சாம்பியன்ஸ் டிராபி: இன்று இந்தியா-ஆஸி., மோதல்

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய வாழ்வா... சாவா... போட்டியில் இந்திய அணி, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. தொடரின் அரையிறுதி வாய்ப்பை பெற, இன்று வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தோனி தலைமையிலான அணி களமிறங்குகிறது.

சாம்பியன்ஸ் டிராபி (மினி <உலக கோப்பை) தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. "ஏ' பிரிவு லீக் போட்டியில் இன்று இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது.


தோனி அதிர்ச்சி:

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் பவுலர்கள் மோசமாக சொதப்பியது, கேப்டன் தோனிக்கு கடும் அதிர்ச்சி அளித்தது.


டிராவிட் ஆறுதல்:

பேட்டிங்கில் துவக்க வீரர் காம்பிர், பார்முக்கு திரும்பியுள்ளது வரவேற்கத்தக்கது. சச்சின் இன்று நம்பிக்கை கொடுப்பார் என தெரிகிறது. ரெய்னா, டிராவிட் கடைசி வரை நிலைத்து நின்று வெற்றிக்கு உதவ வேண்டும்.

தோனி, விராத் கோஹ்லி இருவரும் சூழ்நிலை கண்டு பொறுப்பாக விளையாட வேண்டும். தன்மீதான நம்பிக்கையை யூசுப் பதான் தொடர்ந்து வீணடித்து வருகிறார்.


பவுலிங் சொதப்பல்:

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய பவுலர்கள் சொதப்பினர். கேப்டன் தோனி, நேரடியாக பவுலர்கள் மீதே குற்றம் சுமத்தினார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இஷாந்த் துவக்கத்தில் விக்கெட் வீழ்த்தி அணியினரை ஊக்கப்படுத்த வேண்டும்.

ஆஷிஸ் நெஹ்ரா அசத்தலை இன்றும் தொடர்வார் என நம்பலாம். ஆர்.பி.சிங் சரியாக செயல்படாத பட்சத்தில் பிரவீண் குமாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.


ஏமாற்றிய ஹர்பஜன்:

சயீத் அஜ்மல், மெண்டிஸ், வான் டர் மெர்வி போன்ற இளம் வீரர்கள் இந்த தொடரில் அசத்தி வரும் நிலையில் இந்தியாவின் அனுபவ ஹர்பஜன், ஏமாற்றுவது வருத்தம் தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதும் சாதிக்கும் இவர், இன்றும் ஆறுதல் கொடுப்பார் என தெரிகிறது.


பாண்டிங் பலம்:

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வென்ற உற்சாகத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் போட்டியில் வென்றுள்ளது. இன்றும் கேப்டன் பாண்டிங், பெய்னே, வாட்சன், மைக்கேல் ஹசி, பெர்குசன் ஆகியோர் பேட்டிங்கில் கைகொடுக்கலாம். முதல் போட்டியில் களமிறங்காத துணைக்கேப்டன் மைக்கேல் கிளார்க், இன்று விளையாட உள்ளார்.


பிரெட் லீ எழுச்சி:

நீண்ட ஓய்வுக்கு பின் களமிறங்கிய பிரெட் லீ, சிறப்பாக செயல்படுகிறார். பந்து வீச்சில் மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் ஜான்சன் அசத்துவது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவர்கள் தவிர, பீட்டர் சிடில், வாட்சன், ஹோப்ஸ் என வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல அடித்தளம் அமைக்கிறார்கள். சுழலில் ஹவுரிட்ஜ் நன்கு செயல்படுவது கேப்டனுக்கு நலமே.

பகலிரவு போட்டி என்பதால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்வது <உறுதி. இரு அணிகளும் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குவதால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

-----


யாருக்கு அரையிறுதி வாய்ப்பு

இன்று இந்திய அணி வெல்லும் பட்சத்தில் அரையிறுதி செல்ல வாய்ப்பு பிரகாசமாகும். தவிர, தோல்வியடைந்தால் தொடரை விட்டு வெளியேற நேரும். பிரிவு "ஏ'ல் இருந்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மட்டும் அரையிறுதிக்கு தகுதிபெறும். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தொடரை விட்டு வெளியேறும்.


இந்தியா ஆதிக்கம் :

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் இந்திய அணி இரண்டு முறையும், ஆஸ்திரேலிய அணி, ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.
----


இரு அணிகள் இதுவரை...
* இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 96 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் இந்திய அணி 32, ஆஸ்திரேலிய அணி 57 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

* ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக கடந்த 2003ல் 2 விக்கெட்டுக்கு 359 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி கடந்த 2001ல் தனது அதிகபட்ச ஸ்கோராக 315 ரன்கள் எடுத்துள்ளது.

* குறைந்த ரன்னாக இந்திய அணி கடந்த 1981ல் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி கடந்த 1991ல் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

*கடந்த 2007ல் இந்திய அணியின் முரளி கார்த்திக், 27 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சு. ஆஸ்திரேலிய அணி சார்பில் மெக்லே, 39 ரன்னுக்கு 6 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
-------


சச்சின் ஆதிக்கம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவின் சச்சின் இதுவரை, 2730 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரண்டு இடத்தில் அசாருதீன் (990), டிராவிட் (928) உள்ளனர்.

இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங், இதுவரை 1713 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரு இடங்களில் கில்கிறிஸ்ட் (1622), ஹைடன் (1450) உள்ளனர்.
-------


பிரெட் லீ மிரட்டல்

இரு அணிகளுக்கு இடையே அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ (49) முதலிடத்திலும், இந்தியாவின் கபில் தேவ் (45) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

0 comments:

Post a Comment