மாற்றங்களை நோக்கி டெஸ்ட் கிரிக்கெட்

கிரிக்கெட்டின் பாரம்பரியமாக கருதப்படுவது டெஸ்ட் போட்டிகள் தான். வீரர்களின் திறமையை முழுமையாக வெளிக் கொணர டெஸ்ட் போட்டிகள் அதிக அளவில் உதவுகின்றன. ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' கிரிக்கெட் போட்டிகள் வருவதற்கு முன், டெஸ்ட் போட்டிகள் ரசிகர்களை மகிழ்வித்து வந்தன. இந்தியா-பாகிஸ்தான், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகள் மிகப் பிரபலம். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கடந்த 1876 ம் ஆண்டு, முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது. தற்போது டெஸ்ட் கிரிக்கெட் 133 வது ஆண்டில் காலடி வைத்துள்ளது. நூற்றாண்டு பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டிகள், தற்போது வீழ்ச்சி பாதையை எதிர்நோக்கி உள்ளன. கிரிக்கெட்டின் புதிய பரிமாணமான "டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்குப் பின், டெஸ்ட் போட்டிகளின் தரம் குறைந்து விட்டது. தொடர்ந்து ஐந்து நாட்கள், போட்டியின் முடிவுக்காக காத்திருக்க ரசிகர்கள் விரும்பவில்லை. 3 மணி நேரத்தில் முடிவு கிடைத்து விடும் "டுவென்டி-20' போட்டிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டன. இரண்டு உலககோப்பை தொடரை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது "டுவென்டி-20' போட்டிகள். தவிர, ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டிகள் உலகளவில் ரசிகர்களை பெற்று விட்டன.

எண்ணிக்கை குறைப்பு

இவை ஒரு புறமிருக்க, உலகின் பல்வேறு கிரிக்கெட் போர்டுகள் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ஆலோசித்துவருகின்றனர். "டுவென்டி-20' போட்டிகளின்வருவதற்கு முன், இரு நாடுகள் கலந்து கொள்ளும் தொடர்களில் 4 டெஸ்ட், 7 ஒரு நாள் போட்டிகள் நடைபெறும் வகையில் அட்டவணை உருவாக்கப் பட்டிருக்கும். தற்போது இதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. 2 டெஸ்ட், 4 ஒரு நாள் என குறைய துவங்கி விட்டது. மாறாக, "டுவென்டி-20' போட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ரசிகர்கள் டெஸ்ட் போட்டிகளை காண விரும்பாததே இதற்கு முக்கிய காரணம்.

அழிவில்லை

டெஸ்ட் போட்டிகளை பலரும் புறக்கணித்து வரும் நிலையில், இவ்வகை போட்டிகள் கிரிக்கெட்டின் உயிர் போன்றவை எனஉலகின் முன்னணி வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கூறுகையில், ""டெஸ்ட் போட்டிகள் பாரம்பரியமிக்கவை. கிரிக்கெட் என்றாலே அது டெஸ்ட் போட்டிகளை அடிப்படையாக் கொண்டது தான். ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகள் அதன் மற்றபரிமாணங்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்றுமேஅழிவில்லை. இவ்வகைப் போட்டிகளுக்குமுக்கியத்துவம் குறைந்தால், கிரிக்கெட் அழிவுப் பாதையில் பயணிக்கத் துவங்கும்,'' என்றார்.

ஐ.சி.சி., ஆலோசனை

காலத்தின் சுழற்சிக்கு ஏற்ப டெஸ்ட் போட்டிகளின் தரத்தை உயர்த்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரசிகர்களின் மனநிலையை அறிந்து, அதற்கேற்ப டெஸ்ட் போட்டிகளில் சில மாற்றங்களை கொண்டு வர ஐ.சி.சி., முடிவு செய்துள்ளது. அதன் முதற்கட்டமாக 5 நாட்கள் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

காலி அரங்கம்

டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்கள் மத்தியில் ஆர்வமில்லை. பெரும்பாலான போட்டிகளில் மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது. இதை அடுத்து பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்தி ரசிகர்களை கவர ஐ.சி.சி., திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு முடிவதற்குள் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு புதிய முயற்சியாக டெஸ்ட் போட்டிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க, சமபலத்தில்உள்ள அணிகள் மட்டுமே மோதுமாறு அட்டவணை தயாரிக்க ஐ.சி.சி., முடிவு செய்துள்ளது. இன்னும் சில முக்கிய முடிவுகள் விரைவில் டெஸ்ட் போட்டிகளில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாக இருப்பினும் டெஸ்ட் போட்டிகளின் பாரம் பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்

0 comments:

Post a Comment