பதினைந்தாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தார் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்.
இது அவருக்கு 6-வது விம்பிள்டன் பட்டமாகியுள்ளது.
ஃபெடரருக்கும், அமெரிக்காவின் ஆன்டி ராடிக்கிற்கும் இடையே விம்பிள்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டம் ரசிகர்களுக்கு மிகவும் விருந்து படைத்திருந்தது.
4 மணி 15 நிமிடம் நீடித்த மெகா போட்டியில் 5-7, 7-6 (8-6), 7-6 (7-5), 3-6, 16-14 என்ற செட்களில் வெற்றியைச் சுவைத்தார் 27 வயதாகும் ஃபெடரர்.
கடைசி செட் ஆட்டம், இதுவரையிலான விம்பிள்டன் வரலாற்றில் மிக நீண்ட நேரம் நடைபெற்றதாக அமைந்தது.
முதல் செட்டை 7-5 என கைப்பற்றி ஃபெடரருக்கு அதிர்ச்சி அளித்த ராடிக், அதன்பிறகும் சளைக்காமல் போராடினார். இரண்டாவது செட்டையும் கைப்பற்ற பிரகாசமான வாய்ப்பை பெற்றிருந்தார். 4 முறை செட் பாய்ண்டுகளைப் பெற்றிருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அதை இழந்தார்.
இம்முறை விம்பிள்டனில் பட்டம் வென்று சாதனை படைக்கத் துடித்த பிரிட்டன் வீரர் ஆன்டி முரேவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் மேற்கொண்ட உத்தியையே ஃபெடரருக்கு எதிராகவும் மேற்கொண்டார். ஆனால் பலத்த அனுபவமுடைய ஃபெடரர் பட்டத்துக்குரியவரானார்.
இதுவரை ஒரே ஒருமுறை மட்டும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 2003 யு.எஸ்.ஓபனில் வென்றுள்ள ராடிக், 2004, 2005 ஆகிய ஆண்டுகளில் நடந்த விம்பிள்டன் இறுதிப் போட்டியிலும் ஃபெடரரிடம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
நம்பர்-1 ஆனார்: இந்த வெற்றி மூலம் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலிடமிருந்து உலகின் நம்பர்-1 வீரர் என்ற அந்தஸ்தையும் ஃபெடரர் பெற்றார். கடந்த ஆண்டு போட்டியில் நடாலிடம் 5 செட்களில் ஃபெடரர் தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு காயம் காரணமாக திடீரென நடால் விலகிக்கொண்டார்.
சாதனை: அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்துவந்தது. அதை, தற்போது ஃபெடரர் முறியடித்துள்ளார்.
6 முறை விம்பிள்டன், 5 முறை யு.எஸ். ஓபன், 3 முறை ஆஸ்திரேலிய ஓபன், ஒரு முறை பிரெஞ்ச் ஓபன் என கிராண்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார்.
ஃபெடரரின் சாதனை வெற்றியைக் காண பீட் சாம்ப்ராஸ், ராட் லேவர், ஜான் போர்க் ஆகியோரும் அரங்கிற்கு வந்திருந்தனர்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது மனைவியுடன் ஆட்டத்தை ரசித்தார்.
0 comments:
Post a Comment