சச்சின் டெண்டுல்கரின் அதிரடி சதம், ஹர்பஜன் சிங்கின் அபார பந்துவீச்சால் இலங்கையை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா "காம்பேக்' கோப்பையைத் தட்டிச் சென்றது.
முத்தரப்பு நாடுகள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் திங்கள்கிழமை கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாûஸ வென்ற இந்தியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய இலங்கை 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. இந்திய இன்னிங்ஸின்போது துவக்க ஆட்டக்காரர்களாக சச்சின், திராவிட் களமிறங்கி அதிரடியாக ஆடினர். சிறப்பாக விளையாடிய திராவிட் 39 ரன்கள் எடுத்தார்.
2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனியும், சச்சினும் சிறப்பாக ஆடிய 110 ரன்கள் குவித்தனர். தோனி 62 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.
சச்சின் சிறப்பாக விளையாடி ஒருநாள் போட்டிகளில் தனது 44-வது சதத்தைப் பதிவு செய்தார். இலங்கைக்கு எதிராக அவர் எடுக்கும் 8-வது சதமாகும் இது.
அவர் மொத்தம் 133 பந்துகளில் 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 10 பெüண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். தொடர்ந்து வந்த யூசுப் பதான் ரன் எடுக்காமலும், சுரேஷ் ரெய்னா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருந்தபோதும் மறுமுனையில் யுவராஜ் பெüண்டரிகளாக விளாசி அணியின் ஸ்கோர் 300-ஐத் தாண்ட உதவினார்.
ஆட்ட முடிவில் யுவராஜ் ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், விராட் கோலி 2 ரன்களும் எடுத்திருந்தனர்.
பின்னர் இலங்கை இன்னிங்ஸின்போது தில்ஷனும், ஜயசூர்யாவும் அதிரடியாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்தனர். இருந்தபோதும் தில்ஷனை 42 ரன்களில் அவுட்டாக்கினார் ஹர்பஜன். தொடர்ந்து வந்த ஜயவர்த்தனாவையும் ஒரு ரன்னில் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார் ஹர்பஜன். தொடர்ந்து ஜயசூர்யா 36 ரன்களிலும், துஷாரா 15 ரன்களிலும், மாத்யூஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சங்ககரா 33 ரன்கள் எடுத்திருந்தபோது ஆர்.பி. சிங் பந்துவீச்சில் "ஹிட்-அவுட்' முறையில் ஆட்டமிழந்தார். இதனால் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தத்தளித்தது.
இருப்பினும் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கபுகடேராவும், கண்டம்பியும் 70 ரன்கள் சேர்த்தனர். இருந்தபோதும் ஹர்பஜனின் அனல்பறக்கும் பந்துவீச்சில் இலங்கையின் விக்கெட்டுகள் சரிந்தன. கண்டம்பி மட்டும் நிலைத்து ஆடி 66 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 46.4 ஓவர்களில் இலங்கை 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஹர்பஜன் 56 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.
சச்சின் ஆட்டநாயகனாகவும், தொடர்நாயகனாவும் தேர்வு பெற்றார்.
11 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்
இலங்கையில் 1998-ம் ஆண்டு நடந்த முத்தரப்பு நாடுகள் போட்டியில் இந்தியா சிங்கர்-நிடாஸ் கோப்பையைக் கைப்பற்றியது. அந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சச்சின், கங்குலி இருவரும் சதமடித்தனர்.
இதையடுத்து தற்போது நடைபெற்ற காம்பாக் கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வென்றது. மீண்டும் சச்சின் சதமடித்து அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தார்.
இந்தியா: 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 319
(சச்சின் 138, திராவிட் 39, தோனி 56, யூசுப் பதான் 0, ரெய்னா 8, யுவராஜ்சிங் (அவுட் இல்லை)56, கோலி (அவுட் இல்லை)2, துஷாரா 2வி-71, மலிங்கா 1வி-81, மெண்டிஸ் 1வி-70, ஜயசூர்யா1வி-43.
இலங்கை: 46.4 ஓவர்களில் 273
(தில்ஷன் 42, ஜயசூர்யா 36, ஜயவர்த்தனா 1, சங்ககரா 33, துஷாரா 15, மாத்யூஸ் 14, கண்டம்பி 66, கபுகடேரா 35, குலசேகரா (அவுட் இல்லை) 9, மலிங்கா 0, மெண்டிஸ் 7, இஷாந்த் சர்மா 1வி-51, ஆர்பி சிங் 1வி-34, ஹர்பஜன் சிங் 5வி-56, பதான் 1வி-36, யுவராஜ் சிங் 1வி-24, ரெய்னா 1வி-26)
0 comments:
Post a Comment