இந்திய கிரிக்கெட் சபை மீதான கங்குலியின் குற்றச்சாட்டால் சர்ச்சை

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற இந்தியாவின் சிறந்த கப்டன் சௌரவ் கங்குலி, பி.சி.சி.ஐ.விதிகள் அனைவருக்கும் பொதுவானதாக இருந்திருந்தால் இந்திய கிரிக்கெட்டிற்கு இன்னும் சிறிது காலம் நல்ல முறையில் சேவையாற்றியிருக்க முடியுமென்றும் கூறியுள்ளார்.

வங்காள மொழி தொலைக்காட்சி சனலில் பேசிய அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

சக வீரர்களான சச்சின் டெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கும் போது கங்குலி தானும் இன்னும் சிறிது காலம் விளையாடியிருக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த கங்குலி;

""ஆம்! என்னிடம் திறமை உள்ளது. இப்போது விளையாடிக் கொண்டிருந்தாலும் நன்றாகவே விளையாடியிருப்பேன். ஆனால், விதிகள் அனைவருக்கும் ஒன்றானதல்லவே' என்று கூறியுள்ளார்.

இவரது இந்த பேச்சு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அதிகார வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.

கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு பல்வேறு விதமாக தன் வாழ்வை திட்டமிட்டிருந்த கங்குலி, வர்ணனை உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறார். தற்போது வங்காள தொலைக்காட்சி சனலில் குவிஸ் நிகழ்ச்சியை நடத்தும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் கங்குலி.

இதற்கிடையில் கங்குலியின் குற்றச்சாட்டை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மறுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஊடக குழு தலைவர் ராஜீவ் ஷீக்லா இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;

பி.சி.சி.ஐ. யை பொறுத்தவரை எந்த ஒரு வீரருக்கும் எதிராகவும் முன் அனுமானம் எதையும் கொள்ளும் வழக்கமில்லை. அணித் தேர்வுக்குழு விவகாரங்களில் பி.சி.சி.ஐ.ஒரு நாளும் தலையிட்டதில்லை. எந்த வீரரை சேர்க்க வேண்டும், எவரை விலக்க வேண்டும் என்பதெல்லாம் தேர்வுக் குழுவை பொறுத்ததே' என்று கூறியுள்ளார்

0 comments:

Post a Comment