இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7-வது சர்வதேச ஒரு தின கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

7 ஆட்டங்கள் இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 6-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 7-வது ஆட்டம் செஸ்டர்-லீ-ஸ்டீரிட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களுக்குச் சுருண்டது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் ஷேன் வாட்சன் ரன் எடுக்காமலும், டிம் பெய்ன்ஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருந்தபோதும் தொடர்ந்து வந்த கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், மைக்கேல் கிளார்க்கும் நிலைத்து ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரிக்கி பாண்டிங் 53 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார்.

தொடர்ந்து விளையாட வந்த ஹசி 49 ரன்கள் எடுத்தார். கிளார்க் 38 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்-அவுட்டானார்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஸ்வான் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆண்டர்சன், ஆனியன்ஸ், பிரெஸ்னன், ஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டிராஸ் 47, டென்லி 53 ரன்கள் எடுத்தனர். காலிங்வுட் 13 ரன்களும், பிரெஸ்னன் 10 ரன்களும் ஆட்டமிழக்காமல் எடுத்து இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் வெற்றியை தேடித் தந்தனர்

0 comments:

Post a Comment