இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின், நேற்றைய லீக் போட்டி மழையின் காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் 9 வது லீக் போட்டியில், "ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. யூசுப் பதான், ஆர்.பி.சிங் ஆகியோர் நீக்கப்பட்டு அமித் மிஸ்ரா, பிரவீண் குமார் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்பட வில்லை.
வாட்சன் "அவுட்': ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், டிம் பெய்ன் துவக்கம் தந்தனர். நெஹ்ரா, பிரவீண் குமார் கட்டுக் கோப்பாக பந்து வீசினர். நெஹ்ரா வேகத்தில் வாட்சன், "டக்-அவுட்டனார்'. பின்னர் பெய்னுடன், பாண்டிங் இணைந்தார்.
இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் குவித்தது. ஒரு நாள் அரங்கில் 2 வது அரை சதம் கடந்தார் பெய்ன். இவர் 56 ரன்களுக்கு (7 பவுண்டரி 1 சிக்சர்) வெளியேறினார்.
சூப்பர் ஜோடி:
அடுத்து வந்த மைக்கேல் ஹசி, பாண்டிங்கிற்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் அதிகரித்தது. ஒரு நாள் அரங்கில் பாண்டிங் 70 வது அரை சதம் கடந்தார். இந்த ஜோடி 3 வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த நிலையில், பாண்டிங் (65) ரன் அவுட் செய்யப்பட்டார்.
மறுமுனையில் ஹசி, அரை சதம் கடந்தார். இவர், 67 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். மிடில் ஆர்டரில் ஒயிட் அதிரடி காட்ட துவங்கினார்.
போட்டி ரத்து:
42.3 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 234 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் மழை குறுக்கிட, ஆட்டம் தடைபட்டது. ஒயிட் (35), பெர்குசன் (2) களத்தில் இருந்தனர். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால்,போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
தவிர, மைதானத்தில் உள்ள ஒரு மின் "டவர்', மின்னல் தாக்கியதால் பழுதடைந்தது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
யாருக்கு வாய்ப்பு?
நேற்றைய போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டதால், "ஏ' பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்பதில் சிக்கல் நீடிக்கிறது.
* "ஏ' பிரிவில் 4 புள்ளிகளை பெற்ற பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்கு முன்னேறி விட்டது.
* இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் முறையே ஆஸ்திரேலியா (3 புள்ளிகள்) மற்றும் இந்திய அணிகள் (1 புள்ளி) உள்ளன. நாளை நடக்க உள்ள பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டிகள், அரையிறுதிக்கு முன்னேறும் மற்றொரு அணியை முடிவு செய்ய உள்ளன.
* பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெறும் பட்சத்தில் 5 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறும். தவிர, இந்தியா வெளியேறிவிடும்.
* ஒருவேளை அப்போட்டியில் ஆஸ்திரேலியா தோற்கும் பட்சத்தில் 3 புள்ளிகளுடன் நீடிக்கும்.
* அதே சமயம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 3 புள்ளிகள் பெறும்.
* இந்தியா, ஆஸ்திரேலியா தலா 3 புள்ளிகள் பெறும் பட்சத்தில், ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் உள்ள அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
0 comments:
Post a Comment