2011 உலகக் கோப்பை அறிமுகம்

2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வழங்கப்படும் கோப்பை, லோகோ (படம்) அறிமுக நிகழ்ச்சி மும்பையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

ஐசிசி துணைத் தலைவர் சரத் பவார், தலைமை நிர்வாகி ஹாரூண் லோர்கட் ஆகியோர் முன்னிலையில் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.

1975 மற்றும் 1979 கோப்பைகளை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் கிளைவ் லாயிட், 1983-ல் கோப்பையை வென்ற இந்திய அணியின் பல்வீந்தர் சிங் சாந்து, வெங்சர்க்கார், 1996-ல் கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்ற அரவிந்த டி சில்வா, 1999 மற்றும் 2003-ல் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற மைக்கேல் பெவன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் தங்களது மலரும் நினைவுகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஹாரூண் லோர்கட் கூறியதாவது: டுவென்டி20 உலகக் கோப்பையை விட அதிக முக்கியத்துவம் 50 ஓவர் போட்டிக்கே அளிக்கப்படும்.

இப் போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. பாகிஸ்தானில் இந்த உலகக் கோப்பை ஆட்டங்கள் நடைபெற வாய்ப்பில்லை. இப்பிரச்னைக்காக பாகிஸ்தான் வாரியம் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. அதற்கு பதில் அவர்கள் பேச்சு நடத்தியிருக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் சரத் பவார் பேசியதாவது: மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இறுதி ஆட்டம் நடைபெறும். உலகக் கோப்பை ஆட்டங்களுக்கான நுழைவுக் கட்டணம் குறைந்த அளவிலேயே நிர்ணயிக்கப்படும்.

பாகிஸ்தானில் ஆட்டங்கள் நடைபெறவில்லை என்றாலும், ஒருங்கிணைப்புக் குழுவில் பாகிஸ்தான் நீடிக்கும் என்றார்.

பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆட்டங்கள் இந்தியா, இலங்கை, வங்கதேசத்துக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அறிமுக நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதிநிதியாக அந் நாட்டு வாரியத்தின் செயல் மேலாளர் ஜாகீர் கான் பங்கேற்றார். எனினும், அதற்கு முன்னதாக நடைபெற்ற மத்திய ஒருங்கிணைப்புக் கமிட்டி கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த 14 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால், அந் நாட்டு வாரியத்துக்கு ரூ.42 கோடி தர ஐசிசி ஒப்புக் கொண்டுள்ளது

0 comments:

Post a Comment