இந்திய மண்ணில் மீண்டும் பாக்


இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான தொடருக்கு, மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பின், பாகிஸ்தான் அணி இந்தியா வர உள்ளது. 

கடந்த 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடக்கவில்லை. சர்வதேச போட்டிகளில் மட்டும், அவ்வப்போது பொது இடங்களில் மோதிக் கொண்டன. கடந்த ஆண்டு உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட, பாகிஸ்தான் அணி இங்கு வந்தது. 

திடீர் தொடர்:

தற்போது, இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, வரும் டிசம்பர் 22ம் தேதி வரை, நான்கு டெஸ்ட், இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. பின், கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக நாடு திரும்பும் இங்கிலாந்து அணி, மீண்டும் 2013 ஜனவரி 6 முதல், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க வருகிறது. 

இடைப்பட்ட 14 நாட்களில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையில் மூன்று ஒருநாள், இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின், இத்தொடரை நடத்த இரு நாடுகளின் போர்டுகள் சம்மதித்தன. 

அரசு சம்மதம்:

இருப்பினும், மத்திய அரசு முடிவெடுக்காமல் இருந்தது. இதுதொடர்பாக, டில்லியில் மத்திய உள்துறைச் செயலரை, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா சந்தித்து பேசினார். இதில், பாகிஸ்தான் தொடரை நடத்த, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்தது. 

இதனால், இருஅணிகள் பங்கேற்கும் தொடர் நடப்பது உறுதியாகியுள்ளது. வரும் டிசம்பர் 22ல் இந்தியா வரும் பாகிஸ்தான் அணி, டில்லி, சென்னை, கோல்கட்டாவில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், பெங்களூரு, ஆமதாபாத்தில் இரு "டுவென்டி-20' போட்டிகளிலும் பங்கேற்கிறது. 

முதல் போட்டி வரும் டிச., 25ல் துவங்கும். மற்ற விவரங்கள் பின் வெளியாகும் எனத் தெரிகிறது.

0 comments:

Post a Comment