சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. இன்று பிற்பகல் நடக்கும் முதலாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். அப்போது தான் இந்திய அணிக்கு மகிழ்ச்சி பிறக்கும்.
ஒருவேளை ஆஸ்திரேலியா வென்றால், இந்தியா வெளியேற நேரிடும். மாலையில் துவங்கும் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மோதலும் முக்கியத்துவம் இல்லாமல் போய் விடும். எனவே, பாகிஸ்தான் வெற்றியை பொறுத்து தான் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நாளை ஜோகனஸ்பர்கில் நடக்க உள்ள லீக் போட்டியில், "ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
சிக்கலில் இந்தியா:
இந்திய அணிக்கு இத்தொடர் எதிர்பார்த்தபடி அமையவில்லை. தனது முதல் லீக் போட்டியில், பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது போட்டி மழையால் ரத்தானது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
தற்போது இந்தியா 1 புள்ளி மட்டும் பெற்றுள்ளது. ஆனால் "ஏ' பிரிவில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி விட்டது. இப்பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்பதில் சிக்கல் நீடிக்கிறது.
"ரன்-ரேட்' முக்கியம்:
அரையிறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலிய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இன்றைய போட்டியில் பாகிஸ்தானை ஆஸ்திரேலியா வீழ்த்தும் பட்சத்தில், 5 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறி விடும். தவிர, இந்தியா வெளியேறி விடும். ஒரு வேளை தோற்கும் பட்சத்தில் 3 புள்ளிகளுடன் நீடிக்கும்.
அதே சமயம் இன்று நடக்க உள்ள மற்றொரு லீக் ஆட்டத்தில், இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்த வேண்டும். தற்போது ஒரு புள்ளி பெற்றிருக்கும் இந்திய அணி, இதன் மூலம் 3 புள்ளிகள் பெறும். ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் தலா 3 புள்ளிகள் பெற்றிருப்பதால், ரன்-ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும் அணி முடிவு செய்யப்படும்.
வாய்ப்பு குறைவு:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 3 புள்ளிகள் பெற்றாலும், ரன் ரேட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது. இந்தியாவின் ரன் ரேட் தற்போது -1.08. ஆஸ்திரேலியா +1.00 விகிதம் பெற்று முன்னிலையில் உள்ளது. தனது முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீசை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா தனது முதல் போட்டியில், பாகிஸ்தானிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனவே இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான ரன் வித்தியாசம் 104.
இந்தியா அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், ஆஸ்திரேலியா, பாகிஸ்தானிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய வேண்டும். அதே சமயம் வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்த வேண்டும். எதுவாக இருப்பினும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற அதிர்ஷ்டம் தான் முக்கியம்.
நெருக்கடி உண்டு:
இத்தொடரில் மிகவும் பலவீனமான அணியாக காட்சி அளித்தது வெஸ்ட் இண்டீஸ். ஆனால் பவுலிங்கில் அசத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வி அடைந்தாலும், வெஸ்ட் இண்டீசின் போராட்டம் பாராட்டும்படியாக அமைந்திருந்தது.
இன்றைய போட்டியில் இந்தியாவுக்கு, வெஸ்ட் இண்டீஸ் கடும் நெருக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. டாங்க், ரோக், பெர்னார்ட் உள்ளிட்ட வெஸ்ட் இண்டீஸ் வேகங்களிடம், இந்திய பேட்ஸ்மேன்கள் தாக்குப் பிடிப்பது கடினம் தான்.
பவுலிங் மோசம்:
வெஸ்ட் இண்டீசை வீழ்த்த வேண்டும் எனில், இந்திய அணி பவுலிங்கில் எழுச்சி பெற வேண்டியது அவசியம். இந்திய அணியின் பந்து வீச்சு இத்தொடரில் படுமோசமாக உள்ளது. நெஹ்ரா மட்டுமே ஆறுதல் அளிக்கிறார்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இஷாந்த் சர்மா சொதப்பி வருகிறார். ஹர்பஜன், மிஸ்ரா நம்பிக்கை அளித்தாலும், விக்கெட் கைப்பற்ற தடுமாறி வருகின்றனர். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இன்றைய போட்டியில் இந்தியா சாதிக்க முடியும்.
ரன் குவிப்பு முக்கியம்:
இது ஒருபுறம் இருக்க, இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சச்சின், காம்பிர், ரெய்னா, டிராவிட், தோனி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் பேட் செய்தால், இந்திய அணி எளிய வெற்றியை இன்று எட்டலாம்.
இன்றைய லீக் போட்டிகளில் இந்திய அணி, அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், பாகிஸ்தானிடம், ஆஸ்திரேலியா தோல்வி அடைய வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் தற்போதைய பிரார்த்தனையாக உள்ளது.
பாக்.,-ஆஸி., பலப்பரீட்சை
இன்று நடக்கும் மற்றொரு லீக் போட்டியில், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
பாகிஸ்தானை பொறுத்த வரை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சூப்பர் பார்மில் உள்ளது. ஆமெர், நவீத், குல் வேகத்தில் மிரட்டுகின்றனர். அப்ரிதி, அஜ்மலின் சுழற் பந்து வீச்சும் ஆறுதல் அளிக்கிறது. முன்னணி பேட்ஸ்மேன்களான முகமது யூசுப், மாலிக், யூனிஸ் கான், நசீர், கம்ரான் நம்பிக்கை அளிக்கின்றனர்.
பாகிஸ்தானைப் போலவே ஆஸ்திரேலியாவும் வலுவான அணியாக உள்ளது. கேப்டன் பாண்டிங், ஹசி, பெய்ன், ஒயிட் பேட்டிங்கில் அசத்துகின்றனர். ஜான்சனின் ஆல்-ரவுண்டர் செயல்பாடு அணிக்கு பக்கபலமாக உள்ளது.
அரையிறுதிக்கு முன்னேற இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது ஆஸ்திரேலியாவுக்கு அவசியம். அதனால் பாகிஸ்தானை வீழ்த்த கடுமையாகப் போராட உள்ளது ஆஸ்திரேலியா. சமபலத்தில் உள்ள இரு அணிகள் மோதும் இப்போட்டி, விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment