ஒருநாள் போட்டிக்கு ஆபத்து?

"டுவென்டி-20' போட்டிகளின் வரவிற்கு பின் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமல்ல ஒருநாள் போட்டிகளுக்கும் வரவேற்பு குறைந்துள்ளது. விரைவில் ஒருநாள் போட்டிகள் மறைந்து விடும் என அஞ்சப்படுகிறது.

அவ்வளவு எளிதில் இது நடக்குமா அல்லது மீண்டும் எழுச்சி பெறுமா என்பது குறித்து பார்ப்போம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டு, குறிப்பிட்ட ஓவர்கள் கொண்டு விளையாடும் ஒருநாள் போட்டி முறை, 1962ல் கொண்டு வரப்பட்டது.

அப்போது தலா 65 ஓவர்கள் கொண்ட போட்டியாக விளையாடப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் முதன் முதலாக 1975ல் நடந்த உலக கோப்பை 60 ஓவர்கள் கொண்டதாக இருந்தது. பின் அதுவும் குறைந்து தற்போது 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.

கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்களின் பிறப்பிடமாக இருக்கும் இங்கிலாந்து, கடந்த 2003ல் மூன்றரை மணி நேரத்தில் முடிந்து விடக்கூடிய "டுவென்டி-20' கிரிக்கெட் போட்டியை உள்ளூரில் அறிமுகம் செய்தது.

பின் 2005ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் அறிமுகப்படுத்தியது. இந்த வகை போட்டியின் அசுர வளர்ச்சியால், முதன் முதலாக ஐ.சி.சி., சார்பில் நடந்த 2007 உலக கோப்பை தொடர் நடத்தப்பட்டது.

இதில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்றது. பின் 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. உலகிலேயே அதிக ரசிகர்கள் நேரிலும், "டிவி'யிலும் கண்டுகளித்த தொடராக சாதனை படைத்தது.

குறைந்த பார்வையாளர்கள்:
இப்படி "டுவென்டி-20' போட்டிக்கு அமோக ஆதரவு கிடைக்க, ஒருநாள் போட்டிக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இதன் உச்சகட்டமாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு, 2010ம் ஆண்டுக்கான உள்ளூர் போட்டி அட்டவணையில் இருந்து ஒருநாள் போட்டிகளை நீக்கியது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் வார்ன்,""டெஸ்ட், "டுவென்டி-20' என இருவித கிரிக்கெட் மட்டும் போதும். ஒருநாள் போட்டி தேவையில்லை,'' என்றார்.

அதிகரித்த ஒருநாள்:
ஆனாலும், ஐ.சி.சி., அட்டவணையில் இடம் பெற்றுள்ள ஒரு நாள் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கின்றன. கடந்த 1980 முதல் 1989 வரையில் 516 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. 2000 முதல் இந்த ஆண்டு வரை 1353 போட்டிகள் நடந்துள்ளது. இதனை பார்க்கையில் ஒரு நாள் போட்டிகள் எளிதில் மறையாது என்பது தெளிவாகிறது.

ஐ.சி.சி., ஆதரவு:
இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை நிர்வாகி ஹாருண் லார்கட் கூறுகையில்,"" ஒருநாள் கிரிக்கெட் மிக வெற்றிகரமான போட்டி. தற்போதைக்கு 50 ஓவர்கள் போட்டியில் இருந்து விலகி செல்லும் எண்ணம் இல்லை. இதில் மாற்றம் செய்வதற்கு சச்சின் போன்றவர்கள் தெரிவித்துள்ள கருத்தை வரவேற்கிறோம்,'' என்றார்.

சவாலான நாட்கள்:
அடுத்து வர இருக்கும் ஒன்றரை ஆண்டுகள் ஒருநாள் போட்டிகளுக்கு சவாலான நாட்கள். வரும் 2011ல் ஆசிய துணைக்கண்டத்தில் நடக்க இருக்கும் <உலக கோப்பை (50 ஓவர்) தொடர், ஒருநாள் போட்டிகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு துணைக்கண்டத்து நிர்வாகிகள் கடுமையாக போராட வேண்டும். ஒருவேளை இந்திய அணி மீண்டும் "நம்பர்-1' இடத்தை பிடித்து விட்டால் அது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, வர்த்தக ரீதியிலும் இந்த போட்டிகளுக்கு உள்ள வரவேற்பை அதிகரித்து விடும்.

சச்சின் "பார்முலா'
ஒருநாள் போட்டிகளில் விறுவிறுப்பை அதிகரிக்க இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்,"" 100 ஓவர்களை பிரித்து தலா 25 ஓவர்கள் வீதம் நான்கு இன்னிங்சாக விளையாடலாம்,'' என்கிறார்.

மற்றொரு இந்திய வீரர் கும்ளே,""50 ஓவர்கள் என்பதை 40 ஓவர்களாக குறைத்து விளையாடலாம்,'' என்றார். வழக்கம் போல இங்கிலாந்து ஏற்கனவே 50 ஓவர்களை குறைத்து தலா 40 ஓவர்கள் கொண்ட "புரோ-40' போட்டிகளை அறிமுகம் செய்துள்ளது.
புதிய கருத்து நன்மையா?

* சச்சினின் கருத்துப்படி நான்கு இன்னிங்சாக விளையாடுவதால் ஒவ்வொரு 25 ஓவர்கள் துவக்கத்தின் போதும் அதிக பரபரப்பு இருக்கும்.

* மிடில் ஆர்டரில் சோம்பலாக செல்லும் நிலையை
மாற்றலாம்.

* பகலிரவு போட்டிகளில் "டாஸ்' வெல்லும் அணிக்கு போட்டி சாதகமாக முடிவதை தடுக்கலாம். ஏனெனில் இரு அணிகளும் பகலில் மற்றும் இரவில் தலா 25 ஓவர்கள் விளையாடும்.

* "டுவென்டி-20' போட்டிகள் போல பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் இருக்கும். இது பார்வையாளர்களிடம் வரவேற்பை அதிகரிக்கும்.

பவுலர்கள் பரிதாபம்

* தலா 4 இன்னிங்சாக மாற்றுவதால் முதலில் ஆட்டமிழந்த வீரர் மறுபடியும் களமிறங்கலாம். இது பவுலர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும்.

* எந்த பேட்ஸ்மேன்களும் சதம் அடிக்க முடியாமல் போகலாம்.

* பின் வரிசை வீரர்கள் பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு இருக்காது

0 comments:

Post a Comment