இந்திய வீரர்களை மோசமாக விமர்சித்த புக்கனனுக்கு யுவராஜ் சிங் பதிலடி

தன்னைப் பற்றியும் சக இந்திய வீரர்களைப் பற்றியும் விமர்சித்த புக்கனனுக்கு யுவராஜ் சரியான பதிலடி அளித்துள்ளார். தவிர, இந்திய அணியில் எந்த பிரச்சினையும் இல்லை. அணி ஒற்றுமையாக உள்ளது என்றும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜோன் புக்கனன். ""தி பியூச்சர் ஒப் கிரிக்கெட் திரைஸ் ஒப் ருவென்ரி 20' என்ற பெயரில் எழுதியுள்ள புத்தகத்தில் சச்சின், கவாஸ்கர், கங்குலி, ஹர்பஜன் போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் யுவராஜ் பற்றி புக்கனன் கூறுகையில்;

""இந்திய வீரர் யுவராஜ் சிங் அடுத்த கங்குலியாக வேண்டும் என முயற்சிக்கிறார். ஆனால், கங்குலிக்கு இருந்த புகழும் நன்மதிப்பும் அவருக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே' என தெரிவித்து இருந்தார்.

இதற்கு யுவராஜ் சிங் கேலியாக பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து யுவராஜ் கூறியதாவது; என்னைப் பற்றி தெரிவித்திருந்த வீணான கருத்துக்களுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் புக்கனன். அந்த தொடர் அனுபவங்களை தனது புத்தகத்தில் அவர் ஏன் எழுதவில்லை.

ஒப்பிடுவது தவறு: கங்குலி மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். இந்திய கிரிக்கெட்டில் அவரது சாதனைகளை எல்லோரும் பாராட்டுவோம். அவரிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவன் நான். இந்நிலையில் அவருடன் என்னை ஒப்பிட்டு பேசுவது தவறு. புக்கனன் கருத்துகள் அறிவுபூர்வமானவை அல்ல.

மீண்டு வருவேன்: இதுபோன்ற பேச்சுகளால் நாங்கள் பாதிக்கப்பட மாட்டோம். அதிலும், இப்போது எங்களுக்கு கிரிக்கெட் இல்லாத நாட்கள். குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறோம். அடுத்து வர இருக்கும் தொடர்களில் காயங்களில் இருந்து குணமாகி, தேவையான உடற்தகுதி மற்றும் மன உறுதியுடன் மீண்டு வருவேன்.

பயப்படாத வீரர்கள்: சமீபத்தில் ஒருநாள் போட்டிகளை வைத்து பார்க்கும் போது இந்திய அணி சிறந்த அணியாக உள்ளது. இந்திய அணியின் பெரும்பலம் இளம் வீரர்கள் தான். அவர்கள் எந்தவித நெருக்கடியான நிலைக்கும் பயப்படமாட்டார்கள். ""ருவென்ரி 20' உலக கோப்பை தொடரில் எப்படியும் சிறப்பாக செயல்படலாம் என நினைத்து இருந்தோம். ஆனால், ஏமாற்றமாகி விட்டது.

பிரச்சினை இல்லை: தோனிக்கும் சேவாக்கிற்கும் பிரச்சினை என்ற செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. எப்படி ஊடகங்கள் இதுபோன்ற செய்திகள் வெளியிடுகின்றன என எனக்கு தெரியவில்லை. எந்தவித விவகாரம் இன்றி அணி இன்னும் ஒற்றுமையாகத்தான் உள்ளது.

சிறந்தவர் டிராவிட்: சேவாக் காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது புதிய பந்தில் சவாலை சந்திக்க ரோகித் சர்மா தயாரானார். சமீப காலங்களில் புதிய பந்தை எதிர்கொள்வதற்கு இளம் வீரர்கள் விருப்பப்படவில்லை. இந்நிலையில் ரோகித்தும் ரெய்னாவும் இதற்கு தயாராக இருந்தார்கள். டிராவிட் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் டிராவிட் சிறந்த வீரர். அவரை அணியில் சேர்ப்பது என்பது தேர்வாளர்கள் செய்த சிறந்த முடிவு.

"நம்பர் 1' கனவு: நெருக்கடியான நேரங்களை அனுபவித்து விளையாடுவேன். சச்சின், சேவாக் இல்லாத நிலையில் கப்டன் தோனியும் நானும் பொறுப்பு எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டியுள்ளது. இந்திய அணி ""நம்பர் 1' இடத்தை கைப்பற்றும் கனவில் தான் உள்ளோம்.

அணிக்கு இழப்பு: பிளின்டொப் ஓய்வு வருத்தமான விடயம் தான். ஆனால், அவ்வப்போது காயத்தால் பாதிக்கப்பட்ட இந்த வேகப்பந்து வீச்சாளர் உடற்தகுதி இல்லாத நிலையில் இந்த முடிவெடுத்துள்ளார். இங்கிலாந்து அணியின் முதுகெலும்பான அவரது ஓய்வு அணிக்கு இழப்புதான்

0 comments:

Post a Comment