ஆச்சர்யம் அளித்த வெற்றி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின், உலக சுற்றுக்கு 11 ஆண்டுகளுக்குப் பின் முன்னேறியுள்ளது இந்திய அணி.

சமீபத்தில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக நடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி மோதியது. இதில், ஒற்றையர் பிரிவு, மாற்று ஒற்றையர் பிரிவு போட்டிகளில் அசத்திய சோம்தேவ் தேவ்வர்மன் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி ஆகியோரும் சிறப்பாக செயல்பட இந்திய அணி 4-1 கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி உலக சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன் கடந்த 1998 ம் ஆண்டு டேவிஸ் கோப்பை உலக சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியிருந்தது.

அதற்குப் பின் தற்போது தான் இந்தியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோரை தொடர்ந்து, இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்

சோம்தேவ். தனது வெற்றிப் பயணம் குறித்து சோம்தேவ் அளித்த "மினி' பேட்டி:

* டேவிஸ் கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறதா?
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றிக்கு எனது செயல்பாடுகள் மட்டும் காரணமல்ல. போபண்ணா, யூகி பாம்ப்ரி ஆகியோரும் முக்கிய காரணம். இது அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

* டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பற்றி உங்கள் கருத்து?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்றில் எனது ஆட்டம் முழு திருப்தி அளித்தது. இந்திய டென்னிஸ் பாரம்பரியமிக்கது. தலை சிறந்த வீரர்கள் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார்கள்.

அவர்களது சாதனைக்கு முன் எனது செயல்பாடுகள் பெரிய விஷயம் அல்ல.

* கடந்த 1998 ம் ஆண்டு இந்திய அணி டேவிஸ் கோப்பை உலக சுற்றுப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. அப்போது உங்களுக்கு 12 வயது. தற்போது 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்த வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. இதை எப்படி உணர்கிறீர்கள்?

11 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த இந்த வெற்றி, என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதை மிகவும் வித்தியாசமாக கருதுகிறேன். எனது ஆட்டத்தில் எனக்கு நம்பிக்கை முழு நம்பிக்கை இருந்தது. இதன் மூலம் எனது நீண்ட கால கனவு நனவாகி உள்ளது.

* தகுதிச் சுற்றுப் போட்டியில், தென் ஆப்ரிக்காவின் ரிக் டே வோஸ்டை வீழ்த்த கடுமையாக போராட வேண்டியிருந்ததா?

அவர் மிகச் சிறப்பாக விளையாடினார். அதனால் வெற்றிக்கு கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. எனது டென்னிஸ் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றியாக இதை கருதுகிறேன். வெற்றிக்கு சக வீரர் ரோகன் போபண்ணா முக்கிய காரணம். நெருக்கடியாக நேரங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தார்.

அவர் அளித்த உற்சாகத்தால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. அணியின் கேப்டன் மிஸ்ரா, மகேஷ் பூபதி ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

* உங்களது வெற்றிப் பயணம் தொடருமா?

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் தான் களமிறங்குகிறேன். சமீபத்தில் நடந்த யு.எஸ்., ஓபன் தொடரில், எனது செயல்பாடுகள் திருப்தி அளித்தது. தற்போது டேவிஸ் கோப்பை வெற்றி, புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

இதே உற்சாகத்துடன் இனி வரும் போட்டிகளிலும் நம்பிக்கையுடன் செயல்படுவேன்

0 comments:

Post a Comment