முடிவுக்கு வந்தது மே.இ.தீவுகள் வீரர்கள் பிரச்னை

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கு இடையேயான பிரச்னையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க மேற்கிந்தியத் தீவுகளின் முன்னிலை வீரர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

சம்பளம் தொடர்பான ஒப்பந்தம் செய்து கொள்ளாததைக் கண்டித்து வங்கதேசத்துடனான தொடரில் பங்கேற்பதில்லை என கிறிஸ் கெயில் உள்ளிட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னிலை வீரர்கள் போர்க் கொடி உயர்த்தினர்.

இதையடுத்து 2-ம் நிலை அணியைத் தேர்வு செய்தது கிரிக்கெட் வாரியம். அந்த அணியே டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

ஜூலை 26 மற்றும் 28-ம் தேதிகளில் வங்கதேசத்துடன் நடைபெற உள்ள முதல் 2 ஒரு தின ஆட்டங்களுக்கான 2-ம் நிலை அணியை கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இந்நிலையில், கயானா அதிபரும், கரிபீய சமூகம் மற்றும் பொது வர்த்தக அமைப்பின் தலைவருமான பரத் ஜக்தேவ் பிரச்னையைத் தீர்க்க முயற்சி மேற்கொண்டார்.

இதையடுத்து, மேற்கிந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும், கிரிக்கெட் வீரர்கள் சங்கப் பிரதிநிதிகளும் புதன்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில், மத்தியஸ்தர் மூலம் பிரச்னையைத் தீர்த்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மத்தியஸ்தராக காமன்வெல்த் முன்னாள் பொதுச் செயலர் ஸ்ரீதத் ராம்பால் செயல்பட இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வீரர்கள் சங்கத் தலைவர் தீனநாத் ராம்நாராயணும், கிரிக்கெட் வாரியத் தலைவர் டாக்டர் ஜூலியன் ஹண்டும் கையெழுத்திட்டனர்.

கரிபீய சமூகம் மற்றும் பொது வர்த்தக அமைப்பின் செயலக உதவியுடன் மத்தியஸ்த குழு பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைக் காணும் தனது பணியை உடனடியாகத் துவங்கும். கிரிக்கெட் சங்கம், வீரர்களின் நலனைக் கருதியும், சர்வதேச கிரிக்கெட் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான தங்களது பொறுப்புணர்வினாலும் இத்தகைய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என இரு தரப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment