திறமையான கிரிக்கெட் வீரர்களைக் கண்டறிவதற்காக, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மாத்யூ ஹேடன் தமிழகத்தில் செப்டம்பரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கச் செயலர் கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 51 - வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் அவர் பேசியது:
2008 செப்டம்பர் முதல் 2009 மே வரையிலான காலத்தில் திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் பல்வேறு நிலைகளில் 458 போட்டிகள் நடத்திருப்பது பாராட்டுக்குரியது.
சென்னையைத் தவிர, மற்ற மாவட்டங்களைக் காட்டிலும், திருச்சி மாவட்டத்திலிருந்துதான் நடுவர்கள் அதிகளவில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
திருச்சியில் சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும், தேசியக் கல்லூரியிலும் செயற்கை புல்தரையுடன் கூடிய ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல, மேலும் சில இடங்களில் ஆடுகளங்கள் அமைய வாய்ப்புகள் உள்ளன.
கிருஷ்ணகிரி, தேனி மாவட்டங்களில் கிரிக்கெட் அகாதெமிகள் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருச்சியில் கிரிக்கெட் அகாதெமி அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலத்தின் மையநகரம் மற்றும் விமான நிலைய வசதி போன்ற வசதிகள் இருப்பதால் திருச்சியில் கிரிக்கெட் அகாதெமி அமையும்பட்சத்தில், வீரர்களுக்கு சிறந்த அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு எதிர்காலத்தில் திருச்சியில் சர்வதேச மற்றும் ரஞ்சி கோப்பை போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
கிரிக்கெட் அகாதெமி: சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாதெமி தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக கிராமப்புறங்களில் உள்ள திறமையானவர்களைக் கண்டறிவதற்காக வரும் செப்டம்பரில் ஹேடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றார் விஸ்வநாதன்.
திருச்சி மாநகரக் காவல் ஆணையர் கருணாசாகர் வெற்றி பெற்ற அணிகளுக்கும், வீரர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவர் கே. ரகுநாதன் தலைமை வகித்தார். மாநில கிரிக்கெட் சங்க உதவிச் செயலர் டி. ஜூலியஸ் விஜயகுமார், மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் எம். காளிதாஸ், செயலர் கே.ஜி. முரளிதரன், துணைச் செயலர்கள் பி. இளங்கோவன், ஆர். கணேசன், பொருளாளர் எஸ். எர்னஸ்ட் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment