லண்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராண்ட் பிரீ தட களப் போட்டியில் போல்வால்ட் ஜாம்பவான் ரஷியாவின் இசின்பயேவா பட்டம் வெல்ல முடியாமல் போனார்.
போல்வால்ட் போட்டிகளில் பலமுறை உலக சாதனையை புதுப்பித்துக்கொண்டுள்ள இசின்பயேவா, போலந்து வீராங்கனை அன்ன ரோகெüஸ்காவிடம் முதலிடத்தை இழந்தார். இருவரும் 4.68 மீட்டர் உயரம் தாண்டினர். ஆனால் இசின்பயேவா தனது கடைசி வாய்ப்பிலேயே அதை எட்டினார். இதையடுத்து இரண்டாம் இடத்துடன் அவர் திருப்தி அடையவேண்டியதாயிற்று.
"எதிர்பாராத இம்முடிவால் சற்று ஏமாற்றம் அடைந்தேன். அது எப்படி நடந்தது எனத் தெரியவில்லை. என்றாலும் உலகப் போட்டிக்கு இன்னும் 3 வார காலம் உள்ளது. போதுமான ஓய்வு எடுத்துக்கொண்டு அதில் பட்டத்தைக் கைப்பற்றும் நம்பிக்கை உள்ளது' என்றார் இசின்பயேவா.
கடந்த 6 ஆண்டுகளில் பட்டம் வெல்லமுடியாமல் இசின்பயேவா ஏமாறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2003-ம் ஆண்டு இதுபோல பெரிய அளவிலான போட்டியில் தோல்வியுற்றார்.
அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன் போட்டிக்கான பரீட்சார்த்த போட்டியாக இது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
உசேன் போல்ட் வெற்றி: அதே சமயம் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையைக் கொண்டுள்ள ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் 9.91 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்தார்.
மற்றொரு ஜமைக்கா வீரர் யோகன் பிளேக் 10.11 விநாடிகளில் இலக்கை எட்டி இரண்டாம் இடத்தைப் பிடித்தார்
0 comments:
Post a Comment