செல்வாக்கு இருந்தால் நேரு ஸ்டேடியத்தில் அலுவலகம்?

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (எஸ்டிஏடி) அங்கீகாரம் பெற்ற பல்வேறு விளையாட்டுகளின் மாநிலச் சங்கங்கள், முறையான அலுவலகம் இல்லாமல் திணறிவருகின்றன.

தேசியப் போட்டிகளுக்குச் செல்லும் பல்வேறு விளையாட்டுகளுக்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்தும் தலையாய பொறுப்பை எஸ்.டி.ஏ.டி. கொண்டுள்ளது. பாரம்பரியம் வாய்ந்த கபடி விளையாட்டிலிருந்து சைக்கிள் போலோ வரை 51 வகையான விளையாட்டுகள் அந்த பட்டியலில் உள்ளன. ஆனால், பெரும்பாலான விளையாட்டுகள் அவசியமான போட்டிகளைக்கூட நடத்த முடியாமல் திணறிவருகின்றன. அவற்றுக்கு மாநிலச் சங்கத்தை செயல்படுத்த அலுவலகம்கூட இல்லை என்பது வேதனையான விஷயம்.

சென்னையில் நேரு தங்கக் கோப்பை கால்பந்து போட்டியை 1993-ம் ஆண்டு நடத்த முனைந்தபோது, ரிப்பன் பில்டிங்கிற்கு பின்புறம் இருந்த பெரிய மைதானத்தை சர்வதேச தரத்திலான ஸ்டேடியமாக்க அப்போதைய அரசு முடிவு செய்தது. அதில் கால்பந்தாட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அந்த விளையாட்டுக்கு மாநில அலுவலகமும் அதே ஸ்டேடியத்தில் சாதாரண வகையில் முதன்முதலாக ஒதுக்கப்பட்டது.

அதன்பின்னர் இன்றுவரை சில விளையாட்டுகள் மட்டும் அங்கு அலுவலகங்களைப் பெற்றுள்ளன. உலக வாலிபால் மேம்பாட்டு மையம், அகில இந்திய செஸ் சம்மேளனம், ஹால் ஆஃப் செஸ், ஹால் ஆஃப் டேபிள் டென்னிஸ் ஆகியனவும் அதில் அடங்கும். தவிர, நேரு உள்ளரங்க வளாகத்தில் வாள் வீச்சு, ஹேண்ட்பால் ஆகிய விளையாட்டுகளுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 15 அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன.

சர்வதேச விளையாட்டுகளுக்கான தரமதிப்பீட்டின் விதிமுறைகளை மீறும்விதமாக அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டாலும், விளையாட்டை செயல்படுத்த வேறுவழியில்லை என்ற அடிப்படையில் பிரம்மாண்டமான நேரு ஸ்டேடியத்தில் அலுவலகங்களை ஒதுக்கியுள்ளது எஸ்.டி.ஏ.டி. ஆனால் எதன் அடிப்படையில் அவை ஒதுக்கப்பட்டு வருகிறது என்ற விவரம் தெரியவில்லை.

ஆனால் கேள்விப்பட்ட வரை, விளையாட்டுச் சங்கங்களில் முக்கியப் பொறுப்பை வகிக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அதிகாரிகள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி அலுவலகம் பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது. கடைசியாக ஒதுக்கீடு பெற்ற அகில இந்திய செஸ் சம்மேளனம் உள்பட சில சங்கங்கள் கவர்ச்சிகரமாக அதைக் கட்டியுள்ளன. இது குறித்து கடந்த வாரம் நடந்த தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுக்குழுவில் மூத்த அதிகாரி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச தரத்திலான ஸ்டேடியத்தில் தரமதிப்பீடு காக்கப்பட வேண்டும். அதைவிட்டுவிட்டு இஷ்டத்துக்கு சில சங்கங்கள் அலுவலகத்தை கட்டியுள்ளது வருத்தத்துக்குரியது என்றார்.

அதில் இன்னொறு வேடிக்கை என்னவென்றால் ஒதுக்கீடு பெற்ற சில சங்கங்கள் ரூ. 1200 முதல் 1500 வரையிலான குறைந்த வாடகையைக் கூட செலுத்தாமல் இருந்து வருகின்றனவாம்.

இது ஒருபக்கம் இருக்க, மாநில சாம்பியன் போட்டியைக் கூட முறையாக நடத்த முடியாமல் தவிக்கும் சங்கங்களின் அலுவலக ஒதுக்கீடு கோரிக்கைகள், எஸ்.டி.ஏ.டி. தலைமை அலுவலக மேஜையில் காலம் காலமாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் சில விளையாட்டுகளின் அலுவலகங்கள் தலைவர் அல்லது செயலரின் வீட்டிலும், சில நடமாடும் அலுவலகமாகவும் செயல்பட்டுவருகின்றன.

கேரம் விளையாட்டுக்கு புதிய அலுவலகம்: இதற்கிடையே ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெறாத கேரம் விளையாட்டுக்காக நேரு ஸ்டேடியத்தின் பின்பகுதியில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எஸ்.டி.ஏ.டி.யே அலுவலகம் கட்டிக்கொடுத்துள்ளது. அரசின் உயர் அதிகாரி ஒருவர் அந்த விளையாட்டில் நிர்வாகியாக இருப்பதால் இந்த ஏற்பாடு. அதற்கான திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது.

எஸ்.டி.ஏ.டி. நினைத்தால் அலுவலகம் கோரும் நலிந்த விளையாட்டுகளுக்கும் அலுவலகம் ஒதுக்கமுடியும். அதற்கு இடம் இருக்கிறது. ஆனால், அந்த சங்கங்களால் நமக்கு என்ன பயன் என்ற மனப்பான்மையில் சிலர் செயல்படுவதாகத் தெரியவருகிறது.

திமுக அரசு பதவியேற்ற 3 ஆண்டுகளில் ஏழாவது உறுப்பினர் செயலராக சமீபத்தில் பதவியேற்றுள்ள சத்யவிரத சாஹு, மிகவும் நல்ல முறையில் நடத்திவருவதாக அங்குள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவரால் இதுபோன்ற அநீதிகளைக் களையமுடியுமா

0 comments:

Post a Comment