மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடரை 2-0 என வென்று வரலாறு படைத்தது வங்கதேசம்.
வெளிநாட்டில் முதல் முறையாக வங்கதேசம் தொடரை வென்றுள்ளது. அதேபோன்று, அடுத்தடுத்த டெஸ்டுகளை முதல்முறையாக வென்றுள்ளது. முதல்முறையாக எதிரணியை இரு இன்னிங்ஸிலும் 250 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்துள்ளது.
கிரெனடாவில் நடைபெற்ற இந்த டெஸ்டின் 3-வது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்ட நேர இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது.
4-ம் நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
215 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தொடங்கிய வங்கதேசம், 67 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
எனினும், அதன் பின் ஜோடி சேர்ந்த தாற்காலிக கேப்டன் ஷகிப் அல் ஹசன், ரகிபுல் ஹசன் ஆகியோர் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடினர். வங்கதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்து வென்றது.
ரகிபுல் ஹசன் 99 பந்துகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 97 பந்துகளில் ஆட்டமிழக்காமல் ஒரு சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 96 ரன்களும் எடுத்தனர்.
ஷகிப் அல் ஹசன் சிக்சர் மூலம் வெற்றி ரன்களைக் குவித்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டேரன் சமி அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.
ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை ஷகிப் அல் ஹசன் தட்டிச் சென்றார்.
கிங்ஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வங்கதேசம் 95 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சம்பளப் பிரச்னை தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படாததால் கெயில் உள்ளிட்ட முன்னிலை வீரர்கள் விளையாட மறுத்ததால் 2-ம் நிலை அணியே இந்தத் தொடரில் பங்கேற்றது.
சுருக்கமான ஸ்கோர்:
மேற்கிந்தியத் தீவுகள்: 237 (ரிச்சர்ட்ஸ் 69, டெüலின் 95, மஹ்மதுல்லா 3-44) & 70.5 ஓவர்களில் 209 (பெர்னார்ட் 69, ஷகிப் அல் ஹசன் 5-70).
வங்கதேசம்: 232 (முஷ்பிகுர் ரஹீம் 48, ரோச் 6-48) & 54.4 ஓவர்களில் 217-6 (ஷகிப் அல் ஹசன் 96 நாட் அவுட், ரகிபுல் ஹசன் 65, சமி 5-55)
0 comments:
Post a Comment