ஐ.சி.சி., ரேங்கிங்கை விட சிறந்தது அர்ஜூனா விருது

அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இது ஐ.சி.சி., ரேங்கிங்கை விட மிகவும் சிறந்தது,'' என இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்ட டெஸ்ட் வீரர்கள் பட்டியலில், இந்திய வீரர் காம்பிர் "நம்பர்-1' இடத்தை பிடித்து இருந்தார். அந்த மகிழ்ச்சியில் திளைத்து இருந்த காம்பிருக்கு, மற்றொரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. இவரது பெயர் "அர்ஜூனா' விருதுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்ளம் பூரிக்க காம்பிர் தெரிவித்தது:

*முதலில் ஐ.சி.சி., ரேங்கிங், இப்போது அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைத்தது என, எல்லாம் சேர்த்து பெருமகிழ்ச்சியாக உள்ளதா?
அர்ஜூனா விருதுக்கு எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை வாழ்க்கையின் மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இது "நம்பர்-1' டெஸ்ட் வீரர் என்ற அந்தஸ்தை காட்டிலும் பெரியது. என்னை அங்கீகரித்த இந்திய அரசிற்கும், இந்திய கிரிக்கெட் போர்டிற்கும் (பி.சி.சி.ஐ.,) நன்றி. எனது வெற்றியில் பங்கெடுத்துக் கொண்ட எல்லோருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது மூலம் அடுத்து வரும் போட்டிகளிலும் தேசத்திற் காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

*கடந்த 2008 ம் ஆண்டு உங்கள் கனவு காலம். இதுபோல மீண்டும் அமையுமா?

தற்போது அதிகமாக கிரிக்கெட் விளையாடப்படுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் அதிக ரன்கள் எடுப்பது என்பது இயலாது. காலமும், பார்மும் ஒத்துழைத் தால் மனரீதியில் உறுதியாக தயாராகலாம். ஆனால் பார்ம் இல்லையென்றால் அவ்வளவு தான்.

*அடுத்து வரக்கூடிய தொடர்களுக்கு இந்திய அணி தயாராக உள்ளதா?

ஆமாம். நமது அணி கடந்த பல மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து அசத்துகிறோம். முக்கியமாக வெளிநாட்டு தொடர்களில் வெற்றி பெற்று வருகிறோம். அபூர்வமாக "டுவென்டி-20' உலக கோப்பை போட்டியில் பேட்டிங்கில் மொத்தமாக ஏமாற்றியதால் தோல்வி கிடைத்தது.

*இந்திய வீரர்களால் "ஷாட் பிட்ச்' பந்துகளை எதிர்கொள்ள முடியாதது தான் காரணமா?

இது தவறான கருத்து. இதனை நான் முழுமையாக மறுக்கிறேன். "ஷாட் பிட்ச்' பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் இருந்திருந்தால் இந்திய அணி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் உலகின் பல இடங்களிலும் வெற்றி பெற்றிருக்க முடியுமா?. நாங்கள் சிறப்பாக செயல்பட மீடியா உதவியும் எங்களுக்கு முக்கியம்.

* உங்கள் அணி கைப்பற்றிய ஒருநாள் தொடர்களில் எது உங்களுக்கு பிடித்தது?

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் எனக்கு திருப்பு முனை தந்தது. ஆனால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்தான் எனக்கு சிறந்த தொடர். அதில் தான் 150 ரன்கள் எடுத்தேன். இலங்கை மைதானங்களில் இவ்வளவு ரன்கள் எடுப்பது கடினம். எப்படி சாதித்தீர்கள் என பிறர் கேட்டபோது தான், நான் வியந்தேன்.

*வரும் தொடர்களில் அசத்துவதற்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

இந்திய அணிக்கு வர இருக்கும் தொடர்கள் சவாலானவை. தற்போது கிடைத்துள்ள ஓய்வில் கடினமான பயிற்சிகள் செய்து பிட்னஸ் மற்றும் மனஉறுதியை வளர்த்துக்கொள்வேன். இதை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும். குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இருப்பது, நேரத்திற்கு வீட்டிற்கு வந்து சாப்பிடுவது, உறங்குவது போன்றவை மகிழ்ச்சியாக உள்ளது. அணியுடன் பயணத்தில் இருக்கும் போது இதையெல்லாம் இழக்க வேண்டும். ஆனால் கிரிக்கெட் தான் என்னுடைய தொழில் என நினைத்துக்கொள்வேன். இவ்வாறு காம்பிர் தெரிவித்தார்.

இந்திய அணிக்கு புகழாரம்: இந்திய அணியின் தொடர் வெற்றி குறித்து காம்பிர் கூறுகையில்,""இதற்கு முன்பு எந்த இந்திய அணியும் தொடர்ந்து எட்டு அல்லது ஒன்பது தொடர்கள் வென்றதில்லை. இது மிகப்பெரிய செயல். நாம் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை அதன் மண்ணில் வீழ்த்தி இருக்கிறோம். இது அவ்வளவு எளிதானது அல்ல,'' என்றார்

0 comments:

Post a Comment