அசத்துமா சென்னை கிங்ஸ்? - இன்று சிட்னி அணியுடன் மோதல்


சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இன்றைய லீக் போட்டியில் "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் சென்னை சூப்பர் கிங்ஸ், ஆஸ்திரேலியாவின் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

தோனிக்கு சிக்கல்:

சென்னை அணிக்கு தோனி தான் பலம். ஆனாலும், "டுவென்டி-20' உலக கோப்பையில் இந்திய அணி சோபிக்கத் தவற, கேப்டன் பதவியில் இருந்து இவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

இந்தச் சூழலில் சாம்பியன்ஸ் லீக் தொடரில் தனது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். துவக்கத்தில் முரளி விஜய், டுபிளசி, மைக்கேல் ஹசி அசத்த வேண்டும். ரெய்னா, பத்ரிநாத் பொறுப்பாக விளையாடினால் நல்லது. 

தென் ஆப்ரிக்க ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் போலிஞ்சர், ஹில்பெனாஸ், ஆல்பி மார்கல் மிரட்டலாம். "சுழலில்' அஷ்வின் "பார்ம்' கவலை அளிக்கிறது. இவர் விரைவில் எழுச்சி காண வேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

விளாசல் வாட்சன்:

சிட்னி சிக்சர்ஸ் அணி, சென்னைக்கு கடும் சவால் கொடுக்கும். "பிக் பாஷ்' தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணியின் மிகப் பெரும் பலம் "ஆல்-ரவுண்டர்' வாட்சன் தான். "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இவர், இங்கும் அசத்தலாம். நாதன் மெக்கலம், கேப்டன் பிராட் ஹாடின் போன்றோர் அதிரடியாக ரன் சேர்க்கலாம். பந்துவீச்சில் கம்மின்ஸ், ஸ்டார்க் கைகொடுப்பர். 

சென்னை அணி, வாட்சனை விரைவில் கட்டுப்படுத்தி விட்டால், தொடரை வெற்றியுடன் துவக்கலாம். 

சாதிக்குமா மும்பை அணி 

இன்று நடக்கும் மற்றொரு "பி' பிரிவு லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' மும்பை இந்தியன்ஸ், தென் ஆப்ரிக்காவின் ஹைவெல்டு லயன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

மும்பை அணியின் எதிர்பார்ப்பு சச்சின் தான். ஆனாலும், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வரிசையாக மூன்று முறை "போல்டான' இவர் மிகுந்த நெருக்கடியில் உள்ளார். 

இவர் வலுவான துவக்கம் தந்தால் நல்லது. கேப்டன் ஹர்பஜன் சிங் "சுழலில்' நம்பிக்கை அளிக்கிறார். "டுவென்டி-20' உலக கோப்பை பைனலில் சொதப்பிய "வேகப்புயல்' மலிங்கா எழுச்சி பெற வேண்டும். "ஆல்-ரவுண்டர்' போலார்டு இருப்பது கூடுதல் பலம்.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் லயன்ஸ் அணி களமிறங்குகிறது. குலாம், ஆல்விரோ பீட்டர்சன், கிறிஸ் மோரிஸ் அசத்தலாம். பந்துவீச்சில் பாகிஸ்தானின் சோகைல் தன்விர் சவால் தரலாம். 

0 comments:

Post a Comment