இந்திய கிரிக்கெட் சபையின் விதிமுறையில் திருத்தம் கொண்டு வந்ததற்கு எதிரான மனு தள்ளுபடி

இந்திய கிரிக்கெட் சபையின் விதிமுறைகளில் திருத்தங்கள் கொண்டு வந்ததை எதிர்த்து அதன் முன்னாள் தலைவர் ஏ.சி.முத்தையா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த மேல் நீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாவை வழக்குச் செலவாக நான்கு வாரங்களுக்குள் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்குச் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டது.

இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.) செயலாளர் சீனிவாசன் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.பி.சி.சி.ஐ.நடத்திய இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டியில் ஓர் அணியின் உரிமையாளராக இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் இருந்தது. இதன் மூலம் அவர் வர்த்தக ரீதியில் பயனடைந்துள்ளார்.

பி.சி.சி.ஐ. விதிமுறைகளின்படி அதன் நிர்வாகத்தில் பங்கு கொண்டவர், நேரடியாகவோ,மறைமுகமாகவோ பி.சி.சி.ஐ.நடத்தும் போட்டிகளில் வர்த்தக ரீதியிலான அக்கறை காட்டக்கூடாது.இந்த விதிமுறைகளில் ஐ.பி.எல். மற்றும் "ருவென்ரி20' போட்டிகளுக்கு மட்டும் விதிவிலக்களித்து திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இந்தத் திருத்தங்களை ரத்துச் செய்யவேண்டும். பி.சி.சி.ஐ. செயலாளராக சீனிவாசன் பதவியில் தொடரதடை விதிக்கவேண்டுமென்று ஏ.சி.முத்தையாவின் மனுவில் கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு ""பதிவுபெற்ற ஒரு சங்கமான பி.சி.சி.ஐ.தனது விதிகளைத் திருத்தம் செய்ய உரிமையுள்ளது. மனுதாரர் பி.சி.சி.ஐ.யில் உறுப்பினராக இல்லாததால் இந்த வழக்கைத் தொடர அவருக்கு உரிமையில்லை. தனிநபர் நலனுக்காக இந்த விதிமுறைகளில் திருத்தம் கொண்டவரப்படவில்லை என்பதை பி.சி.சி.ஐ. நிரூபித்துள்ளது.

இந்த வழக்கில் ஆரம்பகட்ட முகாந்திரம் இல்லை.எனவே,இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபா வழக்குச் செலவாக விதிக்கப்படுகிறது.இத்தொகையை நான்கு வாரங்களுக்குள் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்குச் செலுத்த உத்தரவிடப்படுகிறது என தெரிவித்தார்.


0 comments:

Post a Comment