ரவி ராம்பாலுக்கு தோனி புகழாரம்

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் ரவி ராம்பாலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி புகழாரம் சூட்டினார்.

கிங்ஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரவி ராம்பால் சிறப்பாகப் பந்துவீசி 37 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணமானார்.

அவரது பந்துவீச்சு குறித்து செயின்ட் லூசியாவில் தோனி கூறியதாவது:

ராம்பால் பந்தை அற்புதமாக "ஸ்விங்' செய்கிறார். சரியான இடத்தில் பந்துவீசுகிறார். கேட்ச் கொடுக்கும் வகையில் விளையாடுமாறு பேட்ஸ்மென்களைத் தூண்டுகிறார்.

கிங்ஸ்டன் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லாதபோதும், ராம்பால், ஜெரோம் டெய்லர் ஆகியோர் அபாரமாகப் பந்துவீசினர் என்றார்.

24 வயதாகும் ராம்பால் அடிக்கடி காயங்களால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் கிங்ஸ்டன் ஆட்டம் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்தது.

"அணியில் இடம்பெறுவதற்காக கடுமையாக உழைத்து வந்தேன். கிங்ஸ்டன் ஆட்டம் எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது' என்றார் ராம்பால்.

மீண்டும் சிறப்பாக விளையாடுவோம்- மார்ட்டன்: கிங்ஸ்டனில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் விளையாடியதுபோலவே, செயின்ட் லூசியாவில் வெள்ளிக்கிழமை நடைபெறும் 3-வது ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடுவோம் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் ருனாகோ மார்ட்டன் தெரிவித்தார்.

இத் தொடரின் முதல் ஆட்டத்தில் 51 பந்துகளில் 42 ரன்களும், 2-வது ஆட்டத்தில் 102 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 85 ரன்களும் விளாசி நம்பிக்கை வீரராக மார்ட்டன் உருவெடுத்துள்ளார்.

3-வது ஆட்டம் குறித்து மார்ட்டன் கூறியதாவது:

3-வது ஆட்டத்தில் வெல்லும் அணி தொடரில் தோல்வியைத் தவிர்க்க முடியும். எனவே, இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முனைப்புடன் விளையாடும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். இது தொடரும் என நம்புவதாக மார்ட்டன் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment