இந்திய- ஆஸ்திரேலிய ஒரு தின தொடருக்கான இடங்கள் அறிவிப்பு

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே அக்டோபர், நவம்பரில் நடைபெறும் ஒரு தினத் தொடருக்கான இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

வாரியத்தின் சுற்றுப்பயண கமிட்டிக் கூட்டம் வாரியச் செயலர் என்.சீனிவாசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

தில்லி, மும்பை, மொஹாலி, ஹைதராபாத், நாகபுரி, ஜெய்ப்பூர் மற்றும் குவாஹாட்டியில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒரு தின ஆட்டங்களை நடத்துவது என இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

எந்த நாளில், எந்த இடத்தில் நடத்துவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் குவாஹாட்டியில் நடைபெறுவதாக இருந்தது.

அதற்கு முன்னர், குவாஹாட்டியில் நடைபெறவிருந்த 2 ஆட்டங்கள் மோசமான வானிலை காரணமாக கைவிடப்பட்டன. இதனால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

துலீப் டிராபி போட்டியை "நாக்-அவுட்' முறையில் நடத்துவது எனவும், பிசிசிஐ கார்ப்பரேட் டிராபி போட்டியை செப்டம்பர் 1 முதல் 8 வரை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

22 வயதுக்குள்பட்டோருக்கான சி.கே.நாயுடு டிராபி மற்றும் 19 வயதுக்குள்பட்டோருக்கான கூச் பிகார் டிராபியை எலைட் மற்றும் பிளேட் குழு என நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடத்தப்படாத மாநிலங்களுக்கு இடையேயான முஷ்டாக் அலி டி20 போட்டி இந்த ஆண்டு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதால், 1973 முதல் நடத்தப்பட்டு வந்த தேவதரு கோப்பை போட்டியை (50 ஓவர்கள்) இந்த ஆண்டு நடத்துவதில்லை எனவும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

0 comments:

Post a Comment