னாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதை சுரேஷ் ரெய்னாவே ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

11 பேர் கொண்ட அணியில் யார் இடம்பெறுவது என்பது தொடர்பாக எனக்கும், வீராட் கோக்லி மற்றும் யூசுப்பதானுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. என்னை பொறுத்த வரை இந்திய அணி வெற்றி பெறு வதுதான் மிகவும் முக்கியம்.

அணியில் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். 6 மற்றும் 7-வது வீரராக ஆடி நான் 25-30 ரன் வரை எடுத்து இருக்கிறேன். ஆனால் இதை விட பெரிய ஸ்கோரை எடுக்க முடியும் என்று எனக்கு தெரியும்.

உலக கோப்பை போட்டியில் மிகப்பெரிய ரன்னை குவிக்க ஆவலுடன் இருக்கிறேன். உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெறுவது மிகப்பெரிய வாய்ப்பு. எந்த ஒரு வீரருக்கும் உலக கோப்பையில் ஆடுவது கனவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை கோப்பை வெல்ல வேண்டாம்

ஒவ்வொரு அணியும் கோப்பை வெல்ல வேண்டும் என, அந்தந்த தேசத்தின் பத்திரிகைகள் வாழ்த்துகின்றன. ஆனால், இலங்கை அணி கோப்பை வெல்ல வெல்ல வேண்டாம் என்று, அந்நாட்டு பத்திரிகை ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள விளையாட்டு நிர்வாகங்களில் மிகவும் பணக்கார அமைப்பாக இருப்பது இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி.,). இதன் தலைவராக டி சில்வா இருந்து வருகிறார். எஸ்.எல்.சி.,யில் நிர்வாகிகள் தேர்தல் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருந்து வருகிறது.

இதுகுறித்து இலங்கையின் முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரத்னாயகே கூறுகையில்,"" அதிகளவில் ஊழல்கள் நடப்பதில் முதல் நிர்வாகம் எஸ்.எல்.சி.,க்கு தான்,'' என்றார்.

இந்நிலையில் <உலக கோப்பை தொடர் குறித்து இலங்கையில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில்,"" இலங்கை அணியின் கேப்டன் சங்ககரா, மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக கோப்பை வெல்லக்கூடாது,'' என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இதன் செய்தி ஆசிரியர் ரஸ்சல் பாலிபேன் கூறுகையில்,"" என்னை துரோகி என்று கூறினாலும் சரி, காட்டி கொடுப்பவன் என்றாலும் சரி, இதற்காக என்னை பிடித்துச் சென்று தூக்கில் கூட போடுங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இலங்கை அணி கோப்பை வெல்லக் கூடாது.

ஒருவேளை கோப்பை வென்றால் என்ன நடக்கும், சற்று நினைத்துப்பாருங்கள், தற்போதுள்ள கிரிக்கெட் நிர்வாகிகளே தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள். ஏனெனில், அவர்களது நிர்வாகத் திறமையால் தான் உலக கோப்பை வெல்ல முடிந்தது என்று கூறுவார்கள்,'' என்றார்.

சச்சினுக்காக உலக கோப்பை - ஸ்டீவ் வாக் எதிர்ப்பு

சச்சினுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பது இந்திய அணியின் தவறான அணுகுமுறை. தனிப்பட்ட நபருக்காக அல்லாமல் நாட்டு மக்களுக்காக கோப்பை வெல்ல வேண்டும்'' என, ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு 1999ல் உலக கோப்பை வென்று தந்தவர் ஸ்டீவ் வாக். தற்போதைய தொடரில், சச்சினுக்காக கோப்பை வெல்ல வேண்டும் என அனைத்து இந்திய வீரர்களும் விருப்பம் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறியது:

எந்த ஒரு தனிநபரையும் விட விளையாட்டு என்பது பெரியது. தேசிய அணியில் பங்கேற்கும் வீரர்கள், ஒரு வீரருக்காக கோப்பை வெல்ல வேண்டியதில்லை.

இது சரியான அணுகுமுறை அல்ல. இந்த தொடரில் சச்சின், நட்சத்திர வீரராக பிரகாசிக்க முடியாமல் போகலாம். ஆனால், முக்கியமான நேரங்களில் இவர் தான் உபயோகமாக இருப்பார்.

இம்முறை கோப்பை வெல்வதற்காக, அனுபவம் வாய்ந்த இந்திய அணி, நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. இவர்களிடையே போராட்ட குணத்தை வளர்த்ததில் பயிற்சியாளர் கிறிஸ்டனுக்கு முக்கிய பங்குள்ளது.

இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் இத்தொடர், ரசிகர்கள் இடையே ஒருநாள் போட்டிக்கு தீவிர ஆர்வத்தை கொண்டு வரும். இது இந்திய அணி கோப்பை வெல்வதை பொறுத்து முடிவாகும்.

தொடரின் முதல் சில போட்டிகளின் முடிவுகளை வைத்து எந்த முடிவுக்கும் வரத் தேவையில்லை. பனிப்பொழிவு இருப்பதால், காலிறுதி போன்ற நிலையில், "டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும்.

இவ்வாறு ஸ்டீவ் வாக் தெரிவித்தார்.

ஒரு லட்சம் ரன்கள்

இதுவரை நடந்துள்ள ஒன்பது உலக கோப்பை தொடரில், மொத்தம் 303 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 27616.4 ஓவர்கள் வீசப்பட்டு 1,24,967 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. தவிர, 4247 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது.


இதுவரை நடந்த உலக கோப்பை தொடரில் பதிவு செய்யப்பட்ட ரன், விக்கெட் விபரம்:


ஆண்டு போட்டி ரன் விக்கெட்

1975 15 6162 208

1979 14 5168 202

1983 27 12046 408

1987 27 12522 385

1992 39 15107 514

1996 36 15225 474

1999 42 16963 597

2003 52 20441 734

2007 51 21333 725

மொத்தம் 303 124967 4247



103 சதம்

இதுவரை நடந்துள்ள ஒன்பது உலக கோப்பை தொடரில், 67 பேட்ஸ்மேன்கள் இணைந்து மொத்தம் 103 சதம் அடித்துள்ளனர். இதில் இந்தியாவின் சச்சின், கங்குலி, ஆஸ்திரேலியாவின் மார்க் வாக், ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் அதிகபட்சமாக தலா 4 சதம் அடித்துள்ளனர்.


ஒவ்வொரு உலக கோப்பை தொடரில் பதிவு செய்யப்பட்ட சதம் விவரம்:


ஆண்டு போட்டி சதம்

1975 15 6

1979 14 2

1983 27 8

1987 27 11

1992 39 8

1996 36 16

1999 42 11

2003 52 21

2007 51 20

மொத்தம் 303 103


* கடந்த 2007ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஹைடன் 66 பந்தில் சதம் கடந்தார். இது உலக கோப்பை அரங்கில் எடுக்கப்பட்ட அதிவேக சதம். கடந்த 1979ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீசின் கிரீனிட்ஜ், 173 பந்தில் 106 ரன்கள் எடுத்தார். இது உலக கோப்பை அரங்கில் பதிவு செய்யப்பட்ட ஆமைவேக சதம்.

* வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாய்டு (102 ரன், எதிர்-ஆஸ்திரேலியா, 1975), விவியன் ரிச்சர்ட்ஸ் (138* ரன், எதிர்-இங்கிலாந்து, 1979), இலங்கையின் அரவிந்த டி சில்வா (107* ரன், எதிர்-ஆஸ்திரேலியா, 1996), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (140* ரன், எதிர்-இந்தியா, 2003), கில்கிறிஸ்ட் (140 ரன், எதிர்-இலங்கை, 2007) உள்ளிட்டோர் உலக கோப்பை பைனலில் சதம் கடந்த வீரர்கள்.

* உலக கோப்பை அரங்கில், முதல் சதத்தை பதிவு செய்தவர் இங்கிலாந்தின் டெனிஸ் அமிஸ். இவர், கடந்த 1975ல் இந்தியாவுக்கு எதிராக 137 ரன்கள் எடுத்தார்.


உலக கோப்பை அரங்கில் பதிவு செய்யப்பட்ட சாதனை சதம்:


சதம் வீரர் ரன் எதிரணி ஆண்டு

முதல் அமிஸ் (இங்கிலாந்து) 137 இந்தியா 1975

25வது ரிச்சர்ட்ஸ் (வெ.இ.,) 110 பாக்., 1987

50வது மார்க் வாக் (ஆஸி.,) 110 நியூசி., 1996

75வது வான் நூர்ட்விஜ் (நெதர்லாந்து) 134* நமீபியா 2003

100வது ஹைடன் (ஆஸி.,) 103 நியூசி., 2007

தொடர்ந்து விளையாடுவேன் - கங்குலி பல்டி

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெற்றுள்ளேன். உள்ளூர் மற்றும் ஐ.பி.எல்., தொடரில் தொடர்ந்து விளையாடுவேன்,'' என, கங்குலி திடீரென தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி (38). கடந்த 2008ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், இந்தியாவில் நடக்கும் முதல் தர போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

பின், ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில், "கோல்கட்டா நைட் ரைடர்ஸ்' அணியில் இடம் பிடித்து, கேப்டனாக செயல்பட்டார். மூன்று ஐ.பி.எல்., தொடரில், 40 போட்டிகளில் பங்கேற்று, 7 அரைசதம் உட்பட 1031 ரன்கள் எடுத்துள்ளார்.


ஒதுக்கப்பட்ட தாதா:

தாதா என்று கோல்கட்டா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவரை, நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், கோல்கட்டா உட்பட எந்த ஒரு அணியும் தேர்வு செய்ய முன்வரவில்லை. கொச்சி அணி கங்குலியை தேர்வு செய்ய முன்வந்த போதும், பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான் அணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஐ.பி.எல்., போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.


ஓய்வு அறிவிப்பு:

இதுகுறித்து ஆங்கில "டிவி' சானலுக்கு கங்குலி அளித்த பேட்டியில்,"" ஐ.பி.எல்., உட்பட அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போகிறேன். எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராகும் திட்டம் உள்ளது,'' என, தெரிவித்து இருந்தார்.


திடீர் மறுப்பு:

இந்நிலையில் தனது ஓய்வு செய்திக்கு கங்குலி திடீரென மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கங்குலி கூறியது:

கடந்த தொடரில் நான் 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தேன். எனது வயதுள்ள கில்கிறிஸ்ட், டிராவிட், லட்சுமண் ஆகியோர் இன்னும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்று தெரியவில்லை.

கொச்சி அணியில் இருந்து என்னை அணுகினர். நானும் இதற்கு சம்மதித்து இருந்தேன். ஆனால் இதற்குரிய விதியை திருத்தவில்லை.

கிரிக்கெட் விதிப்படி பழைய சாதனைகளை கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தால் என்னை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், திறமை அடிப்படையில் இல்லாமல், பல்வேறு காரணங்களுக்காக, என்னை தேர்வு செய்யாமல் விட்டுவிட்டனர்.

இதனால் தான், இந்த ஐ.பி.எல்., தொடரில் தான் விளையாட முடியாது என்று தெரிவித்து இருந்தேன். ஒருவேளை ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன். மற்றவகை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பேன்.

இதுகுறித்து நான் சொன்ன செய்திகள், தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்த செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை.
இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

சேவாக், யூசுப் வெற்றியை தீர்மானிக்கக் கூடியவர்கள்

இந்திய வீரர்கள் சேவாக், யூசுப் பதான் ஆகியோர் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய முக்கியமான வீரர்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜெய்ப்பூருக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர் இதுகுறித்து மேலும் கூறியது:


நம்முடைய அணி சமபலம் நிறைந்த அணி. சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலம். சேவாக், யூசுப் பதான் ஆகியோர் இந்தியாவின் வெற்றியை தீர்மானிக்கக் கூடிய வீரர்களாக இருப்பார்கள்.


இடது கை சுழற்பந்து வீச்சாளரோடு களமிறங்கினால் அது நமக்கு சாதகமாக இருக்கும். இப்போது பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டிருப்பதால் மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.

நமக்கு 10-வது வீரராக களமிறங்கும் ஹர்பஜன் சிங் கூட சிறப்பாக ஆடி வருவதால் கடைசி 10 ஓவர்களில் 100 ரன்களை குவிக்கக் கூடிய தகுதியுள்ளது.


தோனி அனுபவம் வாய்ந்த வீரர். ஒரே விக்கெட் கீப்பரோடு களமிறங்குவதைப் பற்றி கவலைப்படவில்லை.

உலகக் கோப்பை முழுவதும் விக்கெட் கீப்பர் பணியை திறம்படச் செய்வதற்கு தோனி தகுதியானவர் என்றார்.

கங்குலியின் கனவு தகர்ந்தது

இந்திய அணியின் "மாஜி' கேப்டன் கங்குலியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. இவர், நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க இயலாது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக "டுவென்டி-20' தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதில் 2008, 2010 தொடரில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் கங்குலி. நான்காவது தொடருக்கான ஏலத்தில் கோல்கட்டா உட்பட, 10 அணிகளின் உரிமையாளர்களில், ஒருவர் கூட இவரை ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்நிலையில், கொச்சி அணி கங்குலியை சேர்த்துக்கொள்ள முன்வந்தது. இதற்கு மற்ற 9 ஐ.பி.எல்., அணிகளின் உரிமையாளர்கள் அனுமதி கொடுக்க வேண்டும். அப்போது தான் கங்குலியை சேர்க்க முடியும்.

இது குறித்து பி.சி.சி.ஐ., சார்பில் ஐ.பி.எல்., அணி நிர்வாகங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், கங்குலிக்காக விதியில் மாற்றம் செய்ய மும்பை, ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற கங்குலியின் கனவு நிறைவேறாமல் போனது. இது குறித்து ஐ.பி.எல்., தலைவர் சிராயு அமின் கூறுகையில்,""நேற்று நடந்த ஐ.பி.எல்., நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் கங்குலி பற்றி விவாதிக்கப்பட்டது.

விதிமுறைப்படி ஏலத்தில் இடம் பெற்ற வீரர்களை, அதற்கு வெளியே தேர்வு செய்ய முடியாது. இந்த விதியை தளர்த்த மற்ற அணிகள் ஒத்துக் கொள்ளாததால் கங்குலிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது,''என்றார்.


பாண்டேக்கு தடை

ஐ.பி.எல்., பெங்களூரு அணிக்காக விளையாடியவர் மனிஷ் பாண்டே. இவருக்கு இம்முறை ரூ. 20 லட்சம் மட்டுமே தர முன் வந்தது. இதையடுத்து "சகாரா புனே வாரியர்ஸ்' அணிக்கு மாற முடிவு செய்தார். இவர், விதிமுறைகளை மீறி பல்வேறு அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பெங்களூரு அணி நிர்வாகம் குற்றம்சாட்டியது.

இது பற்றி ஐ.பி.எல்., நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின், புனே அணிக்காக விளையாட அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், விதிமுறைகளை மீறியதற்காக நான்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

உலக கோப்பை அனுபவம்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில், அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய அனுபவம் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், இலங்கையின் ஜெயசூர்யாவுக்கு உள்ளது.

இவர்கள் இருவரும் தலா 444 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளனர். இதேபோல உலக கோப்பை தொடரில் அதிக போட்டிகளில் பங்கேற்று, சிலர் சாதனை படைத்துள்ளனர். இது குறித்த சிறப்பு பார்வை.

இதுவரை நடந்துள்ள 9 உலக கோப்பை தொடர்களில், அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத், ரிக்கி பாண்டிங் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் தலா 39 போட்டியில் பங்கேற்றுள்ளனர்.


இவ்வரிசையில் "டாப்-12' வீரர்கள்:

வீரர் போட்டி

மெக்ராத் (ஆஸி.,) 39

பாண்டிங் (ஆஸி.,) 39

ஜெயசூர்யா (இலங்கை) 38

அக்ரம் (பாக்.,) 38

சச்சின் (இந்தியா) 36

டிசில்வா (இலங்கை) 35

இன்சமாம் (பாக்.,) 35

லாரா (வெ.இ.,) 34

ஸ்ரீநாத் (இந்தியா) 34

பிளமிங் (நியூசி.,) 33

மியான்தத் (பாக்.,) 33

ஸ்டீவ் வாக் (ஆஸி.,) 33

"டாப்-12' பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களில், இம்முறை பாண்டிங், சச்சின் மட்டும் விளையாட உள்ளனர்.

இவர்கள் பைனல் வரை விளையாடும் பட்சத்தில், உலக கோப்பை தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைக்கலாம்.

கிரிக்கெட்டின் ஒபாமா தோனி

இந்திய அணி கேப்டன் தோனி தலைமை பண்பில் சிறந்து விளங்குகிறார். இவர் "கிரிக்கெட்டின் ஒபாமாவாக திகழ்கிறார், என, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி. பதட்டமான நேரத்திலும் கூட மிகவும் "கூலாக செயல்படக் கூடியவர். இவர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா போல தலைமைப் பண்பில் மிகச் சிறந்து விளங்குவதாக, சக வீரர் பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் துவங்க உள்ள உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள உற்சாகத்தில் இவர் கூறியது:

உலக கோப்பை தொடர் என்பது சாதாரண தொடர் அல்ல. இதில் அதிக உணர்ச்சிகளுடன் கூடிய எதிர்பார்ப்புகள் வித்தியாசமாக இருக்கும். இதற்கான இந்திய தேசிய அணியில் இடம் பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இத்தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்ததன் மூலம், எனது கனவு நிறைவேறியுள்ளது.

இந்திய ஆடுகளங்கள், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போல் இல்லாமல் மெதுவாக செயல்படும். இங்கு, சூழ்நிலைக்கேற்ப பல்வேறு வகையில் பவுலிங் செய்ய வேண்டியது இருக்கும். போட்டியின் போது ஜாகிர் கானும், ஆஷிஸ் நெஹ்ராவும் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார்கள். நெருக்கடியான நேரங்களில் பயன்தரும் வகையிலான ஆலோசனைகளை தந்து உதவுவார்கள்.


பேட்டிங் ஆறுதல்:

உத்தர பிரதேச அணி மற்றும் இந்தியா "ஏ அணிகளில் பேட்டிங்கில் நான் தான் துவக்க ஆட்டக்காரர். இதனால் எனது பேட்டிங் திறமை எனக்கு நன்கு தெரியும். ஆனால் இந்திய அணி என்று வரும் போது, உலகத்தரம் வாய்ந்த துவக்க வீரர்கள் உள்ளனர். எப்படி இருப்பினும், பேட்டிங்கில் என்னால் இயன்ற அளவுக்கு ரன்களை எடுத்து அணிக்கு உதவினால் மகிழ்ச்சியடைவேன்.


கோப்பை வாய்ப்பு:

சமீபத்தில் பல தொடர்களில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது. இது உலக கோப்பை தொடருக்கு சாதகமாக இருப்பது உறுதி. தற்போதுள்ள இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். இத்தொடருக்கான பயிற்சியும் நல்லவிதமாக அமைந்துள்ளது. இதனால் எப்படியும் கோப்பை வெல்லமுடியும் என நம்புகிறேன்.


கிரிக்கெட்டின் ஒபாமா:

இதற்கு அணியின் கேப்டன் தோனி உதவுவார். ஏனெனில் போட்டியில் தோல்வியடையக் கூடிய மோசமான நிலையில் கூட, தோனி "கூலாக இருப்பார். வழக்கத்துக்கு மாறாக கடைசி வரைக்கும் நம்பிக்கையுடன் காணப்படுவார். சக வீரர்களை ஊக்குவித்து, அவர்களது திறமையை வெளிக்கொண்டு வருவார். மொத்தத்தில் கிரிக்கெட்டின் "ஒபாமா என்று தோனியை அழைக்கலாம்.


நம்பிக்கை உள்ளது:

தென் ஆப்ரிக்க தொடரில் அடைந்த காயத்துக்கு சரியான முறையில் சிகிச்சை எடுத்து வருவதால், நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. உலக கோப்பை போட்டிகள் துவங்கும் முன்பாக, சரியான பயிற்சிகள் எடுத்து மீண்டு விடுவேன் என்று நம்பிக்கை உள்ளது.

இந்தியாவுக்கு அடுத்து இங்கிலாந்து அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. சமீபகாலமாக நிலையான ஆட்டத்தை தொடர்ந்து வரும், இவர்கள் இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்.

இவ்வாறு பிரவீண் குமார் தெரிவித்தார்.


இங்கிலாந்தில் சிகிச்சை

உலக கோப்பை தொடர் துவங்கவுள்ள நேரத்தில், பிரவீண் குமாரின் முழங்கை காயம் இன்னும் முழுமையாக குணமடையாமல் உள்ளது. இதனால் காயத்துக்கு சிகிச்சை , பிரவீண் குமார் இங்கிலாந்து செல்கிறார். ஒருவேளை காயம் குணமடையாத பட்சத்தில், ஸ்ரீசாந்த் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது

இந்தியாவின் வெற்றிக்கு சச்சின் உதவுவார்

கடைசி உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் சச்சின், இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்கு முக்கிய உதவியாக இருப்பார்,'' என்று, முன்னாள் வீரர் பல்வீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து நடத்தும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்., 19 முதல் ஏப்., 2 வரை நடக்கிறது. இதுகுறித்த கடந்த 1983ல் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பல்வீந்தர் சிங் சாந்து (54) கூறியது:

இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் உலக கோப்பை தொடர் தான், தனக்கு கடைசி என்பது சச்சினுக்கு நன்றாகத் தெரியும். இதனால் அவரது கவனம் முழுவதும் இதில் தான் உள்ளது. கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக, 100 சதவீதத்துக்கும் அதிகமான திறமையை இவர் வெளிப்படுத்த காத்திருக்கிறார்.

மனரீதியாக இத்தொடருக்கு தயாராக உள்ள சச்சின், உடல் அளவில் இன்னும் தயாராகவில்லை. இருந்தாலும், இந்திய அணி கோப்பை வெல்வதற்கு, சச்சின் பெரும் உதவியாக இருப்பார். அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அனுபவம் வாய்ந்த இவர், அணியில் இருப்பதால் மற்ற வீரர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

யுவராஜ், யூசுப் பதான், தோனி போன்ற வீரர்கள் அணியை தோல்வியில் இருந்து மீட்டு, வெற்றிக்கு கொண்டு செல்லும் திறமை படைத்தவர்கள். எந்த நிலையிலும் இவர்கள் சோர்ந்துவிடக் கூடாது. எங்களது காலத்தில் மற்றவீரர்கள் விளையாடுவதை நேரில் பார்த்து தான், அவர்களது திறமையை அறிந்து அதற்கேற்ப செயல்பட முடியும்.

ஆனால் இப்போதெல்லாம் வீடியோவில் பார்த்து தெரிந்து அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளலாம். இதற்கு தகுந்த பயிற்சியாளர்களும் உள்ளனர். அவர்கள் உதவியுடன் இந்திய அணி சாதிக்கலாம். தவிர,


கறுப்பு குதிரைகள்:

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி கறுப்பு குதிரைகளாக இருக்கும் என்று நினைக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம், மீண்டும் அவர்கள் எழுச்சி பெற்றுள்ளனர்.

அந்த அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்றுள்ளதால், இந்திய ஆடுகளங்கள் குறித்து நன்கு தெரியும். தவிர, ஐ.பி.எல்., அணிகளில் பெரும்பாலும் பயிற்சியாளர்களாக உள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும், தங்களது வீரர்களுக்கு தேவையான தகவல்கள் அளிப்பது உறுதி.

கடந்த 1983 தொடரில், திறமையாக விளையாடும் பட்சத்தில் எப்படியும் வெற்றிபெற முடியும் என்று நம்பினேன். அதுபோல, கவாஸ்கர், யஷ்பால் சர்மா, மொகிந்தர் அமர்நாத் ஆகியோர் <உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மற்ற வீரர்கள் இயல்பான ஆட்டத்தை தொடர இந்திய அணி கோப்பை வெல்ல முடிந்தது. அதுபோல, கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி, நெருக்கடியை மறந்து சிறப்பாக சாதிக்கும் பட்சத்தில் கோப்பை வெல்லமுடியும்.

இவ்வாறு பல்வீந்தர் சிங் சாந்து கூறினார்.