இந்திய கிரிக்கெட் சபையைத் தவறாகக் கூறவில்லை முன்னாள் கப்டன் கங்குலி "பல்டி' அடித்தார்

வீரர்கள் தேர்வில் இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.) பாரபட்சம் காட்டியதாக தான் ஒருபோதும் கூறவில்லை என சவுரவ் கங்குலி அந்தர் பல்டி அடித்துள்ளார்.

ஓய்வு தொடர்பாக தான் சொன்ன கருத்துகளை ஊடகங்கள் மாற்றி வெளியிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.தனது சொந்த முடிவின் படியே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றதாக கங்குலி தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றார். சமீபத்தில் பெங்காலி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இவர்,பி.சி.சி.ஐ. மீது கடுமையாகச் சாடினார். சச்சின்,ராவிட் போன்றோர் விளையாடி வரும் நிலையில் தான் மட்டும் விரைவில் ஓய்வு பெறும் நிலைமைக்குத் தள்ளப்பட்டதாக ஆதங்கப்பட்டார்.இன்னும் சில காலம் கிரிக்கெட் விளையாட போதிய திறமை என்னிடம் இருந்தது. ஆனால்,இந்திய கிரிக்கெட் சபை விதிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி உள்ளது என கங்குலி கூறியதாகச் செய்திகள் வெளியாயின.இதற்கு பி.சி.சி.ஐ.சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தான் பி.சி.சி.ஐ.பற்றி விமர்சித்ததாக வெளியான செய்திகளை கங்குலி மறுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது;

பி.சி.சி.ஐ. குறித்து நான் தெரிவித்ததாக வந்த கருத்துகள் உண்மையானதல்ல.எனது கருத்துகள் தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளன. என்ன சொல்லவேண்டும், என்ன சொல்லக்கூடாது என்பது எனக்குத் தெரியும்.இது சம்பந்தமாக உண்மையில் நான் என்ன சொல்லியுள்ளேன் என்பதை அந்த வீடியோவை முழுமையாகப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதேபேட்டி ஒரு ஆங்கில பத்திரிகையில் சரியாக வெளியிடப்பட்டுள்ளது.இதை எல்லோரும் படித்திருப்பார்கள் என நம்புகிறேன். இதிலிருந்து ஒரே பேட்டியில் இரு வேறு கருத்துகளைச் சொல்லியிருக்க முடியாதென உறுதியாகப் புரிந்து கொள்ளலாம்.எனது கருத்துகளுக்குப் பதிலளிப்பவர்கள் முதலில் அந்த பேட்டியில் என்ன தெரிவித்துள்ளேன் என்பதை முழுமையாகப் படித்து தெரிந்து கொள்ளவும்.

எனது கருத்துப் பற்றி பி.சி.சி.ஐ.தலைவர் ராஜிவ் சுக்லா கவலை தெரிவித்திருந்தார்.அவர் ""ரிவி'க்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பதிலளித்துள்ளார்.உண்மையில் அந்த செய்தியில் என்ன உள்ளது என்பதை அவர் கவனிக்கவேண்டும்.

சச்சின், ராவிட் குறித்து எந்தவித மாறுபட்ட கருத்துகளும் நான் தெரிவிக்கவில்லை.அவர்கள் தொடர்ந்து விளையாடுகிறார்கள்.நான் ஓய்வு பெறமுடிவெடுத்தேன்.இது என்னுடைய சொந்த முடிவென்று தான் பேட்டியில் சொன்னேன்.

ஐ.பி.எல். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பிரபலங்கள் நிறைய பேர் உள்ளனர்.அதைப்பற்றி தினமும் ஏதாவது ஊகமான செய்திகள் வந்து கொண்டேயிருக்கும். இப்போது என்னைப்பற்றி வருகிறது.இதில் ஒன்றுதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நான் மீண்டும் கப்டனாக நியமிக்கப்படவுள்ளேன் என்ற செய்தி.எந்த முடிவாக இருந்தாலும் அணி நிர்வாகம் வெளிப்படையாக தெரிவிக்கும். அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படவிருப்பது ஜோன் ரைட்டா அல்லது மைக்கேல் பெவனா என்பது பற்றி எனக்குத் தெரியாது.ஏனென்றால் நான் முடிவெடுக்கும் இடத்தில் இல்லையெனவும் தெரிவித்தார்

0 comments:

Post a Comment