தன்னம்பிக்கை வீரர் டிராவிட்

இரண்டு ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின் மீண்டும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் ராகுல் டிராவிட். அணியிலிருந்து அவ்வப்போது புறக் கணிக்கப்பட்ட போதும், அயராத தன்னம்பிக்கை காரணமாக மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

இந்திய சுவர் :இந்திய அணியின் "பெருஞ்சுவர்' என வர்ணிக்கப்படும் டிராவிட், தனது பொறுப்பான ஆட்டத்தால் அணியை சரிவிலிருந்து மீட்கும் வல்லமை படைத்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் சச்சின், கங்குலி, டிராவிட் இல்லாமல், இந்திய அணி எந்த ஒரு நாள் தொடர்களிலும் பங்கேற்றது இல்லை.

இதில், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் மட்டுமே அணியிலிருந்து இதுவரை, தேர்வாளர்களால் நீக்கப்பட்டது இல்லை.கங்குலி, டிராவிட் இருவரும் பார்ம் இல்லாத காரணத்தால் அணியிலிருந்து பலமுறை நீக்கப்பட்டுள்ளனர். இதில் கங்குலி ஓய்வு பெற்று விட்டார்.

அதிரடி நீக்கம் :தற்போது ராகுல் டிராவிட் தன்னம்பிக்கையுடன் அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த 2007 ம் ஆண்டு மோசமான பார்மை காரணம் காட்டி, ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் டிராவிட். அந்த ஆண்டு 31 போட்டிகளில் விளையாடியிருந்த இவரது சராசரி 37.4 சதவீதம். இதை மோசமான செயல்பாடு என்று கூறமுடியாது.

இருப்பினும் டிராவிட் அணி நிர்வாகத்தால் ஓரங் கட்டப்பட்டார். இதுவரை 333 ஒரு நாள் போட்டிகளில் 10585 ரன்கள் எடுத்துள்ளார் டிராவிட். சராசரி 39.49 சதவீதம்.

காரணம் என்ன? :ரோகித் சர்மா, விராத் கோஹ்லி உள்ளிட்ட இளம் வீரர்களின் எழுச்சியே, டிராவிட்டின் நீக்கத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனாலும் 2வது "டுவென்டி-20' உலககோப்பையின் படுதோல்வி இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. டிராவிட் போன்ற அனுபவவீரரின் அவசியத்தை உணர்த்தியது. ரோகித் சர்மாவின் செயல்பாடும் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. 41 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித்தின் சராசரி வெறும் 24.8
சதவீதம் தான்.

மீண்டும் தேவை :இந்நிலையில் மிடில் ஆர்டரை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற் பட்டது. அடுத்து நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட முக்கிய தொடர்களை கணக்கில் கொண்டு, சரியான நேரத்தில் டிராவிட் டுக்கு மீண்டும் வாய்ப்பு அளித் துள்ளனர்.

2 ஆண்டுகள் அணியில் இடம்பெறாவிட்டாலும், டிராவிட் ஒரு நாள் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவிக்கவில்லை. மீண்டும் ஒரு நாள் அணியில் இடம் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் இருந்தார். அவரது தன்னம் பிக்கை வெற்றி தேடித் தந்துள்ளது.

இலங்கை முத்தரப்பு தொடரில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், அடுத்த உலககோப்பை (2011) தொடர் வரை இந்திய அணியில் டிராவிட் நீடிக்கலாம்.

0 comments:

Post a Comment