நெருக்கடியில் இந்தியா: இன்று 3-வது போட்டி

இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருதின கிரிக்கெட் போட்டி செயின்ட்லூசியாவில் உள்ள பியூஸ்ஜோர் ஸ்டேடியத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

4 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளதால், தொடரை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் ஆகியுள்ளது.

கிங்ஸ்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் இமாலய இலக்கை கொடுத்த இந்திய அணியிடம், போராடி 20 ரன்களில் தோற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, அதே மைதானத்தில் அடுத்து நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு தலைகுனிவுத் தோல்வியை அளித்தது.

நடப்பு சாம்பியனான இந்தியா, டுவென்டி-20 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னரே வெளியேறிய ஏமாற்றத்துக்கு ஆறுதல் காண்பதற்கு இத் தொடரை வாய்ப்பாகக் கொண்டுள்ளது. ஆனால், வெளிநாட்டு மைதானங்களில் காலம்காலமாக இருந்துவரும் குறைபாடு (சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியாதது) இத் தொடரிலும் எழுந்துள்ளது.

முதல் போட்டியில் சதம் அடித்து அணியின் எண்ணிக்கை உயர்வுக்கு முக்கியப் பங்காற்றிய யுவராஜ் சிங், 2-வது போட்டியில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. மேலாக, 2 போட்டிகளிலுமே விக்கெட்டுக்கு அருகே பிட்ச் ஆகும் பந்துகளைக் கணித்து ஆடுவதில் வழக்கம்போல இந்திய வீரர்கள் திணறுகின்றனர். அதைப் பயன்படுத்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி, தாயகத்தில் மேலும் வலுவான அணியாக காட்சியளிக்கிறது.

அதற்கு தீர்வு கண்டால் மட்டுமே இனிவரும் ஆட்டங்களில் சமாளிக்கமுடியும் என்ற நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் ஆகியோர் இல்லாதது ஒருபுறம் குறையாக இருந்தாலும் கெüதம் கம்பீரும் மோசமாக ஆடிவருவது, அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சேவாக்கிற்கு மாற்றாக கம்பீருடன் இன்னிங்ûஸத் தொடங்கிய தமிழக வீரர் பத்ரிநாத்தும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதல் போட்டியில் 67 ரன்களைக் குவித்து உறுதுணையளித்த அவர், 2-வது போட்டியில் 4 ரன்களுடன் வெளியேறினார். அப்போட்டியில் தோனி மட்டுமே தாக்குப்பிடித்தார். இல்லையேல் 10 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றிருந்தாலும் ஆச்சரியமாக இருந்திருக்காது.

ரோஹித் சர்மாவின் ஏமாற்றமான ஆட்டமும் இந்தியாவுக்கு பின்னடைவாகியுள்ளது. அவரும் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார். இக்கட்டான நிலைகளில் அணிக்கு ஆபத்பாந்தவனாகத் திகழும் யூசுப் பதானும் 2 போட்டிகளிலும் அந்த குணாதிசயத்தை இழந்தவராகக் காணப்பட்டார். அவரும் அணிக்கு உறுதுணையளிக்க வேண்டிய அவசியத்தை பெற்றுள்ளார்.

முதல்வரிசை வீரர்களின் ஆட்டம் சரியில்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ள தோனி, பொறுப்பை உணர்ந்து விளையாடுமாறு சகாக்களை எச்சரித்துள்ளார். இதற்கிடையே 2-வது போட்டியில் கண்ட எளிதான வெற்றி, அந்த அணிக்கு தார்மிகரீதியாக பலம் அளித்துள்ளது.

கெயில் மகிழ்ச்சி: 2-வது போட்டியில் அணி வீரர்களின் ஆட்டம் குறித்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ள கேப்டன் கிறிஸ் கெயில், இந்திய அணியினரின் ஆட்டத்தை மட்டுப்படுத்த மேலும் சில வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது என்கிறார்.

இந்த ஆடுகளத்தில் ஈரப்பதம் இருக்கும். டெயிலர், ராம்பால் ஆகியோரது பந்துவீச்சு, எங்களது திட்டத்துக்கு உதவியாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதல் 2 போட்டிகளில் விளையாடிய அணியே 3, 4-வது போட்டிகளிலும் விளையாடும் என மேற்கிந்தியத் தீவுகள் வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

அணிகள் விவரம்:

இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), யுவராஜ் சிங் (துணைக் கேப்டன்), கெüதம் கம்பீர், ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா, யூசுப் பதான், முரளி விஜய், எஸ்.பத்ரிநாத், ஆர்.பி.சிங், பிரவீன் குமார், இஷாந்த் சர்மா, அபிஷேக் நாயர், ஆஷிஷ் நெஹ்ரா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக்.

மே.இ.தீவுகள்: கிறிஸ் கெயில் (கேப்டன்), தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), லியோனல் பேகர், டேரன் பிராவோ, டுவைன் பிராவோ, சுலைமான் பென், டேவிட் பெர்னார்ட் ஜூனியர், சிவநாராயண் சந்தர்பால், நரசிங் தேவநாராயண், ருனாகோ மோர்டன், ரவி ராம்பால், ராம்நரேஷ் சர்வான், ஜெரோம் டெய்லர்

0 comments:

Post a Comment