பாகிஸ்தானிடம் தோற்றதால் வாய்ப்பை இழந்தோம்; டோனி புலம்பல்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேற்றப்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோற்று, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் நாம் வெற்றி பெற்றால் அரை இறுதியில் நுழைய முடியும் என்ற நிலை இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 2 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

இதனால் இந்தியாவுக்கு அரை இறுதி வாய்ப்பு பறிபோனது. இந்திய அணி கடைசி “லீக்” ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றி ஆறுதலானது. இதனால் எந்த பலனும் இல்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முதலில் ஆடி 205 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெறும் என்று இந்திய வீரர்களும், ரசிகர்களும் எதிர்பார்த்தனர். டோனியும் அதற்கு ஏற்றவாறு வீரர்களை தேர்வு செய்தார்.

ஆட்டம் முக்கியம் இல்லை என்று கருதி தெண்டுல்கருக்கு ஓய்வு கொடுத்தார்.

ஆஸ்திரேலியாவும் எதிர் பார்த்ததற்கு ஏற்றவாறு தொடக்கத்தில் சிறப்பாக ஆடியது. ஒரு கட்டத்தில் அந்த அணி 3 விக்கெட்டுக்கு 140 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது. திடீரென விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன.

187-வது ரன்னில் 8-வது விக்கெட்டை இழந்தது. இதனால் போட்டி பரபரப்பு ஆனது. ஆஸ்திரேலியா தோற்று விடாதா என்ற ஏக்கத்தில் அந்த போட்டியை தெண்டுல்கர், டிராவிட், பிரவீண்குமார், பயிற்சியாளர் கிர்ஸ்டன் ஆகியோர் டெலிவிஷனில் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆஸ்திரேலியா கடைசி பந்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

இந்திய அணி வெளியேற்றப்பட்டது குறித்து கேப்டன் டோனி கூறியதாவது:-

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றதால் வந்த வினை. மிகவும் முக்கியமான அந்த ஆட்டத்தில் சரியாக விளையாட வில்லை. இந்த தோல்விதான் எங்களை வெளியேற்றி விட்டது. எங்களது துரதிருஷ்டம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

அந்த போட்டியில் நாங்கள் எளிதாக வெற்றி பெற்று இருப்போம்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சில தவறுகளை செய்து விட்டோம். பந்து வீச்சாளர்கள் சில தவறுகள் செய்தாலும் சிறப்பாக வீசினார்கள். நெக்ரா, பிரவீண்குமார், ஹர்பஜன், அமித்மிஸ்ராவின் பந்து வீச்சு பாராட்டும் வகையில் இருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடுவோம் அந்த தொடரில் முழு பலத்துடன் விளையாடுவோம்.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்

0 comments:

Post a Comment